Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன?

- சாவித்திரி கண்ணன்

 

british-government-1920x1080-1.jpg

என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர்  இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்!

இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘சிறுபான்மையினர் ஒருவரை இங்கிலாந்து பிரதமராக அங்கீகரித்துள்ளது..’என பல வகைப்பட்ட விமர்சனங்கள்! இவை யாவுமே ரிஷி சுனக் குறித்த தவறான பிம்பங்களைத் தான் கட்டமைக்கின்றன! இந்த அரைகுறை புரிதல்கள் மிக ஆபத்தானவை! யதார்த்தங்களை புறந்தள்ளியோ அல்லது சரியான புரிதல் இல்லாமலோ சொல்லப்படுபவை!

முதலாவதாக ரிஷி சுனக்கை தேர்தல் மூலமாக மக்கள் வாக்களித்து அங்கு பிரதமராக்கவில்லை.! தற்போது தேர்தல் நடந்திருந்தால் அவர் சார்ந்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சி மண்ணை கவ்வி இருக்கும்! அந்த அளவுக்கு அந்தக் கட்சியின் கடந்த இரண்டு பிரதமர்களான போரீஸ் ஜான்சனும், லிஸ்டிரஸும் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகிவிட்டனர்! ”நியாயப்படி பொது தேர்தலை சந்திப்போம்” என்ற தொழிலாளர் கட்சி விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து விட்டு, கன்சர்வேட்டிவ் கட்சி தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க முயற்சித்தது!

SEI_117461471.jpg

ஆனால், மூன்று பேர் போட்டியிட முன்வந்தனர். அதில் 350 பேர் கொண்ட கட்சி எம்.பிக்களில் 140 எம்.பிக்களின் ஆதரவு பெற்ற வகையில் ரிஷி சுனக் பிரதமராகியுள்ளார். நன்றாக கவனித்தால், அவர் சார்ந்த கட்சிக்குள்ளேயே அவர் முழுமையான ஆதரவை பெறவில்லை! இருப்பதில் சற்று அதிகமான எம்பிக்கள் ரிஷி சுனக்கை ஆதரித்துள்ளனர். இந்த வகையில் சூழ்நிலைகள் எட்டாண்டுகள் மட்டுமே அரசியல் அனுபவம் கொண்ட ரிஷி சுனக்கிற்கு சாதகமாகிவிட்டபடியால் அவர் பிரதமராகிவிட்டார் – ஒரு விபத்தைப் போல! ஆகவே, ரிஷி சுனக் ‘தேர்தல் வழி இங்கிலாந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்ல’ என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக, ‘அவர் இந்தியாவின் மருமகன்’ என்பது படுமுட்டாள்தனமான பார்வையாகும்! அவரது வம்சா வழிப்படி அவரின் தந்தை வழி தாத்தா அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர்! அந்த குறிப்பிட்ட ஊர் தற்போது பாகிஸ்தானில் உள்ளது என்ற வகையில் பாகிஸ்தானுமே கூட ரிஷி சுனக்கை மரபு வழி உரிமை கொண்டாட வாய்ப்பாகிறதே!  அவர் இந்து என நாம் பெருமைப்படுவதில் என்ன இருக்கிறது? ‘இங்கிலாந்தில் மதமாச்சரியங்களற்ற உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்குகிறது’ என்றல்லவா நம் புரிதல் இருக்க வேண்டும்.

Rishi-Sunak-family-1024x649-1.jpg தாய், தந்தை, மாமனார், மாமியார், மனைவி, குழந்தைகளுடன் ரிஷி சுனக்.

