Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரிக்ஸ்: அமெரிக்க டாலருக்கு போட்டியாக பொது நாணயமா? இந்தியா, சீனா நிலைப்பாடு என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரிக்ஸ் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரிக்ஸ் மாநாட்டை நடத்தும் தென்னாப்பிரிக்கா, நெல்சன் மண்டேலாவின் படத்துடன் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.

19 ஆகஸ்ட் 2023, 14:29 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி தென்னாப்பிரிக்காவின் ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேசவுள்ளனர். இச்சந்திப்பின் போது, பிரிக்ஸ் அமைப்பில் புதிய உறுப்பு நாடுகளைச் சேர்த்துக் கொள்வதா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

இந்த மாநாட்டை நடத்தும் தென்னாப்பிரிக்கா, பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராகச் சேர மேலும் 40 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது?

கோல்டுமேன் சாக்ஸ் என்ற முதலீட்டு வங்கியின் பொருளாதார நிபுணர் ஜிம் ஓ'நீல், கடந்த 2001-ல் பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெயர்களை உள்ளடக்கிய "பிஆர்ஐசி"(BRIC) என்ற சுருக்கத்தை உருவாக்கினார்.

அந்த நேரத்தில் நடுத்தர வருவாயைக் கொண்ட, அதே நேரம் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருந்த நாடுகள் தான் அவை. இந்த நாடுகள் வரும் 2050ம் ஆண்டு உலகிலேயே அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளாக மாறும் என்று அவர் கணித்தார்.

 
பிரிக்ஸ் குழு
 
படக்குறிப்பு,

பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

2006ம் ஆண்டு இந்த நான்கு நாடுகளும் இணைந்து 'பிரிக்' நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கின. அதில் 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவும் இணைந்து 'பிரிக்ஸ்' கூட்டமைப்பு என்ற பெயரை இந்த அமைப்பு பெற்றது.

பிரிக்ஸ் கூட்டமைப்பு எவ்வளவு முக்கியத்துவம் பெற்றது?

பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைந்து, 324 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ளன. அவர்களுடைய ஒட்டுமொத்த தேசிய வருவாய் 26 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது உலக பொருளாதாரத்தில் 26 சதவிகிதம் ஆகும்.

இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த அட்லாண்டிக் கவுன்சிலின் கருத்தின்படி, பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் சர்வதேச நாணய நிதியத்தில் 15 சதவிகித வாக்களிப்பு உரிமையை மட்டுமே கொண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

 
பிரிக்ஸ் குழு
 
படக்குறிப்பு,

உலக அளவிலான பொருளாதாரப் பங்களிப்பில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் பங்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் நோக்கம் என்ன?

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களை சீரமைக்கும் நோக்குடன் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

நியூ டெவலப்மென்டல் பேங்க் (New Development Bank) என்ற பெயரில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் ஒரு வங்கி கடந்த 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பிரிக்ஸ் நாடுகளின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், இந்த வங்கியில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் இல்லாத எகிப்தும், ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துகொண்டன.

பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் ஒருமித்த நாணயப் புழக்கத்தை உருவாக்குமா?

பிரேசிலில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ரஷ்ய தலைவர்கள் இணைந்து பிரிக்ஸ் கூட்டமைப்புக்காக தனிப்பட்ட நாணயத்தை உருவாக்க முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தைக் குறைக்கவும் இந்நாடுகள் முயற்சிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. சர்வதேச நிதி, பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகளில் டாலரின் செல்வாக்கு குறையும் போது உலக அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கமும் குறைந்துவிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இருப்பினும், தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள மாநாட்டில் இது பற்றிய விவாதம் இடம்பெறாது என ஆசியா மற்றும் பிரிக்ஸ் கூட்டமைப்புக்கான அந்நாட்டின் தூதர் அனில் சூக்லல் தெரிவித்துள்ளார்.

ஆனால், இது போல் பிரிக்ஸ் நாடுகளுக்கான பொது நாணயத்தை அறிமுகப்படுத்துவது கேலிக்குரியது என 'பிரிக்' என்ற கோட்பாட்டை உருவாக்கிய கோல்டுமேன் சாக்ஸ் வங்கியின் ஜிம் ஓ'நீல் இங்கிலாந்தின் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

 
பிரிக்ஸ் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பதால் சீனாவுடன் பிரேசில் நேரடியாக வர்த்தகத்தில் ஈடுபடமுடியும்.

பிரிக்ஸ் - ஒருமித்த கருத்து என்ன?

ஒவ்வொரு பிரிக்ஸ் நாடும் ஒரு மிகப்பெரிய நாடாகவே கருதப்படுகிறது என்கிறார் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியைச் சேர்ந்த பட்ரைக் கார்மோடி.

"இருப்பினும் அதில் மிகப்பெரிய நாடாக சீனா விளங்குகிறது," என்கிறார் அவர். "இதன் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பு உலகில் சக்திவாய்ந்த குரலாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்பது மட்டுமல்ல, உலக அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கருதுகிறது."

ஆனால் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா, சீனாவின் போட்டி நாடாக விளங்குகிறது. சீனாவுடன் மிக நீண்ட எல்லையை இந்தியா பகிர்ந்து கொண்டிருக்கையில் இரு தரப்புக்கும் இடையே நீண்ட கால பிரச்னைகள் இருக்கின்றன.

மேற்குலக நாடுகளுடனான உறவுகளைப் பேணும் விஷயத்திலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையே பல முரண்கள் நிலவுகின்றன.

