Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sign-contracts-e1561620965475.jpg?resize

பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளது.

தமிழ்ச் சிவில் சமூகத்தினருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்ப்பாணத்தில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளது

 

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கும் வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என்று தமிழ்க் கட்சியினரும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை வெளிப்படுத்தும் வகையிலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பில் இருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் இதற்குப் பல்வேறு அமைப்புகளும் பல்வேறு கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ள நிலையில் இதன் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கும், சிவில் சமூகத்தினருக்கும் இடையில் முதலாவதாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

அதன்படி, இரு தரப்பினர்களுக்கும் இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து தமிழ்ப் பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளன.

https://athavannews.com/2024/1392917

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்கள் ஒரு வாக்கை மாத்திரமே செலுத்த வேண்டும். இரண்டாம் தெரிவை செய்ய இடமளித்தால் பொது வேட்பாளர் தெரிவே தேவையற்றதாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு பயனுமற்ர ஒரு வீண் முயற்சி. 

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

தமிழ்மக்கள் ஒரு வாக்கை மாத்திரமே செலுத்த வேண்டும். இரண்டாம் தெரிவை செய்ய இடமளித்தால் பொது வேட்பாளர் தெரிவே தேவையற்றதாகி விடும்.

நேற்று ஐயா விக்கி அவர்கள் முதலாவது வாக்கை பொதுவேட்பாளருக்கும் இரண்டாவதை மக்கள் தாம் விரும்பியவர்களுக்கும் வாக்களிக்கலாம் என்றார்.

இந்ததடவை தேர்தலில் இரண்டாவது வாக்குத் தான் முக்கியமானது என்கிறார்கள்.

அப்ப இதனூடாக சொல்லப்படும் செய்தி தான் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்று ஐயா விக்கி அவர்கள் முதலாவது வாக்கை பொதுவேட்பாளருக்கும் இரண்டாவதை மக்கள் தாம் விரும்பியவர்களுக்கும் வாக்களிக்கலாம் என்றார்.

இந்ததடவை தேர்தலில் இரண்டாவது வாக்குத் தான் முக்கியமானது என்கிறார்கள்.

அப்ப இதனூடாக சொல்லப்படும் செய்தி தான் என்ன?

எனக்கென்னவோ… விக்கியர்  “டபிள் கேம்”  விளையாடுற மாதிரி ஒரு பீலிங். 😂 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

452127602_887250646773242_29279233657037

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடபட்டது.

தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது.

24-669e169b2c9bb-1-300x200.jpg 24-669e169b9e0a3-300x200.jpg 24-669e169c80eb1-300x200.jpg 24-669e169c15176-300x200.jpg

கடந்த காலங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவருக்கு வாக்களித்தும் எந்தவித பயனும் இல்லை என தமிழ்க் கட்சிகளும் சிவில் சமூகத்தினரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதனால் தமிழ் மக்களின் நிலைமையையும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், தேவைகளை வெளிப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு சிங்கள வேட்பாளருக்கும் ஆதரவை வழங்காது தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் அண்மைக் காலமாக சிவில் சமூகத்தினராலும் அரசியல் கட்சிகளாலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த்து.

இந்நிலையில், இரு தரப்பினர்களுக்கு இடையிலும் பல்வேறு விடயங்களை உள்ளடக்கி ஒப்பந்தம் கைச்சாத்தாகியதைத் தொடர்ந்து பொது வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட ஏனைய அனைத்து விடயங்கள் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உடன்படிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர்களான சி.வி விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தான் ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பொ. ஐங்கரநேசன், சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா உள்ளிட்ட அரசியல்வாதிகளும், அரசறிவியல்துறை பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம், யதீந்திரா போன்ற சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கையொப்பமிட்டனர்.

https://thinakkural.lk/article/306604

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமிழ் சிவில் சமூகத்துக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் இந்த உடன்படிக்கை யாழ்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்டது.

large.IMG_6883.jpeg.32273be0e076c26d750b

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

jaffna.jpg?resize=750,375

யாழ்ப்பாணத்தில் தேர்தல் சுவரொட்டிகள் – நிலாந்தன்.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி வடக்கில் கடந்த சில வாரங்களாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.வழமையாக யாழ்ப்பாணத்தின் சுவர்களை ஜேவிபி சுவரொட்டிகளே நிரப்புவதுண்டு.

இம்முறை ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, ரணில் விக்கிரமசிங்க ஆவிக்குரிய சபைகள் கூறுவது போல நற்செய்தி வருகிறது என்ற பொருள்பட ஒரு பலவண்ண சுவரொட்டியை நாடு முழுவதும் ஒ ட்டினார். பன்னாட்டு நாணய நிதியத்தின் அடுத்த கட்ட உதவிகள் கிடைக்கப் போவதை முன்னிட்டு அதை தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சாதனையாக கருதி அவ்வாறு ஒரு சுவரொட்டியை அவர் வெளியிட்டார்.அந்த சுவரொட்டிக்கு அடுத்தபடியாக ரணில்தான் என்ற பொருள்பட ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அந்த இரண்டு சுவரொட்டிகளும் ஜனாதிபதி தேர்தலை முன்னோக்கி ஒட்டப்பட்டவை.

அதற்குப்பின் தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு ஒரு சுவரொட்டி போட்டது. அதில் தன்னெழுச்சி போராட்டங்களை முன்னெடுத்த மூவருடைய படங்களைப் போட்டு “நாங்கள் ரெடி” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதற்கும் சிறிது காலம் செல்ல ஜேவிபி அண்மை நாட்களாக ஒரு பெரிய பலவண்ண சுவரொட்டியை ஒட்டி வருகின்றது.அதில் அனுரகுமாரவின் பெரிய முகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.”எங்கள் தோழர் அனுர” என்றும் எழுதப்பட்டுள்ளது.

