Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா, தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் வைபவ வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் மற்றும் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பலத்த காயமடைந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக அவரது உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு நேற்று அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 23 ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கியதுடன் குறித்த வீட்டுக்கு தீ வைத்ததில் 22 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்திருந்த பெண்ணின் கணவரே இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Background-2023-07-23T100527.219.png

https://thinakkural.lk/article/265202

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் இந்த ஒரு கிழமையில் மட்டும் மூன்று தமிழர்கள் கொலை செய்யப் பட்டுள்ளார்கள்.
1) தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த முன்னாள் போராளி சுட்டுக் கொலை.
2) பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவர் கொலை என்று தொடர்கின்றது.
அங்கு உள்ள மக்களுக்கு, அனுசரித்து போகும் பழக்கம்  இல்லாமல் போய் விட்டதா ?

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் மற்றும் வீடொன்றுக்கு தீ வைத்த சம்பவத்தில் 21 வயது குடும்பப்பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, இன்று புதன்கிழமை (26) அதிகாலை உயிரிழந்த பெண்ணின் கணவரான 32 வயதுடைய நபரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

அதனையடுத்து, தீ வைக்கப்பட்ட வீட்டினை கொழும்பில் இருந்து சென்று பார்வையிட்ட பொலிஸ் தரப்பு இரசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று சோதனை செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு, வீட்டில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டுக்கும் பெற்றோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இச்சம்பவத்தில் 21 வயது இளம் குடும்பப்பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இரசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் பல்வேறு தரப்புகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

வவுனியாவில் வாள்வெட்டு, தீ வைப்புக்குள்ளான வீட்டில் இரசாயன பகுப்பாய்வு சோதனையில் ஈடுபட்ட கொழும்பு பொலிஸார்  | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா தோணிக்கல் தீ வைப்பு – வாள்வெட்டு – கொலை – சந்தேக நபர்கள் கைது!

adminAugust 1, 2023
 

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (31.07.23) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக  காவல்துறை  ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் வவுனியா பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குற்றச்செயல்களுக்கு உதவிய 3 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் நிகழ்வொன்று நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி வீட்டிற்கு தீவைத்து எரித்திருந்தனர்.இதன்போது, வீட்டில் இருந்த 10 பேர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தம்பதி உயிரிழந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 மற்றும் 13 வயதுடைய  பெண் பிள்ளைகளும், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீட்டிற்கு தீ வைப்பதற்கும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதற்கும் முகமூடி அணிந்த குழுவொன்று வரும் சிசிடிவி காட்சிகள் காவற்துறையினருக்கு கிடைத்திருந்த நிலையில்  விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

https://globaltamilnews.net/2023/193553/

 

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு - கைதான ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

image
 

வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் கைதான ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன், பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டனர். 

இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம்குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன்,மேலும் 10 பேர் காயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த இறந்த பெண்ணின் கணவனான ச.சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். 

குறித்த சம்பவம் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வாளர்கள், தடவியல் நிபுணர்களின் உதவியுடன் வவுனியா பிரிவுபொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்துவந்ததுடன். இச் சம்பவம் தொடர்பில் பலரிடம் வாக்கு மூலங்களும் பெறப்பட்டிருந்தன.

விசாரணைகளின் அடிப்படையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேரை வவுனியா பிரிவிற்கான குற்றத்தடுப்பு பொலிசார் நேற்று மாலை கைதுசெய்துள்ளனர். 

இதேவேளை குற்றச்செயலுக்கு உதவியதாக தெரிவிக்கப்படும் 3 மோட்டார் சைக்கிள்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வவுனியாவை சேர்ந்த ஏனைய மூவர் வெளிநாடுகளிற்கு தப்பிச்செல்ல முடியாதவாறு அவர்களது கடவுச்சீட்டுக்கள் பொலிசாரால் முடக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இருதரப்பிற்கிடையிலான தனிப்பட்ட முன்பகையே குறித்த சம்பவத்திற்கு காரணம் என பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்ற அனுமதியுடன் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளனர்.

