Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களுக்கு ஜனநாயக வழிகளில் உதவிகள் செய்பவர் கலைஞர்: பா.நடேசன்

Featured Replies

குமுதம் இவ்வார இதழிற்கு, நடேசன் அண்ணா வழங்கிய பேட்டி

ஈழத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு எவ்விதமான நெருக்கடியையும் கொடுக்கமாட்டோம்" என்று கலைஞர் அறிவித்த நேரம் மீண்டும் தமிழர்கள் மீதான குண்டு வீச்சுகளை தீவிரப்படுத்தியுள்ளது இலங்கை இராணுவம். உண்மை நிலவரம் அறிய புலிகளின் செய்தித் தொடர்பாளர் நடேசனைத் தொடர்பு கொண்டோம்.

இலங்கை ராணுவம் முன்னேறி வரும் நிலையிலும் விடுதலைப்புலிகள் தரப்பில் முற்று முழுதாக இன்னும் யுத்தத்தில் குதிக்கவில்லையென்று சொல்லப்படுகிறது. இந்தப் பின்வாங்கலுக்கு என்ன காரணம்?

"எமது மக்களைப் பாதுகாப்பதற்காக நாம் எவ்வாறான தியாகங்களையும் செய்வதற்குத் தயாராக இருக்கின்றோம். எமது இயக்கம் ஓர் விடுதலை இயக்கம். அரச படைகளுக்கு எதிராகப் போராடுகின்றோம். காலநேரம் வரும்போது சரியான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.''

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்ற இந்தியாவின் கோரிக்கைக்குப் பிறகு, இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சு குறைந்திருக்கிறதா?

"மாறாக நேற்றும் இன்றும்கூட கிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள குடிமனைகள் மீது சரமாரியான பீரங்கித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏராளமான வீடுகள் அழிந்து நாசமாகியுள்ளன. ஒரு குடும்பத்தில் தந்தையும் தனயனும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.''

இந்த சூழலில் இந்தியாவிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?''

"இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தி, எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்கி, எம்மை அங்கீகரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.''

ஈழப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் இருந்ததைப் போன்ற ஓர் ஆதரவு நிலை இப்பொழுது மீண்டும் தமிழகத்தில் உருவாகியுள்ளதா?

"தமிழீழ மக்களும் தமிழக மக்களும் ஒரே குடும்பத்தவர்கள். தொப்புள்கொடி உறவுகள் போன்றவர்கள். எமக்கொன்றென்றால் தமிழகம் கொதித்தெழும். இன உணர்வு தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகின்றது. இன்று ஈழத்தில் சிறீலங்காவின் அரசபடைகள் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப்போரை மேற்கொள்ளும்போது அதற்கு எதிராக தமிழக மக்கள் கொதித்தெழுந்துள்ளார்கள். இதுவே யதார்த்தம்.''

தமிழகத்தில் உருவாகியுள்ள இந்த ஆதரவு நிலை ஈழப்போராட்டத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?

"தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முழு இந்திய மக்களும் அரசியல் தலைமைகளும் புரிந்துகொண்டு எமக்கு ஆதரவாக வருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.''

வைகோ, அமீர், சீமான் ஆகியோர் உங்களை ஆதரித்ததற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் களே. ஈழ ஆதரவு நிலைப்பாடு தமிழக கூட்டணி அரசியலில் மாற்றங்களை உருவாக்கும் போலிருக்கிறதே?

"தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே அணியின் கீழ் அணி திரள்வதையே நாம் விரும்புகின்றோம். தமிழக உள்ளூர் அரசியலுக்குள் தலையிடாமல் இருப்பதே எமது கொள்கையாகும். தமிழர்கள் என்ற ரீதியில் எல்லோரையும் அரவணைத்துச் செல்வதையே நாம் விரும்புகின்றோம்.''

மூத்த தமிழ் அரசியல்வாதியாகவும் தமிழக முதல்வராகவும் ஈழப்போராட்டத்தில் கலைஞரின் செயல்பாடுகள் குறித்த உங்கள் அபிப்ராயம் என்ன?

"கலைஞர் எமக்கு தந்தை போன்றவர். இன உணர்வு மிக்கவர். தமிழர்கள் எல்லோரும் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர். ஈழத்தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் செய்துவருகிறார்.''

நீங்கள் ஜெயலலிதாவை கொலை செய்யக் குறி வைத்திருப்பதாகவும், அதனால்தான் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறாரே?

"இவ்வாறான கருத்துகளும் பிரசாரங்களும் எமக்கெதிரான சக்திகளால், தமிழக அரசியல் தலைமைகளை எமக்கெதிராக திருப்பிவிடும் நோக்கில் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். இவ்வாறான புனைகதைகளை கேட்கும்பொழுது எமக்கு மிகவும் வேதனையாகவும், துன்பமாகவும் இருக்கின்றது. இவ்வாறான புனைகதைகளை உருவாக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்பினரை மிகவும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.''.

