Jump to content

வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
வள்ளலார் சர்வதேச மையம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 10 ஏப்ரல் 2024
    புதுப்பிக்கப்பட்டது 30 ஏப்ரல் 2024

வள்ளலார் சர்வதேச ஆய்வு மையத்தின் கட்டுமானப் பணிகள் நிதுத்தி வைக்கப்பட்டுள்ளது என - தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

வள்ளலாரின் தத்துவமான பெருவெளி நிலத்துக்குள் எந்த கட்டுமானப் பணிகளும் நடைபெறக் கூடாது என அரசு மேற்கொண்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு இந்த வழக்கை விசாரித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "106 ஏக்கர் பெரு வெளி நிலத்தில் மூன்று ஏக்கரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நடைபெற்று வருகின்றன, அந்த இடம் தொல்லியல் முக்கியத்துவம் இடமாக உள்ளது, தொல்லியல் துறை நிபுணர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்களின் அறிக்கை கிடைத்த பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.

வள்ளலாரின் பாரம்பரியத்தை கௌவரவிக்கும் வகையில் தமிழக அரசால் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும் புதிய வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு ஏன்? வடலூரில் என்ன நடக்கிறது?

ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.42 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமானம் வள்ளலாரின் ‘பெருவெளி’ தத்துவத்துக்கு எதிராக இருப்பதாக கூறி வள்ளலாரை பின்பற்றுபவர்களும், வடலூர் பகுதியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வள்ளலாரை முன்னிறுத்தி கருத்தியல் மோதல்

வள்ளலார் எனப்படும் ஸ்ரீ ராமலிங்க அடிகளாருக்கு 175 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீதும் அவரது கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட மக்களால் 106 ஏக்கர் நிலம் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்டது. இந்த நிலம் சத்ய தர்ம சாலையின் ‘பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளலாரால் நிறுவப்பட்ட சத்ய ஞான சபையில் பௌர்ணமி மற்றும் தைபூசம் நாளன்று சமரச சன்மார்க சங்க இயக்கத்தைப் பின்பற்றும் ஆயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம். தைப்பூசம் நிகழ்வுக்கு 10 முதல் 15 லட்சம் பேர் கூடுவார்கள். பௌர்ணமி நாட்களில் ஒன்று முதல் இரண்டு லட்சம் பேர் வரை கூடுவார்கள்.

இது ஒரு கருத்தியல் மோதலாகவும் இருப்பதால் அரசியல் சர்ச்சையாகவும் மாறி வருகிறது. தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கும் நபர்களை பாஜக போன்ற அரசியல் அமைப்புகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிப்பதாக குற்றச்சாட்டும் எழுகின்றன.

சனாதன தர்மத்தை ஆதரித்தவர் வள்ளலார் என்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறிய போது, வள்ளலார் எவ்வாறு சாதியையும் சடங்குகளையும் எதிர்த்தார் என்று கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

பெருவெளியில் கட்டிடம் எழுப்புவது சத்ய தர்ம சாலையின் மாண்பை குறைக்கும் செயல் என்று கூறி, வள்ளலாரை பின்பற்றுபவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்துக்கு பாஜக, பாமக, தமிழ் தேசிய பேரியக்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பெருவெளியில் சன்மார்க்க நிகழ்வுகளை நடத்துவதற்கும் இத்திட்டம் இடையூறாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

வள்ளலார் யார்?

வள்ளலார் சர்வதேச மையம்

வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் 19ம் நூற்றாண்டின் தமிழ் சைவ ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாமல் அனைவருக்குமான பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை நம்பினார். அதேபோன்று, கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார்.

வெளியை வெறும் நிலப்பரப்பாக மட்டும் பார்க்காமல் ஞானத்தின் ஒரு பரந்த தொடர்ச்சியாக நம்பினார் வள்ளலார். அவரது கொள்கைகள் பக்தியின் ஸ்தூலமான வெளிப்பாடுகளுடன் முரண்படுவதை காணலாம்.