அவர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் என்பது உண்மை தான்! ஆனால், அவர் மகளான அக்‌ஷிதா இங்கிலாந்தின் குடிமகளே அன்றி, இந்தியாவின் குடிமகள் அல்ல! கணவன், மனைவி இருவருமே இங்கிலாந்தின் குடிஉரிமை பெற்றவர்கள்! ஆகவே, ரிஷிசுனக்கை தேவையில்லாமல் நாம் உரிமை கொண்டாடுவது அவர் மீது பிரிட்டிஷ் மக்களுக்கு சந்தேகப் பார்வையை தோற்றுவித்து அவருக்கு சிக்கலைக் கூட ஏற்படுத்த வாய்ப்பிருப்பதால், அதை தவிர்த்து அவர் பிரதமராக தேர்வானதை அரசியல் பூர்வமாக அணுக வேண்டும். ஏனெனில், எப்படி அமெரிக்காவில் துணை குடிஅரசுத் தலைவராக கமலா ஹாரீஸ் தேர்வானதால் இந்தியாவிற்கோ, தமிழ் நாட்டிற்கோ கடுகளவும் நன்மை இல்லையோ, அதே தான் ரிஷி சுனக் விஷயத்திலும் என்பதே உண்மை! மற்றபடி சும்மா அவரவர் ஆசைக்கு ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியது தான்!

ரிஷி சுனக்கின் பெற்றோர் இருவருமே ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்! ஆப்ரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்கள்! அந்த வகையில் இந்தியர்களைக் காட்டிலும், ஆப்ரிக்காவும் அவரை உரிமை கொண்டாடலாமே! ஆக அவர் இந்தியரா? பாகிஸ்தானியரா? ஆப்ரிக்கரா? அல்லது இங்கிலாந்துக்காரா? என்றால், இன்றைய குளோபல் உலகத்தில் அவர் உலகளாவிய ஒரு கலப்பு மனிதன்! அவரது பெற்றோர்கள் பிரிட்டனுக்கு புலம் பெயர்ந்தது 1960 ஆம் ஆண்டில்! 1980ஆம் ஆண்டு பிரிட்டனின் செளத்தாம்டனில் ரிஷி சூனக் பிறந்தார். ஆக, பிறந்து வளர்ந்து, செல்வாக்கு பெற்று உயர்ந்த இடம் தான் அவரது தாய்நாடு! இங்கிலாந்தின் குடிமகனாகிவிட்ட ஒருவரை இங்கிலாந்து நாட்டுக்காரராக பார்ப்பதும், புரிந்து கொள்வதுமே ஆரோக்கியமானது.

2372210250781621307_5942851.jpg இளவரசர் மூன்றாம் சார்லஸுடன் ரிஷிசுனக்

மற்றொரு உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அவர் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிரதமர் வேட்பாளராக வரும் அளவுக்கு விரும்பப்படுவதற்கான காரணம், அவர் சிந்தனையில் ஒரு முழுமையான ஆங்கிலேயராக உருவாகிவிட்டார். அவரது இயல்பை உற்று நோக்கினால், அவர் இங்கிலாந்திற்கு அகதிகள் வருவதற்கு கடும் எதிர்ப்பு காட்டுகிறார்! – அவர் தாய்,தந்தையே அங்கு அகதிகளாக வந்தவர்கள் தான் என்பதை மறந்தவராக! பொருளாதாரத்தில் தாராளமயத்தை ஆதரிக்கிறார்! ”பிரிட்டன் அரசு இது வரை தன் குடிமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை வழங்குவதை வாபஸ் பெற்று, தனியாரிடம் மருத்துவத்தை முழுமையாகத் தர வேண்டும்” என்கிறார்! ‘தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்க வேண்டும்’ என்கிறார். ‘தொழிற்சங்க உரிமைகளை முடக்க வேண்டும்’ என்கிறார்! கடுமையான கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளராக இருக்கிறார்!

