திரும்பும் வரலாறு: நாசிகள்
அண்மைக் காலமாக "திரும்பும் வரலாறு" (repeat of history or historic recurrence) என்பது பிரபலமான ஒரு சொற்றொடராக மாறியிருக்கிறது. வரலாறு மீள மீள நிகழ்வதற்கு பிரதான காரணம் வரலாற்றிலிருந்து தலைவர்களும், தலைவர்களைத் தேர்வு செய்யும் மக்களும் பாடங்கள் கற்றுக் கொள்ளாமை தான் என்பது ஒரு தெளிவான அவதானம். எனவே, வரலாற்றின் மைல் கற்களாக விளங்கிய சம்பவங்கள், நபர்கள் பற்றிய தரவுகளைப் பதிவு செய்யலாம். முதலில் ஹிற்லர், நாசிகள் பற்றி ஆரம்பித்து, இரண்டாம் உலகப் போர், ஸ்ராலின், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் என்று ஒரு சுற்று வரலாம். ஆர்வமுடையோர் இணைந்திருங்கள். மூலங்கள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு பகுதியும் நிறைவுறும் போது தருகிறேன். ஆனால், விக்கிபீடியா மூலமாகப் பயன்படுத்தப் படவில்லை என்பதை உறுதி செய்கிறேன்!
ஹிற்லர் எப்படிப் பதவிக்கு வந்தார்?
முதலாம் உலகப் போர் 1918 இல் முடிவுக்கு வந்த போது ஐரோப்பாவின் எல்லைகள் பாரிய மாற்றங்களையடைந்தன. முதல் உலகப் போரின் போது கடல் வழியிலும், தரைவழியிலும் ஜேர்மனியின் படைகள் விளைவித்த மனிதப் பேரழிவு அளப்பரியது (முதலில் நீர்மூழ்கிக் கப்பல்களை பெருமளவில் பாவித்த நாடாக ஜேர்மனி இருந்தது, அனேக தாக்குதல் இலக்குகள் சிவிலியன் போக்கு வரத்துக் கப்பல்களாக இருந்தன!). ஜேர்மனி தோல்வியடைந்த போது வெர்சை உடன்படிக்கையின் வழியாக கடுமையான தண்டனைச் சுமைகள் ஜேர்மனி மீது சுமத்தப் பட்டன. 33 பில்லியன் டொலர்கள் வரையான போர் நட்ட ஈடு, காலனிகள் உட்பட்ட பல நிலப் பரப்பின் இழப்பு, இராணுவ ஆளணிக் குறைப்பு, ஆயுதங்கள் வாங்க, உற்பத்தி செய்வதற்கான கட்டுப் பாடுகள், என்பன ஜேர்மனியின் தண்டனைகளில் அடங்கின. இந்தப் போரில் காயமடைந்து மீண்ட படையினனான ஹிற்லர் ஆரம்பித்த கட்சி தான் "தேசிய சோசலிஸ்ட் கட்சி" எனப்பட்ட நாசிக் கட்சி. நாசிக் கட்சியின் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பது. இதற்கு உகந்த நுட்பமாக அவர்கள் தேர்ந்து கொண்டது, அண்மைய வரலாற்றில் ட்ரம்ப், பொல்சனாரோ, மோடி, ப்றெக்சிற்றின் தலைமைச் சிற்பியான நைஜல் பரார் போன்றோர் தேர்ந்து கொண்ட அதே ஜனத்திரள்வாத முறை. ஜனத்திரள் வாதம் நேர்மையான விடயங்களால் பலம் பெறுவதை விட மறைத்தன்மையான மனித உணர்வுகளால் பலம் பெறுவது தான் வரலாற்றில் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. நாசிக் கட்சி தங்கள் ஜனத்திரள் வாத வெற்றிக்காகத் தேர்ந்து கொண்ட அந்த மறைத்தன்மையான உணர்வு யூதர்கள் மீதான சந்தேகமும், எதிர்ப்புணர்வும்.
ஏன் யூதர்கள் மீது எதிர்ப்புணர்வு?