அவர் எழுதிய திருவருட்பா ஆறு பாகங்களாக உள்ளன. இவை திருமுறைகள் என்று அழைக்கப்படும். முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீக வாழ்க்கை குறித்து பேசிய வள்ளலார், தனது கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதப்பட்டதாக நம்பப்படும், ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். சடங்குகளையும் நம்பிக்கைகளை கடுமையாக சாடியிருந்தார்.

“கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடி போக” என்று எழுதியிருந்தார். 1927ம் ஆண்டு வெளி வந்த குடியரசின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை தந்தைப் பெரியார் பிரசுரித்திருந்தார்.

“வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர்,

வேத ஆகமத்தின் விளைவு அறியீர்”

என்று ஆறாவது திருமுறையில் கூறியுள்ளார்.

 

வள்ளலார் சர்வதேச மையத்துக்கு ஏன் எதிர்ப்பு ?

1867-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 80 காணி நிலம் (106 ஏக்கர்) நிலத்தை மக்கள் வள்ளலாருக்கு தானமாக கொடுத்தனர். அதில் அவர், சத்ய தர்ம சாலையை நிறுவினார். 1871-ம் ஆண்டு சத்ய ஞான சபையின் கட்டுமானம் தொடங்கி 1872-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகளாக திறந்த வெளியாக இருக்கும் இடத்தில், புதிய கட்டுமானம் எழுப்பப்படுவது தங்கள் தத்துவத்தை குலைக்கும் செயல் என்கிறார், வள்ளலார் பணியக கடலூர் மாவட்ட பொறுப்பாளர், முனைவர் சுப்ரமணிய சிவா.

“மக்கள் கொடுத்த 106 ஏக்கரின் நடுவே ஞான சபையை நடுவில் கட்டவில்லை வள்ளலார். உடம்பில் உள்ள தலையை குறிக்கும் வண்ணம் தென் திசை மூலையில் கட்டியிருந்தார். பூத வெளி, உயிர் வெளி, யோக வெளி என 40 வெளிகளை கொண்டது பெருவெளி. ஒளி, வெளி இரண்டுமே சன்மார்க்கத்தின் பிரிக்க முடியாத அமைப்பு. எனவே வெளி என்பது எங்களுக்கு வெறும் திடல் அல்ல. பெருவெளி என்பது தத்துவம். அதை குலைக்காதீர்கள்” என்று தெரிவித்தார்.

எப்படி கோயில்கள் அமைப்பதற்கு ஆகம விதிகள் உள்ளனவோ அது போன்ற விதிகள் இங்கும் உள்ளன என்று சுட்டிக்காட்டும் சுப்ரமணிய சிவா, “தில்லை நடராஜர் கோயிலில் அதன் பழமையை குலைக்கும் வகையில் தீட்சிதர்கள் கட்டிடத்தில் மாற்றங்கள் செய்கிறார்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. அதே இந்து சமய அறநிலையத்துறை எங்களது பெருவெளியை குலைக்கப் பார்க்கிறது.” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

 
வள்ளலார் சர்வதேச மையம்

நிலத்தை தானமாக வழங்கிய பார்வதிபுரம் மக்கள்

வடலூர் பார்வதிபுரத்தில் உள்ள மக்களின் முன்னோர்கள் சத்ய தர்ம சாலை அமைப்பதற்காக தங்கள் நிலத்தை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை எதிர்க்கும் அவர்கள், பெருவெளியில் தோண்டப்பட்ட குழிகளுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் வெளிப்படையாக நடத்தப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாடாக இருக்கிறது.

ஏப்ரல் 10ம் தேதி மீண்டும் அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ‘வேண்டுகோள் ஆர்ப்பாட்டம்’ நடத்தினர். இதில் பங்கேற்ற 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

வள்ளலார் சர்வதேச மையம்
 

‘அரசு வெளிப்படையாக இல்லை’

வள்ளலார் சர்வதேச மையம்

பட மூலாதாரம்,FACEBOOK

இந்து சமய அறநிலையத்துறை மக்களிடம் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்கிறார் தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், “முதலில் 12 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்றார்கள், பிறகு 3.8 ஏக்கர் நிலம் எடுப்போம் என்கிறார்கள். வள்ளலாரின் கொள்கைகளை உலகுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தை வரவேற்கிறோம். ஆனால் அரசின் முயற்சி அவரது கொள்கைகளுக்கே மாற்றாக இருந்தால், முன்னுரிமை கொள்கைக்கு தான், பிறகு தான் சர்வதேச மையம்” என்கிறார்.

“சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் அனுமதி இல்லாமல் ஏதாவது கட்டடம் கட்ட முடியுமா? விவேகானந்தர் பாறையில் புதிதாக எதையும் கட்ட முடியுமா?” என்று கேள்வி எழுப்பும் மணியரசன், இதுவும் மதத்தின் ஒரு பிரிவு, ஒரு தனிப்பட்ட வழிபாட்டு முறை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது, “வள்ளலார் சர்வதேச மையம் வள்ளலாரின் கொள்கைகள் அடிப்படையில் அமைய வேண்டும், திராவிட மாடல் அடிப்படையில் அல்ல” என்று குறிப்பிட்டிருந்தார்.

 

அரசு என்ன கூறுகிறது?

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வள்ளலார் சர்வதேச மையத்துக்கான அடிக்கல் நாட்டு நடைபெற்றது. இந்த விழாவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொலி வாயிலாக சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். வடலூரில் நேரில் இருந்து அடிக்கல் நாட்டிய வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், “பெருவெளி நிலமான 72 ஏக்கரில் 3.42 ஏக்கர் மட்டுமே சர்வதேச மையம் கட்டுவதற்கான பயன்படுத்தப்பட உள்ளது. ஆனால் இதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்குகின்றனர்” என்று பேசியிருந்தார்.

இத்திட்டத்துக்கான கருத்துக்கேட்புக் கூட்டங்கள் இரண்டு தடவை முறையாக நடத்தப்பட்டுள்ளன என்றும் அரசு தரப்பு கூறுகிறது.

வள்ளலார் சர்வதேச மையம்

சர்வதேச மையத்தின் கட்டுமான விவரங்களை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

வள்ளலார் சர்வதேச மையத்தின் கட்டுமானம் குறித்த தகவல்களை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் 24ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பாஜகவின் ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவை சேர்ந்த வினோத் ராகவேந்திரன், சத்ய ஞான சபை நிலத்தில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அருட்பெரும் ஜோதியை எட்டுகால் வாயில் திறப்பின் போது மக்கள் காண்பதற்காக வள்ளலார் பெருவெளியை விட்டுச் சென்றார் என்றும் எனவே அந்த இடத்தில் சர்வதேச மையம் கட்டக் கூடாது என்றும் தனது மனுவில் கூறியிருந்தார்.

தைப்பூசம் மற்றும் பௌர்ணமி நாட்களில் மக்கள் பெருவெளியில் கூடும் போது, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதாலேயே அங்கு சர்வதேச மையம் அமைக்க திட்டமிட்டது என தமிழக அரசு நீதிமன்றத்தில் கூறியது. அறங்காவலர்கள் கொண்ட குழு அமைக்காமல் சர்வதேச மையம் அமைப்பது இந்து சமய அறநிலைய சட்டம் 1959-ன் படி குற்றமாகும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சர்வதேச மையம் கட்டி முடிக்கப்பட்ட பின் அது சத்ய ஞான சபையிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது.

https://www.bbc.com/tamil/articles/cn0w7p9gnz4o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வள்ளலார் போற்றத்தக்கவர். போற்றப்பட வேண்டியவர்.
ஆனால் சர்வதேசமையத்தை அதே மாவட்டத்தில் வேறு இடத்தில் அரசு அமைக்கலாம்.

பிகு

ஒரு காலத்தில் யாழ்பாணத்தில் ஆறுமுக நாவலர் vs வள்ளலார் பாரிய தத்துவார்த்த மோதலாக அமைந்துள்ளது.

முற்போக்குவாதிகள் வள்ளலார் வழியிலும், பிற்போக்குவாதிகள் நாவலர் வழியிலும் நின்றுள்ளனர்.

ஆர்வம் இருப்போர் தேடிப்படிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது ஏன்? - பிபிசி கள ஆய்வு

வள்ளலார் சர்வதேச மையம்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஒருபுறம் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், மற்றொருபுறம் தொல்லியல் தடயங்கள் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது.

