Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கையெழுத்திட்டனர். இதன்படி காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் இன்று சந்தித்து சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இன்று திமுக மற்றும் காங்கிரஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுகவுடனான உடன்படிக்கையை தொடர்ந்து, மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்பாளரை நாளைக்குள் காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாளை மாநிலங்களவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை இடங்களுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

'திமுக - காங் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது!' - செல்வப்பெருந்தகை என்ன சொல்கிறார்? |DMK–Congress Alliance Agreement Sealed: Selva Perunthagai Reacts - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணனும், தம்பியும்… சிச்சுவேஷன் சாங் 😂👇

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல், கிரிஷ் சோடங்கர், கே சி வேணுகோபால் மற்றும் மாணிக்கம் தாகூர் போட்ட கூத்துகளால் காங்கிரஸுக்கு கடைசியில் போன தடவையை விட இந்த தடவை மூன்று இடங்கள் அதிகமாக கிடைத்திருக்கின்றது. இந்த மூன்று இடங்களையும் இவ்வளவு முரண்பாடுகள் இல்லாமல், நட்பாகக் கேட்டே பெற்றிருக்கலாம். திமுகவிற்கு மட்டும் இந்த தேர்தலில் ஒரு பெரிய ஆதரவு கிடைத்தால், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் வெளியே தான்...................

ஜெயலலிதா ஒரு தடவை பெரிய கட்சிகளின் துணையின்றி தனியவே நின்றார். தோற்கப் போகின்றார் போல என்று நினைக்க, அவர் அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றார். 'அது ஒரு காலம்................' என்று சொல்லும் நிலைக்கு தமிழகத்தின் பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும் மிக விரைவாக வந்துவிட்டார்கள்..................................🫣.

  • கருத்துக்கள உறவுகள்

28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

hindutamil-prod%2F2026-03-04%2Fzxe45hnx%

Updated on: 05 Mar 2026, 2:35 am

2 min read

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதில் முஸ்லீம் லீக், மமக ஆகிய கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதேபோல், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதர கட்சிகளுக்கான பங்கீடு ஓரிரு நாட்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், காங்கிரஸ் 40 தொகுதிகள், 2 மாநிலங்களவை உறுப்பினர் கேட்டதால், தொகு திப் பங்கீட்டில் இழுபறி நீடித்தது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு எட்டப்படவில்லை. இதனால் திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த சூழலில் நேற்று முன்தினம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து காங்கிரஸ் தேசிய தலைமையிடமும் அவர் பேசி சூழலை சுமூகமாக்கியதாகவும், திமுக தரப்பில் கனிமொழியும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திமுக - காங்கிரஸ் இடையே நீண்ட நாட்களாக நீடித்து வந்த தொகுதி பங்கீடு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. இருதரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருப்பதாக நேற்று காலை தகவல்கள் வெளியாகின.

அதன்படி, கோவாவில் இருந்து விமானம் மூலம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னைக்கு நேற்று மாலை வந்தார். அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார்.

சிறிது நேரத்தில் விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை ஆகியோர் தி.நகரில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர். தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்த தகவல் கிடைத்ததும், இருவரும் அறிவாலயத்துக்கு சென்றனர்.

அப்போது, திமுக வழங்கிய 28 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடத்தை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்வப்பெருந்தகை கையெழுத்திட்டனர்.

திமுக தரப்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச் செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, திருச்சி சிவா, பூச்சி எஸ்.முருகன் மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய செயலாளர் நிவேதித் ஆல்வா, தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவர் எஸ்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சிகள்: இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுடனும் திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு நேற்று பேச்சு வார்த்தை நடத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடத்தப்பட்ட 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

கடந்த 2021 தேர்தலை போல் 6 இடங்கள் வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்பதாலும், புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள திமுக வலியுறுத்தியதாலும் முடிவு எட்டப்படவில்லை. மக்கள் நீதி மய்யம் 3 தொகுதி கேட்ட நிலையில், ஒரு இடம் மட்டும் வழங்கப்படும். அதுவும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக குழு தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மியும் 2 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

28+1 இடங்கள் ஒதுக்கீடு: திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து

  • இணையவன் changed the title to தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
  • கருத்துக்கள உறவுகள்

“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது” - திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பேச்சு

hindutamil-prod%2F2026-03-11%2Flsz3fv3d%

திருச்சி: “தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும்” என்று திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலையில் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை தந்தார். ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டிய பின்னர், பஞ்சப்பூரில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசியல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “ஆடி மாதத்தில் காவிரி பெருகுவதுபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை இப்போது வீசுகிறது.

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர். என்டிஏ கூட்டணி அந்த மாற்றத்தை தரும். ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுகவை தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது. தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்காக மட்டுமல்ல, மாநிலத்தில் அனைத்து குடும்பங்களுக்காகவும் உழைக்கும், செயல்படும் அரசை மக்கள் விரும்புகின்றனர். அது என்டிஏ-வால் மட்டுமே தர முடியும்.

திருச்சியை சேர்ந்த தமிழக அமைச்சர் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார். பணத்துக்காக வேலைகள் விற்கப்படும்போது நேர்மையான இளைஞர்களின் அரசு பணி கனவு பாழாகிறது. இந்த மோசடி பணமெல்லாம் எங்கே போகிறது? தமிழகத்தின் ஊழல் பணமெல்லாம் ஒரு குடும்பத்துக்கு சென்று சேர்கிறது.

தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு:

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளது. என்டிஏ ஆட்சி அமைந்தால் பெண்கள் அச்சமின்றி வாழலாம். ஆனால், குற்றவாளிகள்தான் அஞ்சுவார்கள்.

