Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை காலமானார்

07 Dec, 2025 | 12:07 PM

image

இலங்கையின் தலைசிறந்த பேச்சாளரான முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98ஆவது வயதில் சென்னையில் காலமானார்.

அவர் 1956ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் அவருக்குச் சேரும்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்த அவர், பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மேல் நிலைக் கல்வியை நிறைவு செய்தார். ஊடகவியலாளராகவும் செயல்பட்ட இராஜதுரை, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் மட்டக்களப்பு தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக பாராளுமன்றம் சென்றார். தொடர்ந்து 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 மற்றும் 1970 ஆகிய தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

1979 பெப்ரவரி 10ஆம் திகதி, அவர் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், அவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22ஆம் திகதி அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

1979 மார்ச் 7ஆம் திகதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் அவர் இணைந்தார்.

இதனையடுத்து, அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார்.

அரசுப் பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர், சென்னையில் புலம்பெயர் வாழ்வை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அவர் காலமானார்.

அவரது மறைவுக்கு கொழும்பு சாயி மத்திய நிலையம் உள்ளிட்ட பல அமைப்புகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.

அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/232661

  • கருத்துக்கள உறவுகள்

150px-9348.JPG

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான செல்லையா இராசதுரை சென்னையில் இன்று காலமானார்.

1927,யூலை,27.ல் மட்டக்களப்பு நகர் புளியந்தீவில் பிறந்த செல்லையா இராசதுரை அவர்கள் 2025, டிசம்பர்,07, ல் சென்னையில் 98, அகவையில் இறைபதம் அடைந்தார்

மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை முடித்து, பின்னர் மெதடிஸ்த மத்திய கல்லூரியில்உயர்தரக் கல்வியை முடித்தார். இராசதுரை ஊடகவியலாளரும், சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றினார்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்வேட்பாளராக முதன் முதலாக தந்தைசெல்வாவால் மட்டக்களப்பு தொகுதியில் 1956 நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம்சென்றார்.தொடர்ந்து மார்ச் 1960, யூலை 1960, 1965, 1970 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்ததை அடுத்து 1977 தேர்தலில் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

1979 பெப்ரவரி 10 இல் இவர் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரை ஆளும் கட்சியில் இணைப்பதற்காக 1979 பெப்ரவரி 22 இல் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, 1979 மார்ச் 7 இல் ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதற்காக அவருக்கு இந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல், பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.பின்னர் இவர் மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு மலேசியா சென்றார்.

பணியில் இருந்து இளைப்பாறிய பின்னர் தற்போது இவர் புலம் பெயர்ந்து மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்.

இராசதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதலாவது முதல்வராக ஓராண்டு காலத்திற்குப் பதவியில் இருந்தார்.

ஏறக்குறைய 33, வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக வடகிழக்கில் தொடர்சியாக மக்களால் தெரிவானவர் இவர் மட்டுமே..

மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது மாநகர முதல்வரும் இவரே.

1973,செப்டம்பர்,07,ல் யாழ்ப்பாணம் மல்லாகத்தில் இடம்பெற்ற இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி மகாநாட்டில் தலைவராக செல்லையா இராசதுரை அவர்களும். அ.அமிர்தலில்கம் அவர்களும் விரும்பி இருவரும் தலைவர் பதவியை மெறுவதற்காக போட்டி நிலை உருவானவேளையில் தந்தை செல்வா அவர்கள் தலையிட்டு இருவரையும் சாந்தப்படுத்தி செல்லையா இராசதுரையை விட்டுக்கொடுக்கொடுக்குமாறு கூறி அ.அமிர்தலிங்கத்தை தலைவராக தெரிவுசெய்தார்.

1977,யூலை,21, ல் இறுதியாக நடைபெற்ற தொகுதிவாரியான தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணியில் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இவரை தோற்கடிக்க கவிஞர் காசி ஆனந்தனை இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி வேட்பாளராகவும், செல்லையா இராசதுரையை தமிழர் விடுதலை கூட்டணியிலும் போட்டியிட வைத்தபோதும் இவரே வெற்றிபெற்றார்.

தமிழர் விடுதலைகூட்டணியின் தலைவிட்ட பொறுப்பற்ற செயலால் இருவரை வேட்பாளராக நிறுத்தியபோதும் செல்லையா இராசதுரை அவர்களே வெற்றிபெற்றார் இதனால் அவர் தமிழர் விடுதலை கூட்டணி தலைமை தமக்கு துரோகம் செய்ததாக கூறியபின்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து இந்துகலாசார அமைச்சர் பதவி பெற்றார்.

இவர் எழுதிய நூல்கள்:

* ராசாத்தி – குறும் புதினம் - 1982

* பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் - சொற்பொழிவுகளின் தொகுப்பு

* அன்பும் அகிம்சையும் - தேசிய ஒற்றுமைக்கு வழி – 1984

* மிஸ் கனகம் - சிறுகதைத் தொகுப்பு

* இலங்கையில் மகா அஸ்வமேதயாகம்

அன்னாரின் அரசியல் வாழ்வு மட்டக்களப்பில் 1977, க்கு முன்னர் தமிழ்தேசிய அரசியலுக்கு அத்திவாரம் இட்டது என்பதை எவரும் மறுக்கமுடியாது..!

- பா.அரியநேத்திரன்.-

Battinews

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவு மற்றும் துரோகங்களின் ஆரம்ப புள்ளி. போ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செல்லையா இராசதுரை அவர்கள் ஒரு வஞ்சிக்கப்பட்ட அரசியல்வாதி.

ஆனால் இவர் சேரக்கூடாத இடத்திற்கு தடம் புரண்டது வரலாற்று தவறு.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை – து.கௌரீஸ்வரன்

adminDecember 7, 2025

வஞ்சிக்கப்பட்ட அரசியல் ஆளுமை செ.இராசதுரை

====================================================================================

இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் கிழக்கிலிருந்து பிரகாசித்த ஒரு மூத்த அரசியல்வாதியான திரு செ.இராசதுரை அவர்கள் 07.12.2025 ஆந் தேதி தமிழகத்தின் சென்னையில் இயற்கையடைந்தார் என்ற செய்தி இலங்கையில் அரசியல் பிரக்ஞையுடன் வாழ்வோரின் கவனத்தைப் பெறுவதாக இருக்கிறது.

நாம் பிறந்து வாழும் மட்டக்களப்புத் தேர்தல் தொகுதியில் நமது மூத்த தலைமுறைகளின் ஆதரவையும், அன்பையும் பெற்ற ஓர் அரசியல் தலைவனுக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு இக்குறிப்பையும் பதிவாக்க விரும்புகிறோம்.

இலங்கைத் தமிழ்த் தேசியவாதத்தையும், இலங்கையின் மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றையும் கற்றறிவதில் ஆர்வங் கொண்ட மாணவர்கள் கவனஞ்செலுத்த வேண்டிய ஓர் அரசியல் ஆளுமையாக, முன்னாள் மட்டக்களப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த செல்லையா இராசதுரை அவர்கள் காணப்படுகின்றார் எனலாம்.

இலங்கைத் தமிழ்த் தேசியவாத அரசியல் செல்நெறியில் தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு முன்னும், பின்னுமான அரசியல் நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு திரு செ.இராசதுரை பற்றிய கற்கை மிகவும் இன்றியமையாததாக இருந்து வருகின்றது.

வடக்கு இலங்கையிலிருந்து வித்தியாசங்கள் மிகுந்த கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில் பிரதிநிதித்துவ சனநாயக அரசியலுக்கேயுரிய தன்மைகளுடன் தமிழ்த் தேசியவாத அரசியலை வேரூன்றச் செய்வதில் மிகுந்த பங்களிப்பை நல்கிய முழுநேர அரசியல்வாதியாக சுமார் மூன்று தசாப்த காலமாகத் திரு செ.இராசதுரை அவர்கள் செயலாற்றியுள்ளார்.

இவருக்குப் பின்னர் மிதவாத அரசியலைச் செய்யவல்ல அடுத்த தலைமுறையைச் சேர்ந்த முழுநேர அரசியல்வாதிகளை இவருடைய அரசியல் நடவடிக்கைகள் மட்டக்களப்பில் உருவாக்கியிருந்ததைப் பற்றியும் அறிய முடிகின்றது.

மட்டக்களப்புத் தேர்தல் தொகுதிக்குள் வாழ்ந்த பல்லின, பல்சமூகத் தன்மைகளையும், பல்பண்பாடுகளையும் நன்கு உள்ளார்ந்து ஆய்ந்தறிந்து அதற்குத் தகுந்த வகையில் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்த ஒரு பிரபுத்துவ அரசியல் ஆளுமையாக அவர் இயங்கியுள்ளார்.

