Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராணுவ ரகசியம்

---------------------------

large.RaanuvaRakashyam.jpg

நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. பொழுது இன்னும் விடிந்திருக்கவில்லை, நேரம் அதிகாலை நாலு அல்லது ஐந்து மணி ஆகியிருக்கும் போல. வெளியில் இருட்டு இன்னும் கும்மிக் கொண்டிருந்தது. இந்த நாய்கள் இவர்களுக்கு ஏன் அடங்கிப் போகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேளை குலைக்கும் நாய்களை எப்படி குலைக்காமல் அடக்குவதென்று இந்திய ராணுவத்தில் ஒரு பயிற்சியும் இருக்கின்றதாக்கும். இதுவே இலங்கை ராணுவம் எவ்வளவு தான் பதுங்கிப் பதுங்கி வந்தாலும், எங்கள் ஊர் நாய்கள் விடாமல் குலைத்து, சில வேளைகளில் இலங்கை இராணுவத்திடம் அடிவாங்கி இழுபட்டு ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடியும் இருக்கின்றன.

இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இருந்த வித்தியாசங்களில் ஒன்று இந்திய ராணுவத்தின் மணம். அந்த மணம் அல்லது வாடை எங்கேயிருந்து அவர்களின் மேல் வருகின்றது என்று தெரியவில்லை. ஆனால் நண்பன் ஒருவன், அவன் ஒரு நாள் இவர்களிடம் தனியாக மாட்டுப்பட்டான், சொன்ன தகவல்களின் படி அந்த மணம் அவர்களின் சட்டை அல்லது நீண்ட காற்சட்டைப் பைகளுக்குள் இருக்கும் சப்பாத்திகளின் மணமே. இந்திய இராணுவத்தினர் சப்பாத்திகளை அங்கங்கே சுருட்டி வைத்திருக்கின்றார்கள் என்று அவன் சொன்னான். ஒரு பனங்கூடலுக்குள்ளால் அவனை நடத்தி கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்த போது அந்தச் சப்பாத்தியில் ஒன்றை அவர்கள் அவனுக்கும் கொடுத்ததாகச் சொன்னான். உயிரா அல்லது அந்தச் சப்பாத்தியா என்று நினைத்து அதை சாப்பிட்டதாகச் சொன்னான். அவன் வேறு சிலவும் சொன்னான், அவை பொதுநலம் கருதி இங்கே தவிர்க்கப்படுகின்றன.

ஒரு தடவை இந்திய ராணுவம் ஊரைச் சுற்றி வளைத்து தேடுகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, நாங்கள் சிலர் விழுந்தடித்து அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு ஓடிப் போனோம். அங்கு ஒரு விளையாட்டுத் திடல் இருக்கின்றது. அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது. ஆகவே அதையும் இங்கே தணிக்கை செய்கின்றேன். அந்த திடலின் மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான பனங்கூடல்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் மற்றும் பாதை இருந்தன. மூன்று பனகூடல்களுக்குள்ளும் ஒற்றையடி பாதைகள் இருந்தன. அப்பாடா............ இன்றைக்கு இந்த இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பியாகி விட்டது என்று அந்த திடலின் ஒரு பக்கமாக நின்று சாவகசமாக கதைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று எங்களுக்கு பின்னால் இருந்த பனைகளுக்கு இடையால் திபுதிபுவென்று இந்திய இராணுவத்தினர் வெளியே வந்தனர். எங்கேயிருந்து, எப்படி வருவார்கள் என்ற ஒரு வரையறை இவர்களுக்கு கிடையாது. 

இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில் அவர்கள் சுற்றி வளைத்து எங்களை பிடிப்பது நாங்கள் சின்ன வயதுகளில் விளையாடும் கள்வன் - போலீஸ் விளையாட்டு போலவே. 'ஆ..... உன்னைப் பார்த்தாச்சு.............. நீ அவுட்.............' என்று சொல்வது போல, எங்களைக் கண்டால் கூட்டிக்கொண்டு போவார்கள். ஏதாவது ஒரு பாடசாலை, கோவில் வீதி, மைதானம் இப்படி எங்காவது வைத்திருந்து விட்டு, அநேகமாக எல்லோரையும் அன்றே விட்டுவிடுவார்கள். அவர்கள் எங்களை விடுதலை செய்யும் வரை எங்களின் அம்மாக்கள் வந்து அந்த இடத்தை சுற்றியே நிற்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களைப் பிடித்து விட்ட பின்னர், வரும் வழியில் அந்த இராணுவத்தினரில் ஒருவருக்கு எவ்வளவு நீட்டு தலைமுடி என்று அம்மா ஆச்சரியத்துடன் சொன்னார். அம்மாவும் எங்களைப் போலவே இலேசாகத்தான் அங்கே வெளியில் நின்றிருக்கின்றார்.

ஆனால் மிக விரைவிலேயே நிலைமைகள் மாறியது. அமைதி என்று ஆரம்பித்தது அடிபிடியாகியது. சுற்றி வளைப்பில் பிடிபட்டால் சப்பாத்தி கொடுக்கும் காலம் முடிந்து, சப்பாத்தால் மிதித்தாலும் மிதிப்பார்கள் என்ற ஒரு கஷ்ட காலம் மீண்டும் வந்திருந்தது. எங்களின் ஆட்கள் சிலரே அவர்களுக்கு உதவியாளர்களாக மாறியது தான் பெரும் கலக்கமாக மாறியது. சுற்றி வளைப்பில் எங்களை பிடித்துக் கொண்டு போக, அங்கே உதவியாளர்களாக இருக்கும் நம்மவர்கள் தலையாட்டிகளாக மாறினார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து தலையை ஆட்டினால், தலையாட்டப்பட்டவர்கள் உள்ளே. மற்றவர்களை விட்டுவிடுவார்கள். உள்ளே போனவர்களை, பெரும்பாலும் எல்லோருமே அப்பாவிகள் தான், வெளியே எடுப்பதற்கு பலர் வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஊர்ப் பெரியவர்கள், மத குருக்கள், இப்படிச் சிலர் இந்தக் கடமையையும் செய்து கொண்டிருந்தார்கள்.

அருகில் இருந்த இந்திய ராணுவ முகாமில் பிரதான தலையாட்டியாக இருந்தவரை எனக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியம், அவருக்கும் என்னை நல்லாவே தெரியும் என்பது தான். கிட்டத்தட்ட ஒரே வயது தான். அந்த பிரதான இராணுவ முகாம் ஊடாகவே பேருந்துகள் போய் வந்து கொண்டிருந்தன. பேருந்துகளில் போய் வந்து கொண்டிருந்த சில நண்பர்களை காரணமே இல்லாமல் இறக்கி நல்லாவே அடி போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களால் ஊகிக்க முடிந்த ஒரே ஒரு காரணம் அந்த பிரதான தலையாட்டி மட்டுமே தான். என்னையும் ஒரு நாள் தலையாட்டி பார்த்தார், ஆனால் இறக்கவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அப்பவும் நான் வம்பு தும்பு என்று எதற்கும் போவது இல்லை என்பது தான் காரணம் போல. இன்னொரு சின்னக் காரணமாக அவருடைய முறைப்பெண் முறையான ஒருவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்ததும் என்று நினைக்கின்றேன்.