மேற்காசிய போர்: மேற்காசிய போர் குறித்த வதந்திகளை நம்பி மக்கள் பீதியடைய வேண்டாம். போர் காரணமாக எரிவாயு விநியோக சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை எப்படியானாலும் இந்திய மக்களின் நலன் பாதுகாக்கப்படும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

“தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான அலை வீசுகிறது” - திருச்சியில் பிரதமர் மோடி நம்பிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

“காங்கிரஸுக்கு திமுக அடிமை...” - திருச்சியில் மோடி மேடையில் பழனிசாமி பேச்சு

hindutamil-prod%2F2026-03-11%2F5ve9u7z3%

திருச்சி: “ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் ஆகியவற்றைக் கேட்டு தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்த காங்கிரஸ் கட்சியிடம், கெஞ்சி, அதற்கு அடிமையாகி, அதனுடன் கூட்டணி வைத்திருக்கிறது திமுக” என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திருச்சி பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘இதே திருச்சியில் இரண்டு நாட்களுக்கு முன்பு திமுகவின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின், நமது தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சனம் செய்தார். அதிமுக, தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு இணைந்து தமிழகத்தில் அற்புதமான கூட்டணியை அமைத்திருக்கிறது. இது வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி.

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில், பல்வேறு வார்த்தைப் போர்களுக்கு இடையில்தான் திமுக - காங்கிரஸ் கூட்டணி இப்போது அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட 20 நாட்கள் திமுக, காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் நடந்தது.

ஆட்சியில் பங்கு, கூடுதல் இடம் கேட்டு காங்கிரஸ் தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு, பல்வேறு விமர்சனங்களை செய்து வந்தது. அத்தனையும் தாண்டி கெஞ்சி காங்கிரஸுக்கு அடிமையாகி அக்கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது திமுக.

ஆனால், அதிமுக - தேசிய ஜனநாயகக் கூட்டணி ஓர் அற்புதமான கூட்டணி. பரஸ்பர உணர்வோடு நாங்கள் இணைந்திருக்கிறோம். வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணியின் தலைவர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் எறும்பைப் போல, தேனிக்களைப் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு மீண்டும் தமிழகத்தில் ஓர் அற்புதமான ஆட்சியை அமைப்போம்.

மு.க.ஸ்டாலின் இனி எத்தனை இடங்களில் கூட்டம் போட்டாலும் நாட்டு மக்கள் அவரை நம்பப் போவதில்லை. கடந்த 2021-ல் 525 அறிவிப்புகளை வெளியிட்டது திமுக. இதில் 4-ல் ஒரு பங்கு அறிவிப்புகள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அத்தனையும் பொய். கவர்ச்சிகரமாகப் பேசி, கவர்ச்சிகரமாக அறிக்கைவிட்டு ஆனால், சொன்ன அறிவிப்புகளை இதுவரை நடைமுறைப்படுத்தாத அரசாங்கம்தான் திமுக அரசாங்கம், திமுக கட்சி.

மக்கள் உங்களை அடையாளம் கண்டுகொண்டுவிட்டார்கள். தேர்தல் வந்தால் திமுகவிடம் இருந்து அறிக்கைகள் வரும். தேர்தல் முடிந்தால் அதோடு விட்டுவிடுவார்கள். அதுதான் திமுகவின் கொள்கை.

ஆனால், எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய கட்சி அதிமுக, நிறைவேற்றிய கூட்டணி எங்கள் கூட்டணி. ஏமாற்றி ஆட்சிக்கு வந்து மக்களை வாட்டி வதைக்கிற அரசாக திமுக அரசு உள்ளது.

தமிழ்நாட்டுக்கும் என்டிஏவுக்கும்தான் போட்டி என ஸ்டாலின் கூறி வருகிறார். பாவம், அவருக்கு மறதி. நடக்கப் போவது தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல். தமிழ்நாட்டில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், யார் வரக் கூடாது என்று மக்கள் முடிவு செய்யக் கூடிய தேர்தல் இந்த தேர்தல். மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதனால்தான், எங்களைப் பற்றி உங்களால் விமர்சனம் செய்ய முடியவில்லை.

2011 முதல் 2021 வரை 10 ஆண்டு காலம் அதிமுக அற்புதமான ஆட்சியைக் கொடுத்தது. அது பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டினார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பினருக்குமான அரசாக அதிமுக அரசு திகழ்ந்தது.

தங்கள் கூட்டணியில் உள்ள அனைவருக்கும் ஒரே கொள்கை என்று ஸ்டாலின் அடிக்கடி பேசுகிறார். திமுக கொள்கையும் காங்கிரஸ் கொள்கையும் ஒன்றா? திமுக கொள்கைகளும் கம்யூனிஸ்ட்களின் கொள்கைகளும் ஒன்றா? திமுக கொள்கையும் விசிகவின் கொள்கையும் ஒன்றா? ஒரே கொள்கை என்றால் ஒரே கட்சியாகிவிடலாம். தனித்தனி கட்சி தேவையில்லை.

பல்வேறு கொள்கைகள் உள்ள கட்சிகள் சேர்ந்துதான் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால், ஒருமித்த கொள்கை கொண்ட கட்சிகள் எல்லாம் இணைந்துள்ள கூட்டணிதான் திமுக கூட்டணி என ஏமாற்றுகிற கட்சி திமுக. வாக்குகள் சிதறக் கூடாது என்பதற்காக கூட்டணி அமைப்பது இயல்பு.

திமுகவை அகற்ற வேண்டும், தமிழ்நாடு ஏற்றம் பெற வேண்டும், வளம் பெற வேண்டும், கொள்ளையடிக்கிற கூட்டத்தை அடித்து விரட்ட வேண்டும் என்ற அடிப்படையில் பிரமாதமான கூட்டணியாக எங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

“காங்கிரஸுக்கு திமுக அடிமை...” - திருச்சியில் மோடி மேடையில் பழனிசாமி பேச்சு

  • கருத்துக்கள உறவுகள்

மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு - மூன்றில் திமுக சின்னத்தில் போட்டி!

hindutamil-prod%2F2026-03-11%2Fb4mgsw1z%

சென்னை: எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கியது திமுக. திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கவனித்து வந்தனர்.