பெரிய நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தருவதை ஆதரிப்பவராக உள்ளார். சிறு தொழில்கள் மீது அக்கறை கொண்டவராகத் தெரியவில்லை! அதனால் தான் லிஸ்டிரஸ் 40 பில்லியன் டாலர்களை ( 3.25 லட்சம் கோடிகள்) பெரு நிறுவனங்களுக்கு வரிவிலக்கு தந்தது, ”நல்லெண்ண நடவடிக்கை தான்” எனச் சொன்னார். இந்து மத வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவராக இருந்தும், ‘மாட்டிறைச்சி சாப்பிடுவது குற்றமல்ல’ என்ற லிபரல் சிந்தனை கொண்டவராக உள்ளார். இவையாவுமே ரிஷி சுனக் ஒரு அப்பட்டமான ஆதிக்க ஆங்கிலேய சிந்தனை கொண்டவர் மட்டுமல்ல, இந்திய வலதுசாரி சித்தாந்தத்திற்கு நெருக்கமானவராகவும் உள்ளார் என்பதை நாம் அறியலாம்! இது தான் உண்மையான முகம்! இங்கே பாஜக ஆதரவாளர்கள் ரிஷி சுனக்கை ஏன் கொண்டாடுகின்றனர் என்பதை நாம் இந்தப் பின்னணியில் இருந்து புரிந்து கொள்ளலாம்!

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தது பெரிய விஷயமில்லை. இன்று இங்கிலாந்து இருக்கின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை இவர் எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்பதில் தான் இருக்கிறது அவரது வெற்றியே! ஏனென்றால், இங்கிலாந்து மக்கள் இந்தியர்களைப் போல அல்ல! புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பார்கள்! அதே சமயம் பொறுப்புக்கு வந்த தலைவரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பார்கள்! தவறு செய்தால், அது யாராக இருந்தாலும் கடுமையான விமர்சனங்களையும், எதிர்விளைவுகளையும் அனுபவித்தே ஆக வேண்டும்.

boris-johnson69-1585397137-1586700534.jp பதவி இழந்த முன்னாள் பிரதமர்கள் போரீஸ் ஜான்சன், லிஸ்டிரஸ்

போரீஸ் ஜான்சனுக்கு என்ன நேர்ந்தது? பேச்சுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாமல் சாதுரியமாக நைச்சியம் பேசிய போரீஸ் ஜான்சனின் முகத்திரையை கிழித்தார்கள்! ஜகத்தாளம் செய்து காண்பித்தும் மயங்காமல், பதவியில் இருந்து கீழே இறக்கினார்கள்! அடுத்து பிரதமராக வந்த லிஸ்டிரஸை 45 நாட்களில் நாடிப் பிடித்து பார்த்து, ”ம்கூம் நீ தேற மட்டாய்! வெளியேறி விடு” என்றார்கள்! அவர் பதவி விலகிய பிறகும் கூட, ”அவரது ராஜுனாமா ஒரு சொட்டு கண்ணீருக்கு கூட தகுதி பெறாது” என எழுதின பத்திரிகைகள்!

இங்கிலாந்தில் மக்களை விலை கொடுத்து வாங்க முடியாது! அங்குள்ள ஊடகங்களை ஊழல்மயப்படுத்த முடியாது, பாராளுமன்ற உறுப்பினர்களை பேரம் பேச முடியாது! பொய் பேசினாலே புறம் தள்ளிவிடுவார்கள் – அது எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும்! தவறு செய்தால் யாராயிருந்தாலும் தூக்கி எறியத் தயங்கமாட்டார்கள்! இந்தியாவில் 11 லட்சம் கோடிகள் கார்ப்பரேட் கடன்களை தள்ளுபடி செய்துவிட்டு மோடி போல ஹாயாக எந்த பிரதமரும் பிரிட்டனில் நடமாடவே முடியாது! ரிஷு சுனக் முள் கிரீடத்தையே தற்போது அணிந்துள்ளார்! அதை மலர் கிரீடமாக மாற்றுவது அவர் செயல்பாட்டில் தான் உள்ளது! அதற்கு அவர் தகுதியானவர் தானா? என்பதை காலம் தான் தீர்மானிக்கும்!

சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

 

https://aramonline.in/11018/rishi-sunak-p-m-england-politics/

  • கருத்துக்கள உறவுகள்

அதலெல்லாம் விடுங்க.. நம்ம ஆளுங்கள அடிச்சிக்க முடியாது..👍

IMG-20221027-071440.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சாவித்திரி கண்ணன்,   

உங்கள் அப்பாவிடம் ஒரு அலுவலாக கதைக்க வரவேண்டும்.

உங்கள் வீட்டில் குதிர் எதாவது இருக்கிறதா என்று சொன்னால் நலம்.

நன்றி .....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அதலெல்லாம் விடுங்க.. நம்ம ஆளுங்கள அடிச்சிக்க முடியாது..👍

IMG-20221027-071440.jpg

அட... தமிழ்நாட்டிலிருந்து, ரிஷி சுனக்கிற்கு... 
போஸ்டர் அடிக்கவில்லையே என்று பார்த்தேன்.
அதுகும் வந்து விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரிஷி சுனக்

jeyamohanOctober 28, 2022

rishi-sunak-0011-1666634822.jpgஅன்புள்ள ஜெ

ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமராக ஆகியிருப்பது பற்றி நீங்கள் ஏதாவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று பிரிட்டிஷார் சொல்லிவந்தனர் (சர்ச்சில் சொன்னார்) இன்று இந்திய வம்சாவளியினர் ஒருவர் பிரிட்டிஷ் பிரதமர் ஆகியிருப்பது முக்கியமான நிகழ்ச்சி அல்லவா?

ஆர்.ரமணி

***

அன்புள்ள ரமணி,

இந்திய வம்சாவளியினர் ஒருவர் ஓர் உயர்பதவிக்கு வரும்போது அல்லது பரிசுபெறும்போது இங்கே உருவாகும் பரவசம் என்னைக் கூச்சமடையச் செய்கிறது.

அதிலுள்ள உணர்வு உண்மையில் என்ன? இந்தியர்களுக்கு தங்கள் இனம் சார்ந்து இருக்கும் தாழ்வுணர்ச்சியே. அது வெள்ளையர் உருவாக்கியது. வரலாற்றில் நமக்கு நிகழ்ந்த வீழ்ச்சியால் அடையாளமிடப்பட்டது.

அதை அகத்தே நாமும் நம்புவதனால்தான் ஓர் இந்திய வம்சாவளியினர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வெற்றி அடையும்போது நாம் கொண்டாடுகிறோம். அது நம் வெற்றி என நினைக்கிறோம். ஏனென்றால் அது நம் தாழ்வுணர்ச்சியை கொஞ்சம் போக்குகிறது.

இந்த தாழ்வுணர்ச்சியால்தான் நாம் இங்குள்ள எந்த சாதனைகளையும் கண்டுகொள்வதில்லை. நம் சூழலின் அறிஞர்களை பொருட்படுத்துவதில்லை. எவரையும் அறியமுயல்வதுமில்லை. அரசியல்வாதிகள், கேளிக்கையாளர்களே நமக்கு முக்கியமானவர்கள். ஓர் அரசியல் கட்சியின் விசுவாசிகள்கூட அக்கட்சியின் சிந்தனைகளை உருவாக்கிய அறிஞர்களை பெயர்கூட அறியாதவர்களாக இருப்பார்கள். திகைப்பூட்டும் சூழல் இது.

அதேசமயம் எவருக்காவது ஓர் ஐரோப்பிய அங்கீகாரம் கிடைத்துவிட்டால் மிகையாகக் கொண்டாடுவோம். அறிஞர், ஆய்வாளர் என எவரையாவது கொஞ்சம் அறிமுகம் செய்துகொண்டாலே மிகையாக தூக்கி வைக்க ஆரம்பிப்போம். நம் பொதுவெளி ஆளுமைகளை எல்லாம் தெய்வங்களாகவே முன்வைப்போம்.

ஏனென்றால் உண்மையில் நம்மிலொருவர் அறிஞராக, ஆய்வாளராக எல்லாம் இருக்க முடியும் என்னும் நம்பிக்கையே அடிமனதில் நமக்கு இல்லை. அந்த அவநம்பிக்கையால்தான் நாம் அறிவுசார்ந்த அளவுகோல்களை மறுத்து மிகையாகக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.

