Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் செய்திகள் 2023

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குறுதிக்கமைய தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடத் தயார் - அரசாங்க அச்சக பிரதானி

Published By: VISHNU

17 FEB, 2023 | 04:23 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு செலவாகும் தொகையை பிறகு தருவதாக தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிக்கமைய தபால் மூல வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயார். 

என்றாலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்காததால் அந்த நடவடிக்கையை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறது என அரசாங்க அச்சக பிரதானி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு செலவாகும் தொகையை பிறகு தருவதாக தேர்தல் ஆணைக்குழு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிக்கமைய  வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தயாராக இருக்கிறோம். என்றாலும் வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கான பொலிஸ் பாதுகாப்பு வழங்காததால் அந்த நடவடிக்கையை இதுவரை ஆரம்பிக்க முடியாமல் இருக்கிறது. 

வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்காக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு தெரிவித்து பொலிஸ் மா அதிபர் உட்பட குறித்த பிரிவுகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி 4 கடிதங்கள் இதுவரை அனுப்பி இருக்கிறோம். 

அத்துடன் வாக்குச்சீட்டுக்களை பொலிஸ் பாதுகாப்பு இல்லாமல் இதுவரை அச்சிட்டுவந்தமை தொடர்பாக ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதால், குறித்த வாக்குச்சீட்டுக்களை மீள எண்ணி உறுதிப்படுத்த வேண்டி இருகிறது என்றார்.

இதேவேளை, 12 மாவட்டங்களுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிட்டு முடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகம் அறிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/148448

  • Replies 76
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் கேட்டு பாருங்கள் நிதி தருவார்கள் அல்லது அவர்களே சொல்வார்கள் எந்த கட்சி  வெற்றியடைந்தது என்று....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் மீள ஆரம்பமானதன் பின் அரச அச்சகத்திற்கு பாதுகாப்பு - பொலிஸ்

Published By: DIGITAL DESK 5

18 FEB, 2023 | 10:57 AM
image

(எம்.மனோசித்ரா)

அரச அச்சகத்தினால் பாதுகாப்பு கோரப்பட்டுள்ள போதிலும் , தற்போது வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மீண்டும் அப்பணிகள் ஆரம்பமானதன் பின்னர் உரிய நேரத்தில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அரச அச்சகத்தினால் பொலிஸ் திணைக்களத்திடம் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு தேர்தலுக்கும் பொலிஸ் திணைக்களத்தினாலேயே பாதுகாப்பு வழங்கப்படும். தேர்தல் ஆணையாளரின் ஆலோசனைக்கமையயே அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இந்நிலையில் அரச அச்சகம் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எவ்வாறிருப்பினும் நிதி நெருக்கடிகள் காரணமாக வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பமானதன் பின்னர் நாம் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு பாதுகாப்பு வழங்கும் போது நீண்ட காலத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த வேண்டியேற்படும். இதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை பிரத்தியேகமாக நியமிக்க வேண்டிய தேவையும் காணப்படுகிறது.

இவ்வாறான அரச நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் , கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டிய பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை பொலிஸ் திணைக்களத்தினாலேயே தீர்மானிக்கப்படும். எனவே இந்தக் காரணிகள் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/148485

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்கும் சரி.. ராஜபக்ச குடும்பங்களுக்கும் சரி.. தேர்தல் அரசியலில் நம்பிக்கை போயிட்டுது. ஏன்னா எவ்வளவு தான் அள்ளி வீசினாலும்.. வாக்குப் போட்டாலும்.. கடைசியில.. கதிரையில் இருந்து தூக்கி வீசுறாங்களே. ஆக தேர்தலே நடக்காமல்.. குந்தின கதிரையில் நிரந்தரமா இருப்பம் என்று முடிவெடுத்திருப்பார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை நடத்துவதில் இடையூறு : மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

Published By: NANTHINI

18 FEB, 2023 | 04:32 PM
image

(எம்.மனோசித்ரா)

ள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி, நிதி அமைச்சினால் விடுக்கப்படாமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் உயர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அத்தோடு அரச அச்சகத்தினால் வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளமை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் போதுமானளவு எரிபொருள் வழங்கப்படாமை, பொலிஸ் திணைக்களத்தினால் அரச அச்சகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை திட்டமிட்ட தினத்தில் நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ள போதிலும், அதனை நிறைவேற்ற முடியாதவாறு ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி எதிர்த்தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் கடந்த 10ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது தேர்தல் ஆணைக்குழுவினால் திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துவதாக உறுதியளிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி அறிவித்துள்ள அதேவேளை, தமக்கான நிதி வழங்கப்படும் வரை வாக்குச்சீட்டுக்களை அச்சிட முடியாது என்று அரச அச்சகம் தெரிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு மீண்டும் நீதிமன்றத்தை நாடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/148527

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் குறித்து தீர்மானிப்போம் : தேர்தலுக்கான நிதியை விடுவிப்பதற்கு ஜனாதிபதி அனுமதியளிக்க வேண்டும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

Published By: NANTHINI

19 FEB, 2023 | 11:57 AM
image

(எம்.மனோசித்ரா)

ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி அறிவித்துள்ளது. 

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே எம்மால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மேலும், நிதி அமைச்சர் என்ற ரீதியில் தேர்தலுக்கான நிதியை விடுவிப்பதற்கு திறைசேரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அனுமதியளிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று முன்தினம் (17) வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார். 