"பிரிக்ஸ் கூட்டமைப்பை மேற்குலக நாடுகளுக்கு எதிரான நிலையில் பயன்படுத்த ரஷ்யா முயல்கிறது. அதன் மூலம் யுக்ரேன் நாட்டின் மீது போர் தொடுத்ததற்காக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை உடைத்தெறிய முயன்றுவருகிறது," என்கிறார் சாத்தம் ஹவுஸ் என்ற லண்டனைச் சேர்ந்த பொருளாதார அமைப்பின் இயக்குனர் க்ரியோன் பட்லர்.

 
பிரிக்ஸ் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ரஷ்யா தற்போது எண்ணெய் ஏற்றுமதி செய்துவருகிறது.

ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கு மேற்குலக நாடுகள் தடை விதித்ததால், இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவின் மிகப் பெரிய வாடிக்கையாளர்களாக மாறியுள்ளன.

2023ம் ஆண்டில் சீனா மற்றும் தென்னப்பிரிக்கா நாடுகளுடன் இணைந்து ரஷ்யா கடலில் போர் ஒத்திகை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளது.

இருப்பினும், பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகள், ரஷ்யாவின் இந்தப் போக்கை ஆதரிக்கவில்லை.

"தென்னாப்பிரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உலக நாடுகளுக்குள் பாகுபாடு ஏற்படுவதை விரும்பவில்லை," என்கிறார் பட்லர். "மேற்குலகை எதிர்ப்பது அந்த நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு எதிராக இருக்கும் என அவை கருதுகின்றன."

பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர எந்த நாடுகள் விரும்புகின்றன?

பிரிக்ஸ் மற்றும் ஆசியாவுக்கான தென்னாப்பிரிக்க தூதர் அனில் சூக்லல் அண்மையில் தெரிவித்த தகவலின் படி, 22 நாடுகள் பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், மேலும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதில், ஈரான், அர்ஜெண்டினா, கியூபா, கஜகஸ்தான், எதியோப்பியா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வெனிசூலா நாடுகளும் அடங்கும்.

"உலகின் அதிகாரத்தை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்த்துவதாகவே இந்நாடுகள் கருதுகின்றன. இதன் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் வலிமை அதிகரிக்கும் என்றும் கருதுகின்றன," என்கிறார் பேராசிரியர் கார்மோடி.

"ஆனால், பிரிக்ஸ் கூட்டமைப்பு குறிப்பிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஒரு குழுவாக இருக்கிறது," என்கிறார் அவர். மேலும், "புதிய உறுப்பினர்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உண்மையான நோக்கமும், பலமும் நீர்த்துப் போகும் வாய்ப்பு உள்ளது," என்றும் அவர் கூறுகிறார்.

"என்னுடைய கருத்து என்னவென்றால், சில நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு சேர்த்துக்கொள்ளலாம்," என்கிறார் பட்லர், "ஆனால் அவை, ஈரான் போன்ற பிரச்னைகளில் தத்தளிக்கும் நாடாக இல்லாமல், அர்ஜெண்டினா போன்ற நாடுகளாக இருக்கும்."

 
பிரிக்ஸ் குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

பிரிக்ஸ் கூட்டமைப்பில் சேர ஈரான் அரசும் விருப்பம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் மாநாட்டில் எதுபற்றி விவாதிக்கப்படும்?

2023 பிரிக்ஸ் உச்சிமாநாடு ஜொகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் யாரெல்லாம் சேரலாம் என்பது குறித்த விதிகளை வகுப்பது முக்கிய விவாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பருவநிலை மாற்றம், வர்த்தக விரிவாக்கம், முதலீட்டுக்கான வாய்ப்புகள், வளரும் நாடுகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்படலாம்.

இம்மாநாட்டில் பங்கேற்க ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் கரீபிய பிராந்தியங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தென்னாப்பிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் இந்த மாநாட்டில் பங்கேற்க மாட்டார். போர்க்குற்றங்கள் காரணமாக அவரைக் கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒரு பிடியாணை பிறப்பித்துள்ள நிலையில், அவர் தென்னப்பிரிக்காவுக்குப் பயணம் செய்ய மாட்டார் என தெரியவந்துள்ளது. மேலும், தன்மீதான போர்க் குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.

சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் நாடுகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா உள்ள நிலையில், அவர் அங்கு சென்றால் அது அரசியல் ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

இதனால், ரஷ்யாவில் இருந்துகொண்டே இணையம் மூலம் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதாக புதின் அறிவித்துள்ளார் என ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கீ லாவ்ரோவ் கூறியுள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c4nq54e3eqwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா விரைவில் உலகளாவிய வளர்ச்சி இயந்திரமாக மாறும் - பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் மோடி

23 AUG, 2023 | 01:17 PM
image
 

பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா) உச்சிமாநாட்டிற்காக தென்னாப்பிரிக்காவிற்கு தனது மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்த ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக எதிர்பார்க்கப்படும் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே சாத்தியமான சந்திப்பில் அனைவரின் பார்வையும் உள்ளது. செவ்வாயன்று, இரு தலைவர்களும் மற்ற பிரிக்ஸ் (BRICS) தலைவர்களுடன் தலைவர்கள் ஓய்வு இல்லத்தில் சந்தித்தனர்.

