அலன் தம்பதிகளைக் கடத்திச்சென்ற ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு
இலங்கையில் தமிழர் மீதான யுத்தத்தில் இஸ்ரேலிய உளவுத்துறையினரின் பங்களிப்பு மற்றும் இஸ்ரேலிய இராணுவ வல்லுனர்களின் பயிற்சிகள், இவற்றினை இலங்கைக்கு ஒழுங்குசெய்து கொடுத்ததில் அமெரிக்கா ஆற்றிய பங்கு ஆகியன தமிழ் மக்களைப் பொறுத்தவரை அமெரிக்காவின் உண்மையான நோக்கம் குறித்த பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருந்ததுடன் அமெரிக்கா மீதும் அதன் வெளியக உளவுத்துறையான சி.ஐ.ஏ மீதும் கடுமையான வெறுப்பினையும் ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவின் நிதி உதவியோடு இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை தமிழ்ப் போராளி அமைப்புக்கள் கடுமையாக விமர்சித்து வந்ததுடன் இத்திட்டங்களில் பணியாற்றிவந்த அமெரிக்கர்கள் குறித்தும் கேள்வியெழுப்பி வந்தனர். இலங்கையில் பணிபுரியும் அமெரிக்கர்கள் அனைவரும் அதன் உளவுத்துறையான சி.ஐ.ஏ யின் முகவர்கள்தான் என்று அவர்கள் வாதிட்டு வந்தனர்.
ரூலிங் கம்பெனி ஒப் ஒஹையோ எனும் அமெரிக்கக் கம்பெனி ஒன்று நீர்வழங்கும் திட்டம் ஒன்றினை பருத்தித்துறையிலும், சாவகச்சேரியிலும் முன்னெடுத்து வந்தது. இத்திட்டத்தில் புதிதாகத் திருமணம் முடித்திருந்த இளவயதுத் தம்பதியினரான 30 வயது நிரம்பிய ஸ்டான்லி ப்றைசன் அலன் மற்றும் அவரது மனைவியான 28 வயது நிரம்பிய மேரி எலிசபேத் அலன் ஆகியோர் 1983 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து பணிபுரிந்து வந்தனர். குருநகர், கடற்கரை வீதியில் அமைந்திருந்த விருந்தினர் மாளிகையில் அவர்கள் தங்கியிருந்தனர்.
தமது அமைப்பின் பெயரை சர்வதேசத்தில் அறியச் செய்ய ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு கடத்தலில் இறங்கியது
ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் உளவுப்பிரிவிவான மக்கள் ஆய்வுப் பிரிவு, அலன் தம்பதிகள் குறித்து சில சந்தேகங்களைக் கொண்டிருந்தது. அலன் தம்பதிகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்த இந்தப் பிரிவு இவர்கள் சி.ஐ.ஏ யின் உளவாளிகளே என்று சென்னையில் தங்கியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைமைப்பிரிவிற்கு அறிவித்தது. தமது அமைப்பிற்கு சர்வதேச கீர்த்தியை ஏற்படுத்தும் பொருட்டு அவ்வமைப்பின் தலைவர்களான பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன், மணி மற்றும் ரமேஷ் ஆகியோர் திட்டம் ஒன்றினை வகுத்தனர். அதன்படி அலன் தம்பதிகளைக் கடத்துவதென்றும், அவர்களை விடுவிக்கவேண்டுமானால் பெருந்தொகைப் பணத்தினைக் கப்பமாகக் கோருவதென்றும், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமது அமைப்பின் உறுப்பினர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நிபந்தனை விதிப்பதென்றும் முடிவெடுத்தனர்.