அதன் பின் நேற்று அதாவது சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஒரு சுவரொட்டி. ஒட்டியது யார் என்று தெரியாது. அது ஒரு அனாமதேயச் சுவரொட்டி. அதில் வெள்ளை பேப்பரில் சிவப்பு மையால் “தேசமே பயப்படாதே”என்று எழுதப்பட்டுள்ளது. அதை யார் ஒட்டியது என்று தெரியாது. இனி வரும் நாட்களில் தெரிய வரலாம். முதலில் புதிர் போல ஒரு வசனத்தை போட்டு சுவரொட்டி வரும். பின்னர் அதற்கு விளக்கம் வரும். சில கிழமைகளுக்கு முன் ரணில் விக்கிரமசிங்க “இதோ நற்செய்தி வருகிறது” என்று ஒட்டியதும் அப்படித்தான்.

 

இவ்வாறாக தமிழ் பகுதிகளில் தென்னிலங்கைக் கட்சிகள் சுவரொட்டிகளை ஒட்டத் தொடங்கி விட்டன.ஆனால் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன!

தேர்தலில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்காக முயற்சி செய்யும் மக்கள் அமைப்பும் தமிழ்த் தேசிய கட்சிகள் ஏழும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்கனவே வந்துவிட்டன. கடந்த மாதம் 29ஆம் தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பில் அந்த உடன்பாடு எட்டப்பட்டது. அன்றைக்கே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இருக்கலாம். ஆனால் சில கட்சிகள் அந்த உடன்படிக்கை கைதாத்திடும் நிகழ்வை பெருமெடுப்பிலான ஒரு நிகழ்வாக ஒழுங்குபடுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தன.எனினும்,அதனை முதலில் ஊடகவியலாளர்களுடன் ஒப்பீட்டளவில் கைக்கடக்கமான ஒரு நிகழ்வாகச் செய்வது என்று பின்னர் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆறாம் திகதி அந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. ஆனால் தமிழ் அரசியலில் மூத்த தலைவராகிய சம்பந்தரின் மறைவையொட்டி அந்த நிகழ்வை ஒத்தி வைக்குமாறு கட்சிகள் கேட்டன. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட அந்த வைபவம் வரும் 22ஆம் தேதி திங்கட்கிழமை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் தந்தை செல்வா கலையரங்கில் அந்த நிகழ்வு இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவதற்குரிய நகர்வுகள் கட்டமைப்பு சார்ந்து முன்னேற தொடங்கியுள்ளன என்று தெரிகிறது. கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணைந்து உருவாக்கும் கட்டமைப்பானது அடுத்த அடுத்த கட்ட வளர்ச்சிக்கு போகும் பொழுது, பொது வேட்பாளரை நோக்கித் தேர்தல் களம் மேலும் சூடாகும் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரு பொது வேட்பாளர் என்ற விடயம் எப்பொழுதோ மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது. அதற்கு ஆதரவாக ஒரு பகுதி ஊடகங்கள் எப்பொழுதோ இயங்கத் தொடங்கிவிட்டன. அண்மையில் மாவை சேனாதிராஜா ஒரு நேர்காணலில் பொது வேட்பாளருக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அந்த நேர்காணலில் அவர் ஒரு விடயத்தைச் சுட்டிக் காட்டுகிறார். அதன்படி பொது வேட்பாளரை நிறுத்துவது என்பது, ஒரு புதிய மக்கள் ஆணையை பெறுவதற்காக என்பதை விடவும், மக்களை ஒன்று திரட்டுவதற்கானது அன்று மிகத் தெளிவாகக் கூறுகிறார்.

இப்பொழுது தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ தலைவர் அவர்தான். அதனால் அவருடைய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்களை ஒன்றாகத் திரட்ட வேண்டும் என்ற விடயத்தை தமிழ்ப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் தலைவர் வெளிப்படையாகப் பேசுகிறார்.அந்த நோக்கத்துக்காகத்தான் பொது வேட்பாளர் என்றும் அழுத்திக் கூறுகிறார்.ஏற்கனவே சிறீதரனும் அவருடைய அணியும் பொது வேட்பாளர் என்ற விடயத்தை பகிரங்கமாக ஆதரித்துக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். எனவே தமிழரசுக் கட்சிக்குள் பொது வேட்பாளருக்கு ஆதரவான அணி படிப்படியாக பலம் பெற்று வருவது தெரிகின்றது.இது தமிழ்ப் பொது வேட்பாளருக்கு உரிய ஆதரவுத் தளத்தை மேலும் பலப்படுத்தும்.

தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவுத் தளத்தைப் பலப்படுத்துவது என்பது அதன் பிரயோக வடிவத்தில் தமிழ் மக்களை ஒரு பெரிய திரளாக ஐக்கியப்படுத்துவதுதான். தமிழ் மக்கள் ஐக்கியப்படும் பொழுது சாதனைகளையும் சாகசங்களையும் செய்வார்கள். தமிழ் மக்கள் இப்பொழுது தம் பலம் எதுவென்று அறியாத மக்களாக சிதறிப் போய் இருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தில் அமைந்திருக்கும் ஒரு மக்கள் கூட்டம். எல்லா பேரரசுகளின் இழு விசைகளுக்குள்ளும் வரும் ஒரு மக்கள் கூட்டம். அதனால் தமிழ் மக்களைக் கையாள வேண்டிய தேவை உலகின் மூன்று பேரரசுகளுக்கும் உண்டு.அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ் வாக்குகள் பொன்னானவை.கேந்திர முக்கியத்துவம் மிக்கவை. அவ்வாறு கேந்திர முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகளை கடந்த 15 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தல்களின் போது வெற்றுக் காசோலையாக வீணாக்கி வந்த ஒரு அரசியல் போக்கை மாற்றி, அவற்றை அவற்றுக்குரிய முக்கியத்துவத்தோடு, ராஜதந்திரப் பெறுமதியோடு,அரசியல் பெறுதியோடு ஒன்று திரட்டுவதே தமிழ் போது வேட்பாளரின் தேர்தல் இலக்கு ஆகும்.

