Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் - பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக தொடர்வாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிடிஆர், தமிழ்நாடு, பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம்,TNDIPR

10 மே 2023, 02:32 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாடு அரசியல் களத்தில் இப்போதைய விவாதப் பொருளாக இருப்பது அமைச்சரவை மாற்றம்தான். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் நடக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் யார் மாற்றப்படுவார், யாருக்கு புதிதாக வாய்ப்பு வழங்கப்படும் என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு விடையளிக்கும் விதமாக தமிழ்நாடு அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கி, புதிதாக ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதுவரை 3 முறை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இப்போது மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ள நிலையில், பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு ஒதுக்கப்படும் துறை தொடர்பான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் பதவியேற்பு விழா வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடக்க இருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

அரசு அதிகாரி மீது கல்லெடுத்து வீசியதையடுத்து விமர்சனத்திற்குள்ளான நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதையடுத்து, பதவியேற்புக்கு பிறகு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படலாம் என சென்னை தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ விவகாரம், கே.என்.நேரு - திருச்சி சிவா சர்ச்சை, பொதுக்கூட்ட மேடைகளில் அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் பதிவு செய்யும் சர்ச்சை பேச்சு என பல விவகாரங்களில் திமுக அமைச்சர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.

அதனால் எந்தெந்த அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

அமைச்சரவை மாற்றம் - சொல்லும் செய்தி என்ன?

பிடிஆர், தமிழ்நாடு, பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு அமைச்சரவையில் தற்போது முதலமைச்சர் உட்பட 35 அமைச்சர்கள் இருக்கிறார்கள். சட்டப்படி தமிழ்நாட்டு அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும். அதாவது மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் 15% பேர் மட்டுமே அமைச்சராக இருக்க முடியும் என்ற விதி உள்ளது.

அதன் அடிப்படையில் நாசருக்கு பதிலாக டி.ஆர்.பி. ராஜாவுக்கு அமைச்சரவையில் இப்போது இடமளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், சில அமைச்சர்கள் மீது எழுந்த விமர்சனத்திற்கான முதலமைச்சரின் பதிலாக இந்த அமைச்சரவை மாற்றம் இருக்கும் என தெரிவித்தார்.

"தமிழ்நாடு அமைச்சரவையில் இருக்கும் சில அமைச்சர்கள் மீது துறை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தடம் மாறக்கூடிய அமைச்சர்களின் துறைகள் மாற்றப்படலாம். அதில் ஒரு சிலருக்கு சிறிய துறைகள் ஒதுக்கப்படலாம். இப்படிச் செய்வதன் மூலம் கட்சியினர் மத்தியிலும், அதிகாரிகள் மத்தியில் முதலமைச்சரின் ஆளுமை வெளிப்படும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தான் பலவீனமான முதலமைச்சர் இல்லை என்பதை உணர்த்தும் செயலாக இருக்கும்," என்று குபேந்திரன் தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றம் என்பது எதிர்கட்சிகளுக்கான செய்தியாக இருக்காது, மாறாக ஆட்சியின் நலனுக்காகவே செய்யப்படுகிறது என்று பிபிசியிடம் மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

"நிதியமைச்சர் ஆடியோ விவகாரம், பொதுவெளியில் சில மூத்த அமைச்சர்கள் முகம் சுழிக்கும் வகையில் நடந்து கொண்ட விவகாரம் என கடந்த சில மாதங்கள் தமிழ்நாடு அரசுக்கு எதிராக விமர்சனத்தை முன்வைக்கும் வகையில் சில சம்பவங்கள் நடந்தன. இதற்கான நடவடிக்கையாகவே அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும்," என அவர் கூறினார்.

நிதியமைச்சர் மாற்றப்படுவாரா?

பிடிஆர், தமிழ்நாடு, பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம்,TWITTER/PTRMADURAI

தமிழ்நாடு அமைச்சரவையில் துறை ரீதியாக மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படும் நிலையில், மிக முக்கியமான மாற்றமாக கருதப்படுவது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மாற்றம் என தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் தொடர்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "பிடிஆரின் ஆடியோ விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கி இருக்கிறது. பிடிஆர் ஃபைல்ஸ் தொடர்பான சர்ச்சையை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை நிச்சயம் இருக்கும்," என கூறினார்.

"அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தால், நிச்சயமாக பழனிவேல் தியாகராஜனிடம் தற்போது இருக்கும் நிதித்துறை மாற்றப்படும். அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஆடியோ விவகாரம் தொடர்பாக அவர் மறுப்பு கூறியிருந்தாலும், கட்சிக்குள் இருக்கும் சில சீனியர் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மீது மக்கள் நலத்திட்டங்களுக்கு முழுமையாக பணம் ஒதுக்குவதில்லை என்ற குற்றச்சாட்டை முதலமைச்சரிடம் முன்வைத்து இருக்கின்றனர். அதனால் இந்த இரண்டு விவகாரத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவரின் துறை மாற்றப்படும்," என்று பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்தார்.

அரசியல் அழுத்தத்தின் காரணமாக நிதியமைச்சர் பொறுப்பில் மாற்றம் நிகழலாம் என்று அவதானிக்கிறார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.

"நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பொறுத்தவரை அவரின் நிர்வாக செயல்பாடுகளில் எந்த குறையும் முதலமைச்சரின் கவனத்திற்கு செல்லவில்லை. ஆனால் மக்கள் நலத்திட்டங்கள், சில இலவச திட்டங்களுக்கு நிதியை ஒதுக்குவதில் அவருக்கு சில மாற்றுக்கருத்து இருக்கிறது. இதன் காரணமாக சில அமைச்சர்களுடன் அவருக்கு முரண்பாடு உள்ளது. ஆனால் ஆடியோ விவகாரம் தொடர்பாக எழுந்த அரசியல் விமர்சனங்களுக்கான எதிர்வினையாக அவரின் துறை மாற்றப்பட்டு வேறு துறை அவருக்கு வழங்கப்படலாம்."

ஜெயலலிதா vs மு.க.ஸ்டாலின்

பிடிஆர், தமிழ்நாடு, பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம்,FACEBOOK/MKSTALIN

2021ஆம் ஆண்டு மே மாதம், மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு இதுவரை 3 முறை தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அவருக்கு பதிலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.

அடுத்ததாக 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மீண்டும் ஒருமுறை தமிழக அமைச்சரவையில் மாற்றம் நடந்தது. இம்முறை பல அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டது. கூடுதலாக, உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து தமிழ்நாடு அமைச்சரவை எண்ணிக்கை 35ஆக உயர்ந்தது.

தற்போது நாசருக்கு பதிலாக புதிதாக ஒருவர் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடிக்கடி அமைச்சரவையில் மாற்றங்கள் நடப்பது ஆட்சிக்கு நல்லதா என்ற கேள்விக்கு பதிலளித்த குபேந்திரன், நல்லது, கெட்டது என்று இதை பார்க்கக்கூடாது. தவறு செய்யும் அல்லது சரியாக வேலை செய்யாத அமைச்சர்களை மாற்றுவது ஒர் ஆட்சிக்கு தேவையானது என்று கூறினார்.

"கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் போது அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் திமுக தலைவராக இருந்த கருணாநிதி ஆட்சியின் போது அமைச்சரவை மாற்றங்கள் பெரிதாக நடந்ததில்லை. துறையுடன் ஒரு நீண்டகால தொடர்பும், நிபுணத்துவமும் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வளவு சீக்கிரம் யாரையும் கருணாநிதி மாற்றியதில்லை," என்றார் ஷ்யாம்.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடக்கும் அமைச்சரவை மாற்றங்களைப் போல திமுக ஆட்சியில் நடக்கிறதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த குபேந்திரன், "ஜெயலலிதா ஆட்சியையும், மு.க.ஸ்டாலின் ஆட்சியையும் ஒப்பிட முடியாது. ஜெயலலிதா ஆட்சியில் பல முறை அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது. அதில் சில மாற்றங்களுக்கு சரியான காரணத்தை நம்மால் விளக்கமுடியாது. ஆனால் திமுக ஆட்சியில் அப்படி காரணம் ஏதுமின்றி மாற்றங்கள் நடக்கவில்லை," என்றார்.

ஆட்சிக்கு பலனளிக்குமா அமைச்சரவை மாற்றம்?

பிடிஆர், தமிழ்நாடு, பழனிவேல் தியாகராஜன்

பட மூலாதாரம்,TNDIPR

தமிழ்நாடு அமைச்சரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் துறை உள்பட சில முக்கிய அமைச்சர்களின் துறை மாற்றப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு டி.ஆர்.பி. ராஜாவுக்கு என்ன துறை ஒதுக்கப்பட்டுள்ளது, எந்தெந்த அமைச்சர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது என்ற விவரம் தெரியவரும்.

