Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் தின உரையில் இம்முறை தலைவர் பிரபாகரன் சொல்லப் போவதென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன?

-தாயகன்-

தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை.

கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன் சமாதானத்தின் மீது தனக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்து முகமாக இலங்கையரசுக்கு கால அவகாசத்தையும் வழங்கியிருந்த போதும் இலங்கையரசு அதனை உதாசீனப்படுத்தி பெரும் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டது.

போர் நிறுத்த உடன்படிக்கையில் முக்கிய சரத்துக்களை மீறி கிழக்கு மாகாணத்தில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கையரசு பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கொன்றொழித்து கோடிக்கணக்கான ரூபா சொத்துகளை அழித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, குடும்பிமலை பகுதிகளை ஆக்கிரமித்தது.

அதன் தொடர்ச்சியாக பல படை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதன் ஒரு பகுதியாக வன்னி பிரதேசத்தில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு சிலாவத்துறை பிரதேசத்தை ஆக்கிரமித்தது. தற்போதும் ஆக்கிரமிக்கும் நோக்குடன் படை நடவடிக்கைகளை தொடர்வதால் வன்னி முன்னரங்க பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.

இது தவிர விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களெனக் கூறி சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சில கப்பல்களை இலங்கை கடற்படையினர் மூழ்கடித்தனர். குடும்பிமலை ஆக்கிரமிப்பு, கப்பல்கள் மூழ்கடிப்பென இலங்கையரசு வெற்றி விழாக்களை கொண்டாடி முழுவதுமான ஒரு போரை முன்னெடுத்தது.

இலங்கையரசின் ஒவ்வொரு செயலுக்கும் விடுதலைப் புலிகளும் பதிலடி வழங்கினர். காலி துறைமுகம் மீதான தாக்குதல், கட்டுநாயக்கா, பலாலி விமானத் தளங்கள், கொலன்னாவை எண்ணெய்க் குதங்கள் மீதான விமானத் தாக்குதல்கள், விளாத்திக்குள அதிரடித் தாக்குதல், பம்பைமடுவில் கனரக ஆயுதங்கள் அழிப்பு, அநுராதபுரம் விமானத் தளம் மீதான கரும்புலிப் படையணித் தாக்குதல்களென இலங்கையரசுக்கு பேரழிவை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடத்தும் தாக்குதல்கள், தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களென புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அதிர்ந்து கொண்டிருக்க, யால வன விலங்கு சரணாலய தாக்குதல், திஸ்ஸமகராம தாக்குதல்களென தென் பகுதி கதிகலங்கிக் கொண்டிருக்கிறது.

இலங்கையரசின் வலிந்த தாக்குதல்களுக்கே புலிகள் பதிலடி வழங்கி வந்த அதேவேளை இலங்கையரசின் போர் நிறுத்த உடன்படிக்கை மீறல்களை சர்வதேசத்தினதும் சமாதானப் பேச்சுக்களுக்கான அனுசரணையாளர்களினதும் கவனத்துக்கும் கொண்டு சென்று போர் நிறுத்த உடன்படிக்கையை இலங்கையரசு சீராக கடைப்பிடிக்க அழுத்தம் கொடுக்குமாறும் வேண்டினர்.

ஆனால் இலங்கையரசு போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரதான பாத்திரமும் தம்முடனான சமாதான பேச்சுக்களில் பங்குபற்றிய விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக் குழுவின் தலைவரும் அரசியல் துறைப் பொறுப்பாளருமான சு.ப.தமிழ்ச்செல்வனை கிளிநொச்சியில் அமைந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளுடனான பேச்சுக்கள் இடம்பெறும் சமாதான செயலகத்துக்கருகில் வைத்து விமானக் குண்டு வீச்சு மூலம் படுகொலை செய்து போர் நிறுத்த உடன்படிக்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு சமாதான வழியில் தீர்வொன்றை பெற்றுக் கொள்வதற்காக முன்னின்று செயற்பட்ட விடுதலைப் புலிகளின் சமாதான பேச்சுக்குழுவின் தலைவர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்த இலங்கையரசு அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியது. ஒரு கொடிய பயங்கரவாதியை கொன்றொழித்துவிட்டதாக தீவிர பிரசாரம் செய்தது.

தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்ட அதேநாள் அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோதாபய ராஜபக்ஷ, தமிழ்ச்செல்வன் படுகொலையே ஆரம்பமெனவும் இனி விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தலைவர்களையும் பலியெடுப்போமெனவும் சூளுரைத்தார். இதேபோன்றே விமானப்படை தளபதி ரொஷான் குணதிலகவும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நாட்கள் எண்ணப்படுவதாக எச்சரித்தார்.

இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் உடனடியாகவே போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவததாக அறிவிப்பார்களென்றே அனைவரும் எதிர்பார்த்ததுடன் தமிழ்ச்செல்வன் இழப்புக்காக பாரிய பதிலடியொன்றை மேற்கொள்வார்களெனவும் எதிர்வு கூறப்பட்டது. ஆனால் இவை எதனையும் இன்றுவரை புலிகள் செய்யாதது பலரையும் சந்தேகப் படவைத்துள்ளது.

தமிழ்ச்செல்வன் படுகொலையின் பின்னர் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரை கிளிநொச்சிக்கு அழைத்த விடுதலைப் புலிகள் தமிழ்ச்செல்வன் படுகொலை தொடர்பான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன் இது தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மௌனத்தை கண்டித்ததுடன் சமாதான அனுசரணையாளரான நோர்வே எவ்வித கருத்தையும் வெளியிடாதது குறித்து தமது வருத்தத்தையும் தெரிவித்ததுடன் நோர்வே தனது கருத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் கூறினார்.

நிலைமை இவ்வாறிருக்க அரசின் மூத்த அமைச்சரும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவருமான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே விடுதலைப் புலிகள் விரைவில் தமிழீழத்தை பிரகடனப்படுத்தவுள்ளனரெனக் கூறி தென்னிலங்கையில் பீதியைக் கிளப்பிவிட்டார். இதனைத் தொடர்ந்து மாவீரர் தினத்தில் தமிழீழ பிரகடனம், தைப்பொங்கலில் தமிழீழ பிரகடனமென தினமும் ஒரு செய்தி தென்னிலங்கையில் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதேநேரம், சமாதானத்தை விரும்பும் நாடுகளின் அழுத்தம் இலங்கையரசு மீது பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகியன இலங்கையரசின் போர் இயந்திரத்தை வலுப்படுத்தும் முகமாக தாராளமான இராணுவ உதவிகளை அள்ளி வழங்கிவருவதால் இலங்கையரசு போர் மூர்க்கம் கொண்டு வன்னி மீதான படையெடுப்புக்கு தயாராகி வருகிறது.

விடுதலைப் புலிகளும் தற்போது தற்காப்பு போரிலேயே ஈடுபட்டு வந்தாலும் பாரிய படை நடவடிக்கையொன்றுக்கான தயார்படுத்தலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதற்கான சில முன்னேற்பாட்டு, ஒத்திகை சண்டைகளையும் புலிகள் நடத்தியுள்ளனர். முப்படைப்பலத்தை கொண்டுள்ள விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தம்மை தயார்படுத்திவிட்டே உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இலங்கையரசும் விடுதலைப் புலிகளும் இறுதி யுத்தமொன்றுக்கு தயாராகிவிட்ட நிலையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாவீரர்தின உரையில் தமிழீழ பிரகடனமென இலங்கையரசும் போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகல் அறிவிப்பு வருமென சர்வதேசமும் குழப்பிக் கொண்டிருக்கின்றன.

தமது விடுதலைப் போராட்டத்தில் இதுவரை சுமார் 20 ஆயிரம் வரையான போராளிகளையும் 1 இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களையும் இழந்துவிட்ட புலிகள் இனியும் பொறுமை காக்கமாட்டார்களென்ற கருத்து வலுத்துவரும் நிலையில் புலிகளின் முக்கிய பிரமுகர் பாலகுமார் அண்மையில் நிகழ்த்திய உரையொன்றில் இனியும் நாம் போராளிகளை விதைக்க தயாரில்லை என்பதால் விரைந்து முடிவொன்றை எடுப்போமெனக் கூறியதும் கவனிக்கத்தக்கது.

