Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழை வாழ விடுவோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை வாழ விடுவோம்!

- சந்திரமெளலி

'தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு

சூழ்கலை வாணர்களும் இவள்

என்று பிறந்தவ ளென்றுணராத

இயல்பின ளாமெங்கள் தாய்.'

என்று பாரதி பாரதத் தாயைப் பற்றிப் பாடியது தமிழ் தாய்க்கும் முற்றும் பொருந்தும்.

tamilaivazhavidu_1.jpg"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ்குடி!" என்று உணர்ச்சி வயப்பட்ட முழக்கங்களை ஒதுக்கிப் பார்த்தாலும், நடுநிலையான மொழி ஆராச்சியாளர்கள் உலகின் பழமையான மொழிகளில் தமிழ் ஒன்று என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார்கள்.

அறிஞர்களின் ஆய்வுப்படி கிரேக்கம், எபிரேயம் (ஹீப்ரு), இலத்தீன், சமஸ்கிருதம், தமிழ் ஆகிய ஐந்து மொழிகள் உலகின் மற்றெல்லா மொழிகளையும் விட மிகப் பழமையான மொழிகள். இவற்றில் தமிழைத் தவிர மற்ற நான்கு மொழிகளும் இன்று வழக்கொழிந்து விட்டன. அவை பேச்சு மொழிகளாகவோ, பொது மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் நிலையிலோ இல்லை.

தமிழ் இன்றும் நிதமும் புதுமைப் பொலிவோடும் இளமை மிடுக்கோடும் விளங்குகிறது. இதற்கு என்ன காரணம்? மற்ற தொன்மையான மொழிகளுக்கு நேர்ந்த கதி தமிழுக்கு ஏன் நிகழவில்லை? – இதற்கு பெரிய ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை.

மற்ற மொழிகள் தங்கள் தொன்மை மாறாமல், அவை இருந்த பீடத்திலிருந்து இறங்கி வராமல், காலத்திற்கேற்ப மாற்றம் கொள்ளாமல், வெகு ஜன உபயோகத்திலிருந்து விலகி வழக்கொழிந்தன. ஆனால், தமிழ் சங்கப் பலகையிலும், சங்கப் புலவர் நாவிலும் தாண்டவமாடும். சென்னை சாலையோரத்தில் ரிக்ஷாகாரர் இஸ்துகினு போனாலும் வரும். காலம் மற்றும் தேவைக்கேற்ற மாற்றங்களுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டதால் அழியாமல் இருக்கிறது.

தமிழிலிருந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற திராவிட மொழிகள் தோன்றியது நமக்கு தெரியும். அதே நேரம், சமஸ்கிருதத்தையும் தற்போது ஓரளவு ஆங்கிலத்தையும் தனக்குள்ளே விழுங்கி எக்காலத்துக்கும் ஏற்ப விளங்குகிறது தமிழ்.

கன்னித்தமிழாக இல்லாமல், தமிழ்த் தாயாக நல்லனவற்றைப் பிற மொழிகளிலிருந்து ஏற்றும், தன் தனித்தன்மை கெடாமல் இருப்பதால் தான் இந்த இணைய உலகிலும் இனிய தமிழ் நிலைத்திருக்கிறது.

இப்படிப்பட்ட மொழியின் வலிமையறியாமல், தமிழை தூய்மைப்படுத்துகிறோம், தமிழை வளர்க்கிறோம் (வளர்க்க தமிழ் என்ன தாடியா, மீசையா என்று ஒரு கவிஞர் கேட்டது சரியே) என்று சொல்லி மற்ற செம்மொழிகளுக்கு நேர்ந்த கதியை தமிழுக்கு ஏற்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில், சிலவற்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தமிழை யாரும் வளர்க்கத் தேவையில்லை. வளர்க்க தமிழ் ஒன்றும் சிறு குழந்தையில்லை. தமிழை வீட்டில் உள்ள அறிவும் அனுபவமும் முதிர்ந்த தாய் போலப் பார்த்து, அந்த அறிவையும், அனுபவத்தையும் நமக்கு தேவையான வகையில் உபயோகப்படுத்தவேண்டும்.

கம்பனோ, வள்ளுவரோ, அவ்வையோ, பாரதியோ, தாங்கள் தமிழ் வளர்த்ததாக சொல்லிக் கொள்ளவில்லை. தமிழில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்தார்கள். தமிழும் வளம் பெற்றது.

