என்னுடன் தற்போது Reha Clinic‘ல் தெரப்பி செய்து கொண்டு இருக்கும், 25 வயதுடைய ஜேர்மன் இளைஞனும் அவனது நண்பியும், சென்ற வருடம் 2022 மாசி மாதமளவில் “Gotha Go Home“ போராட்டம் மும்முரமாக நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு நான்கு கிழமை ✈️ சுற்றுலாவில் 🛩 சென்றவர்கள்.
பெடியனுக்கு… 25 வயது என்ற படியால், அவன் என்றே தொடர்ந்து குறிப்பிடுகின்றேன். 😁
அவன் போன நேரம்… காலி முகத் திடல் மட்டுமல்லாது பல இடங்களிலும் ஆர்ப்பாட்டாங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்… தங்களை அது பெரிதாக பாதிக்கவில்லை என்றும், பார்ப்பதற்கு சுவராசியமாக இருந்ததாக குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கா போய் இறங்கிய நேரம் ஒரு ஐரோ 280 ரூபாய் இருந்தது என்றும், பிறகு தினமும் 📈 அதிகரித்து சென்று 380 ரூபாயில் வந்து நின்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று சொன்னார்.
ஒரு முறை 🚅 ரயிலில் போக… ரயில் நிலையத்துக்கு சென்று பயணசீட்டு கேட்ட போது, அங்கு இருந்த அரச 👨🏻✈️ ஊழியர் இனி ரயில் ஒண்டும் ஓடாது, வேண்டுமென்றால் மலிவான விலையில் வாடகைக் 🚙 கார், சாரதியுடன்… ஒழுங்கு செய்து தருவதாகவும், இலங்கையில் நிற்கும் காலம் முழுக்க அதனையே பாவிக்கலாம் என்றும்… ஒரு நாள் வாடகை 250 ஐரோ படி, மிகுதி மூன்று கிழமைக்கும் மொத்தமாக முற்பணம் செலுத்த வேண்டும் என்றும் அந்த ரயில் நிலைய அரச அதிகாரி கேட்டாராம்.
தான் ஹோட்டேலுக்கு போய் யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டு வந்துவிட்டாராம்.
அடுத்த நாள் பார்த்தால்… வழமை போல் ரயில் ஒடுவதாகவும். நல்ல காலம் ஒரு ஏமாற்று பேர் வழியிடம் இருந்து தப்பி விட்டதாகவும் குறிப்பிட்டார்.
🚂 ரயிலில்… கதவருகே இருந்து… அவனும், நண்பியும் தொங்கிக் கொண்டு சாகசம் செய்தபடி போன தருணங்கள் மிக இனிமையான நிகழ்வுகளில் ஒன்றாக குறிப்பிட்டார்.
🐘 யானையில் சவாரி செய்ததையும், யானையை தொட்டு குளிப்பாட்டியதையும் அடிக்கடி குறிப்பிடுவதோடு… மற்றைய ஜேர்மன்காரருக்கும் அந்தப் படங்களை காட்டி பெருமைப் பட்டுக் கொள்வார். 😀
நான் இலங்கையில் வசிக்கும் போது…. சிவனொளிபாத மலை, சிகிரியா போன்றவற்றை பார்க்கவில்லை என்று அறிந்ததும்… நான் பார்க்காததை, தான் பார்த்து விட்டதாக… அவருக்கு அற்ப சந்தோசமும் உள்ளது. 😂
உணவு வகைகளில்…. விதம் விதமான 🥬 மரக்கறி வகைகள் தமக்கு மிகவும் பிடித்தவை என்றும், தாம் மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பதால், தம் வாழ் நாளில் சாப்பிடாத 🥒 மரக்கறிகளை உண்டதாகவும், அதிலும் பிலாக்காய் கறியின் 🌶 சுவையையும் பாராட்டினார்.
🍌 வாழைப்பழம் எல்லாம்… ஒரே மாதிரி என்று நினைத்துக் கொண்டிருந்த தனக்கு…. இலங்கை சென்ற பின்தான் தெரிந்ததாம் சிவப்பு, பச்சை நிறங்களிலும்… வித்தியாசமான அளவுகளிலும், சுவைகளிலும் வாழைப்பழங்களை பார்த்து ஆச்சரியப் பட்டதாக கூறினார்.
ஒரு முறை, தான் வாங்கிய ரயில் பயணச் சீட்டு குறிப்பிட்ட ரயிலுக்கு செல்லாது என தெரிந்து கொண்ட உள்ளூர் தம்பதிகள்.. தம்முடைய செலவிலேயே புதிய ரயில் பயணச் சீட்டை வாங்கித் தந்ததை நன்றியுடன் குறிப்பிட்டார்.
எப்போ, எங்கு… சாப்பிடப் போனாலும் தினமும் பருப்புக் கறியை தந்து, தனக்கு வெறுப்பு ஏற்படுத்தி விட்டார்களாம். 😂
ஜேர்மனிக்கு வந்து ஒரு வருடமாகியும் பருப்பை கண்டால் வெறுப்பாக இருக்குதாம். 🤣
பெடியன்… யாழ்ப்பாணம், நயினாதீவு எல்லாம் போயிருக்கிறான்.
🥰யாழ்ப்பாண பயணம்தான்… இலங்கையிலேயே தனக்குப் பிடித்த இடம் என்றான். அது வரை, நான் அங்கு பிறந்ததாக அவனுக்கு சொல்லவில்லை. அவனாகவே சொன்ன கருத்து அது.
ஏன் யாழ்ப்பாணம் பிடிக்கும் என்று கேட்ட போது… வெள்ளைக்காரர் ஒருவரும் இல்லாமல் தாங்கள் மட்டும் அந்த மக்களிடையே வித்தியாசமாக இருந்தது தனக்கு மிகவும் பிடித்துக் கொண்டதாக கூறினார்.
பிற்குறிப்பு: கிளினிக்கில் இருந்து கைத்தொலை பேசியில் எழுதியதால், பதிவை… வர்ணமயமாக மெருகூட்ட முடியாமைக்கு மன்னிக்கவும்.
இன்னும் இரண்டு நாள்தான் இங்கு இருப்பேன். பெடியனிடம் உங்கள் சார்பாக கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் கீழே எழுதவும். கேட்டு பதில் சொல்கின்றேன். 😁
புதன் கிழமை வீட்டிற்கு செல்வதால்… அதற்குப் பின் கேட்கும் கேள்விகளுக்கு பதில் வராது. 🤪 🤣