முன்னதாக மாலையில் நடந்த பிரிக்ஸ் வர்த்தக மன்ற தலைவர்களின் உரையாடலில் பேசிய மோடி, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு இந்திய மக்கள் உறுதி பூண்டுள்ளனர் என்று கூறினார். “இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க உங்கள் அனைவரையும் நான் அழைக்கிறேன்,” என்று மோடி கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய், மீள் மற்றும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலிகளின் முக்கியத்துவத்தை நமக்குக் கற்பித்துள்ளது. இதை அடைய பரஸ்பர நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் மிக முக்கியம். உலகளாவிய தெற்கின் நலனுக்காக நாம் கூட்டாகச் செயல்பட முடியும் மற்றும் அதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும்,” என்று மோடி கூறினார்.

இந்தியா விரைவில் 5 டிரில்லியன் அமெரிக்க டொலர்  பொருளாதாரமாக மாறும் என்று வலியுறுத்திய மோடி, வரும் ஆண்டுகளில் இந்தியா உலகின் வளர்ச்சி இயந்திரமாக மாறும் என்றும், தனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் “மிஷன்-மோட்” (மிக விரைவான செயல்பாடுகள்) சீர்திருத்தங்களால் எளிதாக வணிகம் செய்ய முடியும் என்றும் கூறினார்.

உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பு இந்தியாவில் இருப்பதாகவும், நாட்டில் 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் (ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மதிப்புள்ள தனியார் நிறுவனங்கள்) இருப்பதாகவும் மோடி கூட்டத்தில் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில் உள்ள வாட்டர் குளோஃப் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய மோடியை தென்னாப்பிரிக்காவின் துணை அதிபர் பால் மஷாடைல் வரவேற்றார். மோடிக்கு சம்பிரதாயபூர்வமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

”தென்னாப்பிரிக்காவிற்கு பிரதமரின் மூன்று நாள் பயணமானது, 15வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பது மற்றும் பிரிக்ஸ் மற்றும் அழைக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களுடன் பலதரப்பு மற்றும் இருதரப்பு அமைப்புகளில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும்” என்று வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, உச்சிமாநாட்டிற்குப் புறப்படும்போது, எதிர்கால ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காணவும், நிறுவன வளர்ச்சியை மறுபரிசீலனை செய்யவும் பிரிக்ஸ் உறுப்பினர்களுக்கு இந்த மாநாடு ஒரு பயனுள்ள வாய்ப்பை வழங்கும் என்று மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

”பிரிக்ஸ் பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை பின்பற்றி வருகிறது. வளர்ச்சித் தேவைகள் மற்றும் பலதரப்பு அமைப்பின் சீர்திருத்தங்கள் உட்பட, ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கின் கவலைக்குரிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிப்பதற்கும் ஆலோசிப்பதற்கும் பிரிக்ஸ் ஒரு தளமாக மாறியுள்ளது என்பதை நாங்கள் மதிக்கிறோம்,” என்று உச்சிமாநாட்டிற்கு புறப்படும்போது மோடி கூறினார்.

”இந்த உச்சிமாநாடு பிரிக்ஸ் அமைப்புக்கு எதிர்கால ஒத்துழைப்பின் பகுதிகளை அடையாளம் காணவும் நிறுவன வளர்ச்சியை மறுபரிசீலனை செய்யவும் ஒரு பயனுள்ள வாய்ப்பை வழங்கும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவும் நான் எதிர்நோக்குகிறேன்,” என்று மோடி கூறினார்.

“ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் செல்கிறேன். BRICS-Africa Outreach மற்றும் BRICS Plus உரையாடல் நிகழ்வுகளிலும் நான் பங்கேற்பேன். இந்த உச்சிமாநாடு உலகளாவிய தெற்கு மற்றும் வளர்ச்சியின் பிற பகுதிகளுக்கு கவலையளிக்கும் விஷயங்களை விவாதிக்க மேடையை வழங்கும்,” என்று மோடி ட்வீட் செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில், ஆகஸ்ட் 22 முதல் 24 வரை தென்னாப்பிரிக்காவுக்கு மோடி செல்கிறார். மூன்று வருட காணொலி வாயிலான சந்திப்புகளுக்குப் பிறகு இந்த முறை பிரிக்ஸ் உச்சிமாநாடு நேரடியாக நடைபெறுகிறது.

புதன்கிழமை, BRICS தலைவர்களின் உச்சிமாநாட்டின் முழுமையான அமர்வுகளில் மோடி பங்கேற்பார், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான பிரச்சினைகள், பல்தரப்பு அமைப்பின் சீர்திருத்தம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு மூடிய முழுமையான அமர்வு இருக்கும்.

வியாழன் அன்று, தென்னாப்பிரிக்காவால் அழைக்கப்பட்ட பிற நாடுகளை உள்ளடக்கிய உச்சிமாநாட்டிற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்படும் “பிரிக்ஸ் – ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் டயலாக்” என்ற சிறப்பு நிகழ்வில் மோடி பங்கேற்கிறார். இந்த அமர்வுகளின் போது, உலகளாவிய தெற்கின் கவலைகள் மற்றும் முன்னுரிமைகள் விவாதிக்கப்படும், அங்கு ஆப்பிரிக்காவுடன் கூட்டுறவில் கவனம் செலுத்தப்படும்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் மோடி ஏதென்ஸ் செல்கிறார். “40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு” என்று மோடி தனது புறப்பாடு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நமது இரு நாகரிகங்களுக்கிடையிலான தொடர்புகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு, நவீன காலத்தில், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளால் நமது உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன,” என்று மோடி கூறினார். 

வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் போன்ற பல்வேறு துறைகளில் இருக்கும் ஒத்துழைப்பு நமது இரு நாடுகளையும் நெருக்கமாக கொண்டு வருகிறது, என்று மோடி கூறினார். கிரீஸ் நாட்டுக்கு சென்று பன்முக உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை திறப்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறிய மோடி, அங்குள்ள இந்திய சமூகத்தினருடனும் தொடர்புகொள்வதாகவும் கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

https://www.virakesari.lk/article/162997

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு பின்னர் இன்னொரு புதிய அணி உருவாகுகின்றது.வாழ்த்துகள்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.

ஆசிய ஆபிரிக்க தென்னமெரிக்க  ஏழ்மை நாடுகள் முன்னேற வழிவகுக்கும்.சுரண்டல்கள் அடியோடு இல்லாமல் போகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோவியத் ஒன்றியத்தின் உடைவிற்கு பின்னர் இன்னொரு புதிய அணி உருவாகுகின்றது.வாழ்த்துகள்

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்.

ஆசிய ஆபிரிக்க தென்னமெரிக்க  ஏழ்மை நாடுகள் முன்னேற வழிவகுக்கும்.சுரண்டல்கள் அடியோடு இல்லாமல் போகும்.

 

எப்படி இதை எதிர்பார்க்கிறீர்கள் எனக் கொஞ்சம் விளக்குவீர்களா?

ரஷ்யாவில் பலகட்சி ஜனநாயகம் இல்லாத oligarch ஆட்சி.
இந்தியாவில் சிறுபான்மையினரை ஏறி மிதித்து ஆளும் வலது சாரி ஆட்சி.
தென்னாபிரிக்காவின் தலைவர்களே ஊழல் முதலைகள், மக்களுக்கு மின்சாரம் இல்லை!
சீனாவில் இணையத்தைக் கூடக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறார்கள். சீன அரசின் ஆதரவில் "சுரண்டல்" மூலம் நடத்தப்படும் sweatshops மூலம் தான் உலகிற்குத் தேவையான பல  பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.

பிரேசில் மட்டும் தான் கொஞ்சம் சுதந்திரமான ஒரு தேசமாக இருக்கிறது.


இப்படிப் பட்ட "எதிர்க்கீரைக்" கடையால் எப்படி உலகில் சுரண்டல் இல்லாமல் ஒழியும் என நினைக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் அம்பானிகளையும், அரை கஞ்சிக்கு வழியில்லாதவர்களையும் உருவாக்கிய சுந்தந்திர இந்தியா.

பணக்கார குடியிருப்புகளை, சுவர் எழுப்பி அருகில் இருக்கும் சேரிகளில் இருந்து பாதுகாக்கும் தென்னாபிரிக்கா.

எரிபொருள் உட்பட்ட நாட்டு வளங்களை எல்லாம் ஒலிகார்க் நண்பர்கள் கொள்ளை அடிக்க, உக்ரேனில் தாங்கிகளை டீசல் தீர்ந்து போய் அம்போ என விட்ட ரஸ்யா.

கம்யூனிசம் என்ற போர்வையில் மிக மோசமான சுரண்டல் முதலாளிதுவ பொருளாதாரத்தை கடைபிடிக்கும், ஆபிரிக்க நாடுகளில் வளம் சுரண்டும் சீனா.

இவை இணைந்து சுரண்டலை ஒழிக்குமாம்.

சுண்டலை கூட ஒழிக்க முடியாது.

2 hours ago, குமாரசாமி said:

சுரண்டல்கள் அடியோடு இல்லாமல் போகும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

டாலருக்கு போட்டியாக வந்த யூரோவே முக்கி முனகிக் கொண்டு நிக்குது.

இதுக்குள்ள இவங்கட கொமிடி வேற.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Justin said:

ரஷ்யாவில் பலகட்சி ஜனநாயகம் இல்லாத oligarch ஆட்சி.

ஜனநாயகம் உள்ள நாடுகளிலும் எண்ணைக்கொள்ளையர்  தான் அதிகம். உலகம் முழுவதும் எண்ணை தான் சகலதையும் தீர்மானிக்கின்றது

1 hour ago, Justin said:

இந்தியாவில் சிறுபான்மையினரை ஏறி மிதித்து ஆளும் வலது சாரி ஆட்சி.

இந்தியா ஆட்சி மாற்றங்கள் நடைபெறும் நாடு. அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தால் காட்சியும் மாறும்.

1 hour ago, Justin said:

தென்னாபிரிக்காவின் தலைவர்களே ஊழல் முதலைகள், மக்களுக்கு மின்சாரம் இல்லை!

ஊழல் மேற்குலகிலும் வியாபித்து இருக்கின்றது. மச்சான் பைடனும் லேசுப்பட்டவர் அல்ல

1 hour ago, Justin said:

சீனாவில் இணையத்தைக் கூடக் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறார்கள். சீன அரசின் ஆதரவில் "சுரண்டல்" மூலம் நடத்தப்படும் sweatshops மூலம் தான் உலகிற்குத் தேவையான பல  பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்.

சீனாவின் போக்கு சரியில்லையென்றால் ஏன் மேற்குலக சனநாயக நாடுகள் அங்கே தமது பொருட்களை  தயாரிக்கின்றார்கள்? ஏன் அவர்களிடமிருந்து பொருட்களை வாங்குகின்றார்கள்? ஜேர்மனிக்கு உள்ளி கூட அங்கை இருந்துதான் வரோணுமெண்டால் பாருங்கோவன் !!!

 

46 minutes ago, goshan_che said:

உலகில் அம்பானிகளையும், அரை கஞ்சிக்கு வழியில்லாதவர்களையும் உருவாக்கிய சுந்தந்திர இந்தியா.

