Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    178
    Points
    87961
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    106
    Points
    33600
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    98
    Points
    3043
    Posts
  4. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    83
    Points
    31903
    Posts

Popular Content

Showing content with the highest reputation since 11/12/25 in all areas

  1. ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள் அண்மையில் இஸ்ரேலுக்குப் பயணம் செய்த தனது அனுபவங்களை திரு நிராஜ் டேவிட் அவர்கள் காணொளிகள் வாயிலாக வெளியிட்டு வருகிறார். அவற்றில் சில காணொளிகளில் அவர் அங்கு தங்கியிருந்த‌ நாட்களில் பயணித்த பலவிடங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார். அவற்றுள் ஒன்று யூத மக்கள் மீது இரண்டாம் உலக யுத்த காலத்தில் நாசிகளால் மேற்கொள்ளப்பட்ட இனக்கொலை தொடர்பான சாட்சியங்கள், ஆதாரங்கள் ஆகியவற்றினை பாரிய நினைவாலயம் ஒன்றினுள் காட்சிப்படுத்தியிருந்தமை பதிவுசெய்யப்பட்டிருந்தது. தம்மீது நிகழ்த்தப்பட்ட இனக்கொலை தொடர்பாக தமது சந்ததிகள் தொடர்ச்சியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதும், இனிமேல் அவ்வாறனதொரு இனக்கொலை தமது இனம் மீது நடக்காது தவிர்ப்பது எந்தளவு முக்கியமானது என்பதையும் தம் இன மக்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்துவதும் இந்நினைவாலயத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். கொல்லப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களில் ஒரு பகுதியினர் பயன்படுத்திய காலணிகள், அவர்களால் அணியப்பட்ட கறுப்பும் வெள்ளையும் சேர்ந்த வரிரியிலான ஆடைகள், அவர்கள் பயன்படுத்திய உணவருந்தும் பாத்திரங்கள், அவர்களின் புகைப்படங்கள் என்பவற்றோடு அவர்களை வதைப்படுத்திக் கொன்றுபோட்ட பல நாசிப் படைத் தளபதிகளின் புகைப்படங்களும் அங்கு மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இவற்றைத் தனது காணொளிகளில் காண்பித்த டேவிட் அவர்கள், எமதினத்திற்கு நடந்த அக்கிரமங்கள், அழிவுகள் குறித்து நாம் பேசுவதை எம்மில் ஒரு பகுதியினரே தடுத்து வருவதையும், சிங்கள இனத்தோடு நாம் ஒன்றித்து வாழ்வதை இவ்வாறான "பழங்கதைகள் பேசுதல்" எனும் முயற்சி தடுத்துவிடும் என்றும், அது இனவொற்றுமையினைக் குலைத்துவிடும் என்றும் காரணம் கூறிவ‌ருவதையும் குறிப்பிட்டு அங்கலாய்த்திருந்தார். யூதர்கள் தமக்கு நடந்த அழிவினைத் தொடர்ச்சியாகப் பேசியும், காட்சிப்படுத்தியும், ஆவணப்படுத்தியும் வரும் நிலையில், நாமோ எம்மீது நடத்தப்பட்ட அழிவுகளை வேண்டுமென்றே மறுத்தோ அல்லது மறைத்தோ வாழத் தலைப்படுதல் ஈற்றில் எமது இருப்பிற்கே முடிவாய் அமைந்துவிடும் என்பதும் அவரது ஆதங்கமாக இருந்தது. இக்காணொளிகளின் இறுதிப்பகுதியில் தமிழ் மக்களை நோக்ல்கி வேண்டுகோள் ஒன்றினை அவர் முன்வைத்தார். அதுதான் நாம் அனைவரும், தனிப்பட்ட ரீதியிலோ அல்லது ஒரு குழுவாகவோ எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒருவடிவில் கட்டாயம் ஆவணப்படுத்தியோ அல்லது காட்சிப்படுத்தியோ தீரவேண்டும் என்பது. அவரது காணொளிகளைப் பார்த்தபோது அவர் கூறுவது எனக்குச் சரியென்றே பட்டது. ஏனென்றால், எம்மீது நடத்தப்பட்ட அநீதிகளை நாமே பேசவோ அல்லது காட்சிப்படுத்தவோ மறுப்பின், வேறு யார்தான் இதைச் செய்யப்போகிறார் எனும் கேள்வி எனக்குள் வந்தது. ஆகவேதான் எம்மீது நடத்தப்பட்ட அக்கிரமங்கள் தொடர்பான எனது அனுபவங்களை இங்கு பதிவிடலாம் என்று நினைக்கிறேன். இத்தளத்தில் இருக்கும் ஏனையவர்களும் தமது தனிப்பட்ட அனுபவங்களை இங்கு பகிருமாறும் வேண்டிக்கொள்கிறேன்.
  2. நண்பர்களே, 2021 செப்டம்பர் மாதம் என் வாழ்க்கை ஒரு கணநேரத்தில் தகர்ந்து போனது. ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அன்று ஒரு பயங்கரமான நோயைக் கண்டறிவதாக மாறியது. Acute Lymphoblastic Leukaemia (ALL) எனும் இரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. மருத்துவராகிய நான் உண்மையை அறிந்திருந்தேன்: Donor (தானமளிப்பவர்) ஒருவரிடமிருந்து Stem cell transplant சிகிச்சை இல்லாமல் முழு குணமடைவது கடினம். என் சகோதரரும் குடும்பத்தினரும் உடனடியாக சோதனை செய்து கொண்டனர், ஆனால் யாரும் முழு பொருத்தமாக இல்லை. அதிக அளவு chemotherapy மற்றும் radiotherapy சிகிச்சைகள் பழுதடைந்த என் bone marrow களை முற்றிலுமாக அழித்தே விடும். பிறகு Stem cell சிகிச்சை மூலமாக முழுமையாக குணமடைய முடியும். Stem cells (ஸ்டெம் செல்கள்) என்பது உடலின் “ஆரம்ப நிலை செல்கள்”. இவை எந்த விதமான செல்களாகவும் (ரத்த அணுக்கள், நோய் எதிர்ப்பு செல்கள், திசு செல்கள்…) மாறும் திறன் கொண்டவை. பொருத்தமான donor ஒருவரிடமிருந்து என்னுடலில் பொருந்தத்தக்க Stem cells களிற்காக காத்திருந்த ஒவ்வொரு நாளும் மரணத்தின் விளிம்பை அண்மித்துக் கொண்டிருத்ததை நன்றாகவே உணர்ந்தேன். நம்பிக்கை உலகளாவிய தானமளிப்பவர் பட்டியல் (Donor registry) -களுக்கு திரும்பியது. பொதுவாக பொருத்தம் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களிடம் தான் கிடைக்கும். நான் ஒரு இலங்கைத் தமிழர். Donor registry-களில் எமது சமூகம் மிகக் குறைவாகவே பதிவு செய்திருக்கிறது. உலகெங்கிலும் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கும், பழங்குடி மக்களுக்கும் இதே கசப்பான உண்மை தான்: donor-கள் மிகக் குறைவு, விழிப்புணர்வு இல்லாததால் பல உயிர்கள் தவிக்கின்றன. வாரங்கள் ஊர்ந்தன. பின்பு 2021 இறுதியில், ஒரு 100% பொருத்தம்! அமெரிக்காவில் வசிக்கும் ஒரு அந்நியப் பெண்மணி, பல வருடங்களுக்கு முன்பே registry-யில் பதிவு செய்திருந்தார். அவரது இரத்த HLA எனும் மரபணுக்கள் என்னுடையவற்றின் சரியான பிரதிபலிப்பு. எனது குடும்பத்திற்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் மீளவும் கொண்டு வந்தது. தயக்கமின்றி அவர் ஒப்புக் கொண்டார். தானம் செய்வது? ரத்தம் கொடுப்பது போலத்தான் எளிமையானது. சில நாட்கள் ஊசி போட்டு stem cell-களை அதிகரித்து, பின்பு மருத்துவமனையில் ஒரு நாள் செலவழித்து இரத்தத்திலிருந்து எடுத்துக் கொள்வார்கள். பெரும்பாலான donor-கள் ஒன்று இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்கள் - சற்று சோர்வு மட்டுமே. ஆனால் இந்த தானம், நோயாளிக்கு அவர்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும். Registry-யில் சேர்வது மிக எளிமை: ஒரு கன்னத்துச் சோதனை (cheek swab), வாய் உட்புறக் கன்னத்தைத் துடைத்து DNA சேகரிக்கும் முறை மட்டுமே. பல வருடங்கள் அல்லது பல தசாப்தங்களுக்குப் பிறகு கூட நீங்கள் யாருக்காவது பொருத்தம் ஆகலாம். அப்போதுதான் உண்மையான உறுதிப்பாடு தேவைப்படும். மார்ச் 2022: நான்கு விலைமதிப்பற்ற பைகளில் அவரது stem cell-கள் என்னிடம் வந்து சேர்ந்தன. திரவ வடிவிலான புதிய உயிர். என் நரம்புகளில் செலுத்தப்பட்டு, மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தன. குணமடைவது மிக மெதுவாக இருந்தது - தொற்று நோய்களும் பின்னடைவுகளும் நடந்தன. இன்று 2025: நான் என் குடும்பத்திடமும், வேலையிடத்திலும், வாழ்க்கையிலும் மீண்டும் அடியெடுத்து வைத்தேன். என் donor-க்கு தைரியமும், நேரமும், இதயமும் தேவைப்பட்டது. ஆனால் எனது உயிரைக் காப்பாற்றிய அந்த உன்னத ஜீவன் யார்? விதிகள் காரணமாக பல வருடங்கள் அவர் அடையாளம் மறைக்கப்பட்டு வைத்திருக்கும். 2025-ல் ஒஸ்ரேலியாவில் நடந்த ஒரு தொண்டு நிகழ்ச்சியில் திருப்பம்: ஒரு பெண்மணி என் நண்பரிடம் வந்து, “நான் பல ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் stem cell தானம் செய்தேன். எனது பெறுபவர் எனது வயதுடையவர், என் இனத்தைச் சேர்ந்தவர், ஒஸ்ரேலியாவில் வசிப்பவர் என்று மட்டும் கூறினார்கள். அவர் உயிருடன் இருக்கிறாரா என்றே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்” என்றார். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். விவரங்கள் அனைத்தும் பொருந்தின. தேதிகள், இரத்த வகை, கால அட்டவணை - எல்லாம் பொருந்தியது! இருவரது சம்மதத்துடன் என் நண்பர் எங்களை இணைத்தார். அந்த பெண் 2008-ல் அவரது 4 வயது மருமகனுக்கு stem cell transplant தேவைப்பட்டபோது registry-யில் சேர்ந்திருந்தார். எல்லா முயற்சிகளையும் செய்தும், அந்தக் குழந்தை உயிர் பிழைக்கவில்லை. 14 வருடங்கள் கழித்து அழைப்பு வந்தது - வேறொருவருக்கு அவர் stem cells பொருத்தம். நாங்கள் சந்தித்தோம். அணைத்துக் கொண்டோம். கண்ணீர் வழிந்தது. எனக்கு உயிர் கொடுத்த கையை இறுதியாகப் பிடித்தேன். சகோதர-சகோதரி சந்திப்பது போல இருந்தது. தன்னலமற்ற தானம் காரணமாக பிறந்த, தற்செயலால் இணைந்த, அறிவியலால் உறுதிப்படுத்தப்பட்ட பிணைப்பு. பிரியும்போது அவர் சொன்னது: “பின்னால் திரும்பிப் பார்க்காதே. மகிழ்ச்சியோடு எதிர்காலத்தை பார்.” ஒரு தாய் மகனிடம் சொல்வது போல இருந்தது. இது என் வாழ்க்கையின் அதிசயம் மட்டுமல்ல - இது அனைவருக்கும் அழைப்பு. ஒரு cheek swab-ஆல் அவர் என் உயிரைக் காப்பாற்றினார். நீங்களும் வேறொருவர் உயிர் காப்பாற்றுவீர்களா? ஒரு கன்னத்துச் சோதனை மட்டுமே போதும் registry-யில் சேர. பல வருடங்கள் கழித்து கூட நீங்கள் யாருடைய உயிரையாவது காப்பாற்றலாம். Stem cell தானத்தில் இனப் பொருத்தம் அரிது. நம் விழிப்புணர்வே சக்தி. யாரோ ஒரு நபர் வாழ்க்கை கதையில் நாயகி அல்லது நாயகனாகுங்கள். இன்றே பதிவு செய்யுங்கள். • US: nmdp.org • Australia: stemcelldonors.org.au • Canada: blood.ca/en/stemcells • UK: blood.co.uk/stem-cell-donor-registry/ • France: dondemoelleosseuse.fr • Germany: dkms.de • Sri Lanka: praana.lk • India: datri.org இந்த கதை - என் தானமளிப்பவரின் மருமகனுக்கு சமர்ப்பணம். அந்தக் குழந்தை விட்டுச் சென்ற நினைவு - என்றென்றும் நம்பிக்கையாக வாழ்கிறது. :J, Australia.
  3. வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார முயன்று கொண்டிருந்தேன். நேற்று துக்க வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வந்த ஒரு குடும்பத்தில் ஒரு மகன் மிகவும் செழிப்பாக இருந்தார். அவர் அங்கிருந்த பிளாஸ்டிக் கதிரைக்குள் மிகவும் சிரமப்பட்டே தன்னை திணித்துக் கொண்டிருந்தார். அவர் ஒரு தடவை எட்டி எடுப்பதற்காக அசைந்த போது அந்தக் கதிரை ஒரு கணம் வளைந்து படீரென்று உடைந்து போனது. துக்கம் விசாரிக்க வந்தவர்கள் பதறிப் போனார்கள், அவர்களின் பிள்ளைக்கு ஏதேனும் அடிபட்டு விட்டதோ என்று. அவனை நான் கடைசியாகப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் இருக்கும். சிறு வயதில் ஒரே வகுப்பில் படித்தோம். பாடசாலையிலிருந்து என்னுடைய வீட்டுக்கு வரும் வழியிலேயே அவனுடைய வீடு இருந்தது. அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி போயிருக்கின்றேன். அங்கே எல்லோருமே அழகாக இருந்தார்கள். பயில்வான்கள் போன்ற உடற்கட்டும் அவர்களுக்கு இருந்தது. படிப்பு தான் சுத்தமாக வரவில்லை. அவனோ அல்லது அவன் வீட்டிலோ அதையிட்டு எவரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. என் வீட்டிலும் அதே நிலைதான். பிள்ளைகள் காலை எழும்பி கண் காணாமல் எங்கேயாவது போனால் போதும் என்றே பல குடும்பங்கள் இருந்தன. தினமும் பாடசாலை முடிந்த பின்னும் நாங்கள் உடனேயே வீடு போய் சேர்ந்ததும் இல்லை. அங்கங்கே நின்று இருந்து என்று வீடு போக பொழுது செக்கல் ஆகிவிடும். எவரும் எவரையும் தேடவில்லை என்பது இப்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஒரு நாள் பாடசாலை முடிந்து கடலாலும், கரையாலும் நடந்து வந்து கொண்டிருந்த போது, இரண்டு ஆட்கள் அளவு இருக்கும் பெரிய சுறா மீன் ஒன்றை கடல் தண்ணீரில் வைத்து துண்டு துண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். நீலக் கடல் செக்கச் சிவந்து இருந்தது அப்போது. பின்னரும் அந்தக் கடல் பல சமயங்களில் சிவப்பாகியது. உலகில் கடல் போல வேறு எதுவும் தன்னைத் தானே உடனடியாக விரைவாகச் சுத்தம் செய்து கொள்வதில்லை. பயில்வான் போன்று இருந்தவன் இப்போது மிகவும் மெலிந்து இருந்தான், ஆனால் முகம் அதே அழகுடன் இருந்தது. அடுத்த கதிரையின் நுனியில் ஒரு எச்சரிக்கையுடன் இருந்து கொண்டே எப்படியடா இருக்கின்றாய் என்று ஆரம்பித்தான். அவன் வீட்டிலேயும் யாரோ ஒரு கதிரையை உடைத்து இருப்பார்கள் போல. நல்லா இருக்கின்றேனடா என்று சொல்ல வேண்டிய பதிலைச் சொன்னேன். மனைவியையும், மகளையும் கூப்பிட்டு அழைத்து என்னை அறிமுகப்படுத்தினான். நாங்கள் சிறு வயது நண்பர்கள் மட்டும் இல்லை, சொந்தக்காரர்கள் கூட என்று அவர்களுக்கு சொன்னான். அவர்கள் கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். துக்கம் நடந்த வீட்டுக்கும் அவனுக்கும் போன வாரம் கூட பெரிய சண்டை நடந்து கொண்டிருந்ததாக எனக்கு முன்னரேயே சொல்லி இருந்தார்கள். அவன் வளர்க்கும் கோழிகளை அவர்களின் வீட்டு நாய்கள் கடித்துக் கொன்று விட்டன என்பதே கடைசி சண்டைக்கான காரணம். அவர்களோ தங்களிடம் நாய்களே இல்லை என்கின்றார்கள். ஆனால் தெருவில் போய் வரும் வாழும் எந்த நாய்க்கும், அதன் குட்டிகளுக்கும் அவர்கள் மிஞ்சுவதை போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வீட்டின் முன்னால் எப்போதும் ஒரு நாலு ஐந்து படுத்தே இருந்தன. எல்லோருமே சொந்தமா என்பதே அவனுடைய மனைவியினதும், மகளினதும் ஆச்சரியமாக இருக்கவேண்டும். தலைமுறை தலைமுறையாக அங்கேயே பிறந்து, அங்கேயே திருமணமும் முடித்தால், அங்கே எல்லோரும் சொந்தமாகத்தானே இருக்கவேண்டும். பிராமண குடும்பங்களில் வழக்கத்தில் இருக்கும் ஒரே கோத்திரத்தில் இருப்பவர்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முறையை அந்த ஊரில் அறிமுகப்படுத்தினால், அந்த ஊரின் நிலை சிக்கலாகிவிடும். நீ எப்படியடா இருக்கின்றாய் என்று தான் நானும் ஆரம்பித்தேன். வசதிக்கு ஒரு குறைவும் இல்லை என்றே தெரிந்தது. அழகான பெரிய புது வீடு கட்டியிருந்தான். வீட்டின் வெளியே தெருவிலேயே இரண்டு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உள்ளூர் சுற்றுலாக்களையும், வாகனங்களையும், ஏனைய வசதிகளையும் செய்து கொடுக்கும் தொழிலில் இருந்தான். தொழிலும் நன்றாகவே போய்க் கொண்டிருந்தது என்றே தெரிந்தது. நான் நினைத்தவற்றையே அவனும் சொன்னான். வாழைப்பூ வடை என்றபடியே அவனுடைய மகள் ஒரு தட்டு நிறைய வடைகளை கொண்டு வந்து பிளாஸ்டிக் மேசையில் வைத்தார். வாழைப்பூ வடை சாப்பிட்டு சில வருடங்கள் ஆகியிருந்தது. தமிழ்நாட்டு நண்பன் ஒருவன் ஒரு நாள் வேலையில் கொண்டு வந்திருந்தான். வீட்டில் செய்ததாக ஞாபகம் இல்லை. வாழைத் தண்டிலும் அவர்கள் கூட்டு அல்லது கறி என்று ஏதோ செய்வார்கள். பல மரக்கறிகளைப் போலவே அதுவும் எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் மிகவும் நல்லது, உடல்நலத்திற்கு உகந்தது என்றார்கள். உடல்நலத்திற்கு உகந்தவை எல்லாம் கொஞ்சம் முயற்சி செய்தே சாப்பிட வேண்டியவை போல, 'கொஞ்சம் சுகர்..........' என்று சொன்னான். அப்பொழுது தான் அவனை கவனமாக உற்றுப் பார்த்தேன். பயில்வான் போல இருந்தவன் மெலிந்து போயிருந்த காரணம் தெரிந்தது. கொஞ்சம் என்றில்லை, மிக நன்றாகவே நீரிழிவு அவனை தாக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மருந்து ஏதும் எடுக்கின்றாயா என்றேன். தான் முந்தி ஆங்கில மருந்துகள் எடுத்ததாகவும், ஆனால் இப்போது எடுக்கவில்லை என்றும் சொன்னான். ஆங்கில மருந்துகள் எதுவுமே வேலை செய்யவில்லை என்றான். நல்ல ஒரு நாட்டு வைத்தியர் அங்கே இருப்பதாகவும், அத்துடன் தான் சில பத்தியங்களை பின்பற்றுவதாகவும் சொன்னான். அதில் ஒன்று வாழைப்பூ வடை. உடம்புக்கும், இரத்தத்திற்கும் மிகவும் நல்லது என்றான். சுவையாகவும் இருந்தது. பழங்கள் சாப்பிடாமல்ல் காய்களைச் சாப்பிடுவதாகவும் சொன்னான். மாம்பழம் சாப்பிடாமல்ல் மாங்காய் சாப்பிடுவதாகச் சொன்னான். அதுவும் ஒரு மருந்து என்றான். இதை ஆபிரிக்காவில் ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து இருக்கின்றார்கள் என்றான். ஆபிரிக்காவில் மனிதர்கள் தோன்றினார்கள் என்ற தகவலை விட வேறு எந்த தகவலையும் நான் அதுவரை ஆபிரிக்காவுடன் இணைத்து வைத்திருக்கவில்லை. ஆபிரிக்க மாங்காய் புதிய தரவு ஒன்றாக தலைக்குள் போனது. ஒரு சிவராத்திரி பின் இரவில் ஒரு வீட்டு மாமரத்தில் ஏறி மாங்காய்கள் பிடுங்கிக் கொண்டிருந்தோம். நான் தான் மரத்தில் ஏறி இருந்தேன். உச்சியில் நின்று கொண்டிருந்தேன். சத்தம் கேட்டோ அல்லது இயற்கை உபாதை ஒன்றை கழிக்கவோ அந்த வீட்டுக்காரர் எழம்பி அவர்களின் பின் வளவு நோக்கி வந்து கொண்டிருந்தார். கீழே நின்றவர்கள் எல்லோரும் ஓடிவிட்டார்கள். டேய்............டேய்.......... என்று சத்தம் போட்டுக் கொண்டே வீட்டுக்காரர் நடந்து வந்தார். அவருக்கு வயிறு முட்டியிருந்தது போல, அவர் ஓடி வரவில்லை. உச்சியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த நான் இனிமேல் இறங்குவதற்கு நேரமில்லை என்று ஒரே குதியாகக் குதித்து விழுந்து ஓடினேன். கைகால்கள் எதுவும் உடையவில்லை. சில உடம்புகள் மிகப் பாவம் செய்தவை. அவை சில ஆன்மாக்களிடம் மாட்டுப்பட்டு எந்தக் கவனிப்பும் இல்லாத ஒரு சீரழிந்த வாழ்வை வாழ்கின்றன. அவன் தனக்கு இது எதுவுமே ஞாபகம் இல்லை என்றான். ஆனால் நாங்கள் அப்பவே மாங்காய்கள் நிறைய சாப்பிட்டது நல்ல ஞாபகம் என்றான். சில நாட்களின் பின், நான் திரும்பி வருவதற்கு விமான நிலையம் போவதற்கு அவனுடைய இரண்டு வாகனங்களையே எடுத்திருந்தோம். ஒன்றில் அவனும் வந்தான். அருகே இருந்தான். கோழிச் சண்டைக்காக அங்கே இருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டான். வழியில் போக்குவரத்து மிகவும் நெரிசலாகி விமான நிலையம் வந்து சேர்வதற்கு மிகவும் தாமதமானது. யாரோ அமைச்சரோ அல்லது பிரபலமான ஒருவர் அந்த வழியால் போய்க் கொண்டிருந்தார் போல. அவசரமாக இறங்கி, இரண்டு வாகனங்களிலும் வந்த சொந்தபந்தங்களிடம் இருந்து விடைபெற்று, ஓடி ஓடி, விமானம் கிளம்பும் கதவடிக்கு வந்த பின் தான் அவனுக்கு நான் போய் விட்டு வருகின்றேன் என்று சொல்லவில்லை, அவனை நான் திரும்பிக் கூட பார்க்கவில்லை என்பது புரிந்தது. அவன் இறந்து விட்டான் என்ற செய்தி சில மாதங்களில் வந்தது.
