வீதியோரம் .
மலர் . ......... 11.
புத்தமதத்தவர்களுக்கு புனிதமான போயாதினம். இல்லறத்தைத் துறந்த கௌதமன் சொல்லறமாகிய ஞானத்தை பெற்றதாக கொண்டாடும் தினம். இன்று மாலையிலேயே சந்திரன் பூரண சந்திரனாய் முழுப் பிரகாசத்துடன் வானில் வலம் வரும் பௌர்ணமி தினம். அதிகாலையிலேயே அயல் கிராமத்தவர் வந்து விநோதனையும் மணிமேகலையையும் அலங்கரிக்கும் பொருட்டு அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த புத்தவிகாரையும் காகிதப்பூக்களாலும் வெளிச்சக்கூடுகளாலும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கு. அன்று கடையில் வருபவர்க்கெல்லாம் இலவசமாக சைவ, அசைவ உணவுகள்,குளிர்பானங்கள் மற்றும் மிதமான மதுவகைகள் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தபடியால் அந்தப் பொறுப்பு முழுவதையும் அந்தப் பெண்கள் இருவரும் மற்றும் இளைஞனும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அண்ணாச்சியும் தகவல் தெரிந்து தனது குடும்பத்துடன் வந்து கலந்து கொள்கிறார். யுகேந்திரன், சுஜிதா, அயலவர்கள் மற்றும் விகாரையைச் சேர்ந்த மாணவர்கள் என எல்லோரும் கூடி தங்கள் தங்களுக்கென ஒவ்வொரு வேலைகளையும் பொறுப்பெடுத்து மிக நேர்த்தியாக செய்துகொண்டிருக்கின்றனர்.அங்கிருந்து கடைவரை வீதியோரங்களில் எல்லாம் வண்ண வண்ண ரிசு பேப்பர்கள் முக்கோணமாய் கத்தரித்து கயிறுகளில் தொங்கவிடப்பட்டிருக்கின்றன.கூடவே வெளிச்சக்கூடுகளும். கம்பங்களில் குலையுள்ள வாழைகளாலும் தென்னம் பாலைகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன.ஒலிபெருக்கியில் இரைச்சலின்றி மென்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ், சிங்களப்பாடல்கள் ஒலிக்கின்றன.வண்ணங்களாலான டியூப் லைட்டுகளும் ஒளிவீசுகின்றன.
அதிகாலையிலேயே மணமக்களை அழைத்துச் சென்றபடியால் இந்த ஆரவாரமெல்லாம் அவர்களுக்குத் தெரியாது. காலை 10:00 மணியளவில் விகாரையினுள் அந்தப் பிரமாண்டமான பொன்னிறப் பகவான் புத்தரின் முன் தண்ணீர் தாம்பாளத்தில் தாமரைப்பூக்கள் நிறைந்திருக்க , தீபங்கள் ஒளிவீசிக்கொண்டிருக்க விஷேசமாக வருகை தந்திருந்த வணக்கத்துக்குரிய பிக்குமார்கள் எல்லோரும் கையில் விசிறிகளுடன் வரிசையாய் வெண்துகில் விரித்த ஆசனங்களில் கம்பீரமாய் வீற்றிருக்கின்றார்கள். வெளியே வெடிச்சத்தங்கள் அதிர, தாரை தப்பட்டைகள் முழங்க பட்டுத் துணிப் பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு பென்னம் பெரிய யானைகள் வருகின்றன. அவற்றின் மேலிருக்கும் அம்பாரியில் விநோதனும் மணிமேகலையும் சர்வ அலங்காரங்களுடன் அமர்ந்திருக்கின்றனர்.கடந்த சில வருடங்களாக அந்த விகாரையிலோ, அயல் கிராமங்களிலோ இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறவில்லையாதலால் அனைவரும் திரண்டு வந்து தங்கள் வீட்டு விஷேசமாக இதைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த யானைகள் தங்கள் துதிக்கையைத் தூக்கி ஒருமுறை பிளிறிவிட்டு முன்னங்கால்களை மடித்து மணமக்கள் இறங்குவதற்கு வாகாய் அமருகின்றன. அவர்களும் அம்பாரியை விட்டிறங்கி செங்கம்பளத்தின் மீது நடந்து வர இருமருங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பூமாரி பொழிய அவர்கள் மடாலயத்துக்குள் நுழைகின்றனர். அங்கு சென்று பகவான் புத்தரை வணங்கி விட்டு அங்கு வீற்றிருந்த கௌரவ பிக்குமார்களை சேவித்து நிற்க அவர்களும் கைகளை உயர்த்தி ஆசீர்வதிக்கின்றனர்.