ஏனெனில், ஜேர்மனியில் அந்தக் காலப்பகுதியில் வசித்த வேற்றினத்தவர்களுள், யூதர்கள் தான் பல வழிகளில் பிரபலமான இனக் குழுவாக இருந்தனர். பொருளாதார நடவடிக்கைகளில் மேலாண்மை மட்டுமன்றி, அரசியல் கலாச்சாரப் பரப்பிலும் யூதர்கள் முன்னணி வேற்றினத்தவராக இருந்தனர். கால் மார்க்ஸ் ஒரு யூதர், ஜேர்மனியுட்பட பல ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசக் கட்சிகளின் தலைமையில் அதிகம் யூதர்கள் இருந்தனர். விஞ்ஞானத் துறையிலும் (ஐன்ஸ்ரைன் சிறந்த உதாரணம்) அவர்களுக்கு தனியிடம் இருந்தது. இவ்வாறு ஜேர்மன் மக்கள் ஏற்கனவே உணர்ந்திருந்த ஒரு "யூத மேலாண்மை பற்றிய அச்சம்" நாசிக் கட்சியின் மக்கள்திரள்வாத ஆயுதமாயிற்று!
ஆனால், யூதர்களுக்கு மேலதிகமாக, ஏனைய மத, இனக்குழுக்கள், ரஷ்யாவின் சிலாவிக் இன மக்கள் ஆகியோரும் நாசிக்கட்சியின் வெறுப்பிலக்குகளாக விளங்கினர். இந்த சிலாவிக் இன மக்கள் மீதான வெறுப்பிற்கு வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜேர்மனியின் நீண்ட கால இலக்கும் ஒரு காரணமாக இருந்தது. ஆரிய இனமான நீலக் கண்ணும், வெள்ளைத் தோலும் கொண்ட ஜேர்மனியர்கள், லூதரன் கிறிஸ்தவ நெறிப்படி குடும்பங்களில் நிறையப் பிள்ளைகள் பெற்றுப் பெருகும் போது, அவர்கள் வாழ அவசியமான நிலம், சோவியத் ரஷ்யாவிடமிருந்து பறிக்கப் பட வேண்டுமென்பது நாசிக் கட்சியின் கொள்கை. எனவே, சிலாவிக் மக்கள், "மனித இனத்திற்குக் கீழானவர்கள்" என்ற வெறுப்புணர்வை நாசிக் கட்சியினர் பரப்பத் தயங்கவில்லை. இந்தக் “கீழ்மனிதர்களான” சிலாவிக் மக்களை விடக் கீழான நிலையில் தான் யூதர்கள் வைத்துப் பார்க்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1921 அளவில், நாசிக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஹிற்லர் வெளிப்படையாக இந்தக் கொள்கைகளைப் பேசி வந்திருக்கிறார். சாதாரண அரசியல் கட்சிகள் போலல்லாது, நாசி கட்சிக்கு ஒரு ஆயுதப் படையும் இருந்தது. Storm troopers என்று அழைக்கப் பட்ட இந்தப் படையில், ஹிற்லர் போலவே முதல் உலகப் போரிலிருந்து அவமானத்துடன் திரும்பி வந்த முன்னாள் படையினர் இருந்தனர். பல்லாயிரம் உறுப்பினர்கள் கொண்ட இந்த படை, பவாரியாவின் மாநில அரசைக் கவிழ்க்க முயன்று தோற்ற போது தான் ஹிற்லர் மற்றும் நாசிக் கட்சி பற்றிய முதல் எச்சரிக்கை ஜேர்மன் அரசுக்குக் கிடைத்தது. ஜேர்மன் அரசினால் ஒரு வருடம், இதற்காக சிறை வைக்கப் பட்ட போது தான் ஹிற்லர் தனது ஜனத்திரள்வாத, இனவெறிக் கொள்கைகளை நூலாக (Mein Kampf) எழுதினார். இந்த நூல், 1932 இல் ஜேர்மன் பாராளுமன்றத்தில் மிகப் பெரிய கட்சியாக நாசிக் கட்சி விளங்க ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால், ஜேர்மன் ஜனாதிபதியினால், ஹிற்லர் வேந்தராக நியமிக்கப் படும் நிலையும் உருவானது.