முதல், இடைச் சங்கங்களைக் கடல் கோள் (சுனாமி!!) கொண்ட போதும், தமிழகத்தின் இருண்ட காலமான களப்பிரர் காலத்திலும், பின் தமிழே தெரியாத மன்னர்கள் ஆண்ட காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் தமிழ் அழியவில்லை. அதற்கு அழிவில்லை. நாம் தமிழை வளர்க்க வேண்டாம், வாழ விட்டால் போதும். அதற்கு நம் மிக எளிமையான யோசனைகள்:

1. முதலில் தமிழை ஒரு பீடத்தில் அமர்த்தும் செயலை ஆட்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் நிறுத்த வேண்டும். மேடைத்தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் என்று வேறு வேறு உருவம் தாங்கும் தமிழின் வளைந்து கொடுக்கும் தன்மையால் தான் அது இன்றும் வாழ்கிறது. அதை கன்னித்தமிழ், தூய தமிழ் என்று சிறையில் அடைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். ஆங்கிலம் இலத்தீனை விழுங்கியது. தமிழ் சமஸ்க்ருதத்தை விழுங்கியது. அதில் தவறில்லை. தமிழைத் தூய்மைப்படுத்துகிறோம் என்று சொல்லி ஆங்கில, சமஸ்கிருத 'தீட்டை' நீக்கினால், தமிழ் அன்னியப்பட்டு விடும். வரைமுறை இருந்தால் போதும்.

2. தமிழை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப ஊடகங்களில் பயன்படுத்த வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப மொழி வளரும். முன்பே சொன்னது போல் தமிழை யாரும் தனியாக வளர்க்கவில்லை. பக்தி இலக்கிய காலத்தில் பக்திப் பாடல்கள் தமிழில் இயற்றப்பட்டன. சுதந்திரப் போராட்ட காலத்தில் தேசபக்திப் பாடல்கள் தமிழில் வந்தன. அந்த காலகட்டத்தில் மக்கள் மீது தாக்கம் அதிகமாக உள்ள விஷயங்களை தமிழில் சொன்னதால், தமிழ் இன்னும் செழுமை பெற்றது. இதே போன்று இன்றைய காலகட்டத்தில் வீச்சு அதிகமாக உள்ள விஞ்ஞானம், விளையாட்டு, திரைப்படம் போன்றவற்றில் தமிழ் புக வேண்டும். தமிழை வலுக்கட்டாயமாக இவற்றில் திணிக்கக்கூடாது.

3. நெருடாத, எளிதில் புரியக்கூடிய புதிய சொற்கள் உருவாக்க வேண்டும். சில பெயர் சொற்கள் வேற்று மொழி வார்த்தைகளாக இருந்து, தமிழில் எளிமையாக மாற்றமுடியா விட்டால் அப்படியே எடுத்தாளலாம். (உம். காபி இதை கொட்டை வடி நீர், குளம்பி என்றால் குழம்பிப் போக வேண்டியது தான். நமது 'நாவாய்' என்ற தமிழ் வார்த்தை தான் இன்று ஆங்கிலத்தில் 'நேவி' என்று உபயோகத்தில் உள்ளது.

4. இருக்கும் நல்ல தமிழ் கலைச்சொற்களை இழக்கக்கூடாது. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன் புற நானூற்றில் பயன்படுத்திய 'மணல், இரவு, மலர், மாலை, முன்னோர், கண், நிலம், உயிர், உடம்பு’ போன்ற வார்த்தைகள் இன்றும் செலாவணியில் உள்ளன. 'ஏமம் (பாதுகாப்பு), மடங்கல் (இறுதி), வளி (காற்று), நீத்தம் (மிகுதி), பகடு (எருது), வலவன் (ஓட்டுனர்) ஆகியவற்றைத் தொலைத்து விட்டோம். எக்ஸ்க்ளூஸிவ் ரிப்போர்ட் – எல்லாம் தமிழ் கலைச்சொல் இல்லை.

5. தமிழ் பண்டிதர்கள் கலைச்சொற்களை உருவாக்கக் கூடாது. தமிழ் நாட்டில் எட்டாம் வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு அறிவியல், கணித பாட புத்தகங்களை எடுத்துப் பார்த்தால் நான் சொல்வது புரியும். கரடு முரடாக மொழிபெயர்த்து தமிழில் இவற்றைப் பயிலும் மாணவர்களை ஒன்றுக்கும் உபயோகமில்லாமல் மாற்றுவதில் யாருக்கு என்ன இலாபம்.? இதற்கு ஒரே வழி, எல்லா துறையினருக்கும் தமிழ் அறிவு தருவது. அந்த அந்த துறையில் வல்லுனர்கள் தமிழில் கலைச் சொற்களை ஆக்கினால் சொல்ல வரும் விஷயம் தமிழில் எளிதில் விளங்கும். விஞ்ஞானிகளுக்கு தமிழ் அறிவு புகட்டுவது, தமிழ் பண்டிதர்களுக்கு விஞ்ஞானத்தைப் புரிய வைப்பதை விட எளிதில்லையா? இது புதிய யோசனையுமல்ல. வரலாற்றைப் புரட்டினால் பெஸ்கி என்ற வெளிநாட்டவர் கிறித்தவத்தைப் பரப்ப தமிழை முனைந்து கற்று, பின் வீரமாமுனிவர் என்று போற்றப்பட்டு சதுர் அகராதி, பரமார்த்தகுரு கதைகள் போன்றவற்றை உருவாக்கியதில் இந்த உண்மை பொதிந்திருக்கிறது.