  4. இது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..................... https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.html அம்மனும் அமிர்தமும் காட்சி 1 (அமிர்தவல்லி பாட்டி தரையில் அமர்ந்திருக்கிறார். பாட்டியின் மகள் பார்வதி கையில் வேலையுடன் அவசரத்துடன் அங்கும் இங்கும் ஓடிகிறார். பாட்டியின் பேத்தி லக்க்ஷனா மொபைல் போனை நோண்டியபடி இருக்கிறார். வீட்டு போன் அடிக்கின்றது.) அமிர்தம்: யாராவது அந்த போனை எடுங்கோவன். (லக்க்ஷனாவை நோக்கி) இவள் ஒருத்தி காதுக்குள்ள ஒன்றை போட்டுவிடுவாள். எங்கட காலத்தில காது கேட்காவிட்டால் மிஷின் போடுவினம், இப்ப காது கேட்கக்கூடாது என்று போடினம். பார்வதி: (கொஞ்சம் அதட்டலாக) அது சும்மா சும்மா அடிக்கும், எடுக்கத் தேவையில்ல. அமிர்தம்: யாரோ ஒரு ஆள் எங்கட நம்பரை தேடி எடித்து அடிக்கிறான், எடுக்காமல் விடுகிறது மரியாதை இல்லை. நாலு சனத்தை மதிச்சு பழகவேண்டும். இப்ப சனமும் இல்ல, சாத்திரமும் இல்ல, ஆத்திரம் மட்டும்தான் எல்லாரிட்டயும் இருக்குது. லக்க்ஷனா: (காதிலிருந்து கழட்டியபடி) அம்மாச்சி, ம்ம்ம்…........ இப்பிடித்தான் நீங்கள் ஒருவனை மதிச்சு, அவனும் எறும்புக்கு மருந்து அடிக்க வந்து, இப்ப இந்த தெருவில ஒரு வீட்லயும் எறும்பே இல்ல. எல்லா எறும்பும் எங்கட வீட்லதான் குடியிருக்கிது. பார்வதி: நான் அவனோட எவ்வளவு சண்டை போட்டன்................... அவன் கடைசியா உங்கட வீட்ல யாருக்கோ சர்க்கரை வியாதி இருக்கு, எறும்பு இந்த வீட்டைவிட்டு போகவே போகாது என்று சாபம் போட்டுவிட்டு போனான். அமிர்தம்: வயசு போனா எல்லாருக்கும் அது வரும். சொல்லிக்காட்டத் தேவையில்ல. நாங்கள் என்றாலும் நல்லா ஓடியாடி உழைச்சோம்......... இப்பத்தான் இது எல்லாம் வருது............ இவ்வளவு நாளும் கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்பிடியே இருந்தனாங்கள்தானே. பார்வதி: நான் ஏன் சொல்லிக்காட்டிறன்? வந்தவனுக்கு தேவையில்லாத வீட்டுக் கதைகளை சொல்லி, அவன்தான் வாசலில நின்று எல்லாருக்கும் நியூஸ் வாசிச்சு விட்டுப்போனவன். அமிர்தம்: (மெல்ல எழுந்தபடி) லக்க்ஷனா, அந்தக் கண்ணாடியை எடுத்து தா பிள்ளை. ஏதாவது நியூஸ் பார்ப்பம். உறவுக்கு பகை கதை என்று என் கதை ஆயிட்டுது. (லக்க்ஷனா காதில் விழாததால் அசையாமல் இருக்க, பார்வதி கண்ணாடியை எடுத்துக்கொடுக்கிறார்.) அமிர்தம்: (கண்ணாடியை வாங்க்கிக்கொண்டே) நான் என்ரை பேத்தியைத்தானே கேட்டனான்................ பார்வதி: அவவின்ட கண்ணாடியையே நான் தான் தேடவேண்டும். இந்த வீட்ல மனிசரையும் அவை அவையின்ட சாப்பாட்டுக் கோப்பையையும் தவிர மற்றதெல்லாம் மறைந்து மறைந்து தோன்றும். ஒரு நாளுக்கு நானும் இப்படியே மறைந்து போகிறன்............... அமிர்தம்: (சிரித்தபடியே) அவசரப் படாத மகளே, மனிசர் மறைந்தா திரும்ப தோன்றுவினம் என்று உறுதியா சொல்ல முடியாது............. நீ வேற புண்ணியம் செய்தவள்.............. இல்லாட்டி எனக்கு மகளாக பிறந்திருப்பியே? (பார்வதி காதில் வாங்காமல் செல்கிறார். அமிர்தம் எழும்பி பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்.) அமிர்தம்: கடைக்கு போன பெண் கடைசிவரை திரும்பவில்ல................... எப்படி திரும்பும்? வீட்ல அதுக்கு என்ன கொடுமையோ? எங்கயும் கிணத்திலயோ குளத்திலயோ குதிச்சு இருக்குமோ................... சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் நீச்சல் வேற இப்ப தெரியும். நான் தான் ஒன்றையும் பழகாமல் இருந்திட்டன். லக்க்ஷனா: அம்மாச்சி, அடுத்த வரியையும் படியுங்கோ. அமிர்தம்: காரியச்செவிடு என்று சொல்லுறது, கொம்மா இவ்வளவு சத்தம் போட்டும் தவம் கலையாமல் இருந்தாய். ம்ம்ம்…….அடுத்த வரியில என்ன இருக்குது…பக்கத்து தெருவில பையனும் மிஸ்ஸிங் ஆச்சரியக்குறி ஆச்சரியக்குறி. இதென்னடி ரெண்டு நியூஸை கலந்து போட்டிருக்கிறாங்கள். (பார்வதி உள்ளே வருகிறார்.) பார்வதி: பாட்டியும் பேத்தியும் இப்படியான கதை என்றால் சிறப்பாக ஆராய்ச்சி செய்வீங்களே. அது ரெண்டு கதை இல்ல, ஒரு கதைதான். ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு ஓடியிட்டுதாம். அமிர்தம்: வேலியில இருக்கிற கதியால இழுத்துக்கொண்டு ஓடுகிற மாதிரி சாதாரணமாய் சொல்லுகிறாய். லக்க்ஷனா: அதொன்றும் அப்படியில்ல, அதுகள் விரும்பியிருக்கும், வீட்டுக்காரர் எதிர்த்திருப்பினம், வேற என்ன வழி இருக்குது? அமிர்தம்: என்னடி பிள்ளை, ஆ ஊ என்றா ஓடிறம் மறையுறம் என்று பீதியை கிளப்பிகிறீயள். ஒலிம்பிக் பக்கம் போய் ஓடுறதுதானே, பதக்கமும் கிடைச்ச மாதிரி.................... அதென்னடி பிள்ளை தணலை அள்ளி தண்ணிக்குள்ள கொட்டின மாதிரி ஒரு சத்தம் வருது. லக்க்ஷனா: உங்கட மகள் தான் மூச்சை புசுபுசுவென்று விடுகிறா. பார்வதி: தணலை தள்ளி தலையில கொட்டுங்கோ. பார்த்துப் பார்த்து வளர்த்துவிட, அவை ஓடிவினமாம், இவை பதக்கத்தோட நிற்பினமாம். பிள்ளையளுக்கு நல்ல புத்திமதி சொல்லுறத விட்டிட்டு, அதுகளோட சேர்ந்து கூத்து நடக்குது இங்க. அமிர்தம்: நான் எங்கயடி கூத்தாடிறன், சரியா நடக்ககூட முடியிதில்ல, முட்டி வாதம் வந்திட்டுது போல. பார்வதி: சும்மா கதையை மாத்தாதேங்கோ. டொக்டரிட்டை போனா, நீங்க நல்ல சுகமாக இருக்கிற மாதிரியும், டொக்டருக்குத்தான் ஏதோ வருத்தம் மாதிரியும் கதைக்கிறது. நீங்கள் சொல்லிச்சொல்லியே அந்தாளுக்கு இப்ப ஏதோ வந்துட்டுதாம். அமிர்தம்: அடியே, அந்தாளுக்கு வருத்தம் முதலே இருந்தது. நான் ஆட்களை பார்த்தவுடனேயே அப்படியே சொல்லிவிடுவன். அந்தாளுக்கு மூச்சு வாயாலயும் பேச்சு மூக்காலயும் வந்துகொண்டிருந்தது. பார்வதி: ஓம் ஓம், எல்லாரையும் நெளிச்சு இப்படியே நாக்கால மூக்கை தொடுங்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சனங்கள் எங்களை பழிக்கிறமாதிரி நடந்துவிடும். அமிர்தம்: அம்மா தாயே, நான் இனி ஒன்றும் சொல்ல வரவில்ல. பிறகு என்னாலதான் இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லவும் வேண்டாம். சரி, மெதுமெதுவா இந்த கோயிலுக்கு ஒருக்கா போட்டு வாறன். (தொடரும்.......................)
  5. சுமார் மதியம் 12 மணியிருக்கலாம். இந்திய இராணுவம் கோண்டாவில்ச் சந்தி நோக்கி முன்னகர ஆரம்பித்தது. முருகேசுவின் தேநீர்க் கடையினை அடுத்துவரும் தோட்டவெளியினை அவர்களது தாங்கி அண்மித்தவேளை புலிகள் தாக்கத் தொடங்கினார்கள். கடுமையான தாக்குதலையடுத்து இந்திய ராணுவத்தின் தாங்கி பின்னால் வர ஆரம்பித்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர் பொதுமக்களை இரு வரிசைகளில் வீதியின் இருமருங்கிலும் நிற்கும்படி கட்டளையிட்டான் இந்திய படைப்பிரிவின் தளபதிபோன்று காட்சியளித்த ஒருவன். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று சுமார் 50 இல் இருந்து 60 வரையான பொதுமக்களை அவர்கள் வீதியின் இருபுறமும் வரிசையாக நிற்கக் கூறிவிட்டு எமக்குப் பின்னால் அவர்களின் தாங்கி நின்று கொண்டது. தாங்கியின் மேல் அமர்ந்திருந்தவன் எம்மை கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கும்படி சத்தமிட்டான். வேறு வழியின்றி நடக்கத் தொடங்கினோம். புலிகளின் தாக்குதல்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவே எம்மை மனிதக் கேடயங்களாக இந்திய இராணுவம் பாவிக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டோம். ஆனாலும் வேறு வழியில்லை. முன்னால்ப் போனால் சண்டையில் அகப்பட்டு மடிவோம், போகமாட்டோம் என்று மறுத்தால் பின்னாலிருந்து இந்திய இராணுவம் எம்மைச் சுட்டுக் கொல்லும். ஆகவே வேறு வழியின்றி கோண்டாவில்ச் சந்தி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வமாஸ் பகுதி கடந்து, மதகடி வரும்வரை நடந்திருப்போம். நில்லுங்கள் என்று பின்னாலிருந்து கட்டளை வந்தது. தாங்கியும் எமக்குப் பின்னால் நின்றிருக்க, அதனைச் சூழ இந்திய இராணுவ வீரர்கள் கால்நடையாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. சிறிது நேரத்தின் பின்னர் எம்மை மீளவும் நடக்கச் சொன்னார்கள். ஆனால் எம்மைப் பின் தொடர்ந்து இம்முறை அவர்கள் வரவில்லை. வாமாஸ் பகுதியுடன் தாங்கி நின்றுவிட்டது. இந்தியத் தாங்கி நின்றிருந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர்கள் தூரத்தில் இருந்த வீடுகளின் மதில்களுக்கிடையே புலி வீரர்கள் நின்றிருந்தார்கள். கைகளில் ஆர் பி ஜி. முகத்தில் அச்சமில்லை. வீதியில் நின்ற இந்தியத் தாங்கியே அவ்வீரனது இலக்கு என்பது தெரிந்தது. தன்பக்கம் திரும்பிப் பார்க்காது தொடர்ந்து நடக்குமாறு அவர் கைகளால் சைகை செய்தார். நாம் அப்படியே செய்தோம். அவரைப்போலவே இன்னும் சில புலி வீரர்கள் அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்தார்கள். நாம் கோண்டாவில்ச் சந்தியை அடைந்தபோது அங்கிருந்த புலிகளின் ஒரு அணியினர் எமக்குக் குடிக்க தண்ணீர் கொடுத்தார்கள். தவறாது இந்திய இராணுவத்தின் விபரங்கள் குறித்தும் அறிந்துகொண்டார்கள். அவர்கள் கேட்ட விடயங்களைக் கூறிவிட்டு, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
  6. கண்களில் கொலை வெறி கொப்பளிக்க அவர்கள் அப்பகுதியெங்கும் மனிதர்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன் தம்பியின் முதுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, "வீட்டிற்குள் போ, நீங்கள மறைத்துவைத்திருக்கும் ஆயுதங்களை எங்களுக்குக் காட்டு" என்று அதட்டினான். தகப்பானரையும், சிற்றன்னையையும் என்னையும் தலையில் கைகளை வைத்தபடி முழங்காலில் இருக்கவைத்துவிட்டு தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டினுள் சென்றார்கள் சில இராணுவத்தினர். முதல் நாள் எமது வீட்டிற்கு அருகில் வீழ்ந்து வெடித்த செல்களின் துகள்கள், சில வெற்று ரவைக்கூடுகள் என்று சிலவற்றை அலுமாரியினுள் ஒளித்து வைத்திருந்தது அப்போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அடக் கடவுளே, அவற்றைக் காணப்போகிறார்கள், அவைதான் ஆயுதங்கள் என்று கூறிக்கொண்டே எம்மைத் தாக்கப்போகிறார்கள் என்று அச்சப்படத் தொடங்கினேன்.நான் நினைத்தவாறே நாம் ஒளித்துவைத்திருந்த செல்த் துகள்களையும், வெற்று ரவைக் கூடுகளையும் அவர்கள் கண்டார்கள். நான் நினைத்தவாறே அவற்றை எங்கிருந்து எடுத்துவந்தீர்கள் என்று எம்மைப் பார்த்துக் கேட்டார்கள். வீட்டினருகில் வீழ்ந்தவற்றைத்தான் எடுத்துவைத்தோம் என்று நாம் சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. மறுபடியும் தாக்கத் தொடங்கினார்கள். தமது ஆத்திரம் அடங்கியதும் வரிசையில் எம்மை நிற்கவைத்து, அப்பகுதியில் தாம் கண்டுபிடித்து இழுத்துவந்த இன்னும் சிலரையும் எம்முடன் சேர்ந்து பலாலி வீதி நோக்கி நடக்கச் சொன்னார்கள். ஒழுங்கை வழியே நடந்துகொண்டு இருபுறமும் பார்க்கத் தொடங்கினேன். கட்டிட இடிபாடுகளுக்கிடையில் இரத்தக் காயங்களுடன் தெரிந்த கால்கள் இரண்டு, உடலைக் காணவில்லை. சில மீட்டர்கள் தூரத்தில் உயிரற்றுக் கிடந்த வயோதிபர் ஒருவரது உடல். முகம் முழுதும் இரத்தத்தினால் தோய்ந்திருக்க கடுமையாகக் காயங்களுக்கு அவர் உள்ளாகியிருக்கிறார் என்று தெரிந்தது. பலாலி வீதியை அடைந்த போது அப்பகுதியெங்கும் அன்றிரவு முழுவதும் காந்தியின் பேய்கள் ஆடியிருந்த நரவேட்டை தெளிவாகத் தெரிந்தது. பலாலி வீதியினை அப்பேய்களது தாங்கிகள் உழுது வைத்திருக்க, தெருவோரக் கடைகள் இடிந்துபோய் தரைமட்டமாகியிருக்க அப்பகுதியே சுடுகாடுபோலக் காட்சியளித்தது. பலாலி வீதியின் ஓரத்தின் அமைந்திருந்த சைக்கிள் திருத்தும் கிளியண்ணையின் கடையின் முன்னால் ஏற்கனவே சிலரை இழுத்துவந்து நிறுத்தியிருந்தார்கள். அவர்களுடன் சேர்த்து எம்மையும் சுவரைப் பார்த்தபடி நிற்குமாறு பணித்தார்கள். கோண்டாவில் டிப்போ அருகில் இந்திய ராணுவத்தின் முன்னரங்கு அமைந்திருக்க, அப்பகுதியில் இருந்து சுமார் 200 மீட்டர்கள் தொலைவில், வாமாஸ் பகுதியில் புலிகளின் நிலைகள் அமைந்திருந்தன. பலாலி வீதியின் நடுவே நின்று கொண்டிருந்த தாங்கியிலிருந்து 50 கலிபர் துப்பாக்கியினால் புலிகளின் நிலைகள் நோக்கித் தொடர்ச்சியாகத் தாக்கிக்கொண்டிருந்தது இந்திய ராணுவம். நாம் நிற்கவைக்கப்பட்ட கடையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவிலேயே தாங்கி நிலையெடுத்திருந்தது. இடையிடையே இந்தியத் தாங்கியை நோக்கி புலிகளும் துப்பாக்கியினால் சுட்டுக்கொண்டிருந்தார்கள். தாங்கியில் பட்டுத் தெறித்த சன்னங்கள் எமக்கருகிலும் வந்து வீழ்ந்தன. இவ்வாறான ஒரு தாக்குதலில் புலிகள் ஆர் பி ஜி உந்துகணையினால் தாக்கியிருக்கவேண்டும், தாங்கி தப்பித்துக்கொண்டது. ஆத்திரமடைந்த இந்திய ராணுவம் நாம் நிற்கவைக்கப்பட்டிருந்த கடையினை நோக்கி தாங்கியின் பீரங்கியினால் தாக்கியது. கடையின் மேற்பகுதிச் சீமேந்துக் கூரை இடிந்து எம்மீது வீழ்ந்தது. அங்கே நின்றிருந்த பலருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. தம்பியின் நெற்றியில் சீமேந்து கிழித்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. எம்மைக் கொல்லப்போகிறார்கள் என்று எண்ணி அலறத் தொடங்கினோம். ஆனால் அவர்களோ எம்மைப் பார்த்துச் சிரித்து எக்காளமிட்டார்கள். காயப்பட்டு கீழே குருதி சொட்டக் கிடந்த பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு சிறிதும் இருக்கவில்லை. எம்மை நோக்கித் தாக்குதல் நடத்தியதே அவர்கள் தான் என்கிறபோது எம்மைக் காப்பாற்ற வேண்டிய தேவையென்ன அவர்களுக்கு? தம்பியின் நெற்றியில் இருந்து வழிந்துகொண்டிருந்த குருதியைக் கட்டுப்படுத்த தனது சட்டையின் கைப்பகுதியைக் கிழித்து தகப்பனார் கட்டுப்போட்டார். இரத்தம் ஓடுவது குறைந்தபோதிலும், முழுதுமாக நிற்கவில்லை. அவன் களைத்துப் போய் மயங்கிவிட்டான். அவனது உடலில் இருந்து உயிர் பிரிந்துவிட்டதென்று ஒருகணம் நாம் அச்சப்பட்டோம். அவனைப்போலவே இன்னும் சிலரும் இரத்தவெள்ளத்தில் கீழே மயக்கமுற்றுக் கிடந்தார்கள். ஒருசிலர் இறந்தும் இருக்கலாம். ஆனால் யாரும் யாரையும் காப்பற்றும் நிலையில் இருக்கவில்லை. தமது உயிருக்கே உத்தரவாதம் இல்லாத நிலையில் அருகில் இருப்பவர் பற்றி எவரும் அதிகம் சிந்திக்கவில்லை. சில மணித்துளிகள் அப்படியே கழிந்துவிட அப்பகுதியெங்கும் இருந்து அங்கு இழுத்துவரப்பட்ட இன்னும் 30 முதல் 40 வரையான பொதுமக்களும் எம்முடன் இணைந்துகொண்டார்கள். உரும்பிராய் தெற்கு, அன்னுங்கை, டிப்போவிற்குப் பின்புறமாக அமைந்திருந்த குடியிருப்புக்கள் என்று பல பகுதிகளில் இந்திய இராணுவத்திடம் மாட்டுப்பட்ட பொதுமக்கள் அவர்கள். ஆண்களை நிற்கவைத்துவிட்டு பெண்களையும் சிறுவர்களையும் அப்போது இருக்கவைத்தது இந்திய இராணுவம். எமக்குள் நாம் பேசத் தொடங்கினோம். அன்று காலை முழுவதும் தாம் கண்ட அகோரங்களை சிலர் வர்ணிக்கத் தொடங்கினார்கள். இந்திய இராணுவத்தின் ஒரு படைப்பிரிவு கத்திகளால் தமது உறவினர்களை வெட்டிக் கொன்றதாகவும், வயது வேறுபாடின்றி சுட்டுப் படுகொலை செய்ததாகவும் அவர்கள் பேசினார்கள். பாமா அக்கா வீட்டில் , "ஐயோ எங்களை வெட்டாதையுங்கோ " என்று யாரோ மன்றாடி அழுதது நினைவிற்கு வந்தது. வீதிகளில் கொல்லப்பட்டிருந்த தமிழர்களின் உடல்களை நாய்கள் இழுத்துச் சென்று உண்டதைத் தாம் கண்டதாக ஒரு பெண்மணி கூறினார். இப்படிப் பலர் தமது அனுபவங்களை மற்றையவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அப்பொழுதுவரை எமது அயல் வீட்டில் அன்றிரவு நடத்தப்பட்ட அகோரத்தை நாம் அறிந்திருக்கவில்லை. சுமார் 3 மாத காலத்தின் பின்னரே அப்படுகொலை குறித்த மொத்தமும் எமக்குத் தெரியவந்தது. அதுகுறித்து பின்வரும் பகுதியில் எழுதுகிறேன்.
  7. சாத்தானின் படையுடனான எனது அனுபவம் இடம்: கோண்டாவில், யாழ்ப்பாணம் காலம் : ஐப்பசி, 1987 அது ஒரு மாலை வேளை. பலாலி வீதியூடாக இந்திய இராணுவம் பலாலியில் இருந்து யாழ்நகர் நோக்கி நகர்ந்துவருவதாக அயலில் பேசிக்கொண்டார்கள். மிகக்கடுமையான செல்வீச்சு எமது பகுதிநோக்கி நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது. காலையில் இருந்து அயலில் உள்ளவர்கள் நல்லூர் கந்தசுவாமிக் கோயிலுக்குப் போவதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்தனர். "நீங்கள் போக இல்லையோ? இருக்கவே போரியள்? வந்தாங்கள் எண்டால் சுட்டுக் கொண்டு போடுவாங்கள். உரும்பிராயில நியாயமான சனத்தைக் கொண்டுட்டாங்களாம். நாங்கள் போகப்போறம். கொப்பரிட்டைக் கேட்டுப்போடு நீங்களும் வாங்கோ" என்று பக்கத்துவீட்டு பாமா அக்கா கூறிவிட்டுச் சென்றார். அவர் சொன்னதை தகப்பனாரிடம் கூறினேன். "தேவையில்லை, அவை போறதெண்டால் போகட்டும், நாங்கள் வீட்டிலை இருப்பம்" என்று ஒரே போடாய்ப் போட்டுவிட்டார். முதல் நாள் மாலையில் இருந்து எமது ஒழுங்கையில் சில போராளிகள் ஆயுதங்களோடு தரித்து நின்றிருந்தார்கள் நான்கு அல்லது ஐந்து பேர் இருக்கலாம். எமது வீட்டின் முன்னால் அமர்ந்திருந்த அவர்களுக்கு தேநீரும் சில உணவுப் பொருட்களையும் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்னைப்போலவே அருகில் இருந்தவர்களும் அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். தகப்பனாரின் முகத்தில் ஈயாடவில்லை, வேறு நேரமாக இருந்திருந்தால் என்னை கொடுமையாகத் தாக்கியிருப்பார், ஆனால் புலிகளின் பிரசன்னம் அவரைத் தடுத்து விட்டிருந்தது. உரும்பிராய்ப் பகுதியை வட்டமடித்தபடி இந்திய விமானப்படையில் எம் ஐ 24 உலங்குவானூர்திகள் வானிலிருந்து மிகக்கடுமையான கனரக பீரங்கித் தாக்குதலையும் இயந்திரத் துப்பாக்கித் தாக்குதலையும் நடத்தத் தொடங்கியிருந்தன. அவை வானில் வட்டமடித்தவேளை கோண்டாவில் டிப்போவின் மேலாகவும் வந்துபோயின. புலிகள் அப்பகுதியில் நிற்பதைக் கண்டால் எமது பகுதிமீதும் தாக்குதல் நடக்கலாம் என்று அஞ்சிய நாம் வீட்டினுள் புகுந்துகொண்டோம். சில நாட்களாகவே மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. சந்தைகளும் இயங்கவில்லை. வீட்டில் கிடந்த பொருட்களைச் சேர்த்து சிற்றன்னையார் சமைத்திருந்ததை மதியம் அனைவரும் உட்கொண்டோம். மதியவேளைக்குப் பின்னர் செவீச்சின் உக்கிரம் அதிமானது. ஒவ்வொரு செல்லும் ஏவப்படும் போது எழுப்பும் ஒலியும், அது வீழ்ந்து வெடிக்கும்போதும் எழும்பும் ஒலியும் மிகத் துல்லியமாக‌ இப்போது கேட்கத் தொடங்கின. ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தே அவற்றினை ஏவுகிறார்கள் என்பது தெரிந்தது. சுமார் பத்து செக்கன்களுக்கு ஒன்று என்ற ரீதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. எமது வீட்டின் மேலாகப் பறந்துசென்று கோண்டாவில்ச் சந்திப்பகுதியில் அவை வீழ்ந்து வெடித்தன. ஒவ்வொருமுறையும் அவை வந்து வெடிக்கும்போது எங்கள் வீட்டின் கூரைகள் சலசலத்து, கீழே வீழ்ந்து நொறுங்குவது தெரிந்தது. வீட்டின் பின்புறத்தில் ஒடுங்கலான பகுதியொன்றில் சீமேந்தினால் கட்டப்பட்ட கூரைப்பகுதியின் கீழ் நாங்கள் நின்றுகொண்டோம். வீட்டின்மீது செல் வீழ்ந்தாலும் நாம் நின்றபகுதி பாதுகாப்பானது என்பது எமது எண்ணம். சுமார் பகல் 2 மணியிலிருந்து இரவு 8 மணிவரை அவ்விடத்திலேயே அசையாது அமர்ந்திருந்தோம். இடைவிடாது நடத்தப்பட்ட செல்வீச்சினால் மனதளவிலும், உடலலளவிலும் அச்சத்துடன் நடங்கியபடி அங்கு அமர்ந்திருந்தோம். இரவாகியிருந்தாலும் கூட செல்கள் எமக்கு மேலால் பறந்து சென்று வெடித்தபோது மின்னல் பாய்ச்சியதுபோன்ற வெளிச்சத்தை ஏற்படுத்திச் சென்றது. ஒவ்வொருமுறையும் வீழ்ந்து வெடிக்கும் செல்களினூடு இதயமும் நின்று மீளவும் இயங்கியதுபோன்ற வலி.
