Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பூவரசம் வேர்
--------------------
எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன். பூவரசங்குழை வீட்டிலும், வெளியிலும் தாராளமாகக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் ஆடுகள் அறிவுள்ளவையாக இருந்தன. பூவரசம் குழை குப்பைக்குள் மட்டுமே போய்க் கொண்டிருந்தது.
 
பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீரென்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தது. அதில்  இருந்த மஞ்சள் பூ கண்ணுக்கு தெரிந்தது. பச்சை இலைகள் எப்போதும் பசுமையாக இருந்ததும் தெரிந்தது. பூவரசம் மரங்கள், எவரும் அவைகளைக் கவனிக்காமல் இருந்தாலும் கூட, ஒரு கவலையும் இல்லாமல் எப்போதும் செழிப்பாகவே இருந்தன.
 
சமூக ஊடகங்கள் மிகப் பிந்தியே எனக்கு அறிமுகமானது. அதுவும் ஒரே ஒரு ஊடகம் மட்டுமே. ஆனால் ஒரே ஒரு சமூக ஊடகமே ஒரு மனிதனுக்கு ஒரு வாழ்நாளில் போதும். மேலும் ஒருவர் எவ்வளவு தான் பிந்திச் சேர்ந்தாலும், சுழற்சி முறையில் வந்து கொண்டிருக்கும் பதிவுகளால், பிந்திச் சேர்ந்தவரும் முந்திச் சேர்ந்தவர்கள் போலவே சமூக ஊடகங்களில் ஒரு பூரண நிலையை மிக விரைவில் அடைந்தும் விடுகின்றார்.
 
பூவரசின் பயன்கள் என்ன என்னவென்று கும்பமுனி சித்தர் எழுதிய பாடல் ஒன்று சமூக ஊடகம் ஒன்றில் வந்தது. அகத்திய முனிவரைத் தான் கும்பமுனி என்றும் சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால் பூவரசு ஒரு ஆயுர்வேத மருந்தகம் என்று அந்தப் பாடல் சொல்கின்றது. பூவரசின் பச்சை இலை, பழுத்த இலை, பட்டை, வேர், பூ, விதை இவை எல்லாமே மருந்து என்றும், அவை என்ன என்ன நோய்களைக் குணப்படுத்தும் என்ற விளக்கங்களும் அதில் இருந்தது.
 
எல்லாமே மருந்து, எல்லாமே நோய் என்கின்ற மாதிரித்தான் சமூக ஊடகங்களில் பதிவுகளும், காணொளிகளும் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு நண்பன் நான் அவன் வீட்டிற்கு போய் இருந்த பொழுது வாழைப்பூ வடை சுட்டுக் கொடுத்திருந்தான். முப்பது வருடங்களுக்கும் மேலாக நாங்கள் ஒருவரை ஒருவர் கண்டிருக்கவில்லை. நான் அவனிடம் போயிருந்த போது அவனுக்கு நீரிழிவு உச்சத்தில் இருந்தது. அவன் இப்போது இல்லை. இந்த விடயத்தில் முறையான ஆலோசனைகளை தகுதியானவர்களிடம் இருந்து பெறுவதே சரியான வழியாக இருக்கும்.   
 
ஊருக்கு போய் வரும் போது, ஒவ்வொரு தடவையும், சில பொருட்களை கட்டாயம் வாங்கி வருவது ஒரு வழக்கம். சுளகு, இடியப்ப தட்டுகள், இடியப்ப உரல் போன்றவை. நல்ல ஒரு இடியப்ப உரல் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க, அங்கே ஊரிலேயே ஒரு கடையில் பல இடியப்ப உரல்கள் நீட்டாகத் கட்டித் தொங்க விட்டிருப்பது தெரிந்தது. ஆட்டோவில் எங்கேயோ போய்க் கொண்டிருந்த நாங்கள் அந்தக் கடையடியில் ஆட்டோவை நிற்பாட்டச் சொன்னோம். ஆட்டோக்காரர் மிகவும் தெரிந்தவர், உறவினர் கூட.
 
எங்களுடன் இறங்கி வந்த ஆட்டோக்காரர் நாங்கள் உரல் வாங்குவதை தடுத்துவிட்டார். இந்த உரல்கள் சரியில்லை வேறு ஒரு இடத்தில் நல்ல உரல்கள் விற்கின்றார்கள், அங்கே கூட்டிக் கொண்டு போகின்றேன் என்றார். வீட்டில் இடியப்பம் எப்போதும் நல்லாவே தான் வந்து கொண்டிருந்ததது. இன்னும் நல்ல உரலில் இன்னும் நல்லா இடியப்பம் வரும் போல என்று நினைத்தேன். 
 
