இலங்கைக்காக இந்தியாவை மிரட்டிய அமெரிக்க அதிகாரி வோல்ட்டர்ஸ்
வொயிஸ் ஒப் அமெரிக்கா மற்றும் திருகோணமலைத் துறைமுகப் பாவனை தொடர்பான விடயங்களில் ஜெயாருக்கு அழுத்தம் கொடுத்த வோல்ட்டர்ஸ் அமெரிக்காவுக்குச் சார்பான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டார். இரணவிலைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வொயிஸ் ஒப் அமெரிக்காவின் அஞ்சல் நிலையத்திற்காக ஜெயாரை அழுத்திப் பெற்றுக்கொண்ட வோல்ட்டர்ஸ், இதற்கான ஒப்பந்தத்தினை ஆவணி 1983 இல் கைச்சாத்திட்டார். நிலங்களை அமெரிக்காவின் பெயருக்கு மாற்றும் ஒப்பந்தம் 1983 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. இதன்படி 800 ஏக்கர்கள் நிலம் தொட்டுவ எனும் பகுதியில் இருந்தும் மீதி 200 ஏக்கர்கள் நாத்தாண்டிய பிரதேசத்தின் இரணவிலப் பகுதியில் இருந்தும் 1985 ஆம் ஆண்டு தை 15 ஆம் திகதி அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டது. அமெரிக்க வானொலி அஞ்சல் சேவையின் நிலையம் ஒன்றினை இரணவில பகுதியில் அமைப்பதனை இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் வெகுவாக எதிர்த்திருந்தன.
மேலும், திருகோணமலைத் துறைமுகப்பகுதியில் அமெரிக்க நலன்களை முன்னிறுத்திச் செயற்பட ஜெயவர்த்தனவுக்கு வோல்ட்டர்ஸ் மூலம் கடுமையான அழுத்தம் பிரியோகிக்கப்பட்டிருந்தது.
இலங்கை அரசாங்கம் 1984 ஆம் ஆண்டு மாசி மாதம் 23 ஆம் திகதி திருகோணமலை எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளுக்கு என்று அவற்றினை சர்வதேச அமைப்பொன்றிற்கு குத்தகைக்கு வழங்கியது. மூன்று தனியார் நிறுவனங்களான ஒரொலியம் சிங்கப்பூர், மேற்கு ஜேர்மனிய எண்ணெய்த் தாங்கி நிறுவனம் மற்றும் ட்ரேடின்பன்ட் எனப்படும் சுவிஸர்லாந்தை தலைமையமாகக் கொண்டியங்கும் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டே திருகோணமலை எண்ணெய்க் குதங்களை குத்தகைக்கு எடுத்திருந்தது.
மேலும், இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வை ஜெயவர்த்தன அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்கிற ரொனால்ட் ரீகனின் கோரிக்கையினையும் வொல்ல்ட்டார்ஸ் ஜெயவர்த்தனவிடம் தெரிவித்திருந்தார். ஆனால், வோல்ட்டர்ஸின் இராணுவ திட்டத்தை மூடி மறைப்பதற்காக ரீகன் வெளியிட்ட செய்தியே அரசியல் தீர்வு வழங்கக் கோரும் நாடகம் என்பதனை எல்லோரும் அறிந்தே இருந்தனர். இந்தியாவின் உணர்வுகளை அமைதிப்படுத்தும் முகமாகவே ரீகன் அரசியல்த் தீர்வு குறித்த கோரிக்கையினை விடுத்திருந்தார். மேலும், இதே கருத்தினை இந்தியாவுக்குத் தெரிவிக்க வோல்ட்டர்ஸ் கொழும்பிலிருந்து இந்தியாவுக்கு சென்று வந்தார்.
அனால் வோல்ட்டர்ஸின் தேவைக்கதிகமான அழுத்தத்தினால் இந்தியா அமைதியடைவதற்குப் பதிலாக எரிச்சலடைந்தது என்றுதான் கூறவேண்டும். இந்தியாவின் தில்லியை வோல்ட்டர்ஸ் சென்று அடைவதற்கு முன்னரே அவரும் ஜெயவர்த்தனவும் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பான முழுத் தகவல்களையும் இந்தியா அறிந்தே வைத்திருந்தது. தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு இந்தியா வழங்கிவரும் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகள் குறித்த பல தகவல்களை அமெரிக்கா வோல்ட்டர்ஸ் ஊடாக இலங்கைக்கு வழங்கியிருந்தது என்பதனை இந்தியா அறிந்துகொண்டது. மேலும் லலித் அதுலத் முதலியுடன் வோல்ட்டர்ஸ் பேசும்போது தமிழ்நாட்டிலும், உத்தர்பிரதேசத்திலும் இயங்கும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் பயிற்சி முகாமகள் தொடர்பான செய்மதிப்படங்களைத் தாம் வைத்திருப்பதாகவும் கூறியிருந்தார். இதுவும் இந்தியாவுக்குத் தெரியவந்திருந்தது. இந்தியா செல்லும் வோல்ட்டர்ஸ் அங்கே அவர்களை நன்றாக ஏமாற்றப்போகிறார் என்று லலித் அதுலத் முதலி தனது நண்பர்களுடன் பெருமையாகப் பேசிக்கொண்ட விடயமும் இந்தியாவுக்குத் தெரிந்திருந்தது. இந்த விடயங்களையெல்லாம் தில்லியின் வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பிவைத்தவர் கொழும்பிலிருந்த இந்தியத் தூதுவர் சத்வால் என்பது குறிப்பிடத் தக்கது.