இதனால் மூன்று தசாப்த காலம் தொடர்ச்சியாக மட்டக்களப்புத் தொகுதியின் முதலாவது பிரதிநிதியாக இவர் நாடாளுமன்றம் சென்றிருக்கிறார்.

அப்போதைய தமிழ்த் தேசிய அரசியலில் ஒரு பிராந்தியத் தலைவராக இவர் மேற்கிளம்பித் தெரிந்துள்ளார்.

இவ்வாறு, சரி பிழைகளுக்கு அப்பால் ‘தமிழ்த் தேசியம்’ எனும் குடையின் கீழ் மிதவாத அரசியல் அணுகுமுறைமையாலும், தனது தலைமைத்துவத்தாலும் மக்களை அணிதிரட்டிய திரு செ.இராசதுரை அவர்களுக்கு, இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் மாறாத நோயாக இருந்து வரும் தனிநபர்கள் சிலருடைய ஆதிக்கமும், ஏகப்பிரதிநிதித்துவக் கற்பனையும் திட்டமிட்டு வஞ்சனையைச் செய்திருக்கிருக்கின்றமை பற்றி அறியக் கிடைக்கிறது.

செ.இராசதுரை எனும் அரசியல்வாதிக்குச் செய்யும் வஞ்சகம் வடக்குக் கிழக்கு ஒருங்கிணைந்த தமிழ்த்தேசியவாதத்திற்கு நீண்ட கால நோக்கில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்பதைத் தெரிந்திருந்தும் அதிகாரத்தைத் தம்பிடிக்குள் வைத்திருப்பதற்காகப் பேராசை கொண்ட சிலர் எந்தவித தூரநோக்குகளுமின்றி இந்த வஞ்சனையைச் செயயத் துணிந்திருக்கிறார்கள்.

செ.இராசதுரைக்குச் செய்யப்பட்ட வஞ்சகம் முன்னணியிலிருந்த சில தமிழ் மிதவாதத் தலைவர்களின் உண்மையான தமிழ்த் தேசிய அக்கறையினைக் கேள்விக்குரியதாக ஆக்கியதுடன்,  ‘தமிழ்த்தேசியம்’, ‘தமிழர் விடுதலை’ என்பவை நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் உபாயமாகவும், ஒரு கோசமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்ற கருதுகோளையும் வலுப்படுத்தி நிற்கின்றது.

தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்க வைக்க முயற்சிக்கும் தரப்பினர் தமக்கு ஒத்துவராதவர்களை உள்ளிருந்து வெளியேற்றுவதற்காக உருவாக்கிய ‘துரோகியாக்கல்’ என்ற உத்தியின் துணையுடன் திரு செ.இராசதுரை அவர்களுக்கு எதிரான வஞ்சகம் திட்டமிடப்பட்டிருப்பதைப் பற்றி அறியவும் முடிகிறது.

இது இலங்கைத் தமிழ்த் தேசிய அரசியலில் ‘துரோகியாக்கல்’ எனும் உத்தி எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதைப் பற்றிக்; கற்றறிய உதவுவதாகவும் இருக்கிறது.

1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் திரு செ.இராசதுரை அவர்களைத் தோல்வியுறச் செய்வதற்கான வேலைத் திட்டங்கள் உள்ளிருந்தே நடைபெற்றமை பற்றி அறியக் கிடைக்கிறது.

இதற்காக மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர் தன்மை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனாலும் சவால்கள் மிகுந்த இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு வாக்காளர்கள் செ.இராசதுரை அவர்களைக் கைவிடவில்லை, அவரை வெற்றி பெறச் செய்தார்கள்,

ஆனாலும் செ.இராசதுரைக்கு எதிரான உள்ளகப் ‘பனிப்போர்’ நின்றுவிடவில்லை. தனது தரப்பினருடன் பனிப்போருக்குச் செல்லாமல் அவர்கள் எதிர்பார்த்த ‘துரோகியாக்கல்’ சூழ்ச்சிக்குள் அகப்பட்டுக் கொண்டார். இத்தோடு தமிழ்த் தேசிய அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்ததாகவே அவரது வரலாறு தெரிகிறது.

அவர் வெளியேறியதன் பின்னர் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக ஒரு ‘கட்சியையோ!’, ஒரு ‘அமைப்பையோ!’ உருவாக்கியதாக அறிய முடியவில்லை,

இதனால் எதையும் பகுத்தறிந்து பார்க்கத்தகுந்த மட்டக்களப்பு மக்களின் மனதில் அவர் நிலையாக வாழும் தன்மையினைப் பெற்றுக் கொண்டார் எனலாம்.

திரு செ.இராசதுரையின் வெளியேற்றம், மிதவாதத் தமிழ்த் தேசிய அரசியலில் வெளித் தோற்றத்திற்கு நிறுவனத் தன்மை காணப்பட்டாலும் அதனுள் தனிநபர்கள் அல்லது குழுக்களின் ஆதிக்கமும், செல்வாக்குகளும், சர்வாதிகாரப் போக்குகளும் மேலோங்கிய நிலைமையின் எதார்த்தத்தை உணரச் செய்தது.

இத்தோடு மிதவாதத் தமிழ்த் தேசியத் தலைமைகளிடையே பன்மைத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பின்வாங்கும் தன்மை, உள்ளார்ந்த சனநாயகத்தின் பலகீனம், கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகியகால, நீண்டகால வேலைத் திட்டங்களில் ஆர்வமின்மை ஆகியவற்றினையும் வெளிப்படுத்தி நின்றது எனலாம்.

தமிழ்த் தேசியவாத அரசியலில் எதிர்மறை நோக்குடன் ‘பிராந்தியவாதத்தை’ வளர்த்தெடுக்க முனைவோருக்கான வாய்ப்புகளை செ.இராசதுரைக்கு நிகழ்த்தப்பட்ட வஞ்சனையும் அதன் விளைவுகளும் நன்றாக வழங்கி வந்துள்ளன எனலாம்.

து.கௌரீஸ்வரன்,

07.12.2025

https://globaltamilnews.net/2025/223801/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த. அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்ச்சியால் வீழ்ந்த ஐயாவுக்கு

ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7/12/2025 at 15:19, விசுகு said:

பிரிவு மற்றும் துரோகங்களின் ஆரம்ப புள்ளி. போ.

அமிர்தலிங்கமும் மங்கையற்கரசியும் இல்லை என்றால் இராசதுரை துரோகம் போய் இருக்க மாட்டார். அதிலும் இராசதுரைக்கு போட்டியாக வந்த காசி ஆனந்தன் எனும் இன்னொரு துரோகியை உங்களுக்கு தெரியவில்லையா?

இந்த நேரம் நான் மட்டக்களப்பில் இருந்தேன். இராசதுரையின் அரசியல் பேச்சுக்களையும் பார்த்துளேன். காசி ஆனந்தனின் நக்கல் பேச்சுக்களையும் பார்த்துளேன்.எனினும் இந்த நேரம் தமிழர்விடுதலைக்கூட்டணியின் அரசியல் வஞ்சகம் பற்றியே மக்களிடத்தில் அதிகம் பேசப்பட்டது.

அன்று தமிழ் மக்களிடத்தில் கதாநாயகனாக காட்டப்பட்ட அமிர்தலிங்கம் பின் கதவால் போய் எதை செய்தாரோ..... அதை சட்டபூர்வமாக அமைச்சராகிய இராசதுரை செய்யவில்லை.

இராசதுரை இனம் மாறியது துரோகம் தான்.ஆனால் கூட இருந்து குழி பறிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லின்செல்வர் இராஜதுரை நினைவுகள்: ஆரம்ப கால அவரது வாழ்வு அனுபவங்களும் அவரது உருவாக்கமும்

December 9, 2025

சொல்லின்செல்வர் இராஜதுரை நினைவுகள்: ஆரம்ப கால அவரது வாழ்வு  அனுபவங்களும் அவரது உருவாக்கமும்  

— சி. மௌனகுரு —

செல்லுவதற்கு  ஆயத்தமாகிறார்  என்ற  செய்தி  வந்தது:

——————————

இம்மாதம்  இரண்டாம் திகதி எனக்கு ஒரு செய்தி கிடைத்தது செய்தி அனுப்பியவர் ஒரு பெரியவரின் பேத்தி  பெயர்  சரண்யா வந்த செய்தி இதுதான் 

“எனது பாட்டனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்,  மூச்சுத் திணறலுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது அந்திம காலம் நெருங்கிவிட்டது, செல்ல ஆயத்தமாகிறார்.  இன்னும்இரண்டு மூன்று  நாட்களுக்குள்  அது  நடக்கலாம்  என்று டாக்டர் கூறிவிட்டார்.  துன்பங்கள் துயரங்கள் இன்றி உடல் உபாதைகள் இன்றி அவர் உயிர் பிரிய வேண்டும் என்பதே எங்களது கவலையாக இருக்கிறது”

சரண்யா ஒரு புதுமைப்பெண்  ஒரு ஊடகவியலாளி, நாவல் எழுத்தாளர், கவிதைகளும் எழுதுவார், பெண்ணியவாதி தனித்துவமான போக்குடையவர்.