இந்நிலையில் இந்த அதிரடி மாற்றங்கள் திமுக அரசின் மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலாக இருக்குமா அல்லது விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுமா என்ற கேள்வி எழுகிறது.

இந்த மாற்றங்கள் மூலம், முதலமைச்சருக்கு நெருக்கமானவராக இருந்தாலும் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி அமைச்சர்கள், அதிகாரிகள் வட்டாரங்களில் சென்று சேர்ந்து இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.

முன்னாள் அமைச்சர் நாசர், பல ஆண்டுகளாக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நண்பராக இருப்பவர். தனிப்பட்ட முறையிலும், கட்சி ரீதியாகவும் முதலமைச்சருடன் நெருக்கமாக இருந்தவர். ஆனாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்பட்டால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தயாராக இருக்கிறார் என்பதையே இந்த அமைச்சரவை மாற்றம் காட்டுகிறது, என்றார்.

அதேபோல நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் குடும்பம் முதலமைச்சரின் குடும்பத்துடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறது.

நிதியமைச்சரின் நிதி மேலாண்மைக் கொள்கைகளால் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டதை தனது பல சாதனைகளில் ஒன்றாக திமுக கூறிவந்தாலும், ஆடியோ விவகாரத்தால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடியாக பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.

ஆனால் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சர் பொறுப்பில் இருந்து மாற்றினால் அது நிச்சயம் திமுக அரசுக்கு எதிரான விமர்சனமாக எழுப்பப்படும் என்று அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/c3g440d9dx7o

  • கருத்துக்கள உறவுகள்

திமுக வை பற்றி எதை சொன்னாலும், பழனிவேலின் நிதியமைச்சர் தகுதியே தனித்தன்மை கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சரவை மாற்றம் - டி.ஆர்.பி.ராஜா  - நாசர்

தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம்: டி.ஆர்.பி.ராஜா `இன்'... நாசர் `அவுட்'... இலாக்காக்கள் மாற்றமா?!

முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில், புதுமுகம் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கவும், தற்போதைய அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.

 

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவிருப்பதாகக் கடந்த சில தினங்களாகவே தகவல்கள் பரபரத்துக்கொண்டிருந்தன. அமைச்சரவை மாற்றத்தின்போது, புதுமுகமாக டி.ஆர்.பி.ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும், சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றப்படவிருப்பதாகவும், சில அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படவிருப்பதாகவும் அரசியல் அரங்கில் அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்தது.

அதுவும் முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்துக்கு முன்னதாகவே இந்த அமைச்சரவை மாற்றம் ஏற்படும் எனக் கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வந்த வண்ணமிருந்தன.

டி.ஆர்.பி.ராஜா

இதையெல்லாம் உறுதிப்படுத்தும் விதமாக தி.மு.க-வின் மூத்த அமைச்சர் துரைமுருகன், இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று, அமைச்சரவை மாற்றம் குறித்து ஆளுநர் ரவியுடன் பேசவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அதை மறுத்த துரைமுருகன், ``யாமறியோம் பராபரமே... அமைச்சர்கள் சிலரை மாற்ற முதல்வருக்கு உரிமை இருக்கிறது. அவரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு எதுவும் தெரியாது" எனக் கூறினார்.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின்பேரில், புதுமுகம் ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கவும், தற்போதைய அமைச்சரவையிலிருந்து ஒருவரை நீக்கவும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``முதல்வர் ஸ்டாலின், மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சரவையில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்தார். அந்தப் பரிந்துரையை ஏற்று, ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்கிறார். அதன்படி, மே 11-ம் தேதி காலை 10:30 மணியளவில் ராஜ் பவனில் டி.ஆர்.பி.ராஜாவின் பதவியேற்பு விழா நடைபெறும்.

 

அதேபோல, பால்வளத்துறை அமைச்சர் நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்ததை ஏற்று, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழக அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜா இன்... நாசர் அவுட் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அமைச்சரவையில் இலாக்காக்கள் மாற்றமும் இருக்கலாம் என்கிறார்கள்.

https://www.vikatan.com/government-and-politics/politics/tamil-nadu-cabinet-reshuffle-trb-rajaa-in-and-nassar-out

 

தமிழ்நாடு அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

  • கருத்துக்கள உறவுகள்

 

விறுவிறுவென 'கவனம்பெற்ற' PTR நிதியமைச்சர் பதவியில் இருந்து மாற்றப்பட்டது ஏன்? | DMK | Tamil Nadu

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kadancha said:

திமுக வை பற்றி எதை சொன்னாலும், பழனிவேலின் நிதியமைச்சர் தகுதியே தனித்தன்மை கொண்டது.