உங்களுக்குத்தான் சமத்துவம், எல்லோரும் சரிசமமாக வாழ பிடிக்காதே......முதலாளி என்றால் சொர்க்க லோகம் என்பீர்கள் ....சனநாயகம் என்பீர்கள்.அவர்களின் கொள்ளைகள் சரி என்பீர்கள்

50 minutes ago, goshan_che said:

பணக்கார குடியிருப்புகளை, சுவர் எழுப்பி அருகில் இருக்கும் சேரிகளில் இருந்து பாதுகாக்கும் தென்னாபிரிக்கா.

உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் பணக்கார ஏரியா நடுத்தர ஏரியா வடிகட்டிய ஏரியா என உண்டு.

52 minutes ago, goshan_che said:

எரிபொருள் உட்பட்ட நாட்டு வளங்களை எல்லாம் ஒலிகார்க் நண்பர்கள் கொள்ளை அடிக்க, உக்ரேனில் தாங்கிகளை டீசல் தீர்ந்து போய் அம்போ என விட்ட ரஸ்யா.

ஓம் இப்ப ரஷ்யாவில எண்ணையே இல்லையாம்

53 minutes ago, goshan_che said:

கம்யூனிசம் என்ற போர்வையில் மிக மோசமான சுரண்டல் முதலாளிதுவ பொருளாதாரத்தை கடைபிடிக்கும், ஆபிரிக்க நாடுகளில் வளம் சுரண்டும் சீனா.

தமக்கு லாபம் இல்லாவிட்டால் யாருமே எந்தக்கரையிலும் கால் வைக்க மாட்டார்கள்.சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ய கதையெல்லாம்  தெரிஞ்சு கொண்டு இப்பிடி கதைக்கலாமோ? என்ன பழக்கம் இது?

14 minutes ago, ஈழப்பிரியன் said:

டாலருக்கு போட்டியாக வந்த யூரோவே முக்கி முனகிக் கொண்டு நிக்குது.

இதுக்குள்ள இவங்கட கொமிடி வேற.

கொடுப்புக்குள்ளை கூட சிரிக்கேலாத  பகிடிய சொல்லுறியள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:
28 minutes ago, ஈழப்பிரியன் said:

டாலருக்கு போட்டியாக வந்த யூரோவே முக்கி முனகிக் கொண்டு நிக்குது.

இதுக்குள்ள இவங்கட கொமிடி வேற.

கொடுப்புக்குள்ளை கூட சிரிக்கேலாத  பகிடிய சொல்லுறியள்

பெரிசு பெரிசு

நான் சொன்னது பொய்யா பெரிசு?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

ஜனநாயகம் உள்ள நாடுகளிலும் எண்ணைக்கொள்ளையர்  தான் அதிகம். உலகம் முழுவதும் எண்ணை தான் சகலதையும் தீர்மானிக்கின்றது

இந்தியா ஆட்சி மாற்றங்கள் நடைபெறும் நாடு. அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தால் காட்சியும் மாறும்.

ஊழல் மேற்குலகிலும் வியாபித்து இருக்கின்றது. மச்சான் பைடனும் லேசுப்பட்டவர் அல்ல

சீனாவின் போக்கு சரியில்லையென்றால் ஏன் மேற்குலக சனநாயக நாடுகள் அங்கே தமது பொருட்களை  தயாரிக்கின்றார்கள்? ஏன் அவர்களிடமிருந்து பொருட்களை வாங்குகின்றார்கள்? ஜேர்மனிக்கு உள்ளி கூட அங்கை இருந்துதான் வரோணுமெண்டால் பாருங்கோவன் !!!

 

 

உங்கள் (வழமையான) வாதப்படி, "எல்லோரும் கள்ளர் தான்"😂. இப்போது பொருளாதாரத்தில் தலைமை வகிக்கும் மேற்கும் சுரண்டல், ஊழல் தான், ப்றிக்ஸின் பெரும்பகுதி நாடுகளும் சுரண்டல், ஊழல் என்றால் சுரண்டல் எப்படி இல்லாமல் ஒழியும் என்கிறீர்கள்?

இது உங்களுடைய அடிப்படையான புரிதல் பிரச்சினையால் வந்த கருத்து என நினைக்கிறேன். பைடன் ஊழல்வாதி என்பது ட்ரம்ப் தரப்பு பொய்செய்தித்தளங்களின் கதையாடல், அதை வைத்துக் கொண்டு அமெரிக்காவே ஊழல் என்று புரிந்து கொள்வதும் இந்த அடிப்படைப் பிரச்சினையினால் வருகிறது, 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Justin said:

உங்கள் (வழமையான) வாதப்படி, "எல்லோரும் கள்ளர் தான்"😂. இப்போது பொருளாதாரத்தில் தலைமை வகிக்கும் மேற்கும் சுரண்டல், ஊழல் தான், ப்றிக்ஸின் பெரும்பகுதி நாடுகளும் சுரண்டல், ஊழல் என்றால் சுரண்டல் எப்படி இல்லாமல் ஒழியும் என்கிறீர்கள்?

இது உங்களுடைய அடிப்படையான புரிதல் பிரச்சினையால் வந்த கருத்து என நினைக்கிறேன். பைடன் ஊழல்வாதி என்பது ட்ரம்ப் தரப்பு பொய்செய்தித்தளங்களின் கதையாடல், அதை வைத்துக் கொண்டு அமெரிக்காவே ஊழல் என்று புரிந்து கொள்வதும் இந்த அடிப்படைப் பிரச்சினையினால் வருகிறது, 

நீங்கள் சொல்வது சரி.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

பெரிசு பெரிசு

நான் சொன்னது பொய்யா பெரிசு?