-தளவாய் சுந்தரம்

Thanks to Kumudam.com

ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்ட போதெல்லாம் என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனை பணிகளையும் ஜனநாயக வழியில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி செய்து வருகின்றார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

நடேசரின் குமுத பேட்டியே, எம்மில் சிலருக்கு இருக்கும் கலைஞர் மீதான தப்பான அப்பிராங்களை போக்கவே!!

கலைஞர் ஆட்சிக்கு வந்த பின் என்ன என்னவெல்லாம் செய்தார், என்பது தெரியவேண்டியவர்களுக்கு நிச்சயம் தெரியும்! இண்றைய தமிழக எழுச்சியே கலைஞரின் நகர்த்தல்கள்தான்!! அதற்குள் வைகோவின் பிரிவினைப் பேச்சும், ஜெயலலிதாவின் பல்ரியும் சேர்ந்து, கலைஞரை இக்கட்டான நிலைக்கு தள்ளி விட்டது!!

ஆனால் இன்று திருமாவின் எழுச்சியே, கலைஞரின் பின்னணி என்று உறுதியாக சிலர் கூறுகிறார்கள்.

இக்காலகட்டத்தில் மூத்த தமிழ் தலைவனுக்கு, பழையனவற்றை மறந்து கைகொடுப்பதே ஏனைய தமிழ்த் தலைவர்களின் கடப்பாடாகும்! அது நிச்சயம் பல மாறுதல்களை இந்தியா மட்டத்தில் ஏற்படுத்தும்!

நெல்லையன் கலைஞரின் காய் நகர்த்தல்கள்!!!!!!

ஐயோ புல்லரிக்குது.

பித்துப்பிடித்த வைகோ இதெல்லாம் விளங்காம பிரிவினை பேசி கலைஞரை நோகடிக்கிறார். ராமதாஸ் வேறை நோகடிக்கிறார். இது தாங்காம கலைஞர் பதவி விலகிற அளவிற்குச் சென்றுவிட்டார்.

நல்ல காலம் அமைச்சர்களின் அறிவுரையால் கலைஞர் தனது முடிவை மாற்றிவிட்டார். இனிப்பாருங்கள் கலைஞரின் காய்நகர்த்தல்களை மத்திய அரசு ஈழத்தமிழர்களின் நலனுக்காக பாடுபடவைக்கப் போகிறது.

மின்னல் அண்ணை கொஞ்சம் விட்டுப் பிடித்தால் என்ன? :lol:

கடவுள் வரம் குடுத்தாலும் பூசாரி விடமாட்டார் எண்ட கதையாக இருக்கு புலம்பெயர்ந்த குஞ்சுகளில் விமர்சனங்கள்.

உங்களுக்கு பொழுது போகேல்லை எண்டா சொல்லுங்கோ நாங்கள் தேமேபரிக் குழாயளுக்கு யாழ்களத்தில மாறி மாறி பெயின்ர் அடிப்பம். :D எங்கடை வேல்ஸ் பூவிறிஸ் ஓட சேர்ந்து.

அண்ணோய் மின்னலு....

வைகோவோ, ராமதாஸ் ஐயாவோ இல்லை நெடுமாறன் ஐயாவோ ஈழத்தமிழனுக்கு செய்ததை யாரும் மறுக்கவுமில்லை, மறைக்கப்பட முடியாததும்!

என்னத்தை சாதிக்க முடிந்தது? வைகோ வருடக்கணக்காக சிறையிருந்தார், ஏதும் நடந்ததா? ... இப்போதல்ல என்றும், யாழ் இடப்பெயர்ச்சியிலும் வைகோவின் குரல் ஓங்கித்தான் ஒலித்தது!!!

இங்கு வைகோ எமக்காக அர்பணித்தை கொச்சைப்படுத்தவில்லை! தலைமை பதவி காத்திருக்க வன்னி வந்து தலைவருக்கு தோள் கொடுத்தவர்! கொலைப்பட்டம் சாட்டப்பட்டு துரத்தப்பட்டவர்! எமக்காக பல காலங்கள் சிறையிலிருந்தவர்!! ...... சிலவைகள் எழுத முடியாதவைகள் ....

ஆனால் இன்றைய தமிழக எழுச்சி யாரால்?? வைகோவின் குரலும் கேட்டது, ஜெயலலிதாவின் குரலும் கேட்டது, ..... இறுதியாக கலைஜரின் குரலுடன் தான் தமிழகமே கிழர்ந்தது!!!

இது கலைஞரின் குரலுக்கல்ல ..... ஓர் அதிகாரத்தில் இருப்பவரின் குரலுக்காக!!

பழையவைகளை கிண்ட வேண்டாம்!! யார்தான் பிழை விடவில்லை???? இல்லை பழையவைகள் மறக்கப்படுவதற்கல்ல எனில் இன்று ததேகூ கூட இருக்க மாட்டாது.

இம்முறை கலைஞரின் எமக்கான குரல்கள் நிஜமானவை!

அதற்காக கலைஞர் பதவி விலகி, எமக்காக என்னத்தை சாதிக்க முடியும்?

இது கலைஞரின் இறுதிக்காலம்! நிச்சயம் எமக்காக உறுதியான நடவடிக்கைகள வரிடமிருந்து வரும்! ... என்ற நம்பிக்கையுடன் ....