6. தமிழ் பேசும் குடும்பங்களோ, நண்பர்களோ சந்தித்துப் பேசும் போது கூடிய வரை தமிழில் பேசலாம். தொலைக்காட்சிகளிலும், ஊடகங்களிலும் கொச்சைத்தமிழை கிண்டல் செய்யும் நாம், முழுதும் ஆங்கிலத்தில் பேசுவது என்ன நியாயம்? தொலைக்காட்சி தமிழைக் கண்டு பயப்படத் தேவையில்லை. இது ஒரு அலை, வேறு அலை விரைவில் இதை மாற்றும். அறுபது வருடங்களுக்கு முன் மணிப்பிரவாள நடை, பின் அக்ரஹார தமிழ், சென்னைத் தமிழ், சமீபத்தில் 'மொழி மாற்ற ஜுனூன் தமிழ் ( நான் சொல்லிட்டேன் உங்ககிட்ட அப்ப முன்னாடியே) எல்லாம் வந்து போகும். இவை தமிழுக்கு வேறு வேறு ஆடைகள் போல் சமயத்துக்கு தகுந்தாற் போல் மாறும். இவை தமிழின் அடையாளமாக மாறிவிடாது.

7. தமிழ் படித்த மக்களை இன்றைய ஊடகங்களுக்கு கொண்டு வர வேண்டும். திரை, தொலைக்காட்சி, இணையம் இவற்றில் அதிகம் இடம் பெறவேண்டும். ஓலைச்சுவடிகளை கறையானுக்கும், காலத்துக்கும், ஆடிப்பெருக்கில் வெள்ளத்துக்கும் தொலைத்ததுபோல் அரிய தமிழ் பொக்கிஷங்களை இன்னும் சில ஆண்டுகளுக்குள் இணையத்தில் கொண்டு வராவிட்டால் அவற்றை இழக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம். 'ப்ராஜக்ட் மதுரை' போன்ற முயற்சிகளுக்கு ஊக்கம் தரவேண்டும். புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் இதில் முன்னணியில் உள்ளனர்.

8. தமிழ் எழுத்து சீர்திருத்தம் (80 களுக்கு பிறகு ஒன்றும் செய்யப்படவில்லை), இணைய ஒருங்கிணைப்பு போன்றவற்றை அரசாங்கங்களோ, பொது அமைப்புகளோ மேற்கொள்ள வேண்டும். இவற்றுக்கு உருப்படியாக நிதி ஒதுக்கி சீரமைப்பது வருங்காலத்துக்கு நல்லது. இன்னமும் பழம்பெருமை மட்டும் பேசும் மாநாடுகளால் ஒரு பயனும் இல்லை.

9. தமிழை ஒரு மொழியாக பயில்விக்க முன்னுரிமை தர வேண்டும். நிலை முறைப்படி (stream based) தமிழை பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும். பெரும் பண்டிதராக விரும்புவோர்க்கு கடினமான இலக்கணம், சங்க காலப் பாடல்கள் கற்றுத்தரலாம். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு இவற்றைத் திணிக்கத் தேவையில்லை. அவனுக்கு பேச்சுத் தமிழும், எழுத்துத் தமிழும் நன்றாக வந்தால் போதுமானது. சிங்கப்பூர் அரசாங்கம் சமீபத்தில் இத்தகு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ளது. தமிழ் நாட்டில் தமிழை ஒரு மொழிப்பாடமாகக் கூட +2 மாணவர்கள் எடுத்துக்கொள்ளத் தயங்குவதற்குக் காரணம் தமிழில் எவ்வளவு நன்றாக எழுதினாலும் நூற்றுக்கு நூறு கிடைப்பதில்லை என்பதால் தான். இந்தக்குறையை அரசாங்கமும், தமிழ் ஆசிரியர்களும் தான் சரி செய்யவேண்டும்.

10. இறுதியாக, நம் குழந்தைகளுக்கு உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தமிழ் கற்றுத்தர வேண்டும். நமக்கு நேரமில்லை என்று நம் மொழியை நாம் அடுத்த தலைமுறைக்கு பரிச்சயம் செய்யத்தவறினால், மொழியோடு நம் கலாச்சாரம், சரித்திரம், நாட்டின் தொடர்பு எல்லாவற்றையும் துண்டிக்கும் பாவத்தை செய்தவர்களாவோம். தமிழை நாம் ஓரளவுக்கு பயிற்றுவித்தோமானால் தமிழின் இனிமை இவர்களை ஆட்கொண்டு மேலும் கற்க தூண்டும். இது நமது தலையாய கடமை.

தமிழ் நம் மொழி என்பதில் நாம் எல்லாரும் பெருமை கொள்ளலாம். நாமக்கல் கவிஞர் ' தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று பாடினார். என்னைப் பொருத்தவரை தமிழருக்கு தனி குணமோ, அடையாளமோ கிடையாது. தமிழ் மட்டும் தான் நமது அடையாளம். அதுவே நம்மை இணைக்கும் பாலம். சினிமாவோ, கிரிக்கெட்டோ, அரசியலோ அல்ல. தமிழை வளர்க்க வேண்டாம். வாழ விடுவோம். வாழ்க தமிழ்!

thanks-vikatan.com

இந்த மாதம் புதிய கல்வியாண்டு.