இங்கே பேசப்படும் விடயத்தைப் பொறுத்த வரையில் நீங்கள் சொல்வது சரி:

உலகின் வைப்பு நாணயமாக (reserve currency) யூரோ, அமெரிக்க டொலருக்குக் கீழே தான் இருக்கிறது. உலகின் வர்த்தகப் பரிமாற்றங்களில் 21% யூரோ மூலம் நடக்கிறது, ~60% அமெரிக்க டொலர் மூலம் நடக்கிறது என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. எனவே உலக வர்த்தகத்தில், யூரோ அமெரிக்க டொலருக்குக் கீழே தான்.

குமாரசாமி அவர்கள் பரிமாற்ற வீதத்தை (exchange rate) மட்டும் பார்த்தமையால் "உலகில் யூரோ அமெரிக்க டொலரை விட மேலே இருக்கிறது" என நினைத்துச் சிரிக்கிறார் என நினைக்கிறேன். இதை வைத்துப் பார்த்தால், பிரிட்டன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் தான் உலகில் சிறந்த நிலையில் இருக்கிறதெனச் சொல்ல வேண்டும். ஆனால், அப்படி இல்லை. உலக வர்த்தகத்தில் பிரிட்டன் பவுண்ட்ஸ் வெறும் 4.7% தான்!   

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Justin said:

இங்கே பேசப்படும் விடயத்தைப் பொறுத்த வரையில் நீங்கள் சொல்வது சரி:

உலகின் வைப்பு நாணயமாக (reserve currency) யூரோ, அமெரிக்க டொலருக்குக் கீழே தான் இருக்கிறது. உலகின் வர்த்தகப் பரிமாற்றங்களில் 21% யூரோ மூலம் நடக்கிறது, ~60% அமெரிக்க டொலர் மூலம் நடக்கிறது என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. எனவே உலக வர்த்தகத்தில், யூரோ அமெரிக்க டொலருக்குக் கீழே தான்.

குமாரசாமி அவர்கள் பரிமாற்ற வீதத்தை (exchange rate) மட்டும் பார்த்தமையால் "உலகில் யூரோ அமெரிக்க டொலரை விட மேலே இருக்கிறது" என நினைத்துச் சிரிக்கிறார் என நினைக்கிறேன். இதை வைத்துப் பார்த்தால், பிரிட்டன் ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் தான் உலகில் சிறந்த நிலையில் இருக்கிறதெனச் சொல்ல வேண்டும். ஆனால், அப்படி இல்லை. உலக வர்த்தகத்தில் பிரிட்டன் பவுண்ட்ஸ் வெறும் 4.7% தான்!   

தகவலுக்கு நன்றி ஜஸ்ரின்.

  • கருத்துக்கள உறவுகள்

சுரண்டல் மனிதனின் அடிப்படை குணங்களில் ஒன்று.

அதை எந்த அமைப்பு மாற்றமும் இல்லாதொழிக்காது.

இதை அறியாமல் அல்லது, அறிந்தும் அறியாதார் போல் நீங்கள் BRICS இன் எழுச்சியோடு சுரண்டல் ஒழிந்து விடும் என எழுதியதைதான் மேலே குறிப்பிட்டேன்.

எல்லா இடங்களிலும் ஏற்ற தாழ்வு, சுரண்டல் உண்டு - ஆனால் இந்த நாடுகளில் ஏற்றத்தாழ்வு, சுரண்டல் மேற்கில் இருப்பதை விட பல மடங்கு மோசம்.

இதை நீங்கள் ஏற்காவிடில் உங்களுக்கு உலக யதார்தத்தின் மீதான பிடி நழுவுகிறது என்பதே அர்த்தமாகும்.

இப்படி பட்ட நாடுகள் உலகின் தலைமையை ஏற்று - அதனால் சுரண்டல் ஒழியும் என்பது கற்பனாவாதம்.

 

 

1 hour ago, குமாரசாமி said:

ஜனநாயகம் உள்ள நாடுகளிலும் எண்ணைக்கொள்ளையர்  தான் அதிகம். உலகம் முழுவதும் எண்ணை தான் சகலதையும் தீர்மானிக்கின்றது

இந்தியா ஆட்சி மாற்றங்கள் நடைபெறும் நாடு. அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தால் காட்சியும் மாறும்.

ஊழல் மேற்குலகிலும் வியாபித்து இருக்கின்றது. மச்சான் பைடனும் லேசுப்பட்டவர் அல்ல

சீனாவின் போக்கு சரியில்லையென்றால் ஏன் மேற்குலக சனநாயக நாடுகள் அங்கே தமது பொருட்களை  தயாரிக்கின்றார்கள்? ஏன் அவர்களிடமிருந்து பொருட்களை வாங்குகின்றார்கள்? ஜேர்மனிக்கு உள்ளி கூட அங்கை இருந்துதான் வரோணுமெண்டால் பாருங்கோவன் !!!

 

உங்களுக்குத்தான் சமத்துவம், எல்லோரும் சரிசமமாக வாழ பிடிக்காதே......முதலாளி என்றால் சொர்க்க லோகம் என்பீர்கள் ....சனநாயகம் என்பீர்கள்.அவர்களின் கொள்ளைகள் சரி என்பீர்கள்

உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் பணக்கார ஏரியா நடுத்தர ஏரியா வடிகட்டிய ஏரியா என உண்டு.