புலிகள் பாரிய தாக்குதலொன்றை மிக விரைவில் நடத்துவார்களென்று இலங்கையரசும் எதிர்பார்ப்பதால் அதற்கு முன்பாக தாம் முந்திவிட வேண்டுமென்பதில் தீவிரமாகவுள்ளது. அதனாலேயே பூநகரி மற்றும் மடுப்பகுதிகளை கைப்பற்றிவிடத் துடிக்கிறது. பூநகரியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் ஆட்டிலறி பலத்தை முறியடிக்கவும் மடுப்பகுதியை கைப்பற்றுவதன் மூலம் புலிகளின் விநியோக மார்க்கங்களை துண்டாடவும் இராணுவம் முயற்சிக்கின்றது.

இவ்வாறான ஏட்டிக்கு போட்டியான இராணுவ முனைப்புகளுக்கு மத்தியில் தனது மாவீரர் தின உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனைக் கூறப் போகின்றார்? தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகும் அறிவிப்பா? அல்லது வழக்கம் போலவே இலங்கையரசுக்கு இறுதி எச்சரிக்கையும் சர்வதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பான கவலையுமா?

இலங்கையரசின் யுத்த நடவடிக்கைகளாலும் சர்வதேசத்தின் பக்கச்சார்வுப் போக்குகளாலும் விசனமடைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இம் மாவீரர் தின உரையில் போர் முரசு கொட்டலாமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

எனவே இலங்கையரசுக்கும் சமாதான அனுசரணையாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் அறிவிப்புகள் பல இம்மாவீரர் தின உரையில் வெளிவருமென்பதில் சந்தேகமில்லை.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையரசின் யுத்த நடவடிக்கைகளாலும் சர்வதேசத்தின் பக்கச்சார்வுப் போக்குகளாலும் விசனமடைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இம் மாவீரர் தின உரையில் போர் முரசு கொட்டலாமென்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

களத்தில் நிற்கின்ற தலைவருக்குத் தான் தெரியும். சர்வதேச மட்டத்தில் நடக்கின்ற காய்நகர்த்தல்களும் அதன் விளைவுகளையும் பற்றி. எனவே பொறுமையோடு இருந்து தமிழீழத்தின் தேவையை உலகத்திற்குப் புரியவைப்பதோ, அல்லது போர் முரசு அடிக்கவேண்டும் என்பதையோ தலைவரே தீர்மானிக்கட்டுமன்.

ஏதாவது செய்யத்தா வேண்டும்.. மீண்டும் கால அவகாசம் வீண்விரயம் மட்டுமெ. இம்முறை மாவீரர் தின உரை ஒரு தீர்க்கமாக இருக்க வேனும். தமிழ் மக்க்களின் அவலம் முடிவுற வேண்டும். இ ந்த அவலம் தீர எம்மாலாணதை செய்ய எல்லொரும் முன்வர வேண்டும்.

மலர்க தமிழ் ஈழம்...

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளின் இரட்டை வேடங்களை சாடுதல்,கடந்த மாவீரர் நாளில் கொடுக்கப்பட்ட தவணையை முடிவுக்கு கொண்டுவரல், தமிழ் நாட்டு மக்களின் ஆதரவு, புலம்பெயர் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை விஸ்தரித்தல்.அத்தோடு,அரசுக்க

ு காட்டமான செய்தி அதாவது வடக்கு ,கிழக்கு மக்களின் மீதான மக்களின் அரச படைகளின் தாக்குதல்களுக்கு தெற்கில் பதில் தாக்குதல் நடத்தப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மனதில் ஓடுவதை எங்களால் ஊகிக்க முடிந்தால் தலைவருக்கும் எங்களுக்கும் என்ன வித்தியாசம் ? எல்லாம் அவருக்கே வெளிச்சம் !

கெதியாக ஒரு நல்ல முடிவு எடுங்கள் தலைவா ! சிங்களவனின் வெற்றிப் பிரதாபங்களை தவிடு பொடியாக்க வேண்டும்.

புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம் !

சுருக்கமாகக் கூறின், ஒவ்வொரு வருட மாவீரர் தின உரையும் வரும் புதுவருடத்தின் செற்திட்டமாகவே கொள்ள வேண்டும். அந்தவகையில் தமிழீழத்தை வென்றெடுப்பதற்கான ஒவ்வொரு வருட நகர்வுகளும் சொல்லப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுக் கொண்டு வருகின்றது. சென்ற வருட மாவீரர் தின உரையில் குறிப்பிடப்பட்ட மண்மீட்புப் போர் அதண் பரிமாணம் வன்னித் தளத்தைத் தற்காக்கும் நிலையில் காட்டப்பட்டுவிட்டதாகவே நான் உணர்கின்றேன். தாக்குதல் நிலைக்கு விடுதலைப்புலிகள் வருவார்களேயாயின் இலங்கையரசின் இராணுவ வல்லாதிக்கக் கனவு தகர்ந்து விடும்.