வவுனியாவில் வீட்டிற்கு தீ வைத்து தாக்குதல் : இருவர் உயிரிழப்பு - கைதான ஐவரையும் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இரட்டை படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது 

Editorial   / 2023 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:46 - 0      - 92 

க. அகரன் 

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தை சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து, பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான  நண்பரே    இன்று (03)      கைது செய்யப்பட்டுள்ளார்.

 

https://www.tamilmirror.lk/வன்னி/வவனய-இரடட-படகல-பரதன-சநதக-நபர-கத/72-322077

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோணிக்கல் இரட்டை கொலை : பிரதான சந்தேகநபர் கைது

vavuniya-crime.jpg

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வவுனியா மாவட்ட நீதிமன்றில் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா – தோணிக்கல் பகுதியில் கடந்த மாதம் பிறந்த நாள் நிகழ்வொன்று இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் அங்கு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் வீட்டுக்கும் தீ வைத்தனர். இதன்போது, 21 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது கணவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்தார்.

இந்தநிலையில், சம்பவம் தொடர்பில் கைதான 5 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு பணத்தை வழங்கி கொலை செய்யுமாறு பணித்த, பிரதான சந்தேகநபரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

https://thinakkural.lk/article/266663

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவை அதிரவைத்த இரட்டை கொலை வழக்கு ; பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Published By: DIGITAL DESK 3

05 AUG, 2023 | 09:14 AM
image
 

வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை எதிர்வரும் 11 திகதி  வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட  பிரதான சந்தேகநபரை  நேற்று வெள்ளிக்கிழமை (04) வவுனியா சட்ட வைத்திய  அதிகாரியிடம் முற்படுதிய பின்னர்  வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில்  குற்ற புலனாய்வுத்திணைக்களத்தின் கொலை விசாரணை பிரிவினர்  ஆஜர்படுத்தினர்.

இதன்போதே, சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை  அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்க வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான்  அஹமட் ரசீம்  உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் தொடர்பில், சட்டத்தரணி அருள்மொழிவர்மன் கொன்சியஸ் ஆஜராகி சந்தேகநபர் சம்பவம் நடைபெற்ற அன்று  தனது பிள்ளைக்கு சுகயீனம் காரணமாக   சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக,   யாழ்பாணம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றிறிந்ததாகவும், சம்பவதினத்தன்று  கைது   செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்  வவுனியாவில் இல்லை என்றும்,  சந்தேகநபரின் நலனுரித்துக்கள் தொடர்பில் கவனம்  செலுத்துமாறும் சந்தேகநபர் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீதவான் முன்னிலையில் சந்தேகநபரை  குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரனை பிரிவினரான பொலிஸ் பரிசோதகர் இக்பால், பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த, பொலிஸ் சார்ஜன்ட் சந்தரூவன், பொலிஸ்காஸ்டபிள் விஜரட்ண மதுசங்க பண்டார  ஆகியோர் இணைந்து       மன்றுக்கு முற்படுத்தினர். பின்னர்   சந்தேகநபர்  அனுராதபுரம் சிறைச்சாலை  உத்தியோகத்திரிடம் ஒப்படைக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/161659

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

AVvXsEhFp7XObpqxs87PigJd0kYlZQOKRrjM5hgmV8uDJ2pRptIg1Jw8Yt12jwZYNNq0djDkpHiDH7hcTnKD8dF07RJa9-JoqDGNEpxBGR52Hoytfc3oOeC7JBZTUFfmjhI5yOudN-8AYePOBDryeST3zRE65JuvA4xFhYaQvjnqDM-whSm4jLjdE1j8DEVO97o=s16000

ஜூலை மாதம் 23ஆம் திகதி, வவுனியா, தோணிக்கல் பிரதேசம் அந்த வீட்டில், அதிகப்படியான சந்தேசம் நிறைந்து காணப்பட்டது.

