Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

images?q=tbn:ANd9GcSaD0_Eh_y15JJK9jLg_zk

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிப்பு: வழக்கறிஞர் வில்சன்.

சென்னை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் இன்று முதல் விடுவிக்கப்படுவதாக திமுக மாநிலங்களவை எம்பியும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான வில்சன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஏப். 4) அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

துணை வேந்தர் நியமனம், கைதிகளுக்கான தண்டனை குறைப்பு, டிஎன்பிஎஸ்சி பணி நியமனம் உள்பட எந்த மசோதாவை அனுப்பினாலும் அவற்றுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்தார். இதை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டது. இப்படி ஒரு வழக்கை தொடர எங்கள் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

அவர் வழங்கிய ஆலோசனையின் படி தொடரப்பட்ட இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாது, நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடியதாக உள்ளது. இதன்மூலம், அனைத்து மாநிலங்களின் சுயாட்சியை முதல்வர் ஸ்டாலின் நிலைநாட்டி இருக்கிறார்.

நாங்கள் 2023-ல் வழக்கு தாக்கல் செய்தோம். அதற்கு முன்பே 2 ஆண்டுகாலமாக 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்ததால், உச்ச நீதிமன்றமே 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அந்த மசோதாக்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இனி இதற்கு ஆளுநர் ஒப்புதல் தேவையில்லை.

மேலும், இனி எந்த ஒரு ஆளுநரும் அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அதை மீறி நடந்துகொள்ளக்கூடாது என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த கட்டத்தில் ஆளுநர் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கலாம் என்பதையும் தீர்ப்பில் தெரிவித்திருக்கிறார்கள். மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள். ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டால், அதன் மீது அவர் 30 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். அந்த மசோதாவை குடியரசு தலைவருக்கு பரிந்துரைக்கும் முடிவை ஆளுநர் எடுத்தால் அதனை 3 மாத காலத்துக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, இன்று முதல் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் விடுவிக்கப்படுகிறார். இனி தமிழ்நாடு அரசு யாரை முன்மொழிகிறதோ அவர்தான் வேந்தராக இருப்பார்" என தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/1357391-governor-ceases-to-be-the-chancellor-of-state-universities-in-tamil-nadu-wilson-1.html

  • கருத்துக்கள உறவுகள்

“அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு

திருவனந்தபுரம்: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பை உறுதிப்படுத்தக் கூடியது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள பினராயி விஜயன், "மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிறுத்திவைத்ததை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கூட்டாட்சி அமைப்பையும், சட்டமன்றத்தின் ஜனநாயக உரிமைகளையும் நிலைநிறுத்துகிறது. அமைச்சரவையின் ஆலோசனையின்படி ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இந்த தீர்ப்பு மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. சட்டமன்றத்தின் அதிகாரங்களை ஆளுநர்கள் அபகரிக்கும் போக்குக்கு எதிரான எச்சரிக்கையாகவும் இந்தத் தீர்ப்பு அமைகிறது. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் 23 மாதங்கள் வரை கிடப்பில் போடப்பட்ட நிலையில் உள்ளன. இதற்கு எதிரான சட்டப் போராட்டத்தில் கேரளா ஈடுபட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, கேரளா எழுப்பிய இதுபோன்ற பிரச்சினைகளின் பொருத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கேரள ஆளுநராக இருந்த ஆரிஃப் முகமது கான் அனுமதி வழங்க மறுத்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது கவனிக்கத்தக்கது.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்: சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.

முதல் முறையாக மசோதா அனுப்பப்படும்போது அந்த மசோதாவை நிறுத்தி வைக்க விரும்பினால், மசோதாவில் உள்ள அம்சங்களை மறுபரிசீலனை செய்ய அல்லது திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம். அல்லது, குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கலாம்.

சட்டப்பேரவை மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநரிடம் சமர்ப்பித்தால், ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. அவர் ஒப்புதலை வழங்க வேண்டும்.