புலம்பெயர் தமிழர்கள் தமது பிள்ளைகளை எந்தக்கடினத்திற்கும் மத்தியில் தமிழ் படிக்க வைக்கவேண்டும். மொழி ஊடாக கலாச்சாரம், பண்பாடு தக்கவைக்கப்படவேண்டும்.

இணைப்புக்கு நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புலவர் இணைப்பிற்கு, வீட்டில் தமிழில் கதைப்பதால் பிள்ளைகள் வடிவாக கதைப்பார்கள், தமிழ் வகுப்புக்கும் போகிறவர்கள், வடிவா எழுதப் பழக்கினால் சாரி.

தலைப்பை பார்த்து எதோ எனக்காக ஆரம்பிக்க பட்டது போல் இருந்தது :icon_mrgreen: யாழ்களம் இல்லை என்றால் தமிழே எனக்கு இப்படி வந்து இருக்காது., :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் ஒன்று சாத்தியப்பட்டிருக்குமானால்....

தமிழைப்பற்றி கவலைப்பட்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

தமிழகத்தமிழும் ஆரோக்கியமாக இல்லை.

பாரதி சொன்னது போல்... "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற நிலையிலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இலத்தீன் , கிரேக்கம் , எபிரேயம் , சீனம் ,சமஸ்கிருதம் ,தமிழ் ஆகியன உலகில் தோன்றிய தலைசிறந்த

தொன்மையான மொழிகளாகும்.

இவற்றுள் இலத்தீன் , கிரேக்கம் ,எபிரேயம் ஆகியன ஏட்டளவில் மட்டுமே உள்ளன.

பேச்சளவில் இல்லை. சமஸ்கிருதம் ஏட்டளவில் இருந்தாலும் பேச்சளவில் குறைந்தளவினர் மட்டுமே உபயோகிக்கின்றனர்.இவற்றுள் சீன மொழியும் தமிழ் மொழியும் மட்டுமே பேச்சளவிலும் எழுத்தளவிலும் உள்ளன.

தமிழ்மொழியைத் தொடர்ந்து தக்க வைப்பது புலம்பெயர் தமிழர்களின் கைகளிலும் உள்ளது

10. இறுதியாக, நம் குழந்தைகளுக்கு உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் தமிழ் கற்றுத்தர வேண்டும். நமக்கு நேரமில்லை என்று நம் மொழியை நாம் அடுத்த தலைமுறைக்கு பரிச்சயம் செய்யத்தவறினால், மொழியோடு நம் கலாச்சாரம், சரித்திரம், நாட்டின் தொடர்பு எல்லாவற்றையும் துண்டிக்கும் பாவத்தை செய்தவர்களாவோம். தமிழை நாம் ஓரளவுக்கு பயிற்றுவித்தோமானால் தமிழின் இனிமை இவர்களை ஆட்கொண்டு மேலும் கற்க தூண்டும். இது நமது தலையாய கடமை.

தமிழ் நம் மொழி என்பதில் நாம் எல்லாரும் பெருமை கொள்ளலாம். நாமக்கல் கவிஞர் ' தமிழன் என்றோரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்று பாடினார். என்னைப் பொருத்தவரை தமிழருக்கு தனி குணமோ, அடையாளமோ கிடையாது. தமிழ் மட்டும் தான் நமது அடையாளம். அதுவே நம்மை இணைக்கும் பாலம். சினிமாவோ, கிரிக்கெட்டோ, அரசியலோ அல்ல. தமிழை வளர்க்க வேண்டாம். வாழ விடுவோம். வாழ்க தமிழ்!

முஸ்லீம்களும் யூதர்களும் எங்கிருந்தாலும் தமது சமய மொழியைக்கற்று விடுவார்கள். நமது பிள்ளைகளுக்கு அவர்களின் தாய் மொழியை கற்றுக்கொடுப்பதில் கஸ்டமாக உள்ளது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழைச் செத்த மொழியாக்கி விடாதீர்

