தேசிய பாதுகாப்பு அமைச்சினை உருவாக்கிய ஜெயவர்த்தன
தமிழ் இனக்கொலையில் முன்னின்று செயற்பட்ட லலித் அதுலத் முதலி
ஜெயவர்த்தனவின் இராணுவ முஸ்த்தீபுகளுக்கு நிகராக தமிழ்ப்போராளிகளும் தம்மைத் தயார்ப்படுத்திக்கொண்டு வந்தனர். 1983 ஆம் ஆண்டி இறுதிப்பகுதியளவில் வட இந்தியாவுக்குச் சென்ற முதலாவது தொகுதிப் போராளிகள் தமது மூன்றுமாத காலப் பயிற்சியை நிறைவுசெய்திருந்தனர். இரண்டாவது தொகுதியினருக்கான பயிற்சிமுகாம்கள் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் அமைக்கப்பட்டன. இந்திய உளவுத்துறை ரோ அதிகாரிகளை பயிற்சியாளர்களாகக் கொண்டு தமிழ்நாட்டு முகாம்களை போராளிகளே இயக்கிவந்தனர். பங்களூரில் இயங்கிய புலிகளின் முகாமினை ரோ அதிகாரிகள் கவனித்துக்கொண்டனர்.
காத்தான்குடி மக்கள் வங்கிக் கொள்ளை
இந்தியாவில் பயிற்சியினை முடித்துக்கொண்ட போராளிகள் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வந்து சேர்ந்துகொண்டிருந்த தறுவாயில், சிறிய அமைப்பாக பனாகொடை மகேஸ்வரனின் தலலைமையில் இயங்கிய தமிழ்த் தேசிய இராணுவம் 1984 ஆம் ஆண்டு தை மாதத்தில் தாக்குதல் ஒன்றினை நடத்தியது. காத்தான்குடியில் இயங்கிவந்த மக்கள் வங்கியின் அலுவல்கள் ஆரம்பித்த காலை 9 மணிக்கு ஆறு போராளிகள் உள்நுழைந்தனர். முஸ்லீம் முகாமையாளரைப் பணயக் கைதியாகப் பிடித்துக்கொண்ட அவர்கள், ஏனைய பணியாளர்களை வங்கியின் அறையொன்றினுள் அடைத்துவிட்டு வங்கியில் இருந்த இரண்டரை லட்சம் பணம் மற்றும் 35 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான நகைகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றனர். இதுவரை வடக்கில் மட்டுமே இயங்கிவந்த போராளி அமைப்புக்கள் இச்சம்பவத்தின் மூலம் கிழ்க்கிற்கும் தமது நடவடிக்கைகளை விஸ்த்தரித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த அரசு கலவரமடைந்தது. . அதுவரை இலங்கையில் இடம்பெற்றிருந்த வங்கிக்கொள்ளைகளில் இந்த கொள்ளைச்சம்பவத்திலேயே அதிகளவான பணமும் நகைகளும் திருடப்பட்டிருந்தன. காத்தான்குடி பல பணக்கார முஸ்லீம் வியாபாரிகளின் வாழிடமாகத் திகழ்ந்தது.
வங்கிக் கொள்ளையினையடுத்து தேடுதலில் இறங்கிய பொலீஸாரும், இராணுவத்தினரும் திருடப்பட்ட நகைகளில் ஒரு பகுதியினை பிளாத்திக்குப் பைகளில் சுற்றியபடி வீடொன்றில் இருந்து மீட்டனர். ஆனாலும், மீதி நகைகளோடு யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்ற பனாகொடை மகேஸ்வரனும் அவரது சகாக்களும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குத் தப்பிச் சென்றனர். தன்னிடம் இருந்த பணத்தினைக் கொண்டு பனாகொடை மகேஸ்வரன் தமிழ்நாடு - கேரளா எல்லையில் தனது அமைப்பிற்கென்று பயிற்சி முகாம் ஒன்றினைத் திறந்தார். விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்கு முன்னர் வரை இங்கிலாந்தில் பொறியியலாளராகக் கல்விகற்று வந்த மகேஸ்வரன், தொழிநுட்பத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்தவர். தனது கல்வியறிவைப் பயன்படுத்தி சில கைத்துப்பாக்கிகளை தனது முகாமில் செய்வதிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
சமூக விரோதிகளுக்குப் புலிகளால் வழங்கப்பட்ட மரண தண்டனைகள்
மகேஸ்வரனின் தமிழ்த் தேசிய இராணுவம் வங்கிக்கொள்ளையினைப் பயன்படுத்தி மக்களிடம் தம்மைக் காட்டிலும் பிரபலமாவதை புலிகள் விரும்பவில்லை. ஆகவே, மக்களின் காவலர்கள் தாமே என்று காட்டுவதற்காக காத்தான்குடி வங்கிக்கொள்ளை இடம்பெற்று மூன்று நாட்களின் பின்னர் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட ஆறுபேருக்குப் புலிகள் மரண தண்டனை நிறைவேற்றினர்.