அரசியலமைப்பில் ஆளுநருக்கு வீட்டோ (Veto) அதிகாரம் கிடையாது. மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் தேவையற்ற தாமதம் கூடாது. இரண்டாவது முறையாக மசோதா அனுப்பப்படும்போது அதனை குடியரசுத் தலைவருக்கு பரிந்துறைக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் தனது ஒப்புதலை வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக உள்ளது.

அந்த வகையில், குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று நீதிமன்றம் கருதுகிறது.

10 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக நிறுத்திவைத்த ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் தன்னிச்சையானது, எனவே அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. 10 மசோதாக்கள் சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்ட பிறகு அவை மீண்டும் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அந்த மசோதா அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.

ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

ஆளுநர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த உச்ச நீதிமன்றத்தின் சில கருத்துகள்:

> ஆளுநர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு ஏற்ப விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும்

> அரசியல் நோக்கங்களால் வழிநடத்தப்படாமல், ஒரு நண்பராகவும், வழிகாட்டியாகவும், தத்துவஞானியாகவும் தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும்

> ஆளுநர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முன்னோடி. அவர் ஒரு ஊக்கியாக இருக்க வேண்டும், தடுப்பவராக இருக்கக்கூடாது.

> ஆளுநர்கள் அரசியலமைப்பின் மதிப்புகளைப் பாதுகாக்க வேண்டும்

> ஆளுநர்கள் தங்களது அரசியலமைப்பு பதவிப் பிரமாணத்தின்படி நடந்து கொள்ள வேண்டும்

> ஆளுநர்கள் தங்கள் நடவடிக்கைகள் மக்களின் அரசியலமைப்பு நெறிமுறைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளதா என்பதை தங்களுக்குத் தாங்களே ஆய்வு செய்ய வேண்டும்.

ஆளுநர்களுக்கு காலக்கெடு: ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர்களிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ஒப்புதலை நிறுத்தி வைத்தால், ஒரு மாதம். மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால், மூன்று மாதங்கள்.

மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள். ஆளுநர்களால் மறுபரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு. ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“அதிகாரங்களை அபகரிக்கும் ஆளுநர்களுக்கு எச்சரிக்கை!” - உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பினராயி விஜயன் வரவேற்பு | Upholds federal system: Kerala CM welcomes SC verdict RN Ravi witholding bills - hindutamil.in

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ்நாடு ஆளுநரின் செயல் சட்டவிரோதம்' - 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் வழங்கி தீர்ப்பு

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

8 ஏப்ரல் 2025, 07:43 GMT

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவ்வாறான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் மோதல் போக்கு நீடிக்கிறது. குறிப்பாக, ஆர்.என்.ரவி ஆளுநரான பிறகு அந்த மோதல் இன்னும் தீவிரமானது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும் திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

அந்த வகையில், ஆளுநர் நிலுவையில் வைத்துள்ள, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

"10 மசோதாக்களையும் நிலுவையில் வைத்திருப்பது சட்டப்பிரிவு 200-க்கு எதிரானது மற்றும் பிழையானது. நீண்ட காலமாக மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. பஞ்சாப் வழக்கின் தீர்ப்புக்குப் பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல. ஆகவே, உச்ச நீதிமன்றத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி அந்த 10 மசோதாக்களும் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது என்று அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை." என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதம் என்ன?

வழக்கு விசாரணையின் போது, மாநில அரசின் சார்பில் வாதாடிய ராகேஷ் திவேதி சில விஷயங்களை முன்வைத்தார்.

"மத்திய அரசின் அதிகார வரம்பில் உள்ள விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்றினால் அதை நிராகரிப்பதற்கு ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆனால், மாநில பட்டியலில் உள்ளவற்றுக்காக நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

சட்டமன்றத்தில் அனைத்தையும் ஆராய்ந்து மசோதா நிறைவேற்றப்படுவதாகக் கூறிய ராகேஷ் திவேதி, "ஆளுநர் நிராகரிக்க வேண்டும் என்பதற்காக மசோதா அனுப்பி வைக்கப்படுவதில்லை. ஆனால், எந்த விளக்கமும் கொடுக்காமல் நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல" என வாதிட்டார்.