  8. நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா............. கொஞ்ச நேரம் வெளியில் நிற்பவர்களுடன் பேசிக் கொண்டிருங்கள்............... நான் இந்த செட்டை முடித்து விட்டு வருகின்றேன்...........' 'ஏன், உங்களிடம் இன்னொரு நெட் செட் இல்லையா................இரண்டு நெட் போட்டால் எல்லோரும் ஒரே நேரத்தில் ஆடலாமே............' சிட்டாவிடம் ஏராளமான தலைமைத்துவப் பண்பு இருப்பது அவனை சந்தித்த ஒரு நிமிடத்திலேயே தெரிந்தது. இதோ வந்து விடுகின்றேன் என்று சொல்லிவிட்டு நான் விளையாட்டைத் தொடர்ந்தேன். சிட்டா ஏழரை மணிக்கு பின்னர் வந்து வெளியில் நின்றவர்கள் ஒவ்வொருவருடனும் கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் என்று நான்கு மொழிகளிலும் தன்னை அறிமுகப்படுத்தினான் என்றே காதில் விழுந்த அவனுடைய பேச்சுகளில் இருந்து தெரிந்தது. அவன் அநேகமாக தெலுங்கு தேசத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றே எனக்குப்பட்டது. தெலுங்கு மக்கள் அவர்களது பெயர்களின் ஒரு பகுதியாக தங்களது சொந்த ஊர்களின் பெயர்களையும் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கின்றது. சிட்டா என்பது அவனுடைய ஊரின் பெயரின் ஒரு சுருக்கிய வடிவமாக இருக்கலாம். அவனுடைய நண்பர்கள் அவனை இந்தப் பெயரால் கூப்பிட்டு அதுவே நிரந்தரம் ஆகிவிட்டது போல. சிட்டா என்பது சிட்டு என்பது போலவும் அழகாக இருந்தது. தமிழர்களிடமும் இதே வழக்கம் ஓரளவு இருக்கின்றது. எம்ஜிஆரில் இருக்கும் எம் என்பது மருதூர் என்பதையே குறிக்கும். அவர் இலங்கையில் இருக்கும் நாவலப்பிட்டி என்னும் ஊரிலேயே பிறந்திருந்தாலும், கேரளவில் இருக்கும் அவரது பெற்றோர்களின் ஊரான மருதூர் என்பதையே தன் பெயருடன் சேர்த்து வைத்திருந்தார். நாவலப்பிட்டி கோபாலன் ராமச்சந்திரன் என்ற பெயர் அவருக்கு இருந்திருந்தால், நடிகர் சிவாஜிக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் போட்டியாக வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் அவர்களை இரண்டாம் இடத்தில் தள்ள இன்னொருவர் தான் வந்திருக்கவேண்டும். நாவலப்பிட்டி என்னும் ஊரின் பெயரே கோபாலன் ராமச்சந்திரனை ஒன்றும் இல்லாமல் ஆக்கியிருக்கும். மிகவும் புகழ்பெற்ற கர்நாடக சங்கீத பாடகி எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. மதுரை அவருடைய சொந்த ஊர், சண்முகவடிவு என்பது அவருடைய தாயாரின் பெயர். ஒருவரின் பெயரில் அவருடைய அன்னையின் பெயரும் சேர்ந்து இருப்பது முதலில் ஆச்சரியமாக இருந்தது. 'எப்படி இருக்கின்றீர்கள் சிட்டா...................... 'சூப்பராக இருக்கின்றேன்................. ஆமா, நீங்க கன்யாகுமரிப் பக்கமா..............' 'இல்லை சிட்டா, அதுக்கும் கீழே................. யாழ்ப்பாணம்.............' சிட்டா புரியாமல் ஒரு கணம் என்னையே பார்த்தான். நான் ஶ்ரீலங்கா என்றேன். சிட்டா தமிழ் இல்லை என்பது ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது. மொத்தமாக 18 பேர்கள் அன்று வந்திருந்தார்கள். சரியாக மூன்று அணிகளாக பிரிக்கலாம். ஒரு அணி வெளியில் நிற்க, மற்ற இரண்டு அணிகளும் 21 புள்ளிகள் அல்லது 15 புள்ளிகளுக்கு விளையாடலாம். தொடர்ச்சியாக இரண்டு செட்டுகள் விளையாடிய அணி வெளியே வந்து நிற்பார்கள். எங்களிடம் மூன்று நெட் இருக்கின்றன, ஆனால் 18 பேர்கள் இருக்கும் போது இரண்டாவது நெட் போடுவது அவ்வளவு நல்ல ஒரு யோசனை அல்ல என்று சிட்டாவிற்கு எங்களின் அடிப்படை பொறிமுறைகளை விளங்கப்படுத்தினேன். சிட்டா நிறையவே யோசித்தான். சிட்டா ஒரு படு மோசமான விளையாட்டுக்காரனாகவே இருந்தான். கரப்பந்தாட்டத்திற்கு தேவையான திறமைகள் எல்லாமுமே அவனுக்கு சராசரிக்கும் குறைவாகவே வாய்த்திருந்தன. ஆனால் மிகவும் நன்றாக எல்லோருடனும் பழகிக் கொண்டிருந்தான். அவன் ஒரு பெரிய நிறுவனத்தில் தொழில்நுட்பத்துறையில் மென்பொருளாளராக வேலை செய்து கொண்டிருந்தான். அத்துடன் காப்புறுதி மற்றும் வேறு சில சேவைகளும் வழங்கும் ஒரு சிறிய நிறுவனத்தையும் சொந்தமாக நடத்திக் கொண்டிருந்தான். அவன் எங்களுடன் கரப்பந்தாட்டம் விளையாட வந்திருக்கின்றானா அல்லது வாடிக்கையாளர்களை சேர்க்க வந்திருக்கின்றானா என்று எவராவது கேட்டால் அது ஒரு நியாயமான கேள்வியே. எப்போதும் எட்டு மணி அல்லது அதற்கும் பிந்தியே வந்தான். அவனை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்வதற்கு எவரும் விரும்பி முன்வருவதில்லை. ஆனால் அங்கு வருபவர்கள் எல்லோருக்கும் விளையாடும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை எவரும் வெளிப்படையாக எதிர்ப்பதும் இல்லை. ஒரு நாள் சிட்டா ஏழு மணிக்கே வந்துவிட்டான். அங்கு நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். 'நான் இன்றிலிருந்து ஒரு ஸ்பைக்கர் ஆகப் போகின்றேன்........................' 'ஆகலாம் சிட்டா..............' 'நீங்களே அடிப்பதை பார்த்த பின் தான் எனக்கு ஒரு நம்பிக்கை.............. நீங்கள் அடிக்கும் போது நான் அடிக்க முடியாதா.............' உயரத்தையும், வயதையும் குறித்தே அதை அவன் சொல்லியிருக்கவேண்டும். அன்று நெட் கட்டுவதற்கும், எல்லைகளை போடுவதற்கும் ஓடியாடி உதவிசெய்தான். பின்னர் அடிப்பதற்கு ஆயத்தமாக வந்து நின்றான். 1, 2, 3 என்று மூன்று கால் அடிகள் ஓடி, மூன்றாவதில் பாய்ந்து, நெட்டிற்கு மேலே கையைச் சுற்றி நான் போடும் பந்தை அடிக்க வேண்டும் என்று சொன்னேன். முதல் முயற்சியில் பந்து அவன் கையில் படவேயில்லை. பந்து தலையின் பின்புறமாக விழுந்தது. இரண்டாவது முயற்சியில் அவன் பாய்ந்து எழும்பி மீண்டும் கீழே வந்து நின்று கொண்டு, ஒரு ஆளுக்கு அடிப்பது போல பந்தை அடித்தான். அது நெட்டின் கீழால் போனது. 'சிட்டா, நீ மேலேயே பந்தை சந்திக்க வேண்டும்....................' 'இன்னுமொரு தடவை போடுங்கள்................. இந்த தடவை பாருங்கள் என்னுடைய அடியை...............' 'சிட்டா, நீ குடித்திருக்கின்றியா.....................' அவன் கதைக்கும் போது மணம் வந்து கொண்டிருந்தது. 'ஆமாம்............... நான் எப்போதுமே குடித்து விட்டுத் தான் வருவேன்.............. ஏன், இங்கு விளையாடும் போது குடித்திருக்கக் கூடாதா................' 'அப்படியெல்லாம் ஒரு ஒழுங்குமுறை இங்கு இல்லை.............. ஆனால் உன்னால் சரியாகக் கவனிக்க முடியாமல் இருக்கும்............' எவ்வளவு குடித்திருந்தாலும் தன்னால் எப்போதும் விடயங்களில் கவனமாக இருக்க முடியும் என்று சொன்னான். தினமும் காலையிலேயே ஆரம்பித்து விடுவானாம் என்றான். எப்பொழுதும் காரிலும் இருக்கும் என்றான். இப்பொழுது எனக்கும் தரவா என்றும் கேட்டான். 'தினமுமா..................' 'ஆமாம்..............' 'ஈரல், உடல் பழுதாகிப் போகாதா..................' 'இல்லை........... அதற்கு நான் ஒரு கைமருந்து வைத்திருக்கின்றேன். சில மூலிகைகளை அவித்து, அந்தக் கஷாயத்தை தினமும் படுக்கைக்கு போக முன் குடிப்பேன். அது ஈரலையும், முழு உடலையும் சுத்தப்படுத்திவிடும்..................' இங்கு கோவிட் காலத்தில், வீட்டில் சுத்தமாக்க வைத்திருக்கும் குளோரெக்ஸ், லைசோல் போன்றவற்றில் கொஞ்சத்தை குடித்தால், உள்ளிருக்கும் கோவிட் வைரஸ் அழிந்து விடும் தானே என்று அன்று அதிபராக இருந்தவர் சொல்லியிருந்தார். அவர் தான் இப்போதும் மீண்டும் அமெரிக்காவின் அதிபர். சிட்டா சொன்னது அதை ஞாபகப்படுத்தியது. 'இதையெல்லாம் நீ ஏன் செய்ய வேண்டும், சிட்டா, ஓரளவாகப் போய்க் கொண்டிருக்க வேண்டியது தானே..................' 'இல்லை........... நான் ஒன்றை நிரூபித்துக் கொண்டிருக்கின்றேன்.................' 'என்ன அது.....................' 'இது ஒன்றும் கூடாத விடயம் அல்ல................ இதனால் உடலுக்கு ஒரு கேடும் இல்லை...........' 'யாருக்கு நிரூபிக்கின்றாய்..................' 'இந்த உலகத்துக்கு.........................' பலருக்கும் உலகமே ஒரு போட்டியாக அல்லது எதிரியாக தெரிகின்றது போல. இவர்கள் உலகம் என்று சொல்வது ஒரு நாலு மனிதர்களாக இருக்கலாம், நாற்பது மனிதர்களாக கூட இருக்கலாம். யார் என்றாலும் அவர்களுக்கு என்று சொந்த வேலைகளும், சிக்கல்களும் இருக்கும் தானே. யார், எதை நிரூபிக்கின்றார்கள் என்றா சகமனிதர்கள் இங்கே அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு காத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையை தினமும் நியாயப்படுத்த முயல்வது பரிதாபமான ஒரு நிலையே. சிட்டா ஒரு ஸ்பைக்கர் ஆகவில்லை, ஆனால் தினமும் வந்து கொண்டேயிருந்தான். ஒரு நாள் விளையாடி முடிந்த பின் என்னுடன் தனியே கதைக்க வேண்டும் என்று கூட்டிச் சென்றான். இனிமேல் விளையாட வரமாட்டேன் என்று சொன்னான். யாராவது அவனை ஏதாவது சொல்லி அல்லது திட்டி விட்டார்களா என்று கேட்டேன். அவனின் நிறுவனம் அவனை அமெரிக்காவின் மேற்கு கரையில் இருந்து கிழக்கு கரைக்கு மாற்றுகின்றார்கள் என்று சொன்னான். குடும்பத்தை இங்கே விட்டுவிட்டு அவன் மட்டும் உடனடியாக தனியே அங்கே போவதாகச் சொன்னான். பின்னர் அந்த வருட பாடசாலை ஆண்டு முடிந்தவுடன் குடும்பமும் அங்கே வந்து விடுவார்கள் என்றான். சில கணங்கள் இறுக்கிப் பிடித்தபடி நின்றான். பின்னர் சடாரென்று ஒன்றுமே சொல்லாமல் அவனுடைய காரை நோக்கி நடந்தான். விளையாட்டுத் திடலில் இருந்த மின் விளக்குகள் ஏற்கனவே அணைக்கப்பட்டிருந்தன. கார்களின் தரிப்பிடத்தில் மட்டும் தெரு விளக்குகள் மஞ்சள் நிறத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. அவனுடைய காரைத் திறந்த சிட்டா ஒரு கணம் அங்கிருந்து என்னைப் பார்த்தான். அவனுடைய கண்கள் மினுமினுத்தன. பல வருடங்களின் முன் இங்கு மிகப் பிரபலமான ஒரு தொழில்முறை கூடப்பந்தாட்ட வீரர் பார்வையாளர் ஒருவரை அடித்துவிட்டார். அந்தப் பார்வையாளர் தான் வீரரை மிகவும் தகாத வார்த்தைகளாள் சீண்டியிருந்தார். மிகவும் முன்கோபியான அந்த வீரரால் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இங்கு தொழில்முறை வீரர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் மிகவும் இறுக்கமானவை. அந்த வீரரை ஒரு வருடம் விளையாட்டுகளில் இருந்து இடைநிறுத்தினார்கள். அந்த வருடக் கொடுப்பனவும் இல்லாமல். அது ஒரு 20 அல்லது 30 மில்லியன் டாலர்கள் வரும். அது பெரிய செய்தியானது. அந்த வீரரின் பாடசாலை நாட்களில் அவருடைய பயிற்றுவிப்பாளராக இருந்தவரிடம் ஒரு பேட்டி எடுத்தார்கள். அவர் இப்படிச் சொல்லியிருந்தார் - நான் தினமும் செய்திகளைப் பார்க்க ஆரம்பிக்கும் முன் கடவுளிடம் வேண்டிக் கொள்வேன். இந்த வீரன் நேற்றிரவு துப்பாக்கியால் யாரையோ சுட்டான் என்ற செய்தி இருக்கவே கூடாது என்று தினமும் வேண்டிக் கொள்வேன் என்றார். சிட்டா இங்கிருந்து போன பின் அவனுடன் எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் போனது. சிட்டாவைப் பற்றிய தகவல்கள் எதுவும் என்னை வந்தடையவே கூடாது என்று இடைக்கிடை நினைத்துக்கொள்வேன்.
  9. அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பேச முடியவில்லை என்பதே சரியாக இருக்கும். இதயத்தின் அடியில் இருந்து எழுந்த அந்தச் சோகம், தொடர்ந்து சொற்களை வரவிடாமல், விழுங்கிக் கொண்டிருந்தது. றீட்டா புரிந்து கொண்டாள், இவர்கள் ஏன் வந்திருக்கிறார்கள் என்று. “உள்ளே வாருங்கள்” அன்பாக அவர்களை அழைத்தாள். மேற்கொண்டு றீட்டா எதுவும் பேசவில்லை. பேசக்கூடிய நிலையில் அவளும் இப்போதில்லை. அவர்களது சோகம் அவளிடமும் சேர்ந்து கொண்டது. சூடான உணவுகளையும், தேநீரையும் அவர்கள் முன் கொண்டு வந்து வைத்தாள் றீட்டா. "நீண்ட தூரப் பயணத்துக்கும், குளிரான இந்த நேரத்துக்கும், இச்சூடான உணவும், தேநீரும் உங்களுக்கு இதமாக இருக்கும். தயவு செய்து உணவருந்துங்கள். “நீங்கள் உணவருந்தி முடிவதற்குள் நான் 'போன்' செய்து பாதர் அம்ரொஸ் றூமரை இங்கு வரவழைக்கிறேன். அவர் உங்களுக்கு முழு விபரமும் தருவார். நான் அவரது வீட்டுச்சமையல் வேலை செய்பவள். எனது பெயர் ரீட்டா காபென்பிறான்ட்ல்." டிசம்பர் 7ம் திகதி செக் நாட்டில் இருந்து ஜேர்மனியில் உள்ள பயர்ன் மாநில எல்லையை நோக்கி முழங்கால் வரை புதையும் உறைபனியூடாக நால்வர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அதில் பூரணநாயகியும் இருந்தாள். அவளுடன் இன்னும் ஒரு தமிழ் இளைஞனும், இரண்டு ஏஜென்சிகளும் நடந்து வந்தனர். இரண்டு ஈழத் தமிழர்களதும் அணிந்திருந்த உடைகள் குளிர்காலத்திற்கு ஏற்றவை அல்ல. . பனிக்குளிர், பூரணநாயகி அணிந்திருந்த மெல்லிய உடுப்புகளுக்கூடாகவும், அவளது சாதாரண சப்பாத்துக்கூடாகவும் உட்புகுந்து, அவளது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் உறையச் செய்து கொண்டிருந்தது. இவர்களது திசை ஓசர் மலையை நோக்கிய குறுகிய ஒரு பாதையாக இருந்தது. ஒரு கிலோமீற்றர் உயர மலையை ஒரு விதமாகச் சென்றடைந்தார்கள். அந்த மலையின் முடிவில் ஆரம்பமாகியது ஜேர்மனிய எல்லை. முழங்கால் வரை உள்ள பனியில் காலை வைத்து திரும்ப எடுத்து நடப்பதே பெரும் சிரமமாக இருந்தது. இப்படி ஒரு தடவை காலை பனியில் வைத்து எடுக்கும் போது காலில் போட்டிருந்த இளைஞனின் சப்பாத்து பனிக்குள் புதைந்து போனது அதைத்தேடி எடுக்க அந்த இளைஞனுக்கு அவகாசமில்லை. முன்னால் சென்று கொண்டிருக்கும் அந்த ஏஜென்சிகள் தங்கள் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். பின்னால் வரும் இவ் இருவரைப் பற்றிய கவலைகள், அவர்கள் படும் வேதனைகள் அவர்களுக்குத் தேவையில்லாதிருந்தது. அவர்களுக்குத் தேவையான 'தரகு'ப் பணம் அவர்களுக்குக் கிடைத்து விட்டது. ஜெர்மனிய எல்லைக்குள் இருவரையும் விட்டுவிட்டால் ஏஜென்சிகளின் வேலை முடிந்து விடும். இருட்டுநேரம் பார்வையைத் தவறவிட்டால் ஏஜென்சிகள் மறைந்து விடுவார்கள். இளைஞன் சப்பாத்தைப் பனிக்குள் விட்டுவிட்டு காலில் போட்டிருந்த காலுறையுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தான் பூரண நாயகியால் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஜேர்மனிய எல்லைக்குள், 500 மீட்டர் தூரத்தில் இருந்த ஹோட்டல் ஒன்றின் வெளிச்சம் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. பூரணநாயகியால் மேற்கொண்டு நடக்க முடியாத நிலையில் அந்த பனிக்குள் தள்ளாடியபடி இருந்து விட்டார். மறுநாள் பொழுது வழமைபோல் விடிந்தது. ஹோட்டல் உரிமையாளர் யூர்கன் கோல்ஸ், தனது ஹோட்டலின் முன்பாக நின்ற இளைஞனை உற்று நோக்கினார். ஒரு காலில் Cowboy Stiefelம், மறுகாலில் வெறும் காலுறையும் அணிந்து கொண்டு, பயத்துடன் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனை அநுதாபத்துடன் அணுகினார். "ஏதாவது உதவி வேண்டுமா?" என்று அந்தத் தமிழ் இளைஞனை பார்த்து அவர் ஜேர்மனிய மொழியில் கேட்டதை, அந்த தமிழ் இளைஞன் விளங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.ஆனாலும் தான் ஒரு தடவை தொலைபேசியில் கதைக்கவேண்டுமென்று தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அந்த இளைஞன் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட யூர்கன் கோல்ஸ், அவனைத் தனது தொலைபேசியைப் பாவிக்க அநுமதித்தாரர். தொலைபேசியில் அந்த இளைஞன் கதைத்து முடித்தபின் யூர்கன் கோல்ஸிற்கு தனது நன்றிகளைத் தெரிவித்து விட்டு வெளியில் நடக்கத் தொடங்கினான். காட்டுப் பாதையொன்றில் திடீரென வந்த ஜேர்மனியப் பொலிஸாரின் கண்களில் அந்த இளைஞன் பட்டு விடுகிறான். கேள்விகளுக்கு மேல் அவர்கள் அந்தத் தமிழ் இளைஞனை கேட்கத் தொடங்கினார்கள். அவனும் எதையும் மறைக்க விரும்பவில்லை நடந்தவற்றை அப்படியே. ஒப்புவித்தான். பூரணநாயகியைத் தனது சகோதரியெனச் சொல்லி வைத்தான். ஆனால் உண்மையிலேயே பூரணநாயகி அவன் சொந்தச் சகோதரியல்ல. நிலைமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பொலிஸார், அந்த இளைஞனையும் கூட்டிக் கொண்டு பூரணநாயகியைத் தேடிச் சென்றார்கள். அவர்கள் கண்டது, பனிகளுடன் உறைந்து போயிருந்த பூரணநாயகியின் உடலைத்தான். ஜேர்மனியப் பத்திரிகைகள், இத்தகவலை பத்திரிகைகளில் பிரசுரித்த போதும், யாருமே பூரணநாயகியைப் பற்றி உரிமை கோராத பட்சத்தில், அவரது பூதவுடல் கிறிஸ்தவ தேவாலயத்தின் பின்புறமாக இருந்த சேமக் காலையில் டிசம்பர் 14ந் திகதி கத்தோலிக்க முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. அவளின் கல்லறையில் "அமைதியாக உறங்கு" என்ற வாசகங்கள் பொருந்திய மரத்தினால் செய்த சிலுவையை வைத்து, அந்த நகரத்து மக்கள் பூக்களினால் அஞ்சலி செய்தனர். "நான் கத்தோலிக்க பாதிரியார் அம்புரோஸ் ரூமர்" பாதிரியார் தன்னை அந்த எட்டுப் பேருக்கும்" அறிமுகம் செய்து கொண்டார். தன்னுடன் கூடவந்த அந்த நகரத்து மேயர் ஜோகன் முல்பவுரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் எல்லோருமாக பூரண நாயகியை அடக்கம் செய்த இடத்துக்குச் சென்றனர். நன்றாக இருண்டு விட்ட நேரத்திலும், பயங்கரமான குளிருக்கு மத்தியிலும் எல்லோரும் பூரணநாயகியின் கல்லறை முன் நின்றனர். எண்மரில் ஒருவரான ஒரு பெண், இவர் பூரண நாயகியின் மூத்த சகோதரி, கல்லறை மேல் விழுந்து கதறியழுத காட்சி மேஐரை கரைத்துவிட்டது. "ஒரு பெண்ணின் சடலம். இறந்தது டிசம்பர் 7ந் திகதி காலை 9.45 மணிக்கு, என்ற தகவலே எனக்குத் தெரியும். ஆனால்...... இப்படி ....இதன் பின்னால் ஒரு மனித சோகத்தை நான் எதிர்பர்க்க வில்லை." என்று மேஜர் கண்கள் கலங்க அந்த இடத்தில் கூறினார். "பூரண நாயகி ஒரு இந்துவாக இருந்த போதிலும், அவரை அடக்கம் செய்து அஞ்சலி செய்வது எங்களது கடமை. நான் அரசியல்வாதியாகவோ, காவல் துறையிலோ இருக்க விரும்பவில்லை. அகதிகளாக அல்லல் பட்டு, உயிர் வாழ நம்பிக்கையுடன் ஓடி வரும் மக்களை அரவணைத்து ஆதரவு தரவே விரும்புகிறேன" எனப் பாதிரியார் அம்புரோஸ் ரூமர் தனது உரையில் தெரிவித்தார். ஏஜென்சிகளை நம்பி, ஜேர்மன் எல்லையில் ஆற்றைக் கடக்கும் போதும், குளிரினாலும் பல அகதிகள் இறந்து கொண்டிருக்கிறார்கள் லொறிகளில் அடைத்து வரப்பட்டு மூச்சுத்திணறியும் பலர் இறந்திருக்கிறார்கள். 1995ம் ஆண்டு ரூமேனியாவில் இருந்து ஹங்கேரி ஊடாக ஜேர்மனிக்கு கொண்டு வரப்பட்ட 18 அகதிகள் லொறிக்குள் மூச்சுத் திணறி இறந்திருக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஏஜென்சிகளை நம்பி, பெரும் பணத்தைக் கொடுத்து, உயிரைப் பணயம் வைக்கும் செயல் இதுவென ஜேர்மனிய காவல்துறை தெரிவித்திருந்தது. ஐரோப்பிய நாடுகள், அகதிகளாக வரும் வெளி நாட்டவர்கள், தங்கள் நாடுகளுக்குள் நுளைய முயலும் ஒவ்வொரு வழிகளையும் கண்டறிந்து மூடி வருகிறார்கள். ஆனாலும் அகதிகளாக வருபவர்கள் ஏதாவது வழியில் முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். கிருபன் இணைத்திருந்த ஷோபா சக்தியின் “பொப்பி என்பது புனை பெயர்” கதையை வாசித்த போது, எனக்கு நினைவுக்கு வந்தது பூரணநாயகியின் சம்பவம்தான். 1995ம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவம். நான் நினைக்கிறேன், ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் ஈழத் தமிழர்களின் முதல் மரணம் பூரணநாயகியினுடையதாகவே இருக்க வேண்டும். 07.12.1995இல் நிகழ்ந்த அந்த மரணத்தைப் பற்றி அப்பொழுது நான் எழுதியது இது. சரியாக முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு (07.12.2025) கிருபன் பூரணநாயகியை நினைவூட்டியிருக்கின்றார்.
  10. இவ் வகையான குடியேற்றங்கள் முன்னரும் நிகழ்ந்தது. டேவிட் ஐயாவின் 'காந்தியம்' அமைப்பு, 1970கள் மற்றும் 1980களில் வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் மருத்துவர் சோ. இராஜசுந்தரத்துடன் இணைந்து டேவிட் ஐயா (எஸ். ஏ. டேவிட்) இந்த அமைப்பை நிறுவி அதன் மூலம் 1970களில் ஏற்பட்ட இன வன்முறைகளால் / இனப்படுகொலைகளா; இடம்பெயர்ந்த சுமார் 5000 மலையக (இந்திய வம்சாவளி) தமிழர்களை வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மற்றும் திருகோணமலை போன்ற தமிழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்தினர். 80 களின் பின் வன்னியில் பிறந்து போராட்டத்தில் இணைந்து மாவீரர்களான பலரின் முழுப்பெயரை கவனித்தால் தெரியும், அதில் பலரது தந்தையின் பெயர் மலையக / இந்திய வம்சாவளி தமிழர்களின் பெயர்களாக இருக்கும். வன்னி மண்ணின் வீரத்துக்கும் தியாகத்துக்கும் இவர்களின் பங்களிப்பும் ஒரு காரணமாக இருந்தது. தாயகத் தமிழர்கள் வாஞ்சையுடன் இவர்களை அணைத்து அரவணைத்து உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.