விநோதன் பொன் சரிகைகளுடன் கூடிய சாம்பல்நிற பட்டுவேட்டியை பஞ்சகச்சமாய் முன்னால் பல சுருக்குகள் வைத்தபடி இருக்க உடுத்தியிருக்கிறான். கால்களில் வெள்ளை சாக்ஸ்கள், இடுப்பில் அகலமான தோல்பெல்ட் அதில் பொன்னாலான பொத்தான்கள்.நடுவில் பெரிய சதுரமான நவரத்தினங்கள் பதித்த கொழுக்கி மின்னுகிறது. பக்கத்தில் அலங்கரித்த உறையுடன் போர்வாள் ஒன்று. உடலில் கருப்பு நிறத்தில் பொன் பூக்களுடன் அரை கோட் போன்ற அன்றைய அரசர்காலத்து உடை, அதனுடாக மார்பின் உரோமங்கள் தெரிய தலையில் சிறிய வில்லை படுக்க வைத்ததுபோல் அலங்காரமான பட்டுக் கிரீடம். கை மணிக்கட்டில் அகலமான கங்கணம். விரல்களில் இரத்தினக்கற்கள் பதித்த கணையாளிகள், கழுத்தில் இரு பெரிய பதக்கம் சங்கிலிகள்.அதில் ஒன்று இடுப்புக்கும் கீழே இறங்கி அடிவயிறு வரை தொங்குகிறது.
மணிமேகலையும் பொன்னிறப் பூக்கள் பொறித்த வெள்ளை நைலான் சேலை அணிந்திருக்கிறாள். அது கண்ணாடிபோல் உடலின் வனப்பை காட்டுகின்றது. வெள்ளை ப்ளவுஸிலும் பொன் பூக்கள் அவைகள் தெரியும்படி மெல்லிய துணியில் அணிந்த கவர் முழங்கையில் இருந்து இறங்கி சிறிது கீழே நீண்டிருக்கு. கழுத்துக்கு கீழே ப்ளவுஸ் நீள்வட்டமாய் இறங்கி இருப்பதாலும், விலாப்பக்கங்கள் நெருக்கமாய் இறுக்கி இருப்பதாலும் மார்பகங்கள் மேற்பக்கமாய் விம்மி புடைத்திருக்கின்றன. பார்ப்பவர் கண்களைக் கவரும் பொருட்டு மார்புகளின் செழுமையான மேற்பகுதிகளில் பொன்னாலான பூ ஸ்டிக்கர்கள் மின்னுகின்றன. முழுநிலவின் பாதியை முகில் மறைத்திருப்பதைப் போல் மார்பெழிலின் பாதியில் துகில் படர்ந்திருக்கு. பவுனாலான கொண்டைப்பூக்களில் இருந்து பிரியும் சிறு சங்கிலிகள் காதுகளின் இரு பக்கத்தாலும் வழிந்து வந்து தலையின் நேர் வகிட்டில் ஏறி ஊர்ந்து முன் நெற்றியில் தங்க அதில் இருந்து சிறு பதக்கம் ஒன்று முன் நெற்றியில் தொங்கிகின்றது. மூன்று சங்கிலிகளுடன் கூடிய கழுத்தில் ஒட்டியபடி இருக்கும் ஒரு நெக்லெஸ். மற்றது சரிந்து மார்பில் விழுந்து அங்கே வசதியாய் தங்குகின்றது. அடுத்தது இடைத் தாவணியையும் தாண்டி கீழிறங்கி அவளது ஆவணியுடன் லாவணி பாட இன்னொன்று நூலிடையின் கீழே இறங்கி வர அதன் நவரத்தினங்கள் பதித்த பெரிய பதக்கம் அடிவயிற்றின் கீழ் வந்து மேகலையாய் அசைகின்றது. அந்த ப்ளவுசுக்கும் சேலைக்கும் இடையில் உள்ள செழுமையான இடையை மறைக்க மனமின்றி முந்தானையும் இடதுபக்கமாய் ஒதுங்கி அங்கவஸ்திரம்போல் மேலேறி தோள்வழியாக பின்னால் மறைகின்றது. இரு கைகளின் வளையல்களில் இருந்து சிறு சங்கிலிகள் புறங்கை வழியாக இறங்கி “தவழ்ந்தோடும் மழலைகளைப் பிடித்திழுக்கும் தாய்போல்” மோதிரங்களைப் பற்றியிருக்கின்றன. அவளது கைகளில் வெண்ணிற மலர்களினாலான பெரிய மலர்க்கொத்து இருக்கின்றது......
மலர் . ......... 💫 11.
By
suvy ·
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.