சரி, இனி கோர்டண் வைஸின் The Cage எனும் புத்தகத்திற்கு வரலாம்
புத்தகத்தின் பின்புற அட்டை கோர்டண் வைஸின் புகழைப் பாடுகிறது. நியூ யோர்க்கில் வாழ்ந்தவர், உள்நாட்டு யுத்தங்கள் நடந்த நாடுகளில் பணிபுரிந்தவர், பேரிடர் காலங்களில் பணியாற்றியவர், பொஸ்னியா, ஆப்கானிஸ்த்தான், சூடானின் டார்பூர் மற்றும் ஹெயிட்டி என்று பல நாடுகளில் ஐ நா வின் சார்பாக குறைந்தது 12 வருடங்க்ச்ளாவது பணியாற்றியவர் , தற்போது அவுஸ்த்திரேலியாவின் சிட்னிப் பல்கலைக்கழகத்தின் அதிதியாக உரையாற்றி வருபவர், தி குளோபல் மெயில் எனும் பத்திரிக்கையின் நிருபர் என்று புகழ்வதோடு இலங்கையில் நடந்த படுகொலைகள்பற்றிய தனது விசாரணை அறிக்கையாக இப்புத்தகத்தினை வெளியிடுவதாகவும் கூறுகிறது பின்பக்க குறிப்பு.
ஆனால், கோர்டன் கூறும் விடயங்கள் பற்றி நான் அதிகம் ஆர்வம் காட்டவேண்டும் என்று நினைக்கவில்லை. ஏனென்றால், அவர் தனது புத்தகத்தின் உள்ளடக்கத்திற்காக பெரும்பாலும் இலங்கை ராணுவத்தினதும், அரசினதும் தகவல்களையே பெரிதும் நம்பியிருந்தார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இலங்கை அரசின் தகவல்களை தவிரவும் அவருக்கென்று தகவல் வழங்கும் சில புலியெதிர்ப்புப் புத்தி ஜீவிகளும் இப்புத்தகத்தில் தமது பங்களிப்பினைச் செலுத்தியிருக்கிறார்கள். மனிதவுரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் எனும் புலியெதிர்ப்பு அமைப்பின் ராஜன் ஹூல், பணம் பார்க்கும் ஒரே நோக்கத்திற்காக புலியெதிர்ப்புக் கட்டுரை வரையும் டி பி எஸ் ஜெயராஜ் எனும் பிரபலங்கள் உட்பட பலர் கோர்டன் வைஸின் தகவல் மூலங்களாக இருந்திருப்பது அவரது புத்தகத்தின் உண்மைபற்றிய நம்பகத்தன்மையினைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இப்புத்தகத்தம் எழுதுவதற்கு கோர்டன் வைஸுக்கு மிக முக்கியமான 3 காரணங்கள் இருந்திருக்கின்றன என்று நான் நம்புகிறேன்.
1. தனது எஜமானான பான் கீ மூன் மற்றும் விஜய் நம்பியார் ஆகியோர் உட்பட இலங்கையிலும், ஐ நா விலும் பணியாற்றிய கையாலாகாத்தனமான கோழைத்தனமான அதிகாரிகளின் முற்றான தோல்வியினை மறைப்பது.
2. தமிழ்மக்களின் படுகொலைக்கான மொத்தப் பழியினையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையின் மீது சுமத்துவது.
3. கண்துடைப்புக்காக சிங்கள அரசுமீது "நான் அடிப்பதுபோல அடிக்கிறேன், நீயும் அழுவது போல அழு" என்று செல்லமாகக் குட்டுவது.
புலிகளை விட்டோடிய இரு துரோகிகளின் பங்களிப்பு
புலிகளை விட்டோடி, அரசுடன் இணைந்துகொண்ட இரு துரோகிகளான தயா மாஸ்ட்டர் மற்றும் குமரன் பத்மநாதன் ஆகியோர் 2009 இல் இனவழிப்பில் வகித்த பாகம் பற்றியும் இங்கு பேசப்படுதல் அவசியம். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மறைவிற்குப் பின்னர் தன்னை புலிகளின் தலைவராக பிரகடனப்படுத்திக்கொண்ட செல்வராசா பத்மநாதன் எனும் கே பி, 2009 இல் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டபோதுதான் புலிகளை விட்டோடியதாக நான் நினைக்கவில்லை. அவருக்கே தெரிந்த காரணங்களுக்காக பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதே தமிழரின் எதிரிகளுடன் அவர் கள்ள உறவில் ஈடுபடத் தொடங்கியிருந்தார் என்று அம்பலமாகியிருக்கிறது. அவரின் துரோகத்தனத்தினை நான் ஆரம்பத்திலேயே என்னுடைய இன்னொரு பதிவில் சுட்டிக்காட்டியிருந்தேன். பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு கே பி யின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வந்த அறிக்கையிலேயே அவரின் கைங்கரியம் வெளிப்பட்டது.
இவ்வாறு வெளிவந்த அறிக்கைகளில் தமிழில் அவர் கூறியிருந்த விபரங்களுக்கும் ஆங்கிலத்தில் அவர் வெலியிட்ட விபரங்களுக்கும் இடையே முக்கியமான வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழில் அவர் வெளியிட்ட அறிக்கையில், "எமது தேசியத் தலைவருடன் இப்போரில் பலியான அனைத்து தளபதிகள், மாவீரர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். இப்போரில் பலியான மாவீரர்களின் விபரங்களை விரைவில் வெளியிடுவோம்" என்று அவர் தமிழில் கூறியிருந்தார். ஆனால், அவரது ஆங்கில அறிக்கையில் தலைவர் பற்றியோ அல்லது மாவீரர்களின் விபரங்கள் பற்றியோ எதையுமே அவர் குறிப்பிடவில்லை. அவரின் கைதின் பின்னரான நேர்காணல்களில் தான் எப்போது புலிகளை விட்டு வெளியேறினேன் என்பதுபற்றியோ அல்லது தான் வெளியிடவிருப்பதாகக் கூறிய மாவீரர் விபரங்கள் பற்றியோ அவர் மூச்சுக்கூட விடவில்லை. கே பி தமிழர்களுக்கெதிரான துரோகம் 2009 இற்கு முன்னரே ஆரம்பித்துவிட்டது என்பது புலனாவதால், புலிகளின் தலைமையின் மரணத்தில் கே பி யினால் வழங்கப்பட்ட புலநாய்வுத்தகவல்கள் நிச்சயம் ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.