வீட்டில் நின்று இந்திய ராணுவத்தின் கைகளில் சிக்கவே கூடாது என்ற முடிவை ஒரு சம்பவத்தின் பின் எடுத்திருந்தேன். ஒரு நாள் எல்லாப் பக்கத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் திடுப்பென வந்தார்கள். மூன்று நாய்கள் முற்றத்தில் அவர்களைக் கண்டும் காணாதது போல தங்கள் முகநாடிகள் தரையில் தேயும்படி படுத்திருந்தன. பின் வளவுக்குள் இருந்த பனம்பாத்தி என்ன என்பதே அவர்களின் முதலாவது கேள்வி. அவர்களுக்கு அதை என்னவென்று ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லும்படி வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். என்னுடைய விளக்கத்தின் பின்னும் அவர்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் கொடுத்த பனம்பாத்தி விளக்கம் அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்திருக்கவில்லை. தலையாட்டப்படாமலேயே அன்று தடுத்து வைப்பார்கள் என்று நினைத்தேன், அன்றும் பிரதான தலையாட்டி எனக்கு தன் தலையை ஆட்டவில்லை. ஆனால் எங்களின் நண்பர்களில் ஒருவனை தடுத்து வைத்துவிட்டனர். பின்னர் அன்றிரவு, வழமையான முயற்சிகளின் பின், அவன் விடுவிக்கப்பட்டான்.

அடுத்த நாள் ஒரு பெரிய தேடுதல் ஊரில் நடக்கப் போவதாக அப்பா வந்து சொன்னார். சல்லடை போட்டுத் தேடப் போவதாகாவும், பலரைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார். இந்த தகவல் மிகவும் இரகசியமானது என்றும், இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு வீரர் மூலம் தெரிய வந்ததாகவும் கூட சொன்னார். அயலூர் ஒன்றைத் தவிர மற்றைய ஊர்கள் எல்லாவற்றையும் அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப் போகின்றார்கள் என்றும் சொன்னார். அந்த அயலூரில் மாமி ஒருவர் இருந்தார். ஆதலால் எல்லோரும் இப்பவே கிளம்பி மாமி வீட்டை போவோம் என்றும், நாளை மறுதினம் திரும்பி வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

எங்களின் வீட்டில் ஏராளமான ஆட்கள், அதை விட மாமியின் வீட்டில் இன்னும் அதிகம். எங்கள் எல்லோருக்கும் மாமியின் வீட்டில் இடம் இருக்கவில்லை. நல்ல காலமாக மாமியின் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீடு வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரின் வீடு. அவரின் பெயரையும் இங்கு தணிக்கை செய்து கொள்வோம். அவரின் குடும்பத்தார்கள் எப்போதோ இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மாமியிடமே அந்த வீட்டின் பொறுப்பு இருந்தது. மாமியின் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு, நாங்கள் சிலர் அருகில் இருக்கும் அந்த வீட்டிற்கு போனோம்.

அந்த வீட்டில் படுத்திருக்கும் போது தான், விடிகாலையில் நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. இராணுவத்தினர் சாரைசாரையாக இங்கிருந்தும் அங்கே எங்களூருக்கு போகின்றார்கள் போல என்று நினைத்துக் கொண்டே மீண்டும் நித்திரையாகினேன். விடிந்து கொண்டு வர, முன் கதவைத் திறந்து கொண்டு ராணுவத்தினர் உள்ளே வந்தார்கள். எங்களைக் அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஒரு பாடசாலை மைதானத்தில் வைத்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் விசாரணைகள் முடிந்து எங்களை விட்டார்கள்.  நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் விபரங்கள் அங்கு வந்து எங்களைக் கொண்டு போன இந்திய இராணுவத்தினருக்கு தெரிந்திருக்காதது எங்களின் அதிர்ஷ்டம்.

அடுத்த நாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தோம்.  எங்கள் ஊரில் எந்த சுற்றி வளைப்பும் நடக்கவே இல்லை என்று சொன்னார்கள். 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை தேடுதல் செய்யிறது எண்டது தான் ரகசியம் போல.

அது நெய் மாதிரி ஒரு எண்ணெய் மணம். இந்திய சாப்பாட்டுக்கடைகளில் கூட வரும். மறக்க முடியுமா... அவங்கடை எந்த வாகனம் போனாலும் அந்த மணம் கொஞ்சநேரத்துக்கு றோட்டிலை இருக்கும்.

நாய்களுக்கு அந்த மணம் பிடிக்குமோ என்னவோ.

இல்லாட்டிநாய்களுக்குப் போடத் தான் சப்பாத்தி கொண்டு வாறவங்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, villavan said:

🤣.........

இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில், அவர்கள் எங்களுடைய உறவுகள், எங்களுக்கு உதவிகள் செய்யப் போகின்றார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் பலரும் இருந்தோம். நாங்கள் 'லிபரேஷன் ஆபரேஷன்' நடந்த போது ஊரை விட்டு ஓடியிருந்தோம். இந்திய ராணுவம் வந்தவுடன் ஊருக்கு திரும்பி வந்தோம். வரும் வழிகளில் அவர்களைப் பார்த்த போது மிகவும் நேர்மறையான எண்ணம் இருந்தது.

ராணுவ ரகசியம் என்னவென்றால்................. ராணுவம் எப்போதுமே ராணுவம் தான்............... எவ்வளவு தூரத்தில் அவர்களை வைத்திருக்கின்றமோ அவ்வளவிற்கு அனுகூலம்.........👍.

நாய்களின் கண்களை நின்று நேரே பார்த்தால், அவை பின்னால் போகும் அல்லது அடங்கி விடும் என்று எங்கோ வாசித்த ஞாபகம். மூன்று தடவைகள் நாய்களிடம் கடி வாங்கியிருக்கின்றேன், இரு தடவைகள் இலங்கையில், ஒரு தடவை திருச்சியில்........... ஆதலால் இந்த தியரியில் பலத்த சந்தேகம் இருக்கின்றது................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

ஓட வெளிக்கிட்டாலோ பயந்து பின்வாங்கும்போதோ நாய்கள் கடிக்க முனையும் என நினைக்கிறேன். ஒரு தடவை தான் கடிவாங்கினேன். அது கடிநாய் வீட்டிலே தான் இருப்பது. ஒரு முறை எமது முச்சந்தியில் எதிர்பாரத விதமாக எதிரே வந்துவிட்டது. அதனை கண்டவுடன் பயத்தில் நான் அலற, வேகமாக வந்து பாய்ந்து தொடையில் கவ்விவிட்டது.