 சரண்யா கூறிய அந்தப் பெரியவர் வேறுயாருமல்ல  எங்கள் இளமைப் பருவத்தில்  நாங்கள் வாய் நிறைய    அண்ணா என அழைத்தவர்.     அவர்தான் காலம் சென்ற செ.   இராசதுரை அவர்கள். 

46aa0110-dc56-48d0-8a89-1fd95126d920.jpe

அவரது சிரிப்புதான் அவரது     டிரேட் மார்க் பிளஸ்பொயிண்ட்.

ஒரு முறை நான் அண்ணன் ராஜதுரை அவர்களைச் சந்தித்தபோது  

 ‘எனது வாரிசு இவள்தான்தான்’ என்று  அவர் சரண்யாவைச்  சுட்டிக் காட்டினார்.  96  வயதுப் பாட்டனும்  25  வயதுப் பேத்தியும் ஒருவரை ஒருவர் அர்த்த புஸ்டியோடு பார்த்துக்கொண்ட  அந்தக் காட்சி இன்னும் மனதை விட்டு அகலவில்லை. 

 பாராளுமன்ற அரசியலுக்கு  வரமுன்னர்

அவரது  அரசியல்  சிந்தனை 

——————————

 தமிழரசுக் கட்சி  அரசியலுக்கு வர முன்னர் ராஜதுரை அண்ணன் அவர்கள் சமசமாஜக் கட்சி,     கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய  அரசியல் கட்சிகளாலும் அக்கட்சிக் கொள்கைகளாலும்     பெரியாரின் திராவிடக்கழக  சமூக  சீர்திருத்தக் கொள்கைகளாலும் கவரப்பட்ட  ஒரு வாலிபராக இருந்தார். 

மூட நம்பிகைகளை முற்றாகச்சாடிய  மனிதர் அவர், அவரதுபேச்சில் பகுத்தறிவுக் கோட்பாடுகள்  பரவியிருக்கும் என்பர்.  

மட்டக்களப்புக் கோவில்களில் அன்று காணப்பட்ட சாதிவேறுபாடு, தீப்பாய்தல், பலிகொடுத்தல்     என்பனவற்றிற்கு எதிராகப்  பகுத்தறிவுக் கொள்கை கொண்ட முற்போக்கான ஒரு கூட்டம் மட்டக்களப்பில் உருவாகிக் கொண்டிருந்தது, செயற்பட்டுக்கொண்டிருந்தது. மரபுவாதிகள் அக்கூட்டத்தை வியப்புடன் பார்த்த  காலம் அது.  

அக்குழுவின் தலைவர் போல இவர்  செயற்பட்டார் 

இவரைப்போல  இடதுசாரிக்  கருத்துக்களாலும்  திராவிடஇயக்க  பகுத்தறிவுக்  கருத்துக்களாலும்  கவரப்பட்டு  சமூக சீர்திருத்தங்களில் ஈடுபட்டு  ஒன்றாக  இயங்கிய  சமூக விடுதலை உணர்வுள்ள   வாலிபர்கள் பலர்   மட்டக்களப்பில் அன்று இருந்தனர். 

அவர்களில் மிகப்  பலரை   நான் அறிவேன்.  அவர்களோடு தொடர்பிலுமிருந்தேன். அருமையான  இளைஞர்கள்,    

ஒரு வகையில் நமது  அண்ணன்மார் அவர்கள்.  

 மக்கள் மீதும் மண்மீதும்  பாசம் கொண்டவர்கள். 

 என் வாலிப  வயதில்  அவர்கள் எல்லோரும் வயோதிபர்களாகிவிட்டார்கள்

சிலர் ஞாபகம் வருகிறார்கள்.  

 எம்   எஸ் பாலு.  கமலநாதன்,  ம.த.லோறன்ஸ்,    ஸ்ரூடியோமூர்த்தி, இரா, பத்மநாதன், மூனாரூனா,   சற்றடே கந்தசாமி, ஓவியர் குமார், ஆரோக்கியநாதன், பித்தன் சா,  ஆறுமுகம்(நவம்), ”ஆரையூர்” அமரன், அறப்போர்   அரியநாயகம்,  பின்னாளில்  கலாசூரி  பட்டம் பெற்ற  வினாயகமூர்த்தி, மூனாகானா,  அன்புமணி, ஓடலி கந்தையா, சடாட்சரம், மகேஸ்வரம், மஹாலிங்கசிவம்..   இன்னும் பலர். 

நான் சொல்வது 1950  நடுக்காலப்பகுதி. இவர்கள்    இராஜதுரை  அவர்களின்  நெருக்கமான  நண்பர்கள்.   

இவர்கள் ராஜதுரை அவர்களின்  சமகாலத் தலைமுறை என்றால்  ராஜதுரையால் உருவாக்கப்பட்ட இன்னொருதலைமுறையும்   இருந்தது. அவர்களில் சிலர்  ஞாபகத்தில் உள்ளனர். 

கவிஞர் சுபத்திரன், காசிஆனந்தன், பாலு மகேந்திரா, செழியன் பேரின்பநாயகம்,  அற்புதராஜா குரூஸ், எருவில் மூர்த்தி போன்றோர். 

நாங்கள் மூன்றாம் தலைமுறை. 

அவர்களுள் ரமணி, மாலா ராமசந்திரன், முழக்கம் முருகப்பா, தம்பையா, வடிவேல்,  கணேசானந்தன், பாவா     இன்பம், வெலிங்டன், முத்தழகு,  வீ சூ  கதிர்காமத்தம்பி,   எனப்பலர் அடங்குவோம். 

இவர்கள் யாவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள். இப்படி ராஜதுரையால்  உருவான இளைஞர் கூட்டம் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் இருந்தன. 

இராதுரையும் அவர்கால   பின்னணியும்

————————-

பெரியார்  தமிழ் நாட்டில் திராவிடக் கழகம் ஆரம்பித்தது 1925இல்.  அப்போது ராஜதுரை  பிறக்கவில்லை. இராஜதுரை அண்ணன்  பிறந்தது 1927 இல். 

இலங்கையில்   மாக்ஸிஸ ரொட்ஸ்கிய சிந்தனையில் உருவான சமசமாஜக் கட்சி ஆரம்பித்தது 1935  இல்

 அப்போது இராஜதுரைக்கு வயது 8. 

அதிலிருந்து பிரிந்த மாக்ஸிய  லெனினிய கம்யூனிஸ்ட்  கட்சி ஆரம்பித்து 1943 இல்   

அப்போது இராஜதுரைக்கு வயது  16. 

தமிழ் நாட்டில் திராவிடக்  கழகத்திலிருந்த  திராவிட முன்னேற்றக்கழகம் ஆரம்பித்தது  1949 இல்.  அப்போது ராஜதுரைக்கு வயது 22.

இலங்கையில் தமிழ்க்  காங்கிரஸிலிருந்து பிரிந்து தமிழரசுக்கட்சி எனும் சமஸ்டிக் கட்சி ஆரம்பித்தது  1949 இல். 

அப்போது  ராஜதுரைக்கு  வயது  22. 

1950 களின் ஆரம்ப காலங்களில் இராஜதுரை தமிழரசுக்கட்சியுடன் இணைந்து கொள்கிறார். அப்போது அவர் 22  வயதைத் தாண்டியிருந்தார். 

அவர்  பாராளுமன்ற  எலெக்சன் கேட்டுப்  பாராளுமன்றப் பிரதிநிதியானது ஆண்டு  1956  இல்  29 ஆவது  வயதில். 

1927  க்கும்  1956  க்கும் இடைப்பட்ட  காலங்கள்

————————————————————

இந்த 1927 க்கும் 1956  களுக்கும் இடைப்பட்ட  29 வருட கால மட்டக்களப்பு  வாழ்வுப் பின்னணி என்பன முக்கியமானவை. இது  ராஜதுரை மட்டக்களப்பு  பாராளுமன்ற உறுப்பினராக முன்னுள்ள காலம் அதாவது   இராஜதுரை உருவாகிய காலம். 

துடிப்பு மிகுந்த விசைவேகம் மிக்க ஒரு சிறுவனின் இளமைக்காலம்  அது. 

துடிப்பு மிகுந்த ஒரு சிறுவன் சமூக அக்கறையும் உலக அறிவும் பெற்று உருவான காலப்பின்னணி இது. 

அவற்றை அறிதல்,   ராஜதுரையையும் அவர்  சிந்தனையையும் செயலையும்   புரிந்துகொள்ள  மேலும் உதவும். 