தற்போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை சுமுகமாக முடித்து வருகிறது திமுக. அந்த வகையில் மதிமுகவுக்கு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று (மார்ச் 11) தொகுதி உடன்பாடு குறித்து கலந்து பேசினர். அதில் எதிர்வரும் தேர்தலில் மதிமுக 4 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதாக முடிவானது.

இதில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்படும் தனி சின்னத்திலும் அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28, முஸ்லீம் லீக், மமக-க்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு - மூன்றில் திமுக சின்னத்தில் போட்டி!

  • கருத்துக்கள உறவுகள்

திமுக கூட்டணியில் 2 கட்சிகளின் வருகையால் புது பிரச்னையா? பின்னணி அலசல்

திமுக, கூட்டணிக் கட்சிகள், தே.மு.தி.க, மதிமுக

பட மூலாதாரம்,@mkstalin/X

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 12 மார்ச் 2026, 14:05 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

"கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறுகிறது. ஓர் இடத்தைக் கூடுதலாக ஒதுக்குமாறு கேட்டோம். வாய்ப்பில்லை எனக் கூறிவிட்டனர்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.

தி.மு.க உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டணிக்குள் புதுவரவான தே.மு.தி.க-வை காரணம் காட்டி தொகுதிகளின் எண்ணிக்கையை தி.மு.க குறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் தி.மு.க தலைமை ஈடுபட்டு வருகிறது.

தற்போது வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு தொகுதிகளை தி.மு.க ஒதுக்கியது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நான்கு தொகுதிகளில் மூன்றில் உதயசூரியன் சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் ம.தி.மு.க போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ம.தி.மு.க நிலை என்ன?

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க, இந்தமுறை நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது. எண்ணிக்கை குறைந்தது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இதனை ''மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டுள்ளதாக'' கூறினார்.

"கட்சியின் பதிவைப் பாதுகாத்துக் கொள்வதற்காகு தனிச் சின்னத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கு இடமில்லை" என வைகோ தெரிவித்தார்.

திமுக, கூட்டணிக் கட்சிகள், தே.மு.தி.க, மதிமுக

பட மூலாதாரம்,Getty Images

'பா.ஜ.க எதிர்ப்பு... இடங்கள் குறைப்பு'

தி.மு.க கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் குறைந்தது 2 முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது.

"ஏன் இவ்வளவு தாமதம்?" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம். இந்தமுறை ஓர் இடத்தைக் குறைத்து ஐந்து இடங்களைத் தருவதாக தி.மு.க கூறியுள்ளது. ஆனால், 6 பிளஸ் 1 என்ற அளவில் இடங்களை ஒதுக்குமாறு தெரிவித்துள்ளோம்" என்கிறார்.

ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு கூறியதால் ஆறு இடங்களையாவது ஒதுக்குமாறு தங்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"இந்தமுறை ஆறு இடங்களைக் கேட்டுப் பெற வேண்டும் என்பது கட்சியின் முடிவாக உள்ளது. பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது" எனக் கூறுகிறார் மு.வீரபாண்டியன்.

தொடர்ந்து அவர் பேசும்போது, "சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவை எதிர்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் பிரதான நோக்கமாக உள்ளது. அதற்காக ஏற்கெனவே பெற்ற இடங்களைக் குறைத்துக் கொள்வது நல்லதல்ல எனக் கூறியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

திமுக, கூட்டணிக் கட்சிகள், தே.மு.தி.க, மதிமுக

பட மூலாதாரம்,PremallathaDmdk/X

படக்குறிப்பு,தே.மு.தி.க முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றது.

'இந்தமுறையும் அதே காரணம்'

இதேபோன்ற நெருக்கடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்கொண்டுள்ளது.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜிடம் பிபிசி தமிழ் பேசியது.

"கூடுதல் இடங்களை ஒதுக்குவதில் தி.மு.க தரப்பில் உள்ள சிரமங்களைக் கூறினார்கள். புதிய கட்சிகளை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தனர். ஆனால், கடந்தமுறை ஆறு இடங்கள் கொடுத்ததையே கட்சி நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறிவிட்டோம்" என்கிறார்.

"2021 சட்டமன்றத் தேர்தலின்போது அரசியல் ரீதியாக சில காரணங்கள் இருந்ததால் தி.மு.கவிடம் ஆறு இடங்களை பெற்றுக் கொண்டோம்" எனக் கூறும் கனகராஜ், "அதே காரணத்தை இந்த முறை கூறுவதையும் சில காரணங்களைக் காட்டி இடங்களை குறைப்பதும் சரியல்ல எனக் கூறிவிட்டு வந்தோம்" என்கிறார்.

முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசிவிட்டு மீண்டும் தொடர்பு கொள்ள உள்ளதாக தி.மு.க பேச்சுவார்த்தைக் குழு தங்களிடம் கூறியதாகக் குறிப்பிட்ட கனகராஜ், "வரும் 14 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது" எனத் தெரிவித்தார்.

திமுக, கூட்டணிக் கட்சிகள், தே.மு.தி.க, மதிமுக

பட மூலாதாரம்,@tncpim/X

படக்குறிப்பு,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு முறை தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

'மற்றவர்களோடு கணக்கிட வேண்டாம்'

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க, ஆகிய கட்சிகளிடம் இதுவரை தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இவற்றில் மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் முதல்முறையாக தி.மு.க கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

வி.சி.க பொதுச்செயலாளர் ரவிக்குமாரிடம் பேசியபோது, "2021 சட்டசபைத் தேர்தலில் அன்றைய சூழலைக் கருத்தில் கொண்டு ஆறு இடங்களை ஏற்றுக் கொண்டோம். இந்தமுறை இதர கட்சிகளுடன் சேர்த்து விடுதலைச் சிறுத்தைகளைக் கணக்கிட வேண்டாம் என தி.மு.கவிடம் கூறிவிட்டோம்" என தெரிவித்தார்.

