Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை'

Published By: PONMALAR

11 APR, 2023 | 01:02 PM
image

தமிழ் திரையுலகில் புதிய முயற்சிகளுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் தென் திசையை குறிப்பிடும் சங்க கால சொல்லான 'யாத்திசை' எனும் பெயரில் தமிழில் புதிய படைப்பொன்று வரவிருக்கிறது.

இதன் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. எயினர்கள், ரணதீர பாண்டியன், போர்க்களம், சங்கக் கால தமிழில் உரையாடல், விறலியர் ஆட்டம் எனும் நாட்டியத்தை ஆடும் தேவரடியார்கள்... என பல விடயங்கள் இடம் பெற்றிருந்ததால், இந்த முன்னோட்டத்திற்கு உலக தமிழர்களிடையே ஆச்சரியப்படும் வகையிலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது.

இந்நிலையில் வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே ஜே கணேஷ் தயாரித்திருக்கும் 'யாத்திசை' திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது பட குழுவினர் திரளாக பங்குபற்றினர். 

அறிமுக இயக்குநர் தரணி ராஜேந்திரன் பேசுகையில், '' நான்காண்டுகளுக்கு முன்னால் தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்பை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 'யாத்திசை' படத்தின் கதையை உருவாக்கினேன்.

இதனை கதையாக யாரிடம் சொன்னாலும்... எந்த தயாரிப்பாளரிடம் சொன்னாலும் அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. ஆனால் எம்முடைய தயாரிப்பாளர் கே. ஜே. கணேஷ், என் மீதும் எங்கள் குழுவின் மீதும் நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்தார்.

ci_11423_yaththisai_3.jpg

ci_11423_yaththisai_2_pm.jpg

ci_11423_yaththisai_pm.jpg

ci_11423_yahthtisai_5.jpg

முதலில் எம்முடன் படத்தொகுப்பாளர் மகேந்திரன் அதனைத் தொடர்ந்து இசையமைப்பாளர் சக்கரவர்த்தி ஆகியோர் இணைந்து இந்த படைப்பை செழுமைப்படுத்தினோம். நாங்கள் கண்ட கனவு தான் இந்த யாத்திசை.

ஏழாம் நூற்றாண்டில் நடைபெறுகிற.. வரலாற்று ஆவணங்களை தழுவிய புனைவு கதை இது. இதற்காக அந்த காலகட்டத்திய மக்களின் பழக்கவழக்கங்கள், கலாச்சாரம், உடை, உணவு, அரசியல், மொழி.. ஆகியவற்றில் பார்வையாளர்களுக்கு நம்பகத் தன்மை கிடைக்கவேண்டும் என்பதற்காக எங்களுடைய தேடலை தொடங்கினோம். அதிலும் குறிப்பாக அந்த காலகட்டத்தில் மொழியை மீளுருவாக்கம் செய்து கதாபாத்திரங்கள் பேச வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது... அனைவரும் இது தற்போதைய காலகட்டத்தை பார்வையாளர்களுக்கு புரியாமல் போய்விடுவதற்கான வாய்ப்பு அதிகம் என தெரிவித்தனர். இந்த சிக்கல் தற்போது வரை நீடிக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் இது தொடர்பாக எம்மிடம் பேசுகையில், ''திரைப்படம் என்பது வணிகம் சார்ந்த படைப்பாக இருந்தாலும், அதனுள் ஒரு கலை அம்சம் பொதிந்திருக்கிறது. இந்த படைப்பின் ஜீவன் மொழிதான். தொல்குடிகள் பேசிய அந்த மொழிகள்தான் இதன் உயிர். அது எம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்'' என்றார்.

தொடக்கத்தில் இந்த திரைப்படத்திற்கு ஏராளமான தடைகள் இருந்தது. ஆனால் தற்போது இந்த திரைப்படம் தயாராகி, முன்னோட்டம் வெளியானது. இதற்கு எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்வையிட்டு ஆதரவளித்திருக்கிறார்கள். இதனை எங்களின் முதல் வெற்றியாக காண்கிறோம்.

யாத்திசை தமிழ் சினிமாவைக் கடந்து, இந்திய சினிமாவில் பெரும் மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும். ஏனெனில் இது ஒரு புதிய முயற்சி. இந்த திரைப்படம் விமர்சகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கருத்தியல் ரீதியாக விவாதத்தை உண்டாக்கும். மாற்று சினிமா குறித்த சிந்தனையை தூண்டும். '' என்றார்.