நல்ல உரல் விற்கிற அந்தக் கடை அயல் கிராமத்தில் இருந்தது, ஆனால் நாங்கள் போன அன்று பூட்டி இருந்தது. பக்கத்தில் இருந்த வீட்டில் கேட்டோம்.  இப்ப சில நாட்களாகவே பூட்டியிருக்குது என்றார்கள். திரும்பி வரும் போது ஆட்டோக்காரர் நல்ல இடியப்ப உரல் என்ன மரத்தில் செய்வார்கள் என்று எனக்குத் தெரியுமா என்று கேட்டார். எனக்கு உண்மையில் தெரியாது, ஆனால் வேம்பாக இருக்குமோ என்று அவரைக் கேட்டேன். 'பூவரசம் வேர்' என்ற பதில் அவரிடமிருந்து வந்தது.
 
இதைக் கும்பமுனி கூட அவரின் பூவரச மரம் பற்றிய பாடலில் சொல்ல மறந்துவிட்டார். அடுத்த முறை ஊருக்கு போகும் போது பூவரசம் வேரில் செய்த ஒரு இடியப்ப உரல் வாங்கியே தீரவேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் 4000ரூபா வரை போனது பூவரசம் தடியில் செய்த இடியப்ப உரல்.
பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டுகள் வாங்கிவிடாதீர்கள், பனை நார்/பிரப்பந்தடியில் செய்த இடியப்பத்தட்டுகள் வாங்குங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

முன்னர் 4000ரூபா வரை போனது பூவரசம் தடியில் செய்த இடியப்ப உரல்.
பிளாஸ்ரிக் இடியப்பத்தட்டுகள் வாங்கிவிடாதீர்கள், பனை நார்/பிரப்பந்தடியில் செய்த இடியப்பத்தட்டுகள் வாங்குங்கோ.

மிக்க நன்றி ஏராளன்.

பிளாஸ்டிக்கால் புற்றுநோய் வருகுது என்று சொன்ன பின், யார் சொன்னார்கள் என்று நான் தேடிப் பார்க்கவில்லை, இங்கு பல விதமானவற்றால் செய்த பல பொருட்கள் வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நான்ஸ்டிக் பாத்திரங்களும் புற்றுநோயை உண்டாக்கும் என்ற செய்தி வந்து அவையும் பின்னுக்கு போய்விட்டன. எவர் சில்வர் பாத்திரங்கள் பற்றி இன்னமும் செய்தி எதுவும் வெளியில் வரவில்லை என்று நினைக்கின்றேன்.

முடிந்தளவிற்கு மரம், நார், ஓலை போன்றவற்றால் செய்த பொருட்களை பாவித்தால், இவர்களின் ஆராய்ச்சிகளை நாங்கள் ஆராயத் தேவையில்லை............👍.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

எனக்குத் தெரிந்து பூவரசு மரத்திற்கு ஒரே ஒரு பயன் தான் அன்று இருந்தது. இலையைப் பிடுங்கி, நுனியைக் கிள்ளி விட்டு, அதைச் சுருட்டி, பீப்பீ செய்து ஊதுவது தான் எனக்குத் தெரிந்திருந்த அந்த ஒரு பயன். ஆட்டுக்கு போதிய குழை இல்லாத நாட்களில், கிடைக்கும் சில முள்முருங்கை, கிளிசரியா குழைக்குள் நடுவில் பூவரசம் குழையை வைத்து ஆடுகளைப் பேய்க்காட்ட சில தடவைகள் முயன்றிருக்கின்றேன்.

 

எங்கள் வீட்டிலும் சுற்றிவர பூவரசு முருங்கை கிளுவை கிளிசறியா இப்படி பல மரங்கள் வீட்டு எல்லையாக இருந்தது.

ஆடு மாடுகளுக்கு குழை.பாடசாலை போகும் போது சாப்பாடு கட்ட பெரிய மூன்று இலை காணும்.

அப்பாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் எம்மை பதம் பார்த்ததும் இதே பூவரசு தான்.

அத்தோடு இடியப்ப உரல் செய்யவென்று பெரிய கொழுத்த பூவரசுகளை விட்டி எடுப்பார்கள்.

இப்ப என்ன கொடுமை என்றால் வீட்டுக்கு வீடு மதில்களைக் கட்டி அழகு பார்க்கிறார்கள்.

1 hour ago, ரசோதரன் said:

பின்னர் ராதிகா 'பூவரசம் பூ பூத்தாச்சு.................' என்று அறிமுகமானார். பூவரசு திடீரென்று கொஞ்சம் அழகாகத் தெரிந்தது

இந்தப் பாட்டு வரமுதலே பூவரசு எம்முடன் வாழத் தொடங்கிவிட்டது.

இல்லை இல்லை பூவரசுடன் நாம் வாழத் தொடங்கிவிட்டோம்.

