Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இந்தின் இளம்பிறை 
--------------------------------
ஒரு உறவினர்களின்  திருமண விழா மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு இடத்தில் நடந்தது. இப்பொழுது சில பிள்ளைகள் வேறு தேசம் ஒன்று போய், அங்கு விழா வைப்பதையே விரும்புகின்றனர். திருமண விழா முடிந்து அடுத்த நாளும் நான் அந்த விழா நடந்த இடத்திற்கு போயிருந்தேன்.  அன்று அந்த இடம் மிகவும் பரிதாபமாக இருந்தது. ஆதலால், நான் அந்த இடத்தை இரண்டு படங்கள் எடுத்தேன், இன்று நானாவது எடுப்போமே என்று.
 
நேற்று ஒரு சோடி செருப்பு அங்கே காணாமல் போயுள்ளது, அதைக் கண்டால் எடுத்து வரவும் என்ற தகவலையும் கையோடு வைத்திருந்தேன்.    
 
கடலோர மணல் மேல் போட்டிருந்த மேடை இன்னமும் அங்கேயே இருந்தது. ஆனால் கடற்கரை வெள்ளை மணல் திட்டு திட்டாக மேடையெங்கும் ஏறி ஒழுங்கில்லாமல் பரவிக்கிடந்தது. மேடை மேலே கட்டியிருந்த முக்கால்வாசி அலங்காரத் துணிகள் விழுந்து  அங்கங்கே குவியலாகக் கிடந்தன. இன்னும் விழாமல் இருந்தவை இனிமேல் விழுவதற்காக கடல் காற்றில் பறந்து கொண்டிருந்தன. ஒரு கிரேக்கச் சிலையில் இருந்து அதன் கடைசி  உடுபுடவையும் காற்றில் பறக்கத் தயாராக இருப்பது போல.
  
நான் படமெடுக்கும் போது இரண்டு உல்லாசப் பயணிகள் அந்த மேடையின் ஓரத்தில் அமர்ந்து அருந்திக் கொண்டிருந்தனர். இதற்கு முந்தைய நாள், திருமண நாளன்று, மேடையில் இவர்கள் இருவரும் இருந்து அருந்திக் கொண்டிருக்கும் இடத்திற்கு கொஞ்சம் உள்ளே புரோகிதர் அமர்ந்திருந்தார். அவருக்கு முன் சிறிய நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. இந்த இரு பயணிகளின் இடத்தில் நான் அமர்ந்திருந்தேன்.
 
புரோகிதர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், அவர் இப்பொழுது மெக்ஸிக்கோவில் வசிப்பதாகவும் அங்கே சொல்லியிருந்தனர்.
 
புரோகிதர் ஒரு கையில் தேங்காயையும், இன்னொரு கையில் கல் ஒன்றையும் கொடுத்து, அந்தத் தேங்காயை சரியாக அவர் சைகை செய்யும் நேரத்தில் என்னை உடைக்கச் சொன்னார். தேங்காயை சரி வட்டப் பாதிகளாக உடைக்க வேண்டும் என்ற அழுத்தம் இலங்கை மீதான சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தம் போன்ற தவிர்க்க முடியாத ஒன்றாக இரண்டு மூன்று நாட்களாக என்னை தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 
 
புரோகிதர் கொடுத்த கல்லுக்கு நிகரான கல்லை நான் ஊரில் மயிலியதனைப் பக்கம் இருக்கும் மண்டபக்கிடங்கு பகுதியில் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். எல்லாப் பக்கமும் கூரான, எங்கே பிடிப்பது எங்கே அடிப்பது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத ஒரு மர்மக்கல் அது. மயிலியதனைக்கும், மெக்ஸிக்கோவிற்கும் 
'ம' வரிசையில் ஆரம்பிக்கின்றன என்ற ஒற்றுமையுடன், கல்லிலும் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது.
 
புழுக்கொடியலுக்கு தோதான சில்லுச் சில்லாக தேங்காய் சிதறப் போவது திண்ணம் என்று தெரிந்தது. முக்கிய பார்வையாளரான என் துணைவி மற்றும் இதர பார்வையாளர்களுக்கு மண்டபக்கிடங்கு கல் தான் என் கையில் இருக்கும் ஆயுதம் என்று தெரிந்திருக்கவும் வாய்ப்பில்லை. நடப்பவை நடந்த பின் முழுப்பழியையும் சுமக்க வேண்டியது தான். 
 