ஆம்... பழனிவேல் தியாகராஜன் திறமையான நிர்வாகி. ஊழல் செய்யாதவர். 
தேர்தலுக்கு பணம் கொடுக்காமல் வென்ற ஒரே தி.மு.க. அமைச்சர்.
அத்துடன் அவர் தெலுங்கர் அல்ல சுத்த தமிழர். 🙂

ரி.ஆர்.பாலுவின் மகன் ரி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில் துறை அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

தமிழகத்தில் இன்று நடக்கும் அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறந்த முறையில் பணியாற்றிய  பழனிவேல்  தியாகராஜனை,
நிதி அமைச்சில் இருந்து மாறியதன் மூலம், 30,000 கோடி ஊழல் உண்மை போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

Image

 

Image

 

Image

 

Image

Image

Image

Image

 

 

 

Image

● தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு
● டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை
● சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி*
● பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம்
● மனோ தங்கராஜ் - பால்வளத்துறை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்ற அமைச்சர்களிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரா?

தமிழ்நாடு முதலமைச்சர்
 
படக்குறிப்பு,

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட டி.ஆர்.பி. ராஜா மற்றும் இலாகா மாற்றப்பட்ட அமைச்சர்கள் மனோ தங்கராஜ், பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், மு.பெ. சாமிநாதன், தங்கம் தென்னரசு ஆகியோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி,பிபிசி தமிழ்
  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

தி.மு.க. ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அமைச்சர்களிடமும் கட்சிக்காரர்களிடமும் மிகுந்த கடுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அவர் அளித்த நேர்காணலின் எழுத்துவடிவம் கீழே:

"தமிழக அமைச்சரவை மாற்றம் முன்கூடியே நடந்திருக்க வேண்டும். சில அமைச்சர்கள் மீது புகார் இருந்தது. சில அமைச்சர்கள் செயல்படவில்லையெனக் கூறப்பட்டது. உளவுத் துறை மூலமாக இதெல்லாம் முதலமைச்சருக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. அப்போதே அமைச்சரவையை மாற்றியிருந்தால் சாதாரணமாக போயிருக்கும். இப்போது பி.டி.ஆரின் ஆடியோ சர்ச்சைக்குப் பிறகு அமைச்சரவை மாற்றம் நடந்திருப்பதால், விவகாரம் வேறு மாதிரி பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அந்தச் சர்ச்சையில் சிக்கிய பி.டி.ஆரை மாற்ற வேண்டுமா இல்லையா என்ற கேள்வியை தி.மு.க. அரசு சரியாகக் கையாளவில்லை.

2006-2011 தி.மு.க ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை ஒரு ஆடியோ சர்ச்சையில் சிக்கினார். காவல்துறை அதிகாரியான உபாத்யாயாவிடம் ஒரு வழக்குக்காக பரிந்து பேசினார் பூங்கோதை.

 

அந்த உரையாடல் பதிவுசெய்யப்பட்டு, ஆடியோவாக வெளிவந்த பிறகு, பூங்கோதை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார்.

ஆறேழு மாதங்கள் கழித்து, அந்த ஆடியோ போலியானது என்பது போன்ற செய்திகளை ஊடகங்களில் வரவழைத்துவிட்டு, மீண்டும் பூங்கோதை அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதுபோன்ற முன்யோசனையுடன் இந்த விவகாரத்தை தற்போதைய அரசு கையாளவில்லை.

 

குபி
 
படக்குறிப்பு,

குபேந்திரன், மூத்த பத்திரிகையாளர்

பிடிஆர் இலாகா மாற்றம் - எழும் கேள்விகள்

"இந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல" என பி.டி.ஆர். சொல்லிவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலினும் தனது 'உங்களில் ஒருவன்' கேள்வி - பதில் அறிக்கையில், இந்த விவகாரம் பற்றிப் பேசும்போது, "இது போன்ற ஆடியோ சர்ச்சைகள் மட்டரகமானவை; இதற்கெல்லாம் பதில் சொல்லப்போவதில்லை" என்று கூறிவிட்டார். ஆகவே, இந்த விவகாரம் ஓய்ந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிலையில், பி.டி.ஆர். மாற்றப்பட்டிருக்கிறார். முதலில் அவரைக் காப்பாற்றிவிட்டு, இப்போது மாற்றியிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