எயினர் மற்றும் பெரும்பள்ளி எனும் தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் சக்தி மித்திரன், சேயோன், குரு சோமசுந்தரம், சந்திரகுமார், ராஜலட்சுமி, செம்மலர் அன்னம், சுபத்ரா, சமர், விஜய் சேயோன், ரூபி, ராஜசேகர், வைதேகி, சீனு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் அகிலேஷ் காத்தமுத்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார். வரலாற்று காலகட்டத்த்திய திரைப்படமாக தயாராகி இருக்கும் இதனை 'பாண்டியன் ஸ்டோர்ஸ்', 'பாக்கியலட்சுமி' ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பாளரான கே. ஜே. கணேஷ் தயாரித்திருக்கிறார் இந்த திரைப்படம் ஏப்ரல் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை' | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாத்திசை தமிழ் தொல்குடிகளின் வாழ்வை உரத்துப் பேசட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'யாத்திசை' படத்தில் வரும் ரணதீர பாண்டியன் யார்? இவரது வரலாறு என்ன?

யாத்திசை

பட மூலாதாரம்,TWITTER@YAATHISAI

2 மணி நேரங்களுக்கு முன்னர்

'யாத்திசை' - பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கப்படும் ரணதீர பாண்டியனுக்கும் எயினர்களுக்கும் நடக்கும் போரை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ரணதீர பாண்டியன் என்பவர் யார்? பாண்டிய வரலாற்றில் இவரது முக்கியத்துவம் என்ன?

தரணி ராஜேந்திரன் இயக்கியுள்ள 'யாத்திசை' திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சமர், ஜமீல், சுபத்ரா, வைதேகி உள்ளிட்டோர் நடித்த இந்தப் படத்தின் ட்ரெய்லர் இரு வாரங்களுக்கு முன் வெளியான நிலையில், அதனை ஆறு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

இந்தப் படத்தின் கதை இதுதான்: ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டை ஆட்சி செய்த ரணதீர பாண்டியனின் காலம். சேரர், சோழர் என அனைவரையும் வென்று பெரும் நிலப்பரப்பு அவன் வசம் இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரமாக வாழ விரும்பும் எயினர் என்ற சிறு குடியினர், ரணதீர பாண்டியன் பிடித்துவைத்துள்ள சோழர் கோட்டை ஒன்றை மீட்க முயல்கின்றனர். அது நடக்கிறதா என்பதுதான் கதை.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கள காட்சிகளும் அந்த காலகட்டத்திற்கே உரிய ஆடை வடிவமைப்பும் மிக உக்கிரமான சண்டைகளும் இந்தப் படம் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியிருக்கின்றன. இந்தப் படத்தைப் பற்றி மட்டுமல்லாமல், படத்தில் வரும் ரணதீர பாண்டியனைப் பற்றிய ஆர்வமும் அதிகரித்திருக்கிறது.

 

ரணதீர பாண்டியன் யார், அவனைப் பற்றி எப்படித் தெரிந்தது?

பாண்டிய நாட்டை ஆண்ட ரணதீரனைப் பற்றி மட்டுமல்ல, பல்வேறு பாண்டிய மன்னர்களைப் பற்றியும் அதற்கு முன்பு ஆட்சி செய்த களப்பிரர்களைப் பற்றியும் விரிவாகத் தெரியவர காரணமாக அமைந்தது ஒரு செப்பேட்டுத் தொகுதி.

இந்தச் செப்பேட்டுத் தொகுதி மாடக்குளத்திலிருந்து கிடைத்தது. மொத்தம் பத்து செப்பேடுகள் இந்தத் தொகுதியில் இருந்தன. இவை ஒரு வளையத்தால் இணைக்கப்பட்டிருந்தன.

வேள்விக்குடி என்ற ஊரில் அறிவிக்கப்பட்ட தானம் குறித்து இந்தச் செப்பேட்டில் இடம்பெற்றிருந்ததால், இந்தச் செப்பேட்டுத் தொகுதி வேள்விக்குடி செப்பேடு என அழைக்கப்படுகிறது. இந்தச் செப்பேட்டின் காலம் கி.பி. 769 அல்லது கி.பி. 770ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த செப்பேடுகள் கிரந்த எழுத்தில் சமஸ்கிருத மொழியிலும் வட்டெழுத்தில் தமிழிலும் எழுதப்பட்டிருந்தன. இந்த செப்பேட்டில்தான் பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்தச் செப்பேட்டை வெளியிட்ட மன்னன் நெடுஞ்சடையன் பராந்தகன்.