தேர்தல் ஆணைக்குழுவினால் அரச அச்சகத்துக்கு நிதி வழங்கப்படாமையின் காரணமாக தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் வழங்கப்படாமல் தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே காணப்படுகின்ற நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வினவியபோதே நிமால் புஞ்சிஹேவா கேசரி வார வெளியீட்டுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளுக்கான செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நிதி அமைச்சு சுற்று நிரூபமொன்றை வெளியிட்டுள்ளது. 

அதன் அடிப்படையிலேயே தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினமாகும் என்று திறைசேரி அறிவித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபமொன்றில் அத்தியாவசிய தேவைகள் எவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

எனவே, நிதி அமைச்சின் சுற்று நிரூபத்துக்கு அப்பால் அவர்களால் செயற்பட முடியாது. அதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுமதியளிக்க வேண்டும். அதனையே திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு இதுவரை எடுக்கவில்லை. தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே நாம் ஒன்றுகூடி தீர்மானமொன்றை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/148556

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தின!

தேர்தல் ஆணைகுக்ழு அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ள அறிவிப்பு !!

தபால் மூல வாக்களிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ள தேர்தல் ஆணையாளர் நாயகம், அந்த அறிவிப்பை அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் விடுத்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவருக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ள அதேவேளை தேர்தல் கடமைகளுக்கான மேலதிக வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடுமுறை நாட்களில் ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.

தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்படும்.

எவ்வாறாயினும், குறித்த அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படுமெனவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பினை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1324553

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ள்ளூராட்சி மன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்த முடியாமல் போனால் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை விசேட ஆணையாளர்களின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அரசாங்க வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தேர்தல்: அறிவிக்கப்பட்ட பிறகு நடத்த முடியாது தவிக்கும் நிலை ஏன்? பொருளாதாரம் எப்படி உள்ளது?

  • ரஞ்சன் அருண்பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கை ஜனாதிபதி செயலகம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பணத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு, நிதி அமைச்சின் செயலாளர் இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நிதி அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் வெள்ளிக்கிழமை பிரசன்னமாகியிருந்தனர்.

 

இதன்போதே நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

நாட்டின் செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு அமைய, நாட்டின் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.

அத்தியாவசியமற்ற வேறு தேவைகளுக்கு செலவினங்களை மேற்கொள்ள வேண்டுமானால், நிதி அமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சுற்றுநிரூபமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், தேர்தலுக்கு தேவையான நிதியை பெற்றுக்கொடுப்பதில் பாரிய சிக்கல்கள் காணப்படுவதாகவும் நிதி அமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

தபால்மூலம் வாக்களிப்பு ஒத்தி வைப்பு

தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28ம் தேதிகளில் நடத்த முன்னர் திட்டமிடப்பட்ட போதிலும், தற்போது தேதிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

சஜித் பிரேமதாஸ

பட மூலாதாரம்,சஜித் பிரேமதாஸ

 
படக்குறிப்பு,

சஜித் பிரேமதாஸ

வாக்குசீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் அரச அச்சகத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், வாக்குசீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான நிதியை, நிதி அமைச்சு வழங்காமையினால், வாக்குசீட்;டுக்களை விநியோகிக்க அரச அச்சகத் திணைக்களம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனால், தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை ஒத்தி வைக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போதிய அளவு போலீஸ் பாதுகாப்பு கிடையாது

தமக்கு தேவையான போதியளவு போலீஸ் பாதுகாப்பு இல்லாமையினால், தேர்தலுக்கு தேவையான அச்சிடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாக அரச அச்சகத் திணைக்களத்தின் அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக பிப்ரவரி 17 வரை இரண்டு போலீஸ் அதிகாரிகளே வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

வாக்குசீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், பாதுகாப்பு கடமைகளுக்காக 65 போலீஸ் அதிகாரிகளை கோரியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் போலீஸ் பாதுகாப்;பு கோரப்பட்ட போதிலும், இதுவரை போதுமான அளவு பாதுகாப்பு தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கிறார்.

போலீஸ் பாதுகாப்பு இல்லாமல், வாக்குசீட்டு அச்சிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என தமது அலுவலகத்திலுள்ள அனைத்து ஊழியர்களும் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.

போலீஸ் தரப்பின் பதில்

நிதிப் பற்றாக்குறை காணப்படுகின்றமையினால், வாக்குசீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைக்கவில்லை எனவும், அவ்வாறு வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

நிஹால் தல்துவ

பட மூலாதாரம்,MOD

 
படக்குறிப்பு,

நிஹால் தல்துவ

''அரச அச்சகத் திணைக்களத்தினால் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. எனினும், நிதி பற்றாக்குறை காரணமாக வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக அந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை என்றே தகவல் உள்ளது. வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மிக நீண்ட நாட்கள் அதிகாரிகளை அங்கு நிறுத்த வேண்டும். அதற்கான அதிகாரிகளைத் தேட வேண்டும். எமக்கு பொறுப்புள்ளது என்பது உண்மை. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரது ஆலோசனைக்கு அமைய நாம் செயற்படுவோம்" என நிஹால் தல்துவ தெரிவிக்கிறார்.

