Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணதாசன் ...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணதாசன் ...

சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா, பின்னாளில் மாபெரும் கவிஞராக மாறுவார் என்று அவரைப் பெற்ற சாத்தப்பனும், விசாலாட்சியும் கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், முத்தையா கனவு கண்டார். அவரது கனவும் பலித்தது. கண்ணதாசனாக மாறி, நமக்கெல்லாம், சொல் விருந்து படைத்தார்.

கண்ணதாசன், வார்த்தைகளில் மட்டுமல்ல, நிஜத்திலும் கூட நறுக்கு தெரித்தாற் போல இருந்தவர். 1921-ம் ஆண்டு, ஜூன் மாதம் 24-ம் தேதி பிறந்த கண்ணதாசன், சென்னைக்கு வந்து, சொல்லாட்சி புரிவதற்கு முன் பட்ட துன்பங்கள், துயரங்கள், வருத்தங்கள், வலிகள் ஏராளம். (அத்தனையும் பின்னாளில் நமக்குப் பாடல்களாகக் கிடைத்தது வேறு விஷயம்.)

எட்டாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவராக இருந்தாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும், தனது வார்த்தைகளில் படம் பிடித்துக் காட்டினார் கண்ணதாசன்.

தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட ஒவ்வொரு சம்பவத்தையும், அப்படியே பாட்டுக்களில் வடித்த கவிஞர் இவராக மட்டுமே இருக்க முடியும். 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை வடித்துள்ளார் கண்ணதாசன். அத்தனையும் தேன் துளிகள்.

தத்துவப் பாடல்களால் நமது கண்களைத் திறந்த கண்ணதாசன், 1981-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் தேதி அமெரிக்காவில் கண் மூடினார்.

கண்ணதாசனின் பாடல்கள் இப்போதும் சிந்திக்க வைப்பதற்குக் காரணம், அவரது வார்த்தைகளில் உள்ள நிதர்சனம், உண்மை, இயல்பு ஆகியவையே. தான் அனுபவித்த, உணர்ந்த, பட்ட சம்பவங்களை அப்படியே கொடுத்தார். அது அவரது வாழ்க்கை மட்டுமல்ல, சராசரி மனிதனின் வாழ்க்கையாகவும் இருந்ததால், தமிழக மக்களின் மனதில் சட்டென்று பதிந்து விட்டன.

காதலையும், தத்துவத்தையும் கண்ணதாசன் போல சொல்ல, அவரே மீண்டும் பிறந்து வந்தால்தான் உண்டு.

கண்ணதாசனைக் காண வேண்டும், அவரது பாடல்களை ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்களுக்கு இது ஒரு சிறு காணிக்கை.

வாருங்கள், அனுபவியுங்கள் ...

தத்துவம்

போனால் போகட்டும் போடா!

போனால் போகட்டும் போடா; இந்த

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?

போனால் போகட்டும் போடா

வந்தது தெரியும் போவது எங்கே

வாசல் நமக்கே தெரியாது!

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த

மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம்; வரும்

ஜனனம் என்பது வரவாகும்; அதில்

மரணம் என்பது செலவாகும்.

போனால் போகட்டும் போடா

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை

இல்லையென்றால் அவன் விடுவானா?

உறவைச் சொல்லி அழுவதானேலே

உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது, இது

கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது; அந்த

கோட்டையில் நுழைந்தால் திரும்பாது

போனால் போகட்டும் போடா

1. கட்டோடு குழலாட ..

கட்டோடு குழலாட ஆட-ஆட

கண்ணென்ற மீனாட ஆட-ஆட

கொத்தோடு நகையாட ஆட-ஆட

கொண்டாடும் மயிலே நீ ஆடு! (கட்டோடு)

பாவாடை காற்றோடு ஆட-ஆட

பருவங்கள் பந்தாட ஆட-ஆட

காலோடு கால்பின்னி ஆட-ஆட

கள்ளுண்ட வண்டாக நீ ஆடு! (கட்டோடு)

முதிராத நெல்லாட ஆட-ஆட

முளைக்காத சொல்லாட ஆட-ஆட

உதிராத மலராட ஆட-ஆட

சதிராடு தமிழே நீ ஆடு! (கட்டோடு)

தென்னை மரத் தோப்பாகத் தேவாரப் பாட்டாகப்

புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு!

கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட

கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு! (கட்டோடு)

பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட

மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு!

வள்ளி மனம் நீராடத் தில்லை மனம் போராட

ரெண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு! (கட்டோடு)

2. மெல்ல நட .. மெல்ல நட

மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்!

முல்லை மலர் பாதம் நோகும்-உந்தன்

சின்ன இடை வளைந்தாடும்

வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்! (மெல்ல)

படுக்கையை இறைவன் விரித்தான் - வரும்

பனித்திரையால் அதை மறைத்தான்

பருவத்தில் ஆசையைக் கொடுத்தான்- வரும்

நாணத்தினால் அதை தடுத்தான்! (மெல்ல)

அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு - அதில்

அழகிய மேனியின் நடிப்பு

படபடவெனத் துடிப்பு - இன்று

பதுங்கியதே என்ன நினைப்பு! (மெல்ல)

திருமணம் என்றதும் அடக்கம்- கண்கள்

திறந்திருந்தாலும் உறக்கம்

வருவதை நினைத்தால் நடுக்கம் - பக்கம்

வந்துவிட்டாலோ மயக்கம்! (மெல்ல)

3. மயங்குகிறாள் ஒரு மாது

மயங்குகிறாள் ஒரு மாது - தன்

மனதுக்கும் செயலுக்கும் உறவுமிலாது... (மயங்கு)

திருவாய் மொழியாலே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா? (மயங்கு)

தோழியர் கதை சொல்லித் தரவில்லையா

துணிவில்லையா பயம் விடவில்லையா

நாழிகை செல்வதும் நினைவில்லையா

அன்பே அன்பே அன்பே அன்பே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?.... (மயங்கு)

பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்

படித்தவள்தான் அதை மறந்துவிட்டாள்

காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்

அன்பே அன்பே அன்பே அன்பே

அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா?... (மயங்கு)

பிற பாடல்கள்

1. ஒரு கோப்பையிலே ..

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோல மயில் என் துணையிருப்பு

இசை பாடலிலே என் உயிர் துடிப்பு

நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)

காவியத் தாயின் இளையமகன்

காதல் பெண்களின் பெருந்தலைவன்

மானிட ஜாதியில் தனிமனிதன் - நான்

படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)

மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் - அவர்

மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் - நான்

நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த

நிலையிலும் எனக்கு மரணமில்லை! (ஒரு)

2. பரமசிவன் கழுத்திலிருந்து ..

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

கருடா செளக்யமா - யாரும்

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் செளக்யமே கருடன் சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது!

உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும் - உன்

நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும்கூட மிதிக்கும்!

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று

மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது

அதில் அர்த்தம் உள்ளது! (பரம சிவன்)

வண்டி ஓடச் சக்கரங்கள்

இரண்டு மட்டும் வேண்டும் - அந்த

இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்

உனைப்போல் அளவோடு உறவாட வேண்டும்

உயர்ந்தோறும் தாழ்ந்தோறும் உறவு கொள்வது

அது சிறுமை என்பது அதில் அர்த்தம் உள்ளது! (பரமசிவன்)

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்

நிலவும் வானும் போலே - நான் நிலவு

போலத் தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே

என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும்போது

இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதியேது - இது

கணவன் சொன்னது இதில் அர்த்தம் உள்ளது. (பரமசிவன்)

3. கண்ணிலே அன்பிருந்தால்

கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே கருணை வந்தால் நீரிலும் தேனூறும் (கண்)