ஒவ்வொரு வருடமும் மாவீரர் உரை பற்றிய எதிர்வு கூறல்கள் உண்டு. ஆனால் எதிர்வு கூறல்கள் இதுவரை ஒப்புக்குக் கூடப் பலித்ததில்லை. இம்முறையும் அது நடைபெறுகிறது பொறுத்திருப்போம் 27 வரை........

தலைவருக்கு தெரியும் என்ன சொல்லவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று அதை பற்றி நாம் எதிர்வுகூறமுடியாது, தமிழினம் இறுதிப்போருக்கு தயாராகி நிற்கும் இவ்வேளையில் வெளிநாட்டில் உள்ள தமிழர்களும் வீட்டுக்கு ஒருவரை களத்தில் இறக்கினால் எவ்வளவு நன்றாயிருக்கும். எத்தனை பேர் முன்வருவார்கள்.????????????????????

நிச்சயமாய் சிலர் முன்வருவார்கள் முருகா! எதற்கும் நாக்ளை வரை பொறுபோமாக. உணர்வு ஒன்ரே போதும். இதுவரை ஈழமண்ணில் வாழாத எனக்கே உணர்வு தூக்கத்தை கலைக்கும்போது மற்றவர்களுக்கு எப்படி இருக்கும். நிச்சயமாய் எங்களால் இயலுமாணவரை செய்வோம் மயக்கம் வேண்டாம்.

நிச்சயமாய் சிலர் முன்வருவார்கள் முருகா! எதற்கும் நாக்ளை வரை பொறுபோமாக. உணர்வு ஒன்ரே போதும். இதுவரை ஈழமண்ணில் வாழாத எனக்கே உணர்வு தூக்கத்தை கலைக்கும்போது மற்றவர்களுக்கு எப்படி இருக்கும். நிச்சயமாய் எங்களால் இயலுமாணவரை செய்வோம் மயக்கம் வேண்டாம்.

வரவேற்கிறேன் உங்கள் கருத்தை. தமிழுணர்வால் ஒன்றித்து உதவிகள் புரிந்தாலே தமிழீழத்தின் பிறப்பு துரிதப்படுத்தப்படும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் எதை எதிர்பார்க்கின்றனர்

post-2971-1196112578_thumb.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாவின் நாளைய செய்தி திருப்புமுனையை ஏற்படுத்துமா?

விடுதலைப் புலிகளின் மறைந்த போராளிகளையும், போராட்டத்தில் சிக்கி உயிர்நீத்த பொதுமக்களையும் நினைவுகூரும் மாவீரர் தினம் நாளை.

இன்று தனது 53 ஆவது பிறந்த தினத்தைக் கடக்கும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனது வருடாந்த உரையில் என்ன கூறப்போகின்றார் என்பதை, நாளைய மாவீரர் தினத்தைத் தமிழர் தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கும் ஈழத் தமிழர்கள் மட்டு மல்லாமல், முழு உலகத்தவருமே பார்த்திருக்கின்றனர்.

"பயங்கரவாத ஒழிப்பு" என்ற பெயரில் தமிழர் தேசத்தின் மீது பெரும் இராணுவப் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் கட்டவிழ்த்து விட்டிருக்கும் சிங்கள தேசத்தின் போர் வெறிப்போக்குக் குறித்து, தமிழர் தாயகத்தின் தலைவரின் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்று ஊகிப்பது அப்படி ஒன்றும் கஷ்டமானதல்ல.

இவ்விவகாரத்தில் தமிழர் தரப்பின் அதிருப்தியை, சீற்றத்தை, விசனத்தை என்ன வார்த்தைகளில் அவர் வெளிப்படுத்தப் போகின்றார், தமது எதிர்ப்பைக் காட்டுவதற்குத் தாம் தேர்ந்தெடுக்கப்போகும் பாதையின் போக்குக் குறித்து அவர் என்ன கோடிகாட்டப் போகின்றார் என்பதை அறிவதற்குத்தான் உலகம் காத்துக்கிடக்கின்றது.