வள்ளலார் சர்வதேச மையத்தை அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் கட்டக் கூடாது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், சர்வதேச மையக் கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் "தொல்லியல் சுவர்கள்" கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடம், வடலூரில் சத்ய ஞான சபையை ஒட்டியுள்ள சுமார் 70 ஏக்கர் பரந்த நிலபரப்பு. இந்த இடத்தை வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர் ‘பெருவெளி’ என்றழைக்கின்றனர்.

வள்ளலார் விரும்பியபடி இந்த பெருவெளி காலியாக இருக்க வேண்டும், எந்த கட்டுமானமும் இருக்கக் கூடாது என்று கூறுகின்றனர்.

 

வள்ளலார் யார்?

வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார், தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாத பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை முன்வைக்கிறது. கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார் வள்ளலார்.

அவர் எழுதிய திருவருட்பாவில்,‌ முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீகம் குறித்து பேசிய வள்ளலார், தனது வாழ்நாளின் கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதியதான ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதச்சீர்திருத்தம் வேண்டிய வள்ளலாரின் கருத்துகளை ஆறாம் திருமுறையில் பார்க்கலாம்.

'வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர், வேத ஆகமத்தின் விளைவு அறியீர்' என்று வேத நம்பிக்கைகளை விமர்சித்துள்ளார் அவர்.

1927-ஆம் ஆண்டு வெளிவந்த 'குடியரசு' இதழின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை வெளியிட்டார் தந்தை பெரியார்.

பிபிசி

வள்ளலார் சர்வதேச மையம் எதற்காக?

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.18 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்தச் சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

“இவை வள்ளலார் கூறிய சமரச வேத தருமசாலையின் கிளைச்சாலைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. விவகார சாலை (தகவல் மையம்), உபகார சாலை (முதியோர் இல்லம்), சாத்திர சாலை (படிப்பகம்), விருத்தி சாலை (வளர்ச்சி மையம்) ஆகியவை சர்வதேச மையத்தில் கட்டப்படுகின்றன,” என்றார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி.

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 
வள்ளலார் சர்வதேச மையம்

பார்வதிபுரம் மக்கள் போராடுவது ஏன்?

இந்தச் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, அதை எதிர்த்து குழிக்குள் இறங்கி போராடியவர்கள் பார்வதிபுரத்தை சேர்ந்த மக்கள்.

சத்திய ஞான சபைக்குப் பின்புறம் உள்ள பகுதியே பார்வதிபுரம்.

வள்ளலார் தரும சாலை அமைப்பதற்காக, 1867-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்தை தானமாக கொடுத்தனர். தங்கள் முன்னோர்கள் கொடுத்த நிலம் வள்ளலார் விரும்பியது போல் பெருவெளியாக இருக்க வேண்டும், கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

சர்வதேச மையம் அமைப்பது குறித்து தங்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள். வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், இந்த இடத்தில் கட்ட வேண்டாம் என்று கூறுவதாகத் தெரிவித்தனர்.

 
வள்ளலார் சர்வதேச மையம்

‘பெருவெளி’ என்பது என்ன?

சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பெருவெளி என்பதை இருவேறு விதமாக பார்க்கிறார்கள். சத்திய ஞான சபையை சுற்றி இருக்கும் 70 ஏக்கர் நிலத்தை பெருவெளி என்று அழைக்கின்றனர் வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர். ஆனால், பெருவெளி என்பது எந்த குறிப்பிட்ட நிலமும் கிடையாது, அண்ட பெருவெளி தான் வள்ளலார் கூறியது என்கின்றனர் வேறு சிலர்.

வெளி என்பது இடம் அல்ல, தங்களுக்கான தத்துவம் என்கிறார் வள்ளலார் படிப்பக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப்ரமணிய சிவா.

“வள்ளலார் ‘ஓங்கார நிலை நின்றேன்’ என்ற பாடலில் 'நானும் இறைவனும் உறைந்த அனுபவம் தான் தோழி நிறைந்த பெருவெளியே' என்கிறார். அதாவது வள்ளலாரும் இறைவனும் கலந்த அனுபவத்தின் குறியீடு தான் பெருவெளி என்று வள்ளலாரே கூறியுள்ளார். பெருவெளிக்குள் தான் சத்ய ஞான சபை இருக்கிறது," என்றார்.