இயேசு பிறப்பதற்கு முன், அவர் பிறந்த தேசத்தில், ஆடுகள் மீது மனிதர்களின் பாவங்களும் பழிகளும் ஏற்றப்பட்டு, அவை பாலைவனத்திற்குள் துரத்தி விடப்பட்டன என்று சொல்கின்றனர். பின்னர் எல்லோருடைய பாவங்களையும் ஏற்க பாலன் இறங்கி மனிதனாக வந்தார். இன்று சனத்தொகை எக்கச்சக்கமாக எகிறி ஏறி விட்டதால், தேவபாலன் தனியாக எல்லாவற்றையும் சுமக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய் நிற்கின்றார். இந்த தேங்காய் உடைப்பதில் ஏதும் பிழை, பாவம் வந்தால் நானே தான் சுமக்கவேண்டும்   
 
ஓங்கி அடிக்கின்ற அந்தக் கணத்தில் தேங்காய் முழுதாக கையை விட்டுப் பறந்தது. அன்று புரோகிதரின் இடுப்பு எலும்பு தப்பியது ஒன்பதாவது அதிசயம். மயிரிழையில் தப்பினார். புரோகிதர் என்ன நடந்தது என்று கூட்டிப் பெருக்கி உணர்வதற்குள், நான் தேங்காயை பாய்ந்தெடுத்து சில்லுச் சில்லாக குத்தி தட்டில் போட்டுவிட்டேன். மிக அருமையாக தேங்காயை உடைத்ததற்காக எல்லோரையும் கை தட்டுமாறு புரோகிதர் சொன்னார். மறுபேச்சில்லாமல் கூட்டமும் தட்டியது, ஐயர் சொல்லிவிட்டாரே.
 
எல்லாம் முடிந்த பின், தனியாக இருந்த புரோகிதரிடம் மெதுவாகக் கேட்டேன்.
 
'குஜராத்தில் கல்யாண வீட்டில் தேங்காயை கல்லால் தான் குத்துவீர்களா?'
 
'குஜராத்தா, அது எங்கேயிருக்கின்றது?'
 
'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?'
 
'மெக்ஸிகன்.'
 
இங்கு ஏற்கனவே பல அர்த்தங்கள் ஏற்றப்பட்டு விட்ட ஒரு கனமான சொல் இது. அந்தச் சொல்லுக்கு இருக்கும் அர்த்தங்களை மீறி புதிதாக எதையும் சிந்திக்க முடியவில்லை. எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சமூகநீதிச் சட்டம் தமிழ்நாட்டில் இருப்பது தெரியும். ஆனால் பழைய அர்ச்சகர்கள்  கோயில் நடையைப் பூட்டுவதும், நீதிமன்றம் மீண்டும் திறப்பதும் என்று, அங்கே அதுவே இன்னும் ஒரு இழுபறியில் தான் போய்க் கொண்டிருக்கின்றது. இது இன்னுமொரு பரிமாணம்.  
 
'அப்ப இந்த மந்திரங்கள், சுவாஹா, ராதா, கிருஷ்ணா, பிரபஞ்சம்,....'
 
'நான் சில காலம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கூட்டத்தில் இருந்தேன்.'
 
'அ.....'
 
'இந்த மாதிரி சிலவற்றை அங்கே கேட்டிருக்கின்றேன். இப்ப எல்லாம் ஃபோனிலும் இருக்குது தானே. அப்படியே பார்த்து வாசிக்க வேண்டியது தான்.'
 
'ம்.....'
 
அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.
  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் நிறைய தகவல்கள் இருக்கும் போல. ஆர்வமுடன் பகிருங்கள்  வாசித்து பாராடட நாங்கள் இருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எந்தச் சோடி எந்தச் சோடியுடன் போய்கொண்டு இருக்குதோ யாரறிவார்......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அப்படியே தொலைந்து போனதாகச் சொன்ன சோடிச் செருப்பை தேடத் தொடங்கினேன்.

கிடைத்ததோ?