1 hour ago, ஏராளன் said:

பனை நார்/பிரப்பந்தடியில் செய்த இடியப்பத்தட்டுகள் வாங்குங்கோ.

இதில் இடியப்பம் அவித்தால் நன்றாக உலர வைக்க வேண்டும்.இல்லாவிட்டால் வெகுவிரைவிலேயே சக்குப் பிடித்துவிடும்.

எங்க வீட்டில் அவசரஅவசரமாக எங்கோ புறப்பட்ட போது இப்படி நடந்து அத்தனையும் எறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

ஊருக்கு போய் வரும் போது, ஒவ்வொரு தடவையும், சில பொருட்களை கட்டாயம் வாங்கி வருவது ஒரு வழக்கம். சுளகு, இடியப்ப தட்டுகள், இடியப்ப உரல் போன்றவை. நல்ல ஒரு இடியப்ப உரல் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்க, அங்கே ஊரிலேயே ஒரு கடையில் பல இடியப்ப உரல்கள் நீட்டாகத் கட்டித் தொங்க விட்டிருப்பது தெரிந்தது.

நினைச்சது சரிதான். சமையல் ஐயாதான் என்பது மேலும் உறுதியாயிற்று.

பூவரசும் தேக்கு மாதிரி உறுதியானதுதான். தளபாடம் செய்யப் பயன்படுத்துவார்கள்.

அடுத்தமுறை ஊருக்குப் போய் பூவரசம் வேரில் செய்த இடியப்ப உரல் வாங்கி வந்து இடியப்பம் அவிச்சு எப்படி  இருந்தது  என்று சொல்லுங்கள். ஒன்றும் அவசரம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

 

அப்பாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் எம்மை பதம் பார்த்ததும் இதே பூவரசு தான்.

நீங்கள் சொன்னவுடன் வீட்டில் பூவரசம் தடி ஒன்று மேலே செருகப்பட்டிருப்பது ஞாபகத்தில் வருகின்றது.

நினைத்தே பார்க்க முடியாத கால மாற்றம் ஒன்று........... இப்பொழுது பிள்ளைகளுக்கு அடிப்பதற்காக தடியோ அல்லது பிரம்போ வைத்திருப்பதை நினைக்கவே மனம் மறுக்கின்றது........... 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா கு.க .எழுத்தாளரே...ஊரில் பூவரச மரத்தின்..முக்கியமான..தேவை ஒன்று இருந்ததையும் மறந்து விட்டீர்கள்  தெரிகிறது...யாராவது மோசம்போனால் (ஏரிப்பவர்களானால்)  முதலில் தேடுவது..நல்ல பச்சை பூவரசைத்தான்...அதுதான்  பூவுடலின்மேல் ...குறுக்காக வைக்கப்படும் நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்கப்படும்... அதாவது ..இறுதிவாரை நம்முடன் வந்து சேருவார்...இந்த நெஞ்சாங்கட்டை சரியில்லை எனில்..அவர் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவாராம் என்பது கதை....அதைவிட இன்னுமொன்றும் இருக்கு..கோவில் தேவைகளுக்கு பாவிக்கும் சகடைகளுக்கு...பெரிய பூவரசுகள் ..அச்சுலக்கை ஆகவும் பாவிக்கப் படும்...சாரு  இது நம்ம ஏரியாக் கதை இது..

2 hours ago, ரசோதரன் said:

நீங்கள் சொன்னவுடன் வீட்டில் பூவரசம் தடி ஒன்று மேலே செருகப்பட்டிருப்பது ஞாபகத்தில் வருகின்றது.

நினைத்தே பார்க்க முடியாத கால மாற்றம் ஒன்று........... இப்பொழுது பிள்ளைகளுக்கு அடிப்பதற்காக தடியோ அல்லது பிரம்போ வைத்திருப்பதை நினைக்கவே மனம் மறுக்கின்றது........... 

பட்டென்று புடுங்கி..பச்சையாய் தாற அடி ..இன்னும் சுவையாய் இருக்கும் ... எனக்கு நிறைய அனுபவம்

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டுவண்டிலின் இரு மாடுகளும் கட்டுமிடமான நுகம் பூவரசிலேயே செய்வதாக எண்ணுகிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

5 minutes ago, ஈழப்பிரியன் said:

மாட்டுவண்டிலின் இரு மாடுகளும் கட்டுமிடமான நுகம் பூவரசிலேயே செய்வதாக எண்ணுகிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.

நுகம் மஞ்சவுண்ணாவிலும் செய்வார்கள் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரசோதரன் said:

நீங்கள் சொன்னவுடன் வீட்டில் பூவரசம் தடி ஒன்று மேலே செருகப்பட்டிருப்பது ஞாபகத்தில் வருகின்றது.