"சபையைச் சுற்றிதான் வள்ளலார் கூறும் வெளிகள் உள்ளன. திருக்கோயில்களில் எப்படி பிரகாரம் இருக்கிறதோ அதே போன்று சத்திய ஞான சபையை சுற்றி 30-க்கும் மேற்பட்ட வெளிகள் உள்ளன. அவை அருவுருவமாக உள்ளன. கண்ணுக்கு தெரியாததாலேயே அவை இல்லை என்றாகிவிடாது. அகவல், அருள்விளக்கமாலை, ஆறாம் திருமுறை என பல இடங்களில் வள்ளலார் இந்த பெருவெளியை குறிப்பிட்டுள்ளார்," என்றார்.

"இங்கு கட்டுமானம் மேற்கொள்வது, திருக்கோயிலில் உள்ள திருச்சுற்றை இடிப்பதற்கு சமமாகும்,” என்கிறார் அவர்.

 
வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு,முனைவர் சுப்ரமணிய சிவா

வடலூரில் உள்ள மூத்த சன்மார்கி முருகன், 153 ஆண்டுகளாக பெருவெளியாக இருக்கும் நிலத்தை அப்படியே காக்க வேண்டும் என்கிறார்.

“மக்கள் அந்தப் பெருவெளியில் நின்று ஒளிவழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான், பார்வதிபுரம் மக்களிடமிருந்து இந்த இடத்தை வாங்கினார் வள்ளலார். 153 ஆண்டுகளாக இது பெருவெளியாக தான் உள்ளது. இனியும் அப்படி தான் இருக்க வேண்டும்,” என்கிறார்.

வள்ளலார் குறித்த நூல்களை எழுதியிருக்கும் உமாபதி, “இந்த இடத்தில் கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. வெளி என்பதை எந்த இடத்துக்குள்ளும் சுருக்க முடியாது. வள்ளலார் கூறும் வெளி என்பது அண்டப் பெருவெளி. வள்ளலாரின் கூற்று படி அது கணக்கு வழக்கற்றது,” என்கிறார்.

இந்தத் தத்துவார்த்த மோதல் ஒரு புறம் இருக்க, வேறு சில காரணங்களுக்காகவும் இந்தச் சர்வதேச மையம் எதிர்க்கப்படுகிறது. தற்போது அமைந்திருக்கும் சத்திய ஞான சபை அனைவருக்கும் தங்கு தடையின்றி வந்து செல்லக் கூடிய இடமாக, ஆதரவற்றோர் இளைப்பாறக் கூடிய இடமாக உள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டால், அந்த இடம் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிடும் என்ற அச்சம் அப்பகுதியினருக்கு இருக்கிறது.

பார்வதிபுரத்தைச் சேர்ந்த சங்கீதா, “எனக்கு சிறு வயதிலிருந்தே வள்ளலாரைப் பிடிக்கும். எனக்கு ஊர், அருகில் உள்ள குறிஞ்சிபாடி. எனக்கு திருமணமாகி இங்கு வந்த போது, இனி தினம் தினம் வள்ளலாரை காணலாம் என்று மகிழ்ந்தேன். அனைவரும் சமம் என்று வள்ளலார் கூறியதால் அவரைப் பிடிக்கும். இந்த ஞான சபைக்கும் எங்கள் ஊருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எங்கள் ஊருக்கு ஒரு பெண் புதிதாக திருமணம் ஆகி வந்தால் முதலில் சபைக்கு கூட்டி சென்று வணங்கிய பிறகே ஊருக்குள் அழைத்து வரப்படுவார். அதே போன்று திருமணமாகி வெளியூர் சென்றாலும், சபையின் முன் சென்ற பிறகே செல்வார். இங்கு 2,000 வீடுகள் உள்ளன. நாங்கள் ஊருக்குள் வருவது, பள்ளிக்கு செல்வது, வேலைக்கு செல்வது எல்லாம் இந்த வழியாக தான். சர்வதேச மையம் அமைக்கும் போது எழுப்பப்படும் சுவர் எங்கள் பாதையைத் தடுக்கும்,” என்றார்.