கடத்தலுக்கான உத்தரவை இட்ட டக்ளஸ் தேவானந்தா
திட்டத்தினைச் செயற்படுத்தும் பொறுப்பு ஈ.பி.ஆர். எல்.எப் அமைப்பின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்திடம் (பி.எல்.ஏ) ஒப்படைக்கப்பட்டது. இராணுவப் பிரிவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த தனது உறுப்பினர்களிடம் இத்திட்டத்தினைச் செயற்படுத்துமாறு பணித்தார். யாழ்ப்பாணப் பிரிவும் இதனை நேர்த்தியாகச் செய்தது. வைகாசி 10 ஆம் திகதியன்று இரவு 7 மணிக்கு சில இளையவர்களை அலன் தம்பதிகள் தனியாக இருக்கின்றார்களா என்று பார்த்துவர அனுப்பியது ஈ.பி.அர்.எல்.எப் இன் இராணுவப் பிரிவு. அலன் தம்பதிகளின் வீட்டுக் கதவினைத் தட்டிய இளையவர்கள் தாம் நூலகத்திற்கான நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினர். நிதியுதவி செய்ய முன்வந்த அலன், அவர்களை மறுநாள் வருமாறு கேட்டுக்கொண்டார்.
இளையவர்கள் அங்குஇருந்து அகன்ற இரு மணித்தியாலங்களின் பின்னர் அலன் தம்பதிகள் படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவர்களது வீட்டில் பணிபுரிந்தோர் இரவுணவை அருந்திக்கொண்டிருக்க, ஈ.பி.ஆர்.எல்.எப் இராணுவப்பிரிவின் உறுப்பினர்களான ரெக்ஸ், மோகன், குமார், இந்திரன் மற்றும் ரோகன் ஆகிய ஐவரும் அலன் தம்பதிகள் தங்கியிருந்த விடுதியின் பின்கதவினால் உள்நுழைந்து பணியாளர்கள் இருவரையும் அருகிலிருந்த அறை ஒன்றினுள் கட்டிப்போட்டனர். பணியாளர்களை சத்தம் எழுப்பவேண்டாம் என்று மிரட்டிய ஆயுததாரிகள், மறுநாள் காலை விடிந்தபின்னர் அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட விடயம் குறித்து பொலீஸாரிடம் தெரியப்படுத்துமாறு கூறினர். பின்னர், அலன் தம்பதிகள் படுத்திருந்த அறையினருகில் சென்ற அவர்கள் கதவைத் தட்டவும் ஸ்டான்லி கதவினைத் திறந்தார். மேரியும் அவரின் பின்னால் கதவினருகில் வந்து நின்றார். தாம் வைத்திருந்த ஆயுதங்களை அலன் தம்பதிகளுக்கு நேரே பிடித்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள், உடனடியாக ஆடைகளை அணிந்துகொள்ளுமாறு மிரட்டினர். பின்னர் அவர்களின் கைகளையும் கண்களையும் கட்டிப்போட்டனர்.
கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் அலன் தம்பதிகளை வீட்டின் முன்வாசலால் இழுத்துச் சென்ற அவர்கள், பிக்கப் ரக வாகனம் ஒன்றின் பின்னிருக்கையில் அவர்களை அடைந்தபடி மறைவிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றனர்.
இச்செய்தி குறித்து டெயிலி நியூஸ் பத்திரிகையில் எழுதுமாறு நான் பணிக்கப்பட்டேன். லேக் ஹவுஸ் நிறுவனத்திற்கென்று தரமான நிருபர்களும், புகைப்பிடிப்பாளர்களும் யாழ்ப்பாணத்தில் இருந்தார்கள். ஆனால், ஆங்கிலத்தில் அவர்கள் புலமை வாய்ந்தவர்களாக இருக்கவில்லை. ஆகவே, அவசரமான செய்திகளை தொலைபேசியில் அவர்கள் என்னிடம் கூற நான் அதனை ஆங்கிலத்தில் எழுதிக் கொள்வதென்பதே வழக்கமாக இருந்து வந்தது. அத்துடன், கொழும்பிலிருந்து எனக்குக் கிடைக்கும் தகவல்களையும் செய்தியுடன் இணைத்துக்கொள்வேன்.