சங்க காலத்து பாண்டிய மன்னனான முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் கொற்கைக் கிழான் நற்கொற்றன் என்பவருக்கு, வேள்விக்குடி என்ற கிராமத்தை வரியில்லா கிராமமாக வழங்கினான். பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சியின்போது அந்த வேள்விக்குடி கிராமம் கைப்பற்றப்பட்டதாகவும் அதனைக் கேள்விப்பட்ட நெடுஞ்சடையன் பராந்தகன், கொற்கைக் கிழான் வழிவந்த நரசிங்கன் என்பவனுக்கு மீண்டும் அந்த கிராமத்தை வழங்குவதற்காக வெளியிட்ட செப்பேடுதான் இந்த வேள்விக்குடி செப்பேடு.

யாத்திசை

பட மூலாதாரம்,TWITTER@YAATHISAI

சங்க கால மன்னர்கள் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இது எழுதப்பட்டது. ஆகவே, நெடுஞ்சடையன் பராந்தகன் தான் வழிவழியாக கேட்டறிந்ததையே இந்தச் செப்பேட்டில் பதிவுசெய்துள்ளதாகக் கருதப்படுகிறது. களப்பிரர் ஆட்சியை கடுங்கோன் என்பவன் அகற்றியது, கோச்சடையான் ரணதீரன் பெற்ற வெற்றிகள் ஆகியவை இந்தச் செப்பேட்டில் இருந்துதான் தெரியவந்தன.

இந்த வேள்விக்குடி செப்பேட்டில் ரணதீரனின் பெயர் 'ரணதீரன்' என்று சமஸ்கிருதத்திலும் 'கோசடையான்' என தமிழிலும் குறிப்பிடப்படுகிறது. அரிகேசரி மாறவர்மனின் மகன்தான் இந்த ரணதீரன். ஏழாம் நூற்றாண்டின் இறுதியில் இவன் ஆட்சிக்கு வந்திருக்கக்கூடும் என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுகிறார்.

இந்த ரணதீரன் பாண்டியர்களின் ஆதிக்கத்தை கொங்கு நாடு வரையிலும் பரவச் செய்ததோடு ஆய்நாட்டில் (திருவனந்தபுரம் - திருநெல்வேலி) ஏற்பட்ட கலகத்தையும் அடக்கினான். அம்பாசமுத்திரத்திற்கு அருகில் உள்ள திருப்புடைமருதூரில் நடந்த போரில் ஆய் தலைவன் ஆய் வேலை வென்று, பாண்டிய மேலாதிக்கத்தை ஏற்கச் செய்தான்.

இந்த ரணதீரனுக்கு 'வானவன்', 'செம்பியன்', "சோழன்" போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. சேர, சோழர்களை வென்றதன் அடையாளமாகவே இந்தப் பட்டங்கள் வழங்கப்பட்டிருக்கக்கூடும். மதுர கர்நாடகன், கொங்கர்கோமான் ஆகிய பட்டங்களும் இவனுக்கு வழங்கப்பட்டிருந்தன. இவை வெற்றுப் பட்டங்கள் அல்ல; அவன் பெற்ற வெற்றிகளைக் குறிப்பவை என தனது The Pandya Kingdom நூலில் குறிப்பிடுகிறார் நீலகண்ட சாஸ்திரி.

யாத்திசை

பட மூலாதாரம்,TWITTER@YAATHISAI

தற்போதைய மங்களூரில் நடந்த போரில் மராத்தாக்களையும் வென்றிருக்கிறான் ரணதீரன். நெடுவயல், குறுமடை, மாங்குறிச்சி, திருமங்கை, பூவலூர், கொடும்பாளூர் ஆகிய இடங்களில் நடந்த போரிலும் வெற்றிபெற்றிருக்கிறான்.

குழும்பூரில் நடந்த போரில் பல்லவ மன்னனைத் தோற்கடித்து, அவனிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான யானைகளையும் குதிரைகளையும் கைப்பற்றினான் ரணதீரன். இதில் குறிப்பிடப்படும் பல்லவ மன்னன் நந்திவர்ம பல்லவமல்லனாக இருக்கலாம் என கருதப்படுகிறது. தன் ஆட்சியை நந்திவர்மனிடம் பறிகொடுத்த இரண்டாம் பரமேஸ்வரவர்ம பல்லவனுக்கு ஆதரவாக ரணதீரன் இந்தப் போரில் ஈடுபட்டிருக்கலாம்.

