Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமன்பாடுகளில் இந்தியாவும் ஈழத் தமிழரும் : நிராஜ் டேவிட்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ்முரசம்

புலம்பெயர் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா பற்றிய சரியான புரிதலும், இந்தியாவை எப்படி நாம் கையாளவேண்டும் என்ற தெளிவும் எங்களுக்கு இல்லை என்றுதான் கூறவேண்டும். கடந்த சில வருடங்களாக இந்தியாவைக் கையாளும் விடயத்தில் நாம் தோல்வி அடைந்தவர்களாகவே இருந்துவருகின்றோம்.

இந்தியாவைச் சரியாகக் கையாளாததன் காரணமாக எமக்கு ஏற்பட்ட இழப்புக்களும் கொஞ்சநஞ்சமல்ல. இந்தியாவைச் சரியானமுறையில் கையாளாமல் எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை மேலும் முன்னகர்த்துவதிலும் பாரிய சங்கடங்கள் எமக்கு உள்ளன. எனவே அடுத்துவரும் காலங்களில் இந்தியாவை ஈழத் தமிழர்கள் என்படிக் கையாளவேண்டும் என்று ஆராய்வது அவசியம் என்று நினைக்கின்றேன்.

இந்தியாவின் துரோகங்கள்:

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பாதையில் இந்தியா எமக்குச் செய்த துரோகங்கள் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. ஈழத் தமிழர்களின் வரலாற்றில் என்றைக்குமே அழிந்துவிடாத வடுக்களை இந்தியா எமக்கு ஏற்படுத்தியுள்ளது. இன்னும் தெளிவாகக் கூறுவதானால், எமது இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்ததே இந்தியா என்றுதான் நாம் கூறவேண்டி இருக்கின்றது. எமது இனத்தின் மீதான அழித்தொழிப்பை உற்சாகப்படுத்தி, அந்த அழித்தொழிப்பிற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தது, அந்த அழித்தொழிப்பின் பங்குதாரராகச் செயற்பட்டது இந்தியாவே என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைக்கும் கூட இந்தியா எமக்கெதிரான தனது கோர முகத்தைச் சற்றும் தணிக்காத நிலையில்தான் எம்மீது வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. வன்னிக் களமுனைகளில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சடைந்துள்ள போராளிகளை இரகசியமாகக் கடத்திச் செல்லும் கைங்காரியத்தை இந்தியா செய்துகொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் போர்க்குற்றம் புரியப்பட்டதான சாட்சிகளைக் கலைக்கும் நோக்குடனேயே இந்தக் காரியத்தை இந்தியா செய்துகொண்டிருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.

உண்மையிலே இந்தியா எமக்கெதிராகப் புரிந்துள்ள அநியாயங்களுக்காக இந்தியா மீது ஈழத்தமிழர் நிரந்தரப் பகை கொள்ளும் அளவிற்கு எம்மீது கொடுமைகள் புரியப்பட்டுள்ளன. நமது இனத்தை உறவாடி அழித்த இந்தியாவை எப்படியாவது பழி தீர்க்கவேண்டும் எண்ணத்தை ஒவ்வொரு ஈழத் தமிழனுக்கும் ஏற்படுத்தும் அளவிற்கு இந்தியா எமக்குத் துரோகம் இழைத்துள்ளது.

இருந்த போதிலும் சர்வதேசச் சமன்பாடுகள் பற்றியும் அந்த சர்வதேசச் சமன்பாடுகளில் இந்தியா வகிக்கும் பங்கு பற்றியும் நீண்ட ஆய்வுகளைச் செய்கின்ற பொழுது, இந்தியா என்கின்ற தேசத்தை சிறிது காலத்திற்காவது ஈழத்தமிழ் இனம் கையாண்டுதான் ஆகவேண்டி இருக்கின்றது என்கின்ற உண்மையை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

இந்தியா எமக்குச் செய்த கொடுமைகள் என்று ஒரு நீண்ட பட்டியல் இருந்தாலும், இந்தக் கொடுமைகள் அனைத்தையும் இராஜதந்திரம் என்கின்ற பெயரில் மனதுக்குள் பூட்டிவைத்துக்கொண்டு, இந்தியாவைக் கையாளவேண்டிய ஒரு நிலையில் நாம் இன்று இருந்துகொண்டிருக்கின்றோம். எமது ஈழவிடுதலைப் போராட்டத்தை நாம் அடுத்த கட்டத்திற்கு முன்நகர்த்த வேண்டுமானால், நாம் இந்தியாவைக் கையாளுவதில் வெற்றி காணவேண்டிய அவசியம் எம் முன் இருக்கின்றது.

இந்தியாவை எப்படி நம் கையாளுவது?

இந்தியாவைக் கையாளுவதில் ஈழத் தமிழர் எப்படி வெற்றி கொள்வது?

சிங்களத்திடம் கற்றுக்கொள்ளவேண்டும்

இந்தியாவை எப்படிக் கையாளுவது என்று நாம் சிங்களவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.

காலாகாலமாகவே இந்திய விரோத நிலைப்பாட்டை தொடர்சியாக எடுத்து வரும் சிங்கள தேசம், இந்தியாவைக் கையாளுவதில் தொடர்ந்து வெற்றிபெற்றுவருவது யாருமே அறிந்த விடயம்.

இந்திய பாகிஸ்தான் யுத்தம் இடம்பெற்ற காலங்களில் பாக்கிஸ்தான் யுத்த விமானங்களுக்கு இலங்கையில் தரித்து எரிபொருள் நிரப்பிச் செல்ல அனுமதித்தது முதல், பனிப்போர் காலத்தில் அமெரிக்கவுக்கு வொயிஸ் ஒப் அமெரிக்கா (Voice of America) என்ற பெயரில் இலங்கையில் தளம் கொடுத்தது, இஸ்ரேல் நலன்காக்கும் பிரிவை கொழும்பில் நிலைநிறுத்தி வைத்தது, தற்பொழுது சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் சம்பந்தம் பேசிவருவது- என்று, இந்தியா விரும்பாத அத்தனை காரியங்களையும் வரலாற்றில் சிங்கள தேசம் செய்துவந்தது. தற்பொழுதும் செய்துகொண்டு இருக்கின்றது. இந்தியாவிற்கு விரோதமான இத்தனை காரியங்களையும் செய்துகொண்டும் சிங்கள தேசத்தால் இந்தியாவுடன் நல்லுறவைப் பேண முடிகின்றது.

இதனைத்தான் இராஜதந்திரம் என்பது.