  11. எமது வீட்டின் முன்னால் வந்து நின்ற இந்திய இராணுவ அணி வீட்டின் மீது சரமாரியாகத் துப்பாக்கியினால்ச் சுடத் தொடங்கியது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அவரை தொடர்ச்சியான துப்பாக்கி வேட்டுக்கள் எமது வீடு நோக்கி நடத்தப்பட்டன. அந்த இருள்வேளையிலும் எமது வீடு திருவிழாக் கோல போலக் காட்சியளித்தது. சிறிது நேரத்தில் அவர்கள் வீட்டினுள் புகுந்தார்கள். எவரையும் காணாததால் எமது அயல் வீட்டிற்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் எல்லோரு நல்லூரிற்குப் போய்விட்டார்கள் என்று நாம் எண்ணியிருக்க, "ஐயோ, பிள்ளைகள் இருக்கினம், சுடாதேயுங்கோ, வெட்டாதையுங்கோ" என்று அவலக் குரல்கள் கேட்கத் தொடங்கின. "அடக் கடவுளே, அவர்கள் எவரும் நல்லூரிற்குப் போகவில்லை" என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அந்த அவலக் குரல்கள் எவையுமே இந்திய இராணுவத்தின் காதுகளுக்கு ஏறவில்லை. சரமாரியாகச் சுடத்தொடங்கியது இந்தியாவின் சாத்தான் படை. இடைவிடாது 30 நிமிடங்கள் வரை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அதன்பின்னர் எந்த அழுகுரலும் எமக்குக் கேட்கவில்லை. சுமார் காலை 4 மணியிருக்கலாம். கிழக்கில் கீற்றலான வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் நாமிருக்கும் பகுதியும் வெளிச்சமாகி விடும். நிச்சயம் எம்மைக் காண்பார்கள், நாமும் கொல்லப்படுவோம் என்பது உறுதி என்பது புரிந்தது. "சரி, இனி இதுக்குள்ள இருக்கேலாது, கையை தலைக்கு மேலால தூக்கிக்கொண்டு வெளியில போவம்" என்று தந்தையார் மெல்லிய குரலில் கூறிக்கொண்டிருக்க, "யாராவது இன்னும் உள்ளே ஒளிந்திருந்தால் இப்போதே வெளியே வாருங்கள், அல்லது நாம் உள்ளே வந்து சுட்டுக் கொல்வோம்" என்று ஆங்கிலத்தில் ஒருவன் கத்தினான். "வேறு வழியில்லை, இனிமேல் இருந்தால் கொன்றுவிடுவார்கள், சரி வெளியில் வரலாம்" என்று தந்தையார் கூறவும், இருந்த இடத்திலிருந்து எழுந்து, கைகளைத் தலைக்கு மேலே தூக்கிப் பிடித்தப‌டி, "நாம் சிவிலியன்கள், எங்களைச் சுடவேண்டாம்" என்று அழுதபடியே வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினோம். சில அடிகள்தான் முன்னால் எடுத்து வைத்திருப்போம். எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியவில்லை, சுமார் 30 அல்லது 40 இந்திய இராணுவத்தினர் எம்மைச் சூழ்ந்துகொண்டார்கள். சிலர் துப்பாக்கிகளை எமக்கு நேரே பிடித்தப‌டி சுட ஆயத்தமாவது தெரிந்தது. எமது வாழ்க்கை முடிவிற்கு வரப்போவது தெரியவே அழத்தொடங்கினோம். அவர்களுள் ஒருவன் முன்னால் வந்தான். சுமார் 50 இல் இருந்து 55 வயது வரை இருக்கலாம், ஹிந்தியில் ஏனைய இராணுவத்தினருக்கு ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு, "நீ புலிதானே, எங்கே ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்டுக்கொண்டே தந்தையாரை துப்பாக்கியின் பின்புறத்தால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினான். அடியின் அகோரம் தாங்காது அவர் கீழே வீழ்ந்தபடி, "நான் ஒரு தபால் அதிபர், எனக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பில்லை" என்று ஆங்கிலத்தில் அலறத் தொடங்கினார். அருகில் நின்ற இன்னொரு இராணுவத்தினன் எனது பிடரியில் ஓங்கி அறைந்தான், சிறிதுநேரம் கண்கள் கலங்கி தலைசுற்றத் தொடங்கியது. தந்தையார் தன்னை தபால் அதிபர் என்று கூறியதும் அதுவரை அவரைத் தாக்கிக்கொண்டிருந்தவன் தாக்குவதை நிறுத்திவிட்டு பேசத் தொடங்கினான். "இங்கிருந்துதான் புலிகள் தாக்கினார்கள். உனக்குத் தெரியாமல் அவர்கள் இங்கு இருந்திருக்க முடியாது. அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய் என்று சொல். ஆயுதங்களைக் காட்டு, அல்லது உங்கள் அனைவரையும் சுட்டுக் கொல்லப்போகிறேன்" என்று அதட்டினான். நாம் புலிகள் இல்லை, எம்மிடம் ஆயுதங்களும் இல்லை என்று நாம் கூறியதை அவர்கள் கேட்கும் நிலையில் இல்லை. காலை நன்றாக விடிந்திருந்த அவ்வேளையில் எம்மைச் சுற்றி நடந்திருந்த அகோரங்களை அப்போதுதான் நான் கண்டுகொண்டேன். எமது வீட்டின் முற்பகுதி முற்றாக இடிந்துபோயிருக்க, இந்திய இராணுவத்தின் தாங்கியொன்று வீட்டின் முன்னால் நின்றிருந்தது. கூரை முற்றாக எரிந்து போய் கீழே வீழ்ந்து காணப்பட்டது. ஒழுங்கையின் முழு நீளத்திற்கும் கட்டப்பட்டிருந்த மதில்கள் முற்றாக இடிந்து தரைமட்டத்துடன் சேர்ந்திருக்க, மின்கம்பங்கள், வேலிகள், மரங்கள் என்று அனைத்துமே முற்றாகத் தறிக்கப்பட்டு அப்பகுதி முற்றான அழிவினைக் கண்டிருந்தது.
  12. சுமார் 8 அல்லது 9 மணியிருக்கலாம். செல்வீச்சின் அகோரம் குறைந்துபோயிருந்தது. இடையிடையே வீழ்ந்து வெடிக்கும் செல்களைத்தவிர அதிகளவான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. "அவங்கள் அப்படியே ரோட்டால போயிட்டாங்கள் போலக் கிடக்கு, இனிப்பிரச்சினையில்லை, அவங்கள் சனத்துக்கு ஒண்டும் செய்யம்மாட்டங்கள், பயங்கரவாதிகள் சுரண்டினால் ஒழிய அவங்கள் ஏன் சனத்தைச் சுடப்போறாங்கள்"? என்று தந்தையார் கூறினார். நாம் எதுவும் பேசவில்லை. இப்படியே சில மணித்துளிகள் போயிருக்கும். செல்வீச்சின் அகோரம் முற்றாக நின்று போயிருக்க, துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. தூரத்தே கேட்க ஆரம்பித்த அச்சத்தம் நேரம் செல்லச் செல்ல எம்மை நோக்கி நகர்ந்துவருவது தெளிவாகத் தெரிந்தது. புலிகள் பயன்படுத்தும் ஏ கே 47 துப்பாக்கியின் ஒலி நான் நன்றாக அறிந்தது. ஆனால் அதனைக் காட்டிலும் வேறு வகை ஒலியொன்று தொடர்ச்சியாகக் கேட்க ஆரம்பித்தது. அன்று இரவுவரை எமது வீட்டின் முன்னால் நின்று பேசிக்கொண்டிருந்த புலிகளின் குரல்கள் அப்போது கேட்கவில்லை. அவர்கள் போயிருக்கலாம். அல்லது கொல்லப்பட்டிருக்கலாம். தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்களைத் தவிர இன்னொரு ஒலியும் தற்போது கேட்கத் தொடங்கியிருந்தது. பாரிய இரும்புச் சங்கிலியொன்றினை யாரோ வீதியால் இழுத்துவருவது போன்ற ஒரு ஒலி. இது நான் அதுவரை கேட்டிராதது. அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கத் தொடங்கினேன். சிலவேளை நல்லூர்க் கோயில் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சனங்கள் தமது பொருட்களை இழுத்துச் செல்கிறார்களோ என்னவோ என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன். அவ்வொலியும் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருக்க, கனர இயந்திரத் துப்பாக்கியின் ஒலியும் தற்போது மிக அருகில் கேட்கத் தொடங்கியிருந்தது. இலங்கை விமானப்படை வானிலிருந்து நடத்தும் 50 கலிபர் தாக்குலின்போது எழுப்பப்படும் தொடர்ச்சியான தாக்குதல் ஒலியினை ஒத்த ஒலி மிக அருகில் கேட்கத் தொடங்கியது. இரவு 11 அல்லது 12 ஐக் கடந்திருக்கலாம். திடீரென்று வீட்டின் மத்திய பகுதியில் செல்லொன்று வந்து வீழ்ந்து வெடித்தது. வெடிப்பின் தாக்கத்தின் பெரும்பகுதியைக் கூரை தாங்கிக்கொண்டதால் கூரையின் உச்சிப்பகுதி வீட்டினுள் வந்து வீழ்ந்தது. இனிமேல் தொடர்ந்தும் வீட்டில் இருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த நாம் பின்னால் இருந்த மரவள்ளித் தோட்டத்தினுள் சென்று படுத்துக்கொண்டோம். அன்று காலையில்த்தான் நீர்ப்பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும், தோட்டாம் முழுவதுமாக சேறாயிருக்க வேறு வழியின்றி குப்புரப் படுத்துக்கொண்டோம். சிறிது நேரத்தில் எமது வீட்டின் முன்னால் யாரோ சத்தமாகப் பேசுவது கேட்டது. அது இந்திய இராணுவம்தான் என்பது எமக்குத் தெரிந்தது. "வீட்டிலிருப்பவர்கள் வெளியே வாருங்கள்" என்று சத்தமாகக் கத்திக்கொண்டிருந்தான் ஒருவன். நாம் அசையவில்லை. நடுச் சாம இருளில் அவர்கள் முன்னால் செல்லும்போது எமக்கு என்ன நடக்கும் என்பது எமக்கு நன்றாகவே தெரிந்திருந்தது, ஆகவே சத்தமின்றி அங்கேயே படுத்துக் கிடந்தோம். நாம் படுத்திருந்த தோட்டவெளிக்கும் இந்திய இராணுவ அணிக்கும் இடையிலான தூரம் சுமார் 25 அல்லது 30 மீட்டர்கள் மட்டுமே இருக்கும். இருளும், உயர்ந்து வளர்ந்திருந்த மரவள்ளிக் கன்றுகளும் எம்மை முற்றாக மறைத்துவிட்டிருந்தன. அங்கு படுத்திருந்தவாறே எம்மைச் சுற்றி நடக்கும் படுகொலைகளைப் பார்க்கத் தொடங்கினோம்.
  13. இது ஜெயமோகன் அவர்களின் இணைய தளத்தில் இருக்கின்றது. வாசகர் ஒருவரின் கேள்வியும், அதற்கான பதிலும். இதில் வரும் மனிதர்களைப் போன்றவர்களையும், இதே போன்ற கேள்விகளையும் எண்ணற்ற தடவைகள் நாங்கள் பலரும் கடந்து வந்திருப்போம். இன்னும் கடக்கவும் இருக்கின்றோம். ஜெயமோகனின் பதிலும், விளக்கமும் ஒரு தெளிவைக் கொடுக்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். சமீபத்தில் ஒரு உறவினரின் வீட்டில் முன் அறிமுகமில்லாத ஒருவரைச் சந்தித்தேன். உறவினர் அவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். கூடுதல் தகவலாக அந்தப் புதியவர் வாரத்தில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டுமே வேலைக்குப் போகின்றார் என்ற தகவலையும், இரண்டு நாட்கள் வேலையே அவருக்கு போதும் என்ற திருப்தியுடன் அவர் வாழ்வதாகவும் சொன்னார். அந்தப் புதியவர் அங்கிருந்து போன பின், உறவினரின் மனைவி பொங்கி எழுந்துவிட்டார். 'அவர் இரண்டு நாட்கள் தான் வேலைக்கு போகின்றார்.............. ஆனால் அவரின் மனைவி ஐந்து நாட்களும் வேலைக்குப் போகின்றார்......... அது உங்களுக்கு தெரியுமோ.................' என்று பின்னர் அது ஒரு சின்ன வாக்குவாதம் ஆகியது.................. https://www.jeyamohan.in/222076/ குடும்ப உறவுகளிலுள்ள சுயநலமும் பொறுமையும் November 13, 2025 அன்பின் ஜெ, எனது வாழ்க்கையில் நான் கவனித்து வரும் மூன்று நபர்களின் நடத்தைகளையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக இந்திய கலாச்சாரத்தின் பின்னணியில் காட்டும் அசாதாரண பொறுமையையும் புரிந்துகொள்ள உங்கள் ஆலோசனையை நாடுகிறேன். மேலும், இந்த நபர்களுடன் பேசும்போது, அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலிகளாகவும், எல்லாம் தெரிந்தவர்களாகவும் கருதுவதை கவனித்துள்ளேன். நபர் 1: எனது உறவினர்களில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக வேலை செய்யாமல், தனது மனைவியின் வருமானத்தில் முழுமையாகச் சார்ந்து வாழ்கிறார். அவரது மனைவி குடும்பத்தில் பல சவால்களை எதிர்கொள்கிறார், மேலும் இவர் மற்றவர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளதால் அவரது பிரச்சனைகள் மேலும் அதிகரித்துள்ளன. ஆனால், இவருடன் பேசும்போது, இவர் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், எல்லாம் அறிந்தவராகவும் கருதுகிறார். நபர் 2: எனது நண்பர் ஒருவர், 40 வயதாகியும் திருமணம் செய்யாமல், வேலை ஏதும் செய்யாமல், ஒரு சிறிய ஊரில் தனது தாயின் ஓய்வூதியத்தில் வாழ்கிறார். நான் அவரது வீட்டிற்கு செல்லும்போது, அவரது தாய் அடிக்கடி கவலையுடன் இருப்பதை காண்கிறேன். இவரும் தன்னை மிகவும் அறிவாளியாகவும், எல்லாம் தெரிந்தவராகவும் நினைத்துக்கொள்கிறார். நபர் 3: மற்றொரு உறவினர், 40 வயதை எட்டியும் உயர்கல்வி பெறவில்லை, நிலையான வேலை இல்லை, மேலும் திருமணமும் செய்யவில்லை. இவர் தனது சகோதரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று, அங்கு மூன்று வேளையும் உணவு உண்கிறார். இவரது வருகை அந்த வீட்டில் பல முரண்பாடுகளையும் பதற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ஆயினும், இவரும் தன்னை மிகவும் புத்திசாலியாகவும், அனைத்தையும் அறிந்தவராகவும் எண்ணுகிறார். இந்த மூன்று நபர்களின் மனைவி, தாய், மற்றும் சகோதரி ஆகியோரின் பொறுமை என்னை ஆச்சரியப்படுத்துகிறது. இந்த ஆண்களின் குறைபாடுகளையும், அவர்கள் ஏற்படுத்தும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து ஆதரவளித்து, பராமரித்து வருகின்றனர். இத்தகைய ஏற்பு இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே காணப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது, அங்கு குடும்ப பந்தங்கள் மற்றும் கடமைகள் தனிப்பட்ட சிரமங்களை மீறி நிற்கின்றன. இவர்களின் பொறுமைக்கு பின்னால் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவ முடியுமா? இந்த பெண்கள், இந்த சிரமங்கள் இருந்தபோதிலும் ஏன் இவர்களை ஆதரிக்கின்றனர்? இந்த ஏற்பு கலாச்சார மதிப்புகளில் வேரூன்றியதா? மேலும், தங்களை மிகவும் புத்திசாலிகளாகக் கருதும் இந்த நபர்களை எவ்வாறு கையாள்வது மற்றும் அவர்களைப் புரிந்துகொள்வது? அன்புடன் ராஜேஷ் பெங்களூர் அன்புள்ள ராஜேஷ், இது சாமானியமாகத் தோன்றினாலும் நம் குடும்பம் என்னும் அமைப்பை, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலைவரையிலான பரிணாமத்தைக் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய விஷயம். குடும்பம் என்னும் அமைப்பு எங்கல்ஸ் எண்ணியதுபோல (குடும்பம் தனிச்சொத்து சமூகம்) செயற்கையான ஒன்று அல்ல. முதிராச் சிந்தனையுடன் பின்நவீனத்துவர் சிலர் சொன்னதுபோல அது இல்லாமலாகப் போவதுமில்லை. அது ஏராளமான உயிர்களில் ஏதேனும் வகையில் நீடிக்கும் ஓர் அமைப்புதான். குடும்பம் என நாம் எண்ணுவது மனிதக்குடும்பம்.ஆனால் குடும்பம் என்னும் அமைப்பு குரங்குகளில் உள்ளது. எறும்புகள் வரை வெவ்வேறு உயிர்களில் வெவ்வேறுவகையான குடும்பங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட குடும்ப மாதிரிகளை இன்றைய உயிரியலாளர் அடையாளப்படுத்தியுள்ளனர். குடும்பம் என்னும் அமைப்பு உயிரியல் பரிணாமத்தின் ஒரு பகுதியாக உருவாகி வந்தது. எந்த உயிரினமும் தனித்து வாழமுடிவதில்லை. சேர்ந்து வாழவேண்டும் என்றால் ஒரு திரள் அமைப்பு தேவை. தனியாக இருக்கையில் ஓர் உயிர் கொள்ளும் குறைபாடுகளை நிரப்பும் பிறர்தான் குடும்பம். மனிதக்குழந்தைக்கு அறிவும் உடற்திறனும் உருவாக நீண்ட ஆண்டுகள் ஆகின்றன. ஆகவே நிலையாந குடும்ப அமைப்பு தேவையாகிறது. உயிரியல்தேவை அமைப்பை உருவாக்கியது. அமைப்பு தன்னை பலபடியாக வளர்த்துக்கொண்டு நெறிகளை, நம்பிக்கைகளை , உணர்வுகளை உருவாக்கிக்கொண்டது. ஓர் அமைப்பு, அது எதுவானாலும் அதில் அதிகப் பங்களிப்பாற்றுபவர், குறைவாகப் பங்களிப்பாற்றுபவர் என்னும் வேறுபாடு இருக்கும். கொடுப்பவர் -பெறுபவர் என்னும் இடங்கள் இருக்கும். ஆதிக்கம் செலுத்துபவர், வழிநடத்துபவர் என்னும் ஆளுமைகள் இருக்கும். அடங்குபவர்,தொடர்பவர் என்னும் ஆளுமைகளும் இருக்கும். நீங்கள் உங்கள் அலுவலகத்தையே உதாரணமாக எடுக்கலாம். அலுவலகம் என்பது அண்மைக்கால உருவாக்கம். அது இயற்கையானது அல்ல. அதில் ‘செண்டிமெண்ட்ஸ்’ இல்லை. ஆனாலும் இந்த வேறுபாடுகள் உள்ளன. அப்படி வேறுபாடுகள் ஏதுமற்ற ‘சமத்துவ’ அமைப்புதான் தேவை என கற்பனை செய்யலாம். ஆனால் உயிரியல் ரீதியாக அது சாத்தியமல்ல. எறும்புகளிலும் சிம்பன்ஸிக்களிலும் இல்லாத ஒன்று மனிதனில் மட்டும் திகழமுடியாது. வேண்டுமென்றால் அந்த வேறுபாட்டை குறைக்கலாம். அந்த வேறுபாடு வன்முறையற்றதாக ஆகும்படி முயலலாம். ஆனால் அந்த வேறுபாடு இருக்கவே செய்யும். நம் குடும்பங்கள் அனைத்திலுமே அளிப்போர், பெறுவோர் என்னும் இரு நிலைகள் எப்போதும் இருக்கின்றன. நாம் வளர்ந்து நம் வருமானத்தில் நிற்பது வரை நாம் பெறுவோர் மட்டுமே. நம் பெற்றோர் அளிப்போராக திகழ்கிறார்கள். பல நடுத்தரக் குடும்பங்களில் தந்தை மட்டுமே பணமீட்டுபவர், பிற அனைவருமே அதைப் பெற்று வாழ்பவர்கள்தான். பழைய கூட்டுக்குடும்பங்களில் திறனற்றவர்களை அக்குடும்பங்களே பேணும் தன்மை இருந்தது. சிலரால் வேலை செய்ய முடியாது. சிலருக்கு போதிய அறிவுத்திறனோ உடல்வளர்ச்சியோ இருக்காது. அவர்கள் சுமை என கருதப்பட்டதில்லை. குடும்பத்தின் பொறுப்பு அவர்களையும் பேணுவதுதான் என்றே கொள்ளப்பட்டது. குடும்பம் என்னும் நிறுவனத்தின் விரிவான அமைப்பே குலம். குலம் விரிந்து ஊர். ஊர் விரிந்து நாடு அல்லது சமூகம். சென்றகாலங்களில் தானாக வாழும் தகுதியற்ற ஒருவனை அக்குலம் பேணியதுண்டு. அந்த ஊர் பேணியதுண்டு. நான் சிறுவனாக இருந்தபோது என் ஊரில் பத்துக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி இல்லாதவர்கள், உடல்வளர்ச்சி இல்லாதவர்கள் இருந்தனர். முதுமையால் உடல்நலிந்தவர்கள் ஐம்பதுபேராவது இருந்தனர். அவர்களை ஊர்தான் பேணியது. என் அப்பா அவருடைய வருமானத்தில் கால்வாசிப்பங்கை வெவ்வேறு நபர்களுக்கு அளித்தார். இன்று சமூகம், நாடு அத்தகையோரைப் பேணுகிறது. அப்படிப் பேணுவதுதான் நல்ல சமூகம். நவீன மேலைச்சமூகங்களில் உழைப்பவர் அளிக்கும் வரிப்பணத்தில் கால்பங்கு உழைக்கமுடியாதவர்களுக்கு நலனுதவிகளாக வழங்கப்படுகிறது. அவர்களில் முதியோர், உடற்குறை உள்ளவர்கள் உண்டு. வேலை இழந்து வேலைதேடும் நிலையிலுள்ளவர்களும் உண்டு. வேலைசெய்யமுடியாது என அறிவித்து, தெருவில் வாழும் ஹிப்பிகள், சமூக எதிர்ப்பாளர்கள் மற்றும் போதையடிமைகளுக்கும் குறைந்தபட்சம் சாப்பாடாவது கிடைக்கும்படி அந்த அரசுகள் ஏற்பாடு செய்கின்றன. சாகவிடுவதில்லை. பெறுபவர்கள் எல்லாமே இழிந்தோர், அவர்களுக்கு கொடுப்பது வீண் என்னும் மனநிலை சமூகத்தை அழிக்கும். ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும் , உழைக்காதவர் அழியவேண்டும் என்பது ஓர் உயர்ந்த மனநிலை என்றும்; அது ‘உழைப்பைப் போற்றும் மனநிலை’ என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் அது ஒரு குறுகிய, சுயநல மனநிலை. நீங்கள் எவரென்றாலும் உங்களால் ஈட்டப்படும் செல்வத்தில் சிறு பங்கையே நீங்கள் செலவழிக்கிறீர்கள். எஞ்சியதை முழுக்க குடும்பத்திற்காகச் செலவழிக்கிறீர்கள், சேர்த்து வைக்கிறீர்கள். அதில் ஒரு பங்கை இயலாதோருக்கு அளிப்பதில் என்ன பிழை? ஒரு குடும்பத்தில் எவர் இயலாதோர்? குழந்தைகள், மாணவர்கள் எப்படியும் பிறரை நம்பி இருக்கவேண்டியவர்கள். முதியோரும் அவ்வாறே. இதைத்தவிர பலவகையான உடல், உளக் குறைபாடுள்ளவர்களும் பேணப்படவேண்டும். குடும்பம் அவர்களை பேணுவதே முறை. அல்லது ஊர் அல்லது சமூகம் பேணவேண்டும். ஏனென்றால் இங்கே இன்னும் முழுக்க அனைவர்நலனையும் நாடும் அரசு உருவாகவில்லை. நம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக துறவிகள், நாடோடிகள் பேணப்பட்டார்கள். ஒவ்வொரு நாளும் சாவடிக்குச் சென்று “இரவுணவு உண்ணாத எவரேனும் உண்டா?” என்று கேட்டு, இருந்தால் அவர்களுக்கு உணவிட்டுவிட்டே ஊர்த்தலைவர் உண்ணவேண்டும் என்னும் மரபு அண்மைக்காலம் வரை இருந்தது. என் அப்பா அவருடைய இறுதிவரை அதைச்செய்துவந்தார். அவ்வாறு சாப்பிடுபவர் உழைக்கமுடியாதவரா, உழைக்க மனமில்லாதவரா என்று பார்க்கக்கூடாது. அது அறமின்மை. ஏனென்றால் நாம் எப்படி அதை அறியமுடியும்? “போய் உழைக்கவேண்டியதுதானே?” என்று பிச்சைக்காரர்களிடம் கேட்பவர்கள் உண்டு. (கேட்பவர் என்ன உழைக்கிறார் என்று பார்த்தால் பத்துரூபாய்க்கு பொருள் வாங்கி இருபது ரூபாய்க்கு விற்பவராக இருப்பார். உண்மையில் சமூகத்தைச் சுரண்டும் கிருமி அவர். அல்லது அதேபோல ஏதாவது வெட்டிவேலை செய்வார். எதையாவது உற்பத்திசெய்பவர் இங்கே எத்தனைபேர்?) அந்தப் பிச்சைக்காரர்களில் ஒருவராக நித்யசைதன்ய யதி இருந்திருக்கிறார். நடராஜகுருவும் நாராயணகுருவும் விவேகானந்தரும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அழியவிடவேண்டும் என்றும், இந்த சம்பாதிக்கும் கூட்டம் மட்டும் சோறுதின்று கொழுக்கவேண்டும் என்றும் நான் சொல்ல மாட்டேன். மிக அரிதாக நீங்கள் சொல்வது போல உழைக்க மனம் ஒவ்வாதவர்கள், இயல்பிலேயே உழைக்கும் உளமில்லாதவர்கள் குடும்பத்தில் இருப்பார்கள். அதுவும் மனித இயல்பே. மானுடத்தின் வண்ணமே. அவர்களுக்கான காரணங்கள் அவர்களுக்கு இருக்கலாம். அவர்கள் வேண்டுவது வெறுமே சோறு, உறைவிடம், துணி மட்டுமே என்றால் அதை அளிப்பது அவசியம் என்பதே என் எண்ணம். அது கொடுப்பவர்களுக்கு பெரிய சுமை அல்ல என்றால் கொடுப்பதன் வழியாக அவர்கள் உறவை நிலைநாட்டுகிறார்கள் என்றும், குடும்பம் என்னும் அமைப்பின் இயல்பான அறத்தை நிலைநாட்டுகிறார்கள் என்றும்தான் பொருள். அவ்வாறு சார்ந்திருப்பவர்கள் உழைப்பவர்களின் பணத்தை வாங்கி வீணடித்தார்கள் என்றால் அதை அனுமதிக்கக்கூடாது. போதைக்கோ சூதுக்கோ பணம் அளிக்கலாகாது. ஆனால் அவர்கள் உழைக்காவிட்டால் சாகவேண்டும் என்று சொல்வது குடும்பம் என்னும் அமைப்புக்கே எதிரானது. என் அப்பா வாழ்ந்த நாளெல்லாம் கடைப்பிடித்த அறம் இது. அவர் மறைந்தபோது கிட்டத்தட்ட இருபதுபேர் அவரைச் சார்ந்திருந்தனர் என அறிந்தேன். அவர்களில் பலர் வெறுமே சாப்பிட்டுவிட்டுச் சும்மா இருந்தவர்கள்தான். ஏனென்றால் குடும்பம் என்னும் அமைப்பே ஒருவரின் பலவீனத்தை, குறைபாட்டை இன்னொருவர் ஈடுகட்டுவதில்தான் உள்ளது. உழைக்கமுடியாதவர் உழைப்பவரைச் சார்ந்திருக்கிறார். அவர் உழைப்பவரைச் சுரண்டுகிறார் என்று எண்ணுவது குடும்பம் என்னும் மனநிலையை அழிப்பது. இன்றைக்கு உழைப்பவர் சட்டென்று நோயாளியாகி பிறரைச் சார்ந்திருக்கவும்கூடும். எந்நிலையிலும் ஒரு தனிநபரை குடும்பம் கைவிடக்கூடாது. அதுவே குடும்பம் என்னும் அமைப்பின் அடிப்படை அறம். அந்த நம்பிக்கையில்தான் நீங்களும் நானும் உயிர்வாழ்கிறோம். அந்த நம்பிக்கை இல்லாமலானால் நாமனைவருமே அனாதைகள், அல்லது அனாதைகளாக ஆகும் வாய்ப்புள்ளவர்கள். பிச்சை எடுக்க வருபவர்கள் ‘தர்மம் செய்யுங்க’ என்றுதான் சொல்கிறார்கள். ஈதல் அறம் என்றே நம் மரபு சொல்கிறது. ஒருவருக்கான அடிப்படை உணவு என்பது ஒருபோதும் வெட்டிச்செலவு அல்ல. அவர் என்னவாக இருக்கிறார் என நாம் அறியமுடியாது. ஒருவேளை அவர் சிந்தனையாளரோ, கலைஞரோ ஆக இருக்கலாம். அல்லது அப்படி எதிர்காலத்தில் மாறலாம். அல்லது வெட்டியாகவே இருந்தால்கூட அவரைப்போன்ற ‘வெட்டிக்கூட்டத்தில்’ ஒருவராக ஒருவேளை கலைஞனும் சிந்தனையாளனும் இருக்க வாய்ப்புண்டு. வெட்டிக்கூட்டத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டோம் என்றால் கலைஞர்களையும் சிந்தனைகயாளர்களையும் அழித்துவிடுவோம். அதை உழைப்பை சிரமேற்கொண்டு போற்றும் மேற்குநாடுகளே கூட செய்வதில்லை. நடராஜகுருவும் நித்யாவும் ரயிலில் செல்கிறார்கள். ஒரு குழந்தை வந்து பிச்சை கேட்கிறது. உடனிருக்கும் மார்க்ஸியர் ஒருவர் அருவருப்புடன் பிச்சை எடுப்பதை இழித்துப்பேசுகிறார். அது சோம்பலை வளர்க்கும் என்கிறார். நடராஜகுரு சொல்கிறார். ‘ஒரு குழந்தை எனக்குப் பசிக்கிறது என்று உலகத்திடம் கேட்பதில் மகத்தானதாக ஒன்று உள்ளது. இந்த உலகம் மீது அக்குழந்தை வைத்திருக்கும் நம்பிக்கை அது. அதை எப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வருகிறது. அந்த நம்பிக்கையை ஒருபோதும் உலகம் இழந்துவிடலாகாது’ ‘எனக்கு சோறு மட்டும் போதும்’ என சொல்லும் ஒருவரிடம் ‘சோறுதானே, சாப்பிடு’ என்று சொல்லும் நிலையில் உள்ள குடும்பமே அறம் சார்ந்தது, அப்படிச் சொல்லும் சமூகமும் நாடுமே வாழும் அறம் கொண்டவை. சோற்றில் கணக்குபார்ப்பவர்கள் ஒன்றை யோசிக்கலாம், அவர்கள் உண்ணும் சோறுக்கு எங்கோ கணக்குகள் பார்க்கப்படும். ஜெ
  14. என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்று தேயிலையும் கூட இலங்கையின் ஏற்றுமதி பொருளாதார வருவாய் சுட்டியில் முன்னிலையில் இல்லை. மலையக மக்களின் புதிய சந்ததி ஒன்றும் தேயிலை கூடையை தலையில் மாட்டி.. சாக்கு துணியை இடுப்பில் கட்டி கொழுந்த்து பறிக்கும்தொழிலுக்கு போகப் போவதும் இல்லை. இப்போதே அநேக இளையவர்கள் கொழும்பு, கண்டி என்ற பெரு நகரங்களை நோக்கியும் வெளிநாடு செல்லுவதுமாகத்தான் அவர்கள் வாழ்க்கை இருக்கிறது. சுமந்திரன், மற்றும் தமிழ் அரசியல்வாதிகளின் இந்த வெண்டுகோள் தூர நோக்கில் சரியானதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் வரலாம். அடையாள இழப்பு, பொருளாதார சிக்கல், சமூக சிக்கல் இப்படி பல இன்னல்களை சந்தித்தாலும், ஓரிரு தலைமுறைகளின் பின்னர் இவர்களின் வாழ்வு ஓரளவுக்கு சுபிட்சமாக இருக்கும் என நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்த பல குடும்பங்கள் 1983 காலங்களிலும், அதன் பின்னரும் மலையகத்தை விட்டு வெளியேறி வடக்கில் குடியேறியவர்கள் ஆரம்பத்தில் பல சிக்கல்களை அனுபவித்தாலும், இன்று வட, கிழக்கு மக்களின் யதார்த்த வாழ்வை போல கல்வி, தொழில், வெளிநாடு, கோயில் குளம் என்று சந்தோசமாக இருக்கிறார்கள். சிங்களத்தின் கருணையில், பச்சாதாபா பிச்சையில் வாழ வில்லை என்ற கௌரவத்தோடு தமிழராக வாழ்கிறார்கள். தவிர இந்த உரையாடல், அரசுக்கு மலையக மக்களுக்கு செய்யவேண்டிய காலம் கடந்த நீதியை செய்ய ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என்றும் கூட நினைக்கிறன்.
  15. கோண்டாவில்ச் சந்தியில் இருந்து வலதுபுறம் திரும்பி, பொற்பதி வீதி நோக்கி நடக்கத் தொடங்கினோம். வீதியில் சனநடமாட்டம் பெரிதாக இருக்கவில்லை. அப்பகுதியில் செல்கள் வந்து வீழ்ந்து வெடித்த அடையாளங்கள் தெரிந்தன. ஆனாலும் சில வீடுகளில் மக்கள் இருந்தார்கள். எம்மைக் கண்டதும் தங்கள் வீடுகளுக்குள் அழைத்துச் சென்று உண்ண உணவும் நீரும் கொடுத்தார்கள். எமக்கு என்ன நடந்தது என்பதுபற்றி அறிந்துகொள்ளும் ஆவல் அவர்களிடம் இருந்தது. முடிந்தவரையில் அவர்களிடம் கூறிவிட்டு எம் வழியே நடக்கத் தொடங்கினோம். செல்லும் வழியில் எம்மைப்போன்றே வெளியேற்றப்பட்ட‌ இன்னும் பலர். எல்லோரது பயணமும் நல்லூர்க் கோயிலை நோக்கியெ அமைந்திருந்தது. நல்லூர்க் கோயிலை அண்மித்தபோது அங்கு ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருப்பது தெரிந்தது. மேலும் பலருக்கு அடைக்கலம் கொடுப்பதென்பது அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கடிணமானதாகப் பட்டதனால், உறவினர்கள் வீடுகள் இருந்தால் அங்கே செல்லுங்களேன் என்று கேட்டுக்கொண்டார்கள். தகப்பனாரின் சகோதரர் ஒருவர் கொய்யாத்தோட்டத்தில் வசித்து வந்தார். ஆகவே அங்கே போகலாம் என்று எண்ணி தொடர்ந்து நடந்தோம். நாம் கொய்யத்தோட்டத்தை அடைந்தபோது கோண்டாவில், உரும்பிராய் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி அவர்கள் ஓரளவிற்கு ஏற்கனவே அறிந்து இருந்தமையினால் எம்மை உயிருடன் கண்டது அவர்களுக்கு ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். சில நாட்கள் அங்கு தங்கலாம், பின்னர் நிலைமையினை அவதானித்து முடிவெடுக்கலாம் என்று தங்கினோம். ஒருவாரம் தங்கியிருப்போம் என்று நினைக்கிறேன். அங்கும் செல்த்தாக்குதல்கள் கடுமையாக நடத்தப்படத் தொடங்கின. இடைவிடாது பெய்த மழையினால் கொய்யத்தோட்டம், குருநகர் ஆகிய பகுதிகளில் வெள்ளம் போட்டுவிட, மக்கள் தஞ்சம் அடைவதற்குத் தன்னும் இடமின்றி அங்கலாய்த்தபடி இருந்தார்கள். இடைவிடாத மழையினூடே செல்த்தாக்குதல்கள் உச்சம் பெறத் தொடங்கின. யாழ்நகர் நோக்கி மிகக் கடுமையான செல்த்தாக்குதலை இந்திய இராணுவம் மேற்கொள்ளத் தொடங்கியது. கொய்யத்தோட்டம், சுண்டுக்குளி, ஈச்சமொட்டை ஆகிய பகுதிகளில் பரவலாக செல்கள் வந்து விழத் தொடங்கின. பல மணிநேரம் தொடர்ச்சியாக நடத்தப்படும் இத்தாக்குதல்கள் மதியமளவில் சற்று ஓய்வுக்கு வரும். அந்த ஓய்வு வேளையினைப் பாவித்து வீதிகளில் இறந்தும் காயப்பட்டும் கிடந்தவர்களை ஊர்மக்கள் எடுத்து வந்தார்கள். கொய்யத்தோட்டத்திலிருந்து ஈச்சமொட்டை செல்லும் வழியில் கொல்லப்பட்ட சுமார் 8 பொதுமக்களின் உடல்களை மாட்டு வண்டியில் கிடத்தி தென்னை ஓலைகளால் போர்த்திக்கொண்டு வந்தார்கள். மழை நீரில் முற்றாக நனைந்திருந்த உடல்களில் இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட மட்டு வண்டிகளில் உடல்கள் நாம் தங்கியிருந்த வீட்டின் முன்னால் எடுத்துச் செல்வதை அச்சத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். பழைய பூங்கா வீதியிலிருந்து பாசையூர் நோக்கிச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியின் ஓரத்தில் சரிந்துகிடக்க அதில் பயணம் செய்தவர் உடல் கடுமையாகச் சேதமாக்கப்பட்டு மழிநீரில் நனைந்தபடி இருந்தது. இப்படியே அப்பகுதியெங்கும் பலர் கொல்லப்பட்டார்கள். சில நாட்களின் பின்னர் நாமிருந்த வீட்டுப் பகுதியின் சுற்றத்திலும் செல்கள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கவே கொய்யாத்தோட்டத்தில் அமைந்திருக்கும் கிறிஸ்த்து ராசா ஆலயத்தில் அகதிமுகாம் ஒன்றினை அமைத்திருக்கிறார்கள், அங்கு சென்றால் தப்பித்துக்கொள்ளலாம் என்று யாரோ சொல்லவே, இருள் சூழ்ந்திருந்த பொழுதொன்றில் அங்கு சென்று அடைக்கலமானோம். ஆனால் அங்கு நாமிருந்த சில மணிநேரத்திலேயே மிகக் கொடூரமான செல்த்தாக்குதலை இந்திய ராணுவம் அப்பகுதி மீது நடத்தியது. பல நூற்றுக்கணக்கான மக்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடியிருந்த கூட்டம் ஒப்பாரி வைக்குமாற்போல் கூக்குரலிட்டு அழத் தொடங்கியது. அங்கிருந்த அனைவரும் கொல்லப்படப்போகிறோம் என்கிற எம்மை ஆட்கொண்டது. இனி இங்கே இருந்தால் நிச்சயம் கொல்லப்படுவோம், வேறு எங்காவது சென்றாக வேண்டும் என்று பலர் பேசத் தொடங்கினர். புதிதாக அப்பகுதிக்கு அடைக்கலம் தேடி வந்தவர்கள் கூறத்தொடங்கிய கதைகளைக் கேட்டபோது இந்திய ராணுவம் மிகப்பெரும் படுகொலை ஒன்றினை நடத்தவே யாழ்நகர் நோக்கி முன்னேறி வருவது என்று பலர் பேசத் தொடங்கினர்.
  16. காட்சி 2 (அமிர்தம் அம்மன் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கிறார்.) அமிர்தம்: அம்மாளாச்சி, நான் சின்னனாக இருந்தபோது சின்னப்பிள்ளைகளை ஒருவரும் மதிக்கவில்லை. எனக்கு வயசானப் பிறகு வயசு போனவர்களை ஒருவரும் மதிக்கினம் இல்ல. பூமி சுத்துது, நான் மட்டும் ஆணி அடிச்சு வைச்ச மாதிரி அப்பிடியே நிற்கிறன். ஆயிரம் கண்ணில ஒரு கண்ணை திறந்து என்னைப் பார் தாயே.................... (அமிர்தம் கண்ணை மூடி, முணுமுணுத்து கும்பிடுகிறார். கண்ணைத் திறந்து பார்க்கும்போது அவரின் பக்கத்தில் ஒருவர் நிற்கிறார்.) அமிர்தம்: (ஆச்சரியமாக) ம்ம்ம்….திடீரென்று வந்து பக்கத்தில நிற்கிறீங்கள், புதுசா வேற இருக்கிறீங்கள், ஆனா பழகின மாதிரியும் இருக்குது….......... எங்கயிருந்து வாறீங்கள்? பாரதம்: (கோயில் உள்ளே கையை காட்டி) அங்கேயிருந்து தான் நான் வருகிறேன். அமிர்தம்: யார் நீங்கள் ஐயரோட வீட்டுக்காரியே.............. ஐயரின் ஒரு ஆளை எனக்கு தெரியும்.......... ஐயருக்கு இன்னுமொரு வீடு இருக்கிற சங்கதி எனக்கு தெரியாது............ அதுவும் சரிதான், இதெல்லாம் என்ன சொல்லிச் செய்யிற விசயமே..................... (பாரதம் சிரிக்கிறார்). பாரதம்: நான் ஐயரோட வீட்டுக்காரியில்ல........... ஐயனோட வீட்டுக்காரி. (அமிர்தம் எதுவும் புரியாமல் முழிக்கிறார்). அமிர்தம்: எந்த ஐயன்…. பாரதம்: அண்டசராசரத்தையும் படைத்து, படைத்ததெல்லாவற்றையும் அழித்து, அழித்ததை எரித்து, எரித்ததை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு திரியும் அந்த ஐயனோட வீட்டுக்காரி நான். அமிர்தம்: இது என்ன கூத்து தாயே, நேரிலயே வந்துவிட்டீர்கள். பக்தையே உன் பக்தியில் நாம் மனமுருகிவிட்டோம், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டு, கையில ஒரு வரத்தை கொடுத்துவிடாதே அம்மா................ பாரதம்: எல்லா மானிடருமே முதலில் எங்களிடம் கேட்பது வரம்தான்........... உனக்கு ஏன் வேண்டாம் என்கிறாய், அமிர்தம்? அமிர்தம்: கடவுளிடம் வரம் வாங்கி, இதுவரை இந்த பூமியில நல்லா வாழ்ந்த ஒரு மனிதனும் கிடையாது. கொடுக்கிற மாதிரி கொடுத்துவிட்டு, எல்லாவற்றையும் பின்னால் பிடுங்கி விடுவீர்கள். இருந்தததையும் இழந்து, ஓடி ஒழிந்து, அழிந்தவர்தான் எல்லோரும். பாரதம்: நன்றாகவே பேசுகிறாய் அமிர்தம். ஆனால் நான் இப்போது வரம் கொடுப்பதற்காக இங்கு வரவில்லை. பூலோகத்தில் சில நாட்கள் உன்னோடு தங்கியிருக்க வந்துள்ளேன். அங்கு எனக்கு நிம்மதியே இல்லை. அமிர்தம்: அது எப்படியம்மா முடியும்? கடவுள் என்று தெரிந்தாலே உன்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டார்களே. கடவுளின் அவதாரம் என்று சொன்னவர்களையே அறைக்குள் வைத்து படம் எடுத்து, அல்லோலகல்லோலம் செய்தார்கள். முதலில், நீங்கள் யாருடைய கடவுள் என்கிற பிரச்சனையிலயே உலகம் அழிந்துவிடும்................. பாரதம்: நீ நான் கடவுள் என்று எவரிடமும் சொல்லாதே. நான் சாதாரண மானிடர் போல இருந்துவிட்டு போகிறேன். அமிர்தம்: அது சரி தாயே............. நீங்கள் இங்கு வரவேண்டிய அளவிற்கு அங்கு என்ன பிரச்சனை? பாரதம்: ஒன்றா, இரண்டா சொல்லுவதற்கு........... சின்னவனுக்கும் பெரியவனுக்கும் சண்டை................ ஒரு மாம்பழத்திற்காக கோவணத்தோட ஓடித் திரிகிறான் சின்னவன். இவர் என்னவென்றால், தலையில் கூட ஒருத்தியை வைத்திருக்கிறார். நீங்கள் தான் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், மிக ஒற்றுமையாகவும், நாங்கள் படைத்த எல்லா உயிர்களிலும் மிகச்சிறப்பாக வாழ்கிறீர்கள். அதுவும் தான் எப்படியென்று பார்த்து விட்டு போகலாம் என்று வந்துள்ளேன். (இருவரும் நடக்கிறார்கள்) அமிர்தம்: மனிதர்களை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை போல தெரிகிறது......... சரிதான், இருநதுதான் சில நாட்கள் பார்த்து விட்டு போங்கள். அதுசரி உங்களை யாரென்று நான் மற்றவர்களிடம் சொல்லுவது? பாரதம்: உன் பெரியம்மாவின் மகள் என்று சொல்லு. பெயர் கூட பாரதம் என்று சொல்லிவிடு. அமிர்தம்: ம்ம்ம்… துருவித் துருவி கேட்பார்கள், நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால் ஒன்று எக்காரணத்தைகொண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் உங்களின் சித்துவிளையாட்டுக்கள் எதுவும் இங்கு காட்டக்கூடாது. பாரதம்: நானே சித்துவேலைகளினால் மனம் நொந்துபோய் இங்கு வந்துள்ளேன். எதுவுமே நடக்காது, நீ பயப்படத் தேவையில்லை. அமிர்தம்: என்னுடைய குடும்பத்தைப் பற்றீத் சொல்லத் தேவையில்லைம், எல்லாமே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாரதம்: சில விசயங்கள் எனக்கு புரியவில்லை. உனக்கு நல்ல பெயர் அமிர்தவல்லி, உன்னுடைய மகளுக்கும் பார்வதி என்றுஎன்னுடைய பெயர்தான், உன் மகளின் மகளுக்கு மட்டும் லக்க்ஷனா என்று…. அமிர்தம்: இதுதான் மனிதனின் சின்ன சின்ன சித்துவேலைகள். என் மருமகனுக்கு நடிகை சுலக்க்ஷனாவை நல்லா பிடிக்கும், ஆனால் அப்படியே வைக்கமுடியாது, பார்வதி கொப்பரத்தில ஏறி, கொடி பிடித்துவிடுவாள். அதுதான் இப்படி ஒரு சின்ன மாற்றம். எல்லா இடமும் ஒரே கதைதான், அங்கே தலையில வைத்திருந்தால் இங்கே தலைக்குள்ள வைத்திருப்பார்கள். உரிக்க உரிக்க தோல் கழட்டும் வெங்காயம் போன்றவர்கள் மனிதர்கள்.......... கண்ணில கண்ணீர் மட்டும் தான் மிஞ்சும்............... (தொடரும்........................)