"மாநில அமைச்சரவையின் அறிவுரைகளின் படியே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்" எனவும் தமிழ்நாடு அரசு தனது வாதத்தை முன்வைத்தது.

அப்போது நீதிபதிகள், "ஆளுநர் விளக்கம் அளிக்காமல் திருப்பி அனுப்பினால் அவர் மனதில் என்ன உள்ளது என எப்படி அறிந்து கொள்ள முடியும்?" எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், 2023 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கு மசோதாக்கள் அனுப்பப்பட்ட பிறகு தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? இரண்டு ஆண்டுகளாக மசோதாக்கள் ஆளுநரிடம் உள்ளதா? ஒப்புதல் அளிக்க முடியாது என அவர் எப்போது உணர்ந்தார்? ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றம் இருந்ததா என்று நீதிபதிகள் கேட்டனர்.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

ஆளுநர் தரப்பு வாதங்கள் என்ன?

ஆளுநர் சார்பாக வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, "அனைத்து சூழ்நிலைகளிலும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்றார்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நிறுத்தி வைப்பது, திருப்பி அனுப்புவது, அதிருப்தியை தெரிவிப்பது என நான்கு அதிகாரங்கள் ஆளுநருக்கு உள்ளதாகவும் அவர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

'மாநில அரசின் மசோதாக்களில் சில முரண்பட்ட காரணங்களுக்காக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தால் அரசும் ஆளுநரும் இணைந்து முடிவெடுக்கும் வகையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம்' எனவும் ஆளுநர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மசோதாக்கள் மீது முடிவெடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்புமாறு ஆளுநரை மாநில அரசு கேட்கலாமே தவிர, இது எந்த வகையிலும் மாநில உரிமைகளைப் பறிப்பது அல்ல எனவும் ஆளுநர் தரப்பில் வாதிடப்பட்டது.

"சட்டவிதிகளுக்கு எதிராக இருந்தது"

துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆளுநர் தரப்பு, துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசின் நடைமுறை, மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக வாதிட்டது.

அதேநேரம், மத்திய சட்டவிதிமுறைகளுக்கு எதிராக மாநில அரசின் நடவடிக்கை இருந்தால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "அரசுக்கு ஆளுநர் தடையாக இருக்கிறார். மசோதா விவகாரம் தொடர்பாக ஆளுநர் முட்டுக்கட்டை போட முடியாது" எனத் தெரிவித்தனர்.

ஆனால், ஆளுநர் தரப்போ, "மசோதாவை திருப்பி அனுப்பினாலோ அல்லது நிராகரித்தாலோ அதற்கான காரணத்தை தெளிவாக சுட்டிக் காட்ட வேண்டும் என்ற அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால், அதைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்பதாக இல்லை" என ஆளுநர் தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழு விவரம்

தீர்ப்பை வழங்கிய போது உச்ச நீதிமன்ற நீதிபதி பர்டிவாலா கூறுகையில், "தன்னிச்சையான அதிகாரம் (absolute veto) என்ற கருத்துக்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநருக்கு மசோதா அனுப்பப்படும் போது, அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்." என தெரிவித்தார்.

"ஆளுநர் நேர்மையுடன் செயல்படவில்லை. மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஆளுநரால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பதற்கு ஆளுநருக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை. பிரிவு 200-ன் கீழ் தன்னிச்சையான அதிகாரம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது. மாநில சட்டமன்றத்தால் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்படும் போது அந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளது.

இரண்டாவதாக அனுப்பப்பட்ட மசோதா முதலில் அனுப்பியதிலிருந்து வேறுபடும் போதுதான் இதற்கு விதிவிலக்கு உள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைக்கும் போதோ அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்பும் போதோ ஆளுநர் அம்மசோதா மீது ஒரு மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும். மசோதாக்களை நிறுத்தி வைப்பது அல்லது குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது, மாநில அரசின் முடிவுக்கு முரணானதாக இருந்தால், ஆளுநர் அதுகுறித்து அதிகபட்சம் மூன்று மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்." என்று நீதிபதி பர்டிவாலா குறிப்பிட்டார்.

