- மிகுதி:
சரி, விமானம் புறப்படுவதற்கு இன்னும் 2 மணித்தியாலங்கள் உள்ளன. அதற்கிடையில் டுயூட்டி ப்றி (Duty Free) கடை ஒன்றில் நல்ல உடுப்பாக வாங்கி ஜம் மென்று போகலாம் என தீர்மானித்துக் கொண்டேன்.
புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, சூப்பராக இருக்க வேண்டும்.
புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட அழகாக தோன்ற வேண்டும்
புது உடுப்பாக வாங்குவதால், முதல் போட்ட ரீஷேர்ட் இனை விட, பார்த்தவுடன் இவன் கனடா போன்ற முன்னேறிய நாட்டில் வாழ்பவன், முற்போக்கு வாதி, அறிவானவன் ஆழமானவன், அசராதவன் என்றெல்லாம் மற்றவருக்கு தோன்ற வேண்டும்.
விமானத்துக்கான காத்திருப்பு அறையை விட்டு, மேல் மாடியில் உள்ள டுயூட்டி ப்றி கடைக்கு செல்ல எஸ்கலேட்டரில் (Escalator) ஏறினேன்.
சின்ன குழந்தை சுச்சா போன மாதிரி, என் ரீஷேர்ட் எல்லாம் ஈரமாகி இருப்பதை பார்த்து சிலர் தமக்குள் சிரித்த மாதிரி தோன்றியது (நல்ல வேளை அணிந்திருந்த டெனிம் காற்சட்டை ஈரமாக தோன்றவில்லை)
அதுக்குள் ஒருவர் எஸ்கலேட்டரில் (Escalator) எப்படி இறங்குவது என்று தெரியாமல், ஒரு காலை மேல் படியில் வைத்தவாறு எஸ்கலேட்டரினை கட்டிப் பிடித்தபடி இறங்க முற்பட. அவர் கால்கள் இரண்டும் பப்பரப்பாய் என்று விரிந்து தடுமாறி முழுசிக் கொண்டு இறங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து "ப்ளடி கன்றி ப்ருட் (country brute)" என் நினைத்தவாறு நமுட்டு சிரிப்புடன் மேலே ஏறினேன்.
முதல் பத்து கடைகளுக்குள் உள்ளே சென்று பார்த்தால், மருந்துக்கும் கூட அங்கு உடுப்புகள் விற்க இருக்கவில்லை.
சரி, அது எப்படி ஒரு உடுப்புக் கடை இல்லாமல், டுயூட்டி ப்றி இருக்கும்.. கட்டாயம் கொஞ்சம் அங்கால இருக்கும் என நினைத்தவாறு எட்டி நோட்டம் இட்டால், வரிசையாக பல கடைகளில் ஆடைகள் தொங்கிக் கிடப்பது போன்று தோன்ற அவற்றை நோக்கி சென்றேன்
அவை பெண்களுக்கான ஆடைகள் விற்கும் கடைகள்.
அப்படியும் இரண்டு கடைகளில் ஆண்களுக்கான உடுப்பு இருக்குது என்று சொல்ல, உள்ளே சென்று பார்த்தால், இருக்கும் ரீஷேர்ட் இல் எல்லாம் இந்தியக் கொடி வரைந்தும், ஐ ல்வ் இந்தியா (I love India) என்ற வசனங்களும் இருந்தன. ஐ லவ் சென்னை / தமிழ் நாடு என்று இருந்திருந்தால் ஒரு கேள்வியும் இல்லாமல் வாங்கி இருக்க முடியும்...ஆனால் ஒரு ஈழத்தமிழனான நான் எப்படி ஐ லவ் இந்தியா என்பதை வாங்க முடியும்?
ஒரு ரீஷேர்ட் இல் ஜிகினா பட்டெல்லாம் வைத்து தைத்து இருந்து வெறுப்பேற்றினர்
இன்னொரு ரீஷேர்ட் இல் சாயிபாபா சயனித்துக் கொண்டிருந்தார்.