ஆனால், தி.மு.க போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டு கூட்டணிக் கட்சிகளிடம் பேசி வருவதாகக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் முடிவில் தனித்து ஆட்சியமைக்கும் வகையில் 170 இடங்களில் தி.மு.க போட்டியிட வேண்டும். புதிதாக கட்சிகள் இணைவது கூட்டணிக்குப் பலம் என்பதால் அவர்களைக் கணக்கில் வைத்து இடங்களை ஒதுக்குகிறோம்" என்கிறார்.

"கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்படுவது உண்மைதான். அதேநேரம், கூட்டணியில் யாரையும் விட்டுவிடக் கூடாது எனக் கருதுகிறோம். அவரவர் வலிமைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

திமுக, கூட்டணிக் கட்சிகள், தே.மு.தி.க, மதிமுக

பட மூலாதாரம்,Kamalhaasan/X

தொகுதி குறைப்புக்கு தே.மு.தி.க காரணமா?

தி.மு.க கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க ஆகிய கட்சிகளைக் காரணம் காட்டி தங்களுக்கான இடங்களைக் குறைப்பதாக, தி.மு.க கூட்டணிக் கட்சிகள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

"புதிய கட்சிகளுக்கு அதிக இடங்களை தி.மு.க ஒதுக்கினால் நெருடல் ஏற்படும். அப்படியொரு சூழல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தி.மு.க தலைமைக்கு உள்ளது" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்.

"தே.மு.தி.கவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு பத்து இடங்களுடன் ராஜ்யசபா சீட் கொடுப்பதாக தி.மு.க சீனியர் நிர்வாகிகள் உறுதியளித்ததாக தகவல் வெளியானது. தற்போதைய நிலையில் இந்த எண்ணிக்கை குறையலாம்" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.

தே.மு.தி.கவுக்கு எட்டு இடங்களை தி.மு.க ஒதுக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கூறும் குபேந்திரன், "தே.மு.தி.கவுக்கு இணையான இடங்களை வி.சி.கவுக்கு ஒதுக்கலாம். ம.தி.மு.கவுக்கு இடங்கள் குறைந்ததுபோல இடதுசாரிக் கட்சிகளின் தொகுதிகளும் குறையலாம்" எனக் கூறுகிறார்.

தே.மு.தி.கவுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறித்து, டி.கே.எஸ்.இளங்கோவனிடம் பிபிசி தமிழ் கேட்டது.

"கூட்டணியில் அதிக இடங்களை தே.மு.தி.க கேட்டுள்ளது. சில திட்டங்களின் அடிப்படையில் அவர்களைச் சேர்த்துள்ளோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக தே.மு.தி.க இருந்துள்ளது. அதைக் கணக்கிட்டு நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறோம்" எனக் கூறுகிறார்.

தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ பார்த்தசாரதியிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "தற்போது பேச இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.

இலக்கு 200 வியூகம்

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லாவிட்டால் இடங்களைக் குறைத்துக் கொள்வதற்கு தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"தி.மு.க கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுக்கு வேறு வழியில்லை. வேறு கூட்டணிகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் இல்லை. ராஜ்யசபா சீட் கிடைத்ததால் தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துவிட்டது. அதைக் காரணம் காட்டியே பிற கட்சிகளுக்கு இடங்கள் குறைக்கப்படுகின்றன" என்கிறார் ஷ்யாம்.

அதேநேரம், காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலைவிட மூன்று இடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டிப் பேசிய ஷ்யாம், "பட்டியல் சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை வாக்குகள் தமிழக வெற்றிக் கழகத்துக்குச் சென்றுவிடக் கூடாது என்பதால் 28 இடங்களை தி.மு.க ஒதுக்கியது" எனக் கூறுகிறார்.

"காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கியதில் தி.மு.கவினரில் பலருக்கும் உடன்பாடு இல்லை" எனக் கூறும் ஷ்யாம், "200 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பது தி.மு.கவின் இலக்காக உள்ளது." என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c15x15jjx95o

  • கருத்துக்கள உறவுகள்

விஜை பாஜக கூட்டணியில் சேர்கிறார்…அதனால்தான் இன்று இதயதெய்வம் திரிஷா அண்ணியார் டெல்லி கிளம்பினார் என பரபரக்கிறது சென்னை.

“பாசிச பாஜக கொள்கை எதிரி”…

இத கேட்டு சில்லறயெல்லாம் சிதற விட்டேன் என்று நினைக்கத்தான் 😂

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

‘அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால்..?’ - சீமான் ரியாக்‌ஷன்

hindutamil-prod%2F2026-03-14%2Fq3fdfjf4%

திருச்சி: “என் வாக்காளர்கள் யார் எனத் தெரிந்துகொண்டே அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால் எங்களுக்கு பாதிப்பு வருமா என கேட்கிறீர்கள்.பாதிப்புக்கு பயந்து நிற்பவன் ஒரு போர்வீரனாக இருக்க முடியுமா?” என்றார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருச்சி விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கடந்த 15 நாட்களுக்குள் பல்வேறு கொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. 6 வயது குழந்தையிலிருந்து 60 வயது முதியவர்களுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர் குற்றச் செயல்கள் அதிகரிப்பு சமூகத்தின் ஒழுக்க சீர்கேட்டுக்கு காரணமாகிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானோர் மதுபோதையில் உள்ளது கவலைக்குரியது. இதைத் தடுப்பதற்கு அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் பொறுப்புள்ளது.