"ஆளுநர் ஒரு மாநில அரசின் நலன் மற்றும் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பது பொது விதியாக உள்ளது. (இந்திய அரசு சட்டம்) 1935-ன் கீழ் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள எந்தவொரு விருப்புரிமையும் அரசியலமைப்பை செயல்படுத்தும் போது இல்லாமல் ஆகிறது. ஆளுநர் ஒரு மாநிலத்தின் நலன் மற்றும் மாநில அரசின் ஆலோசனைப் படியே செயல்பட வேண்டும் என்பதை மீண்டும் கூறுகிறோம். சட்டப் பிரிவு 200ன்கீழ் அவருக்கு என தனிப்பட்ட விருப்புரிமை எதுவும் இருக்க முடியாது" என்றார் நீதிபதி பர்டிவாலா.

இந்த வழக்கில் பி.ஆர்.அம்பேத்கரின் வார்த்தைகளை நீதிபதி ஜே.டி.பர்டிவாலா மேற்கோள் காட்டியுள்ளார். 'ஓர் அரசியல் அமைப்பு எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதைச் செயல்படுத்துகிறவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாக அமையும்' என்ற வார்த்தைகளை அவர் குறிப்பிட்டுள்ளார்.

10 மசோதாக்கள் என்ன?

தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மசோதா, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக திருத்த மசோதா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

வழக்கின் பின்னணி

தமிழக சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 22 மசோதாக்கள் மீது ஆளுநர் மாளிகை எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தது.

இதேபோல பஞ்சாப் மாநிலத்தில் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் தலைமையிலான அரசுக்கும் இடையில் மோதல் நீடித்து வந்தது.

இதையடுத்து அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது. இதற்குப் பிறகு, இதே போன்ற வழக்குகளை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும் தொடர்ந்தன. இந்த வழக்குகளை ஒட்டுமொத்தமாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், ஜே.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, ஆளுநர்கள் இதுபோலச் செயல்படுவது, "நெருப்போடு விளையாடுவதைப் போல" என்று 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. அந்த வழக்கு அந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக நவம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இருந்து 10 மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

நவம்பர் 20ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது அந்த மசோதாக்கள் மீண்டும் ஆளுநர் மாளிகையிலேயே இருக்க வேண்டும் எனக் கருதிய தமிழ்நாடு அரசு உடனே சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது.

தமிழ்நாடு அரசு vs ஆளுநர்

பட மூலாதாரம்,DIPR

உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஸ்டாலின் கருத்து

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்ப்பு குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளதாகக் கூறினார். மேலும், "ஒரு முறை ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றினால், ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என அரசியல் சாசனத்தில் உள்ளது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஆளுநர் தனக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறி வந்தார்." என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பைக்குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின்," தமிழ்நாடு அரசின் வாதத்திலிருந்த நியாயத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்ட விரோதம் எனவும், ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாகவும் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த வெற்றி" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு போராடியது, தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது உரையில் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cdjlyn82vjzo

  • கருத்துக்கள உறவுகள்

வேந்தராக ஆளுநர் நீடிப்பாரா? உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு

தமிழ்நாடு அரசு - ஆளுநர், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பளித்துள்ளது.

'உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கிடைத்த வெற்றி' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி.

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் என்ன நடக்கும்? பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வதில் சிக்கல் உள்ளதா?

ஆளுநரின் செயலும் தமிழ்நாடு அரசின் முறையீடும்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட 22 மசோதாக்களின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார்.

இவற்றில் பல்கலைக்கழக சட்டங்களை மாற்றியமைப்பது தொடர்பான பத்து மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பி அனுப்பினார். இதே மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது.

