Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் (கோப்புப் படம்)
  • எழுதியவர், ரூஹான் அகமது
  • பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத்

அக்டோபர் மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. தற்போது சர்வதேச அரங்கின் ஒட்டுமொத்த கவனமும் மீண்டும் மத்திய கிழக்கின் மீது குவிந்துள்ளது. அங்கு மோதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து மிகவும் ஆபத்தான சூழல் உருவாகி வருகிறது.

பங்குச் சந்தைகள் முதல் சர்வதேச விவகாரங்களைக் கண்காணிக்கும் ஆய்வாளர்கள் வரை, மத்திய கிழக்கின் சமீபத்திய நிலைமைகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் அடுத்தக்கட்ட நகர்வுகளைப் பற்றி பேசி வருகின்றனர்.

இந்த பிரச்னைகளுக்கு மத்தியில், உலகின் மூன்று பெரிய வல்லரசுகளான அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் மோதல்களுக்கு தீர்வு காண்பதில் தோல்வி அடைந்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது. மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் சண்டையை அமெரிக்கா, ரஷ்யா, சீனாவால் தடுக்க முடியாதது ஏன்?

 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதில் இருந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வருகிறது. காஸா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இந்த பதற்றம் இரான் வரை பரவிவிட்டது.

இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவின் மூத்த தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

இந்த மோதலில், இஸ்ரேல் தனது எதிரிகளான ஹெஸ்பொலா, ஹமாஸ் மற்றும் இரான் உள்ளிட்டவற்றுக்கு எதிராக வெற்றிகரமான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதைக் காண முடிந்தது.

லெபனானில் நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அமைப்பின் பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். அவரைத் தவிர, ஹெஸ்பொலாவின் பல மூத்த தலைவர்களும் இதற்கு முன்னர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூலை மாதம் இரான் தலைநகர் டெஹ்ரானில் இதேபோன்ற ஒரு தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக நம்பப்படுகிறது.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகள் காஸாவில் மட்டுமல்ல, லெபனானிலும் போரை நிறுத்த முயற்சி செய்கின்றன. ஆனால் இந்த முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை.

காஸா மற்றும் லெபனானில் நடைபெறும் போர் மத்திய கிழக்கு நாடுகள் முழுமைக்கும் பரவக்கூடும் என்று அமெரிக்கா உட்பட பல நாடுகள் அஞ்சுகின்றன. கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தனது உரையின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், `போர் சூழல் யாருக்குமே நல்லது கிடையாது’ என்று கூறினார்.

"இந்தப் பிரச்னைக்கு ராஜதந்திர தீர்வை எட்டுவது சாத்தியம் தான். நீண்ட கால பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி ராஜதந்திர தீர்வு எட்டுவது தான் " என்று அவர் கூறினார்.

ஆனால் அனைத்து ஆலோசனைகளையும் மீறி, காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இரான் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இஸ்ரேல் இரானைத் தாக்குவதாக அச்சுறுத்தியது.

 

வெற்றி பெறும் நோக்கத்தில் முன்னேறும் இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேலின் தொடர்ச்சியான குண்டுவீச்சின் விளைவாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

லெபனானில் இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024 இல் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது.

மறுபுறம், கடந்த ஆண்டு காஸா பகுதியில் ஹமாஸுக்கு எதிரான தரைப்படை நடவடிக்கைகளின் போது பல இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் இஸ்ரேல் மீது ஹெஸ்பொலா தொடர்ந்து வான் வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ஹெஸ்பொலா 8000-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் பல்வேறு பகுதிகளில் வீசியதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகிறார்.

காஸா போர் தொடங்கியதில் இருந்து ஏமனின் ஹூதி போராளிகள் செங்கடலில் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்களை குறிவைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் இரானின் புரட்சிகர காவலர் படையின் மூத்த தளபதிகள் இருவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை, ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின்னணியில் இஸ்ரேல்தான் இருந்தது என்பது பலர் நம்பினர்.

மத்திய கிழக்கில் தற்காப்புக்காக இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது. சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையின் போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேல் `அமைதி’ தீர்வை எட்ட தயாராக உள்ளது என்று கூறினார். "ஆனால் நம் அழிவை விரும்பும் காட்டுமிராண்டித்தனமான எதிரிகளை நாம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. அவர்களிடமிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் கூறினார்.