தமிழரசுக் கட்சியில் இணைய  முன்னரான  ராஜதுரை அவர்களின்  வாழ்வு, பலர் அறியா  வாழ்வு. அவரது  ஆளுமைக்கு அடித்தளமிடப்பட்ட வாழ்வு, மிக முக்கியமாகப்  பலர்   அறியவேண்டிய வாழ்வு. 

சமசமாஜக் கட்சி(ரொட்ஸ்கியம்), 

கம்யூனிஸம்( லெனினியம்)  

திராவிட  இயக்கம்(பகுத்தறிவு  பிராமண  எதிர்ப்பு), 

திராவிட முன்னேற்றக் கழகம்   ( தமிழ் மொழியுணர்வு)

தமிழ்க் காங்கிரஸ்( இலங்கை  அரசில்  தமிழர் பங்கு), தமிழரசுக்   கட்சி( தமிழருக்கான சுய ஆட்சி), 

என்பனவற்றின் தாக்கம் பெற்று  வளர்ந்தவர்  இராஜதுரை. 

இந்த அரசியல் பின்னணியில்  தோன்றியவர்  இராஜதுரை. 

பிறந்து  வளர்ந்த  சூழல்:  

———————–

 அவர்  பிறந்த இடம், வளர்ந்த  சூழல் படித்த பாடசாலை, தொடர்புகொண்ட  ஆசிரியர்கள்  நண்பர் வட்டம் என்பன அவரை  உருவாக்கின. 

பிறந்து வளர்ந்த  இடமும்  வளர்ந்த  சூழலும்

———————-

 அவர் பிறந்த  இடம்  மட்டக்களப்பின் சத்துருக்கொண்டான்.  அது ஒரு  விவசாயக் கிராமம். ஆனால்  அவரின் சிறுவயதுக்காலம்  மட்டக்களப்பு நகரான   கோட்டைமுனை மோர்சாப்பிட்டியில்தான் கழிந்தது.  அக்காலத்தில் யாழ்ப்பாணத்தவர்  பலர்  வந்து  மட்டக்களப்பில்  வியாபாரம் செய்தனர். அவர்களைப்போல  புகையிலை  வியாபாரம் செய்யவந்த  செல்லையா என்பவர்  மட்ட்க்களப்பில் பெண் எடுத்து    அந்த நகரப்பகுதியில்  தங்கியிருந்தார். 

அப்பகுதி பல் சாதித் தமிழ் மக்களும்  இஸ்லாமிய  மக்களும் ஒரு குடும்பம் போல  கலந்து மகிழ்ந்து, கொண்டு,  கொடுத்து வாழ்ந்த காலப்பகுதி. அங்குதான் புத்த கோவிலான மங்களராமய விகாரையும் இருந்தது, அதனை  மக்கள் பாஞ்சாலை என அழைப்பர். மட்டக்களப்பு  நகரில் சிங்கள முதலாளிகளின்  கடைகள்  இருந்தன. அக்கடைகளில் வேலை செய்த  சிங்களக்கிராமங்கலில் இருந்து  வந்த சிங்கள ஊழியர்கள்  மோர்சாப்பிட்டிச் சூழலிலும் பாஞ்சாலையை  அண்டியும் வாழ்ந்தனர். அனைவரோடும்    ராஜதுரை பழகும் சந்தர்ப்பமும்  கூடி விளையாடும் சந்தர்ப்மும்  கிடைத்தன.  அனைத்து மக்களுடனும்  ஒன்றாகத் திரிந்தான் இந்தச் சிறுவன். அவர்கள் வீடுகளில்  அவனும் ஒரு பிள்ளை. 

இந்தச் சூழல் அவரை  ஒரு இன பேதம், சாதி பேதம், மத பேதம் எனும் கட்டுகளுக்குள் மாட்டிக் கொள்ளாத சிறுவனாக வளர்தெடுத்தது.  

1940, 50 களிலே கோட்டைமுனையிலே ஒரு  வாசிகசாலை இருந்தது. அதன் பெயர் சிவானந்தா   வாசிகசாலை. அதில் சென்று படிக்கும் வாய்ப்பு இச்சிறுவனுக்கு  ஏற்பட்டது. 

அக்காலத்தில்  லூயிஸ்பிள்ளை என்பவரால் ஒரு புத்தக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பெயர்  வெலிங்டன் புத்தகசாலை. அதில் இந்திய பத்திரிகைகள், முக்கியமாக திராவிட  இயக்க நூல்கள்  அங்கு  வரவழைக்கப்பட்டு, விற்கப்பட்டன. லூயிஸ் பிள்ளை முடிதிருத்தும் வகுப்பைச் சேர்ந்தவர். முடி திருத்தும்  நிலையத்தை மின்சார உபகரணம் கொண்டு நவீனப்படுத்திய முன்னோடி,  சீர்திருத்தவாதி.

பகுத்தறிவு  நூல்கள் மட்டக்களப்பிற்கு  வர வழிவகுத்தவர் அவர். 

அவரது மூத்த மகன்தான்  வெலிங்டன். அவனது பெயரில்  அது ஆரம்பிக்கப்பட்டது, சிறிய  அளவிலும் கையடக்க அளவிலும் அங்கு திராவிட  இயக்க நூல்கள் விற்கப்பட்டன. அண்ணாதுரையின்  தீபரவட்டும்,  கம்பரசம் நூல்களும் கருணாநிதி, சிபி சிற்றரசு,  அன்பழகன் ஆகியோரின் நூல்களும் அங்கு கிடைத்தன. தமிழ் இளஞர் மாத்திரமல்ல இஸ்லாமிய இளஞர்களும்  அங்கு  வந்து வாசித்தனர். புத்தகம் பெற்றுச்சென்றனர், பகுத்தறிவுக் கொள்கைகளும் தமிழும்  அவர்களை இணைத்தன.  ஓட்டமாவடி  ஜலால்தீன் எனக்கு ஞாபகம் வருகிறான். பயங்கர  “அண்ணா பக்தன்” அவன். 

 அந்தப்  புத்தகசாலை  அன்று  அரும்பி  வந்த  இளைஞர் பலர் தமிழர்  இஸ்லாமியர்  பேதம் இன்றி ஒன்று கூடும் இடமும்  ஆயிற்று. 

வெலிங்டன் புத்தகசாலை போல  இன்னொரு இடமும் எனக்கு  ஞாபகம் வருகிறது. 

அதுதான்  அஜந்தா  ஸ்ரூடியோ. மட்டக்களப்பின் இன்றைய  காந்தி பார்க்கின் முன்னால் அது  அமைந்திருந்தது. அதன் உரிமையாளர் மூர்த்தி. அங்குதான் ஓவியர் குமார் பணி  புரிந்தார். ஓவியர் குமார்  இந்தியாவில் தமிழ் நாட்டில் ஓவியம் பயின்றுவிட்டு  வந்தவர்.  அவர் ஸ்ரூடியோவில் அந்த மேசைக்கு முன்னால் அமர்ந்து  புகைப்படங்களை  தனது பிரஸ் மூலம் செம்மைப் படுத்திகொண்டிருப்பது  ஞாபகம் வருகிறது. 

அங்குதான் இந்த  இளைஞர் குழாம் பின்னாளில் கூடும். என்னிலும் மூத்தவர்களான காசி  ஆனந்தன், மாஸ்டர் சிவலிங்கம்,   இரா. பத்மநாதன், பாலு மகேந்திரா,   தங்கவடிவேல் (சுபத்திரன்), அற்புதராஜா  குரூஸ்       ம. த  லோரன்ஸ்  ஆகியோர்  அங்கு  பெரும்பாலும் தினமும் மாலை வேளைகளில் ஒன்று கூடுவர். அங்கும் ஒரு அரசியல் அலசல் நடக்கும். பகுதறிவுச்  சிந்தனைகள்  பகிரப்படும். 

கிண்டல் பேச்சுகள்  இடம்பெறும். சிறு வயதுப் பையனான நான்  அதனை அவதானித்துக்  கொண்டிருப்பேன்; அதில்  அங்கு வரும் இராசதுரையும் கலந்து கொள்வதுண்டு. பின்னாளில்   மட்டக்களப்புக் கச்சேரியின் முன்நடந்த  சத்தியாக் கிரகத்தின் போது  இந்த  இடம் ஒரு முக்கிய இடமாகச் செயற்பட்டமை  இன்னொரு கதை  அது  தனிக்கதை. 

கண்ணகியின் வழிபாடு வாழ்வியலான  பிரதேசத்தில் சிலப்பதிகாரம்  அறிமுகம்

————————————————————

சிலப்திகாரம்  தமிழகத்தில்  தமிழ் அறிஞர்களால் முன்னிலைப் படுத்தப்பட்ட காலம் அது. சிறப்பாக ம பொ சிவஞானம் ஆகியோராலும் கருணாநிதி போன்றோராலும் பரவலாக்கப்பட்டு  தமிழ் நாட்டில்  பட்டிதொட்டி எங்கும் சிலப்திகாரம் பரப்பப்பட்ட  காலம் அது. 