இந்துப் புராணங்களில் வரும் அனுமாரைப் போல தமிழ் மக்களுக்குத் தங்கள் பலம் எதுவென்று தெரியவில்லை.அனுமார் வாயுபுத்திரர் ஆவார். காற்றைப் போல அவருக்கு சக்தி அதிகம். ஆனால் தன் பலத்தை அவர் அறிவதில்லை. அப்பாவியாக சாதுவாக இருப்பார்.ராமாயணத்தில் அவருக்கு அவருடைய பலத்தை உணர்த்தி “நீ வாயுபுத்திரன் ; ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடப்பாய்” என்று அவருக்கே அவருடைய பலத்தை உணர்த்தியது ஜாம்பவான் என்ற வானரத் தளபதி ஆகும். தன் பலம் எதுவென்று தெரிந்ததும் அனுமார் விஸ்வரூபம் எடுத்தார். ஒரே மூச்சில் சமுத்திரத்தைக் கடந்தார். சீதையைக் கண்டார்.
எனவே அனுமாரைப் போல தமிழ் மக்களுக்கும் அவர்களின் பலம் எதுவென்று தெரியவில்லை. ஒரு காலம் அவர்கள் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்த மக்கள்.முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒரு போராட்டத்தை நடத்திக் காட்டிய மக்கள். ஆனால் இன்று சிதறிப்போய் இருக்கிறார்கள். அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல அவர்கள் சிதறிப்போய் இருக்கிறார்கள். அவர்களை திரும்பவும் கூட்டிக்கட்டினால், அவர்கள் மீண்டும் அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். எனவே தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பலம் எது என்பதை, அவர்களுடைய கேந்திர முக்கியத்துவம் எது என்பதனை, எடுத்துக் கூறவள்ள தலைமைகள் மேல் எழ வேண்டும். அவ்வாறு தமிழ் மக்கள் தங்கள் பலம் எது என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.அப்படி ஒரு முடிவுதான் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று தெரிவு.

இந்த அடிப்படையில் தமிழ்மக்கள் தமது பொன்னான வாக்குகளை அவற்றுக்குரிய கேந்திர முக்கியத்துவத்தோடு உபயோகிப்பார்களாக இருந்தால் அவர்கள் மீண்டும் தங்கள் ஒன்று திரண்ட பலத்தோடு எழுவார்கள்.

இதுவரையிலும் 7 தமிழ் தேசிய கட்சிகளே தமிழ் மக்கள் பொதுச்சபையுடன் உடன்பாட்டுக்கு வர இருக்கின்றன. எதிர்காலத்தில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட ஏனைய கட்சிகளும் இப்பொதுக் கட்டமைப்புக்குள் இணையக்கூடும். தமிழ் மக்கள் ஒன்றாகத் திரளும் பொழுது கட்சிகள் மக்களைப் பிரதிபலிக்கும்.

இப்பொழுது தமிழ் மக்கள் பொதுச்சபையில் இருப்பவர்களில் பலர் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டவர்கள்தான். அதில் அவ்வப்போது சிறிய சிறிய வெற்றிகளைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் எல்லா கட்சிகளையும் ஒரு கட்டமைப்பாக கூட்டிக் கட்டுவதில் அவர்கள் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்து வந்திருக்கிறார்கள்.இந்தத் தோல்வி கரமான அனுபவங்களின் பின்னணியில், இதற்கு முன் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்டமைப்புகளில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில், உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் பொதுச்சபையாகும்.

எனவே கடந்த 15 ஆண்டுகால அனுபவங்களிலிருந்தும் கற்றுக் கொண்ட தமிழர்கள் மீண்டும் ஒரு பலமான திரட்சியாக மாறுவதற்குரிய வாய்ப்புகளை ஜனாதிபதித் தேர்தல் களம் திறந்து வைத்திருக்கின்றது. தென்னிலங்கைக் கட்சிகள் தமிழ் மக்களுடைய சுவர்களில் தங்களுடைய விலை கூடிய பல வண்ணச் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் மனங்களில் சிறு பொறியாகச் சுடரத் தொடங்கியுள்ள “ஒன்றுபடுவோம்” என்ற பெரு விருப்பை ஓர் அரசியல் ஆக்க சக்தியாக தமிழ் பொது வேட்பாளர் மாற்றுவாரா?

https://athavannews.com/2024/1393135

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Tamil.jpg?resize=750,375&ssl=1

தமிழ் பொது வேட்பாளர்- தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து!

தமிழ்த் தேசியக் கட்சிகளிற்கும், தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று முற்பகல் 12 மணி அளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமானது.

இந்நிகழ்வில்  ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று கைச்சாத்திடப்பட்டது.

 

சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளினதும் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து பொது வேட்பாளரை நிறுத்துவதற்குக் கடந்த காலங்களில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமே  இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடக்கூடிய கட்சிகள் தமிழ் மக்களது கோரிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியாகக் குறித்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

மேலும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்படும்போது பொது வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1393129

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு உடன்படிக்கையில் 9 அம்சங்கள் வலியுறுத்தல்!