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய காலங்களில் நானும் அவதானித்த விடையம்....ரிக்ரொக்கில் அடிக்கடி தமிழ் பாடல்களை போட்டு விட்டு அதற்கு ஏற்ப ஆடுகிறார்கள் மற்றும் புது வானம் வாங்கியவர்களுக்கு வாகன பூசை கூட செய்து குடுக்கிறார்கள்.தமிழ் பக்கம் போன்றே இவர்களது பக்கமும் காணக் கூடியதாக இருக்கும்.🖐️கரிபீயனைச் சேர்ந்தவர்களா இல்லை அவுஸ்சை சேர்ந்தவர்களா என்று அறியும் ஆவல் இருந்தாலும் பார்ப்பதோடு வந்து விடுவேன்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

2022 இல் நானும் ஒரு திருமணத்துக்கு கன்கூன் மெச்சிக்கோவுக்கு போயிருந்தேன்.

இந்த வருட முடிவிலும் போக வேண்டிவரும்.

இன்னமும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை.

முதல் போனது வேத திருமணம்.

நடக்க இருப்பது இந்து திருமணம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

கிடைத்ததோ?

செருப்பு தொலைந்தால் தொலைந்தது தான்...........கன்கூன் கடற்கரை என்றாலும்.........🤣🤣

30 minutes ago, ஈழப்பிரியன் said:

2022 இல் நானும் ஒரு திருமணத்துக்கு கன்கூன் மெச்சிக்கோவுக்கு போயிருந்தேன்.

இந்த வருட முடிவிலும் போக வேண்டிவரும்.

இன்னமும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை.

முதல் போனது வேத திருமணம்.

நடக்க இருப்பது இந்து திருமணம்.

தேங்காய் உடைப்பதற்கு ஒரு கத்தியையும் கொண்டு போக மறந்து விடாதேங்கோ. இல்லாவிட்டால் கையில் ஒரு கல்லைத் தந்து, தேங்காயை இப்ப உடை என்று சொல்லிவிட போகிறார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

செருப்பு தொலைந்தால் தொலைந்தது தான்...........கன்கூன் கடற்கரை என்றாலும்.........🤣🤣

தேங்காய் உடைப்பதற்கு ஒரு கத்தியையும் கொண்டு போக மறந்து விடாதேங்கோ. இல்லாவிட்டால் கையில் ஒரு கல்லைத் தந்து, தேங்காயை இப்ப உடை என்று சொல்லிவிட போகிறார்கள்.

அண்மையில் எனது நெருங்கிய நண்பரும் அயலவரும் அவர்களது மைத்துனனின் இறுதிச் சடங்குக்காக சுவிஸ் போனார்கள்.

அங்கு இறுதிச் சடங்கை நடாத்த ஜேர்மனியில் இருந்து 

ஒரு இந்தியன் ஐயரும்

அவருடன் உதவிக்கு ஒரு பாகிஸ்தானியரும்

வந்து கிரியைகளை நடாத்தி முடித்ததாக கூறினார்.

2 hours ago, suvy said:

இப்ப எந்தச் சோடி எந்தச் சோடியுடன் போய்கொண்டு இருக்குதோ யாரறிவார்......!  😂

சோடி அளவாக இருந்தால் கொண்டுபோக வேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

காசிக்குப் போனாலும் கருமம் தொலையாதா ? தமிழ்நாட்டையோ ஈழத்தையோ விட்டுச் செல்லும்போது தருமத்தை மட்டும் எடுத்துச் செல்வதுதானே! ஏன் கருமத்தையும் எடுத்துச் செல்கிறார்கள் ? (நல்ல பண்பாடுகளைத் தருமம் என்றும், சடங்குகளைக் கருமம் என்றும் குறித்தேன்; சும்மா ஓசை நயத்திற்காகதான் - rhyming). ஐயரை ஜெர்மனிக்குக் கொண்டு சென்றதே அதிகப்படி. சுவிஸ்ஸில் ஐயர் இல்லாத குறைதீர்க்க ஜெர்மனியிருந்து கொண்டு செல்ல வேண்டுமா ? 