தமிழ்மொழி, எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்னும் இரு வழக்குகளைக் கொண்ட ஒரு இரட்டை வழக்கு மொழி. பேச்சு மொழியின் தாக்கத்தை எழுத்து மொழியில் காணமுடிகின்றது. அது மட்டு மல்லாமல் இன்றைய உலகமயமாக்கல், தாராள மயமாக்கல் ஆகியவற்றின் காரணமாக எண்ணற்ற பொருள்கள் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்பொருள்களோடு மேலை நாட்டு மொழியும் இறக்குமதி செய்யப்பட்டு தமிழ் மொழியுடன் இரண்டறக் கலந்து தமிழ்மொழியின் அமைப்பிலும், பயன்பாட்டிலும் பல குழப்பங் களை ஏற்படுத்துகின்றன. ஊடகங்களின் மொழி பயன்பாட்டிலும் பல குழப்பங்கள் காணப்படுகின்றன. இக்காரணங்களால் இன்றைய தலைமுறையினர் எது சரியான தமிழ் என்பதைக் கண்டறிவதிலே தடுமாற்றம் கொள்கின்றார். அவர்களின் குழப்பங் களுக்குத் தீர்வு காணும் வழியாக பேராசிரியர். மா.நன்னன் அவர்கள் வரிசையாக உரைநடை நூல்களை எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் பதினோராம் நூலாக வெளிவந்துள்ள நூல் ‘செந்தமிழைச் செத்தமொழி யாக்கிவிடாதீர்.’ இந்நூலுக்கு இப்பெயர் சூட்டப்பட்டதன் காரணமாக இவ்வாறு கூறுகிறார்:

nannan_400.jpg“தென்மொழி என்பது தமிழையும் வடமொழி என்பது சமஸ்கிருதத்தையும் குறிக்கும். இவ்விரு மொழிகளும் செம்மொழிகளே ஆயினும் வட மொழியாளர் தம் மொழியைத் செத்தமொழி ஆக்கினர். அதுபோல் தமிழர்களாகிய நாமும் நம் செம்மொழியாம் செந்தமிழைச் சாக்காட்டு மொழி யாக ஆக்குகிறோமோ என்னும் அய்யத்தாலும் இயல் பாகவே செம்மை வாய்ந்த செந்தமிழாம் செம் மொழியை வடமொழி போல் செத்தமொழியாக்கி விடக்கூடாதே என்னும் எண்ணத்தாலும், நோக்கத் தாலும், அவாவினாலுமே இந்நூலுக்கு இப்பெயர் சூட்டப்படுகிறது” என விவரிக்கிறார்.

ஆசிரியர் மேலும் ‘பலகணி யுட்பட்டவற்றின் கதவுகள் எல்லாம் அடைத்துக் கிடக்கும் யாரும் குடியிருக்காத வீடு போலன்றி, நிறைய மக்கள் வாழும் நம் வீடு பல ஆண்டுகளாகக் கூட்டிப் பெருக்கி ஓடு மாற்றி ஒட்டடையடித்துப் பாதுகாக்கப்படாதது போல் கிடக்கிறது. அதைச் செப்பனிட்டுப் புதுக்கித் துலக்குவதே தமிழைத் தமிழாக்கும் முயற்சி என்கிறார். ஆசிரியரின் இந்நோக்கம் நூல் முழுவதும் வெளிப்பட்டுள்ளது.

இந்நூல் உள்ளுரை, முகவுரை, முன்னுரை, கிளவியாக்கம், தொடராக்கம், முதற்குறிப்பு விளக்கக் குறிப்புகள் என்னும் ஏழு பிரிவுகளாக அமைந்துள்ளது.

உள்ளுரையில் இயல்பிரிப்புத் தரப்பட்டுள்ளது. முகவுரையில் நூலின் இன்றியமையாமை பற்றி விளக்கப்பட்டுள்ளது. முன்னுரையில் ஆசிரியரின் உரைநடை நூல்கள் பற்றிய குறிப்புகள் தரப்பட்டு உள்ளன. கிளவியாக்கம் தனிமொழியியல், தொடர் மொழியியல் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 233 சொற்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தொடராக்கம், தொடரமைப்பியல், சொல்லாட்சி யியல், மரபியல், இடவியல், மூவிடவியல், இடையியல், திணையியல், பாலியல், வேற்றுமையியல், புணரியல், சுருக்கவியல், நோயியல் என்னும் பன்னிரு இயல் களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முந்நூற்று எழுபத்து ஒன்று (371) துளக்கங்கள் துலக்கப்பட்டு உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்குறிப்பு விளக்கம் என்பது நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சுருக்கக் குறியீடுகளின் விரிவைத் தருகின்றது. குறிப்புகள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

சொற்கள் தமக்குரிய பொருண்மையிலிருந்து மாறி வேறு பொருண்மையைக் கொண்டு ஆளப் படுவதாக ஆசிரியர் கூறுகிறார். கோவிந்தா, அரோகரா, காவடி, பிரகஃச்பதி என்பன போன்ற பற்பல சொற்களும் பொருண்மை மாற்றம் பெற்று உள்ளன. அரசியல் என்னும் சொல்லும் மோசடி, பித்தலாட்டம், ஏமாற்று, பொய் போன்ற பொருண்மை கொண்டதாகவே அரசியல் தலைவர்களால் ஆளப் படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இணைச் சொற்களும் விளக்கப்பட்டுள்ளன. அவை ஒரே பொருண்மை உடையன போல் தோன்றி னாலும் வெவ்வேறு பொருண்மைகளைத் தருவதாகக் கூறுகிறார். எடுத்துக்காட்டாக, இடுக்கு என்பது விரலிடுக்குப் போல் இரு பொருள்களுக்கிடையில் இருப்பது. துளை என்பது வடையின் துளைபோல் ஒரே பொருளில் இருப்பது. விரல்கள், பற்கள் போன்ற வற்றுக்கிடையில் உள்ளதை இண்டு, இடுக்கு எனவும் குடம், சல்லடை, மாம்பழம் போன்றவற்றில் உள்ளதை ஓட்டை, துளை, பொத்தல் எனவும் விளக்குகிறார், மா.நன்னன்.