இப்போது எனது முச்சக்கரவண்டியில் மிகமெதுவாக(10-12 கி.மீ/மணி வேகம்) பயணித்தாலும் இலகுவான கடிக்கும் வாய்ப்புள்ளதால் உடனடியாக நிறுத்தி சத்தமிடுவேன், பின்னர் இன்னும் மெதுவாக நகர்ந்து அவைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரசோதரன் said:

இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு வீரர் மூலம் தெரிய வந்ததாகவும் கூட சொன்னார்

இந்திய ராணுவ காலத்தில் அடிக்கடி கொழும்பு பயணம் மேற்கொள்வதால் தமிழ் ராணுவத்தினர் பல இடங்களில் உதவி செய்வார்கள்.

முக்கியமாக இன்ன இடத்தில் கூர்க்கா நிற்கிறார்கள்.

அவதானமாக போங்கோ என்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஏராளன் said:

இன்னும் மெதுவாக நகர்ந்து அவைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவேன்.

🤣........

ஊரில் இரண்டு தடவைகளும் சிறு வயதில் ஓடித் தான் கடி வாங்கினேன். ஆனால் திருச்சியில் கடித்தது என் பெற்றோர்கள் வீட்டில் வளர்த்த அவர்களின் செல்லப்பிராணி..................... காலுக்கு கீழே படுத்திருந்தது. நான் திரும்பும் போது அதன் மேல் கால் பட்டது, எட்டி ஒரே கடி...................

உடனேயே அங்கே ஒரு தனியார் மருத்துவமனைக்கு போனோம். ஒரு ஊசி போட வேண்டும், திரும்பி நில்லுங்கள் என்றார் மருத்துவதாதி. இடது சட்டைக் கையை நன்றாக உயர்த்தி விட்டு, கையை நீட்டிக் கொண்டு நின்றேன்.......... ஆனால் அவர்கள் ஊசியை போட்டது பின்பக்கத்தில்.......🤣.

எழும்பி நிற்க சொன்ன உடனேயே எனக்கு விளங்கியிருக்கவேண்டும்..............

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியை இராணுவ அனுபவம்...உங்கள்கதையை பார்த்தபின் கண்முன்னே ஓடுகிறது..அடிவாங்கி ..பிடிபட்டு ..உயிருக்கே உத்தரவாதம் இல்லாமல் வாழ்ந்தகாலம்...இந்த இரு இராணுவத்தாலும் பட்ட அனுபவத்தை ...சொல்லமுடியாது...

நல்ல அழகான எழுத்துநடை...தொடர்க

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கடலை எண்ணெய் பாவிப்பதால் அந்த மனம் வருகிறது . ........ அவர்கள் யாழ்பாணத்துக்குள் வந்த அன்று மக்களுக்கு அறிவித்து விட்டு இயக்கம் பின்வாங்கி சென்று விட்டது ......... நல்லூரில் மக்கள் குவியத் தொடங்கி விட்டார்கள் ........ கோவிலுக்கு உள்ளேயும் வெளியேயும் ஏராளமான மக்கள் தஞ்சமடைந்திருந்தார்கள் ......... நாங்கள் ஆதீனத்துக்குள் இருந்தோம் . ........ இரவு கடந்து மூன்று, நாலு மணியிருக்கும் எழுந்து பார்த்தால் மக்களை விட அதிகமாக இராணுவம் மக்களுடன் மக்களாக நிக்கிறது . ........ பின் அங்கிருந்து வீடுகளுக்கு செல்ல 3,4 நாட்களாகியது . ........ ! 😇

  • கருத்துக்கள உறவுகள்+
14 hours ago, ரசோதரன் said:

ராணுவ ரகசியம்

---------------------------

large.RaanuvaRakashyam.jpg

நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. பொழுது இன்னும் விடிந்திருக்கவில்லை, நேரம் அதிகாலை நாலு அல்லது ஐந்து மணி ஆகியிருக்கும் போல. வெளியில் இருட்டு இன்னும் கும்மிக் கொண்டிருந்தது. இந்த நாய்கள் இவர்களுக்கு ஏன் அடங்கிப் போகின்றன என்பது கொஞ்சம் ஆச்சரியம் தான். ஒரு வேளை குலைக்கும் நாய்களை எப்படி குலைக்காமல் அடக்குவதென்று இந்திய ராணுவத்தில் ஒரு பயிற்சியும் இருக்கின்றதாக்கும். இதுவே இலங்கை ராணுவம் எவ்வளவு தான் பதுங்கிப் பதுங்கி வந்தாலும், எங்கள் ஊர் நாய்கள் விடாமல் குலைத்து, சில வேளைகளில் இலங்கை இராணுவத்திடம் அடிவாங்கி இழுபட்டு ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டே ஓடியும் இருக்கின்றன.

இலங்கை இராணுவத்திற்கும், இந்திய இராணுவத்திற்கும் இருந்த வித்தியாசங்களில் ஒன்று இந்திய ராணுவத்தின் மணம். அந்த மணம் அல்லது வாடை எங்கேயிருந்து அவர்களின் மேல் வருகின்றது என்று தெரியவில்லை. ஆனால் நண்பன் ஒருவன், அவன் ஒரு நாள் இவர்களிடம் தனியாக மாட்டுப்பட்டான், சொன்ன தகவல்களின் படி அந்த மணம் அவர்களின் சட்டை அல்லது நீண்ட காற்சட்டைப் பைகளுக்குள் இருக்கும் சப்பாத்திகளின் மணமே. இந்திய இராணுவத்தினர் சப்பாத்திகளை அங்கங்கே சுருட்டி வைத்திருக்கின்றார்கள் என்று அவன் சொன்னான். ஒரு பனங்கூடலுக்குள்ளால் அவனை நடத்தி கூட்டிக்கொண்டு போய்க் கொண்டிருந்த போது அந்தச் சப்பாத்தியில் ஒன்றை அவர்கள் அவனுக்கும் கொடுத்ததாகச் சொன்னான். உயிரா அல்லது அந்தச் சப்பாத்தியா என்று நினைத்து அதை சாப்பிட்டதாகச் சொன்னான். அவன் வேறு சிலவும் சொன்னான், அவை பொதுநலம் கருதி இங்கே தவிர்க்கப்படுகின்றன.

