Jump to content

காட்டுயிர் நிபுணர் ஜான்சிங் காலமானார் - அவரது பணியின் முக்கியத்துவம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஜான்சிங்

பட மூலாதாரம்,X/MKSTALIN

படக்குறிப்பு,ஏ.ஜே.டி. ஜான்சிங் கட்டுரை தகவல்
  • எழுதியவர், ‘ஓசை’ காளிதாஸ்
  • பதவி, சூழலியலாளர்
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய அளவில் காட்டுயிர்கள், காடுகள் பாதுகாப்பு தொடர்பாக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சூழலியலாளர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார்.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த ஜான்சிங், கல்லூரியில் விலங்கியல் பேராசிரியராகப் பணியைத் துவங்கி, பின் இந்தியக் காட்டுயிர் நிறுவனத்தின் முதன்மையராக (Dean, Wildlife Institute of India) பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரின் கீழ் பயின்ற நூற்றுக்கணக்கான இந்திய வனப்பணி அதிகாரிகள் தான் இன்று நாடு முழுவதிலும் வனத்துறையின் பல முக்கிய பதவிகளில் உள்ளனர்.

காடுகள், காட்டுயிர்கள் குறித்த ஆய்வுகள், பல மாநிலங்களின் வனத்துறையின் ஆலோசகர் என பலவகைகளில் ஜான்சிங், ஆசிய அளவிலான சூழலியல் தளத்தில் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்தார்.

உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்துவந்த அவர், இன்று (ஜூன் 7-ஆம் தேதி வெள்ளிக்கிழமை) தனது 78 வயதில் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

இவரது மறைவிற்கு நாடு முழுவதிலும் உள்ள பல சூழலியலாளர்கள் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகின்றனர்.

ஜான்சிங் மறைவு குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ‘‘தமிழ்நாடு இன்று ஒரு முன்னணி ஒளியை இழந்துள்ளது. டாக்டர் ஏ.ஜே.டி.ஜான்சிங் வனவிலங்கு பாதுகாப்பில் சிறந்து விளங்கியவர். அவரது பணிவு, இரக்கம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நம்மை வழிநடத்தும். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் இதயப்பூர்வமான அஞ்சலிகள் மற்றும் ஆழ்ந்த இரங்கல்கள்,’’ எனப்பதிவிட்டுள்ளார்.

நான் ஜான்சிங் உடன் பல காடுகளுக்கு பயணித்துள்ளேன், அவருடன் பல மணி நேரங்கள் கழித்துள்ளேன், அவர் பல அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துள்ளார்.

 
ஜான்சிங்

பட மூலாதாரம்,X/SUPRIYA SAHU IAS

படக்குறிப்பு,காட்டுயிர்களின் வாழ்வியல் குறித்த தேடலுக்காக, ஜான்சிங் இந்தியக்காடுகளில் பயணிக்காத பகுதிகளே இல்லை என்று சொல்லலாம்

‘உள்ளதை உள்ளபடியே சொல்பவர்’

இந்தியக்காடுகளில் அனைத்திலும் நடந்து திரிந்து, ஜான்சிங் வெளியிட்ட செந்நாய், ஆசிய யானைகள், இந்தியச் சிங்கங்கள், புலி உள்பட பல வனவிலங்குகள் தொடர்பான ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. இந்திய அரசு மேற்கொண்ட காடு, காட்டுயிர்கள் சார்ந்த பாதுகாப்புத் திட்டங்களில் இவரது ஆலோசனைகள் மிகவும் முக்கியமானவை.

காடுகளைக் காக்கப் பல ஆண்டுகளாக உழைத்த ஜான்சிங்கை பலரும் ‘இந்தியக்காடுகளின் அடையாளம்’ என்று அழைக்கின்றனர். அவருடன் வெறும் 100 அடி நடந்தாலே 50 புதிய தகவல்களை நமக்குக் கற்பிக்கும் ஆசிரியர் தான் ஜான்சிங்.

வனம், காட்டுயிர்கள் ஆகியவற்றை நோக்கி உங்களை எது ஈர்த்தது? என நான் அவரிடம் கேட்டபோது, ‘புகழ்பெற்ற சூழலியலாளர் ஜிம் கார்பெட் தனது ‘இன்ஸ்பிரேஷன்’,’ எனச்சொல்வார். ஜிம் கார்பெட் பார்த்து தான் வனங்கள் மீதான ஈர்ப்பு தனக்கு அதிகரித்தது என என்னிடம் பலமுறை கூறியுள்ளார்.