இவனது ஆட்சிக்காலம் கி.பி. 700 முதல் கி.பி. 730வரை இருந்திருக்கக்கூடும். இவனுக்குப் பிறகு இவனுடைய மகன் அரிகேசரி பராந்தகன் ஆட்சிக்கு வந்தான்.

ரணதீரனை எதிர்த்துப் போரிடும் எயினர் யார்?

யாத்திசை படத்தில், தென்திசையில் வாழக்கூடிய இனக்குழுவினராக எயினர்கள் காட்டப்படுகின்றனர். இவர்களே ஒருங்கிணைந்து பாண்டியன் வசமிருந்த கோட்டை ஒன்றை மீட்க முயல்கின்றனர்.

தமிழ் இலக்கியத்தில் வரும் ஐந்திணைகளில், எயினர்கள் என்பவர்கள் பாலை நிலத்தைச் சேர்ந்தவர்கள். கொற்றவையை வணங்கும் இவர்கள் போரில் ஈடுபடுவதில் ஆர்வம் உடையவர்கள். அகநானூறு, புறநானூறு, மதுரைக் காஞ்சி ஆகிய நூல்களில் எயினர் திரும்பத் திரும்பக் குறிப்பிடப்படுகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c6pl2dyw7v9o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாத்திசை Review: கவனத்துக்குரிய களமும் காட்சிகளும் தரும் திரை அனுபவம் எப்படி?

978942.jpg  
 

அதிகாரத்தை அடைய பேரரசை எதிர்க்கத் துணியும் சிறு இனக்குழு ஒன்றினால் நடத்தப்படும் போராட்டத்தின் ரத்த வாடைதான் ‘யாத்திசை’.

7-ஆம் நூற்றாண்டின் பாண்டிய அரசன் அரிகேசரி. இவரது மகன் ரணதீரன் (ஷக்தி மித்ரன்). இந்த பாண்டிய பேரரசுக்கு எதிராக சேரர்கள் போரிடுகிறார்கள். அவர்களுடன் சோழர்கள் மற்றும் எயினர்கள் உள்ளிட்ட சிறுகுழுக்களும் இணைந்து உதவி புரிய, போரை வழிநடத்தும் ரணதீரன் தலைமையிலான பாண்டிய படை வெற்றிபெறுகிறது. இதன் எதிரொலியாக சேரர்கள் நாடு கடத்தப்பட, உதவியாக வந்த சோழர்கள் காட்டுக்குள் தலைமறைவாகின்றனர். இதில் பாண்டியர்களால் பாலை நிலத்திற்கு விரட்டப்பட்ட எயினர் குழுவைச் சேர்ந்த வீரன் கொதி (சேயோன் ) தனது குழுவைத் திரட்டி, சோழர்கள் உதவியுடன் ரணதீரனை வெல்ல முடிவு செய்கிறான். இறுதியில் ரணதீரனை கொதி வென்றானா? பாண்டிய பேரரசு வீழ்ந்ததா? - இதுதான் திரைக்கதை.

பேரரசுக்குள் அதிகாரத்தை அடைய நிகழும் சூழ்ச்சிகளும் துரோகங்களுமாகவும் அல்லது இரு பெரும் பலம்பொருந்திய அரசப்படைகளுக்கு இடையிலான சண்டைகளாகவுமே வரலாற்று புனைவு படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், எயினர் குடி என்ற சிறிய இனக்குழு ஒன்று அதிகாரம் பொருந்திய பேரரசை எதிர்த்து ‘அதிகாரம்’ பெற்றதா என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை பிரமாண்ட காட்சி அமைப்புகளுடன் படமாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன்.

மூளும் போர்களுக்கும், வீழும் உயிர்களுக்கும், அரச மமதைக்கும் அடிப்படை ‘அதிகாரம்’ தான். அரசுகள் மாறக்கூடியது. அதிகாரம் மட்டுமே நிலையானது என்பதை நிறுவுகிறது படம். கதை கோரும் பிரமாண்டத்தையும், அதற்கேற்ற காட்சியமைப்பையும் எந்த சமரசமுமின்றி பதிவு செய்த விதம் களத்தை சுவாரஸ்யமாக்குகின்றன.