ஒரு தடவை இந்திய ராணுவம் ஊரைச் சுற்றி வளைத்து தேடுகின்றார்கள் என்ற செய்தி கேட்டு, நாங்கள் சிலர் விழுந்தடித்து அருகில் இருக்கும் ஒரு ஊருக்கு ஓடிப் போனோம். அங்கு ஒரு விளையாட்டுத் திடல் இருக்கின்றது. அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது. ஆகவே அதையும் இங்கே தணிக்கை செய்கின்றேன். அந்த திடலின் மூன்று பக்கங்களிலும் அடர்த்தியான பனங்கூடல்கள் இருந்தன. ஒரு பக்கம் மட்டுமே வீடுகள் மற்றும் பாதை இருந்தன. மூன்று பனகூடல்களுக்குள்ளும் ஒற்றையடி பாதைகள் இருந்தன. அப்பாடா............ இன்றைக்கு இந்த இந்திய ராணுவத்திடம் இருந்து தப்பியாகி விட்டது என்று அந்த திடலின் ஒரு பக்கமாக நின்று சாவகசமாக கதைத்துக் கொண்டிருந்தோம். திடீரென்று எங்களுக்கு பின்னால் இருந்த பனைகளுக்கு இடையால் திபுதிபுவென்று இந்திய இராணுவத்தினர் வெளியே வந்தனர். எங்கேயிருந்து, எப்படி வருவார்கள் என்ற ஒரு வரையறை இவர்களுக்கு கிடையாது. 

இந்திய ராணுவம் வந்த ஆரம்ப நாட்களில் அவர்கள் சுற்றி வளைத்து எங்களை பிடிப்பது நாங்கள் சின்ன வயதுகளில் விளையாடும் கள்வன் - போலீஸ் விளையாட்டு போலவே. 'ஆ..... உன்னைப் பார்த்தாச்சு.............. நீ அவுட்.............' என்று சொல்வது போல, எங்களைக் கண்டால் கூட்டிக்கொண்டு போவார்கள். ஏதாவது ஒரு பாடசாலை, கோவில் வீதி, மைதானம் இப்படி எங்காவது வைத்திருந்து விட்டு, அநேகமாக எல்லோரையும் அன்றே விட்டுவிடுவார்கள். அவர்கள் எங்களை விடுதலை செய்யும் வரை எங்களின் அம்மாக்கள் வந்து அந்த இடத்தை சுற்றியே நிற்பார்கள். ஒரு நாள் அவர்கள் எங்களைப் பிடித்து விட்ட பின்னர், வரும் வழியில் அந்த இராணுவத்தினரில் ஒருவருக்கு எவ்வளவு நீட்டு தலைமுடி என்று அம்மா ஆச்சரியத்துடன் சொன்னார். அம்மாவும் எங்களைப் போலவே இலேசாகத்தான் அங்கே வெளியில் நின்றிருக்கின்றார்.

ஆனால் மிக விரைவிலேயே நிலைமைகள் மாறியது. அமைதி என்று ஆரம்பித்தது அடிபிடியாகியது. சுற்றி வளைப்பில் பிடிபட்டால் சப்பாத்தி கொடுக்கும் காலம் முடிந்து, சப்பாத்தால் மிதித்தாலும் மிதிப்பார்கள் என்ற ஒரு கஷ்ட காலம் மீண்டும் வந்திருந்தது. எங்களின் ஆட்கள் சிலரே அவர்களுக்கு உதவியாளர்களாக மாறியது தான் பெரும் கலக்கமாக மாறியது. சுற்றி வளைப்பில் எங்களை பிடித்துக் கொண்டு போக, அங்கே உதவியாளர்களாக இருக்கும் நம்மவர்கள் தலையாட்டிகளாக மாறினார்கள். அவர்கள் எங்களைப் பார்த்து தலையை ஆட்டினால், தலையாட்டப்பட்டவர்கள் உள்ளே. மற்றவர்களை விட்டுவிடுவார்கள். உள்ளே போனவர்களை, பெரும்பாலும் எல்லோருமே அப்பாவிகள் தான், வெளியே எடுப்பதற்கு பலர் வரவேண்டும். பாடசாலை அதிபர்கள், ஊர்ப் பெரியவர்கள், மத குருக்கள், இப்படிச் சிலர் இந்தக் கடமையையும் செய்து கொண்டிருந்தார்கள்.

அருகில் இருந்த இந்திய ராணுவ முகாமில் பிரதான தலையாட்டியாக இருந்தவரை எனக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியம், அவருக்கும் என்னை நல்லாவே தெரியும் என்பது தான். கிட்டத்தட்ட ஒரே வயது தான். அந்த பிரதான இராணுவ முகாம் ஊடாகவே பேருந்துகள் போய் வந்து கொண்டிருந்தன. பேருந்துகளில் போய் வந்து கொண்டிருந்த சில நண்பர்களை காரணமே இல்லாமல் இறக்கி நல்லாவே அடி போட்டு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். எங்களால் ஊகிக்க முடிந்த ஒரே ஒரு காரணம் அந்த பிரதான தலையாட்டி மட்டுமே தான். என்னையும் ஒரு நாள் தலையாட்டி பார்த்தார், ஆனால் இறக்கவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அப்பவும் நான் வம்பு தும்பு என்று எதற்கும் போவது இல்லை என்பது தான் காரணம் போல. இன்னொரு சின்னக் காரணமாக அவருடைய முறைப்பெண் முறையான ஒருவர் என்னிடம் படித்துக் கொண்டிருந்ததும் என்று நினைக்கின்றேன்.

வீட்டில் நின்று இந்திய ராணுவத்தின் கைகளில் சிக்கவே கூடாது என்ற முடிவை ஒரு சம்பவத்தின் பின் எடுத்திருந்தேன். ஒரு நாள் எல்லாப் பக்கத்தாலும் வீட்டுக்குள் அவர்கள் திடுப்பென வந்தார்கள். மூன்று நாய்கள் முற்றத்தில் அவர்களைக் கண்டும் காணாதது போல தங்கள் முகநாடிகள் தரையில் தேயும்படி படுத்திருந்தன. பின் வளவுக்குள் இருந்த பனம்பாத்தி என்ன என்பதே அவர்களின் முதலாவது கேள்வி. அவர்களுக்கு அதை என்னவென்று ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லும்படி வீட்டில் எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். என்னுடைய விளக்கத்தின் பின்னும் அவர்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள். நான் கொடுத்த பனம்பாத்தி விளக்கம் அவர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் நான் என்ன சொன்னேன் என்று எனக்கே புரிந்திருக்கவில்லை. தலையாட்டப்படாமலேயே அன்று தடுத்து வைப்பார்கள் என்று நினைத்தேன், அன்றும் பிரதான தலையாட்டி எனக்கு தன் தலையை ஆட்டவில்லை. ஆனால் எங்களின் நண்பர்களில் ஒருவனை தடுத்து வைத்துவிட்டனர். பின்னர் அன்றிரவு, வழமையான முயற்சிகளின் பின், அவன் விடுவிக்கப்பட்டான்.