         நம்பிக்கை என்ற பெயரில் பிற்போக்குத்தனங்கள் அவ்விடங்களிலும் இல்லாமல் இல்லை. அனைத்துலகும்  தன்னம்பிக்கை இல்லாத மனிதர்களால் நீக்கமற நிறைந்ததுதானே!  போகிறவர்கள் வேறு தம் பங்கிற்குப் புதிதாகக் கொண்டு சென்றே ஆக வேண்டுமா ? இதில் மத வேறுபாடெல்லாம் கிடையாது. சமீபத்தில் அமெரிக்காவில் சில காலம் வசிக்கும் எனது மகள் ஒரு திருமண நிகழ்வுக்காகத் தேவலாயம் சென்ற கதையைச் சொன்னாள். ஒரு அமெரிக்கத் தோழியைத் தவிர, சென்றிருந்தோர் அனைவரும் தமிழர் -  பாதிரியார் உட்பட. இங்கே சில சமயம் தேவாலயங்களில் நடைபெறும் நாடகத்தனத்துடன் மணநிகழ்வைப் பாதிரியார் அங்கேயும் நடத்தியதை வேடிக்கையாகக் குறிப்பிட்டாள் - அதுவும் அரைகுறை ஆங்கிலத்தில். ஒரு பெண் கணவனுக்கு எத்துணைக் கட்டுப்பட்டவள் என்று பைபிளில் ஏதோ இடத்திலிருந்து எடுத்து இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் அவர் பிரசங்கம் செய்தது பிற்போக்குத்தனமாகவும் வேடிக்கையாகவும் இருந்ததை அவளுக்கே உரிய அங்கத நடையில் எழுதியிருந்தாள். பாதிரியார் சொன்ன வாசகங்களைத்தான் பிராமண ஐயரும் சொல்வார். அது வடமொழியில் என்பதால் நமக்குப் புரிவதில்லை. எல்லா மத நூல்களும் ஏதோ ஒரு வகையில் (நாசூக்காகவாவது) பெண்ணடிமைத்தனத்தைப் போதிப்பவைதாமே ! 

         ரசோதரன் அவர்களின் கதை/கட்டுரை ஏதேதோ சிந்தனைகளைத் தூண்டியதில் பகிர்ந்து விட்டேன். மிக விலகிச் சென்று விடுவேனோ என்ற பயம் ஏற்பட்டதும் நிறுத்தி விட்டேன்.

Edited by சுப.சோமசுந்தரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

ஆசான் அவர்களே, நானும் கிட்டத்தட்ட நீங்கள் சொல்லுவதையே சொல்ல முயன்றிருக்கின்றேன். அந்தப் புரோகிதர் அவரின் கைத்தொலைபேசியில் பார்த்து, வாசித்து, பொருள் சொன்னவை பலவும் தற்கால நடைமுறையில் இருந்து எங்கோ தள்ளியும், ஏற்றுக்கொள்ள முடியாதவையாகவுமே இருந்தன.
 
அநதப் புரோகிதர் மெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்தவர் என்று நான் என் உறவினர்களுக்கு சொன்னவுடன், அவர்கள் எல்லோரினதும் நாடிகள் அப்படியே தளர்ந்து போய்விட்டன. இது இன்னொரு பிரச்சனை.
 
பிற்குறிப்பு:
நான் இங்கு இணைந்து ஐந்து நாட்களே. ஆனால் உங்களையும், இங்கிருக்கும் பலரையும் பல வருடங்களாக தொடர்ந்து வாசித்து வருகின்றேன். உங்கள் எழுத்தினதும், ஆக்கங்களினதும் வாசகன் நான். இப்படியான ஒரு சந்தர்ப்பம் அமைந்தது நான் செய்த ஒரு பாக்கியமே. நன்றிகள் ஆசான்.
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் எனது நெருங்கிய நண்பரும் அயலவரும் அவர்களது மைத்துனனின் இறுதிச் சடங்குக்காக சுவிஸ் போனார்கள்.

அங்கு இறுதிச் சடங்கை நடாத்த ஜேர்மனியில் இருந்து 

ஒரு இந்தியன் ஐயரும்

அவருடன் உதவிக்கு ஒரு பாகிஸ்தானியரும்

வந்து கிரியைகளை நடாத்தி முடித்ததாக கூறினார்.

தலை சுத்துது அய்யா..பாகிஸ்தானி...அய்யரோ  ...அல்லாவோ

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2024 at 19:26, ரசோதரன் said:
 
'அப்ப நீங்கள் இந்தியர் இல்லையா?'
 
'மெக்ஸிகன்.'

கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்!

தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்!

தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂

🤣........

நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.