இவர்களுள் ஐவர் மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க ஆறாமவரின் தலை வெட்டப்பட்டிருந்தது. மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுடப்பட்டவர்களின் தலைகளில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருந்தது. அவர்களின் உடல்களுக்கருகில் கையால் எழுதப்பட்ட அறிவித்தல் ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. "நீங்கள் ஒரு துரோகி. துரோகிகளுக்கான எமது தண்டனை இதுதான்" என்று அது கூறியது.
மின்கம்பங்களில் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட ஐவரும் குற்றவாளிகள். ஆறாமவர் பாலியல்ப் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பலமுறை தம்மைத் திருத்திக்கொள்ளுமாறு புலிகளால் எச்சரிக்கை விடப்பட்டே வந்தது. ஆனால், இவர்கள் அறுவரும் அதனைச் சட்டை செய்யவில்லை. புலிகள் குற்றவாளிகளுக்குப் பொதுவான எச்சரிக்கை ஒன்றினை முன்னர் வெளியிட்டிருந்தனர். பலர் அதனை கிண்டலடித்து உதாசீனம் செய்திருந்தனர்.
புலிகள் வெளியிட்ட துண்டுப் பிரசுரம், "சமூக விரோதச் சக்திகளை துடைத்தெறிவோம்" என்கிற தலைப்பில் வெளியாகியிருந்தது. "விடுதலைப் போராட்டம் சமூக விரோதச் செயற்பாடுகளுக்குக் களம் அமைத்துக் கொடுக்கக் கூடாது. விடுதலைப் போராளிகள் மக்களைக் குற்றங்களில் இருந்தும் சமூகச் சீர்கேடுகளில் இருந்தும் காப்பவர்களாகத் திகழ வேண்டும்" என்று கூறியதுடன் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோர் அவற்றினைக் கைவிட்டுத் திருந்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்திருந்தது. இப்பிரசுரத்தின் இறுதிப்பகுதியில், "சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவோர் தம்மைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால் அழிக்கப்படுவார்கள்" என்று கூறியிருந்தது.
சங்கிலியன் பஞ்சாயத்து முறையினை அறிமுகப்படுத்திய புலிகள்
1982 ஆம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீர்கெட்டுப் போயிருந்தது. ஆனைக்கோட்டை மற்றும் சாவகச்சேரி பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்களையடுத்து பொலீஸார் சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்தனர். சுமார் 16 சிறிய பொலீஸ் நிலையங்கள் பொலீஸாரால் மூடப்பட்டன. வீதி ரோந்துக்களில் மட்டுமே தமது நடவடிக்கைகளைப் பொலீஸார் சுருக்கிக் கொண்டனர். இதுகூட இந்தியாவில் பயிற்றப்பட்ட போராளிகள் யாழ்க்குடாநாட்டில் நடமாடத் தொடங்கியடதையடுத்து குறைவடையத் தொடங்கியது. கண்ணிவெடி மற்றும் பதுங்கித் தாக்குதல்களால் பொலீஸார் மிகுந்த அச்சம் அடைந்து காணப்பட்டனர். ஆகவே, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போயிருந்த இந்தச் சூழ்நிலையினை சமூக விரோதிகள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொண்டனர். களவுகள், தெருச் சண்டியர்களின் அடாவடிகள், பாலியல் பலாத்காரங்கள் என்பன யாழ்க்குடாநாட்டில் பரவலாக ஆங்காங்கே நடந்துவரலாயின. ஆகவே, இவற்றிலிருந்து மக்களைக் காப்பற்ற புலிகள் முடிவெடுத்தனர்.
