ஒரு பக்கம் யாழ்நகரம், மறுபக்கம் மட்டு நகரம்...
வாள் கொண்டு போர் செய்து வடக்கு கிழக்கு இணைந்தபடி வெல்லபார்த்தோம் முடியவில்ல.
போகட்டும் முடிந்தவரை யாழ்கொண்டாவது இணைத்து பார்ப்போமே அதில் தவறென்ன?
தர்மத்துக்கு புறம்பாக நாம் ஏதும் நடந்ததில்லை, வன்முறை எங்கள் பொழுது போக்கும் இல்லை. பொழுது போக்காய் எம்மை கொல்ல பார்த்தவர்களை எதிர்கொள்ள வேறு வழியின்றி வன்முறையை தேர்ந்தெடுக்க வைக்கப்பட்ட இனம் நாம்.
நாங்கள் இனி ஒரு ஆயுத போராட்டத்தை செய்ய போவதில்லை, ஆயுத போராட்டம் என்றால் பயம் என்று ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் நடமாடிய எம் மண்ணின் மாவீரர்கள் பெயரால் ஒன்றும் இதை அறிக்கையாய் விடவில்லை. அதற்கு உரிமையும் இல்லை.
ஆண்டாண்டு காலம் போராடியும், ஆயிரக்கணக்கில் அல்ல ஆதரவு வழங்கிய எம் மக்களின் இறப்பும் சேர்த்து லட்சக்கணக்கில் உயிரிழப்பை சந்தித்தும் எதிரிகளால் விழுத்த முடியா ஒரு போராட்டம் எம்மவர்களால் விழுத்த பட்டதே.
இனியும் எதுக்கு ஒரு இனம் தனது இனத்துக்காக ரத்தம் சிந்தி போராட வேண்டும். ஒரு அரச இயந்திரத்துக்கு எதிராய் இறுக்கமான ஒழுக்கம், நேர்த்தி,திட்டமிடல், சுயநலம் இன்மை,யுக்தியுடன் போராடுவதெல்லாம் போறவன் வருபவன் செய்ய கூடிய செயல் அல்ல.
அது கோடிகளில் ஈழதமிழினம் இல்லாமல் போனாலும் கோடிகளில் ஒருவனால் மட்டுமே முடியும் செயல்.
அப்படி ஒருவர் எம்மினத்தின் கிரீடமாயிருந்தார், இப்போது அவர் பற்றிய செய்திகள் இல்லை,
செய்திகள் இல்லாமல் போனால் என்ன, அவர் இருந்தபோதும் அவர்பற்றி ரோஷம் கொப்பளிக்க கொப்பளிக்க பேசி ஆனந்த பட்டோம், அவர் இல்லாமல் போன ஒரு நிலையிலும் அவர்மேல் உள்ள அதே காதலுடன் இருக்கிறோம்.
ஒருத்தர் இருக்கும்போது பாசம் கொட்டுவதற்கு பின்னால் பல நூறு சுயநல காரணங்கள் இருக்ககூடும்.
அவர் இல்லையென்று செய்தி வந்த பின்னரும்... உன்னை தவிர எம் இனத்துக்கு ஒருவர் எப்போதும் இல்லையே மானஸ்தனே என்று நினைக்கும்போது மனசு அழுகின்றது, அதற்கு இனம்மீதான பாசம் என்ற ஒரேயொரு காரணம் மட்டுமே இருக்கும்.
கண்ணுக்கு தெரிந்தாலா கடவுள் இருக்கிறார் என்று நம்புவோம்?
காலின் நகத்தை கல்லொன்று மோதி பெயர்த்து விட்டால் கடவுளை நம்பாதவன்கூட அட கடவுளே என்று அவர் பெயர் சொல்லி கதறுவான், எம் நிலை இப்போ இதுதான்.
தாய் தந்தை இல்லையென்று இன்று ஆகிவிட்ட இந்த இனத்தின் கொடுமை நிலையை பார்க்கும்போது உனக்கு முன்னே நாம் போய் சேர்ந்திருக்ககூடாதா என்ற வலி பல தமிழர் மனசுக்குள் குமுறுவதுண்டு.
நாங்கள் அரசியலாலும் ஆயுதத்தினாலும் போராட்ட வடிவங்கள் தொடுத்து தோற்றுபோன இனம்,
அடுத்த எம் தலைமுறை எம்மின துயரத்தை பிறருக்கு எடுத்து செல்லுமோ இல்லையோ, அடுத்த சந்ததிக்கும் அதுக்கு அடுத்த சந்ததிக்கும் யாழின் பெயரால் துயரங்களை எடுத்து சொல்வோம், கடத்தி போவோம்
எம் இளையோர்க்கும் அவர்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எம்மினத்தை வாழவைக்க பலர் சின்ன சின்னதாய் சிறு துண்டுகளாய் சிதறி செத்துகூட பார்த்தார்கள் முடியவில்லை என்ற கசப்பு வரலாற்றை அவர்கள் காதினில் போட்டு வைப்போம்.
நாங்கள் புலம் பெயர்ந்தவர்கள்தான் ஆனால் புலத்தை மறந்தவர்களில்லை. வெளிநாட்டு சுகத்தில் மயங்கி இருப்பவர்கள் தமிழன் என்றால் தாயகத்தின் அவலநிலை கண்டு தினமும் அவன் அழமாட்டான்.
இரத்தமும் கண்ணீரும் வேர்வையும் கலந்து போராடி தோற்று போனாலும், போராடிய வலிகளை பிறருக்கு கடத்தும் யாழ் இணையமே, நாளைக்கே யாழ் இணையம் ஏதோ ஒரு காரணத்தால் இயங்க முடியாது போனாலும், மான தமிழர் போராட்டத்திற்கு எவருக்கும் மண்டியிடாமலே உன் பங்கை வழங்கினாய் என்பதில் என்றைக்கும் உமக்கும் உம்மோடு தோள் நின்றவர்களுக்கும் உறுதியாய் ஒரு இன திமிர் இருக்கும்.
வாழிய என்று நாம் உமக்கு சொல்லவில்லை, வாழிய என்று நீர் எமக்கு சொல்லவேண்டும், நாம் வாழதானே உன்னால் முடிந்த ஒரு பங்களிப்பு செய்தாய்.
யாழ் இணையமே வாழ்த்துங்கள் எங்களை.