இவர்கள் எழுதிய சிலப்பதிகாரக் கட்டுரைகளையும் நூல்களையும்  படித்து படித்து அதில்  தோய்ந்தார் இராஜதுரை. தமிழ்ப் பண்பாட்டின்  அறநெறி  தவறிய  அரசை கேள்வி  கேட்கும்  காவியமாக அதனைக்  கண்டார். 

மட்டக்களப்பிலே  வைகாசி மாதம்  ஆண்டு தோறும் கதவு திறந்து  சடங்கு  நடைபெறும்.  கண்ணகி  வழக்குரை படிக்கப்படும். அத்தகைய  கண்ணகி  அம்மன் கோவில்களில் வாலிப  இராஜதுரை  சிலப்பதிகாரம்  பற்றிப்  பேச ஆரம்பித்தார்,  கண்ணகி  அம்மன் கோவில்கள் அவரது பேச்சினை  வளர்க்கும் இடங்களாகின. இராசதுரையின் சிலப்பதிகாரப் பேச்சு ஜனரஞ்சகம் பெறலாயிற்று. இப்படித்தான் அவர்  பேச்சாளரானார். 

திராவிடக்  கழகக்காரர்  போல  தோளிலே ஒரு கறுப்புத்துண்டு போட்டபடி வலம் வந்த  இராஜதுரை என்ற  அந்த இளைஞர் என் மனதிலே  பதிந்துள்ளார். அவரைப்  பின்பற்றிக்  கறுப்புத்துண்டு   தோளில் போட்டோர்  பலர்.    அவர்களுள் நானும் ஒருவனானேன். 

இப்படிக்  கறுப்புத் துண்டு போட்டோரை அன்று “சூனா மானா” என  அழைத்தனர். சூனா மானாக்காரன்  என்றால் சுயமரியாதைக் காரன் என்று  அர்த்தம். 

இப்படி அன்று ஒரு சூனா மானாவாக இருந்தவர்தான் ராஜதுரை. 

(பின்னாளில் அவர்  பாராளுமன்ற  அங்கத்தவரான போது,  அவர் என்ன பாராளுமன்றம்  சென்று  சிலப்பதிகாரச்  சொற்பொழிவு ஆற்றப் போகிறாரா  என்று கிண்டல் பேசியோரும் உண்டு )

 எனது  14ஆம்15  ஆம் வயதுகளில்  அப்படி  அவரைக்  கறுப்புத்துண்டோடு  கண்டதாக  ஞாபகம். அவரோடு  தொடர்பு   கொள்ளப்  பல இளைஞர்கள்  விரும்பினர்.  ஒரு வெகுஜனமக்கள் தலைவராக  அவர் உருவாக  ஆரம்பித்த  காலம் அது. 

அழகான  வாலிபன், 

வசிகரமான  சிரிப்பு, முற்போக்கு எண்ணம் கொண்டவன், 

சாதி, மதம், இனம், பிரதேசம் கடந்து  அனைவருடனும் நெருங்கிப் பழகும் குணம்- 

இவை  யாவும்  ராஜதுரையை  அச்சூழலில்  ஒரு தனித்துவமான  ஆளுமையாக  வளர்த்தெடுத்தது. 

அவரது  பேச்சுவன்மை அவரை இளைஞர் மத்தியில்  ஹீரோ ஆக்கியது

சிறு வயதில் அவர் பேச்சாளரோடு    ஊடகவியலாளர் ஆகவும்  ஆனார். 

 வேல். .  முழக்கம்,  தமிழகம்,  சாந்தி, தேனாடு, உதய சூரியன்   எனப்பெயரிய பத்திரிகைகள்  அவர் நடத்தியதாக அறிகிறோம்.  இவை மட்டக்களப்பு  பிரதேச  அளவில் நடத்தப்பட்டன போலத் தெரிகின்றன. 

இக்காலத்திலே  தமிழரசுக் கட்சி  சுதந்திரன் பத்திரிகையைக் கொழும்பில் ஆரம்பிக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து   பல இளைஞர் ஆசிரியர் குழுவில் இணைகிறார்கள்.  அப்போது மட்டக்களப்பிலிருந்து அப்பத்திரிகைக்கு  அனுப்பிவைக்கப்பட்ட ஆள்தான் ராஜதுரை. அப்படி அனுப்பியவர்களுள் முக்கியமானவர் பி வி கணபதிப்பிள்ளை, என் மனைவியின் தந்தை.  அவரே  எனக்கு இத்தகவல் கூறியவர். 

அவரும் யாழ்ப்பாணத்தவர், வடராட்சியினர், ஜி ஜி பொன்னம்பலத்தின் உறவினர்.   ஜி  ஜி பொன்னம்பலம்  தனது அன்றைய  காங்கிரஸ் கட்சியோடு சேரவும்  மட்டக்களப்பில் அதனை  ஸ்தாபிக்கவும்  நினைத்து  அவரை அழைத்தபோதும் அவரோடு சேராது தமிழரசுக்  கட்சியையும் செல்வநாயகத்தையும்  ஆதரித்தவர் அவர். 

  மட்டக்களப்பில் அவர்  திருமணம் புரிந்தவர்.  மோர்சாப்பிட்டியின் மிக அருகில்  இருந்த  கொலட் லேனில் வாழ்ந்தவர்.  இராஜதுரையின் வெற்றிக்கு  1958களிலும் அதன் பின்னரும் உழைத்தவர்.  கம்யூனிசக் கொள்கைகளில் ஈடுபாடுடையவர். சமூக, சமய   சேவகர். ஆங்கிலம் லண்டன் மெற்றிகுளேசன்  முடித்து, மொழிபெயர்ப்புத் திணைக்களைத்தில்  வேலை செய்தவர். மெதடிஸ்த  மத்திய கல்லூரியில் ஆங்கிலம்  கற்பித்தவர்.  இராசதுரையும் அவரிடம்  ஆங்கிலம் கற்றுள்ளார், அவர்  இராசதுரையின் பிரியதிற்குரிய  ஆசிரியர். 

ஒருவகையில் அவரின் பயபக்திக்குரிய  மாணவன். 

எனது  மாமா எனக்கு பிற்காலத்தில் எனக்கு அக்காலக் கதைகள் பல கூறியுள்ளார். அதில் ராஜதுரையின் இளமைக்காலக் கதையும் ஒன்று. 

படித்த  பாடசாலை

——————

மட்டக்களப்பு அரசடி மெதடிஸ்த  பாடசாலையிலும் பின்னர் மட்டக்களபு  மெதடிஸ்த மத்திய  கல்லூரியிலும் இராஜதுரை படித்திருக்கிறார். அங்கு அவருக்கு  நல்ல முற்போக்கு எண்ணம் கொண்ட  ஆசிரியர்கள்  வாய்த்திருக்கின்றனர். அங்கு  படிப்பித்த ஆசிரியர் சிலர் லங்கா  சமசமாஜக்கட்சியினை  மட்ட்க்களப்புக்கு அறிமுகம் செய்தவர்கள். பிரின்ஸ் காசிநாதர், யோகம் வேலுப்பிள்ளை வணசின்ஹா ஆசிரியர்.  சிவனேசராஜா ஆசிரியர் போன்றோரும் இன்னும் பலரும் சமசமாஜக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள்  என  அறிகிறோம்.  என் எம் பெரெரா அக்காலத்தில் இவர்களின் தலைவர்.  இவர்கள் யு என் பி எதிர்ப்பாளர்கள் காலனித்துவ எதிர்ப்பாளர்கள், இந்த எதிர்ப்பு  அலையில் அன்று  ராஜதுரை  கவரப்பட்டிருக்கிறார்

 இராஜதுரை அக்காலத்தில் என் எம் பெரேராவை அழைத்து மட்டக்களப்பில் பேச வைத்திருக்கிறார். அப்படியாயின் இளம்பருவத்தில் அவருக்கு என் எம் பெரேராவுடன் தொடர்பு இருந்தது என நாம் ஊகிக்கலாம். 

மட்டக்களப்பு கம்யூனிஸ்ட்  கட்சிச் செயலாளர் கிருஸ்ணக்குட்டியுடன் மிகுந்த நட்புப் பாராட்டியதுடன் அவரை  ஒரு  மேதின மேடையில் கௌரவித்தும் இருக்கிறார். 

 இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் முக்கிய தலைவர்களுள்   ஒருவரான பா, ஜீவானந்தம் இலங்கை வந்தபோது, அவரை அழைத்து மட்டக்களப்பில் பேச  வைத்திருக்கிறார். 

மத்திய கல்லூரியில்  படித்துகொண்டிருந்த  காலத்தில் இங்கிலாந்து மன்னர் பிறந்த தினம் கொண்டாடக்கூடாது என நோட்டீஸ் ஒட்டினார் ராஜதுரை என அறிகிறோம். 