ஓம் இப்ப ரஷ்யாவில எண்ணையே இல்லையாம்

தமக்கு லாபம் இல்லாவிட்டால் யாருமே எந்தக்கரையிலும் கால் வைக்க மாட்டார்கள்.சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்ய கதையெல்லாம்  தெரிஞ்சு கொண்டு இப்பிடி கதைக்கலாமோ? என்ன பழக்கம் இது?

கொடுப்புக்குள்ளை கூட சிரிக்கேலாத  பகிடிய சொல்லுறியள்

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

டாலருக்கு போட்டியாக வந்த யூரோவே முக்கி முனகிக் கொண்டு நிக்குது.

இதுக்குள்ள இவங்கட கொமிடி வேற.

உலகின் ரிசர்வ் கரன்சியாக டாலருக்கு (பெற்றோ-டாலருக்கு) ஆப்பு அடிக்கலாம் - ஆனால் அது தனியே BRICS ஆல் மட்டும் முடியாது.

பிரிக்ஸ்சில் இந்தியா, சீனா தத்தம் நாணயங்களைத்தான் முன் தள்ளுகிறன - இதுவரைக்கும்.

ஆனால் குறித்த ஒரு நாட்டின் நாணயமான டாலர் அன்றி, எந்த நாடும் கட்டுப்படுத்தாத ஒரு decentralised crypto currency இப்படி வர சாத்தியம் உண்டு.

அப்படி வரின் அது மேற்கு, BRICS உட்பட்ட G20 நாடுகளின் ஏகபோகத்தை ஓரளவு குறைக்கும்.

ஆனால் G20 நாடுகள் இதை வரவிடாமல் தடுக்க ஒன்றிணையும்.

XRP நாணயத்தின் மீதான அமெரிக்க அரசின் வழக்கு இந்த தடுக்கும் முயற்சியின் அங்கமே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்ஸ் விரிவாக்கம்: அமெரிக்க ஆதிக்கத்தை தகர்க்க இந்தியா, சீனா, ரஷ்யா வியூகமா?

பிரிக்ஸ் விரிவாக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சமந்தா கிரான்வில்லே
  • பதவி, பிபிசி ந்யூஸ், ஜோஹேனஸ்பர்க்
  • 25 ஆகஸ்ட் 2023

ஐந்து நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை இனி 11 ஆக இருக்கும். அர்ஜென்டினா, எகிப்து, இரான், எத்தியோப்பியா, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரியில் பிரிக்ஸ் உறுப்பினர் அந்தஸ்தை பெற உள்ளன.

இந்த விரிவாக்கம் 'வரலாற்றுச் சிறப்புமிக்கது' என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நாடுகளின் பொதுவான நலன்கள் எந்த அளவுக்கு விரிவடையும் என்பதுதான் கேள்வி.

"பிரிக்ஸ் விரிவாக்கம் உலகில் அமைதி மற்றும் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும்," என்று ஷி ஜின்பிங் ஜோஹேனஸ்பர்க்கில் உலகத் தலைவர்களிடம் கூறினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கின. பின்னர் தென்னாப்பிரிக்கா அதில் சேர்க்கப்பட்டது.

இந்த நாடுகள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான உலக முறைமைக்கு ஒரு மாற்றாக கருதப்படுகின்றன. உலக அமைப்பில் மேற்கத்திய நாடுகளின் மேலாதிக்கத்தை உடைக்க சீனா தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

யதார்த்தத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே பெரிதாக எதுவும் பொதுவாக இருப்பதாக தென்படவில்லை என்று லண்டனை தளமாகக் கொண்ட எஸ்ஓஏஎஸ் சைனா இன்ஸ்டிட்யூட்டின் இயக்குனர் ஸ்டீவ் சாங் கூறுகிறார்.

ஆனால், எல்லா நாடுகளும் ஒரே போன்ற பொதுவான எதிர்காலத்தைத் தேடுகின்றன. மேற்கத்திய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் உலகில் யாரும் வாழ விரும்பவில்லை என்று உறுப்பு நாடுகளுக்குக் காட்ட ஷி ஜின்பிங் முயற்சிக்கிறார்.

"சர்வாதிகார ஆட்சியாளர்கள் அந்தந்த நாடுகளில் பாதுகாப்பாக உணரும் ஒரு மாற்று உலகத்தை சீனா வழங்குகிறது," என்கிறார் பேராசிரியர் சாங்.

"இந்த நாடுகள் ஜனநாயக நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சக்திகளின் நிபந்தனைகளை ஏற்காமல், வளர்ச்சிக்கான மாற்று திசையை கண்டுபிடிக்க முடியும்." என்று அவர் குறிப்பிட்டார்.

 
பிரிக்ஸ் விரிவாக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய கூட்டுறவு

பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகளை வரவேற்பதில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமாபோஸாவின் மகிழ்ச்சி தெளிவாகத் தெரிந்தது.

"பிரிக்ஸ் அமைப்புடன் கூட்டுறவை உருவாக்கும் நாடுகளின் நலன்கள் முழுமையாக கவனித்துக்கொள்ளப்படும்," என்று அவர் குறிப்பிட்டார்.

”எதிர்காலத்தில் மேலும் பல நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக மாறும். முக்கிய உறுப்பு நாடுகள் இதற்கான அளவுகோல்களை முடிவு செய்யும். அதன் பிறகு புதிய உறுப்பினர்களுக்கு நுழைவு வழங்கப்படும்,” என்றார் அவர்.

ஆனால் இம்முறை எத்தனை நாடுகளை உறுப்பினர்களாக்க வேண்டும், இதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

இதில் புதிதாக 5 உறுப்பினர்கள் சேர்க்கப்பட இருப்பதாக முன்பு தகவல் வெளியானது. இதன் பின்னர் பிரிக்ஸ் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டது.