எதிரியிடம் உள்ள பலவீனத்தை எமக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு பயணிப்பது எப்படி என்பதை சிங்கள தேசத்திடம் இருந்துதான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

இந்தியாவுக்கு எதிரான விரோதப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த சிங்கள தேசத்தால் இந்தியாவுடன் 1954 இல் செய்துகொள்ளப்பட்ட நேரு கொத்தலாவ ஒப்பந்தம், 1964 இல் மேற்கொள்ளப்பட்ட சாஸ்திரி சிறிமா ஒப்பந்தம், 1974 இல் செய்துகொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம், 1987 இல் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தம் என்று அனைத்து ஒப்பந்தங்களிலுமே சிங்கள தேசம் தனது நலனைப் பேணிக்கொள்வதில் வெற்றிகண்டதை எம்மால் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத்தான் இந்தியாவைக் கையாளுவதில் சிறிலங்கா தேசம் பெற்ற, பெற்றுவருகின்ற இராஜதந்திர வெற்றிகள் என்று கூறுவது.

உண்மையிலேயே இந்தியாவை எப்படிக் கையாளுவது என்பதை நாம் சிங்கள தேசத்திடம் இருந்தாவது கற்றுக்கொள்வவேண்டும்.

புலம்பெயர் தமிழரின் பலம்

சரி இனி விடயத்திற்கு வருவோம்.

இந்தியாவை எப்படி நாம் கையாளுவது?

ஒருதரப்பை நாம் கையாள விளையும் பொழுது, எம்முடைய பலம் என்ன பலவீனம் என்ன என்றும், நாம் கையாள முனைகின்ற தரப்பினது பலம் பலவீனம் என்று சரியாகக் கணிப்பிட்டுக்கொண்டுதான் அந்தக் காரியத்தில் நாம் ஈடுபடுவேண்டும். அப்பொழுதுதான் அதில் நாம் வெற்றிபெற முடியும்.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்று எமது மிகப் பெரிய பலம் புலம்பெயர் தமிழர்களின் இருப்பு என்பதுதான்.

மேற்குலகில் சாதாரண அகதிகளாக, விரும்பத்தகாத ஒரு கூட்டமாக இருந்த காலம் மாறி, இன்று நாம் வாழும் நாடுகளில் ஆட்சியைத் தீர்மானிக்கின்ற, அல்லது அந்த ஆட்சியில் செல்வாக்குச் செலுத்துகின்றவர்களாக வளர்ச்சி அடைந்திருக்கின்றோம். ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்று நாம் மேற்குலகின் தவிர்க்க முடியாத ஒரு அங்கம். எனவே மேற்குலகில் நாம் பெற்றுள்ள இந்த ஸ்தானத்தைப் பயன்படுத்திக்கொண்டு எந்த அளவிற்கு இந்த மேற்குலகை எமது தேவைகளை நாம் சந்திப்பதற்குப் பயன்படுத்திக் கொள்கின்றோமோ அந்த அளவிற்கு எம்மால் எமது வெற்றியை இலகுவாக்கிக்கொள்ளமுடியும்.

அதாவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்று அவர்கள் கைகளில் இருக்கின்ற மிகப் பெரிய ஆயுதம் - அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு.

அதுவும், புதிதாக உருவாகியுள்ள அமெரிக்க- சீனப் பனிப்போரில் சிங்கள தேசம் முற்று முழுதாகவே சீனாவின் கரங்களுக்குள் விழுந்து, மேற்குலகின் அதிருப்தியை வெகுவாகச் சம்பாதித்துள்ள இன்றைய காலகட்டத்தில் மேற்குலகை சரியாக நாம் பயன்படுத்தத் தவறுவோமேயானால், எம்மை விட முட்டாள்கள் யாருமே இருக்க முடியாது. (குளோபள் டமில் போரம், கனடிய தமிழ் காங்கிரஸ், பிரிட்டிஷ் டமில் போரம் போன்ற சில ஈழத் தமிழ் அமைப்புக்கள் மேற்குலகை சாதகமான முறையில் கையாள ஆரம்பித்துள்ளதை இந்தச் சந்தர்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்)

இந்தியாவும் மேற்குலகும்

சரி இனி முக்கியமான ஒரு விடயத்திற்கு வருவோம்.

நாம் எமக்குச் சாதகமாகக் கையாள விரும்புகின்ற இந்த மேற்குலகம், ஈழத் தமிழர்களின் கைகளில் இன்று இருக்கின்ற மிக முக்கியமான ஆயுதமான மேற்குலகம் - இந்தியாவுடன் எப்படியான உறவைக் கொண்டிருக்கின்றது?

இந்தியாவை மேற்குலகம் எப்படிப் பார்க்கின்றது?

இந்தக் கேள்விகளுக்கு நாம் பதிலைத் தேடுவதானால், சர்வதேச சமன்பாடுகளில் இந்தியாவின் வகிபாகம் பற்றிய ஒரு தெளிவான புரிதலை நாம்; பெற்றுக்கொண்டாகவேண்டி இருக்கின்றது.

’ஈழத் தமிழினம் இந்தியாவை கையாளவேண்டிய அவசியம் இல்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா ஒரு மிக மோசமான எதிரி. மேற்குலகை மாத்திரம் நாம் நட்பாக்கிக்கொண்டு எமது காரியத்தை நாம் வெற்றிகரமாகச் சாதித்துவிடமுடியும்’ என்று எம்மில் சிலர் கருத்துத் தெரிவித்து வருகின்றார்கள்.

அவர்கள் தெரிவிக்கும் கூற்றுக்களில்; நிறைய நியாயப்பாடுகள்; இருக்கத்தான் செய்கின்றன.

அதேவேளை, அந்த நியாயப்பாடுகளைக் கடந்து நடைமுறை உண்மைகள் என்கின்ற விடயமும் இருக்கின்றதை புரிந்துகொண்டு செயப்படவேண்டிய காலச்சூழலுக்குள் நாம் இன்று நின்று கொண்டிருக்கின்றோம்.

ஆசிய பசுபிக் பிரந்தியத்தைப் பொறுத்தவரையில் நாம் இன்று நம்பியிருக்கின்ற மேற்குலகம் இந்தியாவையே நம்பிக்கொண்டிருக்கின்றது என்கின்ற யதார்த்தத்தை மறந்துவிட்டுதான் நாம் நகர்வெடுக்க முனைகின்றோம்.

எம்மைப் பொறுத்தவரையில் இது இராஜதந்திரத்தின் காலம். எமது பலம், நம்பிக்கைகள் எல்லாம் சிதறடிக்கப்பட்டுவிட்ட நிலையில் இராஜதந்திர நகர்வுகளின் ஊடாகவே எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டிய காலத்தின் சூழலுக்குள் ஈழத் தமிழினம் இன்று நின்று கொண்டிருக்கின்றது.

நாம் இன்று மேற்குலகை நம்பிக்கொண்டிருக்க, மேற்குலகு இந்தியாவை நம்பிக்கொண்டிருக்கின்றது.