உன்னைப்போல் குழந்தையில்லை

உன்னைப்போல் துணையுமில்லை

உன்னாலே மலர்ந்த உள்ளம்

எண்ணாத நாளுமில்லை (கண்)

அந்த நாள் மறைந்ததம்மா இன்று நான் மனிதனம்மா

செண்டாடும் வடிவழகைக் கண்டாடும் கலைஞனம்மா

அன்னையே உன்வடிவம் தந்தையே உன் இதயம்

அன்பே உன் துணையிருக்க என் பாடல் முடிவதெங்கே? (கண்)

4. மலர்களைப் போல

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்

அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்

அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான் (கலை)

மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை

மங்கல மேடையில் பொன்வண்ணம் கண்டான்

மாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்

மணமகள் வந்து நின்று மாலை சூடக் கண்டான் (கலை)

ஆசையின் பாதையில் ஓடிய பெண் மயில்

அன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்

வாழிய கண்மணி வாழிய என்றான்

வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான் (கலை)

பூ மணம் கொணடவள் பால் மணம் கண்டாள்

பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்

மாமனைப் பாரடி கண்மணி என்றாள்

மருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டான் (மலர்)

5. யார் யார் யாரோ

ஆ : யார் யார் யார் அவள் யாரோ

பெ: ஊர் பேர்தான் தெரியாதோ

ஆ : சலவைக் கல்லே சிலையாக

தங்கப் பாளம் கையாக

மலர்களிரண்டு வழியாக

பெ: மயங்க வைத்தாரோ (யார்)

ஆ : முத்துமணித் திரள் ரத்தினமோ

மொய்க்குழல் மேகச் சித்திரமோ!

பெ: செக்கச் சிவந்த இதழாலே

சிந்தும் புன்னகை மந்திரமோ! (யார்)

ஆ : கண்கள் மயங்கும் கண்ணானாள்

பெண்கள் மயங்கும் பெண்ணானாள்

பெ: நினைவில் மயங்கும் பொருளானாள்

நிலவில் மயங்கும் இருளானாள்! (யார்)

ஆ : அஞ்சனம் கொண்டாள் நகை கொண்டாள்

அச்சம் நாணம் மடம் கொண்டாள்

பெ: மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள்

மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள்?

http://thatstamil.oneindia.in/specials/art.../13/others.html

எனக்கு கவிஞர் கண்ணதாசனுடைய பாடல்கள் மிகவும் பிடிக்கும். சொற்களை அளந்து, நிறுத்து போடுவதில் அவருக்கு இணை அவரேதான்.

பாடல்கள் எதனை எடுத்தக்கொண்டாலும் அனைத்திலும் பொருள் நிறைந்திருக்கும். அதான் கண்ணதாசனின் திறமை. உதாரணமாக "ஒரு கிண்ணத்தை ஏந்நுகிறேன் ஏன்? ஏன்? பல எண்ணத்தில் நீந்துகிறேன். என்ற இந்தப்பாட்டு சாதாரணமாகக் கேட்டுவிட்டுப் போவோருக்கு ஒரு அர்த்தத்தையும் கொஞ்சம் ஆழ்ந்து கேட்டால் வேறொரு அர்த்தத்தையும் தரும்.

  • 9 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாள் கவிஞர் கண்னதாசனின் நினைவு நாள் என்பதால் அவரை நினைவு கூர்வோம்.

கவியரசருக்கு எண்பது

[courtesy தென் செய்தி]

இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கூறும் நல்லுகமெங்கும் என்றும் அழியாத வகையில் தனது முத்திரையை பொறித்த கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலம் மிகக் குறைவே மானிட வாழ்க்கையில் 54 ஆண்டுக்காலம் என்பது மிகக் குறுகிய காலமேயாகும். அந்தக் குறுகிய காலத்தில் அவரது சாதனை என்பது எண்ணி எண்ணிப் பிரமிக்கதக்கதாகும்.

எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த அவர் தனது சுயமுயற்சியால் இலக்கியப் புலமையை வளர்த்துக்கொண்டு பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் பிறகு தமிழ்க் கவிதை யுலகின் முடிசூடாத மன்னராகத் திகழ்ந்தார்.

அவரது வாழ்க்கை எவ்வளவோ ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்டிருக்கிறது. வயிற்றுப் பசியைத் தணிக்கப் போராடியும் இருக்கிறார். எத்தனையோ பேரின் பசியைப் போக்கியும் இருக்கிறார். கோடி கோடியாக செல்வம் திரட்டிப் பெருக்கியும் இருக்கிறார். அதைப் பிறருக்கு வாரி வழங்கியுமிருக்கிறார்.

''ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு

ஒரு கோலமயில் என் துணையிருப்பு''

என அவரே பாடியிருப்பதைப் போல களியாட்ட வாழ்க்கையும் நடத்தியிரு:ககிறார்.

மதத் தத்துவங்களின் சாரத்தைப் பிழிந்தெடுத்து பேருரைகள் நிகழ்த்திய ஞானப் பேராசானாகவும் திகழ்ந்திருக்கிறார்.

இலக்கியத் தென்றலாகத் தவழ்ந்து தமிழ் மணம் பரப்பி அனைவரையும் மகிழ்வித்தும் இருக்கிறார். அரசியல் புயலாகச் சீறிச் சுழன்றடித்து எதிரிகளைத் திக்குமுக்காட வைத்தும் இருக்கிறார்.

'எப்படி வாழவேண்டும் என்பதற்கு இது நூலில்லை எப்படி வாழக் கூடாது என்பதற்கு இதுவே வழிகாட்டி' எனத் தனது சுயசரிதையின் முன்னுரையில் சொல்லுகிற துணிவு அவருக்கு இருந்ததைப் படித்தவர்கள் முதலில் திடுக்கிட்டாலும் அவரது புதுமையான தமிழ்நடையில் மயங்கி அவரது தவறுகளை மறந்து போற்றினார்கள்.

அவரது பாடல்கள் திரையுலகில் புதியதொரு சகாப்தத்தைத் தோற்றுவித்தன. படித்தவர்-பாமரர் பெரியவர்கள்-இளைஞர்கள் ஆண்கள்-பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் மயங்கி முணுமுணுக்கும் வண்ணம் இலக்கிய நயம் மிகுந்த பாடல்கள் அவரிடமிருந்து பிறந்தன. அவர் வாழ்ந்த காலம் முழுவதிலும் திரையுலகில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத கவிக்குயிலாகத் திகழ்ந்தார்.

அரசியலில் அவர் எந்த நிலை எடுத்திருந்தாலும் தான் நியாயம் என்று உணர்ந்தவற்றுக்காகப் போராடினார். பதவிகளுக்காக அவர் ஒருபோதும் யாரிடமும் கெஞ்சியதில்லை. தன் நண்பர்கள் பதவிகளைப் பெற உதவியிருக்கிறார். அவரைத் தேடி பதவிகள் வந்தபோதும் அதைப் பிறருக்கு வழங்கிய வள்ளல் அவர்.

கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கி இளங்கவிஞர்களை நாட்டிற்கு அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே பல நூறு கவிஞர்களை உருவாக்கி மகிழ்ந்த பேருள்ளம் அவரது உள்ளம்.

கவிச்சக்கரவர்த்தியான கம்பனுக்குப் பிறகு 'சந்தம்' கவியரசர் கண்ணதாசனிடம் தான் குடிகொண்டது. தனது கவிதை யடிகளால் தமிழ் கூறும் நல்லுகை அளந்தவர் அவர். சொல்தொகுதியின் கரைகண்டவர் அவர். அதனால்தான் நொடிப்பொழுதில் கவிதைகளை எழுதிக்குவிக்க அவரால் முடிந்தது.

