Jump to content

அப்பா எங்கே?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

அப்பா எங்கே?

எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத்தொடங்கியது.

"அம்மா, எனக்கு அப்பாவைப் பாரக்கவேண்டும்போல் இருக்கிறது" என்று கூறினேன்.

அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று "இன்று எனக்கு அப்பாவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது என்றேன்" என்றேன்.

"அப்படிப்பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக்கேட்கிறாய்?" என்றார்.

அம்மா கூறியது சரிதான். அப்பா இருக்கின்ற இடம் அப்படியானது. அடிக்கடி அங்கே போகமுடியாது, தொலைபேசியிலும் பேசமுடியாது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் அப்பா அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டார். அப்பா எல்லாம் ஒழுங்காக, நன்றாகவே செய்வார் ஆனால் அவருடைய கூடாத பழக்கம் அளவுக்குமிஞ்சி மது அருந்துவதுதான்.

அவர் அம்மாவைக் கலியாணம் செய்யமுன்னர் தனியே இலண்டனிலே இருந்தபோது நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்தப் பழகியிருந்தார். அம்மா நான் பிறந்தபின்னரும் பல தடவைகள் அப்பாவைக் குடிக்கவேண்டாம் என்று தடுத்திருக்கிறார்.

"இலண்டனுக்கு வந்தால் எல்லோரும் குடிக்கப்பழகவேண்டும். இல்லையென்றால் வெள்ளைக்காரன் மதிக்கமாட்டான்" என்று ஒரு சாட்டுச்சொல்லுவார். எங்காவது பிறந்தநாள் கொண்டாட்டம், விருந்துபசாரம், விழாக்கள் என்றால் நண்பர்கள் எல்லோருமாகச் சேர்ந்து நன்றாகக் குடிப்பார்கள். குடிக்கும்போதே எல்லோரும் தமது பழைய இலண்டன் வாழ்க்கையில் நடந்த பல சுவையான அனுபவங்களையும், புதிய அனுபவங்களையும் பெலத்துக்கதைத்துச் சிரித்து மகிழ்வார்கள். பார்ப்பவர்களும் சேர்ந்து சிரித்து மகிழ்வார்கள். ஆனால் அப்படியான வேளைகளில் விட்டிற்கு வரும்போது அம்மாதான் காரை ஓட்டிக்கொண்டு வருவார். அப்பாவைக் காரோட்ட அம்மா ஒருபோதும் விடமாட்டார்.

மார்கழி மாதம் தொடங்கினாலே நத்தார் கொண்டாட்டங்களும் தொடங்கிவிடும். அப்பாவின் வேலையிடம் ஒரு கிழமைக்கு விடுமுறை விடுவார்கள். அந்த நாட்களில் மாறி மாறி நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தினமும் கொண்டாட்டங்கள் இருந்துகொண்டேயிருக்;கும். சென்ற நத்தார் தினத்திற்கு முதல்நாள் அப்பாவின் நண்பர் ஒருவரின் வீட்டில் இரவு விருந்துக்குப் போயிருந்தோம். அன்றும் அப்பா நன்றாக மது அருந்திவிட்டபடியால் வீட்டிற்கு வரும்போது அம்மாதான் காரை ஓட்டிக்கொண்டு வந்தார்.

நாங்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதபோதிலும் மற்றவர்கள்போல் எங்கள் விட்டிலும் நத்தார் கொண்டாடினோம். மதிய உணவை முடித்துவிட்டு, வீட்டுக்கு வந்த விருந்தினரை உபசரித்து அனுப்பிவிட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்துமுடிய இரவு பத்துமணி ஆகிவிட்டது. அப்போதுதான் அப்பா தனது கைத்தொலைபேசியை முதல்நாள் நண்பரின் வீட்டில் மறந்துபோய் விட்டுவிட்டு வந்தது தெரியவந்தது. ஏதோ வலது கையை இழந்துவிட்டதுபோல் தவித்தார். தான் உடனே அங்கே சென்று அதனை எடுத்துவரப்போகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

