காலம் மெதுவாக உருண்டோடிக்கொண்டிருக்க, மெதுவாக சபையிற்குள் நடக்க ஆரம்பித்திருந்த விரும்பத்தகாத விடயங்கள் வில்லியின் காதில் விழத்தொடங்கியது, சில விடயங்கள் கையும் மெய்யுமாக வில்லியிடமே மாட்டிக்கொண்டன , தொடர்ந்து அமைதி காத்த வில்லி ஒருகட்டத்தில் பொறுமை எல்லை மீற
நேரடியாக சகோதரர் பீலிக்சிடமே சொல்லிவிட்டார், பீலிக்ஸும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு
தான் அவற்றை கவனத்திலெடுப்பதாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார், ஆனால் காலப்போக்கில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சொல்லப்போனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே சென்றது, வில்லியால் தொடர்ந்தும் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை ,
கடைசியாக தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த வில்லி, தொடர்ந்தும் இப்படி நீடித்தால் தீவு முழுவதற்கும் பொறுப்பான சபை முதல்வரிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பீலீக்ஸிடம் சொல்லிவிட்டு எழுந்து செல்வதை பீலிக்ஸ் வெறித்துப்போய் நோக்கிக்கொண்டிருந்தார்,
1962, ஏப்ரல் 26 மதியம் 1 மணி
சகோதரர் வில்லியும், மற்றைய சகோதர்களும் மத்திய உணவருந்திக்கொண்டிருந்தனர்,
வில்லி எப்போதும் மதிய உணவு முடிந்ததும் மிளகு ரசம் குடிப்பது வழக்கம், இந்த பழக்கம் அவர் ஆசியாவிற்கு வந்ததும் அவரிடம் தொற்றிக்கொண்டது , உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்க தவறாது அதனை பின்பற்றிவந்தார், சமையல்காரியும் மிளகு ரசத்தை மேசையில் வைத்துவிட்டு போக வழமை போலவே
அதனை எடுத்து ரசித்து குடிக்க ஆரம்பித்தார், இன்று என்னவோ ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது
இருந்தாலும் வித்தியாசமான சுவையாக இருந்ததால் தொடந்து குடித்துவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட மாடியிலிருந்த அறைக்கு ஏறிப்போய் கட்டிலில் சரிந்தார்.
சிறிது நேரத்தில் இதயத்தை கையால் பிடித்து நெருக்குவது போல் உணர்வு, அப்படியே அடிவயிற்றிலிருந்து
தொண்டை வரை எரியத்தொடங்கியது, கஷ்ட்டப்பட்டு எழுந்த வில்லி அருகிலிருந்த தண்ணீர் கோப்பையினை எடுத்தார் உள்ளே காலியாக இருந்தது , எழுந்து கதவுப்பிடியை அடைவதற்கு முன் தடுமாறி விழுந்தார் வில்லி
கடைவாயோரம் ஈரலிப்பாக அரித்தது , ஆட்காட்டி விரலால் வாயோரம் வருடி எடுத்தார் விரலில் இரத்தத்துளி , ஒருவாறு சுதாரித்து எழுந்த வில்லி பலம் கொண்டமட்டும் கதவின் பிடியை திருகினார்,அது வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தொடர்ந்து போராடமுடியாத வில்லி அப்படியே கதவோரமாக உட்கார்ந்தார், வாயிலிருந்து இரத்தம் பீறிட கண்கள் மங்கிக்கொண்டு சென்றது, அந்த மங்கலினிடையே அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்துகொண்டிருந்தது, சரியாக 20 நிமிடம் கழித்து வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவு திறக்கப்பட இரண்டு சோடி கால்கள் உள்ளே நுழைந்தன, அதில் ஒன்று மெதுவாக தடி ஒன்றினை எடுத்து முன்னோக்கி சரிந்து கிடந்த வில்லியின் தலையை உயர்த்தி பார்க்க நிலைகுத்தி நின்ற வில்லியின் வெளிறிப்போன கண்கள் அவர் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதை சொல்லாமல் சொல்லின. தடியை கொண்டு வில்லியை பரிசோதித்தவர் அடுத்தவரிடம் "இன்னும் சரியாக இருபது நிமிடம் கழித்து நீ அலறப்போகும் அலறலில் ஒட்டுமொத்த இல்லமும் கதவின் முன் நிக்க வேண்டும், இனிமேல் நமக்கு பிரச்சினை இல்லை " என்று விட்டு வில்லியின் அறையிலிருந்து வெளிப்பட்டார் பீலிக்ஸ்.