அன்று யு என் பிக் கட்சியிதான் மட்டக்களப்பில் செல்வாக்குற்றிருந்தது. ஆர் பி  கதிராமர் எனும் எம் பி, யூ என்   பி  வேட்பாளராகப் போட்டியிட்டு  வென்றிருக்கிறார். யூஎன் பியின் கொள்கைகளுக்கு  ஒத்துவராத  மட்டக்களப்பில் படித்த ஒரு  கூட்டம் லங்கா சமாமாஜ கட்சியை ஆதரித்தது அவர்களில்  பலர் மெதடிஸ்த மத்திய  கல்லூரியில் படிப்பித்துக் கொண்டிருந்தனர்.  அவர்களின் தாக்கம் ராஜதுரையில் இறங்கியிருகலாம். 

ஆனால்  இடதுசாரிக் கட்சிகள்  அன்று தமிழர் தேசியபிரச்சினை பற்றி எடுத்த முடிவுகள்  முற்போக்கான பலருக்கு உடன்பாடாயிருக்கவில்லை. மொழி வழித் தேசியத்தை அன்றைய  இடதுசாரிகளும் புரிந்திருக்கவில்லை. இந்த நிலைப்பாடு   இராஜதுரைக்கும் உடன்பாடில்லாமல் இருந்திருக்கலாம், அவருக்கு இன்னொரு முகாம் தேவைப்பட்டது போலும். அது  தமிழரசுக் கட்சி முகாம். அங்கு அவர் சென்றதும் முற்போக்கு கருத்துகளை அங்கு கொண்டு சென்றதும் இன்னொரு  கதை. 

பத்திரிகை  வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும்

————————

பின்னாளில் இராஜதுரை  அவர்கள் தேசிய  அளவில் சுதந்திரன் பத்திரிகையிலே ஆசிரியர் குழுவில் இருந்திருக்கிறார். 

எழுத்தாளர் கவர்ச்சிகரமான  பேச்சாளர் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக போராடிய இளைஞர் அணியிலே முன் நின்றவர் அவர். 

அதனால் அவர் அடி உதைகளும் பட்டிருக்கிறார். 

அவரது ஆரம்ப கால வாழ்க்கை ஒரு போராட்ட வாழ்க்கை. 

இவற்றில் மிக அநேகமானவை அவர் தமிழரசுக்கட்சியில்  இணைய முதல் அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களாகும் 

பணக்காரர்களே பாராளுமன்ற எலக்சன் கேட்கலாம் என்ற காலத்தில் மிக மிகச்சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்த ஒரு இளைஞர் அந்தப் பெரும் பெரும் புள்ளிகளுடன் போட்டியிட்டு 

பாராளுமன்றம் தெரிவானார். 

தன் பேச்சால் ஈழத் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்தவர். 

தமிழரசுக் கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பேச்சு மிகுந்த  துணையாயிற்று. 

தந்தை செல்வாவின் மிக விருப்பத்துக்குரிய ஒரு இளைஞராக அவர் அன்று இருந்தார். 

 எனது முதல் சந்திப்பு:

——————–

எனது 9 ஆவது  வயதில்  அவர்  எனக்கு அறிமுகமாகின்றார் அவர். 

காலம் 1952, 

இடம்  மட்டக்க்ளப்பு  நகரசபை  மண்டபம். அப்போது  அது மாநகரசபை ஆகவில்லை. எனக்கு அந்தக் காட்சி  நல்ல ஞாபகம் இருக்கிறது. 

மட்டக்களப்பு நகரமண்டபம் கட்டிய  புதிதில்  அங்கு சிலநாடகங்கள் நடந்தன. என் மகன் என்ற  நாடகத்தில் நான் வீரவசனம் பேசி அந்த  சிறு  வயதில் நடித்தபோது,  நாடகம் முடிய ஒரு இளைஞர் மேடைக்கு வந்து  என்னைத் தூக்கி அணைத்தமை  என் வாழ்வில் நான் மறக்க முடியாத  நிகழ்ச்சி. அவர்தான் ராஜதுரை  என்றார்கள். நான் கேள்விப்பட்டிருந்தவரின்  கைகள்  என்னில் படிகின்றன

தன்  பேச்சு வன்மையாலும் செயற்படுகளாலும் இளைஞர் மத்தியில்  நட்சத்திரமாக  அவர் தோன்றியிருந்த  காலம் அது. 

அப்போது அவருக்கு வயது 25

ஆம் என்னை விட 16 வயது மூத்தவர் அவர். 

அவர் முதன் முதலாக பாரளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டபோது எங்கள் ஊரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்  என் தந்தையார்  எழுதித்தந்த பேச்சைப் பாடமாக்கி இராசதுரைக்காக  தேர்தல் பிரசாரம்  செய்தமை  ஞாபகம் வருகிறது, மைக்கிலே  பேசிய புதிய அனுபவம் அது. அப்போது  எனக்கு  வயது 13.  

எனது பேச்சை வெகுவாக  ரசித்த அவர்  அருகில் அழைத்து அணைத்துப் பாராட்டியமை இன்னும் ஞாபகத்தில் உண்டு. 

என்  தந்தை மீது  மிகவும்  மதிப்பு  வைத்திருந்தவர் அவர். சின்னையா அண்ணர் என்றே  அவர் என் தந்தையை    அழைப்பார். வீட்டுக்கும் வருவார்.   இவனை நன்றாகப்படிப்பித்து  விடுங்கள் என்று என்  தந்தையை  வேண்டுவார்.  

அவரது இளமைக்காலம் அர்த்தம் பொருந்திய காலம். 

அதுவே அவரது வாழ்வின் பொற்காலமும் கூட. 

அவரும்  இஸ்லாமிய  உறவுகளும்

———————–

இது அவரது பிற்கால வரலாறு  எழுதப்படும் போது   சேர்க்கபடவேண்டிய செய்திகளுள் ஒன்று இது. 

அவர் இஸ்லாமிய மக்களுடன் கொண்டிருந்த உறவுகள் மிக முக்கியமானவை அக்காலத்தில் தமிழரசு கட்சியினுடைய பிரசுரங்களில் தமிழ் பேசும் மக்கள் என்றே இருந்தது. அதில்   அவர் மிகக்கவனமாக  இருந்தார்.   அவரது சிறு பருவக்காலத்திலும்  வாலிப் பருவத்திலும் பின்னரும் கூட அவர் இஸ்லாமிய   மக்களுடன் மிக நெருக்கமான  தொடர்பு கொண்டிருந்தார். 

தமிழரசுக் கட்சியில் எலக்சன் கேட்ட முஸ்லிம்களும் உணடு   அவரது அணுக்கத் தொண்டர்களான  மருதமுனையை சேர்ந்த மசூர் மௌலானா போன்றவர்கள் ஞாபகம் வருகிறார்கள். 

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் ராசதுரையின் ஒரு பெரும் அபிமானி. தனது  பேச்சின் குருநாதர்  இராஜதுரை அண்ணர்தான் என அஸ்ரப்பே  கூறியிருகிறார். ராஜதுரை அவர்களுக்கு இஸ்லாமிய மக்கள் மத்தியிலே மிகுந்த மதிப்பு இருந்தது.    

இராஜதுரையின் இரண்டாவது எலக்சன் 1965 இல் நடந்து  முடிந்து  அவர் வெற்றி ஈட்டிய போது அவருக்கு ஏறாவூரிலே மூன்றாம் குறிச்சியில் இருந்த    இஸ்லாமிய மக்களால் பெரு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அங்கு ஒருவர் இவர் மீது பற்று கொண்டவர், அவரது  பெயர் செயினா. ராஜதுரையைத் தமது  தோழில் சுமந்து கொண்டு  “எங்கள் துரை” என்று கூற, மக்கள் “இராஜதுரை”  எனக் கூற  ஊர்வலம் சென்றதாம் என்று அதனைப் பார்த்த  அந்த ஊர்வலத்தில்  கலந்துகொண்ட என் தம்பி சிவராஜா என்னிடம்  கூறியுள்ளான், இப்போது  அவனுக்கு  வயது  80  அப்போது வயது 15.   

மட்டக்களப்பின் இரட்டை அங்கத்தவர்கள் தொகுதி. நியாயப்படி ஒரு தெரிவு தமிழர்  முஸ்லிம்கள் என இருவர்  வரவேண்டும் எனப் பிரித்த பிரிவு.   ஆனாபடியால் ஒரு முஸ்லிமும்   பாராளுமன்றம் போக வேண்டும் என்று அன்றே கூறியவர் ராஜதுரை என்றும் அறிகிறேன். 

இன்றைய காலச்சூழலில் இவையெல்லாம் பேசப்பட வேண்டிய விஷயங்கள்.  இப்படியும்  ஒருகாலம் இருந்ததா  என இன்றைய  தலைமுறை  அதிசயிக்கும்  காலங்கள். 