பல்வேறு இனக்குழுவைச் சேர்ந்தவர்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், அவர்களின் கலாச்சார வழிபாட்டு முறைகளின் சித்தரிப்பு, அவர்கள் வாழும் நிலபரப்பு, வீட்டு அமைப்பு, மண்பாத்திரங்கள், உணவுமுறைகள் உள்ளிட்டவற்றின் மூலம் அவர்களின் உலகில் நாமும் பிரவேசிக்கும் உணர்வு, காட்சிகளுக்குள் ஒன்ற உதவுகிறது.

குறிப்பாக, எயினர் குல கடவுள் கொற்றவைக்கான சடங்குகளும், உயிர் பலி கொடுக்கும் முறையும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன. போலவே பழந்தமிழரின் மொழியை கூடுதல் சிரத்தையுடன் பதிவு செய்திருந்தது, அம்மக்களில் பெரும்பாலானோர் தங்கள் உடலை துணிக்கு பதிலாக ஆபரணம் மற்றும் நகைகளால் மூடியிருப்பது, தேவரடியார் முறையின் அவலம், பேரரசு தொடங்கி சிறு இனக்குழு வரை ஆணாதிக்க சமூகமாக இருந்ததை காட்சிப்படுத்தியிருந்த நுணுக்கமான அணுகுமுறை கவனிக்க வைக்கிறது.

ஷக்தி மித்ரன், சேயோன் இருவரின் அழுத்தமான ஆக்ரோஷமான நடிப்பும், அவர்களின் இறுதி சண்டைக்காட்சியும் அறிமுக நடிகர்கள் என்ற சாயலிலிருந்து விலகி நிற்கின்றன. ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சுபத்ரா, சமர், வைதேகி அமர்நாத் உள்ளிட்டோரின் கதாபாத்திரத்திற்கு தேவையான யதார்த்த நடிப்பு படத்திற்கு பெரும் பலம்.

ரணதீரனுக்கு எதிரான முதல் சண்டைக்காட்சி தொடங்கி போர்க்களத்துக்கான விறுவிறுப்பு என படம் நெடுகிலும் சக்கரவர்த்தியின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. அகிலேஷ் காத்தமுத்துவின் பிரமாண்ட ஒளிப்பதிவு ப்ரேமுக்கு ப்ரேம் அழகியலுடனும், போர்க்காட்சிகளை படமாக்கியிருக்கும் விதமும் ரசிக்க வைக்கின்றன.

சில இடங்களில் சிஜி காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் எயினர் சமூகத்துக்கான வழக்கொழிந்த மொழியை பதிவு செய்திருப்பது கதைக்கு எந்த அளவிற்கு பயனளிக்கிறது என்பது கேள்விக்குறி. காரணம் அவர்கள் பேசும் காட்சிகளில் ஒவ்வொருமுறையும் சப்டைட்டில் பார்க்கும் உணர்வு மேலோங்குகிறது. ‘அதிகாரம்’ தான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதை வெறும் வசனங்களாக சொல்லியிருந்ததும், அதற்கான அழுத்தமான காட்சிகள் இல்லாததும் பலவீனம்.

இப்படிச் சில குறைகள் இருப்பினும், புது வகையான திரையனுபவத்தை யதார்த்தமான காட்சிகளுடன் சொல்ல முனைத்திருக்கும் விதத்தில் ‘யாத்திசை’ கவனம் பெறுகிறது.

யாத்திசை Review: கவனத்துக்குரிய களமும் காட்சிகளும் தரும் திரை அனுபவம் எப்படி? | Yaathisai Movie Review - hindutamil.in

  • இணையவன் changed the title to தமிழ் தொல்குடிகளின் வாழ்வியலை உரத்து பேசும் 'யாத்திசை'
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

யாத்திசை இன்டைக்கு கள்ளமாய்ப் பாத்தனான். உண்மையிலேயே அந்தமாதிரியான திரைப்படம். 

பண்டைய தமிழரின் வாழ்வியலை வரலாற்றை படம் பிடித்துக் காட்ட முயற்சித்திருக்கிறார், இயக்குநர். வாழ்த்துக்கள். நடிகர்களின் முகங்களும் புது முகங்கள் என்பதால் தரமாக இருந்தது. நாயகன் போற்றுதல் அறவே இல்லை. 

ஆனால், வரைகலை உதவாது. முந்தி சுட்டி ரிவியில் ஒளிபரப்பான "மாஸ்ரர் ரெயின்றொப்" தொடரில் பயன்படுத்தப்பட்ட வரைகலையே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தென்படுகிறது. அந்தளவு கேவலமாய் உள்ளது. நிறையவே முன்னேற்ற இடமுண்டு. 

