ரஜீவ் வடிவமைத்த தில்லி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் கொலைகளைச் சாட்டாகப் பாவித்த ஜெயார்
பிரபாகரனின் அறிக்கையினை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கை உட்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பத்திரிக்கைகள் அதனை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்தன.
யாழ்ப்பாணத் தமிழர்களும், பொலீஸாரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக குற்றஞ்சாட்டி வந்தனர். அவர்களின் மரணச் சடங்குகளில் உரையாற்றிய பலரும் புலிகளை இக்கொலைகளுக்குக் காரணம் என்று மறைமுகமாக விமர்சிக்கத் தவறவில்லை.
இக்கொலைகளையடுத்து இலங்கை அரசும், இந்தியாவும் தமது அதிர்ச்சியையும், கவலையினையும் வெளியிட்டன. செய்தியாளர்களுடன் பேசிய ரஜீவ் காந்தி "சில தமிழ்த் தீவிரவாதிகள் ஏனைய தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறார்கள்" என்று ஆத்திரத்துடன் கூறினார். ஆனால், இக்கொலைகளை புலிகளே செய்தார்கள் என்று முடிப்பதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். ஆனால், கொழும்பில் இலங்கையரசு இக்கொலைகளைப் புலிகளே செய்ததாக வெளிப்படையாகவே கூறத் தொடங்கியிருந்தது.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி, மலினப்படுத்துவதற்கான பிரச்சாரத்தில் ஜெயவர்த்தன இறங்கினார். தமிழீழ விடுதலை அமைப்புக்களை, "ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய வந்திருக்கும் பயங்கரவாதிகள்" என்று அவர் அழைத்தார்.
அதுலத் முதலியோ இன்னொரு படி மேலே சென்று புலிகளை "கொலைக்குழு " என்று வர்ணித்தார். ரஜீவ் காந்தியினால் உருவாக்கப்பட்ட தில்லி ஒப்பந்தத்திற்கு பெளத்த துறவிகளும், எதிர்கட்சியினரும் கொடுத்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட ஜெயவர்த்தன முயன்று வருகையில், அதற்கான ஆயத்தங்களை லலித் அதுலத் முதலி செய்யத் தொடங்கியிருந்தார். அந்நாட்களில் பிரதான பெளத்த துறவிகளும், சிங்கள இனவாதக் கட்சிகளும் இணைந்து சிங்கள இனத்தையும் நாட்டையும் காப்பதற்கான தேசிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவும் முக்கிய உறுப்பினராக இணைந்துகொண்டிருந்தார்.
தில்லி ஒப்பந்தத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று செயலில் இறங்கியிருந்த கொழும்பின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிக்கைகள் சிங்களவர்களின் அச்சமான மாகாண சபைகள் எனும் பேயிற்கு உயிர்கொடுத்து, ரஜீவ் காந்தி மாகாண சபைகளூடாக சமஷ்ட்டி ஆட்சியை இலங்கையில் கொண்டுவரப்போகிறார் என்றும், அதனூடாக நாடு இரண்டாக பிளவுபடப் போகின்றது என்றும் புலம்ப ஆரம்பித்தன.
மந்திரிசபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்காத போதும், புரட்டாதி 4 ஆம் திகதி கூடிய மந்திரி சபையில் ரஜீவின் தில்லி ஒப்பந்தம் குறித்து ஜெயவர்த்தன பேசினார். உடனடியாகப் பேசிய பிரேமதாச மாகாணசபைகளை அமைக்க விடமாட்டோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய லலித், அரசியல் தீர்வுகுறித்துப் பேசுவதற்கான சூழ்நிலை தற்போது நாட்டில் இல்லை என்று கூறினார். இவர்கள் இருவரையும் தொடர்ந்து மந்திரிசபையில் இருந்த ஏனைய இனவாதிகள் தமிழர்களுக்கு தீர்வு எதுவும் வழங்கப்படக் கூடாது என்று தம் பங்கிற்கு ஆர்ப்பரித்து அமர்ந்தனர்.
அன்று மாலையே இந்திய தூதர் டிக்ஷிட்டை தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான வோர்ட் பிளேசிற்கு அழைத்த ஜெயார் யாழ்ப்பாணத்தில் இரு ஜனநாயக அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டமையானது நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்றும் சிங்கள மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் முறையிட்டார். மேலும், தமிழர்களுக்கு அரசியல்த் தீர்வினை வழங்குவதற்கு முன்னர் பயங்கரவாதிகளை முற்றாகத் துடைத்தழிக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் தனது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ஆகவே, தனது இளைய சகோதரரும் இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஹெக்டர் ஜெயவர்த்தன தில்லியில் ரஜீவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என்று தமது அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக டிக்ஷிட்டிடம் தீர்க்கமாக ஜெயார் கூறினார். தில்லி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியல் யாப்பு மாற்றங்களும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பும், வழங்கப்படவிருக்கும் அதிகாரங்களும் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பிற்கு எதிரானது என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றையாட்சித் தன்மைக்கும் ஆபத்தானது என்றும், ஆகவே அவற்றினை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்று தமது அரசாங்கம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அன்று இரவு டிக்ஷிட்டுடன் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஹமீதும் ஜெயாரின் தீர்மானத்தை மீளவும் வலியுறுத்தினார்.
தான் வடிவமைத்த தில்லித் தீர்மானத்தை ஜெயவர்த்தன உதாசீனம் செய்து நிராகரித்தமை ரஜீவிற்கு கடுமையான எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே, உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு டிக்ஷிட்டடம் அவர் கூறினார். புரட்டாதி 7 முதல் 14 வரையான ஒருவார காலப்பகுதியில் தில்லியில் தங்கியிருந்த டிக்ஷிட், ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடனும் நீண்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.
கொழும்பு திரும்பிய டிக்ஷிட்டிடம் ரஜீவ் ஒரு செய்தியை அனுப்பினார். அதாவது, தில்லி ஒப்பந்தத்தினை மேலும் மெருகூட்டி, வரவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் தன்னை ஜெயார் சந்திக்கும்போது ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்று ரஜீவ் கோரியிருந்தார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் ஒன்று ரஜீவினால் வழங்கப்பட்டிருப்பது கண்டு ஜெயார் மகிழ்ச்சியடைந்திருந்தார்.