புலிகளின் "மின்கம்பத் தண்டனை" யினை மாற்றியக்கங்கள், குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈரோஸ் ஆகியவை கடுமையாக விமர்சித்திருந்தன. புலிகள் எல்லைமீறிச் செயற்பட்டு வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஒரு ஆணவம் கொண்ட அரசுபோல விடுதலைப் போராளிகள் நடந்துகொள்ளக் கூடாது என்று அவர்கள் கூறினர். ஜனநாயகமும், சட்டம் ஒழுங்கும் புனிதமானவை என்று அவை வாதிட்டன.
தம்மீதான விமர்சனங்களுக்கு புலிகள் ஒரு அறிக்கை மூலம் பதில் வழங்கியிருந்தனர்.
"நாம் மிகவும் ஆபத்தான சமூக விரோதிகளையே களையெடுத்தோம். இவர்கள் குற்றவாளிகள் மட்டுமல்லாது துரோகிகளாகவும் செயற்பட்டு வந்தவர்கள். அரசின் முகவர்களாக செயற்பட்டு வந்த இவர்கள், மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பல இடைஞ்சல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள். மிகவும் கொடூரமான இக்குற்றவாளிகளைக் கைதுசெய்து அவர்களின் குற்றச் செயல்களுக்காக நீண்ட விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னரே அவர்களின் குற்றங்களுக்கு ஏற்றவகையில் தண்டனை வழங்கினோம். கொடூரமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை வழங்கப்பட ஏனையவர்களைக் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்திருக்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது.
சங்கிலியன் பஞ்சாயம் என்கிற பெயரில் மக்கள் தீர்ப்பாயங்களையும் புலிகள் உருவாக்கினர். இந்து நீதித்துறையின் பாரம்பரியத்தில் கிராம மட்டத்தில் நிலவிவந்த பஞ்சாயத்து முறையின் அடிப்படியிலேயே இவை உருவாக்கப்பட்டன. பொதுவான இடம் ஒன்றில் கூடும் கிராமத்தின் முதியவர்கள், வழக்குகளை விசாரித்து தீர்ப்புகளை வழங்குவர். யாழ்ப்பாணத்தின் இறுதி மன்னனான சங்கிலியனின் பெயரினை புலிகள் இந்தக் கிராமப் பஞ்சாயத்து முறைக்குச் சூட்டினர். வடக்குக் கிழக்கில் புலிகள் இன்று ( 2005) நடைமுறைப்படுத்திவரும் நீதிமன்றங்களின் ஆரம்பப் படியே "சங்கிலியன் பஞ்சாயத்து" என்பது குறிப்பிடத் தக்கது.
புலிகளை தமது காவலர்களாகப் பார்க்கத் தலைப்பட்ட தமிழ் மக்கள்
எதிர்பார்த்ததைப் போன்றே சமூக விரோதிகளுக்கான மரண தண்டனை பலனைக் கொடுத்தது. புலிகளின் செயலினை மக்கள் வரவேற்றிருந்தனர். புலிகளின் போராளிகளைத் தமது காவலர்கள் என்னும் நிலைக்கு மக்கள் உயர்த்தியிருந்தனர். மக்கள் மனதில் புலிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தினை மேலும் மேம்படுத்தும்படி பிரபாகரன் தனது போராளிகளிடம் கோரினார். "மக்கள் உங்களைத் தமது காவலர்களாக நினைக்கும் சூழ்நிலையினை உருவாக்குங்கள்" என்பதே பயிற்சி முகாம்களிலும், வகுப்புகளிலும். பயிற்சி முடிந்து வெளியேறும் நிகழ்வுகளிலும் தனது போராளிகளுக்கு பிரபாகரன் கற்றுக்கொடுத்த மந்திரமாகிப் போனது.
இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்குதல்
தமிழர் தாயகத்தில் இராணுவத்தினதும் பொலீஸாரினதும் நடமாட்டத்தினை மட்டுப்படுத்துவதும், தமிழ் மண்ணை அரசின் ஆதிக்கத்தில் இருந்து மீட்பதுமே விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக போராளிகளால் கருதப்பட்டது. இதனை அவர்கள் மண்மீட்புப் போர் என்றே அழைத்தனர். இந்த இலக்கினை அடைவதில் அனைத்துப் போராளிக் குழுக்களும் இணைந்து செயற்படுவதென்று முடிவெடுத்தனர். அதன்படி புலிகளே முதலாவது நடவடிக்கையில் இறங்கினர். 1984 ஆம் ஆண்டு மாசியில் குருநகர் பகுதியில் இருந்த இராணுவ முகாம் கட்டடம் மீது அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதோடு அதேவருடம் பங்குனி 20 ஆம் திகதி இரு விமானப்படை வீரர்களையும் கொன்றனர்.