பி.டி.ஆர். நிதி தொடர்பாக படித்தவர். ஆகவே அவரே இந்தப் பதவிக்குப் பொருத்தமானவர் என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு முன்பாக நிதியமைச்சராக இருந்தவர்கள் யாரும் நிதி தொடர்பான படிப்பையோ, எம்.பி.ஏவோ படித்தவர்கள் அல்ல. சங்கத் தமிழ் பேசிக் கொண்டிருந்தவர்கள்தான் அந்தப் பதவியில் இருந்தார்கள்.

நாவலர் நெடுஞ்செழியன், ஏம்.ஏ. தமிழ் படித்த பேராசிரியர் க. அன்பழகன், மு. கருணாநிதி ஆகியோர் நிதியமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணி என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக வரலாற்றில் அதிக முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர்களில் அவரும் ஒருவர்.

நிதித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகள்தான் பட்ஜெட்டை எழுதுகிறார்கள். அந்தத் துறையின் அமைச்சருக்கு நிதித் துறையில் நிபுணத்துவம் இருப்பது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், அதுவே எல்லாம் என ஆகிவிடாது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக மருத்துவரான விஜய பாஸ்கர்தான் இருந்தார். அந்தத் துறையில் ஊழல் இல்லாமலோ, பிரச்சனை இல்லாமலோ இருந்ததா? எத்தனை பிரச்னைகள் வெடித்தன? ஆகவே, அந்தத் துறையில் நிபுணத்துவம் கொண்டவர்தான் அமைச்சராக இருக்க வேண்டுமென்பதில்லை. அதிகாரிகளின் துணையுடன் யார் வேண்டுமானாலும் அதை சரியாகச் செய்யலாம்.

ஸ்டாலின்
 
படக்குறிப்பு,

அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட டி.ஆர்.பி. ராஜாவுக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சமூக ஊடகங்களில் பெரும் ஆதரவு

பி.டி.ஆரை பொறுத்தவரை, அவருக்கு சாதாரணமான துறை ஒதுக்கப்பட்டிருப்பதால் அவருடைய செயல்பாடுகளும் ஈடுபாடும் குறைந்து விடும் என எதிர்பார்த்தால் அது தவறு.

பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு தண்டனைப் பதவியாக, அதிகாரமில்லாத இடத்தில் நியமனம் செய்வார்கள். திறமையான அதிகாரியாக இருந்தால், அவர்கள் அந்த இடத்திலும் தங்களால் முடிந்ததைச் செய்து காட்டுவார்கள். அதேபோலத்தான் அமைச்சர்களும்.

"நான் நிதித் துறை போன்ற பெரிய துறையை நிர்வகித்தேன். அதில்தான் என் முழுத் திறமையும் வெளிப்படும்" எனக் கூறி, பி.டி.ஆர். பட்டும்படாமல் இருந்தால், அது வருத்தமளிக்கும் விஷயம்தான். ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கிறது என்பதால் ஆறு மாதம் கழித்துகூட மீண்டும் அவருக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்கலாம்.

அவரை முதல்வர் கையாண்டவிதம் தவறு என சமூக வலைதளங்களில் எழுதி வருகிறார்கள். அவர் மத்திய அரசுக்கு எதிராக எப்படியெல்லாம் பேசினார், செயல்பட்டார் என்பதைச் சுட்டிக்காட்டிவருகிறார்கள். நிதி அமைச்சராக அவருக்கு அந்த வாய்ப்பு இருந்தது, அதனால் செய்தார். வாய்ப்பு கிடைத்தால் எல்லா அமைச்சர்களும் அதைச் செய்வார்கள்.

தங்கம் தென்னரசுவின் திறமையைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றியவர். பள்ளிக் கல்வித் துறையைச் சிறப்பாக கையாண்டவர். அவர் அந்தத் துறையை வைத்திருக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த துரை முருகன், ஒரு சர்ச்சையில் சிக்கியதால் முதலமைச்சர் மு. கருணாநிதி அந்தத் துறையை அவரிடமிருந்து எடுத்துக் கொண்டார். அதனை தங்கம் தென்னரசுவிடம் தர முன்வந்தார்.