 
வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு,சங்கீதா, பார்வதிபுரம்

அதே பகுதியில் இருக்கும் சாந்தி, “அந்த நிலம் நாங்கள் கொடுத்த நிலம், எங்கள் நிலம், அது அரசின் புறம்போக்கு நிலமல்ல. எங்கள் இடத்தை நாங்கள் வள்ளலாருக்கு தான் தர விரும்புகிறோம். சாலையில் போகிறவர்கள் ஞான சபையின் கோபுரத்தை பார்த்துவிட்டு வணங்கி செல்கின்றனர். புதிய கட்டுமானத்தால் அந்த கோபுரம் மறைந்து விடும்” என்கிறார்.

வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு,சாந்தி, பார்வதிபுரம்

குழிக்குள் இறங்கி போராடியதற்காக வழக்கு போடப்பட்டவர்களில் ஒருவரான மணிகண்டன், தங்கள் போராட்டம் திடீரென நடைபெறவில்லை என்கிறார். “ஆட்சியருக்கும், முதல்வருக்கும் மனு வழங்கினோம். எந்த பதிலும் இல்லை. அரசின் இந்த முனைப்பை பார்த்தால், வியாபார நோக்கத்துக்காக சர்வதேச மையத்தை அமைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. வசதி மிகுந்த பல சர்வதேச மையங்களை அரசு உருவாக்க முடியும். இது போன்ற பெருவெளியை அரசு நினைத்தால் உருவாக்க முடியுமா?" என்கிறார்.

"வள்ளலாருக்கு சொந்தமான 12.8 ஏக்கர் நிலம், நெய்வேலி சாலையில் காலியாக உள்ளது. இந்த பெருவெளியின் சுமார் 40 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்டெடுத்து சர்வதேச மையம் கட்டலாமே,” என்கிறார் மணிகண்டன்.

 
வள்ளலார் சர்வதேச மையம்
படக்குறிப்பு,மணிகண்டன், பார்வதிபுரம்

குழிக்குள் இருக்கும் தொல்லியல் படிமங்கள் என்ன?

சர்வதேச மையம் கட்டுவதற்காக அரசு தோண்டிய குழிகளில் தொல்லியல் படிமங்கள் சில கிடைத்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில் , “அங்கு கிடைத்துள்ள சுவர்களை ஆய்வு செய்ய வேண்டும். எனினும் அந்த இடத்தில் வீடுகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன, எனவே தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனினும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு முடிந்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடரும்,” என்றார்.

 

அரசு கூறுவது என்ன?

இந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “வள்ளலாரின் கருத்தியலுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்யவில்லை. வள்ளலார் தனது எழுத்துகளில் 30 இடங்களில் பெருவெளியை குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் இங்கு உள்ள 70 ஏக்கர் தான் பெருவெளி என்று வள்ளலார் குறிப்பிடவில்லை. அவர் கூறியது அண்ட பெருவெளி. ‘கணக்கு வழக்கு அற்றது’ பெருவெளி என்கிறார். பார்வதிபுரம் மக்கள் கொடுத்தது 80 காணி நிலம் என்பதற்கு சான்றுகள் எதுவும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை இந்த இடத்தை கையில் எடுக்கும் போது எவ்வளவு நிலம் இருந்ததோ, அது இப்போதும் இருக்கிறது, எதுவும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை,” என்றார்.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பிபிசி தமிழிடம் பேசுகையில், “வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாக பார்வதிபுரம் மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த பெருவெளியை தற்போது அவர்கள் முழுமையாக நினைத்தபடி எல்லாம் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச மையம் அமைக்கப்பட்டால் தங்களால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர். சர்வதேச மையம் அமைப்பதால் யாரும் அவர்கள் உள்ளே வர தடை செய்ய போவதில்லை. இந்த மையம் அமைவதால், பொருளாதார, கலாசார ரீதியில் அந்த மக்களுக்கு தான் பலனளிக்கும். அந்த இடத்தில் உள்ள தொல்லியல் படிமங்களை ஆய்வு செய்ய, நீதிமன்ற உத்தரவு படி, தொல்லியல் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

https://www.bbc.com/tamil/articles/cj7m9z142p0o

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.