குருநகர் முகாமில் தங்கியிருந்த இராணுவத்தினர், ஆள்ப்பற்றாகுறையினால் 1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளின் பின்னர் பலாலி முகாமுக்குத் தம்மை மாற்றியிருந்தனர். அவர்கள் வெளியேறிச் சென்றபின்னர் இக்கட்டடங்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. ஆனால், 1984 ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் இராணுவத்தினர் மீண்டும் குருநகர் முகாமிற்குள் நுழையப்போகிறார்கள் என்கிற வதந்தி பரவத் தொடங்கியது. ஆகவே, இதனைத் தடுக்கும் முகமாக இக்கட்டடங்களைப் புலிகள் தகர்த்திருந்தனர்.
விமானப்படையைச் சேர்ந்த இரு வீரர்களான ரொகான் ஜயசேகரவும், சரத் அனுரசிறியும் யாழ்ப்பாணத்திலிருந்து கோண்டாவில் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தில் பயணமாகிக்கொண்டிருந்தனர். இவர்கள் பேரூந்தில் பயணமாவதை அறிந்துகொண்ட புலிகள் கோண்டாவிலுக்கு அண்மித்த பகுதியில் பேரூந்து வரும்போது அதனை மறித்து உள்ளிருந்த ஏனைய பயணிகளை கீழே இறங்கச் சொல்லிவிட்டு இரு விமானப்படை வீரர்களையும் சுட்டுக் கொன்றனர். 1983 ஆம் ஆண்டு ஜூலை இனப்படுகொலைக்குப் பின்னர் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மேல் நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத் தக்கது.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தறுவாயில் கோண்டாவிலில் விமானப்படையினர் மீதான தாக்குதல் சம்பவம் குறித்த செய்தி வந்திருந்தது. இக்கூட்டத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளராக அமைச்சர் அதுலத் முதலியே செயலாற்றினார். கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் இத் தாக்குதல் சம்பவம் குறித்து லலித் அதுலத் முதலி குறிப்பிட்டார். "புலிப் பயங்கரவாதிகள் அனைத்துக் கட்சி மநாட்டைக் குழப்ப முயல்கின்றனர். இனப்பிரச்சினைக்குச் சமாதானமான முறையில் தீர்வொன்று காணப்படுவதை அவர்கள் எதிர்க்கின்றனர். இனப்பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்று காணப்பட வேண்டுமானால் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் 2004
டெயிலி நியூஸ் பத்திரிக்கை சார்பாக சர்வகட்சிக் கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் நானும் கலந்துகொண்டேன். மாநாடு முடிந்ததன் பின்னர் என்னுடன் பேசிய லலித் அதுலத் முதலி, ஜெயவர்த்தனவே புலிப் பயங்கரவாதிகள் குறித்துப் பேசுமாறு தன்னிடம் கூறியதாகவும், அவர்கள் அழிக்கப்படுவது குறித்த அறிவித்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அவர் தன்னைக் கோரியதாகவும் கூறினார். நான் லலித்தின் வேண்டுகோளினை ஆசிரியர் மணிக் சில்வாவிடம் கூறினேன். அவர் அதனை பக்கச் செய்தியாக பத்திரிக்கையில் வெளியிட்டார்.
அன்றைய தலைப்புச் செய்தியும் நான் எழுதியது தான். அது ஜெயவர்த்தனவினால் அமைக்கப்படப் போவதாகக் கூறப்பட்ட இரு குழுக்கள் பற்றியது. அதுகுறித்து பின்னர் பார்க்கலாம்.
தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும், உதவிப் பாதுகாப்பு அமைச்சராகவும் ஜெயாரினால் முடிசூடப்பட்ட லலித் அதுலத் முதலி
மூன்று நாட்களின் பின்னர், 1984 ஆம் ஆண்டு, பங்குனி 23 ஆம் திகதி, வர்த்தகம் மற்றும் கப்பற்றுறைக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் லலித் அதுலத் முதலிக்கு தேசியப் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பதவியும், உதவிப் பாதுகாப்பு அமைச்சர் என்கிற பதவியும் மேலதிகமாக ஜெயாரினால் வழங்கப்பட்டது.