 அதற்குக் காரணம், அனைவரின் பாசத்துக்குப் பாத்திரமான மகளின் பிறந்தநாள் கொண்டாட்டமாகும். 

எனினும், அந்தக் குதூகலம் நீண்ட நேரம் நீடித்திருக்கவில்லை. நேரம், நள்ளிரவு 12.05ஐ அண்மித்துக் கொண்டிருந்தது.... வீட்டுக்குள் நுழைந்த கூலிப்படை, அங்கிருந்தவர்களை வெட்டியும் குத்தியும் வீட்டுக்கு தீவைத்தும் படுபயங்கர கொடூர அட்டகாசங்களில் ஈடுபட்டது. 

 

வவுனியாவில் வர்த்தகம் செய்யும் ‘சுரேஸ்’ என்கின்ற முஹமட் இக்ஸாட், தோணிக்கல்லில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

 

 19 வயதான பாத்திமா சஜானாவுக்கு, இரவு 12 மணிக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட, தனது நண்பர்கள், உறவினர்கள் என சிலரை வீட்டுக்கு அழைத்திருந்தார். கொழும்பில் இருந்து வந்து, அந்த வீட்டில் தங்கியிருந்த இக்ஸாட்டின் சித்தி, சித்தியின் கணவன் மற்றும் மகளான 21 வயதான பாத்திமா சசீமா சைனி, அவருடைய கணவன் சுகந்தன் ஆகியோரும் அன்றைய தினம் சஜானாவின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

 

 இந்நிலையில், இரவு 12.05 மணியளவில் வீட்டின் முன் வாயில் கதவு (கேற்) தட்டப்பட்டது. வீட்டின் உரிமையாளரான ‘சுரேஸ்’, தனது மகளுக்கு ‘சப்பிரைஸ் கிப்ட்’ வந்துள்ளதாக நினைத்து, முன் கதவை திறந்து பிரதான வாயிலுக்கு சென்றிருந்தார். கூடவே, அவரின் மனைவியும் சசீமா சைனியின் தாயாரும் சென்றிருந்தனர். வாயில் கதவை திறந்ததும், அங்கு முகமூடி அணிந்திருந்த 10 இற்கும் மேற்பட்டவர்கள் “சுகந்தன் எங்கே” எனக் கேட்டனர். இதனால் அச்சமடைந்த ‘சுரேஸ்’, “எற்காக சுகந்தனைத் தேடுகின்றீர்கள்; நீங்கள் யார்” எனக் கேட்ட, மறுகணமே அவர் மீது வாள் வெட்டு விழுந்தது. 

 

இதனையடுத்து ‘சுரேஸ்’, ஓடிச்சென்று தனது வீட்டில் ஒளிந்து கொண்டார். அவருடன் கூடவே சென்ற மற்றைய இரண்டு பெண்களும் பயத்தில் கத்தியுள்ளனர். இந்நிலையில், வீட்டின் முன் கதவு திறந்து காணப்படவே, வீட்டுக்குள் சென்ற கூலிப்படை, வீட்டில் இருந்தவர்களை வெளியேறுமாறு கூறி, சுகந்தனைத் தேடியுள்ளனர்.

 

 இதன்போது, பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள், என்ன நடக்கின்றது என்பதை உணர முடியாத நிலையில், பயத்தால் உறைந்து, அறைகளுக்குள் ஒளிந்துகொண்டனர். இதன்போது, பெற்றோல் மற்றும் ஒயில் கலந்த கலன்களுடன் வந்த கூலிப்படை வீட்டுக்குத் தீவைத்தனர். 

 

இந்நிலையில் அறைக்குள் ஒளித்திருந்த சுகந்தன், தனது மனைவியை அழைத்துக்கொண்டு வெளியேறியபோது, வீட்டின் முன்புறம் அதிகளவில் தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. சுகந்தனின் மனைவியான சசீமா சைனி, தடக்கி விழுந்துவிடவே, அவரைத் தூக்குவதற்கு சுகந்தன் முயன்றுள்ளார்.