ரிஷி சுனக் அல்லது அதைப்போன்றவர்கள் இந்தியர்கள் அல்ல. இந்தியக் கல்விமுறையில் உருவானவர்கள் அல்ல. இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்ல ரிஷி சுனக்கையே ஏன் ஓர் ஐரோப்பியர் சுட்டிக்காட்ட கூடாது? இந்தியப் பல்கலையில் பயின்று எவரும் உயர்நிலையை அடையமுடியாது, இந்தியாவை ஆளவேண்டுமென்றால்கூட ஐரோப்பியப் பல்கலையில் பயிலவேண்டும் என அவர் சொல்லலாமே? ரிஷி சுனக்கை உருவாக்கியது பிரிட்டிஷ் கலாச்சாரமும் கல்வியும்தான் என வாதிடலாமே? அது எவ்வளவு இழிவு நமக்கு?

எனக்கு அந்த தாழ்வுணர்ச்சி இல்லை. ஆகவே நான் சுந்தர் பிச்சை, இந்திரா நூயி என்றெல்லாம் நடனம் ஆடுவதில்லை. மெய்யாகவே இந்தியப் பண்பாட்டுக்கும் அதனூடாக உலகப்பண்பாட்டுக்கும் கொடையளித்த இந்திய மேதைகளைப் பற்றி எழுதுகிறேன். அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முயல்கிறேன். அவர்களே நம் பெருமிதம்.

ரிஷி சுனக் விஷயத்தில் என் ஆர்வம் ஒன்றே. பிரிட்டிஷ் பொருளியல் பற்றி படித்தேன். முழுக்கமுழுக்க தொழில்மயமாக்கப்பட்ட நாடு. தொழிலுற்பத்தி, ஏற்றுமதி, அதன் அன்னியச்செலவாணி வருகை வழியாக வாழ்கிறது. உணவுற்பத்தி மிகக்குறைவு. வேளாண்பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இந்த பொருளாதார ‘டெம்ப்ளேட்’ பிரிட்டனுக்கு பழைய தொழிற்புரட்சிகாலம் முதல் உருவானது. தொழிலுற்பத்திப் பொருட்களை விற்கும் ‘கட்டாயச் சந்தை’ ஆகவும் அதற்கான மூலப்பொருட்களை அளிக்கும் ‘கட்டாய வயல்’ ஆகவும் காலனிநாடுகளை பயன்படுத்தியது.

உலகப்போருக்குப் பின் காலனிகளை இழந்த பிரிட்டன் அமெரிக்க உதவியுடனும் பழைய தொழில்மயமாக்கலின் மிஞ்சிய வசதிகளுடனும் தாக்குப்பிடித்தது. அண்மைக்காலம் வரைக்கும்கூட காலனிகள் சிலவற்றை வைத்திருந்தது.

இன்று சீனாவின் தொழிலுற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஷ் தொழிலுற்பத்திப் பொருட்களை சந்தையில் இருந்து விரட்டுகின்றன. பிரிட்டன் அதன் ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் பத்திலொன்றைக்கூட தன் ஊழியர்களுக்கு அளிக்காத சீனாவின் ஏகாதிபத்தியப் பொருளியலுடன் பிரிட்டன் போரிடமுடியாது.

ஆகவே பிரிட்டனின் பொருளியல் தடுமாறுகிறது தொழிலதிபர்கள் சீனாவுடன் போட்டியிடவேண்டுமென்றால் வரிச்சலுகை வேண்டும் என்கிறார்கள். அதை அளித்தால் தொழிலாளர், அடித்தள மக்கள்மேல் வரிபோடவேண்டியிருக்கும். தொழில்கள் சோர்வுற்றால் தொழிலாளர் வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு பொருளியலை மேலும் வீழ்த்தும்.