Published By: VISHNU    22 JUL, 2024 | 06:38 PM

image

தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகிய இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும் என உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திட்டுள்ளனர். 

IMG_9202.jpg

தமிழ்த் தேசியக் கட்சிகள் - தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை, யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் திங்கட்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

IMG_9208__1_.jpg

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமாவது, தமிழ்த் தேசியக் கட்சிகள் - தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை 9 அம்சங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.

IMG_9198__1_.jpg

ஈழத்தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கில் தமக்கென ஒரு மரபு வழித் தாயகத்தைக் கொண்ட, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வடக்கு கிழக்கு உள்ளடங்கலாக இலங்கைத் தீவில் வாழும் தேசிய இனம் என்ற அடிப்படையில், சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள்.

அடிப்படையிலும் உச்சபட்ச தன்னாட்சியைக் கோருவதற்கான உரித்துடையவர்கள். அதனடிப்படையிலும் பன்னாட்டுச் சட்டங்களின் நீண்ட வரலாற்றையும் மிகச் செழிப்பான பண்பாட்டையும் கொண்ட தமிழ் மக்களின் தனித்துவமான தேசிய இருப்பை சிதைக்கும் நோக்கத்துடன், நிலப்பரப்பு ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், மதரீதியாகவும் என பல்வேறு வழிகளில் இலங்கைத்தீவில் இனவழிப்பு நடவடிக்கைகள் சிறீலங்கா அரசினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் தீவிரவாதமாகவும் பிரிவினைவாதமாகவும் பயங்கரவாதமாகவும் சித்தரிக்கப்பட்டு வருகின்றது.

ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவில் ஒரு தேசிய இனமாக இருப்பதும், கேந்திர முக்கியத்துவம் மிக்க புவிசார் அமைவிடத்தை வாழ்விடமாகக் கொண்டிருப்பதும் அவர்களது பிரதான அரசியல் பலமாகும் என்னும் யதார்த்தத்தின் பின்னணியில்தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டம் முதலில் பிராந்தியமயப்பட்டது. பின்னர் அனைத்துலகமயப்பட்டது.

நடந்து முடிந்த உள்நாட்டுப் போரில் இனப்படுகொலை செய்யப்பட்ட மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் பன்னாட்டுச் சமூகம் காட்டி வந்திருக்கின்ற கரிசனைகளைச் சிறீலங்கா அரசு எந்தவிதத்திலும் பொருட்படுத்தவும் இல்லை; ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுத்திருக்கவுமில்லை.

அதேநேரத்தில் முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில், இலங்கைத் தீவின் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் மக்களிற்கு சமஉரிமையை வழங்கும் அரசியல் தீர்வு தொடர்பில் எந்தவொரு நகர்வுகளைக்கூட இதுவரை காலமும் முன்னெடுக்கவில்லை.

இனப்படுகொலைக்கு எதிரான நீதியுமின்றி, அரசியல் தீரவுமின்றி, ஒன்றுபட்ட அரசியல் தலைமைத்துவமும் இன்றி பாரபட்சங்களும், அடக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும், ஆக்கிரமிப்புக்களும். அழிப்புகளும், பிரித்தாளும் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு அரசியல், பொருளாதார, இராணுவச் சூழலில் தமிழ் மக்களின் தேசிய இருப்பு கேள்விக்குள்ளாகி நிற்கின்றது.

இவ்வாறான வரலாற்று உண்மைகளின் அடிப்படையிலும், இதுகாலவரையிலான அனுபவங்களின் அடிப்படையிலும், சிறீலங்காவின் 2024 அரசுத்தலைவர் தேர்தலைத் தமிழ் மக்கள் தரப்பில் செயல்முனைப்புடன் எதிர்கொள்ளவேண்டிய அரசியல் தேவையும் அவசியமும் எழுந்திருக்கின்றது. 

இந்த யதார்த்தத்தின் பின்னணியில், தமிழ்த் தேசத்தின் மக்களை ஒன்றுபடுத்துவது என்னும் பிரதான நோக்கத்தோடு, எதிர்வரும் சிறீலங்காவின் அரசுத்தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்று தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபையும் இணக்கம் கண்டுள்ளன. 

அத்துடன், இதனைச் செயல்முனைப்புடன் கையாளும் நோக்கில், பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை மேற்கொள்வதென்றும் முடிவைக் கொண்டுள்ளன.

இதன்பிரகாரம் இவ்வுடன்படிக்கையின் சம தரப்புக்கள் என்னும் வகையில், தமிழ்த் தேசிய கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச்சபை ஆகியவை பின்வரும் அடிப்படையில் புரிந்துணர்வு ஒன்றினை ஏற்படுத்திக்கொள்கின்றன.

1. தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை இவ்வுடன்படிக்கையில் சம தரப்பினர் என்னும் வகையில், இரு தரப்பினரின் இணைவில், உருவாக்கப்படும் இக்கட்டமைப்பு "தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" என அழைக்கப்படும்.

2. இவ்வுடன்படிக்கையின் பிரகாரம் உருவாக்கப்படும் “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை. சிறிலங்காவின் அரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து தமிழ் மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் தேர்தலாக கையாளும் வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவதெனத் தீர்மானித்துள்ளது.

3. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல், தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்தல், நிதி தொடர்பான விடயங்கள். பரப்புரைகளை முன்னெடுத்தல் போன்ற, அனைத்து அவசியமான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கும் நிர்வகிப்பதற்குமான, துணைக் குழுக்களை தேவைக்கேற்ப உருவாக்கும் அதிகாரங்களை கொண்டிருக்கும்.

4. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பால் பொதுவேட்பாளரை நடவடிக்கைக்காக உருவாக்கப்படும் குறித்த துணைக் குழுக்கள் மற்றும் ஏனைய துணைக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் தமிழ்த் தேசியக் கட்சிகள். தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவை சமதரப்பாகப் பங்குபற்றும்.

5. தமிழ்ப் பொதுவேட்பாளராக நிறுத்தப்படுபவரும் அவருக்கான தேர்தல் சின்னமும் தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்கான ஒரு குறியீடாக மட்டுமே கருதப்படுதல் வேண்டும்.

6. தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பானது பொது வேட்பாளராகத் தெரிந்தெடுக்கப்படுபவருடனும், அவர் எந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் சார்பில் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்படுகின்றாரோ அந்த நபருடனும் அந்தக் கட்சியுடனும் அவசியமானதும் உகந்ததுமான, உடன்படிக்கையைத் தனித்தனியே நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

7. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகிய இரு தரப்பும். ஒரு பொதுக் கட்டமைப்பாக செயற்படுபவர்கள் என்னும் அடிப்படையில் கூட்டுப் பொறுப்புடையவர்கள் என்பதில் இணக்கம் காணப்படுவதுடன், வழிகாட்டல் நெறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்வது என்றும் இணக்கம் இதற்கான காணப்படுகின்றது.

8. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உடன்பாடுள்ள ஏனைய கட்சிகள் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, பொதுக் கட்டமைப்புடன் இணைந்து பயணிக்க முன்வரும்போது, அவர்களை உள்வாங்கிக் கொள்வதென்றும் இணக்கம் காணப்படுகின்றது.

9. தமிழ்த் தேசிய இனத்தின் நீண்டகால அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றும் குறிக்கோளுடன் தொடர்ந்து செயற்படுவதென இருதரப்பும் மேலும் இணங்கிக் கொள்கின்றனர் என 09 புரிந்துணர்வுகள் அடங்கிய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

குறித்த உடன்படிக்கையில், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) , தமிழ் மக்கள் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) தமிழ் தேசிய கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) தமிழ் தேசிய பசுமை இயக்கம் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகிய அரசியல் கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை கைச்சாத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/189119

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் ஒற்றுமையில்லையென கூறுவோருக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் : சுரேஷ்

23 JUL, 2024 | 10:13 AM
image
 

எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிமச்சந்திரன் தெரிவித்தார்.    

தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை தந்தை செல்வா கலையரங்கில் கைச்சாத்திடப்பட்ட பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் இனி எமது கட்டமைப்புடன்தான் பேசவேண்டும் அடுத்த கட்ட அரசியல் நகர்வாக இருக்கும் இந்தக் கட்டமைப்பை உருவாக்கக்கூடாது என்று பலர் முயற்சிகள் எடுத்தார்கள் எங்களுக்குள்ளேயும் பலர்  சவால் விட்டார்கள் எதிராக பிரச்சாரம் செய்வோம் என்றார்கள் எனினும் நாம் ஒன்றிணைந்து கையெழுத்திட்டுள்ளோம் இனியும் இதைக் குழப்புவதற்கு பலர் இருக்கின்றார்கள்.  

பல சிக்கல்களும் உருவாகும் இவை அனைத்தையும் எதிர்த்து போராடித்தான் முன்னேறிச் செல்லவேண்டும். ஏன் பொது வேட்பாளர் தேவை என்பதற்கு பல காரணங்கள் உண்டு யுத்தத்திற்கு பிற்பாடு அரசாங்கம் எங்களைக் அரைத்து கலந்துரையாடுவார்கள் ஆனால்  எதுவும் நடக்காது இப்போது நாங்கள் ஒரு நிலையில் தோற்வித்திருக்கின்றோம் நீங்கள் யாராவது பேசவிரும்பினால் வரலாம் நாங்கள் கூறவேண்டிய அவசியமில்லை.

நாங்கள் இப்போது தமிழ்த்தேசியப் பரப்பில் இருக்கின்ற கட்சிகள் சிவில் அமைப்புக்கள் ஒன்றாகச் சேர்ந்து ஒரு செய்தியைச் செல்லுகின்றோம் யாராக  இருந்தாலும் எம்மிடம் பேசவேண்டியிருந்தால் எங்களை நோக்கி வருவார்கள் .

நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்  என்று பேசிக்கொண்டிருந்த காலத்திலேயே தென் பகுதியில் ஒரு அச்ச நிலை ஏற்பட்டது இவர்கள் ஒன்றாக போகின்றார்கள் என்று இந்தக் காலத்தில் முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்கள் எங்களைத் தேடி வீடு வீடாக வந்தார்கள் கடந்த காலத்தில் கொழும்பிலே யாருடனே பேசி முடிவுகளை அறிவிப்பார்கள் ஆனால் இன்று தேடி வருகின்றார்கள் என்றால் இவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தப் போகின்றார்கள் அதற்கு முன்பாக இவர்களுடன் பேசி ஆதரவைபெறவேண்டும் என்றுதான் வந்தார்கள். 

ஆகவே அவர்கள் எங்களைத் தேடி வரவேண்டும் என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். ஏனி தனிப்பட்ட எவரையும் சந்தித்துப் பேசுவதில்லை. தற்போது தமிழ்த்தேசியத்துடன் இணைந்து செயற்படுகின்றவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்கள்.

இனிமேல் இவர்களுடன் பேசித்தான் முடிவுகள் எடுக்கவேண்டும் என்பதை உருவாக்கியுள்ளோம். ஆகவே இது வரை காலமும்  ஒற்றுமை இல்லை எனக்கூறியவர்களுக்கு மிகக் காத்திரமான பதிலை வழங்கியுள்ளோம்.  