சாதி அரசியலாக மாறி அதிகாரத்துக்கு வந்தால் சமத்துவம் அழியும். மதம் அரசியலாக மாறினால் மனிதம் அழியும். பணம் அரசியலாக மாறினால் பண்பாடு மற்றும் ஒழுக்கம் அழியும். நல்ல ஒழுக்கம் மற்றும் அறநெறி கொண்ட சமூகத்தை உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

எதிர்காலத்தில் பத்திரமாக நம் குழந்தைகளை இந்த பூமியில் விட முடியுமா என்ற ஐயம் எழுகிறது. ஆட்சியாளர்கள் தவறு செய்கிறார்கள் என்றால் ஆட்சியாளர்களை தேர்வு செய்த மக்களும் பொறுப்பேற்க வேண்டும்.

தொடர்ந்து 60 ஆண்டுகளாக தவறு செய்யும் ஆட்சியாளர்களையே தேர்வு செய்து, இதே அதிகாரங்களே நிறுவப்பட்டு வந்தால் என்ன மாற்றம் நிகழும்?

தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள். அந்த வகையில் புதிய கட்சி தொடங்கி உள்ள சசிகலாவுக்கு வாழ்த்துகள்.

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தை ஏற்றுக் கொண்ட நாட்டில் இருந்து கொண்டு தனியார்மயத்துக்கு எதிராக திமுக போராடுவதாக கூறுவது வேடிக்கை. தனியார்மயத்துக்கு கையெழுத்து போட்டதே திமுக தான். தூய்மைப் பணியாளர், கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகள் ஏற்கெனவே தனியார்மயமாகிவிட்டன. சாரயக்கடை தான் அரசிடம் உள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் போடும் குண்டை விட திமுக தனியார்மயத்துக்கு எதிராக போராடும் என்பது பெரும் குண்டாக இருக்கிறது.

பெரிய பொருளாதார பின்னணி இல்லாத எளிய பிள்ளைகளான நாங்கள் முன்கூட்டியே ஓடத் தொடங்க வேண்டும். அவர்கள் செய்தித்தாள்களில் முன்பக்கம் விளம்பரம் கொடுப்பர். எங்களுக்கு அதற்கு வசதியில்லை. எனவே முன்கூட்டியே வாக்காளர்களை சந்தித்து அரசியல் நிலைப்பாடுகளை விளக்கி வருகிறோம்.

தமிழர் நலனுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்றும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. உலக நாடுகள் தலையிட்டு ஈரான் – இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும்.

என் வாக்காளர்கள் யார் எனத் தெரிந்து கொண்டே அதிமுக கூட்டணிக்கு தவெக சென்றால் எங்களுக்கு பாதிப்பு வருமா என கேட்கிறீர்கள். பாதிப்புக்கு பயந்து நிற்பவன் ஒரு போர்வீரனாக இருக்க முடியுமா?

குடும்பத் தலைவிக்கு ரூ.2,000 தருவேன் என்கின்றனர். நான் கூட மாதம் மாதம் ரூ.50,000 தரலாம் என நினைக்கிறேன். எதையாவது சொல்லிவிட்டு போக வேண்டியதுதான்” என்றார் சீமான்.

https://www.hindutamil.in/news/tamilnadu/ntk-leader-seeman-on-aiadmk-and-tvk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அனைவரும் கட்சி தொடங்குகிறார்கள். அந்த வகையில் புதிய கட்சி தொடங்கி உள்ள சசிகலாவுக்கு வாழ்த்துகள்.

சைமனு…

1988 இல் இருந்து ஜெயலலிதாவோடு ஓருயிர், ஈருடலாய் வாழ்ந்து கொள்ளை மேல், கொள்ளை அடித்த சசி மாற்றம் வரவேண்டும் என கட்சி ஆரம்பிக்கிறார்…அதை நீங்க வரவேற்கிறீங்க😂

இதில 60 வருட மோசமான (அதில் பாதி ஜெ-சசி ஆட்சி) ஆட்சிக்கு மக்களும் பொறுப்பு என மக்கள் மீதே குற்றம் வேற சொல்கிறார்.

இதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மூக்கிலேயே குத்தி டெபாசிட்டை காலி பண்ணுகிறார்கள்😂.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சைமனு…

1988 இல் இருந்து ஜெயலலிதாவோடு ஓருயிர், ஈருடலாய் வாழ்ந்து கொள்ளை மேல், கொள்ளை அடித்த சசி மாற்றம் வரவேண்டும் என கட்சி ஆரம்பிக்கிறார்…அதை நீங்க வரவேற்கிறீங்க😂

இதில 60 வருட மோசமான (அதில் பாதி ஜெ-சசி ஆட்சி) ஆட்சிக்கு மக்களும் பொறுப்பு என மக்கள் மீதே குற்றம் வேற சொல்கிறார்.

இதனால்தான் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் மூக்கிலேயே குத்தி டெபாசிட்டை காலி பண்ணுகிறார்கள்😂.

அண்ணை, தனித்திரி திறந்தால் கண்ணில படுமே என கும்பல்ல கோவிந்தாவா போட்டுவிட்டால் கண்ணில எண்ணெய் விட்டபடி தான் நீங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

அண்ணை, தனித்திரி திறந்தால் கண்ணில படுமே என கும்பல்ல கோவிந்தாவா போட்டுவிட்டால் கண்ணில எண்ணெய் விட்டபடி தான் நீங்கள்!

SaDS (Search and destroy Seeman) எண்டு ஒரு மென்பொருள் வைத்துள்ளேன். யாழில் எங்கு “சீமான்” என யார் எழுதினாலும் எனக்கு அலெர்ட் வந்து விடும்😂.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக கூட்டணிக்கு தயாராகிறதா தவெக? - மாவட்டச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை

hindutamil-prod%2F2026-03-14%2F99sngmct%

2026 சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. தனது முதல் மாநாட்டிலேயே, "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு" எனும் அதிரடி ஆஃபரை வெளியிட்டார் விஜய். இது திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக ஒரு மெகா கூட்டணிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, காங்கிரஸ் தங்களை நோக்கி வரும் என விஜய் நம்பினார். ஆனால், யதார்த்தம் வேறாக அமைந்தது.