இரவு ஒரு மணி ஆகியும் அப்பாவைக் காணவில்லை. என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. பலமுறைகள் முயற்சிசெய்தும் கைத்தொலைபேசி இணைப்புக் கிடைக்கவில்லை. நண்பரின் வீட்டுக்குத் தொலைபேசி அழைப்புச் செய்தபோது அவர்கள் அப்பா பன்னிரண்டு மணிக்கே புறப்பட்டுவிட்டாதாகக் கூறினார்கள். நடந்து வந்தாலே பதினைந்து அல்லது இருபது நிமிடங்களில் வந்துவிடலாம். என்ன செய்வது? யாருக்கு தொலைபேசி அழைப்புச்செய்து கேட்பது என்று தெரியாமல் இருந்தபோது அப்பா அவசர அவசரமாக வீட்டினுள் நுழைந்தார். மிகவும் களைத்தும் காணப்பட்டார். அம்மாவை அறையினுள் அழைத்து ஏதோ இரகசியமாகப் பேசினார். மறுகணமே வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

அம்மா அப்படியே நிலத்தில் இருந்துவிட்டார். "அம்மா, அம்மா என்ன நடந்தது? அப்பா ஏன் மீண்டும் வெளியே போகிறார்" என்று நான் கேட்டேன்.

"சௌமி, நீ போய் படு" என்று மட்டும் கூறிவிட்டு படுக்கையில் சென்று பொத்தென்று வீழ்ந்தார்.

நான் நித்திரையாகிவிட்டேன். ஆனால் இடையிடையே விழித்தபோது இரவு முழுவதும் கீழே யாரோ வாசல் மணியை அடிப்பதும், அம்மா அவர்களுடன் சென்று கதைப்பதும் அரைத்து}க்கத்திலும் என் காதுகளில் விழுந்தன.

மறுநாள்கூட அப்பாவை வீட்டிலே காணவில்லை. முதல்நாள் நத்தார் கொண்டாட்டத்திற்கு வந்திருந்த விருந்தினர் சாப்பிட்ட தட்டுக்கள்கூட கழுவாத நிலையில் அப்படியே இருந்தன. அப்பா ஏதோ சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. ஆனால் அம்மாவைக்கேட்க முடியவில்லை. அப்பாவின் நண்பர்கள் சிலர் வீட்டிற்கு வந்திருந்தபோது அம்மா என்னை எனது அறைக்குச் செல்லும்படி கூறினார். அதனால் அவர்கள் என்ன பேசினார்கள் என்றே எனக்குத் தெரியாது. நான் எனது அறையிலே இருந்துகொண்டு எனது கணினியில் விளையாடுவதும், தொலைக்காட்சி பார்ப்பதுமாக நேரத்தை ஓட்டினேன்.

இரண்டு மூன்று நாட்கள் சென்றபின்னர்தான் எனக்கு அம்மா எல்லாவற்றையும் கூறினார். தனது மனக்கவலையை ஆற்றுவதற்காகத்தான் அப்படிக் கூறினார் என்று எண்ணுகிறேன். அப்பா அன்றிரவு தனது கைத்தொலைபேசியை எடுப்பதற்காகச் சென்ற வேளையில் அவரது நண்பருடன் அவரது வீட்டில் வேறும் சில நண்பர்கள் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். சம்பிரதாயத்துக்காக சிறிது மது அருந்தும்படி அவர்கள் கேட்டதற்கு இணங்க அப்பாவும் அருந்தினார். ஆனால் ஒன்று, இரண்டு, மூன்று என்று மதுக்கோப்பைகள் காலியானது.

மது அருந்திவிட்டு காரை ஓட்டக்கூடாது என்பது சட்டம். ஆனால் அப்பா இருந்த நிலையில் அவர் அது தவறு என்ற எண்ணவில்லை. அம்மா அங்கே அப்போது இருந்திருந்தால் கட்டாயம் அப்பாவைக் காரோட்ட அனுமதித்திருக்கமாட்டார். காரை ஆரம்பத்திலிருந்தே மிகவும் விரைவாக ஓட்ட ஆரம்பித்தவர் மங்கலான இருளிலே பாதையைக் கடக்க முற்பட்டவரைக் காணவில்லை. அவருடன் காரை மோதிவிட்டார். மோதியபோதுதான் அவர் தான் குடித்துவிட்டுக் காரை ஓட்டியது தவறு என்று புரிந்தது. ஆனால் காலம் கடந்துவிட்டது.