ஜேர்மன் மக்கள் என்ன நினைத்தனர்?
தீவிர இனவெறிக் கொள்கை கொண்ட ஹிற்லரையும், நாசி கட்சியையும் 1932 பொதுத் தேர்தலில் ஜேர்மன் வாக்காளர்கள் ஆதரித்துப் பெரும்பான்மை வழங்க பல காரணங்கள் அப்போது இருந்தன. ஜேர்மனி முதல் உலகப் போரில் மிகவும் அவமானப் படுத்தப் பட்டதாக ஜேர்மனிய மக்களில் பெரும்பகுதியினர் உணர்ந்தனர். அதன் பின்னான தண்டனைகளால் ஜேர்மனியின் பணவீக்கம், வேலையில்லாதோரின் வீதம், என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்தன. ஜேர்மன் ஜனாதிபதியாக இருந்த வொன் ஹிண்டன்பேர்க் வயசாளி, நோய்வாய்பட்ட நிலையில் தனது ஓய்வு வாசஸ்தலத்தில் இருந்தவாறே, கீழதிகாரிகளூடாக ஆட்சி செய்து கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில், மூன்று இளமையும், துடிப்பும் கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் முன் வலம் வந்தனர்: ஹிற்லர், ஹெஸ், கோயபல்ஸ் ஆகிய மூவரும் தான் அந்த "ஜனத்திரள்வாத" இளம் தலைவர்கள். எனவே, ஒரு நம்பிக்கையான எதிர்காலம் வேண்டி, ஜேர்மன் வாக்காளர்கள் நாசிக் கட்சிக்கு வாக்களித்தனர். இந்த மானசீகமான ஆதரவோடு, நாசிக் கட்சியின் ஆயுதப் படையினர் நாசிக் கட்சி எதிர்ப்பாளர்களுக்குக் கொடுத்த வன்முறை அச்சுறுத்தலும் சேர்ந்து தான் நாசிக் கட்சியும், ஹிற்லரும் ஜேர்மனியின் ஆட்சியைப் பிடித்தனர்.
பதவிக்கு வந்த பின்னர் ஹிற்லரின் நடவடிக்கைகள்
ஹிற்லர் வேந்தராகப் பதவியேற்று சில மாதங்களில், ஜேர்மன் பாராளுமன்றம் தீயூட்டப் பட்டது. இந்த எரியூட்டலுக்கு ஜேர்மன் கம்யூனிஸ்டுகள் காரணமெனப் பிரச்சாரம் செய்த நாசிகள், ஒரு ஒல்லாந்து நாட்டு கம்யூனிஸ்டைக் கைது செய்தனர். ஹிற்லரின் விமானப் படையைப் பின்னாளில் கட்டியெழுப்பிய தீவிர நாசியான ஹேர்மன் கோறிங் நேரடியாக நீதிமன்றம் சென்று, கைது செய்யப் பட்ட ஒல்லாந்துக் கம்யூனிஸ்டின் மரண தண்டனையை உறுதி செய்தார். அதே நேரம் மிக முக்கியமான இன்னொரு விடயமும் நாசி ஜேர்மனியின் எதிர்காலப் போக்கை நிர்ணயித்தது: பாராளுமன்றம் எரிக்கப் பட்ட சம்பவத்தைக் காரணம் காட்டி, ஹிற்லர் ஜேர்மன் ஜனாதிபதியை அவசரகாலச் சட்டத்தை அமல் படுத்தத் தூண்டினார். இதனால், சகல அரசியலமைப்பு வழியான மக்கள் உரிமைகளும் ஒரே இரவில் ரத்துச் செய்யப் பட்டன. இந்த உரிமைகள் ரத்தினால், நாசிகளை ஆதரித்த ஜேர்மனியர்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை- ஆனால், யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், நாசி எதிர்ப்பாளர்கள், ஊடக சுதந்திரம் என்பன நன்கு பாதிக்கப் பட்டன. ஹிற்லரின் கட்சிக் கொள்கைகள் செயல் வடிவம் பெற ஆரம்பித்தன!
-இன்னும் வரும்
ஜஸ்ரின்