  17. நேற்று 25 கார்த்திகை அன்று தம்பி தமிழ்சிறியை அவர் மகள் யாழினி தாத்தாவாக்கிவிட்டார். அவர் குடும்பத்தில் உதித்த முதல் பேரப்பிள்ளை, பேத்தியின் பெயர் சிவானி. பேத்தி சிவானி வளமுடன் வாழ வாழ்த்துக்கள்!!🙌
  18. Posted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி Posted byBookday04/11/2025No CommentsPosted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட. ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும் பொம்மையின் கைத்தாளத்தை வேடிக்கை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் கூடிவிடும். ராமண்ணா மிகவும் நல்லவர். அவரின் பரம்பரையே சவ்வுமிட்டாய் தொழில் செய்பவர்கள். ராமண்ணா காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சவ்வுமிட்டாய் தயாரிக்க ஆரம்பித்துவிடுவார். சீனி பாகு, லெமன், கலர் முதலியவற்றை சரியான முறையில் கலந்து பக்குவப்படுத்தி அதை இழுத்துப் பார்த்து நீண்ட பெரிய மூங்கிலிலே சுற்றி விடுவார். அதன் மீது ஈக்கள் புகாத வண்ணம் தரமான சவ்வுக்காகிதம் கொண்டு சுற்றிவிட்டு மூங்கிலின் மேலே அழகிய பொம்மை ஒன்றை வைத்து அதற்கு சட்டை, பாவாடை முதலியவற்றை அணிவதோடு பொம்மை காதினில் கடுக்கணும் மூக்கினில் மூக்குத்தியும் பொம்மையின் இரு கைகளிலும் வட்டமான ஜால்ரா கருவி (சிஞ்சா) யை பொருத்திவிட்டு மூங்கிலை தனது தோளிலே சுமந்தபடி 8 மணிக்கெல்லாம் ஆரம்பப் பள்ளியின் வாசலுக்கு வந்து விடுவார். அதன் பின்பு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊர் சுற்றுவது என்று வாடிக்கையாக கொள்வார். ராமண்ணா காலை 8 மணிக்கு ஆரம்பப் பள்ளி வாசல் வந்தவுடன் அவரது பப்பர பப்பர ஓசை முழங்கிடும். ஆரம்பப்பள்ளியின் அருகே ஒருமணி நேரம் வியாபாரம். உணவு இடைவேளையின் போது உயர்நிலைப்பள்ளிஅருகே வியாபாரம் அதன் பின்பு ஊர் சுற்றி வியாபாரம் என வாடிக்கையாக வியாபாரம் செய்பவர். இவரின் ஊதல்சத்தம் கேட்டாலேசிறுவர் சிறுமியர் ஆர்வத்துடன் வெளியே வருவர். ராமண்ணா ராமண்ணா எனக்கு ஒரு வாட்ச், அன்னம், ரயில், வாத்து என மாணவர்கள் அனைவரும் அவரிடம் துளைத்துக் கொண்டு கேட்பர். ராமண்ணா ஒரு மிட்டாய்க்கு ஒரு விலை வைத்திருப்பார் 10 பைசா 20 பைசா 25 பைசா என டிசைனுக்கு தகுந்தவாறு சவ்வு மிட்டாயின் விலை அதிகரிக்கும். அதிகமாக வாட்ச் விற்பனையாகும். ஓசி மிட்டாய் கேட்டு ராமண்ணாவை குழந்தைகள் நச்சரிக்கும். சிறிது சவ்வுமிட்டாயைப் பிய்ந்து அவர்களது கன்னங்களில் ஒட்டி விடுவார். எந்தவித கள்ளம், கபடம் இல்லாது. குழந்தைகளைக் கூட அய்யா அம்மா என்றுதான் அழைப்பார். குழந்தைகளுக்கு ராமண்ணா மீது தனிப்பிரியம் இதுபோன்றுதான் உயர்நிலைப் பள்ளியிலும் விற்பனை.. அதோடு மட்டுமல்லாது ஊர் முழுவதும் வலம் வருவார். ஆண்கள், பெண்கள் என எல்லோரும் தங்களுக்குப்பிடித்த சவ்வுமிட்டாயை விரும்பிச் சாப்பிடுவர். யாரிடமும் கடுகடு என்று விழமாட்டார். யாராவது பையன் ராமண்ணா கடன் கொடுங்கள் நாளைக்கு தருகிறேன் என்றால் தம்பி இந்த வயதில் கடன் வாங்காதீர்கள் அது நல்ல பழக்கம் இல்லை. உங்களுக்கு சவ்வுமிட்டாய் வேண்டுமென்றால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அன்புடன் இலவசமாக கொடுப்பார்.இதுவே அவர் வாழ்வின் வாடிக்கையாகிப்போனது. ஒருநாள் காலை தன் வேலையெல்லாம் முடித்துவிட்டு காலை 8 மணிக்கு தனது பப்பரப் பப்பர ஓசையை குழந்தைகளுக்கு அறிவித்தார். குழந்தைகள் வழக்கம்போல் சவ்வுமிட்டாய் வாங்க வந்தன. மூங்கிலில் உள்ள குச்சியில் உள்ள பொம்மையை கைத்தாளம் போட வைத்தார். குழந்தைகளும் அந்த பொம்மை போல கைத்தளம் போட்டுக்கொண்டு ஆடத் தொடங்கினார்கள். ராமண்ணா சவ்வு மிட்டாய் விற்பனை செய்து கொண்டிருந்தபோதே நிலை தடுமாறி கீழே விழுந்தார் சவ்வுமிட்டாய் மூங்கில் கட்டை “டம்“ என கீழே விழுந்தது. சில குழந்தைகள் பயந்து போய் ஓட்டம் பிடித்தன. சில குழந்தைகள் ராமண்ணா ராமண்ணா என்று எழுப்பி பார்த்தனர் .அவர் எழுந்தபாடில்லை. குழந்தைகள் ஆசிரியைரை நோக்கி படையெடுத்தனர்.சார் ராமண்ணா கீழே விழுந்து விட்டார் சார் அவருக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. குழந்தைகள் மாணிக்கம் ஆசிரியரிடம் சொல்ல அவருடன் கமலா டீச்சரும் சென்றார்.. மாணிக்கம் அருகில் வந்து அவரது கை கால்களை கசக்கி விட்டனர். ஒன்றும் உணர்வில்லை. சுற்றிவர குழந்தைகள் நின்று கொண்டு அழுதவாறு இருந்தன. ராமண்ணாவிற்கு ஒன்றுமில்லை அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போனால் சரியாயிடும். நீங்க எல்லோரும் அவரவர் வகுப்பிற்கு போங்க கமலா டீச்சர் அறிவுரை. மனமில்லாமல் கண்கலங்கியவாறே குழந்தைகள் வகுப்புக்குச் சென்றனர். சார் முதல்லே ராமண்ணா வீட்டிற்கு தகவல் தெரிவியுங்கள். ஆம்புலன்ஸ்க்கு போன் செய்யுங்கள் மதிவண்ணன் ராமண்ணா குடும்பத்திற்கு தகவல் தந்த பின்பு பள்ளியின்அருகில் தொலைபேசி உள்ள வீட்டிற்குச்சென்று ஆம்புலன்ஸிற்கு போன்செய்தார்.. சிறிது நேரத்திற்கு பின்பு ராமண்ணாவின் உறவுகள் அனைத்தும் பதறி அடித்தபடி பள்ளிக்கு அருகில் வந்தனர். ஆம்புலன்சும் வந்தது. சார் யார் போன் செய்தது? நான் தான் சார். என் பெயர் மாணிக்கம் இந்த ஸ்கூல் டீச்சரா ஒர்க் பண்றேன். மாணிக்கம் அண்ணன் சவ்வுமிட்டாய் வித்துக் கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்து விட்டாருன்னு குழந்தைகள் வந்து சொன்னாங்க அதான் உடனே உங்களுக்கு கால் பண்ணினேன் ஆம்புலன்ஸில் வந்த நர்ஸ் உதவியாளர்கள் ராமையாவை தொட்டுப் பார்த்தார்கள். சார் உயிர் போய் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு மேலே ஆகிருச்சு மாரடைப்பால் உயிர் பிரிஞ்சிடுச்சு. ஆக வேண்டிய காரியத்தை குடும்பத்தில் உள்ளவரிடம் சொல்லி பார்க்கச் சொல்லுங்க. இது இயற்கை மரணங்கிறதுனாலா தாரளமா பிணத்தை வீட்டுக்கு எடுத்து சொல்லுங்க இருந்தாலும் சில பார்மாட்டிகளை முடித்து தருகிறோம். ராமண்ணாவின் மனைவி, மகன் உறவினர் என கதறி அழுதனர். பள்ளிக்கூடம் விடுமுறை அளிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ஏ.இ.ஓ விடம் அனுமதி வாங்கி பள்ளிக்கு விடுமுறை அளித்தார். குழந்தைகள் அழுது கொண்டே தங்களின் வீட்டிற்கு சென்றனர் ராமண்ணாவின் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. குழந்தைகள் கனத்த இதயத்துடன் அவரவர்கள் வீட்டிற்கு சென்றனர். மாலை ராமண்ணாவின் இறுதிச் சடங்கு நடைபெற்றது. சுடுகாடு எடுத்துச் செல்லப்பட்டது. நீ இறந்த பின்பு உன் பின்னால் வரும் கூட்டமே உன்னை முடிவு செய்யும் என்பார். முஃ ப்தி ஓமர். அதுபோல ராமண்ணாவின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இவற்றிற்கெல்லாம் காரணம் ராமண்ணாவின் நல்ல உள்ளமும் அவரின் சவ்வுமிட்டாய் ருசியும் தான். மறுநாள் காலை எட்டு மணி ராமண்ணாவின் “ பப்பரப் பப்பர“ ஒலி ஏதும் கேட்கவில்லை. குழந்தைகள் அவர் விற்கும் இடத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். ராமண்ணா மிட்டாய் செய்து தருவது போன்றும் அந்த பொம்மை தாளமிடுவது போன்ற காட்சிகள் அந்த குழந்தைகளின் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஒவ்வொருவராக வந்து அந்த இடத்தை பார்த்துவிட்டு அழுதபடியே பள்ளிக்குள் சென்றனர். இப்படியே ஒரு மாதம் கழிந்தது திடீரென்று மீண்டும் “பப்பரப்பப்பர“ சத்தம் குழந்தைகளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஓடிவந்து பள்ளியின் நுழைவாயில் கேட்டருகே வந்து நின்றனர். ராண்ணாவின் மகன் முருகன் அந்த இடத்தில் சவ்வுமிட்டாய் விற்றுக் கொண்டிருந்தார். குழந்தைகள் அவரிடம் செல்ல தயக்கம் காட்டினர். அவரும் அப்பா போல அய்யாவே அம்மாவே வாங்க என்று அன்பாய் அழைத்தார். குழந்தைகள் ராமண்ணா இறந்து போயிட்டாரா? அவரு யாரு உங்க அப்பாவா? உங்க பேரு என்ன? என்பேரு முருகன். நாங்க உங்களை முருகண்ணா என்று கூப்பிடலாமா? தாரளமாக் கூப்பிடுங்க முருகன்னா எனக்கு ஒரு வாட்ச் கட்டி விடுங்க எனக்கொரு மயில் வேணும் ”தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை உணர்ந்த மகன் முருகன் ஒவ்வொருவருக்கும் கண்ணீர் வடித்தபடியே சவ்வு மிட்டாய் விற்பனையை தொடங்கினார். ராமண்ணா : சாரி முருகண்ணா! நாளைக்கும் வாங்க. அப்பா மாதிரியே சவ்வுமிட்டாய் ருசி அப்படியே இருக்கு என்ற குழந்தைகளின் பேச்சு முருகனுக்கு ஆறுதல் தந்தது. பப்பர பப்பர ஒலி மீண்டும் கேட்டது. குழந்தைப்பொம்மையின் கைதட்டல் சிறார்களை மகிழ்வித்தது. எழுதியவர்: – கு. மணி த/பெ:குருசாமி தெற்குப்புதுத் தெரு சக்கம்பட்டி -625512 ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம் https://bookday.in/90s-kids-javvu-mittaikarar-tamil-short-story-written-by-k-mani/
  19. இது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
  20. எம்முடன் கூட வந்த இந்திய ராணுவத்தினன் பலாலி வீதியுடன் நின்றுவிட நானும் தகப்பனாரும் மெதுவாக எமது ஒழுங்கைக்குள் நுழைந்தோம். அப்பகுதி அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போயிருந்தது. மதில்கள் ஒழுங்கையின் நீளத்திற்கு வீழ்ந்துகிடக்க, ஒழுங்கையின் இருபக்கமும் பற்றைகள் வளர்ந்து ஒழுங்கையினை மறைத்தபடி நின்றது. அங்கிருந்த 5 வீடுகளில் ஒன்றேனும் தப்பியிருக்கவில்லை. இந்திய இராணுவம் இப்பகுதியில் நிலைகொண்ட பின்னர் மீதமாயிருந்த வீடுகளையும் இடித்துத் தள்ளியிருக்க வேண்டும். எல்லாமே அழிவுகளைச் சுமந்து காணப்பட்டன. ஆளுயரத்திற்கு மேலாய் வளர்ந்திருந்த பற்றைகளைத் தாண்டி எமது வீட்டினை அடைந்தோம். வீட்டின் பெரும்பகுதி எரியூட்டப்பட்டது போலக் காணப்பட்டது. முதலாவது அறையில் இந்திய ராணுவம் தங்கியிருக்கிறது என்பது தெரிந்தது. அவர்கள் பாவித்த சில பொருட்கள், இந்தியாவின் ப்ரூ கோப்பி என்று சில இந்தியப் பொருட்களும், அயலில் உள்ள வீடுகளில் இருந்து அவர்கள் எடுத்து வந்திருந்த தளபாடங்களும் அவ்வறையில் பரவிக் கிடந்தன. இடிந்த மதில்களின் கற்களை எடுத்துவந்து காப்பரண் கட்டியிருந்தார்கள். இவ்வீடுகளில் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதோ அல்லது இவ்வீடுகளை அவர்கள் தமது வாழ்நாள் உழைப்பின் மூலமே கட்டியிருந்தார்கள் என்பதோ அவர்களுக்கு ஒரு பொருட்டாக இருந்திருக்காது. நாம் வெகு நேரம் அங்கு நிற்க விரும்பவில்லை. 30 நிமிட நேரமே இருக்கமுடியும், அதற்குள் எடுத்துக்கொள்ள முடியுமானவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடவேண்டும் என்று அந்த அதிகாரி பணித்தது எமக்கு நினைவில் இருந்தது. ஆகவே சில தேங்காய்கள், சமயலறையில் இன்னமும் மீதமாயிருந்த மாப்பியன் அரிசி, வாழைக்காய் என்று சிலவற்றையும் ஓரிரு பாத்திரங்களையும் எடுத்துக்கொண்டு எமது சைக்கிள்களில் கட்டிக்கொண்டோம். இவற்றுக்கு மத்தியில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் வீசுவதை நான் அவதானித்தேன். இறந்த விலங்குகளின் உடல்களாக இருக்கலாம் என்று எண்ணினேன். அவை மனிதர்களின் உடல்களாகவும் இருக்கலாம். ஆனால் பற்றைகளுக்குள் என்னவிருக்கின்றது என்று பார்க்கும் துணிவு எனக்கு இருக்கவில்லை. வீட்டிலிருந்து துரத்தப்பட்டபோது எம்முடைய மூன்று நாய்கள் பற்றி நாம் யோசிக்கவில்லை. ஆனால் மீண்டும் அங்கு சென்றபோது அவற்றுக்கு என்னவாகியிருக்கும் என்று எண்ணத்தொடங்கினேன். அப்பகுதியில் இருந்த இந்திய ராணுவத்தினரின் காதுகளுக்கு எட்டாத வகையில் அவற்றின் பெயர் சொல்லி அழைத்தேன், எவையுமே வரவில்லை. எமது வீட்டைச் சுற்றிப் படர்ந்திருந்த பற்றைகளும், துர்நாற்றமும், அயல்வீடுகளில் இருந்து வந்த உய்த்தறிய முடியாத சத்தங்களும் அச்சத்தை ஏற்படுத்தின. பேய்நகரம் போன்று காட்சியளித்த அப்பகுதியில் தொடர்ந்தும் நிற்க‌ விரும்பாது அங்கிருந்து வெளியேறினோம். மீண்டும் பலாலி வீதி, கோண்டாவில்ச் சந்தி என்று இந்திய ராணுவ நிலைகளூடாக வெளியேறி சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டே பாசையூரை வந்தடைந்தோம்.
  21. அன்றிரவு முழுதும் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்களில் யாழ்நகர், குருநகர், பாசையூர், சின்னக்கடை, கொழும்புத்துறை, சுண்டுக்குளி ஆகிய பகுதிகளில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இதில் வேதனை என்னவென்றால் அப்பகுதியெங்கிலும் புலிகளையோ அல்லது அவர்களது முகாம்களையோ நாம் காணவில்லை என்பதுதான். பழைய பூங்கா பகுதியில் அமைந்திருந்தத் புலிகளின் பயிற்சிமுகாமும் அன்றைய நாட்களில் இயங்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியிருந்தபோதிலும், சனநெரிசல் மிகவும் அதிகமான அப்பகுதி மீது மிகவும் கண்மூடித்தனமான முறையில் செல்த்தாக்குதலை இந்தியாவின் சாத்தான்படை சகட்டுமேனிக்கு நடத்திக்கொண்டிருந்தது. நாம் பாசையூரில் அடைக்கலமாயிருந்த சில நாட்களில் யாழ்நகரினை இந்தியப் படை ஆக்கிரமித்துக்கொண்டது. வீதிகளில் ரோந்துவரும் இந்திய ராணுவத்தினை தூரத்திலேயே ஊர் நாய்கள் காட்டிக் கொடுத்துவிட சனமெல்லாம் வீடுகளுக்குள் அடைந்துவிடும். இந்திய ராணுவத்தின் பிரசன்னம் வீதியில் இருப்பது தெரியாது வீடுகளுக்கு வெளியே வந்தவர்கள் சிலர் வீதிகளிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பல மணிநேரமாக வீதிகளில் கிடந்த உடல்களை இந்திய ராணுவம் சென்றபின்னர் ஊரில் இருப்பவர்கள் எடுத்துவந்து அடக்கம் செய்தார்கள். சில சடலங்களின் மேலால் இந்திய ராணுவ வாகனங்கள் ஏறிச்சென்ற‌ அடையாளங்களும் காணப்பட்டன. சுமார் ஒன்று அல்லது ஒன்றரை மாத காலம் பாசையூரில் இருந்திருப்போம், கோண்டாவில், இருபாலை ஆகிய பகுதிகளில் மக்கள் தமது வீடுகளுக்குச் சென்று தேவையான பொருட்களை எடுத்து வர இந்திய ராணுவம் அனுமதியளித்திருக்கிறது என்று யாரோ சொன்னார்கள். ஆகவே பாசையூரில் நாம் தங்கியிருந்த வீட்டில் ஒரு சைக்கிளை கேட்டு எடுத்துக்கொண்டு கோண்டாவிலுக்குச் செல்லலாம் என்று தந்தையார் சொல்லவே, நானும் ஆம் என்றேன். பலாலி வீதியால் செல்லாதீர்கள். தின்னைவேலியில் இன்னும் சண்டை நடக்கிறதாம். பிரதான வீதிகளைத் தவிர்த்துவிடுங்கள் என்று ஆளாளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார்கள். அவர்கள் கூறியவாறே குச்சொழுங்கைகளுக்கூடாக‌ எமது பயணத்தை ஆரம்பித்தோம். பின்னர் ஆலய வீதி வழியே சென்று தின்னைவேலியில் ஆடியபாதம் வீதி, பாற்பண்ணை, மாதிரிக்கிராமம் என்று முழுவதுமாக உள் வீதிகளுக்கூடாக‌ நுழைந்து கோண்டாவில்ச் சந்திக்கும், பாமர்ஸ் ஸ்கூல் (கமல நல சேவைகள் நிலையம்) அமைந்திருந்த பகுதிக்கும் இடைப்ப்ட்ட பகுதியில், பலாலி வீதி கண்ணுக்குத் தென்படும் தூரத்தில் நாம் வந்தபோது, கோண்டாவில்ச் சந்தியில் இருந்து தின்னைவேலி நோக்கி இந்திய ராணுவத்தின் வாகனத் தொடரணி போய்க்கொண்டிருந்தது. வீதியின் இடதுபுறத்தில், சுமார் 50 மீட்டர்கள் தொலைவில் நின்றிருந்த எம்மைக் கண்டதும் வாகனத் தொடரணியை நிறுத்திவிட்டு துப்பாக்கிகளை நீட்டியவாறு பாய்ந்து வந்தது இந்திய ராணுவம். எனது கையில் ஒரு ஷொப்பிங் பை நிறைய தேசிக்காய்கள், வழியில் வரும்போது யாரோ ஒருவருடைய மரத்தில் பிடுங்கி எடுத்துக்கொண்டது. அப்பகுதியெங்கும் பற்றைக்காடுகளாய் மூடி வளர்ந்திருக்க, எம்மைக் கொன்றாலும் எவருக்குமே தெரியப்போவதில்லை என்று உணர்ந்துகொண்ட நாம், இந்திய ராணுவம் கட்டளையிட்டவாறே நிலத்தில் விழுந்து படுத்துக்கொண்டோம். எம்மைச் சுற்றிவளைத்த அவர்கள், "நீங்கள் புலிகளா, இங்கு ஏன் வந்தீர்கள், எங்கே போகிறீர்கள்?" என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனார்கள். "நாம் புலிகள் இல்லை, பொதுமக்கள், எமது வீடுகளைப் பார்க்க வந்திருக்கிறோம்" என்று தந்தையார் கூறவும், எனது பக்கம் திரும்பி, "பையில் என்ன வைத்திருக்கிறாய்?" என்று ஒருவன் ஆங்கிலத்தில் கேட்டான். தேசிக்காய் என்று நான் கூறவும், அதனை நம்பாது பையைப் பறித்து நோட்ட‌மிட்டான். பின்னர் எங்கள் இருவரையும் இழுத்துக்கொண்ம்டு பலாலி வீதிக்கு வந்தார்கள். வீதியின் நீளத்திற்குக் காப்பரண்களும், இந்திய ராணுவ வாகனங்களும் தென்பட்டன. கோண்டாவில்ச் சந்திப்பகுதியில், வீதியினை மறித்து பாரிய ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது. எம்மை அங்கு கொண்டு சென்றார்கள். நிலத்தில் இருத்திவைக்கப்பட்ட எம்மை அவர்களின் அதிகாரியொருவன் வந்து பார்த்தான். ஆங்கிலத்தில் தந்தையாருடன் பேச்சுக்கொடுக்கவே, தன்னை மீளவும் தபால் அதிபர் என்று அவர் கூறியபோது, "என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று அவர் கேட்டான். எமது வீட்டிற்கு வந்து, எம்மை வெளியே இழுத்துவந்து தாக்கிய அதே அதிகாரிதான் அவன். "உங்களின் புலிகள் எங்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள், நாம் அவர்களை விடப்போவதில்லை, அழித்தே தீருவோம்' என்று கர்வத்துடன் கூறிவிட்டு, "ஏன் இங்கே வந்தீர்கள்? இன்னமும் உங்களது வீட்டுப்பகுதியில் சண்டை நடக்கிறது, நீங்கள் அங்கு போகமுடியாது" என்று அவன் கூறினான். "வீட்டில் சமைப்பதற்குக் கூடப் பாத்திரங்கள் இல்லை, எமது சைக்கிள்களும் எமக்குத் தேவை. வீட்டிலிருந்து சில தேங்காய்களையும், மரக்கறிகளையும் எடுத்துவரத்தான் வந்திருக்கிறோம். ஒரு 30 நிமிடத்திற்குள் முடித்துவிட்டுக் கிளம்பிவிடுவோம்" என்று தந்தையார் மன்றாட்டமாகக் கேட்கவும், "நாம் உங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, சண்டையில் அகப்பட்டு வீணாகச் சாகப்போகிறீர்கள், உங்கள் விருப்பம்" என்று கூறிவிட்டு, எமது வீடு அமைந்திருந்த ஒழுங்கை வரை எம்மை அழைத்துச் செல்லுமாறு ஒரு ராணுவ வீரனைப் பணித்தான். அவன் எங்களை அங்கு அழைத்துச் செல்லும்போது அப்பகுதியெங்கும் நிலையெடுத்திருந்த ஏனைய இந்திய ராணுவத்தினர் ஏதோ ஜந்துக்களைப் பார்ப்பது போன்று பார்த்துக்கொண்டார்கள்.
  22. சுமார் நான்கு அல்லது ஐந்து மணித்தியாலங்கள் கிறீஸ்த்து ராசா கோயிலில் தங்கியிருந்தோம். செல்த்தாக்குதல் மெது மெதுவாக குறையத் தொடங்கியது. அதிகாலை 4 மணியளவில் மீளவும் கொய்யத்தோட்டத்தில் அமைந்திருந்த வீட்டிற்கு வந்தோம். ஆனால் வழமைபோல மறு நாள் மாலையும் செல்த்தாக்குதல்கள் ஆரம்பித்தன. அதே கொடூரமான, இடைவிடாத தாக்குதல்கள். பாசையூர் அந்தோணியார் ஆலயத்தை அகதிகள் முகாமாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய இராணுவம் அப்பகுதி மீது தாம் தாக்குதல் நடத்தப்போவதில்லை என்று உறுதியளித்திருக்கிறது. ஆகவே அங்கே போகலாம் என்று யாரோ சொன்னார்கள். ஆகவே இரவு 8 மணியளவில் சில உடுதுணிகளை எடுத்துக்கொண்டு பாசையூர் நோக்கிச் சென்றோம். எதிர்பார்த்ததுபோலவே அப்பகுதியெங்கும் சனக்கூட்டம். கோயிலின் உட்பகுதிக்குச் செல்ல முடியவில்லை, முற்றாக மக்களால் நிரம்பி வழிந்தது. ஆகவே ஆலய முன்றலில், கொடிக்கம்பத்தைச் சுற்றியிருந்த மணற்றரையில் அமர்ந்திருந்த பல நூற்றுக்கணக்கான மக்களுடன் நாமும் அமர்ந்துகொண்டோம். பாய்கள், படுக்கை விரிப்புக்கள் என்று கைகளில் அகப்பட்டதை மணலில் விரித்து குடும்பம் குடும்பமாக மக்கள் அமர்ந்திருந்தார்கள். யாழ்நகர் நோக்கி முன்னேறிவரும் இந்திய ராணுவம் அப்பகுதி நோக்கிக் கடுமையான செல்த்தாக்குதலைனை நடத்திக்கொண்ன்டிருந்தவேளை, கடலில் இருந்து கரையோரப் பகுதிகள் மீது கடுமையான பீரங்கித் தாக்குதலினை இலங்கை கடற்படை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக குருநகர், பாசையூர், கொழும்புத்துறை ஆகிய பகுதிகளில் அமைந்திருந்த குடியிருப்புக்களை இலக்குவைத்தே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பாசையூர் அந்தோணியார் ஆலயத்தில் அகதிகள் தஞ்சமடைந்திருப்பது இலங்கைக் கடற்படைக்குத் தெரியுமாதலால், அப்பகுதி இலக்குவைக்கப்படலாம் என்று பலர் கருதினர். ஆகவே சில குடும்பங்கள் அங்கிருந்து வேறு பகுதிநோக்கி கிளம்பிச் செல்ல ஆரம்பித்தன. தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருந்த மழை, ஆலயமும் இலக்குவைக்கப்படலாம் என்கிற அச்சம் ஆகியவை எம்மை ஆட்கொள்ள நாமும் ஆலயத்திலிருந்துந்து புறப்பட்டு கொழும்புத்துறை நோக்கிச் செல்லும் வீதியில் ஒரு வீட்டில் அடைக்கலமானோம். அவ்வீட்டில் வசிப்பவர்கள், அன்றிரவு அங்கு வந்து அடைக்கலமானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 வரையான மக்கள் அன்றிரவு அங்கு அச்சத்துடன் அமர்ந்திருந்தோம். செல்த்தாக்குதல் மீளவும் ஆரம்பமானது. ஒவ்வொரு இரவும் நடத்தப்படும் இத்தாக்குதல்களில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள். அன்றிரவும் அப்படித்தான். அப்பகுதியெங்கும் பல வீடுகள் செல்பட்டு உடைந்து நொறுங்குவது எமக்குக் கேட்டது. பாசையூர் அந்தோணியார் ஆலயத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தூரத்திலேயே நாம் அடைக்கலமாகியிருந்த வீடு அமைந்திருந்தது. இரவு 10 அல்லது 11 மணியிருக்கலாம், ஆலயப்பகுதியினை இலக்கு வைத்து கடுமையான தாக்குதலினை இந்திய ராணுவமும், இலங்கைக் கடற்படையும் நடத்தின. ஆலய முன்றலில் வீழ்ந்து வெடித்த செல்களினால் அங்கிருந்த பலர் துடிதுடித்து இறந்து போனார்கள். குறைந்தது 30 பேராவது கொல்லப்பட்டிருக்கலாம், பலர் காயப்பட்டார்கள் என்று அங்கிருந்து வெளியே ஓடிவந்தவர்கள் கூறியபோது, சில மணிநேரத்திற்கு முன்னர் நாம் அமர்ந்திருந்த இடமே தாக்குதலுக்கு உள்ளானது என்று அறிந்தபோது நாம் அச்சத்தில் உறைந்துபோனோம்.
  23. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மக்களே அமைதி அமைதி அமைதி.