அடுத்த நாள் ஒரு பெரிய தேடுதல் ஊரில் நடக்கப் போவதாக அப்பா வந்து சொன்னார். சல்லடை போட்டுத் தேடப் போவதாகாவும், பலரைக் கைது செய்யும் திட்டம் இருப்பதாகவும் சொன்னார். இந்த தகவல் மிகவும் இரகசியமானது என்றும், இந்திய ராணுவத்தில் இருக்கும் ஒரு தமிழ்நாட்டு வீரர் மூலம் தெரிய வந்ததாகவும் கூட சொன்னார். அயலூர் ஒன்றைத் தவிர மற்றைய ஊர்கள் எல்லாவற்றையும் அதிகாலையிலேயே சுற்றி வளைக்கப் போகின்றார்கள் என்றும் சொன்னார். அந்த அயலூரில் மாமி ஒருவர் இருந்தார். ஆதலால் எல்லோரும் இப்பவே கிளம்பி மாமி வீட்டை போவோம் என்றும், நாளை மறுதினம் திரும்பி வரலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

எங்களின் வீட்டில் ஏராளமான ஆட்கள், அதை விட மாமியின் வீட்டில் இன்னும் அதிகம். எங்கள் எல்லோருக்கும் மாமியின் வீட்டில் இடம் இருக்கவில்லை. நல்ல காலமாக மாமியின் வீட்டிற்கு அருகில் ஒரு வீடு காலியாக இருந்தது. அந்த வீடு வரலாற்றில் மிக முக்கியமான ஒருவரின் வீடு. அவரின் பெயரையும் இங்கு தணிக்கை செய்து கொள்வோம். அவரின் குடும்பத்தார்கள் எப்போதோ இந்தியாவுக்கு போய்விட்டார்கள். மாமியிடமே அந்த வீட்டின் பொறுப்பு இருந்தது. மாமியின் வீட்டில் இரவு சாப்பிட்டு விட்டு, நாங்கள் சிலர் அருகில் இருக்கும் அந்த வீட்டிற்கு போனோம்.

அந்த வீட்டில் படுத்திருக்கும் போது தான், விடிகாலையில் நாய்கள் குலைத்து குலைத்து அடங்கிக் கொண்டிருந்தன. இராணுவத்தினர் சாரைசாரையாக இங்கிருந்தும் அங்கே எங்களூருக்கு போகின்றார்கள் போல என்று நினைத்துக் கொண்டே மீண்டும் நித்திரையாகினேன். விடிந்து கொண்டு வர, முன் கதவைத் திறந்து கொண்டு ராணுவத்தினர் உள்ளே வந்தார்கள். எங்களைக் அப்படியே அள்ளிக் கொண்டு போய் ஒரு பாடசாலை மைதானத்தில் வைத்திருந்தனர். அன்றைய நாள் முடிவில் விசாரணைகள் முடிந்து எங்களை விட்டார்கள்.  நாங்கள் தங்கியிருந்த அந்த வீட்டின் விபரங்கள் அங்கு வந்து எங்களைக் கொண்டு போன இந்திய இராணுவத்தினருக்கு தெரிந்திருக்காதது எங்களின் அதிர்ஷ்டம்.

அடுத்த நாள் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்தோம்.  எங்கள் ஊரில் எந்த சுற்றி வளைப்பும் நடக்கவே இல்லை என்று சொன்னார்கள். 

நிப்பாட்டாதீங்கோ தொடர்ந்து எழுதுங்கோ...

இதை கோராவில் வெளியிட அனுமதி கிடைக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நன்னிச் சோழன் said:

நிப்பாட்டாதீங்கோ தொடர்ந்து எழுதுங்கோ...

இதை கோராவில் வெளியிட அனுமதி கிடைக்குமா?

உங்களுக்கும், எல்லோருக்கும் என்னுடைய அனுமதி தாராளமாக இருக்கின்றது.

நான் துண்டு துண்டாக பலதையும் பத்தையும் இங்கு களத்தில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். இங்கு களத்தில் எழுதுவதை ஒரு பொழுதுபோக்காகவே ஆரம்பித்தேன். இதே தலைப்பில் அல்லது இவை சம்பந்தமான விடயங்களை தொடர முடிந்த அளவிற்கு முயற்சி செய்கின்றேன். உங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி...................🙏.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

🤣.........

நாய்களின் கண்களை நின்று நேரே பார்த்தால், அவை பின்னால் போகும் அல்லது அடங்கி விடும் என்று எங்கோ வாசித்த ஞாபகம். மூன்று தடவைகள் நாய்களிடம் கடி வாங்கியிருக்கின்றேன், இரு தடவைகள் இலங்கையில், ஒரு தடவை திருச்சியில்........... ஆதலால் இந்த தியரியில் பலத்த சந்தேகம் இருக்கின்றது................🤣.

சந்தேகம் வேண்டாம். தியரி பிழை😂.

நாய் போன்ற வேட்டைக்குப் பழக்கமான மிருகங்களை முன்னே நின்று நேரே கண்களைப் பார்த்தால், அவை உங்களை அச்சுறுத்தலாகத் தான் பார்க்கும்! அதனால் நிச்சயம் கடிக்கவே செய்யும்.

ஏராளன் சொல்வது போல, ஓடினால் நாய் துரத்துவதற்கான வாய்ப்பு அதிகம். ஏனெனில், வளர்ப்பு நாய்க்குக் கூட, ஓடும் ஒன்றைத் துரத்த வேண்டுமென்ற default setting இருக்கிறது. இதனால் தான் வளர்ப்பு நாய் உள்ள வீட்டில் சிறு குழந்தைகள் இருக்கும் போது மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எனவே, கடி வாங்காமல் இருக்க ஒரே வழி, கடி நாய்/தெரு நாயைத் தவிர்ப்பது தான். அப்படித் தவிர்க்க முடியா விட்டால், பையப் பைய (கூலாக ஒரு பாட்டை முணுமுணுத்தபடி) சாதாரணமாக நடந்து போக வேண்டும்😂. திரும்பிப் திரும்பி பார்த்து வேகமாக நடந்தால், கடி வாங்கும் வாய்ப்புகள் அதிகம்.

என் அனுபவத்தில் சுவாரசியமான விடயம்: நான் மிருக வைத்தியராக வருவதற்கு முன்னர் 3 தடவைகள் நாய்க் கடி வாங்கியிருக்கிறேன். மிருக வைத்தியராக வந்து நூற்றுக் கணக்கான நாய்களைக் கையாண்ட போது, ஒரு தடவை கூடக் கடி வாங்கவில்லை. எந்த விலங்கை எப்படி அணுக வேண்டுமென்ற பயிற்சியை முதல் வருடத்திலேயே தந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வயது மட்டத்தினருக்கு வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட காலம் என்றால் இந்த இந்திய இராணுவக் காலம் தான். ஏற்கனவே நான் சில தடவைகள் "மண்டையன் குழு" தொடர்பாக அங்காங்கே எழுதியிருக்கிறேன். கணக்கு, விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் என்று சகல பாடங்களிலும் திறமையாக இருந்த பல சக வகுப்பு மாணவர்கள் இந்திய இராணுவப் பிரச்சினையோடு ஊரை, நாட்டை விட்டு நீங்கினார்கள். சிலர் படிப்பை விட்டு ஐரோப்பாவில் கிடைத்த தொழில்களைச் செய்ய ஆரம்பித்து தற்போது நன்றாக இருக்கிறார்கள். சிலர் இந்தியாவில் படிக்க ஆரம்பித்தார்கள்.