இதைப் போல ஊட்டு, மூட்டு, உடைதல்; சிதறல்; தெறித்தல், அழுக்கு; தூசு, காதல்; காமுறுதல், கிளம்பல்; புறப்படல், குண்டு; குழி, கொப்பளம்; கட்டி, சிக்கு; சிக்கல், செம்மாப்பு; இறுமாப்பு, தகவல்; செய்தி, பள்ளம்; குழி, பொய்; புளுகு; புரட்டு போன்ற இணைச் சொற்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

கண்ணாடி உடைந்து தெறிக்காது. பானை உடைந்து அதிலிருந்த நீர் தெறிக்கும். நீர் சிதறாது கண்ணாடி உடைந்து சிதறும்.

காதல் என்னும் சொல் எவ்வாறு உருவானது என்பதை இவ்வாறு விளக்குகின்றார். காமுறுதல் என்னும் சொல்லின் முதல்நிலை அஃதாவது பகுதி ‘கா’ அதன் இறுதி நிலை அஃதாவது விகுதி ‘தல்’ முதல் நிலையும் இறுதி நிலையும் இடையன் விடுத்துக் கூடுவதே காதல்.

கிளம்பல், புறப்படல் என்னும் சொற்களிரண்டும் பொது நோக்கில் ஒரே பொருளுடையனவாயினும் சிறப்பு நோக்கில் அவை தம்மில் பொருள் வேறுபாடுடையன என்கிறார்.

குண்டு என்பது ஒரு வயல் அல்லது ஒரு பகுதி நிலப்பரப்பு. அதன் அருகில் உள்ள பிறவற்றைவிட ஆழமாக இருப்பதைக் குறிக்கும். குழி என்பது அடிக்கணக்கில் உள்ள சின்னச்சிறு பள்ளத்தைக் குறிப்பதாகக் கூறுகிறார்.

கொப்புளம் என்பது முகிழ்த்துத் தோன்றும் கடி போன்றதே. ஆயினும் அது போன்று கெட்டியாய் இராமல் மெதுவாயும் அழுந்தக் கூடியதாயும், நீர்மத்தை மிகுதியாகக் கொண்டதாயும், சிறு ஊசியால் மெல்லக் குத்தினாலும் சிதையக் கூடிய தாகவும் இருக்கும் என்கிறார்.

சிக்கு என்பதற்கு அகப்படு, மாட்டிக்கொள், சிக்கல், அழுக்கு, நாற்றம் போன்ற பல பொருள்கள் உள்ளன. தலை மயிரில் அழுக்கினால் ஏற்படும் பிணைப்பு சிக்கல் எனப்படுகின்றது.

தகவல், செய்தி என்னும் இவ்விரு தனிமொழி களும் வெவ்வேறு பொருள்தரும் சொற்கள். இதைத் துலக்குமிடத்து தகவல் என்பது அதனைப் பெற்றுச் செயற்பட வேண்டியது; செய்தி என்பது அதனைப் பெற்றுக் கொள்வது அல்லது அறிந்துகொள்வது அல்லது கேட்டுக் கொள்வது மட்டுமே எனவும் கேட்டுக் கொள்பவர் செயற்படவும் வாய்ப்பு நேரலாம். அஃது அவரோடு தொடர்புடைய செய்தியாக இருந்தால் மட்டுமே எனத் துலக்கியுள்ளார்.

குழி தோண்டப்படுவது; ஒரு நோக்கத்தோடு அமைக்கப்படுவது; சிறியது. பள்ளம் தோண்டப் படாமல் இயற்கையாக அமைந்திருப்பது; பெரியது.

இல்லாததைச் சொல்வது பொய் என்றும், இட்டுக்கட்டிச் சொல்வதை புளுகு என்றும் ஒன்றை மேல் கீழாகப் புரட்டிப் போட்டு மாற்றிக் காட்டுவது போன்று பேசுவதைப் புரட்டு என்றும் துலக்கு கிறார்.

தொகுக்கப்படுவதே தொகை என்றாற்போல் துவைத்து உருவாக்கப்படுவது ஆதலின் அது துவையல் ஆகும் என்கிறார்.

