கெளசல்யனின் காலிங்க வகுப்பு
கெளசல்யன், மட்டக்களப்பு - அம்பாறை தமிழ் மக்களின் பெருமளவினரை அடக்கிய காலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர். இந்த சமூக அமைப்பு முக்குவர் சமூகத்தில் வருகிறது. படுவான்கரை கிராமங்களான பண்டாரியாவெளி, படைக்காத்தவெளி, அரசடித்தீவூ, கொக்கட்டிச்சோலை, களுதாவளை ஆகியவற்றில் முக்குவர் சமூகத்தினரே வாழ்ந்து வருகின்றனர். காலிங்கக் குடியினர் எனும் சமூகத்தினர் தென்னிந்தியாவின் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த போர்வீரர்களான கலிங்க சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்று கருதப்படுகிறது. காலப்போக்கில் இந்த போர்வீரர் மரபில் வந்த இக்குடியினர் கிழக்கில் தாம் வாழ்ந்த பகுதிகளில் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர்.
கெளசல்யன் மட்டுமில்லாமல், புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளான ரமேஷ், துரை, நாகேஷ் போன்றவர்களும் இதே காலிங்க வகுப்பினைச் சார்ந்தவர்கள் தான். இந்த சமூக அமைப்பைச் சேர்ந்த பல இளைஞர்கள் இந்திய ராணுவ ஆக்கிரமிப்பின் காலத்தில் புலிகளோடு தம்மை இணைத்துக்கொண்டவர்கள். அதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் ஏனைய சமூக அமைப்புக்களில் இருந்தே பல போராளிகள் இயக்கத்தில் இணைந்துவந்தனர். தனது 16 வயதில், 1989 ஆம் ஆண்டு இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட கெளசல்யன் புலிகளின் கஞ்சிகுடிச்சியாறு முகாமில் தனது பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டார். பின்னர் புலிகளின் வடமுனைப் போர் அரங்கில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார் கெளசல்யன்.
இந்திய ராணுவம் வெளியேறி, அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் ஆரம்பித்த நேரத்தில் கெளசல்யன் கும்புறுமூலையில் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டார். அத்துடன் வாகரை - கதிரவெளிச் சமர்களிலும் கெளசல்யன் பங்கெடுத்திருந்தார். சமர்களத்திலும், இயக்கத்தினுள்ளும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டி வந்ததினால், அவர் விரைவாக புலிகளின் பதவி நிலைகளுக்கு உயர்த்தப்பட்டதுடன், சிறிது காலத்திலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகளின் நிதித்துறைக்குப் பொறுப்பானவராக தலைமையினால் நியமிக்கப்பட்டார். 1994 இல் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, புலிகளின் பொறுப்பாளர்களில் ஒருவரான ரஞ்சித்தப்பா என்று அழைக்கப்பட்ட தமிழேந்தியின் கீழ் செயற்பட்டு வந்தார். சந்திரிக்காவுடனான சமாதானக் காலபகுதியில் மீண்டும் கிழக்கிற்கு வந்த கெளசல்யன் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிதி மற்றும் வரித்துறைக்குப் பொறுப்பானவராக இயங்கி வந்தார்.
யாழ்ப்பாணத்தை விட்டு புலிகள் வன்னிக்குச் சென்று, தம்மை மீளவும் ஒருங்கிணைக்கத் தொடங்கிய 1995 காலப்பகுதியில் கெளசல்யன் வன்னிக்குச் சென்றார். 1996 இல் இடம்பெற்ற புலிகளின் மிகவும் வெற்றிகரமான தாக்குதல்களில் ஒன்றான ஓயாத அலைகள் 1 முல்லை முகாம் தகர்ப்பில் கெளசல்யனும் பங்காற்றியிருந்தார். வன்னியில் 1996, 1997, 1998 ஆகிய காலப்பகுதியில் இடம்பெற்ற சமர்க்களங்களில் போரிட்ட படையணிகளுக்கு வழங்கல்களை செய்வதிலும் கெளசல்யன் ஈடுபட்டிருந்தார். 1998 இல் கிழக்கிற்கு மீண்ட கெளசல்யன் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் நிதித்துறைக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டார்.
பல லட்சக்கணக்கான பணத்தை மிகவும் நேர்மையுடனும், கண்ணியமாகவும் கெளசல்யன் இயக்கத்தின் சார்பில் கவனித்து வந்தார். அவரின் நேர்மை பற்றி இயக்கத்திற்குள் எல்லாருமே பேசுமளவிற்கு போராட்டம் மீதும், தலைமை மீது அதிக பற்றுடனும் நேர்மையுடனும் செயற்பட்டவர் கெளசல்யன். கிழக்கு மாகாணத்தின் தளபதியாகவிருந்த கருணாவினால்க் கூட கெளசல்யனினின் நேர்மை மீது ஒரு குற்றச்சாட்டையேனும் வைக்க முடியவில்லை.
கெளசல்யனின் நேர்மையும், விசுவாசமும் எவ்வளவுதான் உண்மையாக இருந்தாலும், கருணாவினால் அவர் நிதித்துறையிலிருந்து நீக்கப்பட்டு கிழக்கு மாகாண துணை அரசியல்த் துறைப் பொறுப்பாளராக கரிகாலனின் கீழ் அமர்த்தப்பட்டார். கெளசல்யனுக்கு வழங்கப்பட்டது ஒரு பதவி உயர்வு என்று கருணா சொல்லிக்கொண்டாலும்கூட, அவரை நிதித்துறையிலிருந்து அகற்றுவது கருணாவுக்கு மிகவும் அவசியமானதாகத் தெரிந்தது. நிதிப்பொறுப்பிலிருந்து கெளசல்யன் அகற்றப்பட்டதும் கருணாவின் நிதிக் கையாடல்களுக்கு இருந்த ஒரே தடையும் அகற்றப்பட்டது. தனது சகோதரனான ரெஜி எனப்படும் ரெஜினோல்ட்டை நிதித்துறைக்குப் பொறுப்பாக நியமித்த கருணா, பாரிய நிதிமுறைகேடுகளில் ஈடுபடத் தொடங்கியதுடன், இக்கையாடல்களைப் பாவித்து தன்னைச் சுற்றி விசுவாசமான கூட்டத்தையும் கட்டி வளர்க்கத் தொடங்கினார். புலிகளிடமிருந்து கருணா விலகிச் செல்லவேண்டிய அவசியத்தை கருணாவின் நிதிக் கையாடல்களே முதன்முதலில் ஏற்படுத்தின.