பணம் சம்பாதிப்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தால் திரை யுலகில் அவர் ஒரு ஜெமினிவாசனாக ஏ.வி.எம். மெய்யப்பச் செட்டியாராக ஆகியிருக்க முடியும். திரையுலகில் அவரது செல்வாக்கு கொடிகட்டி பறந்த காலத்தில் அவர் சொற்படி நடக்க நடிகர்கள் நடிகைகள் படமெடுக்கும் முதலாளிகள் இயக்குநர்கள் உட்பட பலரும் காத்துக்கிடந்தனர். இந்தச் செல் வாக்கைப் பயன்படுத்தி அவரும் படத் துறை யில் தங்கச்சுரங்கம் வெட்டி இருந்திருக்கலாம்.

பத்திரிகைத் துறையில் அவர் எழுத்திற்கு பெரும் மதிப்பு இருந்தது. குமுதம் ஆனந்தவிகடன் கல்கி ராணி தினமணி, தினத்தந்தி போன்ற பெரும் பத்திரிகைகள் போட்டிபோட்டுக்கொண்டு அவரது எழுத்துகளைப் பிரசுரித்துத் தங்களின் விற்பனையைப் பெருக்கிக்கொண்டன. ஆனால் கவிஞர் தனது சொந்தப் பத்திரிகை களான தென்றல், முல்லை, கண்ணதாசன் போன்றவற்றை சற்றுக் கவனத்துடன் வணிக நோக்கில் நடத்தியிருந்தால் அவை நின்று நிலைத்திருக்கும். கவிஞரும் பெரும் பத்திரிகை முதலாளியாயிருந்திருப்பார்.

அரசியல் உலகில் தனது செல் வாக்கைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்த வரல்லர். தமிழக அரசிலும் இந்திய அரசிலும் அவருக்கு மிக வேண்டியவர்கள் பெரும் பதவிகளில் இருந்தபொழுது அவர்களைப் பயன்படுத்தி தொழில் துறையில் ஈடுபட்டு பெரும் செல்வம் திரட்டியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை.

பணத்தை அள்ளிக் குவிக்க வேண்டும் என அவர் ஒருபொழுதும் ஆசைப்பட்டதில்லை.

தான் ஒரு சிறந்த இலக்கியவாதியாகத் திகழவேண்டும் என்று மட்டுமே அவர் விரும்பினார். அவரது ஆசைக்கு முட்டுக்கட்டையாக அரசியல் குறுக்கிட்டது. அதையும் தாண்டி எழுதினார். அரசியலில் அவர் செலவழித்த நேரத்தை எழுதுவதில் செலவழித்திருந்தால் மேலும் பல புதிய ஆக்கங்கள் தமிழுக்குக் கிடைத்திருக்கும்.

தனிமையில் அவரிடம் பேசும் பொழுது ஒன்றை நான் வற்புறுத்துவதுண்டு.

'பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் பிறகு தமிழ்க் கவிதையுலகின் தலைமகனாக நீங்கள் திகழுகிறீர்கள். தமிழ்கூறும் நல்லுலகம் உங்களிடமிருந்து சிறந்த படைப்புகளை எதிர்பார்க்கிறது. தமிழின் பெருமையைப் பல மடங்குகள் உயர்த்தும் உன்னதமான படைப்புகளை உருவாக்கும் அறிவும் ஆற்றலும் தகுதியும் திறமையும் உங்களிடம் உண்டு. அதை நீங்கள் செய்யவேண்டும்' எனப் பலமுறைகள் வேண்டியிருக்கிறேன்.

அவரும் அதை வழிமொழிவார். ஆனால் எங்கேயோ வீசும் அரசியல் சூறாவளியில் தன்னையும் அறியாமலேயே சிக்கிக்கொள்ளுவார். அதிலிருந்து மீளமுடியாமல் தவிப்பார்.