ஆனால், மசோதாக்களின் மீது ஆளுநர் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதையடுத்து, ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இரண்டு ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.

தீர்ப்பில் என்ன உள்ளது?

இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.டி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தன. செவ்வாய்க் கிழமையன்று (ஏப்ரல் 8) இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், "சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் எதிரானது" எனக் கூறினர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான பஞ்சாப் மாநில அரசு வழக்கின் தீர்ப்பை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், "அதன்பிறகும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது சரியல்ல" எனக் கூறினர். இந்த வழக்கின் போது ஆளுநரின் அதிகாரத்தை நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அறிவித்தனர். குறிப்பாக, அந்த மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நாளிலேயே அவற்றுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கருதப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தமிழ்நாடு அரசு - ஆளுநர், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

தீர்ப்பில், 'ஆளுநருக்கு தன்னிச்சையான அதிகாரம் (Veto) என்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடமில்லை. சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் மசோதாவுக்கு அரசியலமைப்புப் பிரிவு 200-ன் கீழ் ஏதாவது ஒரு நடவடிக்கையை அவர் எடுக்க வேண்டும்' என நீதிபதி ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார்.

சட்டப்பேரவையில் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பும் போது அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது என்பது பொது விதியாக உள்ளதாகவும் தீர்ப்பில் ஜே.டி.பர்திவாலா குறிப்பிட்டார்.

"மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 200-ன் கீழ் அவருக்கு என எந்த தனிப்பட்ட விருப்புரிமையும் இல்லை" என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

'ஒரு மசோதா கிடைத்ததும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதாக இருந்தால் அதைப் பற்றி மூன்று மாதங்களுக்குள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும்' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக வேந்தராக ஆளுநர் தொடர்வாரா?

தமிழ்நாடு அரசு - ஆளுநர், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம்,P WILSON

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து பல்கலைக் கழகங்களில் வேந்தராக ஆளுநர் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க எம்.பியும் மூத்த வழக்கறிஞருமான வில்சன், "பல்கலைக் கழகங்கள் மீது ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் நீக்கப்பட்டுள்ளன. துணைவேந்தர் நியமனம், தேர்வுக் குழு ஆகியவற்றில் அவரது அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, பல்கலைக் கழகங்களில் இருந்து வேந்தர் என்ற பதவியை நீக்குவது தொடர்பானது அல்ல எனவும் குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்பின் போது இதையே குறிப்பிட்ட வில்சன், "பல்வேறு பல்கலைக் கழகங்களில் ஆளுநர் வேந்தராக இருக்கிறார். அந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு துணைவேந்தர் நியமனம் உள்பட அனைத்துப் பணிகளையும் தடுத்து வந்தார். அவர் வேந்தராக நீடிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக மாநில அரசு கூறும் நபரை வேந்தராக நியமிக்க வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டிருந்தது" எனக் கூறினார்.

"இது பல்கலைக்கழகங்களில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் வேந்தராக இருக்கிறார். பிற பல்கலைக்கழங்களில் வேந்தராக ஆளுநர் இருக்கிறார். அதிகாரத்தை முதலமைச்சர் எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படும்" என்கிறார்.

'உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரச் சட்டம் வரலாம்'

"துணைவேந்தர் தேடுதல் குழுவில் (Search committee) பல்லைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதி இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளது. இந்த தீர்ப்பை தொடர்ந்து விதிகளை மீறி துணைவேந்தர்கள் நியமனங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தி.