இணைச் சொற்களுக்கு விளக்கம் அளிப்ப தோடு இல்லாமல் ஆங்கிலச் சொற்களுக்கு இணை யான தமிழ்ச் சொற்களும் ஆக்கம் செய்யப்பட்டு உள்ளன. காட்டாக, எ.சி. என்னும் சொல்லுக்கு இணையாகக் குளிர்பதனம் செய்தல், குளிரி, குளிர்ப்பி, தட்பி என்றும் கேமரா, கேமராமென், இசுடூடியோ என்னும் சொற்களுக்கு இணையாக படவி, படவர், பப்பிடம் என்னும் சொற்களைக் கொடுத்துள்ளார். இவை பொது மக்களைச் சென்று அடையுமா? என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சொற்களைச் சுருக்கல், சுருங்கச் சொல்லல் என்பது அழகைச் சேர்ந்தது. சொற்களைச் சிதைத்தல் (கிழித்தல்) அஞ்சி அகற்றத்தக்கதே. அம்மான் சேய் அம்மாஞ்சி என்னலும், தஞ்சாவூரைத் தஞ்சை என்னலும் பேச்சு வார்த்தை நடத்தினார் என்பதைப் பேசினார் என்பதும் சுருக்கங்களாகும். முண்டகக் கண்ணியை முண்டக்கண் என்பதும், எழுந்தருளல் என்பதை ஏளல் என்பதும், இருக்கிறார் என்பதைக் கீறார் என்பதும் சிதறல்கள் ஆகும் என்பது ஆசிரியரின் கருத்து.

சொற்கள் எவ்வாறு மருவி வழங்குகின்றன என்பதும் எடுத்துக்காட்டுகளின் வழியாக விளக்கப் பட்டுள்ளன. தாவாங்கொட்டை என்பது கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி. தாழ்வாய்க் கொட்டை, தாழ்வாங்கொட்டை என மருவியது. பின்னர் அதுவே தாவாங்கொட்டை என மருவி வழங்குகிறது. இல் முன் என்பது முன்றில் என்றானாற் போல் வாய்தாழ் என்பதே தாழ்வாய் என்றாயிற்று. எனவே வாயின் தாழே (கீழே) கொட்டை போல் கெட்டியாக உள்ள உறுப்பு வாய்த் தாழ் கொட்டை. அது தான் தாழ்வாய்க் கொட்டையாகித் தாவரங் கொட்டையாக மாறியுள்ளது.

அழைத்துவருதல்; கூட்டி வருதல்; கொண்டு வருதல்; எடுத்துவருதல் என்னும் இச்சொற்களை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை,

அ. அவர் தம் மனைவியை அழைத்து வந்தார்

ஆ. அவர் தம் நாயைக் கூட்டி வந்தார்

இ. அவர் தம் பணப்பையைக் கொண்டு வந்தார்

ஈ. அவர் தம் குடையை எடுத்து வந்தார்

என்று ஐயத்திற்கு இடமின்றி எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்காட்டப்பட்டுள்ளது, போற்றத்தக்கது.

தொடர்களைப் பொருள் மயக்கமின்றி எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது பல எடுத்துக் காட்டுகள் வழி விளக்கப்பட்டுள்ளது. சான்றாக, இறைவன் தேவையில்லை என்னும் தொடரில் இறைவன் என்னும் எழுவாய் தேவையற்றவன் என்னும் பயனிலையைக் கொண்டு முடிந்திருப் பதால் இறைவன் தேவையில்லாதவன் என்றே அதுபொருள் தருகிறது. இறைவன் எனப்படுபவர் மனைவி, உணவு, ஊர்தி, உடை, அணிகலன், மக்கள், வாழ்விடம் போன்ற எத்தேவையும் இல்லாதவர் என்பது தான் அதன் பொருளாயிருக்க முடியும். எனவே அது சரியான தொடரே என்று விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

பழமொழிகள், தொடர்கள் போன்றவையும் இந்நூலில் துலக்கப் பெற்றுள்ளன. எத்திலே பிள்ளை பெற்று இரவலில் தாலாட்டிக் கொள்ளல் என்பதை, சூல் சுமந்து வருந்தி ஈனாமல் எவளோ ஒருத்தி சுமந்து உழன்று பெற்ற பிள்ளையை ஏமாற்றிப் பெற்றுக் கொள்வது. அவ்வாறு சிறிதும் வருந்தாது பெற்ற பிள்ளையையும் தாலாட்டிச் சீராட்டி வளர்க்கும் கடமையையும் தான் செய்யாது அவற்றை இரவல் செவிலியர் மூலமாகச் செய்வித்துக் கொள்வது தான். இவ்வாறு வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஏமாற்றி வாழ்வோரை நாம் இன்றும் காண முடிகிறதன்றோ?

எள் எண்ணெய்க்குக் காய்கிறது; எலிப் புழுக்கை என்னத்திற்குக் காய்கிறது? என்ற பழமொழியை எண்ணெய் எடுப்பதற்காக எள் உலர்கிறது. அந்த எள்ளோடு சேர்ந்து உலரும் எலிப்புழுக்கை எதற்காக அப்படி உலர்கிறது? ஏதோ ஒரு பயன்பெறவோ வேறொரு காரணத்திற்காகவோ பாடுபடுகிறான் ஒருவன்; அவனோடு சேர்ந்து உழலும் இவன் எப் பயனும் பெறானாதலின் ஏன் அவனுடன் சேர்ந்து உழலுகிறான் என்பதே அப்பழமொழியின் பொருள்.