ஜெயவர்த்தனவுக்கு கடிதத்தில் நிபந்தனைகளை அனுப்பிய ஈ.பி.ஆர்.எல்.எப்
வைகாசி 10 ஆம் திகதி, வியாழக்கிழமை அன்று அலன் தம்பதிகள் கடத்தப்பட்டிருந்தனர். வைகாசி 11 ஆம் திகதி, வெள்ளி காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் அரசாங்க அதிபரின் பொதுமக்கள் தொடர்பாடல் அதிகாரியைச் சந்தித்த சிறுவன் ஒருவன் அவரிடத்தில் காகித உறை ஒன்றைக் கொடுத்துவிட்டுச் சென்றான். அதில் மிக அவசரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த உறையினுள் ஜனாதிபதி ஜெயவர்த்தனவுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருப்பதை அரசாங்க அதிபர் தேவநேசன் நேசைய்யா கண்ணுற்றார்.
அக்கடிதத்தில் மூன்று செய்திகள் அடக்கப்பட்டிருந்தன. முதலாவது செய்தி அலன் தம்பதிகளை மக்கள் விடுதலை இராணுவம் கடத்திச் சென்றிருக்கிறது என்பது. அவர்கள் சி.ஐ.ஏ யின் முகவர்கள் என்பதாலேயே கடத்தப்பட்டுள்ளதாக அது கூறியது.
இரண்டாவது, அவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமானால் அரசாங்கம் நிறைவேற்றவேண்டிய நிபந்தனைகளை கூறியிருந்தது.
முதலாவது நிபந்தனை, அரசால் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருக்கும் 20 போராளிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது. இந்த 20 பேரின் பெயர்களையும் அது குறிப்பிட்டிருந்தது. முதலாவது பெயர் வண பிதா சிங்கராயர். இரண்டாவது பெயர் நிர்மலா நித்தியானந்தன். ஏனையவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயற்ப்பாட்டாளர்கள்.
இர்ண்டாவது நிபந்தனை 50 மில்லியன் பெறுமதியான தங்கம் கப்பமாகத் தரப்பட வேண்டும் என்பது.
மூன்றாவது செய்தி யாதெனில் தமது நிபந்தனைகளை முழுவதுமாக இலங்கையரசாங்கம் நிறைவேற்றத் தவறுமிடத்து அலன் தம்பதிகளுக்கு என்ன நடக்கும் என்பது. அதாவது, தமது நிபந்தனைகள் வெள்ளி பிற்பகல் 12 மணியிலிருந்து 72 மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்படாது போனால் அலன் தம்பதிகள் ஆறு மணித்தியால இடைவெளிக்குள் தம்மால் கொல்லப்படுவார்கள் என்பது.
தனது கடத்தலுக்குள் தமிழ்நாட்டு அரசாங்கத்தை இழுத்துவிட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு
இந்த நிபந்தனைகளுள் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது விடுவிக்கப்படும் 20 கைதிகளும், 50 மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தங்கமும் தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் மக்கள் விடுதலைப் படை அவர்களையும் தங்கத்தையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் என்பதும் தான்.
அலன் தம்பதிகளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட பிக்கப் வாகனம் காங்கேசந்துறை சேத்தான்குளம் பகுதியில் அநாதரவான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தப்பட்ட தம்பதிகள் தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதனையே இது காட்டியது.
இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கத்தை இணைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பு நிபந்தனை வெளியிட்டிருந்தது முதலமைச்சர் ராமச்சத்திரனை சினங்கொள்ள வைத்தது. மேலும், இந்தியாவைப் பொறுத்தவரையில் இக்கடத்தல் சம்பவம் அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தது. ஜெயவர்த்தன, பிரேமதாச, லலித் ஆகியோர் அமெரிக்காவுக்கு நிலைமையினை விளங்கப்படுத்தியிருந்தனர். அலன் தம்பதிகளின் நிலைமை குறித்து அமெரிக்கா கவலைப்படத் தொடங்கியது.