அரச அச்சகத் திணைக்களத்தின் அச்சகர் பதில்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வாக்குச்சீட்டு அச்சிடும் நடவடிக்கைகள் முடிவடையும் வரையான 28 முதல் 30 நாட்கள் வரை போலீஸார் வழமையாக தமக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் என அரச அச்சகத் திணைக்களத்தின் அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

''முழு அச்சகத்திலும் 25 வரையான பிரிவுகள் உள்ளன. அதற்கு முழுமையான பாதுகாப்பு 30 நாட்கள் வரை வழங்குவார்கள். ஏனைய வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அந்த வேலையை எம்மால் செய்ய முடியாது" என அவர் கூறினார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படுகின்ற சிக்கல்கள் தொடர்பில் விசேட மனுவொன்றின் ஊடாக உயர்நீதிமன்றத்தை தெளிவூட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை, நிதி அமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலுக்கு தடையாக காணப்படுகின்ற விடயங்கள் குறித்து எதிர்வரும் சில தினங்களில் உயர்நீதிமன்றத்தை தெளிவூட்டவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கங்கானி கல்பனி லியனகே

பட மூலாதாரம்,GOVERNMENT PRINTER

 
படக்குறிப்பு,

கங்கானி கல்பனி லியனகே

அத்துடன், அரச அச்சகத் திணைக்களத்தினால் அச்சிடும் நடவடிக்கைகளை தாமதப்படுத்துகின்றமை, பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் உரிய வகையில் எரிபொருள் விநியோகிக்காமை, அச்சகத் திணைக்களத்திற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்காமை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் விசேட மனுவொன்றின் ஊடாக உயர்நீதிமன்றத்திற்கு தெளிவூட்டவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு, உயர்நீதிமன்றத்திற்கு உறுதிமொழி வழங்கிய போதிலும், அதனை உரிய வகையில் முன்னெடுக்க முடியவில்லை என்பது குறித்தே, உயர்நீதிமன்றத்தை தெளிவூட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கட்சிகள் எதிர்ப்பு

உள்ளுராட்சி சபைத் தேர்தலை திட்டமிட்ட வகையில் நடத்தாத அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கிறது.

அனுரகுமார திசாநாயக்கே

பட மூலாதாரம்,ANURAKUMARA DISANAYAKE

 
படக்குறிப்பு,

அநுர குமார திஸாநாயக்க

தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அதிகாரிகளின் கடமை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமது பொறுப்புக்களை தவறவிடும் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, நீதிமன்றத்தில் அவர்கள் தவறிழைத்தவர்களாக உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

மக்களுக்கான பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் அனைவரும் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, தேர்தலை ஒத்தி வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இந்த செயற்பாடுகளை தாம் தோற்கடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-64688347

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு புதிய சிக்கல்

 

 

vote.jpg

தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதால், வேதனம் இல்லாமல் விடுமுறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட செல்லும் அரச ஊழியர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு வேதனம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு தாக்கல் செய்த நாளிலிருந்து மூன்று மாதங்கள் வேதனம் இல்லாத விடுமுறையில் இருக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், திருத்தம் செய்து அந்த சுற்றறிக்கையை மாற்றுவதற்கு பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அது பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

https://thinakkural.lk/article/241028

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்காக வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அதனை முழுமையாக வழங்க முடியாது - அமைச்சரவை பேச்சாளர்

Published By: DIGITAL DESK 5

21 FEB, 2023 | 09:05 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் நிதி நெருக்கடி குறித்து திறைசேரி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அதனையடுத்து தேர்தல் ஆணைக்குழு அதன் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. எனவே எந்தவகையிலும் ஆளும் கட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு துணை போகவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வரவு - செலவு திட்டத்தில் தேர்தலுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் , தற்போது அதனை முழுமையாக விடுவிக்க முடியாதளவிற்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாகவே சகல அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்ட செலவில் 5 சதவீதத்தைக் குறைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (21) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நாம் முன்னின்று செயற்படுவோம். நாம் எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகித்த போது நாட்டில் இது போன்ற பொருளாதார நெருக்கடிகள் காணப்படவில்லை.

எந்த பிரச்சினைகளும் இல்லாத நிலையிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டமையின் காரணமாகவே நாம் சர்வதேசத்தை நாடினோம்.

ஆனால் தற்போது முற்றிலும் அதற்கு மாறுபட்ட நிலைமையே காணப்படுகிறது. எனவே தான் தேர்தலுக்கான நிதியை வழங்குவது நெருக்கடியாகும் என்று திறைசேரியும் , நிதி இன்றேல் தேர்தலை நடத்துவது கடினமாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளன. 

இதில் எந்தவகையிலும் அரசாங்கத்தின் தலையீடுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியமோ அல்லது வேறு எந்தவொரு சர்வதேச அமைப்போ தேர்தலை நடத்துமாறு எமக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை.

எந்தவொரு அமைச்சிற்கும் வரவு - செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி முழுமையாகக் கிடைக்கப் பெறுவதில்லை. நாட்டின் நிதி நிலைமைகளின் அடிப்படையிலேயே நிதி வழங்கப்படும்.