பொன்னியின் செல்வனைக் காட்டிலும் இதில் காட்டப்பட்ட சண்டைக் காட்சிகள் ஓரளவு நன்றாக உள்ளது. அடுத்தது, அந்த வாளால் வெட்டியவுடன் வாயில் இருந்து குங்குமம் கக்குவதை இந்தியத் திரைப்படங்கள் எப்போதும் கைவிடாது என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்துள்ளது. வேலால் குத்தியவுடன் அரத்தம் தெறிப்பது சகிக்கவில்லை. படுமோசமான கற்பனைகள் இவை. 

(இது நான் கண்டவரை) மற்றது தமிழ் படைவீரர்களில் கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும்; அதாவது அவர்களின் தோற்றப்பாடுகளில் - குறிப்பாக தலைமயிர் அலங்காரத்தில் . ஏனெனில் படைஞர்கள் எல்லாம் Undercut, silky fallin போன்ற நவீன தலைமயிர் பாணிகள் கொண்டுள்ளனர்! அந்தக் காலத்திலை இதெல்லாம் இல்லடாப்பா. அவர்களின் ஆடை & அணிகலன்கள்(கவசமல்ல) கொஞ்சம் மாற வேண்டும். ஏதோ குறைவதாக தென்படுகிறது. என்னவென்று தெரியவில்லை.

 

----------------------------
எனக்கு இந்தியத் திரைப்படங்கள் பிடிக்காது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நான் பார்த்த  திரைப்படம் இது. மெய்யிலையே மணியான படம். இன்னும் கொஞ்சம் செலவு செய்தால் அடுத்த பாகத்தில் நல்ல வரைகலை கொண்டு முன்னேற்றலாம். வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

‘யாத்திசை’ சங்கத்தமிழ் வசனம், ஆடை அலங்காரம் உருவானது எப்படி? - இயக்குநர் பேட்டி

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம்,TWITTER/DHARANI RAJENDRAN

22 ஏப்ரல் 2023, 07:57 GMT
புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர்

ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்தேறிய பாண்டியர்கள் - எயினர்கள் இடையான போரை மையப்படுத்தி உருவான ‘யாத்திசை’ திரைப்படம் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

பாண்டிய பேரரசை வெல்ல சேரன் தலைமையில் சோழர்களும், வேளிர், எயினர் போன்ற பழங்குடி இனக்குழுக்களும் சேர்ந்து போர் தொடுக்கின்றன. போர் முடிவில் ரணதீர பாண்டியன் தலைமையிலான பாண்டியர்கள் வெற்றியடைகின்றனர். அதனால், பாண்டிய பேரரசு சோழக் கோட்டையோடு சேர்த்து, மொத்த தென்திசையையும் கைப்பற்றுகிறது. ஒட்டுமொத்த மொத்த எதிரிகளையும் அழிக்கிறது.

சோழர்களோடு அவர்களுக்கு துணை புரிந்த எயினர்களும் தப்பி ஒளிகிறார்கள். 'ரணதீரன் பாண்டியனை வென்று, மீண்டும் எயினர்களுக்கு அதிகாரத்தையும் நாட்டையும் மீட்டுத் தருவேன்' எனச் சபதமேற்று, தன் சிறு படையுடன், சோழர்களையும் திரட்டி ரணதீரனை எதிர்த்து களமிறங்குகிறான் எயினர் குடி இளைஞன் கொதி. வரலாறும், புனைவும் கலந்து யாத்திசையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் தரணி இராசேந்திரன்.

வரலாற்று திரைப்படங்கள் என்பது பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், பார்வையாளனுக்கு நெருக்கமானதாக, அந்த வரலாற்றை கிரகித்து கொள்ளும் வகையிலானதாக இருக்க வேண்டும். அந்தவகையில், யாத்திசை தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படைப்பு என்று படம் வெளியானது முதலே விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன.

 

யாத்திசை திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் சங்கத் தமிழும், ஆடை வடிவமைப்பு, கலை, சண்டைக் காட்சியமைப்புகள் போன்றவையும் பார்வையாளர்களை கவனிக்க வைத்திருக்கின்றன.

யாத்திசை படத்திற்கான பெரும்பாலான குறிப்புகள் கோவில்கள் மற்றும் ஏழாம் நூற்றாண்டுக்கு முந்தைய சங்க இலக்கிய, காப்பு இலக்கிய நூல்களில் இருந்தே எடுக்கப்பட்டதாக இயக்குநர் தரணி இராசேந்திரன் தெரிவித்துள்ளார். படத்தின் கதையோட்டத்தை தீர்மானித்துவிட்டு அதற்கேற்ப வசனங்கள் சங்கத் தமிழில் இருப்பதே பொருத்தமாக இருக்கும் என முடிவெடுத்து அதற்காக சில ஆண்டுகளாகவே பணியாற்றியிருக்கின்றனர்.