காங்கிரஸ் மீண்டும் திமுக-வுடனேயே பயணிக்க முடிவு செய்தது, விஜய்யின் ஆரம்பகட்ட வியூகத்துக்குப் பின்னடைவாக அமைந்தது. அதிகாரப் பகிர்வு எனும் துருப்புச்சீட்டு கையில் இருந்தும், ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத தவெக-வின் வாக்கு வங்கி மற்றும் எதிர்காலம் குறித்த ஐயப்பாட்டால், மற்ற கட்சிகள் தவெக பக்கம் தலைவைக்கத் தயங்கின. இது ஒருபுறமிருக்க, சிறிய மற்றும் செல்வாக்கான கட்சிகளைத் தன்பக்கம் இழுக்க தவெக போட்ட திட்டங்களை, பாஜக மேலிடம் மிக சாதுர்யமாக முறியடித்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது தவெக தலைவரைச் சுற்றி அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் பலவாறாக நெருக்கடிகள் சூழ்ந்துள்ளன. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' பட வெளியீட்டுச் சிக்கல்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் என விஜய் கடுமையான அழுத்தத்தில் இருக்கிறார். அதேசமயம் தவெக தனித்துப் போட்டியிட்டால் அது வாக்கு பிரிப்புக்கு வழிவகுத்து, இறுதியில் திமுக கூட்டணிக்கே சாதகமாக முடியும் என்பதை பாஜக-வும் நன்கு உணர்ந்துள்ளது.

இதனைப் பயன்படுத்திக் கொண்டு, தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது. ஏற்கெனவே திரைமறைவில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில், தற்போது இறுதி முயற்சியாக பாஜக மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தான், 'பாஜக-வுடன் கூட்டணி அமைக்கலாமா?' என்ற யோசனை விஜய் தரப்புக்கும் வந்திருப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

இது குறித்து விவாதிக்க, நேற்று தவெக மாவட்டச் செயலாளர்களுடன் ஆன்லைன் வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார் பொதுச்செயலாளர் ஆனந்த். அதில், மாநாட்டில் அறிவித்த ‘கொள்கை' மாறாமல் தனித்தே நின்று பலத்தைக் காட்டுவதா அல்லது, தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்க கூட்டணியில் கைகோப்பதா? ஒரு வேளை, பாஜக-வுடன் கூட்டணி அமைத்தால், ஏற்கெனவே அவர்களை ‘கொள்கை எதிரி' என்று அறிவித்ததற்குப் பொதுமக்களிடம் என்ன பதில் சொல்வது என்பது குறித்தெல்லாம் பலவாறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்டத்தில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர்களில் சிலர், "புதிதாகக் களம் காண்பதால் கட்சிக்கும், தலைவருக்கும் ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்க்க இப்போதைக்கு பாஜக-வுடன் கூட்டணி அமைப்பதே பாதுகாப்பு" என வெளிப்படையாகக் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விஜய் எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம் என மாவட்டச் செயலாளர்கள் உறுதி அளித்ததாகச் சொல்லப்படுகிறது.

இப்படியான சூழலில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராக இன்று (மார்ச் 14) விஜய் டெல்லி செல்கிறார். நாளை அவரிடம் விசாரணை நடைபெற உள்ள நிலையில், ஒருநாள் முன்னதாகவே அவர் டெல்லி செல்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்று இரவு டெல்லி ஹோட்டலில் தங்கும் விஜய், பாஜக தேசியத் தலைவர்களை ரகசியமாகச் சந்தித்துப் பேசக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்படியான சந்திப்புகள் நடந்தால் கிட்டத்தட்ட பாஜக அணியில் தவெக இணைவது உறுதியாகி விடும்.

https://www.hindutamil.in/news/tamilnadu/is-vijay-joining-nda

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது? வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட முழு விவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி

பட மூலாதாரம்,ANI

15 மார்ச் 2026, 05:42 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. இன்று (15-03-2026) மாலை 4 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.

இதையடுத்து, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி,

  • தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி வெளியாகிறது.

  • அசாமில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  • கேரளாவிலும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  • புதுச்சேரியில் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  • மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரண்டுகட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

  • நான்கு மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படுகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026

  • வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் : 30-03-2026

  • வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் : 06-04-2026

  • வேட்புமனு பரிசீலனை : 07-04-2026

  • வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் : 09-04-2026

  • வாக்குப் பதிவு நாள் : 23-04-2026

  • வாக்கு எண்ணிக்கை : 04-05-2026

தமிழ்நாட்டில் 2021ல் நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அதன் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலம் மே மாதம் முடிவுக்கு வருகிறது.

அதேபோன்று, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சி கேரளாவில் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

செய்தியாளர் சந்திப்பில் கூறியது என்ன?

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

"இந்தியாவின் கலாசார செறிவையும் பன்முகத்தன்மையையும் தேர்தல்கள் பிரதிபலிக்கின்றன. இதை நோக்கமாகக் கொண்டே எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, தகுதியான நபர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். தகுதிவாய்ந்த ஒரு நபர் கூட விடுபடக் கூடாது என்ற நோக்கில் இந்த பணிகள் நடத்தப்பட்டன. பிஎல்ஓ உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வாழ்த்துகள்." என்றார். மேலும்,

  • முதன்முறை வாக்காளர்கள் இது மிக முக்கியமான உரிமை. வாக்களிக்கும் உரிமை. அதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும்.

  • அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தமாக 17.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

  • 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

  • 25 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

  • 8.5 லட்சம் பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவர்.

  • தேனி மாவட்டம் வருஷநாடு பகுதிக்கு பயணிக்க மூன்று மணிநேரமாகும்.

  • ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் வாக்கு சதவிகிதம் தெரிவிக்கபடும்.

  • அனைத்து பிஎல்ஓக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்.

  • அனைத்துக் கட்சிகளுடனும் ஏற்கெனவே பலமுறை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

  • தமிழ்நாட்டில் சுமார் 75032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.