திடீர் முடிவு

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாஸ்யு லுலா டாசில்வா இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை.

இதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளுடனான உறவுகள் குறித்து அவர் மிகவும் கவனமாக இருக்கிறார்.

இதனுடன் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் விஷயத்திலும் அவருக்கு சொந்த விருப்பம் உள்ளது.

புதன்கிழமை அதிகாலையில் செய்தியாளர் சந்திப்பு நடக்க இருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவும் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தாமதமாக நடந்தது.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பாக கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடந்து வந்ததை இது உணர்த்தியது.

அதன்பிறகு ஆறாவது நாட்டை உறுப்பினராக்கும் முடிவு திடீரென்று எடுக்கப்பட்டது.

 
பிரிக்ஸ் விரிவாக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யாவின் நிலைப்பாடு

யுக்ரேனில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்படலாம் என்று அச்சம் காரணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வீடியோ இணைப்பு மூலம் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார்.

தனது உரையில் மேற்கத்திய நாடுகளை மீண்டும் குறிவைத்த அவர், அவர்களின் 'புதிய தாராளமயம்' வளரும் நாடுகளின் பாரம்பரிய மதிப்புகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.

"அதேநேரத்தில் எந்த நாடும் அல்லது பிராந்தியமும் ஆதிக்கத்திற்கு அடிபணியத் தேவையில்லாத இந்த ‘பல்முனை உலக முறைமைக்கும்’ அவை ஒரு சவாலாக உள்ளன,”என்று புதின் குறிப்பிட்டார்.

அவர் அமெரிக்காவை குறிவைத்துப்பேசினார் என்று சொல்லத் தேவையே இல்லை.

அமெரிக்கா அங்கு இல்லாத காரணத்தால் அந்த நாடு குறித்து பல சூழல்களில் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்காவின் பதில்

இருப்பினும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன், பிரிக்ஸ் விரிவாக்கத் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

பல முக்கியமான விஷயங்களில் பிரிக்ஸ் நாடுகளின் கருத்துகள் வெவ்வேறானவை என்றார் அவர்.

"இந்த நாடுகளின் கருத்துவேறுபாடுகள் காரணமாக அமெரிக்காவிற்கு எதிராக எந்த ஒரு புவிசார் அரசியல் போட்டியாளரும் உருவாகும் வாய்ப்பு தென்படவில்லை,” என்று அவர் கூறினார்,

அது சரி என்று நிரூபணமும் ஆகக்கூடும்.

புதிதாக சேர்க்கப்பட உள்ள ஆறு உறுப்பினர்களில் யாருமே அமெரிக்காவுக்கு எதிரானவர்களாகத் தெரியவில்லை என்று வாஷிங்டனில் உள்ள குயின்ஸி இன்ஸ்டிட்யூட்டின் குளோபல் சவுத் திட்டத்தின் இயக்குனர் சாரங் ஷிடோரே தெரிவித்தார்.

"இவை வெவ்வேறுவிதமான நாடுகள் என்ற செய்தி மிகவும் தெளிவாக உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவை எதுவும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகள் அல்ல. அதிகாரபூர்வ கூட்டணி பங்காளிகளும் அல்ல. இதில் இரண்டு அல்லது மூன்று நாடுகள் அமெரிக்காவை எதிர்க்கலாம். ஆனால் பரந்த அளவில் பார்த்தால், இது அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் குழு அல்ல,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

 
பிரிக்ஸ் விரிவாக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்கா எல்லா விதிகளையும் உருவாக்க முடியாது

இத்தனை அம்சங்கள் இருக்கும் போதிலும் பிரிக்ஸ் விரிவாக்கம் என்பது மாற்றத்தின் அறிகுறியாகும்.

"எல்லா விதிகளையும் அமெரிக்காதான் முடிவு செய்யும், எல்லா அமைப்புகளிலும் அதுதான் தலைமை வகிக்கும் என்ற உலகம் இப்போது இல்லை. இதில் எந்த வித சந்தேகமும் இல்லை,” என்று ஷிடோரே கூறினார்.

அமெரிக்காவின் இடத்திற்கு வேறு யாராவது வருவார்களா?

"உண்மை என்னவென்றால், புதிய உலக முறைமையில் ஒருவரை மாற்றுவதற்கு பதிலாக, அவருடன் இன்னொருவரை சேர்ப்பதற்கான தேடல்தான் நடக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பரம் கருத்துகளை மதிப்பதாகக் கூறுகின்றன. உண்மையில் இது ஒரு வகையான தூதாண்மை அணிசேரல். இதில் ஏதோ ஒன்று கொடுக்கப்படுகிறது, ஏதோ ஒன்று பெறப்படுகிறது.

புதினை கைது செய்யும் நிலைமை வரவில்லை. இன்றைய நவீன தொழில்நுட்பம் காரணமாக அவரால் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க முடிந்தது.

இருப்பினும் பிரிக்ஸ் மாநாட்டின் போது உறுப்பினர்களின் விரிவாக்கத்தில் சீனா வெற்றி பெற்றது. பொதுவான நாணயம் ஒரு முக்கிய விஷயமாக விவாதிக்கப்பட வேண்டும் என்ற தீவிர முயற்சியை பிரேசில் மேற்கொண்டது.

இந்தியா, அமெரிக்காவுடனான தனது உறவை சமநிலைப்படுத்துவதைக் காண முடிந்தது. மாநாட்டை சிறப்பாக நடத்தியதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

https://www.bbc.com/tamil/articles/c72583w0n9no

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.