இந்திய றோவின் திருகுதாலங்களும் கருணாவும்
ஆக்கம் : சச்சி சிறிகாந்தா
இணையம் : தமிழ் நேஷன்
காலம் : 22 ஆவணி 2005
சங்கீத விற்பன்னர்களான சுப்புலக்ஷ்மியாக இருக்கட்டும், மதுரை மணி ஐய்யராக இருக்கட்டும் அல்லது சீர்காழி கோவிந்தராஜனாக இருக்கட்டும், இவர்களின் குரலைக் கேட்ட ஒரு சில நொடிகளிலேயே பாடுவது இன்னார்தான் என்பதனை தமிழ் மக்கள் துல்லியமாக இனங்கண்டுகொள்வார்கள். இந்த ஒவ்வொரு பாடகர்களுக்கும் உரித்தான தனித்தன்மையான குரலும், நுணுக்க அசைவுகளும் தமிழரின் மனதில் ஆழமாகப் பதிந்திருப்பதால் அவர்களின் குரலினை அடையாளம் காண்பது அவர்களுக்கு இலகுவானது.
அவ்வாறே தமது அன்றாட வாழ்க்கையில் கடந்த 15 - 20 வருடங்களாக இந்தியாவின் மிகக் கேவலமான உளவுப்பிரிவு, றோ செய்துவரும் கைங்கரியங்களை இனங்கண்டுகொள்வதும் தமிழர்களுக்குக் கடிணமானது அல்ல.
றோவின் நாசகாரக் கைகள் தமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வொன்று நடைபெறும்போது அதனைப்பற்றி அளவுக்கதிகமாக தனது ஊடக அடிவருடிகள் மூலம் எழுதிக்கொள்கிறது. ஆனால், எந்தச் சுரமும் அற்று வெற்றுக் கீதங்களாக றோவினால் புனையப்பட்டு மீட்டப்படும் இந்த சுதிகெட்ட பாடல்களை தமிழ்மக்கள் திரும்பியும் பார்ப்பதில்லையென்பது வேறுவிடயம். சர்வதேச புலநாய்வு அமைப்புக்களின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வரும் அமைப்பொன்றின் தகவல்களின்படி சுமார் 8000 இலிருந்து 10,000 உளவாளிகள் றோவுக்காக இயங்குவதாகவும், இவர்களுக்கான வருடாந்தச் செல்வாக இந்திய ரூபாயில் குறைந்தது 1,500 கோடிகள் றோவினால் வாரியிறைக்கப்படுவதாகவும் தெரியவருகிறது. இந்தப் பணத்தில் ஒருபகுதி இலங்கையில் ஈழத்தமிழருக்கெதிரான அதன் சதிகளுக்காகப் பாவிக்கப்படுகிறது என்பதும் ரகசியமல்ல். இவ்வமைப்பின் கருத்துப்படி சுமார் 20 - 25 கோடி இந்திய ரூபாய்கள்வரை இலங்கையில் றோ தமிழருக்கெதிரான தனது சதிகளுக்கு பாவித்துவருவதாகத் தெரிகிறது.
பின்வரும் இரு சம்பவங்கள் இந்திய றோவையும் அதன் அடிவருடிப் பத்தியாளர்களையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியிருப்பதாகத் தெரிகிறது.
1. வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலை
2. இலங்கையரசாங்கம் 2002 சமாதான உடன்படிக்கை தொடர்பாக புலிகளுடன் பேசப்போவது
வெறும் 2 நாள் இடைவெளியில் றோவின் ஊதுகுழல்களில் மூவர் எழுதியிருக்கின்றனர். இவர்களின் எழுத்துக்களின் சாராம்சம் யாதெனில், மீண்டும் கருணாவை முன்னுக்குக் கொண்டுவாருங்கள் என்பதுதான்.
சண்டே லீடர் பத்திரிக்கையில் புலிகள் பற்றிப் புரணிபாடும் அதே டி பி எஸ் ஜெயராஜ் தற்போது உச்சஸ்த்தானியில், "கருணாவுக்கான அங்கீகாரத்தை கொழும்பும் கிளிநொச்சியும் கட்டாயம் வழங்கியே தீரவேண்டும்" என்று கூக்குரலிட்டிருக்கிறார். அவரைப்பொறுத்தவரை கருணாவும் அவரது ஆதரவாளர்களும் ஒஸ்லோவில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகளில் மூன்றாம் தரப்பினராக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று தெரிகிறது. இதன்மூலம் கருணாவும் அவரது ஆதரவாளர்களும் முன்னணி அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல் - ராணுவ தலைமையாக அங்கீகரிக்கப்படவேண்டும் என்று அவர் கோருகிறார். மிகைப்படுத்தப்பட்ட கற்பனைகளை அவ்வப்போது எடுத்துவிடும் ஜெயராஜ் தனது கற்பனை பலூன்களில் றோவின் காற்றினை அடைத்து பறக்கவிட்டிருக்கிறார் என்பதே இங்கு நோக்கப்படவேண்டியது.