இது என்ன புதுக்கதை என்று சிலர் கேட்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

மேற்குலகிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுநிலை, இந்த உறவுநிலையை மீறி மேற்குலகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் எவ்வாறு தலையிடும் சாத்தியம் இருக்கின்றது என்பன பற்றித்தான் இந்தக் கட்டுரையில் விரிவாக நாம் ஆராய இருக்கின்றோம்.

இந்தியாவை எதிர்த்த அமெரிக்கா

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியை எடுத்து நோக்கினால், இந்தியா மீது அமெரிக்கா மிக மோசமான விரோதம் பாராட்டிய நாடாகவே இருந்து வந்தது. சுதந்திரம் அடைந்த இந்தியா ரஷ்யாவின் செல்லப்பிள்ளையாகிவிட, அமெரிக்க ரஷ்ய பனிப்போரின் ஆரம்ப நாட்களில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகினால் மிகவும் வெறுக்கப்பட ஒரு தேசமாகவே இந்தியா இருந்து வந்தது.

இன்னும் குறிப்பாகக் கூறுவதானால், அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக நேரடியாகவே களத்தில் குதித்திருந்தது.

1947 இல் இந்தியா சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து சமாதானத்திற்கான நோபள் பரிசு இந்தியத் தலைவர் மஹாத்மா காந்திக்குத்தான் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் அமெரிக்கா வழங்கிய அழுத்தத்தைத் தொடர்ந்து அது இந்தியாவின் கையை விட்டு நழுவிப் போனது.

1948 இல் காஷ்மீர் விவகாரம் ஐ.நா சபைக்கு வந்த போது, அமெரிக்கா பாக்கிஸ்தானுக்கே ஆதரவாகச் செயற்பட்டது.

பின்னர், 1965ம் ஆண்டு மற்றும் 1971ம் ஆண்டுகளில் இடம்பெற்ற இந்திய-பாக்கிஸ்தான் யுத்தங்களின் போதும், அமெரிக்கா பாக்கிஸ்தானுக்குச் சார்பாகவே நிலை எடுத்தது. அமெரிக்க ஆயுதங்களே பாக்கிஸ்தானினால் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டன. ஐ.நா சபையிலும் இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா வெழுத்து வாங்கியது.

1971 இல் பங்காளதேஷை பாக்கிஸ்தானிடம் இருந்து மீட்கும் நடவடிக்கைளில் இந்தியா இறங்கிய போது, பாக்கிஸ்தானுக்குச் சார்பாக அமெரிக்கா தனது ஏழாவது கப்பற்படையை (Seventh Fleet) வங்காள விரிகுடாவிற்கு அனுப்பிவைத்தது. இது அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே இருந்த விரிசலை மேலும் அதிகமாக்கியிருந்தது.

ஆனால் இராஜதந்திர நோக்கம் கருதி 70களின் நடுப்பகுதியில் இருந்து இந்தியா விடயத்தில் அமெரிக்கா அதிகம் பகைகொள்ளத ஒரு நிலை எடுக்கத் தலைப்பட்டது.

புதிய கொள்கை

அமெரிக்காவின் ஒரு முக்கிய கொள்கை வகுப்பாளரான ஹென்றி கீலிங்கர் என்பவர் இந்தியா தொடர்பாக அமெரிக்காவின் புதிய கொள்கையை வகுத்திருந்தார். இந்தியா தொடர்பாக அமெரிக்காவால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் அந்த கொள்கையை ஆராய்ச்சியாளர்கள் ~Benign Neglect Policy| என்று குறிப்பிடுகின்றார்கள். அதாவது, இந்தியாவுடன் நேரடியாக கோபதாபம் கொள்ளாமல் சிரித்துப் பேசி உதாசீனம் செய்துகொள்ளுதல் என்பதாகும். 1971 இற்குப் பின்னர் அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக எந்தவொரு நேரடி எதிர் நகர்வுகளிலும் இறங்கவில்லை என்பது நோக்கத்தக்கது. அந்த காலம் முதல் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பொதுவானதொரு முரண்பாட்டுத் தோற்றப்பாடும், அதேவேளை குறிப்பிட்ட அளவு ஐக்கியமும் நிலவ ஆரம்பித்தது. இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் ~Unity and Struggle of Opposites|என்று குறிப்பிடுகின்றார்கள்.

பிரதான காரணம்

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனது இராணுவ மற்றும் பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில்தான் எந்த ஒரு நாட்டுடனும் நட்பையோ அல்லது பகையையோ ஏற்படுத்திக்கொள்ளும் நடைமுறையை அது கடைப்பிடித்து வருகின்றது. ஆசியாப் பிராந்தியத்தில்; இந்தியாவை அமெரிக்கா நட்பாக்கிக்கொள்வதற்கு, ஆசியாவில் உள்ள இரண்டு நாடுகளே பிரதான காரணம்.

ஒன்று சீனா. மற்றயது பாகிஸ்தான்.

சீனா:

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னய காலகட்டத்தில், சீனா பெற்றுவருகின்ற வளர்ச்சி அமெரிக்காவை வியப்படைய வைத்துள்ளது. இராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனா நிச்சயம் தனக்கு ஒரு சவாலான நாடாக திகழும் என்று அமெரிக்கா நம்புகின்றது. அமெரிக்காவிடம் உள்ள அளவு இல்லாவிட்டாலும், அமெரிக்காவுடன் பொருதும் அளவிற்கு அணு ஆயுதங்களை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு வல்லரசு நாடு சீனா. முக்கியமாக அமெரிக்காவை வெறுக்கின்ற லத்தின் அமெரிக்க நாடுகளுடன் பொருளாதார மற்றும் அயுத தொடர்புகளை வைத்துள்ள ஒரு நாடு என்கின்ற வகையிலும், சீனாவை அமெரிக்கா தனது விரோதியாகப் பார்க்கின்றது. அமெரிக்காவின் தற்போதைய பிரதான எதிரிகளான ஈரான், வடகொரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு சீனா ஆயுத உதவிகளை பகிரங்கமாகவே செய்து வருகின்றது. குறிப்பாக இன்று சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வடகொரியாவுடன் இராணுவ உடன்பாடுகளைச் செய்துகொண்டு, அந்நாட்டிற்கு ‘பாரிய அழிவுகளை ஏற்படுத்தககூடிய ஆயுதங்களை ’((Weapons of Mass Destruction -WMD) சீனா சப்ளை செய்து வருவதாக அமெரிக்கா சீனாமீது குற்றம் சுமத்துகின்றது. ஈரானின் அணுஆயுத உற்பத்திக்கு சீனாவே அனைத்து உதவிகளையும் செய்துவருவதாக அமெரிக்கா நம்புகின்றது. அமெரிக்காவையும், மேற்குலகையும் அச்சுறுத்திவரும் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு சீனாவே பெரும் உதவி புரிந்துவருவதாக அமெரிக்க இராணுவ ஆய்வாளர்கள் குற்றம்சுமத்தி வருகின்றார்கள்.