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம்,TWITTER/DHARANI RAJENDRAN

 
படக்குறிப்பு,

பி.சி.ஸ்ரீராமுடன் இயக்குநர் தரணி இராசேந்திரன்

திருமுருகன் காளிலிங்கம் என்பவரே தற்போதைய நடையில் எழுதப்பட்ட வசனங்களை சங்கத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இவர்கள் கூட்டணியிலேயே ஒன்பது – தொண்டு, பேசு – கிள, சுழியம் – பாழ், மனசு – உள், கடவுள் – கா, சிங்கம் – மடங்கல், திமிங்கலம் – கோரா என மாறி, இப்போது பார்வையாளர்களிடத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கத் தமிழ் வசனங்களுக்கு பார்வையாளர்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பு தங்கள் குழுவினருக்கு பெரும் அங்கீகாரம் என்று உவகையோடு தெரிவிக்கிறார் இயக்குநர்.

யாத்திசை படத்திற்காக பல்வேறு ஆய்வுகளை படக்குழுவினர் மேற்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் முக்கியமானது, ம.சோ.விக்டர் சொல்லாய்வு நூல் என குறிப்பிடுகிறார் இயக்குநர் தரணி இராசேந்திரன். அவரின் பல்வேறு நூல்களில் இருந்தே படத்தின் மொழி, கலை உள்ளிட்டவற்றிற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அதை திரைக்கதைக்கு ஏற்ப மெருகேற்றி வடிவம் கொடுத்திருக்கிறார்கள். தென் திசை என்பதைக் குறிப்பிடும் ’யாத்திசை’ என்கிற தலைப்பும் ம. சோ. விக்டரிடன் இருந்தே பெற்றிருக்கின்றனர். அதேபோல், தேவநேய பாவணாரின் குறிப்புகளும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

தமிழ் நில அகழாய்வுகள் பண்டைய தமிழ் நாகரிகம் குறித்த பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி வரும் இன்றைய சூழலில் ‘யாத்திசை’ அதற்கு மேலும் வலுகூட்டும் வகையிலேயே உருவாக்கப்பட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். யாத்திசை படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் குறித்து இயக்குநர் குறிப்பிடுகையில், கோவில் சிற்பங்களின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான ஆடை வடிவமைப்பு பணிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கிறார்.

‘யாத்திசை’ இயக்குநர் பேட்டி

பட மூலாதாரம்,SAKTHIFILMFACTORY

தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், காஞ்சிபுரம், மகாபலிபுரம் பகுதிகளின் கோவில் சிற்பங்களில் இருந்தே படத்திற்கான ஆடைகளை வடிவமைத்திருக்கின்றனர். குறிப்பாக, படத்தின் நாயகி கதாபாத்திரம் பயன்படுத்தியிருக்கும் மணிகளால் உருவாக்கப்பட்ட மேலாடை, பல்லவ சிற்பங்கள் பலவற்றில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளன. அதைப்போலவே, மற்ற கதாபாத்திரங்களுக்கான ஆடை வடிவமைப்புகளையும் மேற்கொண்டதாகவும் இயக்குநர் தரணி ராசேந்திரன் குறிப்பிடுகிறார்.

யாத்திசை திரைப்படம் மிக எளிமையாகவும், ஆழமாகவும் தமிழர்களின் வரலாற்றை கண்முன் விரித்துக் காட்டுகிறது. எயினர் குழுவினர் போருக்குத் தயாராகும் ஒரு காட்சி படத்தில் இடம்பெற்றிருக்கிறது. நடுக்காட்டில் தங்கள் தெய்வமான கொற்றவைக்கு பலிகொடுத்து வணங்கி, போரில் தங்களுக்கு துணைபுரிய வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்கள்.