அந்த வேளையில் தன்னை யாரும் கண்டிருக்கமாட்டார்கள் என்கின்ற மனப்பாங்கில் பயம் ஒருபுறம் வாட்ட, சட்டத்திற்குப் பயந்து அவ்விடத்தில் நிற்காது எங்கெல்லாமோ ஓடினார். அவர்; காரை இன்னொரு இடத்தில் நிறுத்திவிட்டு நடந்துதான் அன்றிரவு வீட்டிற்கு வந்தார். அந்த விபத்து தன்னால் ஏற்படவில்லை என்பதை மறைக்க முயன்றார். ஆனால் இவர் திடீரென்று விரைவாக வண்டியை ஓட்டியதைக் கண்ட யாரோ இவரது காரின் இலக்கத்தை எடுத்து வைத்திருந்து பின்னர் விபத்து பற்றியும், அந்த விபத்தில் அகப்பட்டவர் அடுத்தநாள் இறந்துவிட்டதாகவும் கேள்வியுற்ற செய்தியைக் கேட்டதும் சந்தேகத்தின் பெயரில் அதனை பொலிசாரிடம் கொடுத்துவிட்டார்கள்.

பொலிசார் எல்லோரையும் ஒவ்வொருவராக விசாரித்தபோது அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்பாவின் காரைப் பரிசோதனை செய்தபோது அதிலே அடிபட்டதால் ஏற்பட்ட சேதத்தையும், இரத்தக்கறைகளையும் கண்டுபிடித்தனர். அப்பா குற்றத்தை ஓப்புக்கொண்டார்.

அதன்பிறகுதான் எங்கள் வாழ்வில் சோகப்படலம் ஆரம்பமாகியது. பொலிஸ், விசாரணை, நீதிமன்றம், வழக்கு, தண்டனை என்றெல்லாம் அதுவரை அறிந்திராத அப்பாவும், அம்மாவும் தினமும் அழுதார்கள். அன்றிலிருந்து வீட்டில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. நண்பர்கள், உறவினர்கள்கூட எம்முடன் சரியாகப் பேசவோ, பழகவோ இல்லை. அப்பாவுக்கு அவர் செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை கிடைத்தது. ஒரு வருடத்திற்கு மேலாக அவர் சிறையிலே இருக்கிறார். இன்னும் சில வருடங்கள் சிறையிலே இருக்கவேண்டும் என்று அம்மா சொன்னார்.

சென்ற வருடம் நத்தார் அன்று எமது வீடு இருந்த சந்தோசத்திற்கும் இந்தவருடம் எமது வீடு இருக்கின்ற சோகத்திற்கும் காரணம் கூற என்னால் முடிந்தாலும் இவையெல்லாம் ஏன் இப்படி நடக்கின்றது என்று மட்டும் என்னால் விளக்கம் கூற முடியவில்லை. அப்பா கவனமாக இருந்திருக்கலாம். "கண் கெட்ட பின்னர்தான் சுூரிய நமஸ்காரம்" என்ற யாரோ கூறியது இப்போது நினைவுக்கு வருகின்றது.

என் அப்பாவைப்போல பல அப்பாக்கள் இப்படி மதுவை அருந்திவிட்டு கார் ஓட்டுவதும் அதன் பின்னர் தாம் கெட்டித்தனம் செய்துவிட்டோம் என்ற தோரணையில் பேசுவதை இப்போதும் கேட்டிருக்கிறேன். எத்தனையோ இளம் அண்ணாமார்களும் இப்படிக் குடித்துவிட்டு கார் ஓடி விபத்துக்குள்ளாகி இருப்பதையும் கேள்விப்படுகிறேன். எமது குடும்பத்தில் நடந்த ஒன்றே மற்றவர்களுக்கு நல்லதொரு பாடமாக அமைந்துவிட்டது. ஆனாலும் இதனை ஓர் எச்சரிக்கையாக மற்றவர்கள் எடுப்பதாகத் தெரியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல நானும் அம்மாவும் மற்றவர்களுடன் சிறிது சிறிதாக சிரித்துப் பேசினாலும், அப்பா இல்லாமல் நாம் படும் துன்பங்களையும், எமக்குள்ளே இருக்கும் சோகங்களையும் என்னால் எடுத்துரைக்கமுடியாது. அனுபவித்தால்தான் தெரியும். ஆனால் இப்படியான அனுபவம் யாருக்கும் வரவே கூடாது என்று நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