அவரைப்போன்றே , மனிதவுரிமை வாதியாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் ரோகினி ஹென்ஸ்மனும், புதிய போர் நிறுத்த உடன்படிக்கை முத்தரப்பினரான அரசாங்கம், பிரபாகரன் பிரிவு, கருணா பிரிவு ஆகியவற்றை உள்ளடக்க வேண்டும் என்று கூவியிருக்கிறார். இதில் கவனிக்கப்படவேண்டிய விடயம் என்னவெனில் பெரும்பாலான மோதல்கள் புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையிலேயே அண்மைக்காலமாக நடந்துவருகிறது என்பது. ஆகவே, யுத்த நிறுத்தம் என்பது முத்தரப்புக்களிடையேயும் செய்யப்படுதல் அவசியமாகிறது.
ஆனால், ஜெயராஜினதும் ரோகினியினதும் கோரிக்கைகளில் பாரிய ஓட்டைகள் உள்ளன. கிழக்கில் இரு தரப்புக்கள் மட்டுமே தமக்கான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று அரசாங்கம், மற்றைய தரப்பு புலிகள். 2004 சித்திரையில் உயிரைக் கைய்யில் பிடித்துக்கொண்டு, கல்களிடையே வாலைச் சுருட்டிக்கொண்டு கருணா கொழும்பிற்குத் தப்பியோடியபின்னர் அவரின் கட்டுப்பாட்டின்கீழ் ஒரு சிறு நிலப்பகுதிகூட இப்போது இல்லையென்பது இவர்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
கடந்த 20 வருடங்களில் றோவின் அடிவருடி பத்தியெழுத்தாளர்கள் ஒரு சகதிக்குள் சிக்குண்டிருப்பதாகவே படுகிறது. இலங்கையின் பாராளுமன்ற நிகழ்வுகள்பற்றி இவர்களுக்குச் சற்றேனும் அறிவு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
1980 களின் நடுப்பகுதியிலிருந்து 1994 வரை காமினி திஸாநாயக்காவே இவர்களுக்கான தகவல்களை வழங்கிவந்தார். 1989 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் இறுதி நிகழ்வுகளின்பொழுது றோ சார்பான இரங்கல் உரையினையே காமினி திஸாநாயக்கா படித்திருந்தார். காமினி திஸாநாயக்காவின் மரணத்தின்பின்னர் றோவிற்கான தகவல் வழங்குனராக லக்ஷ்மன் கதிர்காமர் திறம்படச் செயலாற்றியிருந்தார். ஆனால், லக்ஷ்மன் கதிர்காமரும் திடீரென்று அகற்றப்பட்ட பின்னர் றோவுக்கான தகவல்கள் சடுதியாகத் தடைப்பட்டுப் போனது.
ஐக்கிய தேசியக் கட்சியில் காமினி அரசியலில் செயற்திறன் மிக்கவராகத் திகழ்ந்தார். அநுர பண்டாரநாயக்காவை தனது அருகில் வைத்துக்கொள்ளுமுன்னர், லக்ஷ்மன் கதிர்காமர் ஒரு செயல்வீரனாக சந்திரிக்காவுக்குத் தெரிந்தார். ஆகவே, றோவுக்கான ஏஜெண்டுக்களை கொழும்பு அரசாங்கத்தில் மிகச் சுலபமாக அதனால் நிலைநிறுத்த முடிந்திருந்தது.
ஆனால், இப்போது முன்னாள் ஆயுதக் குழுத் தலைவரும், துணைராணுவக் குழு - அரசியல்க் கட்சி பிமுகருமான டக்கிளஸ் தேவாநந்தாவையே சந்திரிக்கா அரசின் செய்திகளைத் தமக்குக் காவிவரும் ஏவலாளியாக றோ வைத்திருக்கிறது. ஆனால், இந்த தேவாநந்தாவினால் சந்திரிக்காவின் உள்வட்டத்தை நெருங்குவதைக் கனவில்க் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. சந்திரிக்காவைப் பொறுத்தவரை டக்கிளஸ் எனும் ஆயுததாரி ஒரு ராணுவ வீரனுக்கான தகைமையையோ, கூலிகளுக்குக் கொல்லும் துணைப்படையினனுக்கான தகைமையையோ கொண்டிருப்பதாக அவர் சிறிதும் நம்பவில்லைபோலத் தெரிகிறது. ஆகவேதான் கருணாவை சந்திரிக்காவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ராணுவ நிபுணனாக, கொலைக்குழுத் தலைவனா நிறுத்த றோவும் அதன் பத்தியெழுத்தாளர்களும் அரும்பாடுபட்டு வருவது தெரிகிறது.