ஆனால், தங்கம் தென்னரசு அதனை ஏற்க மறுத்துவிட்டார். இவ்வளவு முக்கியமான துறையைக் கொடுத்தும் ஏற்க மறுத்ததற்காக மு.கருணாநிதியே அவரைப் பாராட்டினார்.

பொதுப் பணித் துறை அமைச்சராக இல்லாதபோதே, அண்ணா நூற்றாண்டு நூலகம், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது ஆகியவற்றை தொடர்ந்து மேற்பார்வை செய்தார். ஆகவே, நிதித் துறையைக் கையாள்வது தங்கம் தென்னரசுவுக்கு பெரிய விஷயமாக இருக்காது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

டிஆர்பி ராஜாவுக்கு உள்ள சவால்கள்

டி.ஆர்.பி. ராஜாவைப் பொறுத்தவரை ஏற்கனவே இரண்டு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். இப்போது மூன்றாவது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

இருந்தாலும், இவ்வளவு பெரிய துறையை அவர் எப்படி கையாள்வார் என்பது குறித்த கேள்விகள் இருக்கின்றன. குறிப்பாக தொழில் அதிபர்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் வலுவாகவே இருக்கின்றன.

வரும் ஜனவரி மாதம் புதிதாக ஒரு தொழிலாளர் மாநாட்டிற்கு தொழில்துறை தயாராகி வருகிறது. 60 சதவீத பணிகளை தங்கம் தென்னரசுவே முடித்துவிட்டார்.

ஆனாலும் டி.ஆர்.பி. ராஜா எப்படி இந்தத் துறையைக் கையாள்வார் என்ற பயம் தொழிலதிபர்களிடம் இருக்கிறது. அவர் புதியவர் என்பதால் அல்ல. அவருடைய தந்தையும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் தலையீடு இந்தத் துறையில் இருக்குமோ என்ற அச்சம்தான் அது. சமூக வலைதளங்களிலும் இதைப் பற்றி பலர் எழுதி வருகிறார்கள். டி.ஆர். பாலுவின் தலையீடு இல்லாமல் இருந்தால் அவருக்கும் அந்தத் துறை கைவந்துவிடும்.

நாசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதைப் பொறுத்தவரை அதற்குப் பல காரணங்கள். ஆவினைப் பொறுத்தவரை அது மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை. அதில் சின்ன தவறு நேர்ந்தாலும் அமைச்சருக்கும் ஆட்சிக்கும் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தும்.

ஆறேழு மாதங்களுக்கு முன்பிருந்தே, ஆவின் பால் கெட்டுப்போனதாகவும், பால் பாக்கெட் கிடைப்பதில்லை என்றும் புகார்கள் வந்துகொண்டிருந்தன. அதற்குப் பிறகு, அந்தத் துறையில் இருந்த அதிகாரிகள் இந்த அமைச்சரோடு பணியாற்றுவதில் சிக்கலை எதிர்கொள்ள ஆரம்பித்தார்கள்.

ஏற்கெனவே பால் கொள்முதல் குறைவாக இருக்கும் நிலையில் இனிப்புகள், ஐஸ் க்ரீம் விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஏழை மக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் சரியான விலையில் பால் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆவின் செயல்படுகிறது. அதற்காகத்தான் பால் விலையும் குறைக்கப்பட்டது. ஆனால், தனியார் பால் பாக்கெட்டுகள்தான் அதிகம் விற்பனையாயின. காரணம், ஆவின் பால் கிடைக்கவில்லை.

நாசர் பதவி நீக்கம் ஏன்?

மேலும், திருவள்ளூர் மாவட்ட அரசியலில் இவருடைய தலையீடும் இவருடைய குடும்பத்தினரின் தலையீடும் மிக மோசமாக இருந்தது. முதல்வர் அங்கு பொதுக் கூட்டத்திற்குச் சென்றால், அவர் பெயரைச் சொல்லி கடைகளில்கூட வசூல் வேட்டை நடத்தப்பட்டது. இது அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தியது.

அடுத்ததாக, ஆவடி மாநகராட்சியின் மேயராக தன் மகனைக் கொண்டுவர மிகவும் முயற்சி செய்தார். ஆனால் அது நடக்கவில்லை.