காட்டுயிர்களின் வாழ்வியல் குறித்த தேடலுக்காக, ஜான்சிங் இந்தியக்காடுகளில் பயணிக்காத பகுதிகளே இல்லை என்று சொல்லலாம். அனைத்து வகைக் காடுகளிலும் நடந்து, அங்குள்ள காட்டுயிர்களை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி, வனம் சார்ந்த பேரறிவைப் பெற்றார் அவர்.

இதுமட்டுமின்றி, வனவிலங்கு பாதுகாப்பு, காட்டில் களைச்செடி அகற்றம், காட்டுப்பன்றி போன்ற மனித – வனவிலங்கு மோதல் ஏற்படுத்தும் வனவிலங்குகளின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது போன்ற பல ஆலோசனைகளை அறிவியல் ரீதியில், நடைமுறையில் சாத்தியமான முறையில், ஆலோசனைகளாகப் பல மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளார்.

ஆலோசனை வழங்குவது மட்டுமின்றி, எங்கு பயணித்தாலும் அந்தக் காட்டிலுள்ள சூழல் குறித்தும், தவறுகள் குறித்தும் மிகவும் தைரியமாக அப்பகுதிக்குப் பொறுப்பான வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் சொல்லத்தங்கியதே இல்லை. மிக தைரியமாக உள்ளதை உள்ளபடியே சொல்லிவிடுவார்.

 
ஜான்சிங்

பட மூலாதாரம்,OSAI KALIDASAN/FACEBOOK

படக்குறிப்பு,‘ஓசை’ காளிதாஸ் - சூழலியலாளர், இந்தக் கட்டுரையின் ஆசிரியர்

மேற்குத்தொடர்ச்சி மலை மீது அதீத அன்பு

இந்தியாவில் முதன் முதலாக செந்நாய்கள் தொடர்பாக ஆய்வுக்கட்டுரை மற்றும் ஆசிய யானைகள் தொடர்பான விரிவான ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டவர் ஜான்சிங் தான்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் ஆசிய யானைகள் தொடர்பான ஆய்வுக்கட்டுரையைத் துவங்கிய அவர், அதன் தகவல்களை உலகளாவிய அளவில் அறியச் செய்தார். இந்தியக்காடுகள் முழுவதிலும் பயணித்திருந்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலை மீது தான் அதீத அன்பு கொண்டிருந்தார்.

காடு சார்ந்த கருத்தரங்குகள் அவரின்றி நடக்காது. வனம் சார்ந்து படிக்கும் மாணவர்கள், சூழலியலாளர்கள், ஆய்வாளர்களுக்கு ஜான்சிங் ஒரு ‘மினி’ பல்கலைக்கழகம்.

அவரது ஆய்வுக்கட்டுரைகள், ஆராய்ச்சிகள், வனம்-காட்டுயிர்கள் குறித்து அவர் தயாரித்த ஆவணங்கள் எல்லாம், வனத்துறை சார்ந்து அரசு எடுக்கும் முடிவுகளில் மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளன.

பல மாநிலங்களின் வனத்துறை ஆலோசகராக, இந்திய வன அமைச்சகத்தின் ஆலோசகராக, பல சூழலியல் அமைப்புகளின் வழிகாட்டியாக இருந்துள்ளார். ‘Sanctuary Asia’-வின் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றதுடன், இயற்கைக்கான உலகளாவிய நிதியம் – WWF அமைப்பின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

ஜான்சிங் நான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். தென்கிழக்கு ஆசிய காடுகளுக்குச் சென்ற பயணத்தின் அனுபவத்தை Field Days: A Naturalist’s Journey Through South and Southeast Asia என்ற புத்தகத்தையும், மேற்குத்தொடர்ச்சி மலைகள் குறித்து Walking The Western Ghats என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.

தென் ஆசிய காடுகளில் இருக்கும் பாலூட்டிகள் தொடர்பாக Mammals of South Asia என்ற புத்தகத்தையும், சூழலியலாளர் ஜிம்கார்பட் தொடர்பாக On Jim Corbett’s Trial and other Tales from Tree-tops என மொத்தமாக நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார்.

தனது வாழ்நாள் முழுதும் காடுகள், காட்டுயிர்கள் என வாழ்ந்த ஜான்சிங்கின் மரணம் ஒரு பேரிழப்பு.

(இந்தக் கட்டுரையிலிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளருடையவை. பிபிசி தமிழ் அவற்றுக்குப் பொறுப்பேற்காது.)

https://www.bbc.com/tamil/articles/cd11rl2068yo

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.