றோவின் ஊதுகுழல்களாகச் செயற்பட்டுவரும் ஹிந்துஸ்த்தான் டைம்ஸின் பாலச்சந்திரன், சண்டே லீடரின் ஜெயராஜ், ஹிந்துப் பத்திரிக்கையின் ரோகினி ஆகிய மூவரின் அபத்தப் புனைவுகள் உங்களுக்காகக் கீழே தரப்படுகின்றன.
1. பி கெ பாலச்சந்திரன் - ஹிந்துஸ்த்தான் டைம்ஸ், ஆவணி 20, 2005
"புலிகளைப்பொறுத்தவரை கிழக்கில் அவர்களின் இருப்பென்பது மிகவும் பலவீனமானதாகவே படுகிறது. அங்கே அவர்களின் கட்டுப்பாட்டின் அஸ்த்தமக் காலம் தெரிவதோடு, அங்குள்ள பல்லின சமூகமும் அவர்களின் இருப்பிற்கு உதவப்போவதில்லை. வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரியாத போதிலும், கருணாவின் இருப்பென்பது, அவர்களை ஏனைய போராளிக் குழுக்களை விழிப்பதுபோல "துணைராணுவக் குழுக்கள்" என்று புலிகள் விழித்தாலும் கூட, புலிகளின் ஆயுதம் தரிக்காத அரசியல் போராளிகளின் பாதுகாப்பிற்கு மிகக் கடுமையான அச்சுருத்தலை கருணாவினால் கொடுக்க முடியும்".
"கருணாவை சட்டைசேயத்தேவையில்லை என்று புலிகள் உதறித் தள்ளினாலும் கூட, அவரது பெயர் புலிகளுப் பெரும் அச்சுருத்தலாகவே இப்போது உச்சரிக்கப்பட்டு வருகிறது. தம்முடன் சில மாதங்களுக்கு முன்னர் வரை இருந்த கருணாவின் ஆதரவாளர்களே தமக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வல்லமையினைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை புலிகள் மறுக்கமுடியாது".
"கருணாவின் பிரச்சினை அரசைப் பொறுத்தவரை பெருத்த சவாலாகவே மறியிருக்கிறது. கருணாவுக்கெதிராகச் செயற்படுவதோ அல்லது அவருக்கு தாம் வழங்கிவரும் ஆதரவினை நிறுத்துவதென்பதோ அரசுக்கு இலகுவான முடிவாக இருக்கப்போவதில்லை. ராணுவத்தின் சில படைப்பிரிவுகள் கருணாவை வெளிப்படையாகவே ஆதரித்துவருவதாகப் பேசப்படும் நிலையில், அவரைத் திடீரென்று கைவிடுவது தமது அரசியல் நிலையினைப் பலவீனமாக்கும் என்று அரசு நன்கு அறிந்தே வைத்திருக்கிறது. இதற்கான மிக முக்கிய காரணம், புலிகளைப் பலவீனப்படுத்தி பிளவுபடுத்திய கருணா தெற்கின் சிங்களவரைப் பொறுத்தவரை ஒரு வெற்றி நாயகன். கருணாவைக் கொண்டு புலிகளைப் பலவீனப்படுத்தி, பிரபாகரனின் பலத்தை முற்றாகவோ பகுதியாகவோ அழிப்பதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையில் அரசின் பேரம்பேசும் பலத்தினை அதிகரிக்க தெற்கின் சாதாரண சிங்கள் மக்கள் விரும்புவது தெரிகிறது".
"கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை ஒன்றினை அரசு நடத்த எத்தனிக்குமாக இருந்தால், அதுவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை மீறும் செயலாகிவிடும் . அதுமட்டுமல்லாமல், கருணாவுக்கெதிரான ராணுவ நடவடிக்கை என்பது புலிகளுக்கெதிரான அரசின் ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படும் அபாயமும் இருப்பதாக அரசின் சமாதானப் பணியகத்தில் தலைவர் ஜயந்த தனபாலவின் கூற்றும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று".