இந்தக் கட்டமைப்புக்குள் வராத ஏனைய கட்சிகள் குறிப்பாக தமிழரசுக் கட்சியும் இதற்குள் வரவேண்டும் இதன் நோக்கத்தை புரிந்து கொள்ளவேண்டும். 

பொது வேட்பாளர் விடையம் என்பது  எமது அடுத்த கட்ட அரசியல் நகர்வை நோக்கி நகரவுள்ளது இதில் காத்திரமான வெற்றியைப் பெறுவேம் என்றால் குறிப்பாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் பெருவாரியாக வாக்களிப்பார்கள் என்றால் அந்தச் செய்தி சிங்களத்தரப்பு இராஜதந்திரத் தரப்பு சர்வதேச தரப்பு பலமான செய்தியைச் செல்லும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரேகுரலில் பேசுகின்றார்கள் அந்தக் குரலை செவிசாய்ககவேண்டும் என்பது எல்லோருக்கும் ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/189134

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Unity.jpg?resize=562,375

தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்! நிலாந்தன்.

தமிழ்ப் பொது வேட்பாளர் = தமிழ் ஐக்கியம்

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு பேசுபொருள் என்ற கட்டத்தைக் கடந்து ஒரு செயலாக மாற்றமடையும் நிலைமைகள் படிப்படியாக வளர்ந்து வருகின்றன. கடந்த 22 ஆம் தேதி யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடந்த ஒரு நிகழ்வில் ஏழு தமிழ்த் தேசிய கட்சிகளும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் “தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு ” என்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த மாதம் 29ம்தேதி வவுனியாவில் நடந்த ஒரு சந்திப்பின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.எனினும் அப்பொழுது கையெழுத்திடப்படவில்லை. கையெழுத்திடும் நிகழ்வை இம்மாதம் ஆறாம் தேதி ஒழுங்கு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது.ஆனால் சம்பந்தரின் மறைவையொட்டி அந்நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அது கடந்த 22 ஆம் தேதி நடந்தது.

தமிழ்த் தேசிய அரசியலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆகப் பிந்திய ஒரு பொதுக் கட்டமைப்பு அதுவாகும். இதற்கு முன் கட்சிகளின் கூட்டுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.ஆனால் மக்கள் அமைப்புக்கும் கட்சிகளுக்கும் இடையிலான கூட்டெனப்படுவது இதுதான் முதல் தடவை.அதுவும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இணைவது என்பது இதுதான் முதல் தடவை. இந்தக் கட்டமைப்பானது ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தி உழைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் அடுத்தடுத்த கட்டத்திற்கு கட்டமைப்பு ரீதியாக முன்னேறத் தொடங்கியுள்ளது என்று தெரிகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராக இருந்தால் கட்சிகளும் மக்கள் அமைப்பும் ஒன்றாக உழைத்து அவருக்கு வாக்குத் திரட்டும் பொழுது என்ன நடக்கும்?

தமிழ் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை பெருமளவுக்கு பெறுவாராக இருந்தால் அது தென் இலங்கை வேட்பாளர்களின் வெற்றிகளை சவால்களுக்கு உள்ளாக்கும். எந்த ஒரு தென் இலங்கை வேட்பாளரும் பெருமைப்படக்கூடிய பெரும்பான்மையைப் பெற முடியாத ஒரு நிலைமை தோன்றக்கூடும்.

ஏனென்றால் கிடைக்கும் செய்திகளின்படி தென்னிலங்கையில் மூன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் நிறுத்தப்படும் நிலமைகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின் வெற்றி குறித்த நிச்சயமின்மைகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேர்தல் இது. ஒரு மேற்கத்திய நாட்டின் தூதரக அதிகாரி ஒருவர் கூறியதுபோல, தேர்தல் முடிவுகளை எதிர்வு கூற முடியாதிருக்கிறது என்பது மட்டுமல்ல, ஊகிக்கவும் முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது என்பது சரியானதுதான். ஏனெனில் ஒப்பீட்டளவில் யாருமே மிகப்பெரிய பெரும்பான்மையோடு வெல்வார் என்று கூற முடியாத அளவுக்கு நிலைமை காணப்படுகிறது. இப்படிப்பட்ட நிச்சயமின்மைகள் அதிகமுடைய ஒரு தேர்தல்களத்தில் தமிழ் பொது வேட்பாளர் தமிழ் மக்களின் அதிகப்படியான வாக்குகளை கவர்வாராக இருந்தால் நிலைமை என்னவாகும் ?

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டாலும் நிறுத்தப்படாவிட்டாலும் யாரோ ஒரு தென்னிலங்கை வேட்பாளர்தான் ஜனாதிபதியாக வரப்போகிறார். ஆனால் தமிழ் வாக்குகள் அவருக்கு இல்லை என்றால் முதலாவதாக அவர் பெறும் வெற்றியின் அந்தஸ்து குறைந்து விடும். எவ்வாறெனில் தமிழ் மக்களின் ஆணை அவருக்கு இல்லை என்பது அவரை நாடு முழுவதுமான ஜனாதிபதி என்ற அந்தஸ்திலிருந்து தரமிறக்கும்.

இரண்டாவதாக தமிழ் மக்களின் வாக்குகள் பெருமளவுக்கு அவருக்கு கிடைக்காவிட்டால் அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் குறையும். அதுவும் அவருடைய அந்தஸ்தை, அங்கீகாரத்தை குறைக்கும்.