பொருளாதார ரீதியாகவும், சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவை கிலி கொள்ள வைத்திருக்கின்றது. அமெரிக்காவிற்கே கடன் கொடுக்கும் அளவிற்கு சீனாவின் பொருளாதாரம் வளரச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச பொலிஸ்காரனாக தான் வலம் வருவதற்கு, உலகில் தடையாக உள்ள நாடுகளுள், சீனாவும் ஒன்று என்பது அமெரிக்காவிற்குத் தெரியும். அமெரிக்கா தனது வாயினால் உச்சரிக்கவே வெறுக்கும் ‘கொம்யுனிச’ ஆட்சியை தனதாகக் கொண்ட ஒரு நாடு சீனா. அத்தோடு அமெரிக்காவைப்போன்று ஊர் விடயங்களிலெல்லாம் தனது மூக்கை நுழைத்து அடிவாங்கி, இழப்புகளைச் சந்திக்கும் வழக்கத்தை சீனா கொண்டிருப்பதேயில்லை. தான் உண்டு, தனது வேலை உண்டு என்று மட்டும் இருக்கும் ஒரு நாடு சீனா. ஆனால், நீண்ட கால பொருளாதார நோக்கோடு சீனா கவனமாகக் காய் நகர்த்திக்கொண்டிருக்கின்றது. தனக்கு ஒரு காலத்தில் வில்லனாக வரக்கூடிய நாடு என்றவகையில் அமெரிக்கா, சீனாவை தனது முக்கிய எதிரியாகவே நினைக்கின்றது.

பாகிஸ்தான்

அடுத்ததாக, அமெரிக்கா ஆசியப் பிராந்தியத்தில் சந்தேகத்துடன் நோக்கும் மற்றொரு நாடு: பாகிஸ்தான். பனிப்போர் காலத்தில் அமெரிக்காவின் உற்ற தோழனாக இருந்த நாடு பாகிஸ்தான். ஆனால் தற்பொழுது அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் மீது நம்பிக்கை இல்லை. காரணம் பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு. அதுவும் உலகிலேயே அணுஆயுதங்களைத் தனதாகக்கொண்டுள்ள ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்தான்.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அமெரிக்கா தற்பொழுது ஆரம்பித்துள்ள ‘சிலுவைப் போர்’, பாகிஸ்தானில் பாரிய கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. பாகிஸ்தானில் உள்ள மதத் தலைவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக குரலெழுப்ப ஆரம்பித்துள்ளார்கள். அண்மையில் அமெரிக்கா இராஜங்கத் திணைக்களமான ‘US Department of State’ வெளியிட்டுள்ள ‘Patterns of Global Terrorism’ என்ற அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதத் தலைவர்கள், மத அமைப்புக்கள், ஆயுதக் குழுக்கள்– என்பன, அமெரிக்கப் பிரஜைகள் மீது வெறுப்புணர்வுடன் செயற்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இவர்கள் அமெரிக்கப் பிரஜைகளுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக போராடிவரும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்தும் மறைமுக ஆதரவை வழங்கிவருவதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அல்கைதா தீவிரவாதிகள் தொடர்ந்தும் பாகிஸ்தானில் தங்கியிருந்து தனக்கெதிராகச் செயற்பட்டு வருவதாக அமெரிக்கா திடமாக நம்புகின்றது. ஒரு காலத்தில் பாகிஸ்தானின் ஆட்சி இஸ்லாமிய கடும்போக்காளர் ஒருவரது கரங்களுக்கு செல்லும் பட்சத்தில், பாகிஸ்தானிடமுள்ள அணுவாயுதங்கள் அல்கைதா போன்ற இஸ்லாமிய தீவிரவாதிகள் கைகளுக்கோ, அல்லது ஈரான், சிரியா போன்ற இஸ்லாமிய நாடுகளின் கைகளுக்கோ சென்றுவிடச் சந்தர்ப்பம் உள்ளதாக அமெரிக்கா நினைக்கின்றது. இவை அனைத்தையும் விட முக்கியமாக, பாகிஸ்தானுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வழங்கிய நாடு சீனா. அமெரிக்காவிற்கு அடுத்ததாக, பாகிஸ்தானுக்கு அதிக அளவு ஆயுத உதவிகளை வழங்கிவரும் நாடும் சீனாதான். இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ள ஆரம்பித்துள்ள ‘சிலுவைப் போர்’ காரணமாக ஒரு காலத்தில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் அன்னியப்பட்டு, சீனாவுடன் சேர்ந்து அமெரிக்காவிற்கு எதிராகக் கிளம்பச் சந்தர்ப்பம் உள்ளது என்று அமெரிக்கா அச்சம் கொள்கின்றது.

எனவே ஆசியாவில் அமெரிக்காவிற்கு ஒரு நல்ல தோழன் தேவைப்பட்டது. அமெரிக்கா தேர்ந்தெடுத்த அந்தத் தோழன் இந்தியா.

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில், சீனாவினதும், பாகிஸ்தானினதும் பரம வைரியான இந்தியாவை அமெரிக்கா தனது நண்பனாக்கிக் கொண்டது.

அமெரிக்கா இந்தியாவை தனது தோழனாகச் சேர்த்துக்கொண்டதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

strategic triangle

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கின்ற ரீதியிலும், இந்தியா மேற்குலகைப் போலவே இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடிவருகின்ற ஒரு நாடு என்கின்ற காரணத்தினாலும், இந்தியாவின் நிர்வாக மொழி அனேகமாக ஆங்கிலமாகவே இருந்து வருவதனாலும், இந்தியாவின் உயர் மட்டங்களில் மலிந்து காணப்படும் உழலை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நோக்கத்துடனும், ஆசியாவில் இந்தியாவை தமது பிரதான நட்புசக்தியாக்கிக்கொள்ள அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் தீர்மானித்தது.

இவற்றை விட, பனிப் போரில் சோவியத் ஒன்றியத்தின் கரங்கள் பலவீனமடைய ஆரம்பித்ததைத் தொடர்ந்து, சீனா, இந்தியா, ரஷ்யாவை ஒன்றினைத்து ஒரு strategic triangle என்கின்ற கூட்டைச் செய்வதற்கும் முயற்சிகள் நடைபெற்றன. இந்தக் கூட்டு மாத்திரம் உருவாகியிருந்தால், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மேற்குலகினால் எந்த நகர்வினையும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே இந்தியாவை தமது நண்பனாக்கி, வேறுபிரித்து இந்த முக்கோணக் கூட்டனைத் தடுக்கும் நோக்கத்துடனும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் காய்களை நகர்த்தியிருந்தது.