கல்வி பொதுப்பட்டியலில் இருப்பதால் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகள் மீறப்படும் போது, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை நிறுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"மசோதாக்களில் சட்டமீறல் உள்ளதா என்பதை ஆளுநர் ஆராய்வதற்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறுவதை ஏற்க முடியாது. ஆளுநரை நீக்குமாறு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதை ஆளுநர் ஏற்க வேண்டும் என்பதைப் போல இந்த தீர்ப்பு உள்ளது" என ராமமூர்த்தி தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த தீர்ப்பு நிலைத்திருப்பதற்கான வாய்ப்புகளும் குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

"குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்"

தமிழ்நாடு அரசு - ஆளுநர், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பட மூலாதாரம்,TARASU SHYAM

படக்குறிப்பு,தராசு ஷ்யாம்

அதேநேரம், தீர்ப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்தை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"ஆளுநர்கள் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, உச்ச நீதிமன்றம் அந்த அதிகாரத்தை தானே எடுத்துக் கொள்ளும் என்பது தான் இதில் கவனிக்க வேண்டிய விஷயம். அது ஜனநாயகத்துக்கு சரியானதாக இருக்குமா என்பது பிரதான கேள்வி" எனக் கூறுகிறார் ஷ்யாம்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், " இந்த தீர்ப்பு, அனைத்து மாநில ஆளுநர்களுக்கும் பொருந்தும். எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது எனத் தெரியவில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தனக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மறைமுக ஆட்சி அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் செலுத்துவதுபோல இந்த உத்தரவு உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கூறும் ஷ்யாம், "அவ்வாறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவில்லை என்றால் இது சட்டமாகிவிடும். இந்த தீர்ப்பு குடியரசுத் தலைவருக்கும் பொருந்தும்" எனத் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்வது தான் சரியானதாக இருக்கும் எனக் கூறிய ஷ்யாம், "அரசியல் சாசனத்தை மதிக்காத ஒருவரை எவ்வாறு தொடர அனுமதிக்கிறீர்கள் எனக் குடியரசுத் தலைவரைப் பார்த்து கேள்வி கேட்பதாக இந்த தீர்ப்பை பார்க்க முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆளுநர் தனக்கு அனுப்பும் சட்ட முன்வடிவை எவ்வளவு நாள் தாமதிக்கலாம் என்றும் அவ்வாறு தாமதித்தால் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக நீதிமன்றம் கூறுவதாகவும் ஷ்யாம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn05jv95v8qo

  • கருத்துக்கள உறவுகள்

"துண்டறிக்கை" கூட வாசிக்கத் தெரியாத ஸ்ராலின் எல்லா மாநிலங்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய ஒரு தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறார்! இதைப் பற்றி "முக்கிய"😎 செய்திகள் எவையும் வெளிவரவில்லையா இன்னும்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

"துண்டறிக்கை" கூட வாசிக்கத் தெரியாத ஸ்ராலின் எல்லா மாநிலங்களுக்கும் நன்மை பயக்கக் கூடிய ஒரு தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறார்! இதைப் பற்றி "முக்கிய"😎 செய்திகள் எவையும் வெளிவரவில்லையா இன்னும்?

இது எல்லாம் ஒரு சாதனையா? நம்ம அண்ணன் ஒரு கூட்டத்தில் கூறினார், தான் முதலமைச்சராக வந்த பின்னர் ஆளுநர் மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை பூட்டி திறப்பை தலையணைக்கு கீழ் வைத்து தூங்கி விடுவாராம். ஆளுநர் அதற்கு பயந்து கையெழுத்து போட்ட பின்னரே திறந்து அவரை வெளியே போக விடுவாராம். அந்த அறிவார்ந்த ஆலோசனையை கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வென்றது ஒரு சாதனையா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

இது எல்லாம் ஒரு சாதனையா? நம்ம அண்ணன் ஒரு கூட்டத்தில் கூறினார், தான் முதலமைச்சராக வந்த பின்னர் ஆளுநர் மசோதாவுக்கு கையெழுத்து போடவில்லை என்றால் ஆளுநர் மாளிகையை பூட்டி திறப்பை தலையணைக்கு கீழ் வைத்து தூங்கி விடுவாராம். ஆளுநர் அதற்கு பயந்து கையெழுத்து போட்ட பின்னரே திறந்து அவரை வெளியே போக விடுவாராம். அந்த அறிவார்ந்த ஆலோசனையை கேட்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வென்றது ஒரு சாதனையா? 😁

சீமான் இப்படியான வழக்கை நிச்சயம் வித்தியாசமாகத் தான் கையாண்டிருப்பார்.