எனவே தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் அதிகளவு வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் இந்த ஜனாதிபதி தேர்தலில் தெரிவு செய்யப்படப் போகும் எந்த ஒரு ஜனாதிபதியும் அங்கீகாரம் குறைந்த;அந்தஸ்து குறைந்த ஒரு ஜனாதிபதியாகத் தான் காணப்படுவார்.அவர் பெறக்கூடிய வெற்றியின் பருமன் அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சிகள் பெறக்கூடிய வெற்றி தோல்விகளில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

எனவே ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ் வாக்குகளை அதிகமாகக் கவர்ந்தால், தென்னிலங்கையில் பலம் குறைந்த ஒரு அரசுத் தலைவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்.அதேசமயம் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படாவிட்டால் என்ன நடக்கும் ?

தமிழ் வாக்குகள் பலவாகச் சிதறும். ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார், ஆங்கிலம் பேசும் படித்த தமிழ் நடுத்தர தர்க்கம் தன்னை ஆதரிக்கும் என்று. பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை அவர் மீட்டிருப்பதாக ஆங்கிலம் பேசும் படித்த நடுத்தர வர்க்கத் தமிழர்கள் கருதுவார்களாக இருந்தால், அவர்கள் ரணிலுக்கு வாக்களிக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.

அதேபோல சஜித்தோடு ஏதாவது ஒரு உடன்படிக்கைக்கு வர விரும்பும் கட்சிகள் தனது வாக்காளர்களை சஜித்தை நோக்கி சாய்ப்பாபார்களாக இருந்தால், சஜித்துக்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும். தென்னிலங்கை வேட்பாளர்கள் தமது வாக்குறுதிகளை வெளிப்படையாக முன்வைத்தபின் அவர்களோடு பேசலாம் என்று காத்திருக்கும் கட்சிகள்,தமிழ் மக்களின் வாக்குகளை யாரோ ஒரு தென் இலங்கை வேட்பாளரை நோக்கித்தான் சாய்க்கப் போகின்றன.எனவே சஜித்,ரணில் போன்ற வேட்பாளர்கள் அவ்வாறான எதிர்பார்ப்புகளோடு இருக்க முடியும்.

அடுத்ததாக, அனுர.மாற்றத்தை விரும்புகிறவர்கள் முன்னைய தலைவர்களில் சலித்துப் போனவர்கள், அனுரவை எதிர்பார்ப்போடு பார்க்கக்கூடும். அதனால் அவருக்கும் ஒரு தொகுதி தமிழ் வாக்குகள் கிடைக்கலாம்.

இந்த மூன்று தென்னிலங்கை வேட்பாளர்களையும் தவிர பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்கின்றது.அதற்கும் ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கக்கூடும்.ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்றால் தமிழ் வாக்குகள் மேற்கண்டவாறு சிதறும் நிலைமைகளை அதிகமாக ஏற்படும்.

இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக்கூட்டமைப்பானது தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தத் தவறினால் யாரோ ஒருவர் தமிழ்ப் பொது வேட்பாளர் என்று கூறிக்கொண்டு களமிறங்கத்தான் போகிறார். அவருக்கும் ஏதோ ஒரு தொகுதி வாக்குகள் கிடைக்கும்.இப்படிப்பார்த்தால் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளர் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால்,தமிழ் வாக்குகள் முன்னெப்பொழுதையும்விட பல கூறாகச் சிதறும் ஆபத்தும் அதிகம் தெரிகிறது. அதாவது தமிழ்ப் பலம், தமிழ் அரசியல் சக்தி பல துண்டுகளாகச் சிதறப் போகின்றது.

இது அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும்.ஜனாதிபதித் தேர்தலில் சிதறடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் அடுத்தடுத்த கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலிலும் மாகாண சபை தேர்தலிலும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் மேலும் சிதறடிக்கப்படும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.எனவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வாக்குகளை ஒன்றுதிரட்டத் தவறினால்,தொடர்ந்து நடக்கக்கூடிய ஏனைய மூன்று தேர்தல்களிலும் தமிழ்மக்கள் மேலும் சிதறடிக்கப்படுவார்கள்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா?

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் ஐக்கியம் நிரூபிக்கப்பட்டால்,அது அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் செல்லப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பொதுநிலைப்பாட்டின் கீழ் ஒன்று திரட்டப்பட்டால், தமிழ் மக்கள் மத்தியில் உற்சாகம் பிறக்கும்; உத்வேகம் பிறக்கும். இது தமிழரசியலில் ஒரு புதிய ரத்தச் சுற்றோட்டத்தை ஏற்படுத்தும்.

 

கடந்த பல தசாப்தங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கும் ஓர் உண்மை எதுவென்றால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வாக்களிப்பு அலை தோன்றும் போதுதான் அதிகப்படியான ஆசனங்கள் கிடைக்கின்றன.தமிழ் வாக்களிப்பு அலை எனப்படுவது அதன் பிரயோக அர்த்தத்தில் தமிழ்த் தேசிய அலைதான். தமிழ்த் தேசிய அலை என்பது அதை வேறு வார்த்தைகளில் சொன்னால் தமிழ் ஐக்கியம் தான்.

தேசியவாத அரசியல் எனப்படுவது அது எந்த தேசியவாதமாக இருந்தாலும், ஐக்கியம்தான்.எவ்வாறெனில்,தேசியவாத கட்சி அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது.அதாவது ஆகக்கூடிய பெரும் திரளாக திரட்டுவது.அதை தேர்தல் வார்த்தைகளில் சொன்னால், வாக்காளர்களை ஆகக்கூடியபட்சம் திரட்டுவது.எனவே தமிழ்த்தேசிய வாக்களிப்பு அலை எனப்படுவது தமிழ் மக்களை ஆகக்கூடிய பட்சம் ஐக்கியப் படுத்துவதுதான்.