28.12.2005

Posted

வாத்தியாருக்கு ஏதாவது பிரச்சினையோ? நல்லா கத விடுறியள்....சா...கதை எழுதிறியள், கதைகள் பகுதிக்குள்ள போட்டால் எல்லாரும் படிப்பினம்தானே.

Posted

செல்வமுத்து உண்மைக்கதையா? மிக அழகாக தாய்மாரின் பிரச்சினைகளை சொல்லி இருக்குறீர்கள். ஏன் இதை கதைகள் பகுதியில் போடவில்லை இங்கு போட்டு இருக்கிறீங்கள்??

Posted

ஆமாம் செல்வமுத்து. கதை நல்லாயிருக்கு. பல அம்மாக்களின் நிலை அது தானே. கணவர்மார் கார் ஒட மனைவிமாரை அனுமதிப்பதற்கு முக்கிய காரணம் இது தானே.

இதை கதைகள் பகுதிக்கு நகர்தலமே?

Posted

கதை நன்றாக இருக்கின்றது.

மது அருந்துவிட்டு வாகனம் செலுத்துவதும் பின்னர் பொலீசாரிடம் சிக்காமல் வீடு வந்து சேர்ந்த பின்பு வீரவசனம் பேசுவதையும் புலத்தில் கண்டிருக்கின்றேன். மது போதையில் வாகனம் செலுத்தும் போது அவர் உயிர் மட்டுமன்றி கூட வருபவர்கள் வீதியில் செல்பவர்கள் என்று பலருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கதை ரொம்ப அருமையாக இருக்கிறது செல்வமுத்து அய்யா.. கதையில் வரும் அப்பாவுக்கு அது தேவையான தண்டணைதான்... ஆனால் அவருடைய குடும்பத்தவர் நிலைதான் பரிதாபத்திற்குரியது........

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அனைவருக்கும் வணக்கம்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள் பல.

நான் இந்தக்கதையை இங்கே இணைத்தமைக்குக் காரணம் இப்படியான சம்பவங்கள் இந்த நத்தார் நாட்களில் அதிகமாக நடைபெறுவதால்தான். நான் கதைவிடவில்லை. இதில் சில சம்பவங்கள் உண்மைச் சம்பவங்களே. எம்மவர் ஒருவருக்கு இப்படியான ஒரு சம்பவத்தால் சிறைத்தண்டனை கிடைத்ததாக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையில் படித்தேன். அதனால்தான் அப்படியானதொரு கதையை உருவாக்கி இந்த நாட்களில் உலவவிட்டேன். யாருக்காவது இது அறிவுரையாக இருக்குமெனில் நான் மகிழ்வேன்.

திடீரென எழுதி, இங்கே பல உறவுகள் படிக்கக்கூடும் என்ற எண்ணத்திலும்தான் சிறுகதைப் பகுதியில் போடாமல் இங்கே போட்டேன். எனது ஊகம் சரியோ தெரியவில்லை. இப்போது இதனை மாற்றிவிட்டார்கள் போலுள்ளது.

இந்தக்கதையை இங்கு இணைத்த அன்றே எனது அம்மாவும் இறைவனடி எய்தினார். அதனால்தான் இதுவரை இங்கே வந்து பார்க்கவில்லை.

Posted

செல்வமுத்து, நல்ல கதை...நிஜ வாழ்க்கையில் அதிகமானவர்கள் உணர வேண்டிய பொருள்...பாராட்டுக்குள் :)

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லோருக்கும் படிப்பினை தரக்கூடிய கதையினை விறு விறுப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.