அரசியல் சூறாவளிகள், கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள் ஆகிய வற்றுக்கு நடுவேயும், அவரது இலக்கியச் சாதனை எண்ணி எண்ணிப் பிரமிக்கத் தக்கதாகும்.

18 வயதில் எழுதப்புகுந்த அவர் 54-ஆம் வயதில் மறைந்தார். இடைப்பட்ட 36 ஆண்டுக்காலத்தில்

கவிதைகள் - 8 தொகுதிகள்

நவீனங்கள் - 20

கட்டுரை நூற்கள் - 20

அர்த்தமுள்ள இந்து மதம் - 6 பாகங்கள்

திரைப்படப் பாடல்கள் - 5000க்கு மேல்

திரைக்கதை வசனம் - 10 படங்களுக்கு மேல்

மாங்கனி, ஆட்டனத்தி-ஆதிமந்தி, கவிதாஞ்சலி, தைப்பாவை, பாண்டிமாதேவி, இயேசுகாவியம் முதலிய பல காவியங்களைப் படைத்தார்.வணங்காமுடி, தமிழ்மன்னன், காரைமுத்துப் புலவர் ஆகிய புனைப் பெயர்களிலும் அவர் எழுதிக்குவித்தார்.

அவருடைய குட்டிக்கதைகள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டன.

அவர் எழுதிய 'புஷ்பமாலிகா' ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

'விளக்கு மட்டுமா சிவப்பு' என்னும் நவீனம் மலையாளத்தில் மொழி பெயர்க்கப்பட்டு 'மலையாளநாடு' இதழில் தொடராக வெளிவந்தது. அவரது 'அழகி' என்னும் கவிதை ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டது.

'பாடாய் தும்பி! மணவறைப்பாட்டு' கவிதை சாகித்திய அகாதமியினால் 1958-ஆம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட்டது.

கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகளை நண்பர் ஆஷா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 'ஆய தங்ஸ்ர்ண்ழ்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

பாரிசில் வாழும் பேராசிரியரான ஓங்ஹய்லிஙஹழ்ண்ங்லிஓன்ப்ண்ஹ என்பவர் கவிஞரின் 10 கவிதைகளைப் பிரெஞ்சு மொழியில் மொழி பெயர்த்து ஃஹய்ய்ஹக்ஹள்ஹய்ங் என்ற தலைப்பில் வெளியிட்டார்.

தமிழக அரசு இவரை அரசவைக் கவிஞராக நியமித்துப் பெருமையடைந்தது. இந்திய சாகித்திய அகாதமி அவரின் 'சேரமான் காதலி' நவீனத்தைத் தேர்ந்தெடுத்துப் பரிசளித்தது.

எம்.ஏ.சி. அறக்கட்டளையின் சார்பாக அண்ணாமலையரசர் நினைவுப் பரிசு கொடுக்கப்பட்டது.

இந்தப் பாராட்டுகளும் பரிசுகளும் அவரைத் திருப்தி செய்யவில்லை. கம்பனைப் போல இளங்கோவைப் போல அற்புதமான காவியங்களைப் படைத்து அழியாப் புகழைப் பெறவேண்டும் என்ற துடிப்பு அவரிடம் குடிகொண்டிருந்தது என்பதை நானறிவேன்

'கம்ப சூத்திரம்' என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதையில் தனது மனக் கிடக்கையை பின்வருமாறு வெளியிட்டுள்ளார்:

கம்பனெனும் மாநதியில்

கால்நதிபோல் ஆவதென

நம்புகிறேன் பாட்டெழுதும் நானோ-அந்த

நாயகன்தான் என்ன நினைப்பானோ?

ஆனால் காலம் செய்த சதியால் அவரது மனோரதம் முழுமையாக நிறைவேறவில்லை.