லலித் அதுலத் முதலியைச் சந்தித்த அமெரிக்க தூதர், அலன் தம்பதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தத் தேவையான அனைத்தையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பயங்கரவாதச் செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் வன்முறைகளை தனது அரசாங்கம் கண்டிப்பதாகவும் அமெரிக்கத் தூதரிடம் லலித் கூறினார். மேலும், அப்பாவி இளம் தம்பதிகளை பாதுகாப்பாக விடுவிக்கத் தேவையான அனைத்தையும் தமது அரசாங்கம் செய்யும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவையும் தமிழ்நாட்டு அரசாங்கத்தையும் அவமானப்படுத்த அலன் தம்பதிகளின் கடத்தலினைப் பாவித்த இலங்கையரசு
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சத்வாலை தனது அலுவலகத்திற்கு அழைத்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ் .ஹமீத், அலன் தம்பதிகள் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு ஏதேனும் தொடர்பிருக்கின்றதா என்று வினவினார். ஜெயவர்த்தன மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவரான சத்வால் பின்னாட்களில் என்னுடன் பேசும்போது, ஹமீத் தன்னிடம் கடத்தலுடன் தமிழ்நாட்டிற்குத் தொடர்பிருக்கிறதா என்று வினவியபோது தாம் மிகவும் சிறுமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகக் கூறினார். தமிழ்ப் போராளிகளால் தாம் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.
சத்வாலை அவமானப்படுத்தியதுடன் ஹமீத் நின்றுவிடவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சரான நரசிம்ம ராவைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட அவர், அலன் தம்பதிகளின் கடத்தலில் தமிழ்நாட்டு அரசாங்கம் செய்திருக்கும் பங்களிப்புக் குறித்து தமக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த ராவ், தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கு இக்கடத்தலுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறினார். ராவிடம் பேசும்போது ஹமீத் பின்வருமாறு வினவினார், "தமிழ்நாட்டில் அதிகாரத்தில் உள்ள சிலருடன் பேசாது, தாம் கேட்கும் கைதிகளையும், தங்கத்தையும் தமிழ்நாட்டு அரசாங்கத்திடம் கையளியுங்கள் என்று கடத்தல்க்காரர்கள் கேட்பார்கள் என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்டார்.
கடத்தலில் தமிழ்நாட்டு அரசாங்கம் வகித்திருக்கும் பாகம் குறித்து இலங்கையரசாங்கம் இந்தியாவிடம் வினவியது பற்றி அறிந்துகொண்டபோது எம்.ஜி.ஆர் கொதித்துப் போனார். முட்டாள்கள், முட்டாள்கள் என்று அவர் வைதுகொண்டார். ஒரு வாரத்திற்கு முன்னர்தான் சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் அமெரிக்காவின் கொடியினை எரித்ததற்காக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பினர் சிலர் கைதுசெய்யப்பட்டிருந்தபோது, அவர்களை எம்.ஜி.ஆர் தலையிட்டு விடுவித்திருந்தார்.
சர்வதேசத்தின் கவனம் தம்மீது விழவேண்டும் என்பதற்காக எதையாவது செய்தாக வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அமெரிக்க தூதரகத்திற்கு மூன்று முச்சக்கர வண்டிகளில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் வந்திறங்கினர். தூதரக வாசலில் காவலுக்கிருந்த உத்தியோகத்தர்கள் நோக்கி ஓடிச்சென்ற ரமேஷ் அவர்களை நோக்கி தான் கொண்டுவந்திருந்த கமெராவை உயர்த்திக் காண்பித்தார். ஆரம்பத்தில் அதனை ஒரு துப்பாக்கியென்று எண்ணிய காவலாளிகள் அங்கிருந்து ஓடத் தொடங்கினர். அதனையடுத்து அமெரிக்கக் கொடியை கீழே இழுத்து வீழ்த்திய அவர்கள் அதற்குத் தீமூட்டினர். பொலீஸார் அவர்களைக் கைதுசெய்தபோதும் எம்.ஜி.ஆர் தலையிட்டு அவர்களை விடுதலை செய்திருந்தார்.
எம்.ஜி.ஆரின் பணிப்பில் கைதுசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்கள்
அலன் தம்பதிகள் கடத்தப்பட்டத்தைக் கண்டித்து அறிக்கையொன்றினை வெளியிட்ட எம்.ஜி.ஆர் அவர்கள் கடத்தப்பட்டதற்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லையென்றும் தெரிவித்தார். மேலும், அனைத்து ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களையும் உடனடியாகக் கைதுசெய்யும்படி தமிழ்நாடு பொலீஸ் அதிபரை எம்.ஜி.ஆர் பணிக்க, அவரும் அவர்கள் அனைவரையும் கைதுசெய்தார்.