 

 எனினும், அது சாத்தியப்படாத நிலையில், சுகந்தனிலும் தீபற்றியது. அதனால் தனது மனைவியை தூக்கும் முயற்சியை கைவிட்டுவிட்டு, வெளியில் சென்று மண்ணில் புரண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். இதற்கிடையில், அலறல் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிவந்தபோது, வீடு முழுமையாக தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது. 

 

இந்நிலையில், அறைகளுக்குள் ஒளித்து இருந்தவர்களை மீட்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு, அவர்களை மீட்டெடுக்க முயலும்போதே, பொலிஸாருக்கும் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவுக்கும் தகவலை அயலவர்கள் வழங்கினர். எரியும் வீட்டுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் அயலவர்கள் ஈடுபட்டு, மூன்று வயது முதல் 46 வயது வரையான ஒன்பது பேரை தீக்காயங்களுடன் மீட்டனர். 

 

இந்நிலையில், வீட்டுக்கு தீ வைத்த கும்பல் தப்பியோடி இருந்தது. வீட்டுக்குள் விழுந்து கிடந்த சசீமா சைனியை எவரும் காணாததால், அவர் வீட்டுக்குள்ளேயே தீக்காயம் மற்றும் மூச்சு திணறலால் மரணித்த நிலையில், தீயணைப்பு படையினரால் சடலமாக மீட்கப்பட்டார். 

 

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட வவுனியா மாவட்ட பதில் நீதிவான் த. ஆர்த்தி ஆகியோர் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டிருந்தனர். 

இந்நிலையில், சுகந்தன் (35 வயது), 

பாத்திமா சஜானா (19 வயது), 

தேவராணி (33 வயது), 

தாரணி (46 வயது), 

சுதர்சினி (46 வயது), 

ஆக்ஸட்டினா (ஏழு வயது),

 தர்வின் சுதர்சினி, 

தனுசா, 

முஹமட் இக்ஸாட் (40 வயது) ஆகியோர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இவர்களில் கடும் காயங்களுக்குள்ளான சுகந்தன், வவுனியா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மறுநாள் மரணமடைந்தார். 

 

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்தனர். சி.சி.ரி.வி காணொளிகளை முதலில் ஆராய்ந்தபோது, வீட்டின் வெளியில் இருந்த சி.சி.ரி.வி கமெரா உடைக்கப்பட்டிருந்ததுடன் வீட்டின் உட்பகுதியில் இருந்த கமெராக்களும் செயற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், அயல் வீடுகளில் உள்ள சி.சி.ரி.வி கமெராக்களை பரிசோதித்தபோது, முகமூடியும் கையுறையும் அணிந்த சிலர், கைகளில் கலன்கள், வாள்களுடன் வரிசையாக நடந்து வருவதையும் பின்னர் அவர்கள் தப்பிச் செல்வதையும் கண்டுகொண்டனர். 

 

இதன் தொடர்ச்சியாக, பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவிலவின் கண்காணிப்புடன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் களுஆராச்சியின் ஆலோசனையில், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடியின் வழிநடத்தலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் அழகியவண்ண தலைமையிலான பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்தன. 

இதையடுத்து, தோணிக்கல் பகுதியில் உள்ள மயானத்தில் இருந்து கையுறை, கல்வனைஸ் பைப் என்பன, மோப்ப நாயின் உதவியுடன் மீட்கப்பட்டன.  பிரதி பொலிஸ் மாஅதிபர் பி. அம்பாவில, வவுனியா பொலிஸ் நிலைய உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜெயதிலக தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட நிலையில், பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவு, சிவில் புலனாய்வு பிரிவு என்பன விசாரணைகளை முன்னெடுத்தன.

 

இந்தக் குற்றச்செயலுக்கான திட்டம், தவசிகுளம் குளக்கட்டுப்பகுதியில் இருந்து திட்டமிடப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் கசிந்த நிலையில், குறித்த கிராமத்தில் விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தினர். இவ்வேளை, குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது. இத்தொலைபேசி அழைப்பு, அப்பகுதியில் பல குற்றங்களைச் செய்திருந்த ஒருவருடைய அழைப்பாக இருந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக, தனக்கு சில தகவல்கள் தெரியும் என அவர் தெரிவித்திருந்தார். 