அதற்கமையவே இம்முறை தேர்தலுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் , அதனை விடுவிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாறாக இவ்விடயத்தில் ஆளுங்கட்சியின் எவ்வித தலையீடுகளும் இல்லை என்றார். 

https://www.virakesari.lk/article/148765

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது : வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே  எஞ்சியுள்ளது -மஹிந்த தேசப்பிரிய

22 FEB, 2023 | 06:13 PM
image

(எம்.மனோசித்ரா)

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எரிபொருள் தட்டுப்பாடு , வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி, பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழங்கப்படாமை மற்றும் நிதி அமைச்சினால் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனையவற்றுக்கு நிதியை விடுவிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமையையே தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்துவது கடினம் எனத் அறிவித்துள்ளமைக்கான  காரணங்களாக முன்வைத்துள்ளது.

இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்யார் என்பது தொடர்பில் என்னால் கூற முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் நான் பதவியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனக் கூற முடியாது. 

துடுப்பாட்ட களத்தில் இருப்பவரால் மாத்திரமே பந்தை எவ்வாறு கையாள முடியும் என்பதைக்கூற முடியும். பார்வையாளர்களால் அதனைக் கூற முடியாது.

எனவே பதவியில் இல்லாமல் வெறும் பார்வையாளனாக மாத்திரமேயுள்ள என்னால் எதனையும் கூற முடியாது. 

அவ்வாறு கூறுவது பொறுத்தமானதாகவும் இருக்காது. உண்மையில் தற்போது தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டியது மாத்திரமே எஞ்சியுள்ளது என்றார்.

https://www.virakesari.lk/article/148901

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது எனவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைக்காத அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள் - தேர்தல் ஆணைக்குழுவிடம் பெப்ரல் வலியுறுத்தல்

Published By: VISHNU

23 FEB, 2023 | 01:20 PM
image

 

(எம்.மனோசித்ரா)

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை திட்டமிட்ட படி நடத்துவதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் , அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவின் உள்ளிட்ட அதன் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்கு உரிய முறையில் முன்னெடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் , இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய அரச அதிகாரிகள் வெ வ்வேறு காரணிகளைக் குறிப்பிட்டு தேர்தலை நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில் அதனை வெற்றிகரமான நிறைவடையச் செய்வதற்காக நிதி அமைச்சு, பொலிஸ், அரச அச்சகம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், பொது நிர்வாக அமைச்சு உள்ளிட்டவற்றின் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

எவ்வாறிருப்பினும் துரதிஷ்டவசமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட தரப்பினர் ஒத்துழைக்காமையினால் தேர்தல் நடவடிக்கைகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இந்த நிலைமை ஜனநாயக நடைமுறைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், எதிர்கால தேர்தல்களில் மோசமான முன்னுதாரணமாகவும் அமையும். எனவே அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றத்தவறிய அதிகாரிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும், எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைள் தொடர்பிலும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

https://www.virakesari.lk/article/148955

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 15:34, ஏராளன் said:

இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள்யார் என்பது தொடர்பில் என்னால் கூற முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் நான் பதவியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் எனக் கூற முடியாது. 

துடுப்பாட்ட களத்தில் இருப்பவரால் மாத்திரமே பந்தை எவ்வாறு கையாள முடியும் என்பதைக்கூற முடியும். பார்வையாளர்களால் அதனைக் கூற முடியாது.

எனவே பதவியில் இல்லாமல் வெறும் பார்வையாளனாக மாத்திரமேயுள்ள என்னால் எதனையும் கூற முடியாது. 

பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு ஊடகவியளாலர் சந்திப்பு?

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி தேர்தல் நடக்குமா?: இன்று முக்கிய அறிவித்தல் வெளியாகும்!

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திற்கு அமைய சட்ட ரீதியாகவே உள்ளூராட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) கூடவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் கூறியுள்ளார்.

நாட்டின் தேசிய தேர்தல் ஆணைக்குழு சட்டப்பூர்வமாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும், தேர்தலை நடத்த நிதி இல்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
 

http://www.samakalam.com/உள்ளூராட்சி-தேர்தல்-நடக-2/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமானதே - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: DIGITAL DESK 5

25 FEB, 2023 | 02:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து செயற்பாடுகளும் அரசியலமைப்பிற்கு அமையவும், ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் ஒருமித்த தீர்மானத்திற்கு அமையவும் முன்னெடுக்கப்பட்டது.

தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு உத்தியோகபூர்வமானதே என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தின் உத்தியோகப்பூர்வ தன்மை தொடர்பில் தவறான நிலைப்பாடுகள் சமூக மயப்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவ்விடயம் தொடர்பில் நாட்டு மக்களை தெளிவுபடுத்துவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும்.

ஸ்ரீ லங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 104 ஆ(1) உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதி தெரிவு,பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்துக் கொள்ளல் மற்றும் மக்கள் வாக்கெடுப்பு நடத்தவது தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அதிகாரம் 2017 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க திருத்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டம் (262 பிரிவு) ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

அந்த கட்டளைச்சட்டத்தின் 24 ஆவது உறுப்புரையில் உள்ளூராட்சிமன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இந்த கட்டளைச்சட்டம் மற்றும் அதனுடனான விதி விதானங்களுக்கு அமைய இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2018.02.10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு ஊடாக 340 உள்ளூராட்சிமன்றங்களுக்கான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தெரிவு செய்யப்பட்ட 340 உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் 2022.03.19 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரின் அதிகாரத்தின் ஊடாக உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் ஒரு வருட காலத்திற்கு நீடிக்கப்பட்டது,இதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதி உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் நிறைவடையும்.

தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க 2022.12.16 ஆம் திகதி  மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய 2023.01.04 ஆம் திகதி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான அறிவித்தலை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டார்கள்.

இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 18,19,20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அங்கிகரிக்கப்பட்ட 59 அரசியல் கட்சிகளும்,329 சுயாதீன குழுக்களும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தார்கள்.

வேட்பு மனுக்கள் கையளித்தல் நிறைவு பெற்றதை தொடர்ந்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய 2023.03.09 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு கட்டளைச் சட்டத்தின் 38(1) உறுப்புரையின் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/149119

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கான சரியான செலவைக் கோருகிறார் ஜனாதிபதி

எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைக்காவிட்டால், நாட்டின் அத்தியாவசிய செலவுகளுக்காக கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்காலிக கொடுப்பனவுகளை செலுத்த முடியாத நிலையில் எதிர்வரும் தேர்தலுக்கான செலவுகளுக்கு சரியான வரவு செலவு திட்டத்தை வழங்குமாறு நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறோம், மேலும் எங்கள் செலவினங்களை கவனமாக திட்டமிட வேண்டும். ஆண்டு முழுவதும் பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது. எனவே தற்காலிக அடிப்படையில் நிதியை விடுவிக்க முடியாது. எதிர்பார்த்தபடி மார்ச் மாதத்தில் IMF கிடைக்காத பட்சத்தில் நாம் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

தேர்தல் செலவு குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாக தெரியவில்லை. தேர்தல் கமிஷன் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிட்டது, ஆனால் 6 பில்லியன் ரூபாய் கேட்டது. எங்களால் தற்காலிகமாக பணம் செலுத்த முடியாது, எனவே அவற்றை ஆய்வு செய்து சரியான வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

எங்களிடம் தேவையான அனைத்து பணமும் இல்லை, எனவே முன்னுரிமைகளுக்கு பணம் கொடுக்கப்பட வேண்டும். 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் திவால்நிலையை எதிர்கொள்ளும் சிறு தொழில்களுக்கு நிவாரணம் வழங்க 20 பில்லியன் ஒதுக்கியுள்ளோம். இந்தக் கொடுப்பனவுகளைத் தாமதப்படுத்த வேண்டுமானால் பாராளுமன்றம் எனக்குத் தெரிவிக்கலாம்.

பொருளாதாரம் எனது முன்னுரிமை. பொருளாதாரம் மேம்படாவிட்டால் நமக்கு நாடு இருக்காது. நாம் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை ஒன்று உள்ளது. நாட்டை இழந்து அரசியலமைப்பை வைத்துக் கொள்ளலாமா? நாட்டைப் பாதுகாத்தால்தான் அரசியலமைப்பைப் பாதுகாக்க முடியும்” என்றார்.

 

https://thinakkural.lk/article/242069

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சம்பளமில்லாது விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் சட்ட ஆலோசனை கோர தீர்மானம் - பிரதமர்

Published By: DIGITAL DESK 5

27 FEB, 2023 | 05:37 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு உத்தியோகப்பூர்வமான தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர், சம்பளமில்லாமல் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்க முடியும், இவ்விடயம் குறித்து சட்ட ஆலோசனை கோர தீர்மானிக்கப்பட்டுள்ளது என பிரதமர் தினேஷ் குணவர்தன ஆளும் தரப்பின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும்,ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (26) கொழும்பில் இடம்பெற்ற போது பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சம்பளமில்லாத அரச சேவையாளர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 7100 இற்கும் அதிகமானோர் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிச்சமயற்ற தன்மையில் காணப்படும் பின்னணியில் இவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் உள்நாட்டலுவல்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சரும்,பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தினார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் சேவையில் ஈடுபட முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அரச சேவைகள் விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் எதிர்வரும் 03 ஆம் திகதி தேசிய தேர்தகள் ஆணைக்குழு ஒரு தீர்மானத்தை அறிவித்ததன் பின்னர் சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

சம்பளமில்லாத விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறும் வரை சேவையில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும்,இவ்விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.இவ்விடயம் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/149266

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? - தேர்தல் ஆணைக்குழுவின் கடிதத்திற்கு அமைச்சர் பந்துல பதில்

Published By: DIGITAL DESK 5

28 FEB, 2023 | 01:43 PM
image

(எம்.மனோசித்ரா)

 

அரசாங்கத்திடம் நிதியிருந்தால் தேர்தலுக்காக அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. இல்லாத நிதியை எவ்வாறு வழங்குவது ? மார்ச்சில் வருமானத்திற்கும் செலவிற்குமிடையிலான இடைவெளி 23 பில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு தேர்தலுக்கு நிதியை வழங்குவது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இவ்வாண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியைப் பெற்றுக் கொள்விதில் தலையீடு செய்யுமாறு கோரி தேர்தல் ஆணைக்குழுவினால் சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் என்பது 225 பாராளுமன்ற உறுப்பினர்களினதும் உள்ளடக்கமாகும். 

அந்த வகையில் ஏனைய அனைத்து கட்சிகளும் இதற்கு உடன்பட்டுள்ள நிலையில் , பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு குறித்து செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

எம்மிடம் நிதி இருந்தால் அதனை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை. மார்ச் மாதம் அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்கல் , ஓய்வூதியம் , சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்கல் உட்பட ஏனைய தேவைகளுக்காக 83 பில்லியன் ரூபாய் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. 

வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னரும் மார்ச் மாத வருமானத்திற்கும் செலவிற்கும் இடையில் 23 பில்லியன் இடைவெளி காணப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச்சில் கடன் சேவைகளுக்காக 500 பில்லியன் அவசியமாகும். அதற்கமைய மார்ச்சில் ஒட்டுமொத்தமாக 500 பில்லியனுக்கும் அதிக பற்றாக்குறை ஏற்படும்என்று திறைசேரியினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பெற்றுக் கொள்வதற்கு கடன் பெறவும் முடியாது. பணத்தை அச்சிடவும் முடியாது. அவ்வாறிருக்கையில் முடியாதவொன்றை எவ்வாறு செய்ய முடியும்?

அதே வேளை அரச ஊழியர்களுக்கான சம்பளம் , ஓய்வூதியம் , சமூர்த்தி கொடுப்பனவு மற்றும் அரச கடனுக்கான வட்டி என்பவற்றை செலுத்துவதை தவிர்க்க முடியாது. 

எனவே தான் தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி செயலாளரினால் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் முன்வைத்துள்ள காரணிகள் தவறென்றால் அதனை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றார்.

https://www.virakesari.lk/article/149345

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெள்ளி வெளியிடப்படும் - தேர்தல்கள் ஆணையாளர்

Published By: DIGITAL DESK 5

01 MAR, 2023 | 03:00 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் இல்லாமல் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.தேர்தல் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக இடம்பெற்றது, தேர்தல் இடம்பெறும் சூழல் உள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்,தேர்தல் சட்டத்திற்கு அமையவே ஆணைக்குழு தேர்தல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இலாபம் ஈட்டும் நிறுமனமல்ல,நாட்டு மக்களின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஆணைக்குழு ஆகவே தேர்தல் செயற்பாடுகளுக்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும். சட்டத்தின் பிரகாரம் தேர்தலை விரைவாக நடத்துவோம்.தேர்தலுக்கான 10 பில்லியனை ஒரே கட்டமாக கோரவில்லை,கட்டம் கட்டமாகவே கோருகிறோம் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய கலந்துரையாடலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2022.03.09ஆம் திகதி நடத்த வேண்டிய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை மாகாண சபைகள் மற்றும்,உள்ளூராட்சிமன்ற அமைச்சர் ஒருவருட காலத்திற்கு பிற்போட்டார்,அதற்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடந்த செப்டெம்பர் மாதம் பொறுப்பாக்கப்பட்டது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள 25 நிர்வாக மாவட்டங்களுக்கான தேர்தல் தெரிவத்தாட்சி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் 2022.12.26 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்கள்,அதற்கான வர்த்தமானி அறிவித்ததை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டது.

இதற்கமைய தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்கள்.கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை 339 உள்ளுராட்சி அதிகார சபைகளுக்கான வேட்பு மனுக்கல் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அங்கிகரிக்கப்பட்ட 58 அரசியல் கட்சிகள்,329 சுயாதீன குழுக்களிடமிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.நாடளாவிய ரீதியில் 80720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னரே தபால்மூல வாக்கெடுப்பக்கான வாக்குச்சீட்டுக்கள் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி விநியோகிக்கவும்,தபால்மூல வாக்கெடுப்பை கடந்த பெப்ரவரி மாதம் 22,23,24 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடத்தவும்,வாக்கெடுப்பை மார்ச் 09 ஆம் திகதி நடத்தவும் தீர்மானிக்கப்பட்டு,உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தேர்தல் நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு முன்னர் பொலிஸ்மா அதிபர்,அரச அச்சகத் திணைக்கள தலைவர்,அரசாங்க திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் ஆகியோரை ஆணைக்குழுவிற்கு அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்,தேர்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக இவர்கள் ஆணைக்குழுவுக்கு வாக்குறுதி வழங்கினார்கள்.

அரச சேவைகளுக்கான நிதி விடுவிப்பு தொடர்பில் திறைச்சேரி கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி விசேட சுற்றறிக்கையை வெளியிட்டது.அந்த சுற்றறிக்கையில் தேர்தல் உள்வாங்கப்படவில்லை.

தபால் மூல வாக்கெடுப்புக்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி முழுமையாக ஒப்படைப்பதாக அரச அச்சகத் திணைக்களம் குறிப்பிட்டது,பின்னர் 13 ஆம் திகதி வழங்குவதாக குறிப்பிட்டது,இருப்பினும் வாக்குச்சீட்டுக்களை ஒப்படைக்கவில்லை.

இறுதியில் நிதி நெருக்கடியால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை தொடர முடியாது என அரச அச்சகத் திணைக்களம் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி மாலையில் தான் அறிவித்தது.

தேர்தல் பணிகளுக்கான வாக்குச்சீட்டு உட்பட இரகசிய ஆவணங்கள் அரச அச்சகத் திணைக்களத்தின் ஊடாக அச்சிட முடியும்,தனியார் நிறுவனங்களில் அச்சிட முடியாது,ஆகவே அரச அச்சகத் திணைக்களம் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் தான் தபால் மூல வாக்கெடுப்பு பிற்போடப்பட்டது.