அத்தோடு, அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்தியர்களின் இருப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறி வருகின்றதையும் இந்த இடத்தில் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தற்பொழுது அமெரிக்காவிலுள்ள தகவல் தொழில்நுட்ப (Information Technology) வல்லுனர்களில் அல்லது தகவல் தொழில்நுட்ப தொழிலாளர்களில் 46 வீதமானவர்கள் இந்தியர்கள். அமெரிக்காவிலுள்ள வைத்தியர்களில் 35 வீதமானவர்களும் இந்தியர்களே. கடந்த சில வருடங்களாக அமெரிக்கா வருடமொன்றிற்கு சுமார் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் 'கிறீன் கார்டுகளை' (Green Cards) இந்தியர்களுக்காக வழங்கிவருகின்றது. இந்தியா என்பதைத் தவிர்த்து, அல்லது இந்தியாவை எதிர்த்து மேற்குலகின் நகர்வுகள் இல்லை என்கின்ற நிலை தற்பொழுது உருவாகியுள்ளது.

மேற்குலகின் இந்தியாவுடனான கூட்டு

ஆக மொத்தத்தில் மேற்குலகைப் பொறத்தவரையில் அவர்கள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா என்கின்ற குதிரை மீதுதான் எதிர்வரும் காலங்களில் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார்கள்.

அதற்காக இந்தியாவுடன் இன்று மேற்குலகு ஏராளமான பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்களைச் செய்துகொண்டுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் என்கின்ற பெயரில் சீனாவிற்கு நிகரான ஒரு நல்ல அணுஆயுத வல்லரசாக இந்தியாவை வளர்க்கும் காரியத்தையும் அமெரிக்கா நேரடியாகச் செய்து வருகின்றது.

அமெரிக்க இராணுவமும் இந்தியப் படைகளும் இணைந்து 2002ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி முதல் தொடர் இராணுவப் பயிற்சிகள்;, இராணுவ ஒத்திகைகள் என்று மேற்கொண்டு வருகின்றார்கள்:‘Balance Iroquois’, Exercise Malabar என்ற பெயர்களின் ஆரம்பமான இந்த இராணுவ ஒத்திகைகள் இன்றும் கட்டம் கட்டமாகத் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.

மேற்குலகின் கூட்டான நேட்டோ (NATO) அமைப்பில் இந்தியாவையும் இணைப்பது பற்றி மேற்குலக நாடுகள் மட்டத்தில் தற்பொழுது ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றது. ஐ.நா. சபையில் இந்தியாவிற்கு வீட்டோ அதிகாரித்தை எப்படிப் பெற்றுக்கொடுப்பது எனபது பற்றி பரிசீலிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

மேற்குலகம் ஆசியாவிற்கான தனது பிரதிநிதியாக தற்பொழுது வரிந்துகட்டியுள்ள இந்தியாவைத் தவிர்த்துவிட்டு, அல்லது எதிர்த்துக்கொண்டு மேற்குலகம் ஈழத்தமிழர் பிரச்சனையில் தலையிடும் என்று நாம் எதிர்பார்போமேயானால், எங்களை விட முட்டாள் சமூகம் வேறு யாருமே இருக்கமுடியாது.

இன்று இருக்கின்ற உலக அரசியலின் அடிப்படையில் இந்தியா என்கின்ற வாசல் வழி இல்லாமல் மேற்குலகம் ஈழப் பிரச்சனையில் தலையிடுவதற்கான சாத்தியம் மிக மிகக் குறைவு என்றுதான் கூறவேண்டும்.

ஆசியாவிற்கான மேற்குலகின் வாசல்:

மேற்குலகம் ஈழத் தமிழர் பிரச்சனையில் ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டு எங்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று நாம் நினைப்போமேயானால், ஆசியாவிற்கான மேற்குலகின் வாசலாக இன்று இருக்கின்ற இந்தியாவை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். எமக்குச் சாதகமாக மேற்குலகம் இலங்கையில் நுழைவதற்கு இந்தியா என்கின்ற வாசலை எம்மில் யாராவது திறந்து வைத்திருக்கவேண்டும். அந்தக் காரியத்தை ஈழத் தமிழ் இனத்தின் ஒரு பிரிவு செய்துதான் ஆகவேண்டும்.

ஈழத் தமிழினத்தின் ஒரு பகுதி மேற்குலகுடன் இராஜதந்திரம் பேச, எம்மில் மற்றொரு பகுதியினர் தனிநாடுவேண்டிப் போராட, மற்றொரு பகுதியினர் சிங்கள தேசத்தை பொருளாதார ரீதியாக முற்றுகையிட, ஒரு பகுதியினர் இந்தியா என்கின்ற வாசல் கதவை மேற்குலகிற்காகத் திறந்துவைக்கும் காரியத்தைச் செய்வதை ஒரு சிறந்த இராஜதந்திரமாகவே நான் கருதுகின்றேன்.

இந்தியாவிற்கு நாம் எமது இடக்கையைக் கொடுத்தபடிதான் மேற்குலகிற்கு நாம் எமது வலக்கையைக் கொடுக்க முடியும். இன்றைய சர்வதேச இராஜதந்திர சமன்பாடுகளில் ஈழத் தமிழரின் நிலை வேறு வழியில்லாமல் இதுவாகத்தான் இருக்கின்றது.

அதற்காக இந்தியாவிடம் நாம் முற்று முழுதாகச் சென்று சரணடையவேண்டும் என்று நான் கூறவில்லை.

தற்பொழுது எமது போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து நாங்கள் சுதாகரித்துக் கொள்ளும்வரை, மேற்குலம் எமக்கு ஒரு நீதியைப் பெற்றுத்தர விளையும் காலம் நிறைவு பெறும்வரை, இந்தியாவைப் பகைக்காத ஒரு நகர்வை நாம் மேற்கொள்வது ஒரு நல்ல இராஜதந்திரம் என்றே நான் நினைக்கின்றேன்.

சுவிஸ்முரசம்

Niraj David

nirajdavid@bluewin.ch

மிக அர்த்தமுள்ள சிந்தனைகளாக இருந்தாலும், பல முரண்பாடுகளும், குறுகியகால நோக்கும் உண்டு.

"கற்பனையான" இந்தியா - மேற்குலக கூட்டால், கடந்த ஆண்டில் வெளிப்படையாக கூறப்பட்ட போர் நிறுத்தத்தைக் கொண்டுவர முடியாது போனது.

சிங்களவன் பாகிஸ்தான், சீனா, இந்தியா, மேற்குலகம், ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ... என்று மாறிமாறி இராஜதந்திர விளையாட்டு காடும்போது,

நாம் மட்டும் மேற்குலகம் - இந்தியா என்ற ஒருபக்க வலைக்குள் மாட்டுப்படுவது புத்திசாலித்தனமல்ல.