  • வாக்குச்சாவடிகளில் கழிவறை, குடிநீர், சாய்வுதளம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் நிலவரம்?

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக பிரதானமாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளுடன் புதிதாக சில கட்சிகளும் இணைந்துள்ளன. தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் சமீபத்தில் இணைந்தார்.

இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடமும் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் (மூன்றில் திமுக சின்னத்தில் போட்டியிடும்), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. 2021 தேர்தலில் பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக-அதிமுக இரு கட்சிகளும் பிரிந்து இருவேறு கூட்டணிகளாக களம்கண்டன. ஆனால் இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்கின்றன.

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதே கூட்டணியில் நீடிக்கிறது. கடந்த தேர்தலில் தேமுதிகவுடன் இணைந்து களம்கண்ட அமமுக இம்முறை அதிமுக கூட்டணியிலேயே இணைந்துள்ளது.

இதுதவிர, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி வழக்கம் போலவே தனித்து போட்டியிடுகிறது.

புதிதாக உருவாகியுள்ள விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் களம் காண தயாராகி வருகிறது.

'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் தொண்டர் உருவாக்கிய கட்சியில் தான் இணைந்துள்ளதாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நிலவரம் என்ன?

புதுச்சேரியைப் பொறுத்தவரையிலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து போட்டியிட்டு ஆட்சியை அமைத்தன. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளில் இந்த கூட்டணி வெற்றி பெற்றது.

என்ஆர் காங்கிரசின் ரங்கசாமி முதலமைச்சரானார். இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகின்றன.

2026 தேர்தலை முன்னிட்டு கூட்டணி அரசியல் மீண்டும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

கடந்த தேர்தலைப் போன்றே தற்போதும் பாஜக , என்ஆர் காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்பதாக அறிவித்துள்ளன. தொகுதிப்பங்கீடு குறித்த இறுதியான முடிவு வெளியாகவில்லை.

மறுபுறம், காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj4z7qrgeppo

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

hindutamil-prod%2F2026-03-15%2Fssfzah70%

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதிகள் இன்று (15.03.2026) முதல் நடைமுறைக்கு வந்துவிட்டதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியத் தேர்தல் ஆணையம், 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களுக்கான கீழ்க்காணும் கால அட்டவணையை அறிவித்துள்ளது: தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடும் நாள் (மற்றும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான ஆரம்ப நாள்) - 30 .03.2026 (திங்கட்கிழமை).

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் - 06.04.2026 (திங்கட்கிழமை)

பெறப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாள் - 07.04.2026 (செவ்வாய்க்கிழமை)

வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் - 09.04.2026 (வியாழக்கிழமை)

வாக்குப்பதிவு நாள் - 23.04.2026 (வியாழக்கிழமை)

வாக்கு எண்ணிக்கை நாள் - 04.05.2026 (திங்கட்கிழமை)

தேர்தல் நடைமுறைகள் முடிவுபெறும் நாள் - 06.05.2026 (புதன்கிழமை)

மேற்கண்ட தேர்தலுக்கான தேர்தல் நன்னடத்தை விதி (Model Code of Conduct) 15.03.2026 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நன்னடத்தை விதி அனைத்து வேட்பாளர்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மற்றும் மத்திய / மாநில அரசுகளுக்கும் பொருந்தும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டது - தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Edited by ஏராளன்
date

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் - 06.40.2026 (திங்கட்கிழமை)

  • கருத்துக்கள உறவுகள்

கட்சிகள், வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் என்ன? வாக்காளர் அறிய வேண்டிய முக்கிய விஷயங்கள்

வாக்களித்த ஒரு பெண்ணின் புகைப்படம்

பட மூலாதாரம்,Getty Images

4 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(2021-ஆண்டு கட்டுரை மறுபகிர்வு செய்யப்படுகிறது)

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடனேயே தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதுபற்றி அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் எந்த அளவுக்கு அறிந்து கொள்வது முக்கியமோ, அதை விட முக்கியம், தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வாக்காளர்கள் அறிந்து கொள்வது அவசியம்.

ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருப்பதாக நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள்.

இந்த விதிகள் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கு மட்டுமல்லாது தனிப்பட்ட வேட்பாளர்களுக்கும் பொருந்தும்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் அவ்வாறு வகுக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன என்பதை இங்கே பட்டியலிடுகிறோம்.

தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன என்பதை அறிந்துகொள்வது, உங்கள் தொகுதியில் அல்லது மாநிலத்தில் கட்சிகளோ, வேட்பாளர்களோ விதி மீறலில் ஈடுபட்டால் அவற்றைக் கண்டறிய உதவலாம்.

பொது நடத்தை விதிகள்

1. சாதி, மத, சமூக அல்லது மொழி ரீதியான பிரச்னைகளை உருவாக்கவோ, ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளை அதிகப்படுத்தவோ காரணமாகும் செயல்களில் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது.

2. பிற அரசியல் கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களது கொள்கைகள், திட்டங்கள், கடந்த கால நடவடிக்கைகள் ஆகியவற்றையே விமர்சிக்க வேண்டும். வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது.

3. தங்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய கட்சிகள் அல்லது அந்த கட்சியை சார்ந்தவர்கள் மீதான சரி பார்க்கப்படாத, உறுதிசெய்யப்படாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது; புகார்களைத் திரித்து கூறுவதையும் தவிர்க்க வேண்டும்.

4. சாதி அல்லது மத அடிப்படையில் வாக்குகளை கோரக்கூடாது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டு இடங்களை தேர்தல் பரப்புரைக்காகப் பயன்படுத்தக்கூடாது.

5. வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுப்பூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற 'ஊழல் நடவடிக்கைகளை' கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.