குடும்பங்கள் சிதறிப் போன காலமும் இது தான். எங்கள் சின்ன அண்ணருக்கு, ஷெல், ஹெலி, சியாமாசெட்டி, ஆமி என்றால் மிகவும் பயப்படுவார். இந்தியன் ஆமிக்கு இவரது பயமே சந்தேகமாகத் தெரிந்திருக்கும் போல, 3 தடவைகள் சுற்றி வளைப்பில் கைது செய்து கொண்டு போய் ஒரு நாள் வைத்திருந்து விடுவித்தார்கள். அந்த நேரங்களில் அப்பாவும், அம்மாவும் எதுவும் செய்ய இயலாமல் அந்தரிக்கும் நிலை எனக்கு இன்னும் நினைத்தால் சோகம் வரும். இதனாலேயே சின்ன அண்ணரை, அவரது அரசாங்க வேலையையும் விட்டு விலக்கி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.

"உனக்கும் மீசை அரும்பீற்றுது, நீயும் வீட்டோட இரு" என்று என்னையும் வீட்டோடு பொத்தி வைத்துக் கொண்டார்கள். பொழுது போக்க வேற வழியில்லாமல் தான் கிடைப்பதையெல்லாம் வாசிக்கிற பழக்கம் வந்தது. பிறகு அந்தப் பழக்கமே, சராசரியாக இருந்த படிப்பை உயர்த்திக் கொடுக்கக் காரணமாக இருந்தது. துன்பத்திலும் ஒரு silver line என்று சொல்லலாம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இந்திய ராணுவ காலத்தில் அடிக்கடி கொழும்பு பயணம் மேற்கொள்வதால் தமிழ் ராணுவத்தினர் பல இடங்களில் உதவி செய்வார்கள்.

முக்கியமாக இன்ன இடத்தில் கூர்க்கா நிற்கிறார்கள்.

அவதானமாக போங்கோ என்பார்கள்.

எங்கள் பகுதிகளில் தமிழ் இந்திய இராணுவ வீரர்கள் மிகக்குறைவாகவே இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். தமிழில் கதைக்கும் ஒருவரை ஓரளவு ஞாபகம் இருக்கின்றது, ஆனால் அவர் கூட கேரளா என்று தான் நினைக்கின்றேன்.

அவர் தான் எங்களை அந்த சுற்றி வளைப்புக்குள் மாட்டி விட்டவர் என்று நினைக்கின்றேன்........🤣.

நான் அப்பாவிடம் உங்களுக்கு ரகசிய தகவலைச் சொன்ன அந்த இராணுவ வீரர் யார் என்று கடைசிவரை கேட்கவில்லை................

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

அவன் வேறு சிலவும் சொன்னான், அவை பொதுநலம் கருதி இங்கே தவிர்க்கப்படுகின்றன.

விளங்கிக் கொண்டேன்.

16 hours ago, ரசோதரன் said:

அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது.

ஒரு பக்கம் இருந்தாலே சொல்லத் தேவையில்லை. இங்கே மூன்று பக்கமும் சூழ்ந்திருப்பதால்…. பெயரை புரிந்து கொள்ள முடிகிறது

16 hours ago, ரசோதரன் said:

இராணுவத்தினர் சாரைசாரையாக இங்கிருந்தும் அங்கே எங்களூருக்கு போகின்றார்கள் போல என்று நினைத்துக் கொண்டே மீண்டும் நித்திரையாகினேன். விடிந்து கொண்டு வர, முன் கதவைத் திறந்து கொண்டு ராணுவத்தினர் உள்ளே வந்தார்கள்.

ஏதோ ஒரு வாசம் உங்களிடம் இருக்கிறது🤪

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:

என்னையும் ஒரு நாள் தலையாட்டி பார்த்தார், ஆனால் இறக்கவும் இல்லை, அடிக்கவும் இல்லை. அப்பவும் நான் வம்பு தும்பு என்று எதற்கும் போவது இல்லை என்பது தான் காரணம் போல

நீங்கள் யாழில் நிலைப்பீர்கள் என்ற நம்பிக்கை துளிர்கிறது.

அந்த மணம் (வாசமா கடவுளே) வருவது -

  1. சப்பாத்தியில்

  2. சப்பாத்து பொலிஷில்

  3. உடுப்பு தோய்க்கும் சவர்காரத்தில்

  4. குளிக்கும் சவர்காரத்தில்

  5. கடலை என்ணையில்

  6. பாமாயிலில்

  7. தலைக்கு வைக்கும் எண்ணையில்…

என பல ஆராய்ச்சி முடிவுகள் உள்ளன🤣.

அவர்கள் ஓடும் வாகனத்தின் புகையில் கூட இது இருப்பதையும், அவதானித்துள்ளேன்.

ஆனால் ஒரு தரம் சென்னை-பம்பாய் ரயில் பயணத்தில் ஒரு கூட்டம் இந்திய ஆமிகாரருடன் பயணித்தேன். மணம் இல்லை.

இலங்கையில் தம் பிரசன்னத்தை அறிய, இரவு வேளைகளில், இதர இடங்களில், ஏதோ ஒரு மணத்தை கலந்தார்களோ?

நாய்கள் உச்சா போவது போல.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரசோதரன் said:

எங்கள் பகுதிகளில் தமிழ் இந்திய இராணுவ வீரர்கள் மிகக்குறைவாகவே இருந்தார்கள் என்று நினைக்கின்றேன். தமிழில் கதைக்கும் ஒருவரை ஓரளவு ஞாபகம் இருக்கின்றது, ஆனால் அவர் கூட கேரளா என்று தான் நினைக்கின்றேன்.

அவர் தான் எங்களை அந்த சுற்றி வளைப்புக்குள் மாட்டி விட்டவர் என்று நினைக்கின்றேன்........🤣.

நான் அப்பாவிடம் உங்களுக்கு ரகசிய தகவலைச் சொன்ன அந்த இராணுவ வீரர் யார் என்று கடைசிவரை கேட்கவில்லை................

எங்கள் பகுதிக்கு சுழற்சியில் வந்துள்ளார்கள்.

அப்போ நான் ஸ்கொலர்சிப் காலம்.

மெட்டிராஸ் ரெஜிமெண்ட் இருக்கும் நாட்களில் எப்போதும்…கோவில்…பட்டம் விடும் இடம்…கிரிகெட் விளையாடும் இடத்தில் என் வயது பையன்களுடன் பேச்சு கொடுத்தபடி இருப்பார்கள்.