மேற்குலகின் இன்றைய இலங்கை விரோத போக்கு ஒருநாளில் மாறக்கூடியது - ரணில் (ஐ.தே.க.) வந்தால் போதும்.

எனவே நாமும் வெறுமனே எப்போதும் இவர்களிடம் தான் பலம் உண்டு எனக்கருதி அவர்கள் பின்னால் தொங்கும் போக்கை கைவிடவேண்டும்.

மேற்குலகு - இந்தியாவுடன் நாம் தொடர்பை பேணும் அதேவேளை, அவர்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், நேபால், இஸ்ரேல், அராபிய நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளை நாம் பேணப் பழகவேண்டும்.

கட்டுரையாளர் கூறியது போல், எம்மில் வெவ்வேறு குழுக்கள் இதைச் செய்யலாம். ஆனால் இந்த குழுக்களுக்குள், இரகசிய புரிந்துணர்வு மிக அவசியம்.

ஆனால், இந்திய கொள்கை வகுப்பாளர்களின் உறுதியான, ஆழமான தமிழின விரோத மனப்பான்மை மாற்றப்பட்டால் மட்டுமே இந்தியாவுடனான தொடர்புகள் தமிழருக்கு ஏதாவது நன்மைகளை தரும்.

Edited by Aasaan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாமில் ஒரு குழு சீனாவுடன் எப்படியாவது நட்பு பெற்று இந்தியாவுக்கான உழவு பார்ர்க்கும் வேலையை செய்துஇ சீனா இந்தியாவை உடைப்பதற்கு உதவ வேண்டும். ஆசியாவில் இந்தியா தனக்கு பெரும் போட்டியாக வளர்ந்து வருவதை எப்படியாக சீனா தடுக்க பார்கிறது என்பது ஒரு வெளிப்படையான ரகசியம். சீனாவால் பின்னபட்ட சிலந்திவலையில் இந்தியா நட்ட நடுவில் கச்சிதமாக மாட்டியுள்ள விடயத்தை பல இந்திய அரசியல் ஆய்வாளர்கள் பல கட்டுரைகளில் வெளிபடையாக எழுதியுள்ளனர். சீனாவின் அடுத்த கட்டம்இ இந்தியாவை உடைப்பதுதான். சீனா இதை செய்யும் காலம் மிக நெருங்கி வந்து விட்டது. நாம் எப்படியாவதுஇ சீனாவுக்கு உதவி செய்யலாம். இதை தமிழ் நாட்டு தொப்புள் கோடி உறவுகள்இ செய்வார்கள் என்பதில் ஐயமில்லைஇ எமக்காக இல்லாவிடாலும் தமக்காகசெய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் கற்பனைகட்கு மேல் பயணம்செய்கின்றோமென்பதை இந்தக் கட்டுரையின்மூலம் தெரியவருகின்றது. இந்தியாவைச் சரிக்கட்ட அதுசெய்யவேண்டும் இதுசெய்யவேண்டுமென்பது, கொக்கின்தலையில் வெண்ணையைவைத்து கொக்கைப்பிடிக்க முனைவதுபோன்றது. அது மிகப்பெரிய ஒரு நாடு, அதற்கென ஆள் அணி அம்புகள் எலலாவற்றையும் தன்னகத்தே வைத்திருக்கும் நாடு, மேற்குலகமும், அமேரிக்காவும் தனக்கு எது சாதகமாக வருகின்றதோ அதைப்பற்றிக்கொண்டு நம்பினவனைக் கைவிட்டுவிட்டுப் போய்விடுவார்கள். தற்போது இந்தியா எமது பிரச்சனையெத் தூண்டிவிட்டுக் குளிர்காய முனைந்து இப்போது சீனாக்காரன் வந்தவுடன் செய்வதறியாது திகைத்துநிற்பது வேறுவிடையம். ஆனால் எம்மைக்கழட்டிவிட்டது உண்மைதானே. தற்போது நாம் செய்யவேண்டியது ஒருசிலதே, அவை, நாம்வாழும் புலம்பெயர் தேசங்களில் மிகப்பெரும் பொருளாதார சக்தியாக உருவெடுக்கவேண்டும். உதாரணமா அண்மையில் சுவீடன் நாட்டின் "ஸாப்" எனும் மோட்டார்வாகனத் தொழிற்சாலை தொடர் நட்டத்தில் இயங்கியதால் அதனது உரிமையாளராகிய ஜெனரல் மோட்டோஸ் வந்தவிலைக்கு விற்க ஆடகளைத் தேடியது. அப்போது பெரிதாகப் பிரபல்யம் இல்லாத நெதர்லான்டைச் சேர்ந்த ஒரு மோட்டார் வாகன உற்பத்திநிறுவனம் வெறும் ஐம்பத்துநான்கு மில்லியன் யூரோக்களுக்கு வளைத்துப் போட்டுவிட்டது. அதுக்காகக் கார் உற்பத்தி நிறுவனங்களையெல்லாம் வாங்கச்சொல்லவில்லை. முயன்றால் எம்மாலும் இத்தொகையில் நல்ல நிறுவனங்களை வாங்கமுடியும். ஒரே ஒரு வேலைமாத்திரம் நாம் சிரமப்படடுச்செய்யவேண்டும். அது எதுவெனில் புலம்பெயர் தேசத்தில் தமிழர்கட்கிடையில் முதலீட்டினை மேற்கொள்வது பற்றிய அறிவினையூட்டவேண்டும். (அதாவது நகைக்கடைகளில் இருபத்தியிரண்டு காரட் தங்கம் என பதினெட்டுக் காரட் தங்கத்தை வாங்கி ஏமாறாது இருபத்துநாலு காரட் தங்கத்தினை வரி இல்லாமல் வாங்கிச் சேமியுங்கள் எனக் கூறுவதன் மூலமும் இலாபத்துடன் இயங்கும் நிறவனங்களில் முதலீடுகளை செய்ய ஊக்குவிப்பதன் மூலமும். அவர்களைத் தொழில் முகவராக்கலாம். அத்துடன் புலத்துடன் அனைவர்க்கும் நேரடியான தொடர்பகளைப்பேண ஆரம்பித்தல் வோண்டும். எமது வீடுவாசல் நிலபுலன்களை வந்தவிலைக்கு விற்பதைவிட்டு மீண்டும் நாம் அங்கபோய்க் குடியிருகும்வண்ணமான நிலையை நாம் எற்படுத்திக்கொள்ளவேண்டும். சிறிதுகாலத்தில் பாருங்கள் வடக்குக் கிழக்குப்பகுதி எவ்வளவு மாற்றங்களைச் சந்திக்கப் போகின்றதென அம்மாற்றங்களின் சொந்தக்காரர்கள் நாமாகவிருக்கவேண்டும், அந்நியன் அபகரித்து அதன்பின்பு நாம் விருந்தினர்களாகச் சென்று பணத்தையும் அவர்களிடமே மீண்டும் மீண்டும் இழக்கும்வண்ணம் இருத்தல்கூடாது. நாம் தமிழீழம் பற்றிய கனவுடனிருக்கையில் எமது நிலங்களும் வளங்களும் அந்நியர் கைக்குப்போய்விடும். எமது தேசத்தில் அந்நியர்கள் முதலீடுகளை மேற்கொள்வதைவிட நாமே முதலீடுகளை மேற்கொள்வதே எமக்குப்பலம். எத்தனையோ தொழில் முயற்சிகள் எமக்காக அங்கு காத்திருக்கின்றன. உதாரணமாக புலம்பெயர் தமிழர் தமது புலம்நோக்கிப் போவதற்கான விமானச்சேவையை நாமே ஆரம்பிக்கலாம். இலாபநோக்கம் கொண்ட தொலைக்காட்சிச்சேவையை புலம்பெயர் தேசத்தில் பெருவெட்டாக ஆரம்பித்து பின்பு புலத்துக்கும் அதனை விஸ்தரிக்ககலாம். உல்லாசப் பயணத்துறையில் ஈடுபாடு காட்டலாம், அதனை நாம் இங்கிருந்தே இயக்கலாம் சிறீலங்காவிற்கு அப்பணம் அன்னிய செலாவணியாகப் போகாதமாதிரி நாம் செயற்படலாம். இவை சிங்களவனுக்கே நன்மையளிக்கும் என வாழாவிருந்தோமாகில் எம்மால் விசுவரூபம் எடுக்கவே முடியாது. அவன் விட்டெறிவதை நாம் ஏந்தத் தயாராக எப்போதுமே இருக்கவேண்டியதுதான். இக்கணத்தில் எமக்கிருக்கும் வேலை, தமிழர்விரோத இந்தியாவின் அடிவருடிகளான எஸ்.எம்.எஸ் குழுவினை ஈழத்தமிழர்களது அரசியலிலிருந்து அப்பறப்படுத்துவதே. இதன்மூலம் இந்தியா எனும் தேசம் எதிர்காலத்தில் இன்னுமொரு முள்ளிவாயக்காலை உருவாக்காமல் இருப்பதற்கும், உனக்கும் எங்களுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை நீ தமிழின எதிரி எனச்சொல்வதற்கும் கிடைத்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவோம். உனது இடுப்பில் கட்டியிருக்கும் கோமணம் உருவுப்பட்டாலும் பரவாயில்லை, இந்தியா அணிந்திருக்கும் பட்டுவேட்டியைப் பத்தியெரியவை.