2003 , இலங்கை கிழக்கு மாகாணம்
எல்லோரும் இரவு 7:00 மணிக்கே பாடசாலைக்குள் ஆஜராகிவிட்டனர், சரியாக பதினொன்றரை மணிக்கு தங்களது அதிரடி நடவடிக்கைக்கு உரிய முஸ்தீபுகளை இட்டவாறு ஒவ்வொருவரும் தங்களுடைய டார்ச்சை இயக்கிப்பார்ப்பதும், எதிர்பாராத வகையில் அந்த நபர் எதிர் தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு அதிரடிப்படையின் திடீர் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவதுபோல் தயாராகிக்கொண்டிருந்தனர்.
நேரம் 11:45
இரவுக்காவலாளி இன்றைக்கும் (சுலக்சனின் உபயத்தில் ) அரைப்போத்தல் சோமபானம் மாட்டிய உட்சாகத்தில் போதையில் உழன்றுகொண்டிருந்தான்
ஐடியா மணி கட்டிட மாடியில் நிலையெடுக்க, அவனும் சுலக்சனும் எதிரெதிராக இருந்த இரு புதர்களின் பின்
மறைந்து கொண்டனர் , இரண்டாவது குழு மண்டபத்தின் கடைக்கோடி மூலையில் நிலை எடுத்துக்கொண்டது.
நேரம் 12:40
நேற்றையதை போன்றே அதே கரிய உருவம் வளவின் வாசலில் தென்பட ஐடியா மணி சுதாரித்துக்கொண்டான், நாய் காவல் காக்கத்துவங்கியதும் உருவம் குடவுன் உள்ளே செல்ல மெஷின் இயங்கத்துவங்கியது, உருவம் உள்நுழைந்ததை தெரிவிக்க ஐடியா மணி ஒருதடவை டார்ச்சை ஒளிர்ப்பித்து காட்டினான், கட்டிடத்தை வைத்தகண்வாங்காது பார்த்துக்கொண்டிருந்த அவனும்,சுலக்சனும் நடவடிக்கைக்கு தயாராகினர்
நேரம் 1:05
மாடியிலிருந்து இரண்டுமுறை டார்ச் ஒளிர அவனும் சுலக்சனும் தயாராகிவிட்டனர், சரியாக ஐந்துநிமிட இடைவெளியில் காற்றை கிழிப்பது போல் அந்த உருவம் இவர்களை கடக்க, புதரை விட்டு எம்பி குதித்த அவனும், சுலக்சனும் அந்த கரிய உருவத்தை விரட்ட துவங்கினர், நிலையான வேகத்தில் காற்றில் மிதப்பது போல் வேகமாக சென்று கொண்டிருந்த உருவத்தை எட்டிப்பிடிக்க தன் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன், சுலக்சனோ அவனது வேகத்திற்கு தாக்குபிடிக்கமுடியாமல் மெதுவாக பின்தங்கத்தொடங்கினான்
ஒருவாறு உருவத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியபோது அவனும் உருவமும் மண்டபத்தின் கடைக்கோடியை நெருங்கிவிட்டிருந்தனர். சரியாக இவன் கையை நீட்டவும் உருவம் மூலையில் திரும்பவும்
அடுத்தபக்கத்திலிருந்து மற்றைய இருவரும் வெளிப்படவும் சரியாக இருந்தது, கணப்பொழுதில் அவன் கைக்கெட்டிய தூரத்திலிருந்த அந்த உருவம் மறைந்துபோயிருந்தது.
"டேய் இப்பதான் விரட்டிக்கொண்டு வந்தனான்"
"உனது காலடி சப்தம் கேட்டுத்தான் நாங்கள் ரெண்டுபேரும் வந்தம் "
"டேய் நீங்க உண்மையாகவே காணவில்லையா ....?"
"விரட்டிக்கொண்டு வந்தன் எண்டுபோட்டு நீ மட்டும் வாராய் "
அவனுக்கு தலை விறைத்தது, சரி சுலக்சனிடம் கேட்போம் என்று விட்டு திரும்பினால் சுலக்சனை காணோம்
அந்த கணத்தில் "ஐயோ அம்மா" என்று உச்சஸ்தாயியில் சுலக்சனின் அலறல் ,நாயின் உறுமலுடன்
அந்த நிசப்தத்தில் எதிரொலித்தது.
டேய் சுலக்சண்டா .. ஏக காலத்தில் அலறிய நால்வரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தனர்
(தொடரும் )