அவர்கள் கேள்விகள் அநேகம் - புலனாய்வு தகவல் திரட்டல் என்பது பின்னாளில் உறைத்த விடயம்.

அதே போல் இன்னொரு விடயம் - பெண்கள் பாலியல் வன்கொடுமை வெளியே தெரிந்த அளவுக்கு கூட ஆண் சிறார்கள் மீது இவர்கள் செய்தது வெளி வரவில்லை.

கொழும்பிலும், இந்தியாவிலும், இலண்டனிலும் சில கதைகளை கேட்டபோது - நான் தெய்வாதீனமாக தப்பி கொண்டேன் என்பதும், படித்தவராக இருந்தும் என் பெற்றார் எவ்வளவு அப்பிராணிகளா இருந்துள்ளனர் என்பதும் உறைத்தது.

இராணுவம், இராணுவம்தான்.

ஆனால் அதிலும் கேடு கெட்டது இந்திய இராணுவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

மக்களை விட அதிகமாக இராணுவம் மக்களுடன் மக்களாக நிக்கிறது . ........

அவர்களுக்கு ஆட்களுக்கா பஞ்சம், சுவி ஐயா.................. ஒவ்வொரு இடத்திலும் இப்படிக் கூட்டமாகவே நின்றார்கள்.

இந்திய ராணுவம் உலகின் நாலாவது பெரிய ராணுவம் என்று இதை வைத்து தான் சொல்லியிருக்கின்றார்கள்........................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சந்தேகம் வேண்டாம். தியரி பிழை😂.

நான் மிருக வைத்தியராக வருவதற்கு முன்னர் 3 தடவைகள் நாய்க் கடி வாங்கியிருக்கிறேன். மிருக வைத்தியராக வந்து நூற்றுக் கணக்கான நாய்களைக் கையாண்ட போது, ஒரு தடவை கூடக் கடி வாங்கவில்லை. எந்த விலங்கை எப்படி அணுக வேண்டுமென்ற பயிற்சியை முதல் வருடத்திலேயே தந்து விடுவார்கள்.

🤣...............

மூன்று தடவைகள் நாய்க்கடி வாங்கியிருக்கின்றேன் என்று சொல்ல எனக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது................... ஏனென்றால் இதை வைத்தே சில பகிடிகளை சொல்லுவார்களே என்று. உங்களுக்கும் மூன்று தடவைகள் இது நடந்திருக்கின்றது என்பது ஒரு புதுத் தைரியத்தை கொடுக்கின்றது...........🤣.

அடுத்த தடவை ஊருக்கு போகும் போது, எப்படியும் இந்தச் சந்தர்ப்பம் அமையத் தான் போகின்றது..... மெதுவாக அவைகளைக் கண்டும் காணாமல் போகப் போகின்றேன்...... ஆனால் நான் பாடுவதாக இல்லை.........

இங்கு வட கலிஃபோர்னியாவில் ஒரு நண்பர் மிருக வைத்தியராக இருக்கின்றார். சில மாதங்களின் முன் என்று நினைக்கின்றேன், சிகிச்சைக்கு வந்த ஒரு பெரிய நாயை அவர் எதற்காகவோ தூக்கவோ அல்லது அசைக்கவோ முற்பட, அது திமிறியதில், அவருக்கு இடுப்பு பிடித்து, பல நாட்கள் சிரமப்பட்டார்.........

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பன் ஒருவன் அடிக்கடி நாயிடம் கடி வேண்டுபவன் சொன்ன விளக்கம் என்னவென்றால், அவனுக்கு நாயைக் கண்டால் கடும் பயம் கிட்டத்தட்ட ஒரு போபியா மாதிரி. அப்பிடி பயப்பட்டால் உடம்பில் அட்ரினலினோ வேறு என்ன சுரப்புகளோ கூடச் சுரக்கும், அதை மணந்து பிடிக்க நாய்க்குத் தெரியும் (they can smell fear ☠️). அதாலை எப்படி நாய் எங்கை அவனைக் கண்டாலும் கடிக்கப் பார்க்குமாம்.

அட்ரினலின் சுரக்கும் சந்தர்ப்பத்தில் ஒன்று தப்பி ஓட்டம் இல்லை எதிர்ப்பு எதுவும் நடக்கலாம். நாய் இரன்டுக்கும் பொதுவாகக் கடித்து வைக்கிறது போல.😆

Edited by villavan
adding content.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, villavan said:

என் நண்பன் ஒருவன் அடிக்கடி நாயிடம் கடி வேண்டுபவன் சொன்ன விளக்கம் என்னவென்றால், அவனுக்கு நாயைக் கண்டால் கடும் பயம் கிட்டத்தட்ட ஒரு போபியா மாதிரி. அப்பிடி பயப்பட்டால் உடம்பில் அட்ரினலினோ வேறு என்ன சுரப்புகளோ கூடச் சுரக்கும், அதை மணந்து பிடிக்க நாய்க்குத் தெரியும் (they can smell fear ☠️). அதாலை எப்படி நாய் எங்கை அவனைக் கண்டாலும் கடிக்கப் பார்க்குமாம்.

அட்ரினலின் சுரக்கும் சந்தர்ப்பத்தில் ஒன்று தப்பி ஓட்டம் இல்லை எதிர்ப்பு எதுவும் நடக்கலாம். நாய் இரன்டுக்கும் பொதுவாகக் கடித்து வைக்கிறது போல.😆

அதிகம் பதறினால் இது நடக்கும். இங்கே எங்கள் ஆட்கள் (இந்திய, இலங்கை வம்சாவழியினர்) யாராவது வளர்ப்பு நாயை நடை பாதையில் கூட்டி வருவதைக் கண்டால், அரை மைல் தூரத்திலேயே வீதியின் மறு கரைக்குப் போய் விடுவார்கள்😂. அவ்வளவு பயம்.

ஆனால், இங்கே அனேக வளர்ப்பு நாய்கள் பழக்கப் பட்டவை, உரைத்துக் குரைக்கக் கூட முடியாதவை. அதிலும் Labrador போன்ற சாதுவான வகை நாயினம் என்றால் ஓனர் தான் அதனை அணில், பூனை ஆகியவற்றிடமிருந்து பாதுகாக்க வேண்டும்! அவ்வளவு சாது இவை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

எங்கள் வயது மட்டத்தினருக்கு வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட காலம் என்றால் இந்த இந்திய இராணுவக் காலம் தான். ஏற்கனவே நான் சில தடவைகள் "மண்டையன் குழு" தொடர்பாக அங்காங்கே எழுதியிருக்கிறேன். கணக்கு, விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் என்று சகல பாடங்களிலும் திறமையாக இருந்த பல சக வகுப்பு மாணவர்கள் இந்திய இராணுவப் பிரச்சினையோடு ஊரை, நாட்டை விட்டு நீங்கினார்கள். சிலர் படிப்பை விட்டு ஐரோப்பாவில் கிடைத்த தொழில்களைச் செய்ய ஆரம்பித்து தற்போது நன்றாக இருக்கிறார்கள். சிலர் இந்தியாவில் படிக்க ஆரம்பித்தார்கள்.

