தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(3).
"லா சப்பல்" யூரோப் மட்டுமன்றி உலகில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்கள் எல்லோருக்கும் அது ஒரு மயக்கும் சொர்க்கம். அங்கிருந்து மனைவி அல்லது காதலியை கையைக் கோர்த்துக் கொண்டு சிறிது தூரம் நடந்து சென்றால் கூடப் போதும் உலக அதிசயமாம் ஈபிள்டவர் கண்முன் தெரியும். அந்த இடத்தில் ஒரு சதுர அடி இடம் எடுப்பதே பெருங் கஷ்டம். சுரேந்தரும் சுமதியும் பல தரகர்கள், நண்பர்கள் எல்லோரிடமும் சொல்லி சொல்லி ஒரு மாதிரி கடையொன்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அந்தக் கடைக்கு கீழேயும் சாமான்கள் வைத்து எடுக்க சௌகரியமாக பாதாள அறையொன்று உண்டு.கடையை அவர்கள் ஒரு தகுதிவாய்ந்த கம்பனிமூலமாக தமது வேலைகளுக்கு ஏற்றவாறு திருத்தி,பாதாள அறை உட்பட வர்ணங்கள் பூசி அங்கு தமக்கும் ஒரு ஆபிஸ் அறையும், நிலைக் கண்ணாடியுடன் உடைகள் மாற்றும் அறையும் அமைத்து முன்பக்கம் விராக்கிகள்,கண்ணாடி அலுமாரிகள் எல்லாம் பொருத்தி விட்டிருந்தார்கள்.
கடைக்கு "லக்கி டெய்லரிங் அன்ட் டெக்ஸ்டைல்ஸ்" என்று பெயர்பலகையும் நியான் லைட்டுடன் பூட்டி விட்டிருந்தார்கள். பின் வங்கியிலும் கடன் எடுத்து நான்கு நவீன மாடல் தையல் மிஷின்களும் இன்னபிற சாமான்களும் வாங்கிப் போட்டிருந்தார்கள். இன்னும் 15/20 நாளில் கடை திறப்புவிழா செய்யுமளவுக்கு வேலைகள் முடிந்து விட்டிருந்தன.
சுமதி தையல்கடை திறக்கப் போகிறாளாம் என்னும் செய்தி அவளது உறவினர்கள் நண்பர்கள் வட்டாரத்தில் "அணைந்த எரிமலையாய் புகைந்து அமேசன் காட்டுத் தீயாய் " வியாபித்து அடுத்து வந்த கலியாணவீடு,சாமத்திய வீடு,பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எல்லாம் முக்கியமான பேசுபொருளாகி இருந்தது. அன்று காலை பத்து மணியிருக்கும் சுமதி தொலைக்காட்சியில் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியல் சீரியஸாக பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கைத்தொலைபேசி "ரஞ்சிதமே"என்று அழைக்கிறது.
---ஹலோ....ஓ....ஓ நான் சுமதி யார் நீங்கள் என்று கேட்க , அக்கா அது நான்தான் பிரேமா நீங்கள் வீட்டிலேயே இருக்கிறீங்கள். உங்களிடம் ஒரு விஷயம் கதைக்க வேணும் .....
---ஓம்....இண்டைக்கு விடுமுறைதானே வீட்டில்தான் நிக்கிறன், என்ன விஷயம் சொல்லுங்கோ....
--- இருங்கோ அக்கா, நான் பக்கத்துலதான் நிக்கிறன் ஐந்து நிமிசத்தில அங்கு வாறன் போன் கட்டாகின்றது. தொடர்ந்து சற்று நேரத்தில் அழைப்பு மணி ஒலிக்க சுமதி கதவைத் திறக்கிறாள். பிரேமா கையில் ஒரு சொக்கிலேட் பெட்டியுடன் உள்ளே வருகிறாள்.
--- வாங்கோ பிரேமா ! வந்து இருங்கோ, கண்டு கனகாலம். என்ன குடிக்கிறீங்கள்.