இரானை கடுமையாக விமர்சித்த அவர், ஏழு வெவ்வேறு முனைகளில் இஸ்ரேல் தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது என்றார். அவர் தனது உரையின் முடிவில், இஸ்ரேல் இந்த போரில் வெற்றி பெறும், ஏனெனில் இந்த போரில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.

 

இஸ்ரேல் பிரதமர் உரை

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

லெபனான் போர் சூடுபிடிப்பதற்கு முன்பு, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலை நிறுத்த அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

சமீப காலமாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட அறிக்கைகளைப் பார்க்கும் போது, மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கைகள் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் இஸ்ரேலில் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது.

கடந்த மாதம் 'எக்ஸ்' தளத்தில் இரானிய மக்களுக்கு மூன்று நிமிட வீடியோ செய்தி ஒன்றை இஸ்ரேல் பிரதமர் வெளியிட்டார். "மத்திய கிழக்கில் இஸ்ரேல் அடைய முடியாத இடம் என்று எதுவும் இல்லை. நாங்கள் எங்கள் மக்களையும் நாட்டையும் காக்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வோம்" என்றார்.

அவர் அந்த செய்தியில், ஒவ்வொரு கணமும் இரானியஅரசாங்கம் 'மரியாதைக்குரிய இரானிய மக்களை' அழிவின் பாதையை நோக்கி அழைத்துச் செல்கிறது என்று கூறினார்.

"இறுதியாக இரான் சுதந்திரம் அடையும்" போது, எல்லாச் சூழலும் மாறி இரு நாட்டு மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று நெதன்யாகு கூறினார்.

இஸ்ரேலிய பிரதமர் மேலும் பேசுகையில், “மதவெறி பிடித்த முல்லாக்கள் உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் ஒடுக்க அனுமதிக்காதீர்கள். இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை இரானிய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மகிழ்ச்சியான மற்றும் அமைதியான எதிர்காலத்தை ஒன்றாகக் காண்போம்." என்றார்.

இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடக்கும் இந்த தீவிர மோதல்களை நிறுத்த, உலகின் பெரும் வல்லரசுகளால் ஏன் முடியவில்லை? இந்த மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளை சமாதானப்படுத்தி போரை நிறுத்த முடியாதது ஏன்?

அமெரிக்காவைத் தவிர, ரஷ்யா மற்றும் சீனா போன்ற உலக வல்லரசுகளால் கூட இதில் மாற்றத்தைக் கொண்டு வர முடியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகளுக்கு இடையிலான ஒத்துழையாமை, அமெரிக்காவின் உள் அரசியல் போன்ற சில காரணங்களால் இஸ்ரேல்-இரான் இடையே சமாதான உடன்படிக்கை எட்ட முடியவில்லை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா, சீனா, ரஷ்யாவால் இதைத் தடுக்க முடியாதது ஏன்?

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் அமெரிக்காவிடமிருந்து 8.7 பில்லியன் டாலர் உதவிகளைப் பெற்றுள்ளது

ஒருபுறம், மத்திய கிழக்கில் ஏற்படும் மோதல்களை தடுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. மறுபுறம், நட்பு நாடான, இஸ்ரேலுக்கு ராணுவ வலிமையை அதிகரிக்க அமெரிக்கா பில்லியன்கணக்கான டாலர்களை வழங்குகிறது.

கடந்த மாதம், இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடர அமெரிக்காவிடம் இருந்து 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவிகளைப் பெற்றதாகக் கூறியது.

சீன சிந்தனைக் குழுவான `Taihe’ அமைப்பின் மூத்த அதிகாரி இன்னார் டான்சின் கூறுகையில், "ஒருபுறம், அமெரிக்கா போரை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பேசுகிறது, ஆனால் மறுபுறம் அது ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் உளவுத்துறை ஆதரவை வழங்கி பெண்கள், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொல்லும் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்குகிறது" என்றார்.

அமெரிக்கா தற்போது போரை முடிவுக்குக் கொண்டு வருவதைப் பற்றி பேசுகிறது. ஆனால் கடந்த காலங்களில் அது ஐக்கிய நாடுகள் சபையில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முன்மொழிவுகளை தடுத்தது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை பிரதிநிதி மார்கரெட் மெக்லியோட் பிபிசியிடம் கூறுகையில், "ஹமாஸ் பயங்கரவாதத்தை புறக்கணித்த தீர்மானங்களையும், இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமைகளை புறக்கணித்த முடிவுகளையும் மட்டுமே நாங்கள் எதிர்த்தோம்." என்றார்.