செத்துச் சருகாகி, உக்கி உருக்குலைந்து போய்க்கிடக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் குறித்தும் அதைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொண்டே பெரும் யுத்த முஸ்தீபில் ஈடுபட்டுவரும் சிங்களத் தலைமை குறித்தும் இவ்வளவு தமிழர் விரோதக் கொடூரங்களும் அப்பட்டமாக அரங்கேற இன்னும் புளித்துப்போன பயகரவாத அடையாளப்படுத்தலைக் காட்டிக்கொண்டு, தமிழர் தேசத்தை ஒதுக்கி வைத்து, கொழும்பின் கொடூரங்களுக்கு இடமளித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்தின் அசிரத்தை தொடர்பாகவும் இவற்றுக்கு மத்தியிலும் தமிழர் போராட்டத்தின் பின்புலமாகத் திகழும் புலம்பெயர்வாழ் தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பற்றுணர்வு பற்றியும் தமிழர் தேசியத்தின் தலைவர் கூறப்போகும் செய்தி மிக முக்கியமானதாகவே இருக்கும்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டப் பாதையைத் திரும்பிப் பார்ப்பவர்கள் அது ஆரம்பத்தில் உரிமை கோரி நடத்தப்பட்ட அஹிம்சை வழியிலான அறக் களமாகவும், பின்னர் வன்முறைப் புயல் வீசும் போராட்டத்தின் மறக்களமாகவும் இரு வழிகளில் பரிணாமம் கொள்வதைக் காண்பர்.

இந்த இரண்டுக்கும் நடுவே அவ்வப்போது வந்து போகும் சமாதான முயற்சி நாடகங்களையும் நாம் காணமுடியும். இந்த சமாதான அரங்குகள் அல்லது அமைதி முயற்சி எத்தனங்கள் எல்லாமே சிறுபான்மையினரான தமிழர்களைப் பெரும் பான்மையினரான பௌத்த சிங்கள ஆட்சியாளர்கள் நம்ப வைத்து ஏமாற்றி மோசடி செய்த அங்கங்களாகவே விரியும்.

கடைசியாக 2002 முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட அமைதி முயற்சி கூட, "உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டித் தீர்வு வரை" முன்னேறி, வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில், தென்னிலங்கைச் சிங்களத்தினால் இப்போது மீண்டும் புளித்துப் போன "மாவட்டசபை மட்டத் துக்கு" ஏமாற்றி கீழிறக்கப்பட்ட வரலாற்றை நாம் கண்டு நிற்கின்றோம்.

இதற்குப் பின்னரும் சமாதான முயற்சிகள் என்ற பெயரில் அமைதி காத்து, ஏமாந்து கிடப்பதில் அர்த்தமேயில்லை என்பது தமிழர் தேசத்துக்குத் தெளிவுபட்டு விட்டது. இதை என்ன வடிவத்தில் நாளை பிரபாகரன் எடுத்துக் கூறுவார் என்பதையே உலகம் பார்த்திருக்கின்றது.

தமிழ் மக்கள் ஓரினமாக ஒருங்கிணைந்து வாழ்வதற்கும், ஓரினமாகத் தம்மை அடையாளப்படுத்தி நிற்பதுக்குமான அடிப்படைக் கட்டுமானங்களை அவசியமான அடித்தளங்களை மையமான அத்திபாரத்தை இலக்கு வைத்துத் தாக்கும் சிங்கள அரசியல் ஒடுக்குமுறையானது மறுபுறத்தில் "பயங்கரவாதிகளிடமிருந்து தமிழர்களை விடுவித் தல்" என்ற பெயரில் தமிழர் தாயகத்தைக் கைப்பற்றி, மீள்குடியேற்றம் என்ற பெயரில் அவற்றைச் சிங்கள மயப்படுத்தும் கபட சதித் திட்டமாக கனகச்சிதமாக முன்னெடுக்கின்றது. இதன்மூலம் தமிழர் தாயகத்தின் தனித்துவத்தை சிதைத்து, சின்னாபின்னமாக்கி, அந்தத் தேசத்துக்கும், தேசியதிற்கும் உரிய விடுதலை வேணவாவை நசுக்கிவிடலாம் எனக் கொழும்பு எண்ணுகிறது

இந்தச் சதித்திட்டங்களை கபட வலைப்பின்னலை வெற்றிகொள்வதற்கான தனது வியூகத்தைப் பிரபாகரன் தமது நாளைய மாவீரர் தின உரையில் கோடி காட்டுவார் என எதிர்பார்க்கலாம்.