விபுலாந்த  இசை  நடனக் கல்லூரி

===================

அவரால் உருவானதுதான்  விபுலாந்த  இசை நடனக்  கல்லூரி. 

யாப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரி போல  ஒரு கல்லூரியை அவர் மட்டக்களப்பிலும் நிறுவ  நினைத்தார். அங்கு பயிற்றுவிக்க  இந்தியாவிலிருந்தும் ஆட்களை வருவித்தார். 

அதில் பலர்  பயின்று  டிப்ளொமா  பட்டம் பெற்று வெளியேறினர். 

பின்னால் அது  கிழக்குப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் அது சுவாமி விபுலாந்த அழகியல் கற்கைகள் நிறுவகமாகி இன்று    இசை, நாடகம், நடனம், ஓவியம்,  சிற்பம்  ஆகிய  துறைகளில் வருடம் தோறும் பல பீ.ஏ பட்டதாரிகள் பட்டம் பெற்று வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். 

இராஜதுரை அரங்கின் முன்னால் அவரது உருவப்படம் 

==================

அண்மையில் தான் அவரது பெரிய திருவுருவப்படத்தை கிழக்கு பல்கலைக்கழக விபுலானந்த அழகிய கற்கைகள் நிறுவகத்தினர் ராஜதுரை அரங்கின் முன்னால் திறந்து வைத்திருந்தார்கள். 

நீண்ட நாட்களாக  இழுபட்டு வந்தது அது. 

அதற்கான படங்கள் தேவைப்பட் போது அவற்றை எனக்கு சரண்யா அனுப்பியிருந்தாள். 

அது அவர் உருவாக்கிய கல்லூரி  அது தனது தமிழகச் செல்வாக்கைப் பயன்படுத்தி பல உதவிகளை அங்கிருந்து அவர் அப்போது பெற்றுக் கொடுத்தார்.  முக்கியமாக அவரது நல்ல  நண்பரான அன்று தமிழக  முதல்வராக இருந்த  எம் ஜீ  ஆர்  அவர்கள்  இந்தக் கல்லூரிக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறார். 

நுழைவாயிலில் ஒரு பக்கம் விபுலானந்தர் திரு உருவும்

மறுபக்கம் ராஜதுரை அவர்களின் திரு உருவும் காட்சி தந்தன. 

அவர் உருவாக்கிய நிறுவகத்தில்  ஓவியம் பயின்ற கொண்டிருந்த ஓவியர்களால் உருவாக்கப்பட்ட படங்கள் அவை. 

அதை அப்படியே படம் பிடித்து நான் சரண்யாவுக்கு அனுப்பினேன். 

அதனை அவர் பாட்டனுக்கு காட்டி இருக்கிறார். 

அவர் மிகவும் மகிழ்ந்து போய் இருக்கிறார். நெகிழ்ந்து போய் இருக்கிறார். 

நான் சரண்யாவுக்கு ஒரு பதில் அனுப்பினேன். 

“எங்கள் சிறு வயதிலேயே எங்களின் ரோல் மாடலாகவும் கதாநாயகனாகவும் இருந்தவர் அவர். 

 பையனாக இருந்த காலத்திலே அவரது பேச்சினால் மிகவும் 

கவரப்பட்டோம், அவரைப் போலவே பேசவும் பழகினோம்.” என்று.

ஆரம்ப காலமும் பிற்காலமும்

————————–

 ஆரம்ப காலங்களில் அவரோடு    எனக்கு இருந்த நெருக்கம் இடைக் காலத்தில்  இல்லாமல் போனது. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. 

பிற்காலச்  சந்திப்பு

——————

 பிற்காலத்தில் அவரது அந்திம காலத்தில் அவர் மட்டக்களப்புக்கு  வந்தபோது தனது பழைய  நண்பர்களைத் தேடிச்சென்று  சந்தித்தார். என்னையும் சந்திக்க அழைப்பு அனுப்பினார்;  சென்று சந்தித்தேன். பழைய காலங்களை நினைவு கூர்ந்தார். அவர்  வார்த்தைகளில் நெகிழ்ச்சி கண்களில்  கண்ணீர்க் கசிவு, மட்டக்களப்பு மண் பற்றி மிகுந்த  கவலை கொண்டிருந்தார். 

அவரது  அருமை ஆசிரியர்  பி.வி  கணபதிப்பிள்ளையின் மனைவி    எனது மாமியார் மகேஸ்வரி  எங்களுடந்தான் இருந்தார். 

 மகேஸ்வரி அக்காவைப் பார்க்க வேண்டும் என்றார் இராஜதுரை.  வீட்டுக்குக் கூட்டிச்சென்றேன்.  மாமி அவரைவிட வயதில் பல  மடங்கு மூத்தவர்,   ராஜ்துரையைக் கண்ட தும் அவர்  வணக்கம் என இருகரம்  கூப்பி  வரவேற்ற அந்தக்காட்சி காணக் கிடைக்காத காட்சி. இரு பழம்  கிழங்களும் தத்தம் மனதுள்  எவ்வளவு  நினைத்திருப்பர். 

எனக்கு ஒரு சாயிபாபா படமும்  சிறு  அழகிய டப்பாவில்    குங்குமும் தந்து “நீர் இதனை  எல்லாம்  நம்பமாட்டீர் விரும்பினால் பெற்றுக் கொள்ளு ராஜா இது சாயி எனக்கு அளித்த பிரசாதம்”என்று கூறினார். 

“ராஜா” என்றே  அவர் என்னை  அழைப்பார். அந்த உச்சரிப்பு   தனித்துவமானது, மனைதில் என்னவோ சுரப்பது. 

நான் அவர் தந்தவற்றை  மிக மரியாதையோடு   பெற்றுகொண்டேன். அவர்  மகிழ்சியோடு அதனை அவதானித்தார். 

“அண்ணன்  உங்களுக்கு முற்கால இராஜதுரை  வரலாறு, பிற்கால ராஜதுரை  வரலாறு என இரண்டு வரலாறுகள் உள்ளன” என்றேன். 

அர்த்த புஸ்டியோடு சிரித்தார். 

 ‘பிற்காலம் பற்றி நிறையத்  தரவுகள் எம்மிடம் உள்ளன. என்னைப் பொறுத்தவரை உங்களின் முற்காலமே பொற்காலம். நினைவில் உள்ளவற்றைப் பதியுங்கள்’ என்றேன். 

 மீண்டும் சிரித்தார்; ஒரு  அனுபவச் சிரிப்பு. சிலவற்றை நினைவு கூர்ந்தார், சில  மணி நேரம் அந்தப்  பழையகாலத்துள்  வாழ்ந்தார்.   வாழ்ந்தோம். என் தந்தையை  எங்கள் வீட்டருகில்  இருந்த   ராஜதுரையை அவரோடு இணைந்து சத்தியாக்கிரகப் போரில் இணைந்த எமது கிராம மக்களை பெயர் கூறிக் கூறி  நினைவு கூர்ந்தார். 

என்ன ஞாபகசக்தி? 

அவர்களில் பெரும்பலானோர்  இன்றில்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அவருக்கு இப்படிப் பல்லயிரக்கணக்கான உறவுகள்  இருந்திருக்கும். 

பேச்சின் இடையில் அக்காலத்திலும் இடைக்காலத்திலும் தான் பெற்ற மிக் மிக  கசப்பான  அனுபவங்களை  மனம்விட்டு நாகரிகமாக்  கூறினார். தான்  கட்சியில் ஓரங்கட்டப்பட்டமையையும்  அதன் பின் தான் எடுத்த முடிவுகளையும்  கூறினார்.  

அவர் தனது வாழ்வின் சரி பிழைகளை மீட்டிப் பார்க்கிறார் என உணர்ந்து கொண்டேன். 

அக்கணம் நான்  அவரில்  அந்த பழைய  இராஜதுரை  அண்ணரைக் கண்டேன். 

வாழ்வின் இறுதி  நாட்களில்  சில பெரியவர்கள்  யாரோடும் பேசமாட்டார்களாம். 

ஆனால் அவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்களாம். அவரகள் ஓயாது பேசுவது தம்மோடுதானாம். 

அதுவே  மனிதர்  வாழ்வின்  இறுதி இதய நாதம்.    

அவரை  விபுலாந்த  அழகியற்கற்கைகள் நிறுவகம்  அழைத்துச் சென்றோம்.  அவர்கள்  அழகாக அவரைக் கௌரவித்தனர். மாணவர்கள்  தமக்காக  அதனை உருவாக்கிய அப்பெரியவரைக் காணத் திரண்டிருந்தனர். அகம் முகம் மலர வாளாகத்தை  இராஜதுரை அரங்கைக் கவனித்தார். 