இதுவரையிலான தமிழ் சினிமாவின் வரலாற்று புனைவுகள் பதிவு செய்திராத இந்தக் காட்சியை வெவ்வேறு நூல்களில் இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் இது இப்படி நடந்திருக்கலாம் என்கிற யூக அடிப்படையிலுமே உருவாக்கியதாக குறிப்பிடுகிறார் இயக்குநர். அதேநேரம், ஒரு போர்க் காட்சிக்கு தயாராகும் முன்பு படைவீரர்களின் மனநிலை, அவர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொள்ளும் மூர்க்கம், அவர்களின் நம்பிக்கை ஆகியவை பார்வையாளர்கள் மனம் விட்டு நீங்காத வகையில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்திலேயே படமாக்கியதாகவும் தெரிவிக்கிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு

பாண்டிய பேரரசனை அழித்தொழிக்கும் நோக்கும் எயினரின் சில நூறுபேர் கொண்ட சிறுகுழு ஒன்று கிளம்புவதும், அவர்கள் கையாளும் பிரத்யேகமான போர் யுத்திகளும் போர் ஆயுதங்களும் கதையோட்டத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றன. இவற்றை குறிப்பிடுகையில், ஒரு போர் காலையில் தொடங்கி சூரியன் மறையும்போது நிறுத்தப்படும், விதிகள் கையாளப்படும் என்பதெல்லாம் கூட மிகைப்படுத்தப்பட்ட கட்டமைப்புகள்தான் என கூறும் இயக்குநர், ஒரு போரில் எதிரிகள் கொல்லப்பட வேண்டும் என்பதை தாண்டி எந்தவிதமான நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படும் சாத்தியம் மிகவும் குறைவு எனவும் பதிவு செய்கிறார்.

மேலும், தமிழ் நில போர்கள் குறித்த துல்லியமான தெளிவுகள் இல்லாத நிலையில், சிற்சில குறிப்புகளை வைத்தே சண்டை வடிவமைப்பாளர் ஓம் சிவ பிரகாஷ் மற்றும் அவரது குழுவினருடன் ஆலோசித்து படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சண்டை முறைகள் ஆகியவற்றை வடிவமைத்தோம். அதனாலேயே, போரில் எந்தவிதமான இரக்கமும் இருக்காது என்கிற வகையில் இரத்தம் தெறிக்கதெறிக்க சண்டைக் காட்சிகளை படமாக்க முடிந்தது எனவும் தெரிவிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இது வரலாற்று புனைவுகளின் காலம். பொன்னியின் செல்வன் தொடங்கி வைத்ததை, ’யாத்திசை’ வேறு ஒரு பாதையில் பயணித்து கவனிக்க வைத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், வியாபார ரீதியாக முன்னிறுத்திக் கொள்ளும் நிலையில், சிறு முதலீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் யாத்திசைக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு இன்னுமின்னும் வரலாற்று படங்கள் எடுக்கும் ஆர்வத்தை படைப்பாளர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

பிரமாண்டம் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் பார்வையாளர்களை கவர்ந்து வெற்றியடைய முடியும் நம்பிக்கையையும் ’யாத்திசை’ விதைத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/c9rxy7nlqk0o

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, ஏராளன் said:

எயினர் போன்ற பழங்குடி

எயினர், (உண்மையில் எய்னர்),  ஓர் சாதியாகவே இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அதாவது, அவர்களின் தொழில் குறிவைத்து (அம்பு) எய்வதில் பரம்பரையாக ஈடுபட்டு தேர்ச்சி அடைந்தவர்கள். 

அந்த பெயரே, எய்னர் (எயினர் அல்ல) அதை சுட்டுகிறது.

அநேகமாக இந்த போரின் பின், சோழர்கள் மற்றும் மற்ற அரசுக்கள் மிருகவலு படைகளை (குறிப்பாக யானை சோழருக்கு), பகுதியாக தானியங்கி படைகளாக மாற்ற, எயினர்களின் தேவை, தொழில் குறையாத தொடக்கி இருக்க வேண்டும்.    

பின்பு ஓர் கட்டத்தில் இல்லாமல் போய்  இருக்க வேண்டும். 

எய்னர்கள், இப்போதைய சினைப்பர்கள் போல, அனால் பெரும் படை வியூகத்தில். 

  • Like 1
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

YAATHISAI Review: சோழர் பாண்டியர் போர் வரலாறுக்கு வடிவம் கொடுக்கும் 'யாத்திசை' எப்படி இருக்கு?

 

தரணி இராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’யாத்திசை’ திரைப்படத்தில் சேயோன், ஷக்தி மித்ரன், ராஜலக்‌ஷ்மி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் இந்தப் படத்தை 'தரமான படைப்பு' என பல்வேறு ஊடகங்கள் விமர்சனங்களை வெளியிட்டிருக்கின்றன.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.