கொக்குக்கு ஒன்றே (ஒண்ணே) மதி என்பதை “ஓடு மீன் ஓட உறு மீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு.” அதாவது கொக்கு வேறு எதையும் பொருட்படுத்தாமலும், அப்படியிருந்து விடாமல் உறுமீனையும் பார்க்க வேண்டும். அதாவது அண்டை அயலையும் அவ்வப்போது நோக்க வேண்டும். கொக்கைப் போல் ஏதேனும் ஒன்றிலேயே நம் அறிவை ஈடுபடுத்திக் கொண்டிருந்து விடக் கூடாது என்பது இதன் கருத்தாகும் என்கிறார்.

“பணம் பத்தும் செய்யும்; பதினொன்றும் செய்யும்” என்ற தொடர் வழக்கத்தில் உள்ளது. ஆனால் அது பொருத்தமற்றது என்று ஆசிரியர் கருதுகின்றார். ஏனெனில், பத்தும் என்பதிலுள்ள உம்மை, முற்றும்மை. செய்ய வேண்டியதே பத்து தான் என்பதை அவ்வும்மை உணர்த்துவதால் பதினொன்றாக எதுவும் இல்லாதபோது அதை எப்படி இது செய்ய முடியும். அதுவே பணம் பத்து செய்யும் என்று உம்மையின்றி இருந்தால் அங்குப் பதினொன்றும் செய்யும் என்பதற்கு இடமுண்டு. முற்றும்மை ஓரிரு இடங்களில் எச்ச உம்மை யாகவும் வர நேரலாம் என்னும் கருத்துப்படி இதை அமைக்க முடியாது. பத்தும் செய்யும் என்பது சிலவற்றைச் செய்யாது எனப் பொருள் கொண்டு எட்டைச் செய்யும் என்றும் பொருள் கொள்ள வாய்ப்புக் கிட்டலாமேயன்றிப் பதினொன்றைச் செய்யும் எனப் பொருள் கொள்ள வாய்ப்பே இல்லை என்பது இந்நூலில் விளக்கப் பெற்றுள்ளது.

“மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல” இப்பழமொழி பொருத்தமற்றது என்கிறார். “ஓட்டைப் படகை நம்பி” என்றால் அது பொருத்த மான உவமையாகலாம். படகில் ஓட்டை இருப்பது தெரியாமல் நீரில் பயணம் செய்தால் கரையேற முடியாது என்பது பொருந்தும். ஆனால் மண் குதிரையின் மேல் ஏறி அமர்ந்தால் அது ஆற்றுக்கு எப்படிப் போகும்? அது அய்யனார், வீரனார் கோயில் அருகில் தானே நிற்கும். அதை ஆற்றுக்குத் தூக்கிக் கொண்டு போய் நீரில் இறக்கி அதன் பிறகு அதன் மேல் ஏறிப் பயணம் செய்வோர் எவரேனும் இருப்பராயின் அவருக்கு மட்டுமே இது பொருந்தும்; உவமையாகக் கூடும் என்பது ஆசிரியர் கருத்து.

இதைப் போன்று தொடரமைப்பு இன்றைய தலைமுறையினரால் எவ்வாறு பயன்படுத்தப்படு கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டுகள் வழி விளக்கம் கொடுத்துள்ளார்.

அ. பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது இந்தப் புத்தாண்டு

ஆ. பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டின் நிறைவாக மலர்கிறது இப்புத்தாண்டு.

என்னும் இரண்டு தொடர்களில் பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டின் நிறைவாக மலர்கிறது இப்புத்தாண்டு என்பதே சரியான பயன்பாடு. ஏனென்றால், அண்ணா பிறந்த நூற்றாண்டில் ஏற்கெனவே தொண்ணூற்றொன்பது புத்தாண்டுகள் மலர்ந்துவிட்ட காரணத்தினால் பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது இந்தப் புத்தாண்டு என்னும் வாக்கியம் தவறானது எனக் கருதப்படுகிறது.

இவ்வாறாக இந்நூலில், தமிழ் மொழி செத்த மொழி ஆகாமல் செந்தமிழ் மொழியாக, செம்மொழியாக, செம்மையாக வாழவும் வளரவும் பல அரிய விளக்கங்கள் பேராசிரியர். நன்னன் அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியதாகும்.

வீ.ரேணுகா தேவி

http://www.eelamview.com/2011/10/01/do-no-kill-tamil-language/

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் ஒன்று சாத்தியப்பட்டிருக்குமானால்....

தமிழைப்பற்றி கவலைப்பட்டிருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

தமிழகத்தமிழும் ஆரோக்கியமாக இல்லை.

பாரதி சொன்னது போல்... "தமிழ் இனி மெல்லச் சாகும்" என்ற நிலையிலுள்ளது.

100 % ம் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.