  • கருத்துக்கள உறவுகள்

:lol: கலைஞ்ஞர் தீவிரமாக எமக்கு ஆதரவான நிலையை எடுக்காதபோதும் கூட, அவரது ஆட்சியில்தான் தமிழகத்தில் நீறுபூத்த நெருப்பாக ஈழத்தமிழருக்கு இருந்துவந்த ஆதரவு வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. நேரடியாக கலைஞ்ஞர் இதைச் செய்யாவிட்டாலும் பல இடங்களில் கண்டும் காணாதது போல இந்த உணர்வெழுச்சிகளை பொங்கி வழிய அனுமதி கொடுத்திருக்கிறார். வைக்கோ, சீமான், அமீர், கண்ணப்பன் போன்றோர் கைது செய்யப்பட்ட போதும்கூட அவர்கள் அனைவரும் இன்று வெளியே வந்திருக்கிறார்கள்.

நாங்கள் ஒன்றைக் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று கலைஞ்ஞர் இருக்குமிடத்தில் ஜெயலலிதாவோ அல்லது ஒரு காங்கிரஸ்காரனோ இருந்திருந்தால் இந்தக் கைதுகளுக்கு என்ன நடந்திருக்கும் என்பதும், இன்னும் எத்தனை பேர் கைது செய்யப்பட்டும் ஒட்டுமொத்தப் போராட்டங்களுமே இந்திய ஒருமைப்பாடு என்ற போர்வைக்குள் அடங்கி, அழிந்து போயிருக்குமென்பதை.

கலைஞ்ஞர் அடிமட்டத்தில் தமிழீழப் போரட்டத்துக்கு எதிரானவர் அல்ல என்பதை இன்று அனைவருமே ஒத்துக்கொள்கிறார்கள். தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள அரசியல் அழுத்தங்களால் அவர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருந்திருக்கிறது. ஒருமுறை ஏற்கனவே அவரது ஆட்சி போலிக் குற்றச்சாடில் மத்தியில் இருந்தவர்களாலும், ஜெயலலிதாவாலும் கலைக்கப்பட்டுள்ளது. இது இன்னொருமுறை நடந்தால் கலைஞ்ஞரை விட அதிகம் பாதிக்கப்படப்போவது நாங்களே !

இன்றைய எமது தேவை தமிழகத்தில் ஆட்ச்சியில் இருக்க வேண்டியது கலைஞ்ஞரா அல்லது ஜெயலலிதாவா என்பதை தெரிவுசெய்து கொண்டு எமது விமர்சனங்களை முன்வைப்பதே !

அனைத்து தமிழத்தலைவர்களையும் இணைத்து வெற்றி கொள்வதே விடுதலையின் இறுதிக்கட்டம், அந்த கட்டத்திற்கு நாங்கள் இப்போ வந்து விட்டோம்.அதனால் தான் திரு நடேசன் அவர்கள் ஒருவரையும் குறை சொல்லாமல் கவனமாக நேர்காணல் வழங்கி உள்ளார்.

தமிழகத்தில் இருந்து விடுதலையை திட்டுபவர்களைக்கூட தமிழீழம் இதுவரை வாய் திறந்து எந்த கருத்தையும் சொன்னதில்லை.

மின்னல் அண்ணை கொஞ்சம் விட்டுப் பிடித்தால் என்ன? :lol:

உங்கள் கருத்தே எனது நிலைப்பாடும்!

தற்போது ராமதாஸ், வைகோ போன்ற தமிழுணர்வு கொண்ட தலைவர்கள் கலைஞருடன் இணைந்து செயற்பட்டு கலைஞரின் கையை மேலும் பலப்படுத்தினால் ஈழத்தமிழர் பிரச்சினையில் உறுதியான சில நடவடிக்கைகளை எடுக்க கலைஞருக்கு ஏதுவாக இருக்கும்!

மேலே கருத்துக்களை எழுதியுள்ள அனைவருக்குமான பதில்

ஈழஆதரவு சக்திகளின் தொடர்போராட்டங்கள் பெரியளவில் தாக்கங்களை ஏற்படுத்தவில்லைத்தான். ஆனால், இவற்றின் தொடர்ச்சியாக பொதுவுடமைக் கட்சிகளின் உண்ணாநிலைப் போராட்டமே தமிழக அரசியல் தளத்தில்(கலைஞர் உட்பட) ஈழத்தமிழர் ஆதரவு நிலையை ஏற்படுத்துவதற்கான திருப்புமுனையை ஏற்படுத்தியது. குறித்த உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்குபற்றுவதாக உறுதியளித்த ஜெயலலிதா அங்குவராதபோதும் உண்ணாநிலைப் போராட்டத்தின் வெற்றி கண்டோ அல்லது வேறு காரணத்தினாலோ ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கையை ஜெயலிதாவும் வெளியிட அதன்பின்னர்தான் விழிப்பு ஏற்பட்டு மாங்கொல்லை கூட்டம், அனைத்துக் கட்சிக்கூட்டமென அறிவிப்புக்கள் வந்தன. இந்த நிகழ்வுகள்தான் திரையுலகப் போராட்டம், மனிதச் சங்கிலியென எழுச்சியைப் பெருதாக்க உதவியது. ஈழஆதரவு சக்திகள் மற்றும் பொதுவுடமைக் கட்சிகளின் போராட்டத்தால் எழுந்த எழுச்சியை கலைஞர் தனது செயற்பாட்டின் மூலம் பல்மடங்கு பெருக வைத்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் எழுச்சிக்கே அவர்தான் காரணம் அதனைச் சீர்குலைக்க வைகோ செயற்பட்டார் என்பதுவிதமான நெல்லையனின் பதிவே என்னை அப்படி எழுத வைத்துவிட்டது.