இறுதியாக கடை ஒன்றில் ஒரு தொப்பி அணிந்த இஸ்லாமியரிடம் என் நிலையை சொல்லிக் கேட்க, தன்னிடம் விற்பதற்கு சில ரீஷேர்ட் உள்ளதாக கூறி ஒவ்வொன்றாக காட்ட, அவற்றிலும் ஐ லவ் இந்தியா போன்ற வாசகங்களும் இந்தியக் கொடியும் பொறிக்கப்பட்டு இருந்தன.
அவர் காட்டியதில் கடைசி கடைசியாக ஒரு நீல நிற ரீஷேர்ட் சதுரங்கள் பொறிக்கப்பட்டு ஐ லவ் இந்தியா என்ற வசனம் இல்லாம் இருந்தது. இதையும் வாங்காமல் விட்டால், இனி ஒன்றும் வாய்க்காது என்று சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்து (1000 இந்திய ரூபாய்கள்!) வாங்கி, கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்த மாதிரி சந்தோசத்துடன் அருகில் இருந்த ஆண்களுக்கான வொஷ் ரூமிற்கு (Wash Room) ஓடிச் சென்று, போட்டிருந்த ரீஷேர்ட் இனை கழற்றி குப்பை bin க்குள் திணித்து விட்டு, புது ரீஷேர்ட் இனை அணிந்து கொண்டு வெளியே வந்தேன்.
நான் கடையை விட்டு வெளியே வரவும், Gate open என தகவல் வரவும் சரியாக இருந்தது.
பரபரவென ஹாண்ட் லக்கேஜ்ஜினை இழுத்துக் கொண்டு, புது ரீஷேர்ட் போட்ட தெம்பில் எல்லாரையும் ஒரு 'லெவலகாக' பார்த்துக் கொண்டு போர்டிங் பாஸைக் காட்டி விமானத்துக்குள் வந்து அமர்ந்தாயிட்டு. இடையில் ஒரு சிலர் என்னை சற்று உத்துப் பார்த்ததும் புரிந்தது. "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்தவாறு மனசு ரிலாக்ஸ் ஆனேன்.
விமானம் கிட்டத்தட்ட நான்கு மணித்தியாலம் 30 நிமிடம் பறந்து Transit டான கட்டாரில் வந்திறங்கியது.
கட்டாரில் இறங்கி, காலைக் கடனை முடித்து, முகத்தை நீரால் அலம்பி பிரஷ்ஷாக்கி விட்டு வர லேசாக பசித்தது. ஆனால் சென்னையில் ஏற்பட்ட அனுபவத்தால், பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல், அங்கும் இங்கும் திரியாமல், நேரடியாக காத்திருப்பு அறைக்குள் சென்றேன்.
அங்கு ஒரு அழகான தமிழ் இளம் பெண், கனடா பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார். சரியாக அவர் பார்வை என்னில் படும் விதமாக, கதிரை சரியுதா என்று ஒருக்கால் செக் பண்ணி விட்டு போய் அமர்ந்தேன்.
ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தார். பின் தலையை குனிந்து விட்டு, சடுதியாக மீண்டும் நிமிர்ந்து என்னையே பல வினாடிகள் உற்றுப் பார்த்தார்.
உடலில் இரசாயன மாற்றம் நிகழ தொடங்கியது.
ஒரு இனம்புரியாத சிரிப்புடன், சற்று ஏளனமாக சிரித்த போன்று சிரித்து விட்டு தலையை குனிந்து கொண்டார்.
இன்னும் ஒரு தமிழ் வயதான பெண்மணி என்னை உற்றுப் பார்ப்பதும், பின்னர் எதையோ யோசிப்பதும், மீண்டும் என்னை பார்ப்பதுமாக இருந்தார்.
நான் எழும்பி சற்று நடப்பம் என்று நடக்கும் போது, அங்கு ஒரு பெரிய கண்ணாடி ஒன்று பொருத்தி இருந்ததை அவதானித்து விட்டு அதில் என்று என்னைப் பார்த்தேன்.
அந்த கண்ணாடி முன் நின்று பார்க்கும் போதுதான் அந்த ரீஷேர்ட் இல் என்ன எழுதி இருந்தார்கள் என்பதும், அந்த சதுரங்களில் என்ன பொறித்து இருந்தார்கள் என்பதும் உறைத்தது.