புலிகள் இடக்கையையும், வலக்கையையும் கொடுத்துத்தான் நகரமுற்பட்டார்கள், அல்லது நகர்ந்தார்கள், அதைப்பயன் படுத்தித்தான் எம்மை, எமது விடுதலைப்போராட்டத்தை அழித்துள்ளது. இந்தியா புலிகளும் அந்த அந்த காலக்களில் செய்ய வேண்டிய நகர்வுகளைச்செய்தே வந்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் மட்டும் மேற்குலகம் - இந்தியா என்ற ஒருபக்க வலைக்குள் மாட்டுப்படுவது புத்திசாலித்தனமல்ல.

மேற்குலகின் இன்றைய இலங்கை விரோத போக்கு ஒருநாளில் மாறக்கூடியது - ரணில் (ஐ.தே.க.) வந்தால் போதும்.

எனவே நாமும் வெறுமனே எப்போதும் இவர்களிடம் தான் பலம் உண்டு எனக்கருதி அவர்கள் பின்னால் தொங்கும் போக்கை கைவிடவேண்டும்.

மேற்குலகு - இந்தியாவுடன் நாம் தொடர்பை பேணும் அதேவேளை, அவர்களுக்கு பிடிக்குதோ இல்லையோ, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ், நேபால், இஸ்ரேல், அராபிய நாடுகளுடன் இராஜதந்திர தொடர்புகளை நாம் பேணப் பழகவேண்டும்.

அண்ணை சடுதியா சமன்பாட்ட கைவிட்டுட்டார் ....துக்கமாயிருக்கு. :rolleyes::)

Edited by Mathivathanang

அண்ணை சடுதியா சமன்பாட்ட கைவிட்டுட்டார் ....துக்கமாயிருக்கு. :rolleyes::)

என்னெண்டுதான் நீங்கள் சளைக்காமல் எல்லாத்துக்கும் பதில் எழுதுறிங்களே எனக்கெண்டா விளங்கேல்ல.

நீங்கள் ஒரு கடின உழைப்பாளியா இருப்பீர்கள் போல? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னெண்டுதான் நீங்கள் சளைக்காமல் எல்லாத்துக்கும் பதில் எழுதுறிங்களே எனக்கெண்டா விளங்கேல்ல.

நீங்கள் ஒரு கடின உழைப்பாளியா இருப்பீர்கள் போல? :lol:

வருமானம் வரவேண்டும் என்றால் கடினமாய் உழைக்கத்தான் வேணும், வேலை செய்யாட்டி முதளாளி கோவிப்பான் எல்லோ, அவனை சுத்த முடியாது எல்லோ, உழைக்காவிடில் முதலாளி கோவிப்பான் எல்லோ. :):lol::lol:

இந்தியாகானை நம்புறமாதிரி நாங்கள் நடிக்க வேணும் ஆனால் நம்பகூடாது, சோனியாவுக்கு தமிழ்நாட்டில் குடுத்த பாதுகாப்பை பாக்கும் போது இந்தியன் இன்னமும் எங்களை நம்பவில்லை போல இருக்கு, இன்னமும் கொஞ்சம் டீப்பா நடிக்க வேணும், அடிச்சு சாதிக்க முடியாத்தை நடிச்சாவது சாதிக்க வேணும், போறவளி கள்ள வளியா இருந்தாலும் போய்சேர வேண்டிய இடத்தை போய் சேர்ந்தால் சரிதான். இந்த பொருளாதார உலகில் அன்பு,கருணை,நீதி ,நேர்மை எல்லாம் செத்து விட்டது, பொருள் மட்டுமே ஆதாரம். :rolleyes:

Edited by சித்தன்

நிராஜ் டேவிட் அவர்களே,

நாங்கள் கட்டப்பொம்மன் பரம்பரை ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் அழிவமே தவிர இராஜதந்திரம் என்ற பெயரில் வளைந்து கொடுக்க நாம் தயாராக இல்லை.முதுகெலும்பில்லாத சிங்களவன் தனக்கென ஒரு நாடு இருந்தும் வெட்கம் இல்லாமல் இந்தியா,சீனா,பாகிஸ்தான் என்று எல்லோரிடமும் பல்லை காட்டுகின்றான்,அவனுக்கு சுயமரியாதை கிடையாது.தமிழன் என்ற இனம் இலங்கையில் இல்லாமல் போகலாம் ஆனால் மானமிழந்து எவனிடமும் தாழ்பணியோம்.முடிந்தால் நாட்டைவிட்டொடி உலகம் எங்கும் அகதியாவோம்.