நெடுமாறன் ஐயா ஆனந்த விகடன் ஏட்டிற்கு அளித்துள்ள நேர்காணல்: கலைஞரைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். படித்துப் பயன்பெறுக...!

உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி: பழ.நெடுமாறன்

[சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 05:33 மு.ப ஈழம்] [க.நித்தியா]

உலகத் தமிழர்களை மீண்டும் ஒருமுறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் (12.11.08) வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

''முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் முடிவு எடுக்கப்பட்டது. இப்போதோ, அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொடுத்த வாக்குறுதிகள் திருப்திகரமாக இருந்தன என்கிறார் கருணாநிதி. உங்களுக்கும் திருப்தியா?''

''இது தனிமனிதர்களின் திருப்தி சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. ஓர் இனம் நிம்மதியாக ஈழத்தில் வாழ வழி பிறந்ததா என்பதுதான் முக்கியம்.

அன்று அனைத்து கட்சிக்கூட்டத்தில் பேசிய அனைவரும், இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும், இந்தியா அந்த நாட்டுக்கு எந்தவகையிலும் இராணுவ உதவிகள் வழங்கக்கூடாது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகளை வழங்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். அதை முதலமைச்சரும் ஏற்றுக்கொண்டார். அதையே தீர்மானமாகவும் கொண்டு வந்தார். 15 நாட்களுக்குள் இதைச் செய்யவில்லையானால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று அனைவர் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானம், அதன் நோக்கத்தை நிறைவேற்றி இருந்தால், வரலாற்றில் என்றென்றும் பேசப்பட்டிருக்கும்.

ஏனென்றால், கடந்த 40 ஆண்டு காலத்தில் ஈழப் பிரச்னை தொடர்பாக எத்தனையோ போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்-கள், அனைத்து கட்சிக்கூட்டங்கள், டெல்லி சந்திப்புக்கள் நடந்துள்ளன. ஆனால் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக பதவி விலக செய்வார்கள் என்று எடுக்கப்பட்ட முடிவு எடுப்பது இதுதான் முதல் முறை.

அப்படிச் செய்திருந்தால், மத்திய அரசாங்கம் கவிழ்ந்து போகும். அந்த முடிவைக் கேட்டு உலகமெங்கும் வாழக்கூடிய தமிழர்கள் பெரும் நம்பிக்கைகொண்டார்கள். டெல்லியும் அதிர்ச்சி அடைந்தது. கொழும்பில் இருக்கும் சிங்களக் கட்சிகள் அச்சப்பட்டன. ஆனால், அனைத்தும் வீணானதுதான் பிரணாப் முகர்ஜி சந்திப்பால் கண்ட பலன்!''

''கருணாநிதியின் பதவி விலகல் அறிவிப்பு, போராட்டங்களால்தானே சிறிலங்கா அரசின் அரசின் தூதுக்குழு டெல்லி வந்தது. அது சாதகமானதுதானே?''

''அதனால் என்ன பயன் ஏற்பட்டது? இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர்களைக்கொண்ட உயர்மட்டக்குழுவை அனுப்பப் போவதாக சிறிலங்கா அறிவித்தது. ஆனால், அமைச்சர்கள் யாரும் வரவில்லை. இந்தியா போன்ற பலம் வாய்ந்த வல்லரசு நாடு அழைக்கும்போது, சிறிலங்காவின் அரச தலைவரோ, பிரதமரோ, டெல்லிக்கு வந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் வெளிநாட்டு அமைச்சராவது வந்திருக்க வேண்டும். ஆனால், பிரதமரின் ஆலோசகர் என்ற பொம்மை பதவியில் இருக்கும் பசில் ராஜபக்ச இங்கு அனுப்பப்பட்டார். வல்லரசான இந்தியாவைச் சின்ன நாடான சிறிலங்கா அதிகாரபூர்வமாக அவமானப்படுத்தியது.

முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லாத பசில் ராஜபக்சவை அனுப்புவதன் மூலம் இந்தியாவின் தலையீட்டை நாங்கள் விரும்பவில்லை என்று சிறிலங்கா வெளிப்படையாகச் சொல்லிவிட்டது. மூன்றாம் தரமான ஒரு நபர் அனுப்பப்பட்டபோது, அவரை மூத்த அமைச்சரான பிரணாப் முகர்ஜி சந்திக்கலாமா? மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரைச் சந்திக்க மன்மோகன்சிங்கின் ஆலோசகர்தான் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், தமிழர்கள் விவகாரத்தில் இந்தியா கடுமையாக இருக்கிறது என்பதையாவது சிறிலங்கா உணர்ந்திருக்கும்!''

''பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையாலும் எந்தப் பயனும் இல்லை என்கிறீர்களா?''

''முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த பின், நிருபர்களைச் சந்தித்தார் பிரணாப் முகர்ஜி. போர் நிறுத்தம் பற்றியோ, சிறிலங்காவுக்கு இந்தியா செய்துவரும் இராணுவ உதவிகள் பற்றியோ எதையும் அவர் பேசவே இல்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த இரண்டு தீர்மானங்களைப்பற்றி அவர் வாயே திறக்கவில்லை. எதை வைத்து பிரணாப் முகர்ஜி கூறியது தனக்குத் திருப்தி தருவதாக கருணாநிதி சொல்கிறார் என்றும் புரியவில்லை. அப்படி கருணாநிதி சொல்வதே, அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவுகளுக்கு எதிரானதாகும்.

அனுபவமிக்க முதலமைச்சரான கருணாநிதி என்ன செய்திருக்க வேண்டும்? 'இது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து முடிவெடுத்த தீர்மானம். இதில், நானாக தனிப்பட்ட முறையில் முடிவெடுக்க முடியாது. எனவே, மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் கூட்டி இது குறித்து விவாதித்து, எங்கள் முடிவை உங்களுக்குச் சொல்கிறேன்' என்றுதான் பிரணாப் முகர்ஜியிடம் சொல்லியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லாததால், அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் கருணாநிதியால் அர்த்தமற்றதாக்கப்பட்டு விட்டன. உலகத் தமிழர்களை மீண்டும் ஒரு முறை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் கருணாநிதி என்பதுதான் வேதனை!''

''40 ஆண்டு பிரச்சினையை 4 நாட்களில் தீர்த்துவிட முடியாது என்கிறாரே அவர்?''

''இது வேதனை தரத்தக்க பதில்!

40 ஆண்டுப் பிரச்சினையைத் தீர்க்க நாளாகும் என்பது உண்மைதான். ஆனால், போரை நிறுத்துங்கள் என்று சொல்லி நிறுத்த, சில மணி நேரமே போதும்.

சிங்களவர் கைவசம் இருந்த ஆனையிறவு முகாமைக் கைப்பற்றிய புலிகள், யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினார்கள். அங்கு 30 ஆயிரம் சிங்கள இராணுவ வீரர்கள் அப்போது இருந்தார்கள். புலிகள் முன்னேறியிருந்தால், சிங்கள இராணுவ வீரர்கள் மொத்தமாக அழிந்திருப்பார்கள். அப்போது இந்தியா தலையிட்டு, புலிகளை முன்னேற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது. புலிகளும் சம்மதித்தார்கள்.

அன்று, சிங்களச் சிப்பாய்களைக் காப்பாற்றுவதற்காக புலிகளிடம் கோரிக்கைவைக்கத் தெரிந்த இந்தியாவுக்கு, இன்று அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற போர் நிறுத்தம் செய்யவைக்க சில நிமிடங்கள் போதாதா? எவ்வளவு வேதனையான பதில்!''

''ஒரு நாடு, பக்கத்து நாட்டுக்கு இராணுவ உதவி செய்வது சாதாரணமானதுதான் என்கிறாரே பிரணாப்?''

''சாதாரண காலத்தில், சாதாரணமாக உதவி செய்யலாம். ஆனால், ஒரு நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டு இருக்கும்போது ஒரு தரப்புக்கு மட்டும் ஆயுத உதவிகள் செய்வது எப்படிச் சரியாக இருக்க முடியும்?

காஷ்மீரில் இராணுவத்துக்கும் சில அமைப்புகளுக்கும் தொடர்ந்து சண்டை நடக்கிறது. அந்த அமைப்புக்களுக்கு பாகிஸ்தான் உதவி செய்வதை இந்தியா குற்றம் சாட்டுகிறது. ஆனால், இலங்கையில் சிங்களவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து தமிழர்களைக் கொல்ல இந்தியா உதவி செய்கிறது. பிறகு எப்படி பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்ட முடியும்?''

''பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிப் பொருட்கள் அனுப்ப முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது தானே?''

''மருந்து மற்றும் உணவுப் பொருட்களைச் சேகரிக்கலாம். ஆனால், யார் மூலமாகக் கொடுப்பீர்கள்? சிறிலங்கா அரசாங்கத்திடம் கொடுப்போம் என்பது தெரிந்தே செய்யும் தவறு. தமிழர் பகுதியில் இருந்த செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. தொண்டு அமைப்புகளை வெளியேற்றியவர்கள் அவர்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்கள் தமிழர்களுக்குப் போய்ச் சேராது. விரக்தியாக இதைச் சொல்லவில்லை. அனுபவ உதாரணம் இருக்கிறது.