 

குற்றத்தடுப்பு பொலிஸார் அவரிடம் நேரடியாகத் தகவல்களைப் பெற்றபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வௌிவந்தன. இதன் பிரகாரம், குறித்த இடத்துக்கான அலைபேசி கோபுரத்தின் ஊடான அழைப்புகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகள், மரணடைந்த சுகந்தன் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படை மற்றும் அந்தக் கிராம மக்கள் வழங்கிய தகவல் என்பவற்றின் அடிப்படையில் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டனர். தவசிகுளம் பகுதியில் வைத்து, 31 ஆம் திகதி முதலாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, நான்கு பேர் கைதாகினர். இந்நிலையில், இச்சம்பவத்தை செய்வதற்காக ஒப்பந்தம் மேற்கொண்ட நபர், வவுனியாவில் இருந்து தப்பி ஓடியிருந்தார்.

 

 கைதுசெய்யப்பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிள்கள், அலைபேசிகள் என்பன மீட்கப்பட்டன. இந்நிலையில், மிகுதி விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கமாறு பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்ட நிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தொடங்கினர். 

 

இதன் பிரகாரம், சந்தேக நபர்களை தடுப்பு காவலுக்கு எடுத்து, விசாரணைமேற்கொள்ளப்பட்ட நிலையில், ஐந்து வாள்கள், கையுறைகள் உட்பட சில எரிக்கப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுத்து வைத்து விசாரணைமேற்கொள்ள நீதிவான் உத்தரவிட்டிருந்தார். 

 

இதையடுத்து, உயிரிழந்த சுகந்தனின் நண்பராக இருந்த ஒருவர், பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் மூன்றாம் திகதி கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒரு நாள் தடுப்பு காவல் உத்தரவை பெற்று விசாரணை செய்யப்பட்டார்.

 

 விசாரணைகள் முடிவடைந்து, வைத்திய பரிசோதனைகளின் பின்னர், நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், 11ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டு, அநுராதபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். 

கடந்த, 11ஆம் திகதி அடையாள அணிவகுப்பு இடம்பெற இருந்தபோதிலும், சாட்சி சிகிச்சை பெற்று வருவதால் அவர் நீதிமன்றத்துக்கு வர முடியாமையால், அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டதுடன், சந்தேக நபர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் வவுனியா நீதிவான் உத்தரவு வழங்கியிருந்தார். 

 

குறித்த சம்பவம் பெண் ஒருவருடன் ஏற்பட்ட தொடர்பு விவகாரத்தால் சம்பவித்தது என்று தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், (  சுகந்தன் பாத்திமாவை திருமணம் செய்வதற்கு முன்னர் வேறு ஒரு பெண்ணுடன் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த நிலையில் கொலை குற்றம் ஒன்றில்  சிறைக்கு சென்ற வேளையில் அப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்ததால் தகராறுகள் ஏற்பட்டுள்ளன  ) அத்துடன்  போதைப்பொருள் வியாபாரமும் சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்குமா என்பது தொடர்பிலான சந்தேகமும் மக்கள் மத்தியில் நிறைந்து காணப்படுகின்றது. 

 

ஏனெனில், மரணமடைந்த சுகந்தனும் பிரதான சந்தேக நபராக கைதானவரும் அடிதடி மற்றும் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமையையும் மக்கள் மறுப்பதற்கில்லை. 

இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

. எது எவ்வாறாயினும், சட்டம் தன் கடமையை செய்யும் நிலையில், தனி நபர்கள் தீர்ப்பு வழங்கும் ‘ரவுடீஸ’ போக்கு, ஒழுக்கமுள்ள சமூகத்துக்கு ஏற்புடையதல்ல. எனவே, உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை நீதியினூடாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின்  கோரிக்கையாகும். 

https://www.madawalaenews.com/2023/08/i_875.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனெனில், மரணமடைந்த சுகந்தனும் பிரதான சந்தேக நபராக கைதானவரும் அடிதடி மற்றும் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தமையையும் மக்கள் மறுப்பதற்கில்லை. 

இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.

. எது எவ்வாறாயினும், சட்டம் தன் கடமையை செய்யும் நிலையில், தனி நபர்கள் தீர்ப்பு வழங்கும் ‘ரவுடீஸ’ போக்கு, ஒழுக்கமுள்ள சமூகத்துக்கு ஏற்புடையதல்ல. எனவே, உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை நீதியினூடாக பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே மக்களின்  கோரிக்கையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விப்பட்டது வேறு. நண்பர் ஒருவர் வீடியோ பார்த்ததாக சொன்னார். உண்மை தெரியவில்லை.

அதன்படி, தாக்குதல் நடத்தியவர்கள் (அல்லது நடத்தியவர்களை ஒருங்கிணைத்தவர்) தாக்குதலுக்கு உள்ளானவர்களிடம் பணம் வட்டிக்கு வாங்கியவதாகவும், அது தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில், சிக்கல் உண்டாகி, கடன் வாங்கியவர், இந்த வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு, கட்டி வைக்கப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளானதாயும், அது வீடியோ செய்யப்பட்டு, அவரது நண்பர், உறவினர்களுக்கு அனுப்பப்பட்டு, கடன் காசு வசூலிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பான பழி வாங்களே இது என்றும் சொன்னார்.

அந்த தாக்குதல் விடியோவை தான் பார்த்ததாக சொன்னார். அவர் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சியதை, பெண் அல்லது பெண்கள் பார்த்து ரசித்ததாலே, பழி உணர்வு, வெறித்தனமாக்கியது என்கிறார்.

நான், பார்க்கவில்லை, ஆகவே விசயம் தெரிந்தவர்கள் இது சரியா இல்லையா என்று சொல்லுங்கள். நானும், நண்பரிடம் விடுமுறை முடித்து வந்ததும், மேலும் 
விபரம் கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் கொலை குற்றங்களுக்கு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது இல்லை. 

இலங்கையில் ஒருவரை கொலை செய்வதால் வரக்கூடிய ஆபத்து பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது போல. 

கொலை குற்றத்திற்கு நீதி மன்றினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது ஒருவேளை இப்படியான கொலைகள் எதிர்காலத்தில் நடைபெறுவதை குறைக்குமோ?

சிங்கப்பூர், மலேசியா வழியை இந்த விடயத்தில் இலங்கை பின்பற்றலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

நான், பார்க்கவில்லை, ஆகவே விசயம் தெரிந்தவர்கள் இது சரியா இல்லையா என்று சொல்லுங்கள்.

இந்தச்சம்பவம் பத்திரிகையில் வெளிவந்தபோது, அந்தகாணெளியும் பத்திரிகையில் வந்தது. ஆனால் உண்மையில் இதோடு சம்பந்தப்பட்டதா என்பது தெரியவில்லை. மரணமடைந்தவர் அவரை தாக்குவதாகவும் தாக்கப்பட்டவர் தற்போது உயிருடன் இருந்தாலோ அல்லது அவரின் உறவினர்களோ தங்களுடன் தொடர்பு கொள்ளுபடி ஒரு செய்தியும் வந்திருந்தது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இரட்டைக் கொலை பிரதான சந்தேக நபரிடம் இருந்து சிறைச்சாலையில் தொலைபேசி மீட்பு : தினமும் பெண் ஒருவருடனும் 90 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடல்

Published By: DIGITAL DESK 3

24 AUG, 2023 | 02:30 PM
image
 

வவுனியாவை உலுக்கிய இரட்டைக் கொலை பிரதான சந்தேநபரிடம் இருந்து வவுனியா சிறைச்சாலையில் தொலைபேசி மீட்கப்பட்டுள்ளதுடன், பெண் ஒருவருடன் தினமும் 90 நிமிடங்கள் உள்ளடங்களாக 35 தடவைகள் உரையாடியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் நீதிமன்றிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் 23 ஆம் திகதி  அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்த நபர்கள் அவ் வீட்டில் இருந்த ஒருவர் மீது வாள் வீசி தாக்கியதுடன், வீட்டிற்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்தனர். 