இதுவே தான் என் நண்பர்கள் பலருக்கும் நடந்தது. 1987ம் ஆண்டு ஏலெவல் தான் எங்களின் வகுப்பு. பரீட்சைக்கு இரண்டு மாதங்களின் முன்னர், இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை ஆரம்பித்து நாங்கள் ஊரை விட்டு ஓடினோம். பின்னர் இந்திய ராணுவம் வந்தது. பல நண்பர்கள் முதல் தடவை பரீட்சை எடுக்கவேயில்லை. எடுத்தவர்களில் மிகவும் திறமையானவர்கள் சிலருக்கு கூட மிகவும் மோசமான பரீட்சை முடிவுகள் வந்தன. அப்படியே இந்தியா அல்லது வேற நாடுகள் என்று போனார்கள். அப்படிப் போனவர்களில் மிகச் சிலரே மேற்கொண்டு படித்தனர்.

இன்று நண்பர்கள் பலரும் காசு பணம் சேர்த்து விட்டார்கள். ஆனாலும் வாழ்க்கையில் சில தவறவிடக் கூடாத விடயங்களை தவற விட்டு விட்டதாகச் சொல்லுவார்கள்...................

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஆனால், இங்கே அனேக வளர்ப்பு நாய்கள் பழக்கப் பட்டவை, உரைத்துக் குரைக்கக் கூட முடியாதவை. அதிலும் Labrador போன்ற சாதுவான வகை நாயினம் என்றால் ஓனர் தான் அதனை அணில், பூனை ஆகியவற்றிடமிருந்து பாதுகாக்க வேண்டும்! அவ்வளவு சாது இவை

மிருக உள்ளுணர்ச்சி (Animal Instinct) இல்லாமலாக்கப்பட்ட பாவப்பட்ட மிருகங்கள் போல. இயற்கைக்கு மாறாக உருவமைக்கப்பட்ட உந்தநாய்கள் அவனைக் கடிக்காது என்றுநினைக்கிறேன். உங்களுக்கும் கன காலமாய் நாய் கடிக்காததன் ரகசியம் உது தான் போல 😁.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

விளங்கிக் கொண்டேன்.

கோஷானும் ஒன்றை சொல்லியிருக்கின்றார். பொதுவாகவே எவரும் இந்த விடயங்களை எங்கும் எழுதியதை நான் இதுவரை காணவில்லை. அதனால் தான் முற்றாகத் தவிர்த்தேன்.........

1 hour ago, Kavi arunasalam said:

ஒரு பக்கம் இருந்தாலே சொல்லத் தேவையில்லை. இங்கே மூன்று பக்கமும் சூழ்ந்திருப்பதால்…. பெயரை புரிந்து கொள்ள முடிகிறது

👍................உங்களுக்கு இந்த இடம் நல்லாவே தெரிந்திருக்கின்றது......... மழை காலங்களில் தீருவிலில் வெள்ளம் நிரம்பி வழியும், ஆகவே சில நாட்களில் இங்கு போய் பந்தடிப்போம்.........

1 hour ago, Kavi arunasalam said:

ஏதோ ஒரு வாசம் உங்களிடம் இருக்கிறது🤪

🤣...........

தேங்காய் எண்ணெய்யும், நல்ல எண்ணெய்யும் கலந்த ஒன்று தான் வரும்.........🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நீங்கள் யாழில் நிலைப்பீர்கள் என்ற நம்பிக்கை துளிர்கிறது.

ஆனால் ஒரு தரம் சென்னை-பம்பாய் ரயில் பயணத்தில் ஒரு கூட்டம் இந்திய ஆமிகாரருடன் பயணித்தேன். மணம் இல்லை.

இலங்கையில் தம் பிரசன்னத்தை அறிய, இரவு வேளைகளில், இதர இடங்களில், ஏதோ ஒரு மணத்தை கலந்தார்களோ?

நாய்கள் உச்சா போவது போல.

🤣..............

இங்கு வந்து முதலாம் திகதியுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது. களத்தில் ஓரளவு வந்து போகும் நட்புகளில் யார் யாருக்கு எந்த எந்த விடயங்களில் ஒவ்வாமைகள் இருக்கின்றன் என்ற புரிதல் எனக்கு ஓரளவுக்கு வந்துள்ளது என்று நினைக்கின்றேன்........ நிலைமை கையை மீறும் போது, அந்த விடயங்களில் காந்தி தாத்தாவின் மூன்று பொம்மைகளாகி விடுவது தான் என் தெரிவாக இருக்கின்றது......................🤣.

இந்தியாவில், தமிழ்நாட்டில், இங்கிருக்கும் இந்தியர்கள் என்று எங்கேயும் நானும் இந்த 'இந்திய ராணுவ' மணத்தை அறிந்ததில்லை......... சீக்ரெட் ரெசிபி போல.....................

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

அங்கு ஒரு விளையாட்டுத் திடல் இருக்கின்றது. அந்த விளையாட்டுத் திடலுக்கு ஒரு பெயர் இருக்கின்றது. அப்படி ஒரு பெயரை எந்த இடத்திற்கும் வைக்கவே கூடாது. ஆகவே அதையும் இங்கே தணிக்கை செய்கின்றேன்.

எனக்கு டக்கென்று தெரிந்துவிட்டது!

நான் முதன்முதலாக இங்கிலீஷ் ட்ரான்ஸ்லேஷன் செய்தது இந்திய இராணுவத்துக்குத்தான்! பள்ளிக்கூட யுனிபோர்மில் (வெள்ளை சேர்ட், நீலக் காற்சட்டை) சைக்கிளில் போன என்னை மறிச்சு அவர்கள் பிடித்து வைத்திருந்த ஒருவரிடம் ஒரு வேலையை விளக்கச் சொன்னார்கள். பெரிதாக ஒன்றுமில்லை. பனையோலைகளை வெட்டித் தரவேண்டுமென்று கேட்டார்கள். மிரண்டுபோய் இருந்தவர் ஆசுவாசப்பட்டு அதற்கு பெரிய கத்தி வேண்டும்; தான் வீட்டுக்குப் போய் எடுத்து வருகின்றேன் என்றார். இந்தியன் ஆமி அவ்வளவு மொக்கர் இல்லை. ஆள் கழண்டுவிடுவார் என்று என்னையே கத்தியை அவரின் வீட்டில்போய் எடுத்துவரச் சொன்னார்கள். அந்தத் தொட்டாட்டு வேலையும் மொழிபெய்ர்ப்பு வேலையையும் செய்தேன். 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.