ஆழிப்பேரலையால் பல ஆயிரம் தமிழர்கள் இறந்தார்கள். மிகப்பெரிய அளவில் அழிவும் ஏற்பட்டது. இதற்கு உலக நாடுகள் பல்லாயிரம் கோடி பணத்தைக் கொட்டியது. இந்தப் பணத்தை வைத்து நிவாரண உதவிகள் சரியாக நடக்கின்றனவா என்று பார்க்க, நோர்வே நாட்டைத் தலைவராக ஏற்று, சிங்கள - புலிகள் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஆனால், அதை சந்திரிகா ஏற்கவில்லை. ஒரு கைப்பிடி உதவிப் பொருள்கூட தமிழர் பகுதிக்குள் வரவில்லை.

ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அனான், பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க வந்தபோது, தமிழர் பகுதிக்குள் செல்ல சிறிலங்கா அரசாங்கம் விடவில்லை. அப்படிப்பட்டவர்களிடம் பொருளைக் கொடுத்தால், தமிழர்களுக்குக் கொடுக்கமாட்டார்கள். எனவே, நாம் அனுப்பும் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. அமைப்பு மூலமாகத்தான் வழங்க வேண்டும். அதை தமிழகக் குழு கண்காணிக்க வேண்டும்!''

''தமிழர் தாயகம், சுயநிர்ணயம் ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தி ஜெயலலிதா முதலில் அறிக்கைவிட்டார். மறுநாளே மாறி அறிக்கைவிட்டாரே?''

''தமிழ் மக்களின் கொந்தளிப்பை பார்த்து முதலில் அப்படி அறிக்கைவிட்டார் ஜெயலலிதா. மத்திய உளவுத்துறை அதிகாரிகள் வந்து அவரைப் பார்த்தார்கள். அதன் பிறகு மாறிவிட்டார். காங்கிரசுடன் கூட்டணி ஏற்பட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள அவரும் திட்டமிடுகிறார். அதுதான் உண்மை.''

''கருணாநிதி, சிறிலங்காவுக்கு வரவேண்டும் என்று ராஜபக்ச அழைப்பு விடுகிறாரே?''

''சிங்களத் தலைவர்கள் அத்தனை பேரும் நரித்தந்திரம் படைத்தவர்கள். அதில் ராஜபக்ச விதிவிலக்கல்ல. உலகத்தை ஏமாற்ற அவர்கள் அப்படித்தான் ஆரம்பத்தில் பேசுவார்கள். அதன் பிறகு நம்மை ஏய்த்து விடுவார்கள்.''

''புலிகளை எதிர்த்து தமிழக காங்கிரசார் கொந்தளிப்புடன் பேச ஆரம்பித்து உள்ளார்களே?''

''மக்கள் உணர்வைப் புரிந்துகொள்ளாமல் காங்கிரஸ் மீண்டும் மீண்டும் அந்நியப்பட்டுக்கொண்டே போகிறது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என்பதுதான் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் மையக் கருத்து. அந்த இரண்டு மாகாணங்களையும் பிரித்துவிட்டார் ராஜபக்ச. ஆகவே, ராஜீவ் காந்தியின் கனவை நிறைவேற்ற முதலில் அவர்கள் குரல் கொடுக்கட்டும்.''

''இன்றைய நிலையில் உங்களின் ஒட்டுமொத்தக் கோரிக்கை என்ன?''

''மூன்று விடயங்கள்... அப்பாவித் தமிழர்களைப் பலியிடும் சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இந்திய அரசு, சிறிலங்காவுக்கு தரும் இராணுவ உதவியை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழக மீனவர்களை சிறிலங்கா கடற்படை சுட்டால் இந்திய கடற்படை திருப்பித் தாக்கும் என்று அறிவிக்க வேண்டும். இங்கே... முதல்வர் கருணாநிதி, உடனடியாக மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். நமது அரசியல், அபிப்பிராய பேதங்களை அப்பாவித் ஈழத் தமிழனின் வாழ்க்கையுடன் சேர்த்துப் பார்ப்பதை நிறுத்த வேண்டும்!'' என்றார் பழ.நெடுமாறன்.

நெடுமாறன் அய்யா எமக்கா செயற்பட்டார் சிறை சென்றார் வைகே சிறை சென்றார் சீனமான் சிறை சென்றார். 1 முறையல்ல பல முறை. அவர்கள் சக தமிழ்நாட்டு தமிழர்களாக கருணாநிதியை விமர்சித்தால் அதற்கு நியாயம் இருக்கிறது. அதையுமே எல்லைமீறிப்போகாது ஒற்றுமைப்படுத்த வேண்டியது தான் எமது கடமை தேவை.

பொழுது போக்கிற்கு எங்கையடா யார் யாரை விமர்சிக்கிறார்கள் அதை தூக்கி வைத்து நாமும் றவுண்டு கட்டி தாக்குவம் என்று அலையிறியள்.

தமிழ்நாட்டில் எமக்காக இயங்குபவர்களை ஒன்று சேர்க்கும் நிலைப்பாட்டில் இருந்து நிலமையைப் பாருங்கள் கருத்தெழுதுங்கள். அது தான் நமக்கு தேவை. அதில் தான் எமது கவனம் தேவை.