கிழக்கு மாகாணத்தில் தமது நிர்வாகக் கட்டுப்பாடுகளை இழந்து, வன்னிக்குள் முடக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் விடுக்கப்போகும் செய்தி, இலங்கை அரசியலிலும், தமிழர் வாழ்வின் விமோசனத்திலும் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கும் புலிகளின் தலைவர் பிரபாவின் மாவீரர் தின உரை

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் விடுதலைப் புலிகளின் மீது பிரயோகிக்கப்படும் சர்வதேச அழுத்தம், போர்நிறுத்த ஒப்பந்தம் செத்துவிட்டதாக கூறி, அரசாங்கம் மேற்கொண்டுவரும் இராணுவ நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று தனது மாவீரர் தின உரையில் பதிலளிப்பார் என சர்வதேச இராஜதந்திரிகள் எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளனர்.

தமது பதிலையும் எதிர்ப்பையும் வெளியிடுவதற்கு அவர் தேர்ந்தெடுக்கப் போகும் பாதையின் போக்கை அறிவதற்கு சர்வதேச சமூகம் மிக ஆவலாக உள்ளதாகவும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். விடுதலைப் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணம் பறிபோயுள்ளமை முக்கிய உறுப்பினர்களின் இழப்பு என்பவற்றின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் தலைவர் தமது புதிய போராட்ட பாதை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என சில அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

எனினும் அவரது உரையில் புதிய செய்தி ஏதும் இருக்காது என தெரிவிக்கும் சில அரசியல் அவதானிகள் இவ்வாண்டு மாவீரர் தின உரையானது கடந்த ஆண்டு உரையின் பிரதிபலிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். இந் நிலையில் இராணுவ ரீதியான அணுகுமுறை மூலம் இரு தரப்பினராலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்துள்ள சர்வதேச சமூகம், பேச்சுவார்த்தை மூலம் சமாதான வழியில் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

விடுதலைப் புலிகளில் தமது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா, நோர்வே, ஜப்பான் ஆகிய நாடுகள் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளன.

விடுதலைப் புலிகள் வன்முறைகளை கைவிட்டு அமைதி வழிக்கு திரும்ப வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. விடுதலைப் புலிகளின் மாவீரர் தின உரையினை இன்று மாலை 6.05 நிமிடத்திற்கு வேலுப்பிள்ளை பிரபாகரன் நிகழ்த்தவுள்ளார். வன்னியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களிலும் இன்று மாலை ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

-வீரகேசரி

மாற்றம் என்பது உடனடியாக ஏற்படுவதல்ல. இது ஒன்றும் ஜீ பூம் பா மந்திரமுமல்ல. இதுவரை காலம் கண்ட மாற்றம் போலவே இனியும் நடைபெறும். இலங்கையில் அரசியல் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதாரம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது, இராணுவபலமும் ஆட்டங்கண்டுள்ளது. இவைகள்தான் மாற்றங்கள். இந்த விடயங்களில் இன்னமும் மேலதிக தாக்கங்களை ஏற்படுத்தும் போது, தென்னிலங்கையின் நிலைமைகள் தலைகீழாக மாறும். இப்போது சிங்களப் பேரினவாதிகள் முன்வைக்கும் நாடகங்கள், பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியாத நிலையில் சிங்களவர் வருவார்கள். அப்போதுதான் தீர்வு பற்றிய உண்மையான தெளிவு வரும். அது வரை மாவீரர் தின உரையின் போக்குப்பற்றிய எதிர்பார்ப்புக்களை இப்படி சிலர் வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவார்கள். மாவீரர் தின உரை தமிழீழத்தின் செயற்றிட்டமே தவிர அது ஒரு போர் முன்னெடுப்போ அறை கூவலோ அல்ல.

அனைத்துலக சமூகத்தின் எதிர்பார்ப்புக்களைப் பெருமளவுக்கு ஏற்படுத்தியிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் நாள் உரை இன்று மாலை இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து வாசிக்க

இன்னும் 10 மணித்தியாளத்தில் தெரியபோகின்றது அதற்கு ஏன் அந்தரம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:unsure::unsure::mellow::mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.