தேர்தல் இல்லாமல் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியிடப்படவில்லை.தேர்தல் நடவடிக்கைகள் சட்டபூர்வமாக இடம்பெற்றது,நாட்டில் தேர்தல் இடம்பெறும் சூழல் உள்ளது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்,தேர்தல் சட்டத்திற்கு அமையவே ஆணைக்குழு தேர்தல் நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்தது.

நாட்டில் தேர்தல் ஒன்று இடம்பெறும் போது அனைத்து அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தேர்தலை நடத்துவது ஆணைக்குழுவின் தனிப்பட்ட விடயமல்ல,பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளதாக அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் விடயம் முறையற்றது,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இலாபம் ஈட்டும் நிறுவனமல்ல,நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நிறுவனம் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் செலவுகள் 10 பில்லியன் ரூபாவாக அமையும் என மதிப்பிட்டோம்.10 பில்லியன் ரூபாவையும் ஒரே கட்டமாக கோரவில்லை.கட்டம் கட்டமாகவே கோரினோம்.தேர்தல் நடவடிக்கைகளுக்காக 165 மில்லியன் ரூபாவை திறைச்சேரி வழங்கியுள்ளது.

தேர்தல் நடத்தும் போது அதற்கான நிதியை முழுமையாக திறைச்சேரி ஒருபோதும் விடுவிக்காது கட்டம் கட்டமாகவே விடுவிக்கும் இதற்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான 10 பில்லியன் ரூபாவில் ஜனவரி மாதத்திற்கு 100 மில்லியன் ரூபாவும்,பெப்ரவரி மாதம் 597 மில்லியன் ரூபாவும் ,மார்ச் மாதம் 1570 மில்லியன் ரூபாவும்,ஏப்ரல் மாதம் 1400 மில்லியன் ரூபாவும், மே மாதம் 580 மில்லியன் ரூபாவும்,ஜூன் மாதம் 115 மில்லியன் ரூபாவும்,ஜூலை மாதம் 75 மி;ல்லியன் ரூபாவும் ஒதுக்குமாறு திறைச்சேரியிடம் வலியுறுத்தினோம்.

அத்துடன் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் திணைக்களத்திற்கு 1550 மில்லியன் ரூபாவும்,தபால் திணைக்களத்திற்கு 400 மில்லியன் ரூபாவும்,பாதுகாப்பு அமைச்சுக்கு 35 மில்லியன் ரூபாவும்,அரச அச்சகத் திணைக்களத்திற்கு 1000 மில்லியன் ரூபாவும்,அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு 20 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/149442

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு நிவாரணம்

3-11-1.jpg

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறைமையொன்று தயாரிக்கப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்தார்.

இந்த அதிகாரிகள் மீது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த அரச மற்றும் அரை அரச ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 7,000 ஆகும்.

https://thinakkural.lk/article/242941

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை உள்ளூராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகுமா?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யு.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

அறிவிக்கப்பட்ட ஒரு தேர்தலை நடத்துவதில் - இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலைப் போன்று, வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. மார்ச் 09இல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை, அந்தத் தேதியில் நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு கடந்த 24ஆம் தேதி கூறிவிட்டது. தேர்தலுக்கான புதிய நாள் தொடர்பில் மார்ச் 03ஆம் தேதி (நாளை வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, 'தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது' போன்ற ஒரு பார்வை பலரிடமும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் சட்டப்படி தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தேர்தலை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் ஒரு பக்கமாகவும், தேர்தலை நடத்துவதில்லை என்கிற முடிவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுபக்கமாகவும் 'கயிறு' இழுத்துக் கொண்டிருக்கின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவர் தலைமையிலான ஆளும் பொதுஜன பெரமுன கட்சியினரும் கூட - தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் பொது வெளியில் கூறுகின்றனர். ஆனால், இப்போது தேர்தலொன்றை நடத்தினால், ஆளும் பொதுஜன பெரமுன கட்சி - பலத்த 'அடி' வாங்கிவிடும் என்றும், அதிலிருந்து அந்தக் கட்சியைக் காப்பாற்றுவதற்கே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலைத் தடுக்கின்றார் எனவும் எதிரணியினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

தேர்தலொன்றை நடத்துவதற்கு தற்போது - நாட்டில் நிதி இல்லை என்பதுதான், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறும் பிரதான காரணமாக உள்ளது.

 

இதனால், தேர்தலை நடத்துவதற்குப் போதுமான நிதி - தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுவிக்கப்படவில்லை. ஆகவேதான் அறிவிக்கப்பட்டமைக்கு இணங்க, மார்ச் 09இல் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.

ஆனால், இந்த நிலைமையானது 'தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு விட்டது' என அர்த்தப்படாது என்கிறார் சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட்.

குறித்த தேதியில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருப்பது, சட்டத்தோடு தொடர்பில்லாத சாதாரண அறிவிப்பு என்றும், அந்த அறிவிப்புக்கு - எந்தவித சட்ட அந்தஸ்தும் கிடையாது எனவும் ஹமீட் குறிப்பிடுகின்றார்.

" உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஒத்திவைப்பு என்று ஒன்று கிடையாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் - ஏதேனும் அவசர சூழ்நிலை அல்லது விசேட சூழ்நிலையின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்படும் போது, தேர்தலுக்கான தேதியை மாற்றலாமே தவிர, தேதி குறிப்பிடாமல் தேர்தலை ஒத்தி வைக்க முடியாது" என அவர் விளக்கமளிக்கின்றார்.