அன்றைய  அவரது உரை அனைவரையும் கவர்ந்தது. எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு  கேட்கிறேன்; 

சொற் சுத்தம், குரல்சுத்தம், அதே  உறுதி, அதே  கம்பீரம், அதேகுரல், அதே எடுத்துரைப்பு. 

அவருடனான  இறுதிச் சந்திப்பு  2019

————————–

2019  ஆம்  ஆண்டில் நான் இந்து பத்திரிகை நடத்திய  கலை, இலக்கிய, மகாநாடு ஒன்றுக்கு  உரை  நிகழ்த்தச்சென்ற போது  என்னைத் தேடி வந்து, இராஜதுரை  அண்ணர் தங்கியிருந்த  வீட்டுக்கு  என்னை  அழைத்துச் சென்றாள் சரண்யா. அந்த வீடு அவரது  இளைய  மகள்  பூங்கோதையின்  வீடு.  இராஜதுரைக்கு ரவீந்திரா, ரவீந்திரன், இளங்கோ, பூங்கோதை, திருமகன் சிறி என  ஐந்து  மக்கள்  உளர்.  மனைவி காலமாகிவிட்டார், மகள் பூங்கோதையுடனும் பேரப்பிள்ளைகளுடனும் அங்கு  அவர் வாழ்ந்துகொண்டிருந்தார். 

அப்போது, அவர் அறையில் இருந்தார்,  நான் செல்வது அவருக்கு ஏற்கனவே  தெரிவிக்கப்பட்டிருந்தது.    சிரமப்பட்டு நடந்து வந்து  அமர்ந்து கொண்டார், அதே  சிரிப்பு, அதேதொனி, “வாராஜா” என்று விழித்துக் கதைத்தார். 

உணவு உண்டு, உரையாடி  முடிந்து  வரும்போது  எழுந்து சென்று  தனது புத்தக  அலுமாரியிலிருந்து  பாஸ்கரத்தொண்டமான் எழுதிய  ஒரு நூலை எடுத்து அதில்கையெழுத்திட்டு  எனக்களித்தார். 

அவரைப்போல அழகான  உறுப்பான கையெழுத்து. 

 வழியனுப்பி வைத்தார்

இப்போது நாம் அவரை  வழியனுப்பி  வைப்போம். 

அவர் என்றும் எங்கள் மனதில் இருப்பார் 

————————————————————

இரண்டு நாட்களுக்கு முன் சீவகன்  லண்டனிலிருந்து போன் பண்ணினார்…

இராஜதுரை அண்ணன்  போய்விட்டார்…

அதன் பின்னர்தான் சரண்யாவின் செய்தி கிடைத்தது…”அப்பப்பா காலமானார்”.

மனதைத் துயரம்  கௌவியது. 

அவர் வாழ்வு  ஒரு  இரு  முனை வாழ்வா?

—————————

 ஒரு புறம் பகுத்தறிவுச் சிந்தனை, மூட நம்பிக்கைக்கு  எதிரானசிந்தனைகள், மாக்சிஸ  சிந்தனை, தமிழர்  விடுதலைச்சிந்தனைகள், ஏழைமக்கள் பால்  அக்கறை. 

மறுபுறம்  அரசாங்க  அமைச்சர், அசுவமேதயாகம், அந்தணரை அழைத்து ஆசி வேண்டியமை, சாயிபாபாவின் சீடன். 

ஒரு இரு முனை வாழ்க்கையா அல்லது  வாழ்வின் வளர்ச்சி நிலையா,

அல்லது  மாற்று  நிலையா

அல்லது எல்லாவற்றையும் வாழ்வனுபவங்களாகப் பெற்றபக்குவமா?

அவரது தேடலில்  அவர்  வந்து  சேர்ந்த  இடம் இதுவா?

எது  எவ்வாறாயினும்

ஒரு  சகாப்தம் முடிந்தது. அவ்வளவுதான்

நான்  சரண்யாவுக்கு  ஒரு செய்தி அனுப்பினேன்.  அச்செய்தி இதுதான். 

“அவர் வாழ்வு

பல பரிமாணங்களைக் கொண்டது.   

பலபடிப்பினைகளைத் தருவது. அவர்  பலகாரியங்கள்  செய்துள்ளார். மட்டக்களப்புக்கு தன்னை  மறக்காதபடி  பல காரியங்கள்  செய்துள்ளார். அவர் இறப்பு இரங்கற்குரியதன்று, அவர் வாழ்வு கொண்டாடப்படவேண்டியது. 

இரங்க வேண்டாம் கொண்டாடுங்கள். 

 எழுதப்பட  வேண்டியது  அவரது  வாழ்வு

————————-

1927 தொடக்கம் 2025 வரையும் 98 வருட காலம் அவர் வாழ்ந்த  பெரும் வாழ்வனுபவம்  பெற்றவர் அவர் , இப்படி  அனுபவம்பெற்ற பலர் நம் மத்தியில் வாழ்ந்து  மறைந்துள்ளனர்,  அவர்கள்  வாழ்வனுபவங்கள் அதிகம்  எழுதப்படவில்லை. இவரது   வாழ்வு  அனுபவக் காலத்தை  ஆறு காலகட்டங் களாகப் பிரித்துப் பார்க்கலாம் என்பது  எனது  புரிதல். 

முதல் காலகட்டம்: 

அவர் தமிழரசுக் கட்சியில்சேர முன்னர்  அவரது சிந்தனைகள் செயல்பாடுகள் உருவான காலகட்டம். 

இரண்டாவது காலகட்டம்: 

அவர் தமிழரசுக்  கட்சியிலே முக்கிய ஒரு ஆளாக இருந்து செயல்பட்டகால கட்டம். குறிப்பாக, கிழக்கு மாகாணத்திலும் சிறப்பாக இலங்கையிலும் அவர் தமிழரசுக் கட்சியை வளர்த்தெடுக்க அவர் செய்த செயற்பாடுகளும் அவர் எதிர்கொண்ட சவால்களும். 

மூன்றாவது காலகட்டம்: 

தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பித்த பின்னர் அவர் கட்சிக்குள் எதிர் கொண்ட சவால்களும் அதை அவர் கையாண்ட விதங்களும்.  

நாலாவது காலகட்டம்: 

அவர்  யு.என்.பி அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட காலகட்டங்கள், அதாவது அவரது அமைச்சர் காலப் பணிகள் அல்லது செயற்பாடுகள். 

ஐந்தாவது காலகட்டம்: 

அவர் வெளிநாட்டுத் தூதுவராக இருந்து செயல்பட்ட  அவரது ராஜ தந்திர காலகட்டங்கள். 

 ஆறாவது காலகட்டம்: 

அவர் ஓய்வு பெற்று ஒதுங்கி இருந்த போது செயல்பட்ட காலகட்டங்கள். அதாவது அவர் இறுதி காலகட்டங்கள். தனது கடந்த  கால வாழ்வு பற்றிய அவரது  சுய மதிப்பீடு. 

இந்த வகையிலே அவரது 98 வருட கால வாழ்க்கை அணுகப் பட்டு எழுதப்பட்டால் அதிலிருந்து நாம் பல படிப்பினைகளை பெற்றுக் கொள்ளலாம். 

ஒரு பெரிய அரசியல் நாவலுக் கான கருவைக் கொண்டது அவரது வாழ்க்கை. 

அவரது அரசியல் வாழ்க்கை பற்றியும் பிற்கால வாழ்க்கை   பற்றியும் நிறைய எழுத்து ஆதாரங்கள் நாம் பெற்றுக் கொள்ள முடியும். 

அந்த ஆதாரங்களுடன் அவரோடு சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் நினைவுக் குறிப்புகளும் வாய்மொழித் தகவல்களும் மிக மிக முக்கியமான  ஆதாரங்களாகும். 

அவரோடு  அன்று  பேசிப்  பழகித்   திரிந்த  இன்று  உயிரோடு   வாழும் முதிர்ந்த  தலைமுறையுடன் பேசிப்  பெறப்படும் வாய்மொழித் தகவல்கள் இந்த வரலாற்றினை முழுமையாக்க மிகவும் பயன்படும். 

வாய்மொழித்தகவல்கள்  மிக முக்கியமாயினும் அவை   அகஉணர்வு மீதூரப்பெற்றமையினால்  அவை கவனமாகப்பரிசீலனை  செய்யப்டவும் வேண்டும். 

அவர்  வரலாற்றை எழுத  விரும்பும் ஒரு  வரலாற்று  அல்லது பண்பாட்டு  அல்லது  அரசியல்  மாணவர்  ஒருவருக்கு இக்குறிப்புகள்  உதவக் கூடும். அதன் ஒரு அங்கமாகவே இந்த முதலாவது காலகட்டம் இங்கு எழுதப்படுகிறது  

ஆர்வம் உடையோர் இதனைத் தொடர வேண்டும். 

https://arangamnews.com/?p=12504

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.