கடும் நீல நிறம்.
நெஞ்சுப் பகுதியில் ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதி இருந்தது.
அந்த வரி "என் நட்சத்திரம் என்ன சொல்கின்றது (My Star Says...) என்று இருந்தது.
அதன் கீழ் ஒரு சதுரப் பெட்டி
அந்த சதுரப் பெட்டிக்குள் சில சின்ன சின்ன சித்திரங்கள்.
சதுர பெட்டியின் கீழ் இன்னொரு வரி.
அந்த வரி "நான் தான் அடுத்த பில்கேட்ஸ்" (I will be the next Bill Gates ) என்று இருந்தது.
சதுரத்துக்குள் இருந்த சித்திரங்கள், நான் பில்கேட்ஸ் ஆக வருவதற்கான கிரக நிலைகள்.
முழுக்க முழுக்க சாத்திரம் சம்பந்தமான விடயங்கள் பொறித்த ரீஷேர்ட் அது,
தமிழகத்தில் இருந்து ரொரண்டோவுக்கு சாத்திரம் சொல்ல வரும் சாஸ்திரி கூட இப்படி ஒரு ரீஷேர்ட்டை அணிந்து இருக்க மாட்டார்.
குக்கிராமம் ஒன்றில் இருந்து வரும் பாமரர்கள் கூட இப்படி அணிந்து இருக்க மாட்டார்கள்.
அவ்வளவு ஏன்.. கொலுவில் வைத்து இருக்கும் பொம்மை கூட இதை விட நல்லா உடுப்பு போட்டு இருக்கும்.
அந்த இளம் பெண் பார்த்தது ஏளனப் பார்வை என்று புரிந்தது
அந்த வயதான தமிழ் பெண்மணி பார்த்தது "இவரிடம் சாத்திரம் கேட்டுப் பார்ப்பமா" என நினைத்து என்பதும் புரிந்தது.
அவ்வளவுதான்.
அப்படியே ஒதுக்கு புறமாக நின்று விட்டு, போர்டிங்க் பாஸ் இனைக் காட்டும் இடத்தில் " 2 நாட்களாக சரியாக நித்திரை கொள்ளவில்லை... எனவே ஓய்வெடுக்க கூடிய சீட் தந்தால் நல்லம்" என்று சொல்லிப் பார்க்க, அவர்கள் (சிங்கள இளைஞர்கள் தான் அங்கு வேலை செய்தனர்), உடனே விமானத்தின் ஆகக் கடைசி சீட்டை ஒதுக்கித் தந்தனர்.
இந்த சீட்டில் பக்கத்தில் ஒருவர் மட்டுமே அமர்ந்து வருவர். நல்ல இட வசதி கொண்ட சீட். எனக்கு பிடித்தமான சீட் அது.
அன்று பக்கத்து சீட்டுக்கு ஒருவரும் வரவில்லை என்பதால் மனசுக்குள் ஒரு நிம்மதி. நல்ல வேளை ஒருவரும் இல்லை.
விமானம் புறப்பட்டது
14 மணி நேரம் பறந்து விமானம் ரொரண்டோவில் தரையிறங்கியது.
வேகமாக கடவுச் சீட்டை காட்டி விட்டு வெளியே வர, மனைவி என்னை பிக்கப் பண்ண மகளுடன் வந்து இருந்தார்.
12 நாட்கள் என்னைக் காணததால் கட்டிப் பிடிக்க ஓடிவந்த என் மகள் அருகே வந்ததும் ஓட்ட்டத்தை நிறுத்தி, மூக்கை சுளித்து
"அப்பா...உங்களில் ஏன் இப்படி புளிச்ச பால் மாதிரி Bad smell வருகுது" என்று கேட்டு விட்டு இரண்டடி தள்ளி நகர்ந்தவள் மீண்டும் என்னை பார்த்து
" Why you are wearing such an ugly T Shirt"
எனக் கேட்டாள்
----------------------------
யாவும் மெய் - மெய்யைத் தவிர வேறோன்றுமில்லை பராபரமே