  24. கடந்த வியாழக்கிழமை படுபட்சி நாவலை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் (கனடாவில் வாங்க விரும்புகின்றவர்கள் காலம் செல்வம் அண்ணையிடம் இருந்து வாங்க முடியும்). அவலமும் சுவாரசியமும் நிரம்பிய ஒரு நாவல். இலங்கையில் முதலாவது விமானத்தை செய்ய எத்தனித்த ஒரு தமிழ் இளைஞன் சிங்கள பெளத்த பேரினவாதத்தால் எவ்வாறு அணுகப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, வாழும் நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்டு, இன்னொரு தேசத்தில் அகதியாக தன் கனவை தொலைத்து விட்டு, தன் மகளின் கனவாவது நனவாகட்டும் என்று மிச்சக் காலத்தை வாழ்கின்றான் என்பதைச் சொல்லும் நாவல். இதனை எழுதிய டிலுக்ஸன் மோகன் இவ் நாவலை Autofiction என்றே குறிப்பிட்டு இருக்கின்றார். கற்பனையும் சுய அனுபவமும் இணைந்த ஒரு நாவல் என. ஆனால் இவர் இப்படி சொல்லிவிட்டு சும்மா இருந்திருக்கலாம். பேட்டிகளிலும், புத்தக வெளியீடுகளிலும் இந்த நாவல் முற்றிலும் தன் சுயசரிதை என அடித்து விட்டமையே இங்கு பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. இந்த விடயத்தில் நட்சத்திரன் செவ்விந்தியன் மற்றும் நெடுமாறன் சொல்வது (இருவரும் ஒருவரா எனத் தெரியவில்லை) சரியாகவே எனக்கு தோன்றுகின்றது. அத்துடன் நாவல் முழுதும் காலப்பிழைகள் பல உள்ளன. இறுதி யுத்தம் ஆரம்பிக்க முன்னர் இடம்பெற்றதாக சொல்லப்படும் கதையில், இறுதி யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் நிகழ்ந்தவையும் கலந்துள்ளன. ந.செ. இதனைக் குறிப்பிட்டும் உள்ளார். இலங்கை அரசு இராவணனின் புஷ்பக விமானத்தை தேடப் போவதாகவும், அது தொடர்பான தகவல்கள், வரலாற்று குறிப்புகள், ஆதாரங்கள் வைத்துள்ளவர்களின் உதவிகள் தேவை எனவும் அறிவித்தது, என் நினைவுகளின் படியும் கூகிள் ஆண்டவரின் தேடல் விடைகளின் படியும் 2009 இன் பின். 2016 இல் நிகழ்ந்த கருத்தரங்கின் பின், 2020 இல் இவ்வாறு அறிவித்தது. ஆனால், டிலுக்ஸன் 2009 இன் முன் நிகழ்ந்த தன் கதையில் இதனை இரண்டு மூன்று இடங்களில் குறிப்பிட்டு உள்ளார். அதே போல் 1980 இல் முதல் விமானம் Pazmany PL-2 உம் தயாரிக்கப்பட்ட பின் 2009 இன் பின் Lihiniya MK (விமானியற்ற,unmanned aerial vehicle (UAV)), Lihiniya MK II எனும் Medium-range tactical unmanned aerial vehicle (UAV) உம் தயாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் ஒரு தமிழ் இளைஞனது கனவு எவ்வாறு இனவாதத்தால் காவு கொள்ளப்பட்டது என்பதையும், அதன் போது நிகழ்ந்த சித்திரவதைகளையும் பேசும் இந்த நாவல், இலக்கிய நேர்மையற்று சொல்லப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. அந்த உண்மையை ந.செ கேள்வி கேட்பது காலத்துக்கு தேவையான ஒன்று. ஒருவர் இரவல் அனுபவங்களின்படி ஒரு நாவலை படைத்து விட்டு, அது தன் சொந்த அனுபவம் என்று சொல்வதை ஏற்க முடியாது.
  25. இனிமேல் மரணங்கள் இப்படித்தான் இருக்கும்*. “ சென்னை பெசண்ட் நகரில் அமைந்திருந்தது அந்த பங்களா! காலை 8மணி என்பதால் சாலை வழக்கப்படி பரபரப்பாக இருந்தது..! சரியாக 8.15க்கு அந்த வீட்டின் முன் நகரின் பிரபலமான மருத்துவமனைக்குசொந்தமான ஆம்புலன்ஸ் வந்து நின்றது..! அதிலிருந்து ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடலை மருத்துவமனை ஊழியர்கள் இறக்கி வீட்டிற்குள் வைத்துவிட்டு பணத்தைப்பெற்றுக்கொண்டு புறப்பட்டனர்..!ஆம்!! அநத குடும்பத்தலைவர் சுப்பிரமணிதான் நேற்றிரவு மாஸிவ் அட்டாக்கில் உயிர் விட்டிருந்தார்... பிணத்தின் கால்மாட்டில் வந்து நின்ற அவர் மனைவி மாலா முகத்தைப்பார்த்து கண் கலங்கினாள்..,.! மணி 8.45- நகரின் பிரபலமான பிரௌசிங் சென்டரிலிருந்து வந்த இரு நபர்கள் கேமிராவை பொருததி வீடியோ கான்பரன்சில் அவரது உடல் உலகெங்கும் தெரியச்செய்துவிட்டுச்சென்றனர்!! பக்கத்துவீட்டு ராவ் வந்து துக்கம் விசாரித்துவிட்டுசென்றார்....! ஆஸ்திரேலியா- சிட்னியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்த அநத வீட்டின் வீடியோ கான்பரன்சிங்கில் தெரிந்த தன் தந்தையின் உடலைப்பார்த்து விசும்பினாள் சுப்பிரமணியத்தின் மகள் மஞ்சு..! மதியம் 1மணிக்கு வீட்டுக்கு சாப்பிட வந்த அவள் கணவன் ஈஸ்வரன் " என்ன? Body தெரியறதா? சரிசரி, எனக்கு சாப்பாடு போடு. நான் அர்ஜெண்டா போகணும்" என்று கூறிய படியே சாப்பாடு மேஜையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்... சிங்கப்பூர் நகரின் சற்றே ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்திருந்தது கோபாலன் வீடு..! சுப்பிரமணியத்தின் இரணடாவது புத்திரன்!! "ஏண்டி! நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திருக்கலாமோ?" என்றான் கோபாலன், சற்றே கவலையுடன்..! " சும்மா இருங்க! போன வருஷம்தானே போய்ட்டு வந்தோம்? நாம போனா மட்டும் போன உயிர் வந்திடவா போகுது? பேசாம நெட்லயே பார்த்துக்கங்க!" என அழகாகப்பேசினாள் அவனது சகதர்மினி பாமா.. கோபாலன் மௌனமானான்!! USAவில் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள ஏஞ்சல்ஸ் அபார்ட்மெண்டில் 45 வது மாடியில் இருந்தான் சீனிவாசன்..! சுப்ரமணியத்தின் ஜேஷ்ட குமாரன்!! காலை செய்தியை கேட்டபோதிருந்தே கலங்கிப்போயிருந்தான்.! கிருஷ்ணனின் மனைவி லிண்டா அவன் அருகே வந்து நின்று அவனது கையைப்பிடித்துகொண்டாள்.. "Don't worry dear! You know, we can't do anything against the nature!!" என்று ஆறுதல் கூறினாள்..! அவளைத்திருமணம் செய்துகொண்டதால்தான் இன்று அவன் கிரீன்கார்டு சிட்டிசனாக அங்கே நிரந்தரமாகி இருக்கிறான்!! " why are you looking sad dad? Is anything going wrong? " என்று அவனைப்பார்த்து பாசத்துடன் கேட்டாள் அவனது 5வயது மகள் ரோஸலின்..! அவனது கண்கள் மானிட்டர் மீதே நிலைத்திருந்தது.......!! ன்னையில் காலை 10.30..! பெசண்ட் நகரில் சுப்பிரமணியம் உடல் மீது ஒரு பெரிய மாலையைக்கொண்டுவந்து போட்டார் ராவ்..! வெளியே யாரோ வரும் அரவம் கேட்டது..! தான் போனவாரம் புதிதாய் வாங்கிய BMW ல் சம்பந்தி சாந்தமூர்த்தியுடன்(யெஸ், தட் பாமாவின் அப்பா) வந்து இறங்கினார் நீலகண்ட சாஸ்திரிகள்..! அவரது கையில் லேப்டாப்பும் சிலபல எலக்ட்ரானிக் டிவைஸ்களும் இருந்தன....! சுப்பிரமணியத்தின் உடலைப்பார்த்ததும் கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன் அவர் தன்னிடம் கூறியது சாஸ்திரிகள் நினைவுக்கு வந்தது. " எப்படியாவது என் பெரிய மகன் கையால எனக்கு கொள்ளி வைக்கணும்! அதுதான் எனக்கு கடைசி ஆசை சாஸ்திரிகளே!" என்று தம்மிடம் கூறியதை நினைவு கூர்ந்து நீண்ட பெருமூச்சு விட்டார்!... நேரம் பிற்பகல் 3மணியைத்தாண்டியது..! இறுதி ஊர்வலத்திற்கு சாஸ்திரிகள் ஏற்பாடு செய்தபடி அட்வான்ஸ் டெக்னாலஜியுடன் கூடிய தனியார் வாகனம் வந்து நின்றது. காரியங்கள் மளமளவென நடந்தன.! ஓரிரு சடங்குகளைச்செய்தபின் உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது..! BMWகாரில் வந்திருந்த நான்கைந்து உறவினர்கள் ஏறிக்கொள்ள அடுத்த பத்தாவது நிமிடம் சடலம் சுடுகாட்டை அடைந்தது... மணி 4.30 சுடுகாட்டில் இருந்த உதவியாளன் "என்ன சாமி, இந்தக்காலத்துல யாருமே விறகு வெச்சி பொணத்தை எரிக்கறதே இல்ல! கரண்ட்லயும் gasலயும் தான் எரிக்கறாங்க! , நீங்க என்னடான்னா வெறகே வேணும்னு கேக்கறீங்க!" என்றான் சாஸ்திரிகளிடம்..! "நீ தொணதொணன்னு பேசாம வேலையைப் பாருப்பா!" என்றார் சாஸ்திரிகள். விறகுக்கட்டைகள் அடுக்கப்பட்டு அதன்மீது சுப்பிரமணியம் உடல் வைக்கப்பட்டது.. சிலபல எலக்ட்ரானிக் வேலைகளைச்செய்தபிறகு தனது லேப்டாப்பை ஆன் செய்து யாருடனோ வீடியோவில் பேசினார். உடலைச்சுற்றி பெட்ரோல் ஊற்றினார். பெட்ரோல் மீது பட்டாசு போன்ற ஒரு டிவைசை வைத்தார். வீடியோ காமிராவில் சில மந்திரங்களை சொல்லியபடி "சரி சீனிவாசன், நீ இக்னிட்டரை ஆன் பண்ணு!" என்றார். திரையில் தெரிந்த அமெரிக்காவிலிருந்த சீனிவாசன் தன் கையிலிருந்த கேஸ் அடுப்பின் லைட்டர் போன்ற ஒரு வஸ்துவை கம்ப்யூட்டர் மானிட்டரை நோக்கி கண்களில் கண்ணீருடன் அழுத்த அடுத்த கணம் சென்னை பெசண்ட் நகரில் சுடுகாட்டில் கிடத்தப்பட்டிருந்த சுப்பிரமணியத்தின் உடலின் மீது ஊற்றியிருந்த பெட்ரோல் குபுக்கென பற்றியது..! ஒரு இரண்டு நிமிடம் அமைதியாக நின்றிருந்த அனைவரும் பின் ஒவ்வொருவராக கலைந்தனர்.. கொள்ளி வைத்த சீனிவாசன் தன் தந்தையின் மீது பாசம் மேலிட அமெரிக்காவில் குமுறிக்குமுறி அழுதான்... இண்டர்நெட்டில் அப்பாவின் முகம் பல பழைய நினைவுகளை அவன் கண் முன் கொண்டு வந்தது...! சுப்பிரமணியத்தின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மனநிறைவுடன் தானும் வீட்டுக்கு கிளம்பினார் சாஸ்திரிகள்..” படித்ததும் பகிர்ந்ததும்
  26. நீங்கள் இப்படிஎழுதுவதாலும் ஏதாவது நன்மை உண்டா...எனாவெ அவனவன் செயல்பாட்டினால் ஏதோ முடிந்தளவு செய்கின்றார்கள் ... நன்மை கிடைக்குதோ இல்லையோ ...எமக்காக உயிர்விட்டவர்களுக்கு அவர்கள் செய்யும் பிரதியுபகாரம் நன்மை செய்வாரென்று தூக்கிபிடித்த அனுரவால் என்ன செய்யமுடிந்தது..திரும்ப புத்தர் சிலயைத்தான் வைக்கமுடிந்தது ....உவ்வளவும் செய்கின்றார் எனத் தூக்கிப்பிடித்த அனுரவுக்கு ..சிங்களவர் செய்தது என்ன ..லட்சக்கணக்கில் கூடி ஆதரவு தெரிவித்துள்ளார்கள் ... இங்கு நாம் என்ன செய்கின்றோ ம் என்றூ செய்வது எல்லாவற்றிர்கும் முட்டையில் மயிர் புடுங்க யோசிக்கின்றோம் ..இந்த சிந்தனை மாறினாலே ஓரளவு நின்மதி கிடைக்கும்...முதலில் தமிழனாக யோசிக்கவேண்டும்
  27. உள்நாட்டு யுத்தத்தால், புலம் பெயர்ந்து தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழமுடியுமென்ற நிலை இருக்கும் போது. இது முடியாதா என்ன? சுமந்திரனுக்கு ஒரு ‘சபாஸ்’👏
  28. இவர் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? தாம் இஸ்லாம் என கிறிஸ்தவ நாடுகளில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர்களின் அஜாரகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.... அவர்கள் கை கழுவும் தொட்டிகளில் காலை தூக்கி கழுவியிருக்கிறார்கள். அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்.
  29. சுமத்திரன் கடைசி சண்டையின் பின் தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடு பட்டவர் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கியவர் என்று அவரின் அடிவருடிகளுக்கு சொன்னால் தான் நிம்மதியாய் இருக்கும்கள் . இங்கு வடகிழக்கு தமிழர்களுக்கு தீர்வு முக்கியமல்ல சுமத்திரன் தலைவராகனும் அதுதான் சுமத்திர விசுவாசிகளுக்கு முக்கியம் .
  30. இவர்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருமுறை வடக்குக்கு ஒதுக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படாமல் திரும்பி சென்றது இதுகளை எல்லாம் எலெக்சனில் வென்று மாற்றி காட்டோணும் எண்டு பேசியதாக நினைவு இப்போ இவரே வடக்குக்கு பணம் வேண்டாம் எங்கிறார். கடந்த தேர்தலில் வடக்கில் அதிக ஆசனங்களை வென்றது தேசிய மக்கள் சக்தி அவர்களிடம் பணத்தை கொடுக்காமல் யாரிடம் கொடுப்பார்கள்? ஓரிருவாரங்கள் முன்னர்தான் தேசிய தலைவருக்கும் மாவீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன் என்று பாராளு மன்றத்தில் குதியோ குதியெண்டு குதிச்சார் இப்போ அதே வாயால தலைவரையும் போராளீகளையும் மக்களையும் கொன்று குவித்தவர்களை ராணுவவீரர்கள் என்று அவர்களை மரியாதையாக அழைக்கோணும் எண்டுறார். ஒரு தொகுதியில் மாத்திரம் வென்ற இவர் முழு வடக்குக்கும் பணம் தேவையில்லை என்று சொல்ல யாரிடமிருந்து அதிகாரத்தை பெற்றார்? அத்துடன் அநுர ஒருதடவை யாழ்வந்து நகரசபை கூட்டத்தில் கலந்து கொண்டபோது தையிட்டியில் விகாரை அமைத்தது சரி அதை வரவேற்கிறோம் அகற்ற தேவையில்லைஎன்று அர்ச்சுனா கூறியது காணொலி பதிவாக வந்தது. இந்த மூன்று விஷயங்களுமே கடந்தகால ஆட்சியாளர்கள் செய்ய நினைத்த ஒன்று, அர்ச்ச்சுனாவை உள்ளே போட்டபோது நாமல் ஓடி வந்தார் இப்போலாம் அரசல் புரசலாக அர்ச்சுனா நாமலின் பினாமி என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி உலாவருகிறது , அறிஞ்சு தெரிஞ்சவனுகதான் அப்படி உலவவிடுறாங்களோ யார் அறிவாரோ? இப்போலாம் வடக்கின் பிரதிநிதிகள் என்று பாராளுமன்றத்தில் குதிப்பவர்கள் வடக்கு மக்களுக்காக பேசுகிறார்கள் என்றா நினைக்கிறோம்? உண்மையில் அங்கே நடப்பது இளங்குமரனுக்கும் அர்ச்சுனாவுக்கும் இடையில் உள்ள தனிப்பட்ட வன்மம். ஒரு இயற்கைகோரத்தின் பின்னர் தமது பாகுதிகளை சீரமைக்க வேறுபாடுகளை மறந்து சிங்களவர்கள் முஸ்லீம்கள் எதிர்கட்சிகள் என அனைவருமே ஒன்றிணைந்து நிக்கிறார்கள், நமது வெண்ணெய்வெட்டி வீரர்கள் மூண்டுநாலுபேர் இருந்துகொண்டு இந்த நேரத்திலும் தங்கட பிரச்சனைகளை பேசுறதுக்கு பாராளுமன்றத்தை பாவிக்கும் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார்கள். காலங்களும் காட்சிகளும் ஆட்சிகளும் மாறிக்கொண்டேயிருக்கு ஆனால் அந்தகாலத்திலிருந்து இந்தக்காலம்வரை தமிழர் பிரதிநிதிகள் என்று தெரிவு செய்யப்பட்டு சிங்கள சபைக்கு செல்லும் தமிழர்கள் அன்றிலிருந்து இன்றுவரை அதே குணங்களுடன் தான் அலைகிறார்கள். நாட்கள்தான் மாறிவிட்டது ஆட்கள் மாறவில்லை. இந்த லட்சணத்தில் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையென்று அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம் மாவை சம்பந்தனை திட்டி என்ன பிரயோசனம், அவர்களை திட்டிய அதே இளம் தலைமுறையும் அவர்களைவிட கேவலமாகதானே நடக்கிறது. இந்த கோமாளி கூட்டத்தின் செயற்பாடுகளால் எதிர்காலத்தில் யாழ்மண்ணில் சிங்களவனே நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  31. இரண்டு வரியிலேயே முடித்திருக்க வேண்டிய கறுத்தது வீணாக இரண்டு பந்திகள் உதவி செய்ய போனவன் பொருட்களுடன் போகிறான் படம் பிடிக்க போனவன் காமெராவுடன் போகிறான்
  32. தெரியும்...புது டெக்னிக்...அவசரதேவைக்கு பாகிஸ்கடைக்கு பால் வாங்கப்போனேன் ..அங்கு 2 வீத பால் பக்கட்டுக்கள்... காலாவதி திகதியுடன் கிடந்தன ..கவுண்டரில் நின்ற நானாவிடம் கேட்டேன்...இவை திகதி முடியுது ..வேறு தரமுடியுமா என்று....அவர் சிரித்தபடி சொன்னார் ...இதை கொண்டுபோய் பிறீசரில் போட்டுவிட்டு ஒருமாதம் வரையும் பாவிக்கலாம் என்று....நானும் சிரித்தபடியே ..போனால் போகுதென்று ..4 வீத சிவப்பு பக்கட்டை எடுத்துக் கொண்டு ...வந்துவிட்டேன்.... வீட்டில் அந்த சிவப்புப்பை முடியுமட்டும் வாங்கின பேச்சு ... ரீங்காரம் செய்யுது
  33. இதே நிலை தான் என் வீட்டில், நண்பர்கள மத்தியில், உறவுகள் மத்தியிலும். இன்று புலிகள் இல்லை. செயல்திறன் அற்ற தமிழ் அரசியல் கட்சிகள் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனைய சிங்கள கட்சிகள் மீதும் நம்பிக்கை இல்லை. அனுர மீது மட்டும் தான் நம்பிக்கை என்பது அவர்களின் நிலைப்பாடு. அனுர மீதான நம்பிக்கை, அவர் சார்ந்த கட்சி மீது இல்லை என்பதும், தனி மனிதன் மீதான நம்பிக்கை ஆபத்தானது என்பதையும் காலம் அவர்களுக்கு காட்டாமல், அவர்களின் நம்பிக்கை நடைமுறை சாத்தியமாகும் வாய்ப்புகள் வாய்க்கட்டும்.
  34. வணக்கம் உறவுகளே 🙏 எபாபடியிருக்கிறீங்கள் எனது பழைய ஐடி நித்திலா 2009ம் ஆண்டுக்கு பிறகு இன்றுதான் மீண்டும் உறுப்பினராக இங்க வருகிறேன், வாசகியாக பலமுறை வந்து போயிருக்கிறன். எத்தினை பேர் ஞாபகம் வைச்சிருக்கிறீங்களோ தெரியாது. முதல் பதிவிலேயே எழுத்துப்பிழை 😊
  35. நாடு இந்தபாடு படுகிறது, சேர்ந்து கைகொடுப்போமென்றில்லாமல் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டுகொண்டு வெளியேறுதுகள் மந்தைக்கூட்டம். எதிர் பேரணி என்றவுடன், திருடர் பிடிபட்டவுடன் ஒன்று கூடி தெருவில் இறங்கி, ஆர்ப்பாட்டம் பண்ணி நாட்டை பிளவுபடுத்துதுகள். இதுகளெல்லாம் ஒன்று கூடி இதைவிட பேரழிவை ஏற்படுத்தத்தான் முயற்சி பண்ணுவார்கள். இதே தமிழருக்கெதிரான கலவரம் என்றால்; கட்சி பேதமின்றி ஒன்றுகூடி கைகொடுத்து அழிப்பார்கள், வீரவசனம் பேசுவார்கள். வரலாறு காணாத, நாடு தழுவிய வெள்ளம். இதற்குள் புலிகளை அழித்த படையினர், கொரோனாவை விரட்டிய படையினர், வெள்ளத்தையும் கடப்பர் என்று வீரவசனம் பேசியிருப்பார் மஹிந்தாவாக இருந்திருந்தால்.
  36. வசீ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லும் எவையும் ஒரு இரவு கூட தாக்குப் பிடிப்பதில்லை. இந்த 28 அம்ச திட்டம் அடுத்த நாளே 19 அம்ச திட்டம் ஆகியது. பின்னர் இந்த வார நீண்ட விடுமுறைக்கு முன்னர் இவை பேசித் தீர்க்கப்படும் என்றார். இங்கு கடந்த வியாழனும், வெள்ளியும் விடுமுறை தினங்கள். ஆனால் பேச்சுவார்த்தை எதுவுமே நடக்கவில்லை. அதிபர் ட்ரம்ப் இப்பொழுது நான்கு ஐந்து நாட்களாக வேறு விடயங்களில், ரஷ்ய - உக்ரேன் சண்டையில் அல்ல, தனது நேரத்தையும், முயற்சியையும் செலவழித்துக் கொண்டிருக்கின்றார். இந்தச் சண்டையில் அமெரிக்காவிற்கு நீண்ட கால நோக்கங்கள் சில இருக்கலாம். மேற்கு ஐரோப்பாவிற்கும் சில நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அதிபர் ட்ரம்பிற்கு இருக்கும் நோக்கங்கள் இவைகளுடன் இணைந்தவை அல்ல. அவர் ஒரு முதிர்ச்சி அடையாத, நான் என்ற முனைப்பு மிக அளவுக்கு அதிகமான, வயது போன மனிதர் மட்டுமே. தான் வரலாற்றில் நிற்க வேண்டும் என்று நினைக்கின்றார்............... நிற்கத்தான் போகின்றார், ஆனால் அவர் நினைக்கும் இடத்தில் அல்ல. இந்த அம்ச திட்டங்கள் என்ற பேச்சு வந்த பின், ரஷ்யா வழமை போலவே இன்னும் அதிகமாக உக்ரேன் மீது ஏவுகணைத் தாக்குதல்களையும், ட்ரோன் தாக்குதல்களையும் நடத்தியது. சிலர் இறந்தும் போனார்கள். உக்ரேனும் ரஷ்யாவின் ஒரு லேசர் விமானத்தை அதன் இருப்பிடத்திலேயே குண்டு வைத்து தகர்த்தது. ரஷ்யாவிடம் இருந்தது இரண்டு லேசர் விமானங்கள் மட்டுமே. அங்கும் சிலர் இறந்தார்கள். இந்தச் சண்டையின் ஆரம்பமே உக்ரேனை நேட்டோவில் இணைக்கக் கூடாது என்பது தான். உக்ரேனை நேட்டோவில் இணைப்பதை யார் தடுக்கின்றார்கள் என்ற கேள்விக்கு பதில் ரஷ்யா என்பதே. ரஷ்யாவை மீறி உக்ரேனை நேட்டோவில் இணைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. இந்த இரு பக்கங்களிலும் எவர் உக்ரேனில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்காக போராடுகின்றார்கள்................. ரஷ்யாவா................ ரஷ்யாவில் இருக்கும் சிறுபான்மை மக்களே தங்கள் அடையாளத்தை தொலைத்தவர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா. செச்னியர்கள் என்ற ஒரு இனமே ரஷ்யாவில் இல்லாமல் ஆகிவிட்டது அல்லவா. ரஷ்யா போன்ற அரசில் மட்டும் அல்ல, அமெரிக்காவிலும், சீனாவிலும் கூட சிறுபான்மை அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவை வீழ்த்தி ஜப்பான் வென்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவில் அரசு அமைத்திருந்தால், இந்தியாவிலும் மொழிவாரி மாநிலங்களோ அல்லது தனித்தனி இன அடையாளங்களோ இருந்திருக்காது. பர்மாவில் 10 இலட்சம் தமிழர்கள் தொலைந்து போனது போல. இந்துக்களாகிய தமிழர்கள் இலங்கையில் வாழ்கின்றார்கள், அவர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள் என்ற காரணத்தை முன்வைத்து இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்க முடியாது. அப்படி இந்தியா செய்தால், இந்தியாவுக்கு எதிராகவே உலக அபிப்பிராயம் இருக்கும். அதுவே தான் ரஷ்யாவின் நிலையும் இன்று. என்ன ஆனாலும் எப்போதும் ரஷ்யாவிற்கு ஆதரவாகவே வரும் கருத்துகளையோ, அல்லது எந்த நிலையிலும் எப்போதும் அமெரிக்க ஆதரவாக வரும் கருத்துகளையோ அப்படியே எடுத்துக் கொள்ள முடியாது. இது பெரும்பாலும் ஏற்கனவே ஒருவருக்குள் இருக்கும் விருப்பு - வெறுப்பு - காழ்ப்பு என்ற உணர்வுகளின் அடிப்படைகளில் வரும் கருத்துகள். ஊடகங்களும், கருத்தாளர்களும் இப்படி பக்கச்சார்பாக இயங்கினாலும், காலப்போக்கில் அவற்றின் தன்மைகளை அறிந்து, பிரித்தறிய வேண்டியது எங்களின் கடமை ஆகின்றது.