அதேவேளை தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு எந்தத் தினத்தில் வெளியிடப்பட்டதோ, அந்தத் தினத்திலிருந்து 21ஆம் நாளுக்கு முந்தையை தினமொன்றை, புதிய தேர்தல் தேதியாக அறிவிக்க முடியாது எனவும் ஹமீட் கூறுகின்றார்.

"அதாவது தேர்தலுக்கான தேதியொன்று அறிவிக்கப்பட்ட பின்னர், அத்தினத்துக்கு முன்னராகவோ அல்லது பின்னரோ வேறொரு நாளில் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடு உள்ளன" என அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட முதுமாணி வை..எல்.எஸ். ஹமீட்.
 
படக்குறிப்பு,

சட்ட முதுமாணி வை.எல்.எஸ். ஹமீட்

தேர்தலை ஒத்திவைப்பதற்கான முறைகள்

உள்ளூராட்சி தேர்தலொன்று நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்ட பின்னர், அந்தத் தேர்தலை மூன்று முறைமைகளின் ஊடாக ஒத்தி வைக்கலாம் அல்லது மற்றொரு தேதியில் நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்கலாம் என சட்ட முதுமாணி ஹமீட் குறிப்பிடுகின்றார்.

"தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் ஒன்றினை, அவசரகால நிலைமையின் ஊடாக ஜனாதிபதி ஒத்திவைக்க முடியும். அவ்வாறு ஒத்திவைக்கப்படும் தேர்தலுக்கான புதிய தேதியை அறிவிக்கவும் முடியும், அறிவிக்காமலும் ஒத்திவைக்க முடியும்”.

"தேர்தலை நடத்த முடியாத வகையில் எதிர்பாராத அல்லது விசேட சூழ்நிலையொன்று ஏற்பட்டு, அதனை எதிர்கொள்வதற்கான சட்டம் இல்லாதவிடத்து அல்லது சட்டத்தில் போதுமான ஏற்பாடுகள் இல்லை எனும் நிலையில் தேர்தலை ஒத்திவைக்கலாம். எவ்வாறென்றால், பொறுப்பான அமைச்சர் - உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் 84ஆவது பிரிவின் கீழ் உத்தரவொன்றினை வர்த்தமானியின் ஊடாக அறிவிப்பதன் மூலம், குறித்த தேர்தலை தேதி குறிப்பிட்டு, அல்லது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்க முடியும்" என வை.எல்.எஸ். ஹமீட் விவரித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 38(3)இன் கீழும், உள்ளூராட்சித் தேர்தலொன்றை ஒத்தி வைக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

”38(3)இன் கீழ் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தலொன்றை வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஒத்தி வைக்க முடியும். அவ்வாறு ஒத்தி வைக்கும் போது, புதிய தேதியினையும் அறிவிக்க வேண்டும். இதன்போது முன்னர் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னர் அல்லது பின்னர் ஒரு நாளைக் குறிப்பிட்டு, புதிய தேர்தலை அறிவிக்கலாம்” எனவும் அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 38(3)இன் கீழ், தேர்தல் ஒன்றை வேறோரு தேதிக்கு ஒத்திவைத்த பிறகு, இன்னொரு தடவை ஒத்திவைக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மார்ச் 09ஆம் தேதி நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்குரிய - தபால் மூல வாக்களிப்பு, கடந்த பிப்ரவரி 22,23,24 மற்றும் 28ஆம் தேதிகளில் நடத்தப்படவிருந்தது. ஆனால், அந்த வாக்களிப்பும் ஒத்திவைக்கப்பட்டது.

கலைக்கப்படாத உள்ளூராட்சி சபைகள்

இலங்கையில் 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்றன.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் 04 வருடங்களாகும். அதன்படி தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சபைகள் 2022ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு இணங்க, குறித்த சபைகளின் பதவிக் காலங்கள் ஒரு வருடத்துக்கு நீடிக்கப்பட்டன.

இந்த நிலையிலேயே, மேற்படி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பினை - தேர்தல் ஆணைக்குழு விடுத்ததோடு, தேர்தலுக்கான தினத்தையும் அறிவித்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், இந்த சபைகள் எவையும் இதுவரை கலைக்கப்படவில்லை.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களாக பதவி வகித்துக் கொண்டே, ஏராளமானோர் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலானது - பல்வேறு வகையிலும் புரியாத புதிராகவே மக்களுக்கு உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/clwr8178exjo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கான திகதி தீர்மானம் : தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய முடிவு !

Published By: DIGITAL DESK 5

03 MAR, 2023 | 04:53 PM
image

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

334754998_216756180892981_87026110237210

அரச அச்சகத் திணைக்களம், நிதி அமைச்சு, பொலிஸ் திணைக்களம் உட்பட தேர்தலுடன் தொடர்புடைய ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னர், திகதி தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.

https://www.virakesari.lk/article/149655

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கான நிதி தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Published By: T. SARANYA

03 MAR, 2023 | 04:12 PM
image

2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திறைசேரி தடுத்துவைக்க முடியாது என திறைசேரியின் செயலாளருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தாக்கல் செய்த மனு தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவிற்கு நிதியை வழங்காததன் மூலம் திறைசேரியின் செயலாளர் உட்பட்டவர்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளது என நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என ரஞ்சித்மத்தும பண்டார தனது மனுவில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/149649

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.