அவருடைய கவிதைகள், திரைப் பாடல்கள் மட்டும் இலக்கிய நயத்தோடு மிளிரவில்லை. அவரது உரைநடையும் இலக்கியச் சுவையும் மிகுந்ததாக இருந்தது. பலதரப்பட்ட உரைநடைகளை அவர் கையாண்டார். சிவகங்கைச் சீமை, இல்லற ஜோதி போன்ற படங்களுக்கு அவர் எழுதிய வசனம் இலக்கிய நடையில் அமைந்தது.

தி.மு.க.விலிருந்து விலகும் கட்டத்தில் 'போய் வருகிறேன்', 'முடிவின் தொடக்கம்', 'பாவமன்னிப்பு' என்ற தலைப்புகளில் அவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் விவிலிய நடையை வென்றன. விவிலியத் தமிழைப் புதுமையாகக் கையாண்டு எல்லோரின் உள்ளங்களையும் தொட்டார்.

அதற்கு மறுப்பு எழுதச் சிலர் முற்பட்டபொழுது அறிஞர் அண்ணா அவர்களைத் தடுத்துவிட்டார். 'இந்த மாதிரி முயற்சியும் பாணியும் உங்களில் யாருக்கும் வராது. அது அவனுக்கு மட்டுமே ஆகிவந்த கலை' என்றாராம்.

இதைத் தொடர்ந்து வனவாசம், மனவாசம் என்ற தலைப்புகளில் தனது வாழ்க்கை வரலாற்றை ஒளிவு மறைவின்றி அவர் எழுத ஆரம்பித்தபொழுது தமிழகம் திகைத்தது. அவரது எதிரிகள் கூட அந்தப் புதுமையான நடைக்காக அதை வாங்கிப் படித் தார்கள். இதற்கு முன்னாலும் அதற்குப் பின் னாலும் இன்றுவரை யாராலும் அந்தப் புதிய பாணியில் எழுத முடியவில்லை. முயன்று பார்த்தவர்கள் தோல்வியையே சந்தித்தனர்.

கவிதை, உரைநடை, பேச்சு ஆகிய மூன்று துறைகளிலும் ஆற்றல் மிக்ககவராக கவியரசர் விளங்கினார். கவிதை புனைவதில் சிறந்தவருக்கு பேசத் தெரியாது. அல்லது உரைநடை சிறப்பாக வராது. ஆனால் கவியரசர் கவிதை எழுதும் ஆற்றலையும், படிப்போரைத் துடித்தெழ வைக்கும் உரைநடைத் திறனையும், பண்டிதரையும் பாமரரையும் கவர்ந்திழுக்கும் பேச்சு வன்மையும் ஒருங்கே கொண்டிருந்தார். இந்த மூன்று ஆற்றல்களும் ஒருங்கே அமைந்த கவிஞர் அவர் ஒருவர் மட்டுமே.

வள்ளுவனுக்கும், இளங்கோவுக்கும் ,கம்பனுக்கும், பாரதிக்கும், பாரதிதாசனுக்கும், இறப்பு என்பது இல்லை. அவர்கள் சாகாவரம் பெற்றவர்கள். அவர்களைப் போலவே கவியரசர் கண்ணதாசனும் அமரத்துவம் பெற்றவர். கன்னித் தமிழ் இருக்கும்வரை கண்ணதாசனின் பெயரும் நிலைத்திருக்கும்.

தண்டமிழ்ச் சோலையில் கண்ணதாசக் குயிலின் பாடல்கள் என்றும் எதிரொலித்துக்கொண்டே இருக்கும். மறத் தமிழரை மகிழ்வித்துக் கொண்டேயிருக்கும்.

மனித நேயமிக்க அந்த மாபெரும் கவிஞரை நினைக்கும்தோறும் என்னெஞ்சம் நெக்குருகிறது.

மாணவனாக நான் இருந்தபொழுது என்னை எழுத்தாளனாக நாட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் கவியரசர். அவரைப் பின் தொடர்ந்து அரசியலிலும் அடியெடுத்து வைத்தேன். அரசியல் களங்களில் அவரும் நானும் தோளோடு தோள் நின்று ஒன்றாகப் போராடியிருக்கிறோம். பல்வேறு கட்டங்களில் எனக்குக் காவலராக, கவசமாக நின்று காத்தவர் அவர். அரசியலில் நான் உயரவேண்டும் என உளமாற விரும்பி அதற்காக அரும்பாடு பட்டவர்.