தற்போதுள்ள மேயர், மேயருக்கான கார் நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்த விடாமல், அமைச்சரின் மகன் கார் நிறுத்தப்படும். இதெல்லாம் உளவுத் துறை முதல்வரிடம் தெரியப்படுத்திய பிறகு அவரை அழைத்து முதல்வர் கடுமையாக எச்சரித்தார். அதற்குப் பிறகும் அவர் மாறவில்லை என்பதால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நிகழ்வில் கட்சிக்காரர் மீதே கல்லை எடுத்து வீசினார். அது தி.மு.க மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த குளறுபடிகளை மனதில் வைத்துத்தான் அவர் மாற்றப்பட்டிருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சராக இருந்த கயல்விழி செல்வராஜும் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் மாற்றப்படவில்லை. அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்றாலும் அமைச்சராக அவரது செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட அரசியலில் அவரது செயல்பாடுகள் குறித்தும் விமர்சனங்கள் இருந்தன.

ஆனால், அவரை நீக்கினால் அவருக்குப் பதிலாக யாரைப் போடுவது என்ற கேள்வி எழுந்தது. சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜாவையோ முன்னாள் அமைச்சரும் மானாமதுரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசியையோ புதிய அமைச்சராக்கலாம் என்று விவாதிக்கப்பட்டது. அவரைப் பொறுத்தவரை, இப்போதைக்கு காப்பாற்றப்பட்டிருக்கிறார் அவ்வளவுதான்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

மனோ தங்கராஜைப் பொறுத்தவரை, ஐ.டி. துறையிலிருந்து பால் வளத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பது ஒரு பதவி உயர்வைப் போலத்தான். ஏனென்றால் ஆவின் மக்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட துறை. ஒரு நாள் பிரச்னை என்றாலும் பெரிய விவகாரமாகிவிடும்.

தி.மு.க ஆட்சி வந்தால், அ.தி.மு.க. ஆட்சியின் போது பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிதான் முதலில் சிறைக்குச் செல்வார் என எல்லோரும் பேசினார்கள். முதலமைச்சரே பேசினார். அந்த அளவுக்கு அவர் மீது புகார்கள் இருந்தன.

ஆனால், அதைவிட மோசமாக இருந்தார் நாசர். இப்போது பெயரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மனோ தங்கராஜுக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவரைப் பொறுத்தவரை இது ஒரு உயர்வுதான்.

இன்னும் நிறைய அமைச்சர்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. நிறைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆனால், எதிர்க்கட்சிகள் கண்கொத்திப் பாம்பாக காத்துக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் அ.தி.மு.க. இருக்கிறது. மற்றொரு பக்கம் பா.ஜ.கவின் அண்ணாமலை எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுகிறார். இது போதாதென ஆளுநர் ஆர்.என். ரவியும் இருக்கிறார். இந்த ஆட்சியைக் குறித்து பல விமர்சனங்களை அவர் முன்வைக்கிறார். அதில் பல விஷயங்கள் பொய். அந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள் தி.மு.க. ஆட்சி மீது பாயக் காத்திருக்கின்றன. இப்படியான சூழலில் தி.மு.க. எப்படிச் செயல்பட வேண்டும்.

சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் செய்தி ஒன்று வெளியானது. அதில், கோவளம் மழைநீர் வடிநிலத் திட்டம் குறித்து அதில் பேசப்பட்டிருந்தது. 740 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் அது.

அது தற்போது அங்குள்ள எம்.எல்.ஏவாலும் மண்டல குழுத் தலைவர்களாலும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் புகார் கூறுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த ஊழலைக் குறைப்பதாகக் கூறித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், அதிகரித்திருப்பதாக பலர் வெளிப்படையாக பேட்டியளிக்கிறார்கள். இந்த சூழலில், அமைச்சரவை பெரிய அளவில் மாற்றியிருக்க வேண்டும்.

"திராவிட மாடல் முழக்கம் மட்டும் கைகொடுக்காது"

2024ல் மோடி எதிர்ப்பும் திராவிட மாடல் கோஷமும் மட்டுமே கைகொடுக்காது. 40 எம்.பி. இடங்களையும் பிடிக்க வேண்டுமென்றால் இது போன்ற ஊழலையோ, சர்ச்சையையோ அனுமதிக்கக்கூடாது. 20 - 30 வருடங்கள் அமைச்சர்களாக இருந்தவர்களை மாற்றிவிட்டு, புதியவர்களை நியமிக்க வேண்டும். அமைச்சரவை மாற்றம் இதைவிட சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.

ஒரு ஆட்சி நூறு சதவீதம் தூய்மையானதாக இருக்க முடியாது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரிதான் இருப்பார்கள். ஆனால், முதல்வர்தான் அவர்களை சரியாக வழிநடத்திச் செல்ல வேண்டும்.