பூவரசம் தடி எல்லாம் செருகி வைச்சிருக்கதேவையில்லை. துவரம் கேட்டி தான் செருகி வைச்சிருக்க வேணும். பூவரசம் கேட்டி  ஊரிலையெல்லாம் நினைச்ச நேரத்தில நினைச்ச இடத்திலை புடுங்கி வெளுக்கலாம்.பச்சை மட்டைய விட  விசேசமானது

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

மாட்டுவண்டிலின் இரு மாடுகளும் கட்டுமிடமான நுகம் பூவரசிலேயே செய்வதாக எண்ணுகிறேன்.

 

 

இதை நான் ஆமோதிக்கின்றேன்..

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

அய்யா கு.க .எழுத்தாளரே...ஊரில் பூவரச மரத்தின்..முக்கியமான..தேவை ஒன்று இருந்ததையும் மறந்து விட்டீர்கள்  தெரிகிறது...யாராவது மோசம்போனால் (ஏரிப்பவர்களானால்)  முதலில் தேடுவது..நல்ல பச்சை பூவரசைத்தான்...அதுதான்  பூவுடலின்மேல் ...குறுக்காக வைக்கப்படும் நெஞ்சாங்கட்டையாகப் பாவிக்கப்படும்... அதாவது ..இறுதிவாரை நம்முடன் வந்து சேருவார்...இந்த நெஞ்சாங்கட்டை சரியில்லை எனில்..அவர் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவாராம் என்பது கதை....அதைவிட இன்னுமொன்றும் இருக்கு..கோவில் தேவைகளுக்கு பாவிக்கும் சகடைகளுக்கு...பெரிய பூவரசுகள் ..அச்சுலக்கை ஆகவும் பாவிக்கப் படும்...சாரு  இது நம்ம ஏரியாக் கதை இது..

👍.....

இவை எல்லாமே எனக்கு புதிய தகவல்கள், அல்வாயன்.....

கும்பமுனி என்ன பாட்டெழுதி வைத்திருக்கின்றாரோ.... அவருக்கும் பூவரசு அறிவு அரைகுறை போல.....🫢.

5 hours ago, குமாரசாமி said:

பூவரசம் தடி எல்லாம் செருகி வைச்சிருக்கதேவையில்லை. துவரம் கேட்டி தான் செருகி வைச்சிருக்க வேணும். பூவரசம் கேட்டி  ஊரிலையெல்லாம் நினைச்ச நேரத்தில நினைச்ச இடத்திலை புடுங்கி வெளுக்கலாம்.பச்சை மட்டைய விட  விசேசமானது

👍.....

துவரம் தடி என்று கேள்விப்பட்டிருக்கின்றேன், ஆனால் பார்த்ததில்லை...... ஊரில் மரங்கள், வேலிகள் குறைவு தான் ஒப்பீட்டளவில்.....

  • கருத்துக்கள உறவுகள்

பூவரசம் கட்டையில்தான் இடியாப்ப உரல் செய்வது....... அதன் வேரில் இடியாப்ப உரல் செய்வது எல்லாம் எமது தாத்தன் காலத்துடன் போச்சுது ....... இப்ப ஒரு உரல் செய்யுமளவு வேருள்ள பூவரசு எங்கு இருக்கு......அந்தளவு வைரமான வேருள்ள பூவரசு வளர குறைந்தது 50 வருடமாவது இருக்க வேண்டும்...... அதெல்லாம் நாங்கள் தறித்து மதில்கள் கட்டி விட்டம் .......!

ஒரு வீட்டில் யாராவது மோசம்போனால் முதல் வேலையாக எல்லையில் நிக்கும் பெரிய பூவரசு ரெண்டைத் தறித்து சுடலைக்கு அனுப்பி விடுவார்கள்......!

நெஞ்சாங் கட்டை சறுக்கினால் பிணம் சுருண்டு எழும்பிவிடும் ......பிறகென்ன கட்டையால் அடித்து வளத்தி எரிப்பார்கள் ........ அவரும் சமத்தாக ஒரு பிடி சாம்பலாவார் ......!

ஒரு தகவல்: இப்பவெல்லாம் வீர விறகுகள் வைத்துத்தான் எரிப்பது.......எதை வைத்து எரித்தாலும் மனித உடலின் சாம்பல் ஏனையவற்றில் இருந்து தனியாகத் தெரியும்......வாளியால் தண்ணீர் ஊற்றி அலசும் போது ஏனைய சாம்பல் கரைந்து கலைந்து போக இது மட்டும் எலும்புகளும் உக்கி  தனியாக வெள்ளையாய் தெரியும் ...... அவற்றைச் சேகரித்துத்தான் கடல், குளம், ஆற்றிலோ விட்டு  காடாத்து செய்வார்கள்.....!

இப்ப உள்ள தலைமுறைக்குத் தெரியக்கூடியவாறு பல தகவல்கள் இதை வருகின்றன......நன்றி ரசோ ........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.