மறுபுறம், ரஷ்யா மற்றும் சீனா போன்ற பிற பெரிய வல்லரசுகள் மோதல்களை தடுக்க அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகின்றன. அவை மத்தியக் கிழக்கில் பதற்றத்தை குறைக்க உதவாது. ஆனால் அந்த நாடுகள் போர் சூழலை நிறுத்த எந்த நடைமுறை நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.

 

சீனாவின் அணுகுமுறை போரை நிறுத்த உதவுமா?

சமீபத்திய ஆண்டுகளில், சீனாவின் செல்வாக்கு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு சீனாவின் முயற்சியால், இரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது. இதுவே சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு சிறந்த உதாரணம்.

லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உட்பட பல மூத்த ஹெஸ்பொலா தலைவர்கள் கொல்லப்பட்ட போது, சீனா லெபனானின் சுயாட்சி மற்றும் பாதுகாப்பின் மீது நிகழ்த்தப்படும் 'அத்துமீறலை' எதிர்ப்பதாகவும், பொதுமக்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டிப்பதாகவும் மட்டுமே கூறியது.

காஸா மோதல் காரணமாக லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதாகவும், அப்பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் குறித்து சீனா கவலைப்படுவதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

"சீனா இந்த மோதலுக்கு காரணமான அனைத்து தரப்பினரும், குறிப்பாக இஸ்ரேல் நிலைமையை அமைதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறது." என்றார்.

 

ரஷ்யாவின் பங்கு என்ன?

மத்திய கிழக்கில் ரஷ்யா இரானின் முக்கிய நட்பு நாடாக உள்ளது. மத்திய கிழக்கின் நிலைமைக்காக ரஷ்ய கண்டனம் தெரிவித்த போதிலும், இதுவரை இந்த மோதலைத் தீர்ப்பதில் எந்த பயனுள்ள பங்கையும் அது வகிக்கவில்லை.

கடந்த மாதம் கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையில், ஹெஸ்பொலாவின் தலைவர் கொல்லப்பட்டதை ரஷ்யா கண்டிப்பதாக கூறியது. இது மத்திய கிழக்கில் ஒரு பெரியளவிலானப் போர் மூள்வதற்கான அச்சத்தை அதிகரித்துள்ளது என்றும் அது கூறியது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதலை மேலும் அதிகரிக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா கண்டிக்கிறது என்றார்.

கடந்த 2022 இல் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் ரஷ்யா மீது அமெரிக்கா விதித்தத் தடைகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கணிசமாக மோசமடைந்துள்ளன என்று அமெரிக்க சிந்தனைக் குழுவான ஸ்டிம்சன் மைய அதிகாரி பார்பரா ஸ்லேவன் கூறுகிறார்.

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளில் பிரச்னை இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அப்படியிருக்கையில், மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர சீனா ஏன் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இது குறித்து இனார் கூறுகையில், "அமெரிக்காவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ ஆணையிடும் நிலையில் சீனா இல்லை. சீனா எப்போதுமே போரை முடிவுக்குக் கொண்டு வரும் முடிவுகளை ஆதரிக்கிறது. 'இருநாட்டு தீர்வு' (இஸ்ரேல் மற்றும் பாலத்தீன பிரச்னைக்கு) வழிவகுக்கும் பேச்சுவார்த்தைகளை ஆதரித்தது." என்றார்.

"பல தசாப்தங்களாக இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது, ஆனால் அதை ஒருபோதும் இஸ்ரேல் உறுதிப்படுத்தவில்லை, அதேநேரத்தில் மறுக்கவும் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ’’ என்றும் அவர் கூறினார்.

 

இஸ்ரேலில் அமெரிக்காவின் செல்வாக்கு குறைய என்ன காரணம்?

இஸ்ரேல் - இரான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ஸ்டிம்சன் மையத்தின் அதிகாரி பார்பரா ஸ்லேவன் கூறுகையில், பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆயுத விநியோகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் இஸ்ரேலுக்கு உண்மையான அழுத்தத்தைக் கொடுக்க ஜோ பைடன் தயக்கம் காட்டுவதை நாம் அனைவரும் அறிவோம்." என்றார்.