தில்லிக்கான தனது விஜயத்தின் நோக்கத்தினை எப்படியாவது அடைந்துவிட வோல்ட்டர்ஸ் முயன்றார். அங்கு வெளிவிவகாத்துறை அதிகாரிகளுடன் பேசிய அவர், ஜெயவர்த்தன எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து இந்தியா கரிசணை காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஜெயவர்த்தனவை நேர்மையான மனிதர் என்று காட்ட முயன்ற வோல்ட்டர்ஸ், ஒருபுறம் சிங்கள இனவாதிகளை எதிர்கொள்ளும் ஜெயார் இன்னொருபுறம் தமிழ் தீவிரவாதத்தினை எதிர்கொண்டு நிற்பதாகக் கூறினார். ஆனால், வோல்ட்டர்ஸினால் வெல்லம் தடவப்பட்டுக் கொடுக்கப்படும் குளிசையை இந்திய அதிகாரிகள் உட்கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. இதனையடுத்து தனது வழமையான வெருட்டும் தொனியைக் கையாண்டார் வோல்ட்டர்ஸ்.
இந்திய அதிகாரிகளிடம் பேசிய வோல்ட்டர்ஸ், தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு பயிற்சியளிப்பதை இந்தியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோரினார். அதற்குப் பதிலளித்த இந்திய அதிகாரிகள் தாம் தமிழ்ப் போராளிகளுக்கு பயிற்சிகள் எதனையும் வழங்கவில்லை என்று மறுத்தனர். அதற்குப் பதிலளித்த வோல்ட்டர்ஸ் இந்தியாவில் தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கான பயிற்சி முகாம்கள் இயங்குவதைத் தாம் செய்மதிகள் மூலம் படம் பிடித்துவைத்திருப்பதாகவும், இந்தியா உடனேயே இவற்றினை மூடாவிட்டால் சர்வதேச செய்திச் சேவைகளுக்கு தாம் அவற்றினை வெளியிடப்போவதாகவும், இது இந்தியாவை சர்வதேசத்தின்முன்னால் தர்மசங்கடமான நிலைக்குக் கொண்டுசெல்லும் என்றும் மிரட்டினார். ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, பாதகமான சூழ்நிலையினையே இலங்கைக்கு அது ஏற்படுத்தியது.
அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர் ஜோசப் அடெபோ, நியு யோர்க் மேயர் எட் கொச் மற்றும் சபாநாயகர் டிப் ஓ நீல்.
அமெரிக்காவின் மூத்த இராஜதந்திரிகளும், காங்கிரஸ் உறுப்பினர்களும் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்வது ஜெயவர்த்தனவைப் பலப்படுத்தவே என்று இந்தியா சந்தேகம் கொள்ளத் தொடங்கியது. அமெரிக்கப் பாதுகாப்புத்துறை கமிஷனின் தலைவர் ஜோசப் அடெபோ தலைமையில் ஆறு அமெரிக்க செனட்டர்கள் 1984 ஆம் ஆண்டு தை மாதம் 12 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்தத் தூதுக்குழு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென்று இலங்கைக்கு உடனடியாக 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு அமெரிக்க அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது. மேலும் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சியளிக்கும் சகல வசதிகளுடனும் கூடிய தாக்குதல்க் கடற்படைக் கப்பல் ஒன்றினைத் தமக்குத் தருமாறு இலங்கை வேண்டிக்கொண்டபோது, அதனைச் சாதமான முறையில் பரிசீலிக்கவும் அத் தூதுக்குழு ஒத்துக்கொண்டது. இக்குழுவிற்கு மேலதிகமாக ஆசிய - தென்னாசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க வெளியுறவுத்துறையின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் மேர்பியும் 1984 ஆம் ஆண்டு ஐப்பசி 24 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.