அந்த அடிப்படையில்தான் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சிந்திக்கப்படுகிறது.கடந்த திங்கட்கிழமை தந்தை செல்வா கலையரங்கில் எழுதப்பட்ட உடன்படிக்கையில் 7கட்சிகள் கையெழுத்திட்டன.உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி முடிவெடுக்க முடியாதபடி இரண்டாக நிற்கின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது.

தமிழ்ப் பொது வேட்பாளரைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சிக்குள் இரண்டு அணிகள் உண்டு.சிறீதரன் அணி பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. சுமந்திரன் அணி எதிர்க்கின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட காணொளி ஊடகம் ஒன்று மாவை சேனாதிராஜாவை நேர்கண்ட பொழுது,அவர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாகப் பதில் சொல்லியிருக்கிறார்.தமிழ்ப் பொது வேட்பாளரை நியாயப்படுத்தும் பொழுது, அவர் ஒரு முக்கியமான விடயத்தை சுட்டிக்காட்டியுமிருக்கிறார்.மக்களிடம் ஆணை பெறுவது என்பதை விடவும்,மக்களை ஐக்கியப்படுத்தவேண்டும்; கட்சிகளை ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற பொருளில் அவருடைய பதில் அமைந்திருந்தது.மாவை சேனாதிராஜாதான் இப்பொழுதும் கட்சியின் தலைவர். எனவே அவருடைய கருத்துக்கு இங்கு அதிகம் முக்கியத்துவம் உண்டு. அது தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் சிறீதரன் அணியைப் பலப்படுத்தக் கூடியது.

இப்பொழுது ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து உருவாக்கியிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஏனைய கட்சிகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.அதன்மூலம் ஆகக்கூடியபட்ச ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதுதான் இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டிருக்கிறது.இந்த ஐக்கியம் வெற்றி பெறுமாக இருந்தால் எதிர்காலத்தில் தமிழ் அரசியலை அது புதிய வழியில் செலுத்துமா?

https://athavannews.com/2024/1393877

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா என்பது தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல் 

03 AUG, 2024 | 05:21 PM
image
 

தமிழ் பொது வேட்பாளர் தமிழரின் அரசியல் இருப்புக்கு தேவையா என்பது தொடர்பாக வவுனியா பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடனான கலந்துரையாடல் இன்று (03) வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.

வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டிலான இந்த கலந்துரையாடலின் பின்னர், வவுனியா பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு பின்வருமாறு  தெரிவித்தனர் :

பொது வேட்பாளர் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கட்டமைப்பானது வவுனியாவில் உள்ள பொது அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களையும் அழைத்து அதன் ஊடாக ஒரு பொதுவேட்பாளர் தொடர்பாக அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் எண்ணக்கருக்கள் தொடர்பாக கலந்துரையாடலினை மேற்கொண்டு எமக்கு தெளிவுபடுத்தினால் நாங்கள் பொது வேட்பாளர் தொடர்பாக அடுத்த கட்ட நகர்வினை நோக்கி நகர்வதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றனர். 

download__1_.jfif

download__3_.jfif

download.jfif

https://www.virakesari.lk/article/190181

  • கருத்துக்கள உறவுகள்
On 28/7/2024 at 10:58, தமிழ் சிறி said:

இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை தவிர வேறு புத்திசாலித்தனமான தீர்க்கதரிசனமான தெரிவு தமிழ்மக்களுக்கு உண்டா? அல்லது அதை மேலும் ஆழமான பொருளில் கேட்டால், ஐக்கியப்படுவதைத் தவிர வேறு உடனடி நிகழ்ச்சி நிரல் தமிழ் மக்களுக்கு உண்டா?

சுமத்திரனும் சாணக்கியனும் ரணிலை ஆதரிக்கும் நிலையில் தமிழ்ப் பொதுவேட்பாளரை தமிழ்ர்கள் பரீட்சித்துப்பார்பதில்தவறில்லை. ஆனால் இந்தப் பொதுவேட்பாளர் தெரிவில் ஈடுபட்டிருக்கும் கட்சியினரும் பத்தி எழுத்தாளர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள்.அவர்களின் ஆகக்  கூடிய கோரிக்கை 13 ஆம்திருத்தச்சட்டமாகத்தான் இருக்க முடியும்.தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டியை முன்வைத்து ஒரு வாக்கை மட்டும்  தமிழ்மக்கள் பொதுவேட்பாளருக்கு  அளிக்க வேண்டும் என்று இந்தக் கட்டமைப்பு தமிழ்மக்களைக் கோருமா?விக்கியர் இப்போழுதே 2வது வாக்கை ரணிலுக்கு போடுமாறு சொல்லியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2வது 3வதுவாக்கைப் பொது வேட்பாளரை நிறுத்துவதில் அர்த்தமில்லை.அதை விட ஜனாதிபதித் தேர்தலைப்பகிஸகரிக்கலாம்.தமிழ்மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களித்தமையால்  முதல்சுற்றில் ஜனாதிபதி தெரிவு செய்யப்படாவிட்டால் அது பேசு பொருளாகும்.இந்தக்கட்டமைப்புக்குள் சுமத்திரன் அணியைப்புறந்தள்ளி தமிழருசுக்கட்சியைைும் தமிழ்தேசிய முன்னனியையும கொண்டுவரவேண்டும். தமீத்தேசிய முன்னனியின் தலைவர் சுகவீனமற்று தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் நிலையில் அவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கும் நிலையில் இருந்து மாறுவார்களா என்பது சந்தேகமானது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.