இலங்கை-இந்தியா ஒப்பந்தக் காலத்தில் கூட குமரப்பா,புலேந்திரனுக்கு சயனைட் கொடுத்து சாகடித்தனாங்களே தவிர இந்தியாவிடம் கையேந்தவில்லை.திலீபனை உண்ணாவிரதம் இருந்து இந்திய எதிர்ப்பில் வெற்றிபெற்றனாங்களே ஒழிய டிக்சிற்றின் சொல்லை கேட்கவில்லை.கடைசியில் தலைவரிடம் மரியாதையில்லாமல் நடந்த ராஜீவ் காந்தியை தருணம் பார்த்துபோட்டனாங்களே தவிர அடுத்த எலக்சன் வெல்லக்கூட விடவில்லை.

பிரேமதாசா,சந்திரிகா,கோத்தபாயா,பொன்சேகா கதிர்காமர் இவர்களுக்கு எப்படி செக் வைத்தோம் என்று தெரியும் தானே,

சர்வதேசமே எமக்கு எதிராக வந்தாலும் எங்கட தன்மானம் இழக்க நாம் தயாராக இல்லை.அது எரிக் சோல்கெய்ம் ஆகட்டும் பொப் ரே ஆகட்டும்.

தொடர்ந்தும் எமது மானம் காத்து முடிந்தவரை முழுப்பேரும் அழிவோமே தவிர மானமிழக்கமாட்டோம்.

இப்படிக்கு மானம் காக்கும் இணயவீரர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிராஜ் டேவிட் அவர்களே,

நாங்கள் கட்டப்பொம்மன் பரம்பரை ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் அழிவமே தவிர இராஜதந்திரம் என்ற பெயரில் வளைந்து கொடுக்க நாம் தயாராக இல்லை.முதுகெலும்பில்லாத சிங்களவன் தனக்கென ஒரு நாடு இருந்தும் வெட்கம் இல்லாமல் இந்தியா,சீனா,பாகிஸ்தான் என்று எல்லோரிடமும் பல்லை காட்டுகின்றான்,அவனுக்கு சுயமரியாதை கிடையாது.தமிழன் என்ற இனம் இலங்கையில் இல்லாமல் போகலாம் ஆனால் மானமிழந்து எவனிடமும் தாழ்பணியோம்.முடிந்தால் நாட்டைவிட்டொடி உலகம் எங்கும் அகதியாவோம்.

இலங்கை-இந்தியா ஒப்பந்தக் காலத்தில் கூட குமரப்பா,புலேந்திரனுக்கு சயனைட் கொடுத்து சாகடித்தனாங்களே தவிர இந்தியாவிடம் கையேந்தவில்லை.திலீபனை உண்ணாவிரதம் இருந்து இந்திய எதிர்ப்பில் வெற்றிபெற்றனாங்களே ஒழிய டிக்சிற்றின் சொல்லை கேட்கவில்லை.கடைசியில் தலைவரிடம் மரியாதையில்லாமல் நடந்த ராஜீவ் காந்தியை தருணம் பார்த்துபோட்டனாங்களே தவிர அடுத்த எலக்சன் வெல்லக்கூட விடவில்லை.

பிரேமதாசா,சந்திரிகா,கோத்தபாயா,பொன்சேகா கதிர்காமர் இவர்களுக்கு எப்படி செக் வைத்தோம் என்று தெரியும் தானே,

சர்வதேசமே எமக்கு எதிராக வந்தாலும் எங்கட தன்மானம் இழக்க நாம் தயாராக இல்லை.அது எரிக் சோல்கெய்ம் ஆகட்டும் பொப் ரே ஆகட்டும்.

தொடர்ந்தும் எமது மானம் காத்து முடிந்தவரை முழுப்பேரும் அழிவோமே தவிர மானமிழக்கமாட்டோம்.

இப்படிக்கு மானம் காக்கும் இணயவீரர்கள்.

இவைகள் எல்லாம் வெறும் முட்டாள்தனாமானதுதான். அதுதான் புலிகள் தமது புத்தியாலேயே கெட்டுபோனார்கள்.

நாங்கள் மாற்றான் வந்தால் மனைவியை அவனுடன்விட்டுவிட்டு நாம் தள்ளிபடுத்து இராஜதந்திர அரசியல் செய்வோம்.

இனியாவது ஒட்டுக்குழுக்கள் தமிழனை காட்டிகொடுத்து வாழ்வைபெற்ற துரோக கும்மல்களிடம் இருந்து இராஜதந்திரங்களை பழகுவோம்.

எங்களுக்கு இன்னமும் அந்த இராஜதந்திரிகளுடன் பழக்கம் கூடவில்லை. அது உள்ளவர்கள் அவர்களிடம் கற்பதை இங்கே தொடர்ந்தும் கக்கினால் நாமும் கற்றுகொள்வோம். தயவுசெய்து எமக்கும் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள்..............

இராஜதந்திர ரீதியாக விட்டுகொடுத்து வாழதுடிக்கிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் கட்டப்பொம்மன் பரம்பரை ஒட்டுமொத்தமாக அழிந்தாலும் அழிவமே தவிர இராஜதந்திரம் என்ற பெயரில் வளைந்து கொடுக்க நாம் தயாராக இல்லை.முதுகெலும்பில்லாத சிங்களவன் தனக்கென ஒரு நாடு இருந்தும் வெட்கம் இல்லாமல் இந்தியா,சீனா,பாகிஸ்தான் என்று எல்லோரிடமும் பல்லை காட்டுகின்றான்,அவனுக்கு சுயமரியாதை கிடையாது.தமிழன் என்ற இனம் இலங்கையில் இல்லாமல் போகலாம் ஆனால் மானமிழந்து எவனிடமும் தாழ்பணியோம்.முடிந்தால் நாட்டைவிட்டொடி உலகம் எங்கும் அகதியாவோம்.

தொடர்ந்தும் எமது மானம் காத்து முடிந்தவரை முழுப்பேரும் அழிவோமே தவிர மானமிழக்கமாட்டோம்.இப்படிக்கு மானம் காக்கும் இணயவீரர்கள்.

நீங்கள் எதிர்மறையாக எழுதினாலும் இவை ஏற்றுக்கொள்ளப்படவேண்டியவைகளே...

இதற்காக தங்களுக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.