எமக்காக செயற்படுவர்களிற்குள் ஒருவரைப் பற்றி மற்றவரிற்கு பல் வேறு காரணங்களிற்காக பல விதமான முரண்பாடுகள் கசப்பான அனுபவங்கள் இருக்கலாம். அவர்களிற்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாம் ஒரு தரப்பு சார்ந்து நியாயப்படுத்துவது எமது நலன்களிற்கு தான் பாதகமானது. அந்த வேறுபாடுகளிற்குள் ஈழத்தமிழரிற்கான ஆதரவுகுரல்கள் அடிபட்டுப் போகாது பார்க்க வேண்டியது எமது கடமை.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒன்றைப்பற்றி பேசுவது செயற்படுத்துவதற்கும் ஆட்சியில் இல்லாதவர்கள் பேசுவது ஒன்றை செயற்படுத்த விரும்புவதாக பேசுவதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. கலைஞருக்கு இருக்கும் சிக்கல்களை அதில் இருந்து புரிந்து கொள்ளுங்கள். நெடுமாறன் அய்யாவோ சீமான் போன்றவர்கள் அந்த சிக்கல்கள் இன்றி சுதந்திரமாக பேசமுடிகிறது செயற்பாடுகளை தூண்ட முயற்சிக்கிறார்கள். அதை கலைஞர் தன்னால் முடிந்தவரை மறைமுகமாக ஆதரிக்கிறார் அனுமதிக்கிறார்.

நெடுமாறன் அய்யா கலைஞர் வைகோ திருமா என்று எவரையும் எமக்காக அது செய் இது செய் என்று கட்டளையிட ஒன்றை செய்யவில்லை என்று தூற்ற எமக்கு என்ன உரிமை இருக்கிறது?

அவர்களிற்கு வாக்கு போடுகிறீர்களா? அவர்களது அரசியல் கட்சி தொண்டர்களா உழைக்கிறீர்களா பங்களிப்பு செய்கிறீர்களா?

இல்லை தமிழ்நாடு அரசுக்கோ இந்திய அரசுக்கோ வரி கட்டுகிறீர்களா?

இன்று இந்தளவிற்காகுதல் இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாக குரல்கொடுக்க கூடியதான ஒரு சூழல் உருவாகியதற்கு காரணங்கள்

-1- சமாதன முயற்சிகளை முறித்த படி ஆக்கிரமிப்பு போரை தொடங்கிய சிறீலங்கா அரசு

-2- அதனால் தாயகத்தில் நடந்தேறும் மனித அவலங்கள் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் லட்சக்கணக்கான இடப்பெயர்வுகள்

-3- இந்தியாவோடு தமிழ்நாடோடு உறவுகளை சீராக்குவதற்கு கடுமையாக உழைத்த பிரிகேடியர் தமிழ்செல்வனின் இழப்பு

-4- இந்தியாவோடு உறவுகளை மேம்படுத்த புலிகள் தொடர்ந்து மேற்கொண்டுவரும் முயற்சிகள்.

இந்தியா மற்றும் தமிழ்நாடு நோக்கிய எமது கொழுப்பான விமர்சனங்களும் தூற்றல்களும் வசைபாடுதல்களும் அல்ல.

இதற்காக நாம் கொடுத்த விலைகளை யோசியுங்கள். விலைகொடுத்து அந்த சூழலை உருவாக்குவது யாரே அதை சொகுசாக இருந்து விமர்சிப்பவர்கள் வேறு யாரோ.

புலம்பெயர்ந்த நாடுகளில் நீங்கள் கட்டும் வரிக்காக உங்களுக்கு கிடைக்கும் உரிமையை எந்தளவிற்கு பயன்படுத்தி கேள்வி கேட்டிருக்கிறீர்கள் உங்கள் உங்கள் அரசுகளை?

புலம்பெயர்ந்தஈழத்தவர்களின் சந்தையில் கணிசமான வருமானத்தை பெறும் தமிழ்நாட்டு திரையுலகை அவர்களது துறைசார் ரீதியில் உங்களது நலன்களிற்கு தேவையான படைப்புகளை தரும்படி கேட்டீர்களா? கட்டளையிட்டீர்களா?

Edited by kurukaalapoovan

புலம்பெயர்ந்தஈழத்தவர்களின் சந்தையில் கணிசமான வருமானத்தை பெறும் தமிழ்நாட்டு திரையுலகை அவர்களது துறைசார் ரீதியில் உங்களது நலன்களிற்கு தேவையான படைப்புகளை தரும்படி கேட்டீர்களா? கட்டளையிட்டீர்களா?

எப்பிடி படம் எடுக்க வேணும் ஈழத்து பெட்டையும் , இந்திய பெடியனும்( இல்லை ஈழத்து பெடியும் தமிழக பெட்டையும்) ராமேஸ்வரத்திலை கட்டிப்பிடிச்சு உறுழுகிற மாதிரியோ...??

இல்லை இராணுவத்தால் பாதிக்கப்பட்டு அகதியா இந்தியா போன ஈழத்து அரைலூசு போட்ட கூத்துக்களோ...???