6. தேர்தல் காலங்களில் ஒவ்வொரு தனி மனிதரின், அமைதியான மற்றும் தொந்தரவுக்கு உட்படுத்தப்படாத வீட்டு வாழ்க்கை மதிக்கப்பட வேண்டும். அரசியலில் ஈடுபட்டுள்ள ஒரு தனிநபரின் வீடு முன்பாக போராட்டம் நடத்துவது, முற்றுகை இடுவது ஆகியவற்றில் ஈடுபடக்கூடாது.

7. ஓர் இடத்திலோ கட்டடத்திலோ சுற்றுச்சுவரிலோ அறிக்கை ஓட்டுவது, பதாகைகளைத் தொங்க விடுவது, அரசியல் கட்சி வாசகங்களை எழுதுவது, கட்சிக் கொடியைப் பறக்க விடுவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டால், அந்த சொத்தின் உரிமையாளரிடம் அதற்கான முறையான அனுமதியைப் பெற்று இருக்க வேண்டும்.

8. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வேறு கட்சி நடத்தும் பொதுக்கூட்டங்களில் பேச்சு, எழுத்து மூலமாக கேள்வி எழுப்பியோ, தங்கள் கட்சியின் துண்டறிக்கை விநியோகம் செய்தோ, தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.

9. ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும்.

10. ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது.

வாக்குப் பதிவு இயந்திரங்கள்

பட மூலாதாரம்,Getty Images

பொதுக்கூட்டங்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள்

1. கட்சி அல்லது வேட்பாளர் சார்பில் பொதுக்கூட்டம் நடக்க உள்ள இடம், நேரம் ஆகியவற்றை காவல்துறையிடம் முன்னரே தெரிவிக்க வேண்டும். இது முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் காவல்துறைக்கு உதவும்.

2. பொதுக்கூட்டம் நடத்த தாங்கள் தேர்வு செய்துள்ள இடத்தில் அதற்கான தடை ஏதும் உள்ளதா என்பதை கட்சி அல்லது வேட்பாளர்கள் முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும்.

3. அந்தத் தடையில் இருந்து விதிவிலக்கு வேண்டும் என்றால், போதுமான நேரம் இருக்கும் போதே அதிகாரிகளிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி, அவர்கள் அனுமதித்தால் பொதுக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம்.

4. பொதுக் கூட்டம் நடத்தும் இடத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கும், பிறவற்றுக்கும் ஏதேனும் அனுமதி அல்லது உரிமம் தேவைப்படுமானால் தொடர்புடைய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அதற்கான அனுமதி அல்லது உரிமத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.

5. பொதுக்கூட்டம் ஒழுங்காக நடை பெறுவதற்கு தடையாக அந்த கூட்டத்தில் இருக்கும் யாரேனும் செயல்பட்டால் அந்த கூட்டத்தை நடத்துபவர்கள் அந்த தனிநபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது; அவர்கள் காவல்துறையைத்தான் நாட வேண்டும்.

பேரணிகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள்

1. பேரணி தொடங்கும் மற்றும் முடியும் இடங்கள், கடந்து செல்லும் பாதை, நேரம் ஆகியவை முன்கூட்டியே முடிவு செய்யப்பட வேண்டும். பேரணி நடக்கும் நேரத்தில் மேற்கண்டவற்றில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது.

2. போதிய ஏற்பாடுகள் செய்யப்படுவதற்காக பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உள்ளூர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

3. பேரணி கடந்து செல்லும் பாதையில் தடை ஏதும் அமலில் உள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டும்.

4. பேரணி செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு அல்லது தடை ஏதும் ஏற்படாமல் இருப்பதை பேரணியை நடத்துபவர்கள் முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்.

5. மிக நீளமான பாதையில் பேரணி செல்லுமானால் பேரணி செல்லும் பாதை, பகுக்கப்பட்டு போக்குவரத்து இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

6. காவல்துறையின் அறிவுறுத்தல்களை பின்பற்றுவதுடன் மட்டுமல்லாமல் இயன்றளவு பேரணி சாலையின் வலது பக்கமாகவே இருக்க வேண்டும்.

7. ஒரே பாதையில் அல்லது ஒரே சாலையின் பகுதியில், ஒரே நேரத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சியினர் பேரணி நடத்த திட்டமிட்டால், பேரணி செல்பவர்கள் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வதை தவிர்க்கும் நோக்கில் அதை ஏற்பாடு செய்பவர்கள் முன்கூட்டியே ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள வேண்டும்.

8. ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் பேரணி செல்லும் இருவேறு தரப்பினர் இடையே சுமூகமான முடிவு எடுப்பதற்காக உள்ளூர் காவல்துறையின் உதவியையும் பேரணி ஏற்பாட்டாளர்கள் இயன்ற அளவில் விரைவாக நாடலாம்.

9. விரும்பத்தகாத சக்திகள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ள பொருட்களை பேரணியில் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். பேரணியிபோது கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

10. பேரணியின்போது பிற அரசியல் கட்சிகள் அல்லது அவற்றின் தலைவர்களை உருவகிக்கும் உருவ பொம்மைகளைக் கொண்டுசெல்வது அவற்றை எரிப்பது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr45y1qz3xzo

  • கருத்துக்கள உறவுகள்

3 hours ago, ஈழப்பிரியன் said:

  3 hours ago, ஏராளன் said:

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் - 06.40.2026 (திங்கட்கிழமை)

அண்டத்தில் பல சூரிய குடும்பங்களைக் கண்டுபிடித்துள்ளார்கள் நம்ம வான் ஆராய்சியாளர்கள் அங்கு ஒரு சூரிய குடும்பத்தில் எங்கள் பூமியைப் போன்று ஒரு கோளும் உள்ளதையும் கண்டுள்ளார்கள். அக்கோளில் 40 மாதங்கள் ஒரு வருடம்போல் தெரிகிறது. அங்கு இந்தியர்களே முதலில் குடியேறுவார்கள் என ஏராளன் அவர்களும் தற்போது கண்டுபிடித்ததுள்ளார்.😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.