பார்பரா மேலும் கூறுகையில், "அமெரிக்க தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் உள்ளன. இந்த சமயத்தில் பைடன் அல்லது கமலா ஹாரிஸ் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான முடிவுகளை முன்மொழிவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி செய்தால் அது டிரம்ப் மீண்டும் அதிபராக வரும் சாத்தியங்களை அதிகரிக்கும்” என்றார்.

"கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக்கொண்டார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதற்கு பல நாடுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.” என்ற பார்பரா , "கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், காஸா மற்றும் லெபனானில் போரை நிறுத்துவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரிக்கும். " என்று கூறினார்.

சர்வதேசத் தலைவர்கள் இரானையும் அதன் நட்பு நாடுகளான ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொலாவையும் இஸ்ரேலுக்கு எதிராக பதிலடித் தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று வலியுறுத்தி வருகின்றனர். அப்படி பதிலடி கொடுக்கும் பட்சத்தில் பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும்.

இரானில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஒரு கூட்டு அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்குமாறு இரானை வலியுறுத்தியது, ஆனால் இரான் இந்த கோரிக்கையை நிராகரித்தது.

லெபனானில் ஹசன் நஸ்ரல்லா படுகொலை செய்யப்பட்ட பின்னர், இரான் தனது ராணுவத்தை லெபனான் அல்லது காஸாவிற்கு அனுப்பாது என்று இரான் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லெபனான் மற்றும் பாலத்தீனத்தில் இருக்கும் படைகள் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்களைத் தற்காத்துக் கொள்ளும் திறனும் வலிமையும் கொண்டிருப்பதால், இரானிய பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நசீர் கனானி தெரிவித்தார்.

மறுபுறம், மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் இதுவரை தோல்வியடைந்துவிட்டதாக அமெரிக்க நிர்வாகமும் நம்புகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை பிரதிநிதி மார்கரெட் மெக்லியோட், "போர் நிறுத்தம் ஏற்படும் வரை, அமெரிக்க அரசாங்கம் போதுமான நடவடிக்கை எடுத்திருக்கிறது என்று நான் கூறமாட்டேன்." என்று கூறியுள்ளார்.

"இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நிலவும் மோதலுக்கு ராஜதந்திரம் மூலம் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று அவர் கூறினார்.

இஸ்ரேல் மற்றும் லெபனானில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாக அவர் விவரித்தார். கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதிக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கிற்கு 11 பயணங்களை மேற்கொண்டுள்ளார், ஏனெனில் இந்த பிரச்னையை ராஜதந்திரத்தின் மூலம் தீர்க்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிடின் மேற்குலகின் வீழ்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.மூன்றாம் உலக நாடுகள் விழிப்படைந்த அளவிற்கு மேற்குலகுகள் இன்னும் விழிப்படையவில்லை என நான் நினைக்கின்றேன். மேற்குலகு இன்னும் மற்றொரு இனத்தை கட்டியாழும் கற்கால நினைப்பிலேயே காலத்தை கடத்த நினைக்கின்றது போலும்....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

பாலஸ்தீன பிரச்சனையை தீர்க்காவிடின் மேற்குலகின் வீழ்ச்சியையும் யாராலும் தடுக்க முடியாது.மூன்றாம் உலக நாடுகள் விழிப்படைந்த அளவிற்கு மேற்குலகுகள் இன்னும் விழிப்படையவில்லை என நான் நினைக்கின்றேன். மேற்குலகு இன்னும் மற்றொரு இனத்தை கட்டியாழும் கற்கால நினைப்பிலேயே காலத்தை கடத்த நினைக்கின்றது போலும்....:cool:

பாஸ் இங்கு கதை வேறை நட்டம் அதிலும் லாபம் வரும் வழி வகைகள் உண்டு இந்த நாடுகளுக்கு  நான் ஜனதிபதிஆனால் முதலில் அரிச்சந்திரன் பாடத்தையே எடுத்து விடுவேன் விரிவாக எழுத நேரமின்மை ஒரு பொழுது எழுதுவேன் இன்னும் மற்ற திரிகள் உள்ளது அங்கும் போவனும்  லண்டனில் நேற்று 1மணிநேரம் எக்ஸ்ரா வாக கிடைத்த நேரத்தில் இந்த ஆட்டம் ஆடுகிறேன் மன்னிக்கவும் .

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.