கவுன்சிலர்களில் இருந்து அமைச்சர்கள் வரை அனைவரும் அவரவர் சந்தோஷத்தைத்தான் பார்க்கிறார்கள். ஆகவே முதலமைச்சர் கருணையே பார்க்கக்கூடாது. நாகரிகமாகவும் மென்மையாகவும் நடந்துகொள்வதால் நல்ல பெயர் கிடைக்காது. கடுமையான நடவடிக்கை எடுக்கும்போதுதான் மக்கள் மத்தியில் நல்ல பெயர் வரும்.

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியை 40 சதவீத 'கமிஷன் ஆட்சி' என முத்திரை குத்திவிட்டார்கள். அதுபோல இங்கேயும் தி.மு.க. ஆட்சியை முத்திரை குத்திவிட முதல்வர் அனுமதிக்கக்கூடாது.

தி.மு.கவை வீழ்த்த பா.ஜ.க என்ன வேண்டுமானாலும் செய்யும். அதற்கு நல்ல உதாரணம், ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழுக்கு அளித்த சமீபத்திய பேட்டி. அவர் ஒருவர்போதும் இந்த ஆட்சியைக் கலகலக்கச் செய்வதற்கு. ஆகவே, முதல்வர் மிகக் கடுமையாக அடுத்த மூன்று ஆண்டுகள் நடந்தால்தான் பெயரைக் காப்பாற்ற முடியும்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆரம்பத்திலிருந்து அவர் புலம்பிக் கொண்டிருக்கிறாரே தவிர, நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டமன்ற தேர்தலில் ஜெயிக்கும்வரை இவர் பேச்சைக் கேட்டார்கள். அதற்குப் பிறகு கேட்பதில்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய இடங்களைக் கொடுக்கச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டாலும் கட்சிக்காரர்கள் கேட்பதில்லை.

"உங்கள் முன் வெட்கித் தலைகுனிகிறேன்" என்றார். அப்போதும் கூட்டணிக் கட்சியினருக்கு கொடுக்க வேண்டிய இடங்களை கட்சிக்காரர்கள் தரவில்லை.

துரைமுருகனைப் போன்ற ஒரு தி.மு.க. விசுவாசியைப் பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர். அழைத்தும் அ.தி.மு.கவுக்குச் செல்லாதவர். ஆனால், பிரச்னை ஏற்பட்டபோது, அவரையே பொதுப் பணித் துறையிலிருந்து நீக்கி, வெறும் சட்ட அமைச்சராக மட்டும் வைத்திருந்தார் மு. கருணாநிதி.

மு.க. ஸ்டாலினுக்கு இது தெரியாத விஷயமல்ல. ஆகவே, அவர் மென்மையாக நடந்து கொண்டால் அவரது கட்சியினர் சிக்கலான சூழலை உருவாக்குவார்கள். அது அ.தி.மு.க, பா,ஜ.க மற்றும் ஆளுநருக்கு சாதகமாகப் போய்விடும்.

https://www.bbc.com/tamil/articles/cd14klde9z5o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

PTR-க்கு நடந்தது சரியா? MK Stalin நடவடிக்கையால் விமர்சனம் வருமா? Kubenthiran Interview

தி.மு.க. ஆட்சி இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிக்கவிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அமைச்சர்களிடமும் கட்சிக்காரர்களிடமும் மிகுந்த கடுமையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

  • கருத்துக்கள உறவுகள்

PTR முன்னாள் சென்னை மாகாண முதல்வராக இருந்த பொன்னம்பலம் தியாகராஜனின் பேரனாவார். திறமையும் துணிச்சலும் ஊழலும் இல்லாதவர். ஸ்டாலினுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராகும் சகல தகுதிகளும் அவருக்கு உண்டு. நயன்பிரியரான சின்னக்கலைஞர் உதய்ணா முதல்வராவதற்கு PTR தடையாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக ஓரம்கட்டப்பட்டிருக்கின்றார் என்று தோன்றுகின்றது. முக்கிய பொறுப்பான நிதித்துறை கருணாநிதி குடும்பத்தின் விசுவாசியான தங்கபாண்டியனின் மகனான தென்னரசுவுக்குத் தரப்பட்டிருக்கிறது.  இவரின் சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன் தென் சென்னை மக்களவைத் தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.