தொடக்கத்தில் இருந்து இறுதிவரை அவரது நட்பை பொன்னேப்போல போற்றிப் பாதுகாத்தேன். அரசியலில் இருவேறு முகாம்களில் நாங்கள் பிரிந்து நிற்க நேர்ந்த காலத்திலும் எங்கள் உறவு பாதிக்கப்பட்டதே இல்லை. மேலும் மேலும் வளர்ந்து வலுவடைந்ததே தவிர நலிவடைந்ததில்லை. அதனால்தான் மீண்டும் நாங்கள் இணைந்து பணியாற்ற முடிந்தது.

அந்த மாபெரும் கவிஞனின் குழந்தையுள்ளத்தில் எனக்குமொரு சிறு இடம் நிரந்தரமாகக் கிடைத்ததை எண்ணி மகிழு கிறேன். அவர் நினைவு நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கிறது.

தனது வாழ்வையே தனக்கு ஆசானாகக் கொண்ட அற்புத மனிதர் அவர்.

ஆற்றிலும் குளித்தேன் சேற்றிலும் குளித்தேன்

காற்றில் பறந்தேன் கல்லில் நடந்தேன்

ஊற்றுப் புனலில் ஒளியினைக் கண்டேன்

மாற்றுப் பொன்னிலும் மாசினைப் பார்த்தேன்

பார்த்தது கோடி பட்டது கோடி

சேர்ந்தது என்ன? சிறந்த அனுபவம்

- என்று பாடிய கவியரசரின் வாழ்வின் பல கட்டங்களில் அவர் அருகே நின்று அவரைக் கண்டு பரவசப்பட்ட நான் என்னை எழுத்தாளனாக்கி தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகப்படுத்தி மகிழ்ந்த கவியரசரின் பொன்விழாவினை மதுரையில் 1976ஆம் ஆண்டு சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்த நாட்கள் என் நினைவில் இன்னமும் நிழலாடுகின்றன. அவரது எண்பதாவது ஆண்டு விழாவின் போது அவர் இல்லாத வெறுமை நம்மை வாட்டுகிறது.

Selected Writings - P.Nedumaran - பழ. நெடுமாறன்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நுனாவிலான் ............

மா பெரும் கவி கண்ணதாசனை நினைவு கூர்ந்து

,புலம் பெயர் நாட்டில் அவரின் பிறந்த நாள் இன்று.........

பொருத்த மான விடயத்தை .,பொருத்தமான வேளையில்

கள உறவுகளுக்கு தந்த உங்களை பாராட்டு கிறேன் .நன்றி .

நன்றியுடன் நிலாமதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணதாசன் மறக்கமுடியாத ஒரு கவிஞர் இன்னும் எத்தனையோ பேரின் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவரது காலத்தால் அழியாத பாடல்கள் எத்தனையோ இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. அழியாத ஒரு கலைஜன் இன்று மீளாத்துயில் கொள்கிறான் :rolleyes:

கண்ணதாசன் எதுகை மோனைகள், அந்தாதிகள் போன்றவற்றையும் கம்பராமாயணத்தின் கவி நடைகளையும் கையாண்டிருந்தாலும், அவரின் வெற்றியின் இரகசியம் அவர் மிகவும் எளிமையான பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய சொற்களைப் பாவித்ததாலேயே, அவரது பாடல்கள் எல்லோரையும் சென்றடைந்தது.

இன்று அவர் நம்மிடையே இல்லையெனிலும் அவரது கவிதைகள் மூலமும், பாடல்கள் மூலமும் எம்மோடு வாழ்ந்து கொண்டேதானிருக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.