1. வழக்கைப் போட்டிருக்க மாட்டார்.

2. பின்கதவால் ஆளுனரிடம் டீல் பேசி, ஏதாவது செய்ய முயன்றிருப்பார்.

3. ஆளுனர் அதை எதிர்த்து வழக்குப் போட்டிருப்பார்.

4. நீதி மன்றம் அழைத்தால் போகாமல், ஊர் ஊராக சுற்றித் திரிவார்.

5. அழைப்பாணையை வாங்காமையால் அவர்கள் கதவில் ஒட்டினால் "தூள் தூளாகக் கிழித்து" சீமான் குழு ஆணையை வாசிக்க முற்படும்😂.

6. பிறகு வழக்கைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் போவார், யாராவது பிரபல வட இந்திய வழக்கறிஞர்கள் உதவுவர்!

7. கேஸ் ஓவர்!

Trivia: இதே போல நடந்து கொள்ளும் இன்னொரு பிரபலம் மேற்குலகில் இருக்கிறார், யார் சொல்லுங்கோ பார்க்கலாம்😂?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Justin said:

Trivia: இதே போல நடந்து கொள்ளும் இன்னொரு பிரபலம் மேற்குலகில் இருக்கிறார், யார் சொல்லுங்கோ பார்க்கலாம்😂?

யாரோ? யாரோ? இவரோ!

https://www.facebook.com/share/r/1AJ2mUXGG1/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

Trivia: இதே போல நடந்து கொள்ளும் இன்னொரு பிரபலம் மேற்குலகில் இருக்கிறார், யார் சொல்லுங்கோ பார்க்கலாம்😂?

சீமான் போன்றே மேற்குலகில் இருக்கின்ற பிரபலமா ?

அவர் மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழர் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்

உலகின் அமைதியையும் சமாதானத்தையும் இலட்சியமாக கொண்டவர்

எல்லோரும் சமன் என்ற நோக்கம் கொண்டவர்

சீமான் போன்று காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றும் பேசுபவர்

டொனால்ட் ட்ரம்

  • கருத்துக்கள உறவுகள்

இது மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி.

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளி சொன்ன “சார்” ஆளுனர் ரவிதான் என மறைமுகமாக ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார் டாக்டர் காந்தராஜ்.

பார்ப்போம் ரவி களி தின்னும் காலம் கூட வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் இது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஆட்டுக்கு தாடியும் ஆளுனருக்கு அதிகாரமும் அவசியம் அற்றது என்று அறிஞர் அண்ணா (திமுக தலைவர்) காலத்தில் இருந்தே கூறிவருகின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் இது பற்றி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

ஆட்டுக்கு தாடியும் ஆளுனருக்கு அதிகாரமும் அவசியம் அற்றது என்று அறிஞர் அண்ணா (திமுக தலைவர்) காலத்தில் இருந்தே கூறிவருகின்றோம்

இதை கூறியவர் அறிஞர் அண்ணா. அண்ணா கூறியதாக நேரடியாக கூறாமல் அவர் காலத்தில் இருந்து நாம் கூறுகிறோம் என்று அதை கூறியது தான் என்பது போல் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, island said:

இதை கூறியவர் அறிஞர் அண்ணா

அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே கூறிவருகின்றோம் என்று சீமான் சொல்லும் போதே தெரிகின்றது ஆட்டுக்கு தாடியும் ஆளுனருக்கு அதிகாரமும் அவசியம் அற்றது என்று அண்ணா சொன்னதை இவர் அண்ணாவை ஏற்று கொண்டகாலம் தொடங்கி ஏற்று கொண்டுள்ளார் என்பது.

தற்போது இந்திய தேசிய தலைவர் காமராசர் என்பவரை புழுகிதிரிகின்ற சீமான் இப்போது திமுக அண்ணாவை அறிஞர் அண்ணா என்றும் ஆளுனருக்குக்கு அவர் சொன்ன கருத்தையே ஏற்று கொண்டுள்ளார்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இது மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி.