  37. அன்றைய நாட்களில் பல உயர்தர மாணவர்கள் தாமாகவே புலிகளில் இணைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அல்ல, ஆயிரக்கணக்கானோர் இவ்வாறு இணைந்தனர். அவ்வாறு சுய விருப்பில் இணைந்த அனைவரையும் உங்கள் இந்த கருத்து அவமானப்படுத்துகின்றது. நாமெல்லாம் வசதியான வாழ்க்கையை நோக்கி நகரும் பொழுது படிப்பை விட, தாயக மீட்பு முக்கியம் என சென்ற ஆயிரக்கணக்கானோரை அவமானப்படுத்தி உள்ளீர்கள் இங்கு.
  38. 2000 களில் மாணவனாக வந்த, ஒற்றையாளாக இருந்த எனக்கும் இதே அனுபவம் தான். ரியூசன் இலவசம் (50% பணி செய்த காரணத்தால்), மருத்துவ காப்புறுதி 90% இலவசம். வீட்டு வாடகையும், உணவும் தான் செலவு. அமெரிக்காவின் வறுமைக் கோட்டிற்குக் கீழானது என்று எனக்கும் அன்று தெரியாமல் வந்த சம்பளத்தில் ஊருக்கு அப்பாவின் செலவுக்கும் அனுப்பி, எஞ்சிய சேமிப்பில் முதல் வாகனமாக மூவாயிரம் டொலர்களுக்கு ஒரு பழைய காரை வாங்கி அதில் பழகி சாரதி அனுமதிப் பத்திரம் எடுக்கவும் முடிந்தது. இத்தனைக்கும் நான் மாநில அரசின் உணவு உதவியைக் கூட பெற்றுக் கொள்ள முயலவில்லை (ஒரு கௌரவ கவரி மான் சின்ட்றோம் தான்😂!). இப்படி குடியேறிகளாக வந்த என்னையும் உங்களையும் போன்ற பலரை இலவசங்கள், சலுகைகள் கொடுத்து நிமிர்த்தி விட்டிருக்கிறார்கள். அதே உதவிக் கரங்களை இனி வரும் குடியேறிகளுக்கும் ஓரளவு கொடுப்பதற்கு நாம் ஆதரவாக இருக்கிறோம். ஆனால், எம்மிடையேயும் சிலர் விசித்திரமாக இருக்கிறார்கள். உதாரணமாக, "பெரும்பாலான அமெரிக்கர்களின் வரியை உயர்த்தாமலே, படிப்புக் கடன் -student loan பெற்றவர்களுக்கு அரசு ஒரு பகுதிக் கடனைக் கட்டி அவர்களை மீட்கும்" என்று பைடன் அறிவித்த போது, எதிர்ப்புக் காட்டிய என் ஈழத்தமிழ் அமெரிக்க நண்பர்கள் பலர், இதே சலுகையெல்லாம் அனுபவித்து தற்போது செல்வந்தர்களாக இருப்போர் தான்! "என்ன டிசைனோ?" என்று அடிக்கடி நான் யோசிப்பதுண்டு😂!
  39. இந்தக் கட்டுரை எழுதியவரின் பெயர், விபரங்கள் இல்லாமல் சமூக ஊடகங்களில் வரும் கட்டுரைகள் போன்ற ஒன்றாக இருந்தால், இதை மிக இலகுவாக புறக்கணித்து விட்டு போய்விடலாம். ஆனால் பொறுப்பான ஒரு இடத்தில் இருக்கும், பொதுவெளியில் இயங்கும் அபிலாஷ் போன்ற ஒருவர் இவ்வளவு மேலோட்டமாக, பிழையான அனுமானங்கள் மற்றும் தகவல்களுடன், அவசரகதியில் எழுதியிருப்பது ஆரோக்கியமான ஒன்றல்ல என்றே தோன்றுகின்றது. என்னுடைய சொந்த அனுபவங்கள் மற்றும் நான் அறிந்தவற்றையும் அடிப்படையாகக் கொண்டு, தேவையான தரவுகளையும் தேடி எடுத்து, அமெரிக்காவின் நிலையையும், இந்தியாவின் நிலையையும் எந்தப் பக்கமும் சாராமல் எழுத ஆரம்பித்தால் அது ஒரு சின்ன புத்தகமாகவே முடியும். நான் 95ம் ஆண்டு இங்கு படிக்க வந்தேன். மூன்று மாதங்களின் பின்னர் மனைவியும் வந்தார். அடுத்த அடுத்த மாதங்களில் எங்களின் முதலாவது குழந்தை உண்டாகினார். படிக்கும் போது அமெரிக்க பல்கலைக்கழகமே முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் மாதம் மாதம் ஒரு தொகையை செலவுக்கு கொடுத்தார்கள். அந்தத் தொகை வறுமைக் கோட்டிற்கு மிகவும் கீழேயே இருந்தது. இந்த விடயம் அப்போது எனக்குத் தெரியாது ஏனென்றால் அவர்கள் கொடுத்த தொகையில் அரைவாசிக்கு மேல் மீதமாகிக் கொண்டிருந்தது. மகப்பேற்று மருத்துவரிடம் போன பொழுது, அவர் எங்களிடம் அமெரிக்க அரசின் வருமானம் குறைந்தவர்களுக்கான சமூகநலத் திட்டங்கள் பற்றி சொல்லிவிட்டு, எங்களை அதில் சேரச் சொன்னார். நாங்களும் சேர்ந்தோம். மாதம் மாதம் உணவு முத்திரைகள் கொடுத்தார்கள். இது நடந்தது 95, 96 மற்றும் 97ம் ஆண்டுகளில். பணவீக்கம், வேலையின்மை போன்ற காரணங்களால் இது இன்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம் அல்ல. நாங்கள் அன்று அமெரிக்க அரசிடம் இருந்து பெற்றுக் கொண்டிருந்தது எங்கள் மூவருக்கும் தேவைக்கும் அதிகமாகவே இருந்தது. இங்கு மத்திய அரசின் செலவுகள் பிரதிநிதிகளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். மத்திய அரசின் செலவீனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அல்லது கடன் முடிவடையும் தறுவாயில், புதிய நிதி அல்லது கடன் எல்லை பெரும்பான்மையான பிரநிதிகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். சில சமயங்களில் பிரேரிக்கப்படும் புதிய நிதி அல்லது கடன் எல்லைக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைப்பதில்லை. அந்த நாட்களில் மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய நிதி வழங்குவது தடைப்படும். அரசின் சமூகநலத் திட்டங்களுக்கும் இங்கிருந்தே நிதி போகின்றது. ஆனாலும் நிதி வரப் போவதில்லையே என்று இங்குள்ள நிர்வாகத் துறைகள் இந்த சமூகநலத் திட்டங்களை என்றும் கைவிடுவதில்லை. 'இனிமேல் பூனைக்கறி தான் சாப்பிட வேண்டும்............' என்று சொல்வது நிலைமையின் அவசரத்தை அழுத்திச் சொல்லும் ஒரு முறையே அல்லாமல் அது நிஜம் அல்ல. தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டது உண்மையிலேயே நடந்தது. இந்தியாவில் தொடரும் விவசாயிகளின் தற்கொலைகளும் உண்மையே. ஏழ்மையை ஒரு குற்றமாக இங்கு அமெரிக்காவில் எவரும் பார்ப்பதில்லை. ஒருவர் ஏழையா, இல்லையா என்று கூட இங்கு தெரிவதில்லை. அரசிடம் உதவி பெறுவதற்கு பலர் தயங்குகின்றார்கள், வெட்கப்படுகின்றார்கள் என்பது உண்மை தான். அது அவர்களின் தன்முனைப்பை, சுயமரியாதையை இழக்கும் ஒரு செயல் என்று அவர்கள் நினைப்பதால் மட்டுமே. அந்த நினைப்பே ஏழ்மையும், இல்லாமையும் தங்களின் தலைவிதி என்று அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை கடந்து முன்னேறும் திறனை அவர்களுக்கு கொடுக்கின்றது. இந்தியாவில் பிறப்பு என்றும், தலைவிதி என்றும் கிடைத்த வாழ்வை ஏற்றுக்கொண்டு அப்படியே தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல கோடிக்கணக்கான மக்களை அபிலாஷ் போய்ப் பார்க்கவேண்டும். இன்றிருப்பதை விட 2008ம் ஆண்டில் இங்கு அமெரிக்காவில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அமெரிக்க வாகனங்கள் தயாரிக்கும் நகரான Detroit மிகவும் நலிவடைந்தது. வாகனங்கள் தயாரிக்கும் மூன்று பெரிய அமெரிக்க நிறுவனங்களில் இருந்தும் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஒரு செய்தித் துணுக்கில் ஒரு குடும்பம் வேலை இழந்து, அரசின் சமூகநலத் திட்டத்தில் போய் உதவி பெறும் நிலையை எண்ணி கண்கலங்கி நின்றார்கள். இப்படி அவர்கள் கேட்டது வேலையை மட்டுமே, அரசின் உதவியை அல்ல. பின்னர் அமெரிக்க அரசு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பல பில்லியன் டாலர்களை கடனாகக் கொடுத்தது. புதிய வாகனங்கள் தயாரிக்கப்பட்டன. அமெரிக்கர்கள் அவற்றை வாங்கினார்கள். இது ஒரு அலையாக இங்கு நடந்தது. இந்தியர்களோ அல்லது வேறு நாட்டவர்களோ அன்று அமெரிக்க வாகனங்களை வாங்குவது இல்லை என்றே சொல்லலாம். அந்த நிறுவனங்கள் கடன்களை திருப்பிச் செலுத்தினார்கள். அமெரிக்காவும் அதன் மக்களும் மீண்டும் மீண்டும் மீண்டு வருவதற்கான பிரதான காரணம் இதுவே. 100 நாட்கள் வேலைத் திட்டம் பற்றி அறிய வயநாடு போகத் தேவையில்லை. தமிழ்நாட்டிலேயே அது பரவலாக இருக்கின்றது. அடிக்கடி ஊர்மக்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் செய்திகளில் வருகின்றது. திட்டத்தின் பிரகாரம் வேலை கொடுப்பதில்லை என்றும், கூலி கொடுப்பதில்லை என்றும் போராடுகின்றார்கள். இந்த திட்டத்தால் இதுவரை உற்பத்தி, சேவைகள் அல்லது எந்த மக்களினதும் வாழ்க்கைத்தரமாவது அதிகரித்திருக்கின்றதா. இதுவும் இன்னொரு இலவச உதவி வழங்கும் தேர்தல்கால வாக்குறுதியாகவே இருக்கின்றது. வேலையில் இருந்து கொண்டே ஏழையாகவும், பரதேசியாகவும் இருக்கும் நிலை அமெரிக்காவில் இருக்கின்றது என்கின்றார். வசந்தபாலனின் 'அங்காடித் தெரு' மற்றும் இவை போன்ற படங்கள் சினிமா அல்ல, அவை நிஜம் என்ற உண்மையை காணத் தவறிவிட்டார். அமெரிக்கா பாலும், தேனும் ஓடும் ஒரு தேசம் அல்ல. உலகில் அப்படி ஒரு தேசமுமே கிடையாது. ஆனால் இந்தியா போன்ற சமூகநீதி மறுக்கப்பட்ட, தேர்தல் காலங்களில் அன்றி வேறு எப்போதும் எவ்வகையிலும் மனிதர்களாகவே கருதப்படாத ஏழை எளிய மக்கள் படும் அவலங்களுக்கு பல மடங்குகள் குறைந்த அவலமே அமெரிக்காவிலும், உலகின் பல நாடுகளிலும் இருக்கின்றது. இந்த மாதம் ஜெயமோகன் அமெரிக்கா வந்தார். அவர் இங்கு வருவது இது ஐந்தாவது தடவை என்று நினைக்கின்றேன். பல வகைகளில் உலகின் சிறந்த தேசம் அமெரிக்காவே என்று ஜெயமோகன் ஒவ்வொரு தடவையும் எழுதுகின்றார். அபிலாஷ் தான் ஜெயமோகனுக்கு எழுத்திலும், சிந்தனையிலும் எதிர்முனை என்பார். இரண்டு முனைகளுக்கு நடுவில் அமெரிக்கா மாட்டுப்பட்டுவிட்டது போல....................🤣.
  40. எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
  41. ஒரே மூச்சில் முழுவதையும் வாசித்தேன். நாம் அப்போது கொக்குவில் பகுதியில் வசித்தோம். பிரம்படியில் இந்திய இராணுவம் செய்த படுகொலைகளை தொடர்ந்து உடனடியாக சங்கானைக்கு சென்றுவிட்டோம். பழைய சம்பவங்கள் பல இப்போது நினைவில் இல்லை. உங்கள் பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி இப்போதுதான் அறிகின்றேன். இந்திய இராணுவத்தினர் முல்லைத்தீவில் மனிதாபிமான உதவிகள் செய்வதாக கூறும் செய்தி நேற்று படங்களுடன் வந்தபோது பழைய நினைவுகள் வந்தன.
  42. Part 1 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part1.pdf Part 2 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part2.pdf Part 3 http://ebook.yarl.com/ipkf/Satarnic-Force_Part3.pdf இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளது.
  43. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடியும். இதற்கு முன்னர் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்து குடிவரவு பணிகளை முடிக்க வேண்டிய நிலை இருந்தது. இலங்கைக்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவோரு சிறந்த வழிமுறையாகும் என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு நுழைவாயில் (E-Gate)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கடவுச்சீட்டுகளையும் கொண்ட பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். பல இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/good-news-foreigners-who-visting-sri-lanka-1763883182
  44. சூப்பர் ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ஆட்டமிழக்க , புதிதாக இன்னுமொருவர் விளையாடலாம். அதாவது ஒரு அணி சார்பாக அதிக பட்சம் 3 பேரே துடுப்பாட முடியும். 2 வது வீரரும் ஆட்டமிழந்தால் அந்த அணியின் ஆட்டம் முடிவடையும். இது பலகாலமாக நடைபெறும் விதிகளில் ஒன்று.
  45. தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்பொழுது எனக்குப் புரிகின்றது. இப்பொழுது இந்தச் சிறிய அறை தான் என்னுடைய உலகத்தின் மிகப் பெரும் பகுதி. இந்த அறையை சிறிது என்பதற்கு மேல் எப்படிச் சொல்வது என்றும் தெரியவில்லை. என்னுடைய வீட்டில், ஆமாம் அது என்னுடைய வீடு தான், ஐந்து அறைகள் இருந்தன. முதலில் நான்கு அறைகள் மட்டுமே இருந்தன, பின்னர் நாங்கள் ஒரு பெரிய அறையை வீட்டுடன் இணைத்துக் கட்டினோம். நான் சிறிய அறை, பெரிய அறை, சாமி அறை என்று இப்படித்தான் சொல்லுவேன். அவர் தான் யாரும் கேட்டால் ஒவ்வொரு அறைகளின் அளவையும் ஒரு பெருக்கல் வாய்ப்பாடு போல சொல்லுவார். இங்கு ஒவ்வொருவருக்கும் இதே போன்ற சிறிய அறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு கட்டில், ஒரு வசதியான கதிரை, இரண்டு சின்ன அலுமாரிகள், சின்ன மேசை மற்றும் நானும் சேர்ந்து இந்த அறையை நிரப்பிவிட்டோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் கொடுப்பார்கள். நான் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். எதையாவது வாசி வாசி என்று அவர் சொன்னபடி புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் என் அறையைத் திறந்தால், உங்கள் வலதுகைப் பக்கம் இருக்கும் அலுமாரிக்குள் இருப்பது அவ்வளவும் புத்தகங்களே. என்னுடைய சின்ன மகள் ஒவ்வொரு மாதமும் புதிது புதிதாக வாங்கி அடுக்கிவிடுகின்றார். எங்களுக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஆண், பெண், ஆண், பெண் என்று அடுத்தடுத்துப் பிறந்தார்கள். இப்பொழுது ஆறு பேரப் பிள்ளைகளும் இருக்கின்றார்கள். இங்கிருப்போர் பலருக்கும் இப்படியே பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வெளியே அவரவர்களின் வீடுகளில் இருக்கின்றார்கள். பிள்ளைகள் மேல் கோபமோ அல்லது ஒரு மன விலக்கலோ இருந்தாலும் கூட, பேரப் பிள்ளைகளின் மேல் ஒரு இம்மியளவு கூட குறையாத பாசமே இங்கிருப்போர் எல்லோரிடமும் இருக்கின்றது. இந்த வராந்தாவில் முதல் அறையில் இருக்கும் அவர் ஒரு சரியான முசுடு. அவரின் மனைவி சில வருடங்களின் முன் போய்ச் சேர்ந்துவிட்டார். சில மாதங்களிலேயே அவரை அவரது பிள்ளைகள் இங்கு கொண்டு வந்து விட்டதாகச் சொல்கின்றார்கள். அவர் எவருடனும் முகம் கொடுத்து கதைப்பதில்லை. ஆனால் அவருடைய பேரப் பிள்ளைகள் வரும் நாட்களில் அவர் முழுதாக மாறி, மிகவும் உற்சாகமாக இருக்கின்றார். அப்படியான ஒரு நாளில் என்னைப் பார்த்து சிரித்தும் இருக்கின்றார். மீண்டும் கோவிட் வைரஸ் பரவுகின்றது என்று இப்பொழுது அறைக்குள்ளேயே இருக்கச் சொல்லிவிட்டார்கள். இந்த யன்னல் ஊடாக தெரிவது தான் நிலம், நீலம் என்றாகிப் போய்விட்டது. முன்னரும் முதலாவது கோவிட் தொற்றுக் காலத்தில் இப்படி இருந்திருக்கின்றேன். அப்பொழுது நான் இங்கு வந்து கொஞ்ச நாட்களே ஆகியிருந்தது. அந்த நாட்களில் அவருக்கு முன்னால் நான் போய்ச் சேர்ந்திருக்கலாமோ என்ற எண்ணம் சில தடவைகள் வந்தது. ஆனாலும் அவர் இவற்றை, இந்த தனிமையை தாங்கமாட்டார். எது நடக்க வேண்டுமோ, அதுவே நடந்தது போல. முதல் தொற்றுக் காலத்தில் அடிக்கடி இங்கு இழப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்பொழுது எனக்கு இங்கிருக்கும் எவரையும் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் மனமெங்கும் ஒரு வலி இருந்து கொண்டிருந்தது. அது இல்லாமல் போய்க் கொண்டிருந்தவர்களைப் பற்றியதா, அல்லது என்னைப் பற்றியதா என்ற சந்தேகம் இன்றும் இருக்கின்றது. புத்தகங்கள் வாசித்தால் இப்படியான கேள்விகள் அதுவாகவே உள்ளுக்குள் வரும் போல. அவர் கதைக்கும் சில விடயங்கள், கேட்கும் சில கேள்விகள் அன்று எனக்கு விளங்காமல் முழித்துக் கொண்டு நின்றிருக்கின்றேன். அவர் வர வர கொஞ்சம் பைத்தியமாகிக் கொண்டிருக்கின்றாரோ என்று நான் நினைத்தாலும், நல்ல காலம், நான் அதை எவரிடமும் சொல்லவில்லை. சில சம்பவங்கள் நடந்த பின்னரே அவை நடந்து விட்டன என்ற உணர்வும், அதையொட்டிய விளைவுகளும் ஏற்படுகின்றது. அப்படியான சம்பவங்கள் உலகில் எப்போதும் நடந்து கொண்டேயிருக்கின்றன என்றோ, அவை எங்களுக்கும் நடக்கக் கூடுமோ என்ற பிரக்ஞை அற்றே மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்தது, நான் இங்கே வந்தது மற்றும் இடையில் நடந்த சம்பவங்கள் இவை எதுவுமே புதிதல்ல. இவை ஆயிரம் ஆயிரம் தடவைகள் இப் பூமியில் இப்படியே ஏற்கனவே நடந்து இருக்கின்றன. முதுமை என்றாலே துன்பம் என்று நான் வாசித்த ஒரு புத்தகத்தில் இருந்தது. அப்படி ஒரேயடியாகச் சொல்லி விடலாம் என்று நான் நம்பவில்லை. ஆகக் குறைந்தது, அதை நான் இன்னமும் நம்பவில்லை. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு கடமை எப்போதும் இருக்கின்றது தானே. முதுமையில், தனிமையில் கூட அப்படி ஒரு கடமை ஒன்று இருக்கத்தானே வேண்டும். நேற்று என்னைப் பார்க்க ஒருவர் வந்திருந்தார். அவர் வேறு ஒரு நாட்டில் இருந்து இங்கே விடுமுறைக்கு குடும்பத்துடன் வந்திருக்கின்றார். அப்படியே என்னையும் பார்க்க வந்தார். என்னை விட வயதில் மிகவும் இளையவர். உறவு முறையில் சொந்தக்காரரும் கூட. அவர்களின் வீட்டில் நாங்கள் இருவரும் இரண்டு தடவைகள் தங்கியிருக்கின்றோம். அப்பழுக்கற்ற ஒரு மனிதனாகவே அவர் தெரிந்தார். கோவிட் தொற்று என்பதால் ஒருவரையும் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கின்றார்கள். பின்னர் வேறு நாட்டில் இருந்து வந்தவர் என்று தெரிந்து, முகத்தை மறைத்து சில நிமிடங்கள் மட்டுமே உள்ளே அறைக்கு வர அனுமதி கொடுத்தார்கள். கதவைத் திறந்த அவர் அங்கேயே நின்று கொண்டிருந்தார். அப்படித்தான் நிற்கச் சொல்லியிருக்கின்றார்கள். நான் எதிர் மூலையில் நின்றேன். மௌனமாகவே நின்றவர் 'என்னைத் தெரிகின்றதா ............' என்று மெதுவாகக் கேட்டார். முகத்தின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்தாலும் அந்தக் கண்கள் எனக்கு நன்கு தெரிந்தவையே. ஆனாலும் அந்தக் கண்களை ஒரு கணத்துக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு எவரின் பரிதாபமும் தேவையில்லை. 'அழும் போது ஒரு பெண் அபலையாகின்றாள்.................' என்ற ஒரு கவிதை வரியை என் கணவர் அவரது கடைசி நாட்களில் பல தடவைகள் சொல்லியிருக்கின்றார். அந்த முழுக் கவிதையையும் நான் இன்னமும் தேடி வாசிக்கவில்லை. நான்கு பிள்ளைகளும் அவர்களின் குடும்பங்களுடன் இடைக்கிடையே வந்து விட்டுப் போவார்கள். வரும் போது ஏதேதோ வாங்கி வருவார்கள். அவர்கள் வந்து போன பின், அவர்கள் வராமலே இருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. நான் சிறு வயதில் கோழிக்கு அடை வைப்பேன். ஒரு தடவை 15 முட்டைகள் வைத்து 14 குஞ்சுகள் பொரித்தன. அந்தப் 14 குஞ்சுகளையும் தாய்க் கோழி கவனமாகப் பார்த்துக் கொண்டது. ஒரு நாள் தாய்க் கோழி மட்டும் படுத்திருந்தது. ஒரு குஞ்சுகளையும் காணவில்லை. குஞ்சுகளுக்கு என்ன நடந்தது என்று பதறிப் போய் தாய்க் கோழிக்கு அருகே போனேன். மெதுவாக செட்டைக்குள்ளிருந்து ஒரு குஞ்சு எட்டிப் பார்த்தது. 14 குஞ்சுகளும் உள்ளேயே இருந்தன. எப்படி ஒரு கோழியால் இது முடிகின்றது என்று ஆச்சரியமாகவே இருந்தது. குஞ்சுகள் ஓரளவு வளர்ந்து, வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் அவைகளாகவே பறந்து ஏற ஆரம்பித்தவுடன், தாய்க் கோழி குஞ்சுகளை மெதுவாகக் கொத்திக் கலைக்க ஆரம்பித்தது. அதுவும் ஆச்சரியமே. நான் விரும்பியே இங்கே வந்தேன் என்று நேற்று என்னைப் பார்க்க வந்தவருக்கும் சொன்னேன். அவர் அதை நம்பவில்லை என்பதும் எனக்குத் தெரிந்தது. ஆனாலும் எனக்கென்று ஒரு கடமை இருக்கின்றதல்லவா. 'நீங்கள் இனிமேலும் கஷ்டப்படாமல் போங்கள்............. நான் இருக்கும் வரை பிள்ளைகளுக்கு குறை குற்றம் எதுவும் வராமல், என்னால் முடிந்த வரை, பார்த்துக் கொள்கின்றேன்..................' என்று அவருக்கு ஒரு வாக்கும் கொடுத்து இருக்கின்றேன்.
  46. எல்லை தாண்டும் மீனவர்களுக்காக முடடைக் கண்ணீர்விடும் பத்திரிகையாளர் மீனவர்களை எல்லை தாண்டி போகாமல் மீன் பிடிக்க சொல்லலாமில்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.