இச்சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரும் மரணமடைந்திருந்தனர். 

இச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், பிரதான சந்தேக நபர்கள் உட்பட 5 பேர் வவுனியா சிறைச்சாலையிலும், ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்த பிரதான சந்தேக சந்தேக நபர் தொலைபேசி பாவித்துள்ளமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை சிறைச்சாலையில் மேற்கொண்ட திடீர் சோதனையில் பிரதான சந்தேக நபரிடம் இருந்து கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த தொலைபேசி ஊடாக 3,292 வெளிச் செல்லும் அழைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதில் 3 அழைப்புக்கள் குறித்த நபரின் மனைவிக்கும், பிறிதொரு பெண்ணுக்கு ஒன்றரை மணித்தியாலப்படி 35 தடவைகள் அழைப்பு எடுத்து கதைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது. 

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று குற்றப் புலனாய்வு திணைக்கள கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/163088

  • 8 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் என நீதிமன்றில் தெரிவிப்பு

Published By: VISHNU   18 MAY, 2024 | 03:26 AM

image

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.  

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார்.

இதன் பின் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார்.

குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார்.

இவ் வழக்கு அடுத்த தவணைக்காக யூன் மாதம் 7 ஆம் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.  இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/183835

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா இரட்டை கொலை சந்தேக நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

Published By: VISHNU   25 JUL, 2024 | 07:37 PM

image

இரட்டை கொலை சந்தே நபர்களின் விளக்கமறியலை நீடித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வருடமாக வழக்கு இடம்பெற்று வருவதுடன் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிவு 296 கட்டளை சட்டக் கோகையின் வி-1390/23 வழக்கில் விளக்கமறியல் நீடிப்பு தொடர்பில் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

பிணைக்கு எதிராக விளக்கமறியல் நீடிப்பது தொடர்பாக சட்டப்பிரிவு 17 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.  

அரச சட்டத்தரணி  ஆறுமுகம் தனுசன் மற்றும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் பிணைக்கு எதிராக வாதிட்டு ஒரு வருட காலம் விளக்கமறியலை நீடிக்க கோரியிருந்தனர். இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் 9 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வழக்கு விசாரணை தொடர்பில் கவனம் செலுத்திய மேல் நீதிமன்று, அவர்களது விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது.  இதன்படி மன்று 1- 6 வரையான சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் நவம்பர் 01 திகதி வரை விளக்கமறியல் நீடித்து கட்டளை வழங்கியதுடன்,  7 ஆவது சந்தேக நபரான பிரதான சந்தேக நபருக்கு எதிர்வரும் பெப்ரவரி 25 வரை விளக்கமறியலை நீடித்து கட்டளை பிறப்பித்தது.

https://www.virakesari.lk/article/189385

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா (Vavuniya) தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டத்தரணி மனுதாக்கல் செய்ததையடுத்தே, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபர் சம்பவத்தின் பின்னர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கனடாவிற்கு அனுப்பி வைத்ததாகவும் பிணை வழங்கப்பட்ட பின்னர் அவரும் கனடாவிற்கு தப்பிச்செல்ல இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் 

அத்துடன், இன்னும் சில சந்தேகநபர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா செல்ல முயற்சித்த வவுனியா இரட்டை கொலை சந்தேகநபர்: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு | Court Order On Vavuniya Dual Murder Suspect

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரதேச மக்களை அச்சமுற செய்ததாக தெரிவித்த நீதிபதி, சந்தேகநபர்களை 30.01.2025 வரையான காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

https://tamilwin.com/article/court-order-on-vavuniya-dual-murder-suspect-1730594085#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.