--- பிரேமாவும் சொக்கிலேட் பெட்டியை அவளிடம் கொடுத்து விட்டு கொஞ்சம் தயங்கியபடி அது வந்து சுமதியக்கா நீங்கள் "லா சப்பலில்" தையல்கடை திறக்கப் போவதாக அறிந்தனான்.அதுதான் உங்களிடம் வேலை இருக்குமோ என்றுதான்......எனக்கு தையல் வேலை எல்லாம் தெரியும்.
--- சுமதியும் அவளிடம், பிரேமா நான் அங்கு தையல்கடை திறக்கத்தான் போறன். ஆனால் அதுக்கு "pole emploi " (ஆட்களின் தகுதிக்கு ஏற்றபடி வேலை எடுத்துக் கொடுக்கும் அதிகாரமுள்ள அரசாங்க அமைப்பு) மூலமாகத்தான் ஆட்கள் எடுக்க பதிஞ்சிருக்கிறன். மேலும் எனக்கு புதிய மொடல் மிசின்களில் ஆடைகளை நன்றாக வெட்டித் தைக்கத் தெரிந்த ஆட்கள்தான் வேணும். பெண்களின் சட்டைகள், ப்ளவுஸ்கள் மட்டுமன்றி பிள்ளைகளின் உடுப்புகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். நேற்றுத்தான் அப்படி ரோகிணி என்றொரு பிள்ளையையும் எடுத்தனான்.
அதுசரி நீங்கள் இங்கு தையல் வகுப்புகளுக்கு போன சான்றிதழ்கள் ஏதாவது வைத்திருக்கிறீங்களோ.
--- இல்லையக்கா , நான் ஊர்ல தையல் வேலை எல்லாம் செய்தனான்.அக்கம் பக்கம் எல்லாம் நான்தான் தைத்துக் குடுக்கிறது. நீங்களும் இங்கு எல்லாருக்கும் தைத்து குடுக்கிறனீங்கள் என்று எனக்குத் தெரியும்.நீங்கள் கொஞ்சம் கொஞ்சம் டிசைன்கள் காட்டித் தந்தால் நான் கெதியா தச்சுப் போடுவன்.
---பிரேமா நீங்கள் கடைசியா எப்ப தைத்தனீங்கள். எனக்குத் தெரிந்து நீங்கள் இங்கு வந்தே பத்து வருடங்கள் இருக்கும் போல .......
---ஓமக்கா, கொஞ்சம் டச் விட்டுப் போச்சு என்டாலும் நான் சமாளிச்சுடுவன்.
--- அதுக்கில்லை பிரேமா ஏற்கனவே 5 / 6 பேர் என்னிடம் வேலை கேட்டிருக்கினம்.அதிலும் எனக்கு இந்த ஆபிரிக்கன்ஸ் , அல்ஜீரியன்ஸ் ஆட்களின் ஆடைகளும் தைக்கத் தெரிந்திருக்க வேணும். எதுக்கும் உங்கட பெயரையும் நான் குறித்து வைத்து கொள்கிறன். பின்பு வளமையாய் கதைத்து விட்டு போகும் போது அக்கா நானும் கடைக்கு கிட்டத்தான் இருக்கிறன் இருப்பது நிமிச நடை கடைக்கு வாறதுக்கு என்று சொல்லி விட்டு போகிறாள்.
அதுவரை அறைக்குள் இருந்து இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சுரேந்தர் வெளியே வந்து சுமதியிடம், இஞ்ச பாருமப்பா நீங்கள் ஒரேயடியா "pole emploi" வில் இருந்து ஆட்கள் எடுத்தால் அவர்கள் கண்டதுக்கும் "லோ " கதைப்பினம். இவர்களை மாதிரி ஒன்றிரண்டு பேர் இருப்பதுதான் நல்லது. பயபக்தியுடன் பணிவாக வேலை செய்வினம் என்று சொல்ல, ஓமப்பா நீங்கள் சொல்வதும் சரிதான் என்று சுமதியும் ஆமோதிக்கிறாள்.
இன்னும் தைப்பார்கள் ..........! 👗