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளி சொன்ன “சார்” ஆளுனர் ரவிதான் என மறைமுகமாக ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார் டாக்டர் காந்தராஜ்.

பார்ப்போம் ரவி களி தின்னும் காலம் கூட வரலாம்.

இது பெரும் அரசியல் வெற்றிப்போல் தான் தெரிகிறது, ஆனால் ஆளுனர் மீது எதுவம் எதிர் நடவடிக்கை இருக்காது, பாஜகவை அதீதமாக எதிர்த்தால் இவர்களுக்கு பாதகமாக அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

இது மாநில சுயாட்சிக்கு கிடைத்த வெற்றி.

அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் குற்றவாளி சொன்ன “சார்” ஆளுனர் ரவிதான் என மறைமுகமாக ஒரு பேட்டியில் சொல்லி உள்ளார் டாக்டர் காந்தராஜ்.

பார்ப்போம் ரவி களி தின்னும் காலம் கூட வரலாம்.

தமிழ் தேசியம் பேசும் தமிழ் நாட்டில் மாநில சுயாட்சிக்கு இவ்வளவு மதிப்பா?மனசு பொறுக்குதில்லை ..தமிழன் மாநில சுயாட்சியில் அதிகாரங்களை அனுபவிப்பதா....நான் சிறிலங்கா தமிழனாக வாழும் பொழுது இவர்கள்

எழுது மாநில சுயாட்சிக்கு எதிராக கருத்து....வரும் காலத்தில் இதனால் பெரிய ஆபத்து இந்தியா தேசியத்திற்கு ஏற்பட போகின்றது..என மோடிக்கு தந்தி அடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

வரும் காலத்தில் இதனால் பெரிய ஆபத்து இந்தியா தேசியத்திற்கு ஏற்பட போகின்றது..என மோடிக்கு தந்தி அடிக்க வேண்டும்

இந்த அபாயத்தை உணர்ந்து தான் அங்கே ஒருவர் தமிழ்நாட்டில் இந்திய தேசியம் வளர்கின்றது என்று நிகழ்த்து காட்டிய அன்பு இளவல் அண்ணாமலை என்றும் உலகில் தமிழை வளர்க்கின்ற பாரத பிரதமர் என்றும் புகழாரம் பாடுகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

தமிழ் தேசியம் பேசும் தமிழ் நாட்டில் மாநில சுயாட்சிக்கு இவ்வளவு மதிப்பா?மனசு பொறுக்குதில்லை ..தமிழன் மாநில சுயாட்சியில் அதிகாரங்களை அனுபவிப்பதா....நான் சிறிலங்கா தமிழனாக வாழும் பொழுது இவர்கள்

எழுது மாநில சுயாட்சிக்கு எதிராக கருத்து....வரும் காலத்தில் இதனால் பெரிய ஆபத்து இந்தியா தேசியத்திற்கு ஏற்பட போகின்றது..என மோடிக்கு தந்தி அடிக்க வேண்டும்.

அண்ணை ஆர் யூ ஓக்கே? 🤣

12 hours ago, செவ்வியன் said:

இது பெரும் அரசியல் வெற்றிப்போல் தான் தெரிகிறது, ஆனால் ஆளுனர் மீது எதுவம் எதிர் நடவடிக்கை இருக்காது, பாஜகவை அதீதமாக எதிர்த்தால் இவர்களுக்கு பாதகமாக அமையலாம்.

பாஜக ஆட்சி மாறும் போது அதுவரை ரவி உயிருடன் இருந்தால் கிளறப்படலாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2025 at 01:13, goshan_che said:

அண்ணை ஆர் யூ ஓக்கே? 🤣

I am okay baby🤣

தமிழ் தேசியம் வளர்ந்தால் அது உலக பொருளாதாரத்துக்கும் ,சிறிலங்கா தேசியத்துக்கும் பெரிய சவாலாக மாறிவிடும் அதுதான் அந்த கருத்து🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.