அவர்கள் எம்மவர்களில் தமிழகத்தில் காண்பதையும் உணர்வதையும் தான் படமாக எடுக்கிறார்கள்.... ஈழத்து கதைகளும் அப்படித்தான், அவர்கள் கேட்ட உணர்ந்த கேட்ட கதைகளை தங்களது கதைகளேடு சேர்த்து ஒரு திரையீடு செய்வார்கள்... அந்த கோதாரியை செய்யாமல் விடுகிறதே நல்லது...

சினிமா எண்டது உணர்விலை இருந்து இயல்பாக கொண்டு வருவது, அதுக்கான அடியை எடுத்து கொடுக்க என்னத்தை செய்து போட்டியள் அவர்களுக்கு கட்டளை போடுகிறதுக்கு...

சிறு உதாரணமாக.

  • ஈழத்திலை தயாரிக்க பட்ட மக்களின் அவலங்கள் அடங்கிய குறும்படங்களை இந்தியா வரை கொண்டு சேர்த்தீர்களா...???
  • ஈழத்து உணர்வுகள் அடங்கிய கதைகளைதான் பலதை எழுதி பிரசுரித்து வைத்து இருக்கிறீர்களா...?? குறைந்தது சிறுகதைகளையாவது.?

இப்படி எதையுமே நீங்கள் செய்ய மாட்டீர்கள்.. ஆனால் காசு குடுக்கிறம் எங்கட வீட்டு பிரச்சினையை வந்து பாத்து கதை எழுதி திரைக்கதையாக்கி திரைப்படம் எடுக்க வேணும் எண்டு கட்டளை போடப்போறீயள்...!

இங்கை யாழுக்கை ஈழத்து மக்கள் பற்றிய கதைகள் எழுதினால் ஈழத்து தமிழர் வெறும் நூறுபேர் படித்தாலே பெரிய விசயமாக கிடக்கும் போது தமிழகத்தார் உங்களுக்காக கதை படைக்க வேணும்...

வேணும் எண்டா தமிழகத்திலை பொழுது போக்கு படங்களுக்காக முதலீடு செய்யும் ஈழத்து தமிழரின் நிறுவனம், ஐங்கரனுக்கு உங்கட கட்டளைகளை போட்டு பாருங்கோ... செய்வார்களா பார்க்கலாம்...

ஈழத்தவரை சக மனிதராக சித்தரிக்கும் எந்த முயற்சியும் நல்லது தான். அதுவும் ஈழத்தவருக்கும் தமிழகத்துக்கும் இடையில் உள்ள உறவின் உணர்வுகளை புதுப்பிக்கும் வகையில் "ஈழத்து" பெடியன் இந்திய பெட்டையோடு அல்லது "ஈழத்து" பெட்டை இந்திய பெடியனோடு உருழுற படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை கன்னத்தில் முத்தமிடல் போன்ற கொச்சைப்படுத்தல்கள் இல்லாதவரை.

தல வால் 1 தடவைசொன்னா 100 தடவை எண்டு கொண்டு சம்பந்தம் இல்லாத விடையங்களை கொண்ட படங்களை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் மனநோயாளிகளை உருவாக்குவதை விட அதிக பாதிப்பை இராமேஸ்வரத்தில் கட்டிப்பிரண்டு உருளும் "ஈழ - இந்திய தம்பதிகள்" உருவாக்கப் போவதில்லை.

சினிமாவில் சுதந்திரமான சிந்தனைக்கோ கதைக்கோ தட்டுப்பாடு இல்லை. தட்டுப்பாடாக இருப்பது மக்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற பொருளாதார ரீதியில் வெற்றி பெறக்கூடிய கதைகள்.

சினிமாவில முதலீடு செய்பவர் அதில் கொள்ளை இலாபம் எடுக்காவிட்டாலும் போட்ட முதலாகுதல் திரும்பி வரும் அளவிற்கு படம் வெற்றி பெற வேண்டும் எண்டு தான் எதிர்பார்ப்பார்.

பொருளாதார வெற்றியை நிர்ணயிக்கும் நுகர்வோர்களை விழிப்பூட்டுவது தான் எப்படிப்பட்ட படைப்புகளிற்கு வரவேற்பு இருக்கும் - அதன் மூலம் பொருளாதார ரீதியில் வெற்றி இருக்கும் என்பதை உறுதிப்படுத்த உதவும். மக்களின் (நுகர்வோரின்) எதிர்பார்ப்புகளை சீர்திருத்தாது முதலீட்டாளர்களிற்கு கட்டளையிட முடியாது பொருளாதார தற்கொலை செய்யுங்கள் என்று அது ஐங்கரனாக இருந்தாலும்.

ஈழத்தவர் கண்ணோட்டத்தில் அவர்களை மய்யப்படுத்தி உருவாக்கிய படைப்புகளை கதையின் கருக்களை தமிழ்நாட்டில் சந்தைப்படுத்துவது இலகுவானது அல்ல. புலம்பெயர்ந்த மந்தைகள் அர்த்தமற்ற முறையில் தமிழக சினிமா கதாபாத்திரங்களை தூக்கி வைத்துக் கொண்டு திரியும் மனநோயாளிகள் போல் மற்றவர்களும் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.