பொதுவாக பொருளியல் வல்லுநர்கள் ‘திட்டமிட்டு’ பொருளியலை மேம்படுத்த முடியுமா என்றெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் உண்டு. பொருளியல் அறிந்தவர்கள் சொல்வதை எல்லாம் ஒரு சிட்டிகை உப்புடன் எடுத்துக்கொள்வதே என் வழக்கம். அந்த ஐயம் ஓர் எளிய பாமரனின் தரப்பு என்று கொள்க.

பிரிட்டனுக்கு ஒரே வழிதான். ஐரோப்பாவுக்கே ஒரே வழிதான். நுகர்பொருளுற்பத்தியில் சீனாவுடன் போட்டியிட முடியாது. உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கி மூன்றாமுலக நாடுகள் தலையில் கட்டுவது. அந்த லாபத்தில் பொருளியல்மீட்சி அடைவது. அதற்காக எதையும் செய்வார்கள். வரும்நாட்களில் அதுதான் நிகழும். அதை ரிஷி சுனக் செய்தாலென்ன, போரீஸ் ஜான்ஸன் செய்தாலென்ன?

ஜெ
 

 

https://www.jeyamohan.in/174505/

  • கருத்துக்கள உறவுகள்

“”இந்தியர்களுக்குதங்கள் இனம் சார்ந்து இருக்கும் தாழ்வுணர்ச்சியே. அது வெள்ளையர் உருவாக்கியது. வரலாற்றில் நமக்கு நிகழ்ந்த வீழ்ச்சியால் அடையாளமிடப்பட்டது.

அதை அகத்தே நாமும் நம்புவதனால்தான் ஓர் இந்திய வம்சாவளியினர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வெற்றி அடையும்போது நாம் கொண்டாடுகிறோம். அது நம் வெற்றி என நினைக்கிறோம். ஏனென்றால் அது நம் தாழ்வுணர்ச்சியை கொஞ்சம் போக்குகிறது.“”

உத நான் கொஞ்சம் ஆபாசமாகச் சொன்னால் உடனே கந்தையர் வரிஞ்சு கட்டிக்கொண்டு வந்து சண்டைக்கு நிற்பார். Hannah தீயணைப்புப் படைக்கு தகவலனுப்புவார். 

செயமோன் சொன்னால் போர்த்திக்கொண்டு ஒருக்களிச்சுப் படுத்திருப்பர். 

என்ன உலக மகா நடிப்புடா சாமியோவ்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 2 people, child, people standing and indoor
 
ரிஷி சுனாக்கின் தாத்தா இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் குஜ்ரன்வாலா பகுதியை பூர்விகமாக கொண்டவர். 1930க்களில் குஜ்ரன்வாலா நகரில் பெரிய கலவரம் மூண்டது.
குஜ்ரன்வாலாவில் வசதியாக வாழ்ந்த பலர் அந்த ஊரை விட்டு குடிபெயர்ந்தார்கள்.
 
அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் ரிஷியின் தாத்தா. ப்ரிட்டிஷ் ஆட்சியில் இருந்த கென்யாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கே பிறந்தவர் தான் ரிஷியின் அப்பா.
பின்னாளில் கென்யாவுக்கு 1963ல் ப்ரிட்டன் சுதந்திரம் கொடுத்தது. கிழக்கு ஆப்பிரிக்காவில் கென்யா, உகாண்டா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியர்களை ஏராளமாக குடியமர்த்தி இருந்தது ப்ரிட்டன்.
 
பர்மாவிலும் இதே போல் தான் நடந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சி நடந்த இடமெல்லாம் இந்திய மத்தியதர வர்க்கம் குடிபெயர்ந்து, வணிகர்களாகவும், குமாஸ்தாக்களாகவும் ப்ரிட்டிஷ் ஆட்சி நடைபெற வழிவகுத்தது.
ஆனால் பர்மாவில் இருந்து இந்திய்ர்கள் அடித்து விரட்டபட்ட அதுவே காரணமாக அமைந்தது. ப்ரிட்டிஷ் ஆட்சியின் அள்ளக்கைகளாக உள்ளூர் மக்கள் அவர்களை கருதினார்கள். அதே மாதிரி பிரச்சனை ஆப்பிரிக்காவிலும் முளைத்தது.
 
கிழக்கு ஆப்பிரிக்காவில் 250,000 இந்திய வம்சாவளியினர் ப்ரிட்டிஷ் பாஸ்போர்ட்டுடன் இருந்தார்கள். "ப்ரிட்டிஷ் ஆசியர்கள்" என அழைக்கப்பட்டர்கள்.
அவர்கள் பிறந்த ஊர்கள் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளாக பிரிந்து இருந்தன. அவர்களில் பலர் இந்தியாவை பார்த்ததே கிடையாது.
 
சுதந்திரத்துக்கு பின் அவர்களை கென்யா வெளியேற சொல்ல, அவர்கள் ப்ரிட்டனிடம் அடைக்கலம் கேட்க, ப்ரிட்டிஷ் அரசும் அவர்களை ப்ரிட்டனுக்கு அழைத்துக்கொண்டது.
அப்படி சென்றவர் தான் ரிஷியின் அப்பா. ப்ரிட்டனில் டாக்டராக பணியாற்றினார்.
டான்சானியாவில் இருந்து அகதியாக வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணை மணந்துகொண்டார். அவர்களுக்கு பிறந்தவ்ர் தான் ரிஷி சுனாக் பிறந்த ஆண்டு 1980
நல்ல வசதியான குடும்பம்.
 
ரிஷியும் நல்லா படிக்கும் மாணவன். ஸ்டான்போர்டுக்கு படிக்க செல்கையில் உடன் படிக்கும் அக்ஷதா மூர்த்தி எனும் பெண்ணுடன் காதலில் விழுந்தார். அவர் இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மகள்.
அக்ஷதா மூர்த்தியிடம் தனிப்பட்ட முறையில் இருந்த இன்போசிஸ் பங்குகள் மூலமே அவர் ப்ரிட்டிஷ் அரசியை விட அதிக பணக்காரியாக இருந்தார்.
 
அவரை மணந்தபின் ரிஷியின் வாழ்க்கை எங்கேயோ சென்றுவிட்டது. சுக்ரதிசை அடித்தது. நிதி நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு இருந்தவர் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் அரசியலில் குதித்தார். எம்பி ஆனார், மந்திரி ஆனார், இப்போது பிரதமரும் ஆகிவிட்டார்.
இந்தியாவின் மருமகன்,
ஆனால் இந்தியர் அல்ல
ஆபிரிக்காவின் மகன்,
ஆனால் ஆபிரிக்கர் அல்ல
ப்ரிட்டிஷ் குடிமகன்,
ஆனால் அங்கே அவரை இந்தியர் என்கிறார்கள்.
பூர்விகம் பாகிஸ்தான்,
ஆனால் அங்கே அவரை பாகிஸ்தானியாக கருதுவதில்லை.
இனத்தால் பஞ்சாபி, ஆனால் சீக்கியர் அல்ல. அதனால் பெரியதாக அங்கேயும் உற்சாகவெள்ளம் கரைபுரன்டு ஓடவில்லை.
ஆக உண்மையான க்ளோபல் சிட்டிசன் என ரிஷியை சொல்லலாம் 🙂
 
ப்ரிட்டன் மற்றும் கன்சர்வேடிவ் கட்சி இரண்டும் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். சாதிப்பாரா ரிஷி? மார்கரெட் தாட்சர் மற்றும் வின்ஸ்டன் சர்ச்சிலின் கட்சியையும், நாட்டையும் கரையேற்றுவாரா? பார்ப்போம்.
  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 2 people and text
 
வீர குல விச்சுவாகர்மாவின் நாயகனே...
வெள்ளையனுக்கு அதிபதியே...
இனிமே தமிழ் நாட்டில் எங்க சாதிகாரன் தான்டா ஆள்வார்.
 
😁 😂 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.