4. பாட்டி வடை சுட்ட கதை ------------------------------------------ சில கதைகளை ஆயிரம் தடவைகளாகக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றோம். சில நிகழ்வுகளும் திரும்ப திரும்ப நடந்து கொண்டேயும் இருக்கின்றன. மீண்டும் அந்தக் கதைகள் சொல்லப்படும் போது அல்லது அதே நிகழ்வுகள் நடக்கும் போது ஏதாவது ஒரு சின்ன மாற்றம் அல்லது திருப்பம் இருக்கும், இருக்காமல் கூட போகலாம். இந்தச் சில கதைகளும், நிகழ்வுகளும் எங்களின் வாழ்க்கைகளை விட்டு என்றுமே தூரமாகப் போவதில்லை என்பது ஆச்சரியம் தான். ஆனால் ஏராளமான கதைகள் முற்றாக எங்களை விட்டு நீங்கிவிட்டன. நான் சிறு வயதாக இருக்கும் போது அம்மாச்சி ஒரு கூனன் - கூனி என்னும் இருவரை வைத்து பல கதைகள் சொல்லியிருக்கின்றார். அந்தக் கதைகளை நான் பின்னர் வேறெங்குமே காணவில்லை. சல்லடை போட்டுத் தேடி இருக்கின்றேன், அவை அகப்படவேயில்லை. அந்தப் புகையிரத நிலையத்தில் வீட்டுக்காரர்கள் எல்லோரும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பக்கமாக இரண்டு சோடி தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன. நான் மறு பக்கமாக, அங்கே ஒரு சோடித் தண்டவாளங்கள் போய்க் கொண்டிருந்தன, நின்று கொண்டிருந்தேன். புகையிரத நிலைய மேடையில் மஞ்சள் கோடுகள் இரண்டு பக்கங்களிலும் மிக நேர்த்தியாக கீறப்பட்டிருந்தது. மஞ்சள் கோட்டை தாண்டி எவரும் நிற்கக்கூடாது என்று ஒரு அறிவுறுத்தல் எழுதியிருந்தார்கள். எட்டிப் பார்த்துக் கொண்டே மஞ்சள் கோட்டைத் தாண்டிவிட்டேன். 'என்ன பாயப் போகின்றீர்களா...........' என்று கேட்டுவிட்டு சிரித்தார்கள். புகையிரத நிலையத்தின் இந்தப் பக்கமாக போய்க் கொண்டிருந்த ஒரு சோடித் தண்டவாளம், மறுபக்கமாக போய்க் கொண்டிருந்த இரண்டு சோடித் தண்டவாளங்களுடன் நிலையத்தின் இரு முனைகளிலிருந்தும் சிறிது தூரத்தில் பின்னிப் பிணைந்து, பின்னர் இரண்டு சோடிகளாக பிரிந்து போய்க் கொண்டிருந்தன. 'தண்டவாளங்கள் சந்திப்பதில்லை............' என்ற தலைப்பில், ஏதோ ஒரு வடிவில், ஒன்றோ பலவோ வாசித்தது போல ஒரு ஞாபகம். டி. ராஜேந்திரரின் வசனமாகக் கூட இருக்கலாம். பல நல்ல உவமைகளும், சில வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட உவமைகளும் அவரது பாடல்களிலும், வசனங்களிலும் எப்போதும் இருந்தன. அடுக்கு மொழியில் தான் எழுதுவது என்று முடிவெடுத்தால் சில இடங்களில் சிக்கித் தவிப்பது தவிர்க்க முடியாதது. ஒரு புகையிரதம் மறு பக்கத்தில் வந்து நின்றது. அது நாங்கள் ஏற வேண்டியது இல்லை. சிட்னி நகர மையத்துக்குப் போவதற்காக நாங்கள் நின்று கொண்டிருந்தோம். மனிதர்கள் கண்டுபிடித்ததில், மனிதகுலத்தின் மொத்த வளர்ச்சியில் புகையிரதம் மிக மிக முக்கியமான ஒன்று. எவ்வளவு இலகுவாக ஒரு கூட்ட மக்களையும், பொருட்களையும் அது அள்ளிக் கொண்டு செல்கின்றது. ஒரு அராபியக் குதிரைக்கு, ஒரு காட்டு யானைக்கு இருக்கும் கம்பீரம் புகையிரதங்களுக்கு இருக்கின்றது. மேற்கு நாட்டவர்கள் நீராவியில் இயங்கும் இயந்திரங்களை உண்டாக்கி, அவற்றைக் கொண்டு கப்பல்களும், புகையிரதங்களும் செய்தார்கள்; அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னிருந்தே நாங்கள் நீராவியில் ஒரே மாவை இரண்டு தடவைகள் அவித்து புட்டு செய்து சாப்பிட்டோம் என்று சொல்லிச் சிரிப்பான் நண்பன் ஒருவன். இன்று அவன் போக்குவரத்து துறையில் பெரிய பொறுப்பில் இருக்கின்றான். உலகில் ஏறக்குறைய எல்லா பெரு நகரங்களிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் புகையிரத சேவைகள் திறம்பட இருக்கின்றன. ஆனால் நான் வாழும் லாஸ் ஏஞ்சலீஸ் நகரம் ஒரு விதிவிலக்கு. மிகவும் குறைந்த புகையிரத சேவைகளே லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இருக்கின்றன. ஒரு மிருகக்காட்சிசாலையில் அடைக்கப்பட்டு இருக்கும் அராபியக் குதிரைகள் போல, காட்டு யானைகள் போல இந்த நகரில் புகையிரதங்கள் சோம்பி நிற்கின்றன. ஒழுங்கான புகையிரதப் பாதைகளோ அல்லது விரிவான தடங்களோ இல்லை. ஆனால் இங்கு வாழும் ஒவ்வொருவரும் ஒரு வாகனங்கள் அல்லது இரு வாகனங்கள் என்று வைத்திருக்கின்றார்கள். தனித்தனியே பயணிக்கின்றார்கள். அதுவே சுதந்திரம், வசதி என்கின்றார்கள். உலகில் நல்லதொரு புகையிரதச் சேவையை எங்கு பார்த்தாலும் மனம் ஏங்குகின்றது. சிட்னி நகரின் மையத்தில் இருக்கும் உயர்ந்த சுழலும் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உணவகத்தில் முன்பதிவு செய்திருந்தார்கள். 80 அல்லது 82 வது தளத்தில் அந்த உணவகம் இருந்தது என்று நினைக்கின்றேன். அதற்கென்று தனியே உயர்த்தி இருந்தது. இரண்டு மணி நேரங்கள் மட்டுமே அங்கிருந்து சாப்பிடலாம். அங்கே வேலை செய்பவர்கள் பலரும் நேபாளத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். அவர்களை பார்க்கும் போதே அவர்கள் நேபாள மக்கள் என்று தெரிந்தது. அதில் ஒருவர் சரிதா தன்னுடைய பெயர் என்று அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் சரிதா என்ற பெயர் பயன்பாட்டில் இருக்கின்றது தானே என்று கேட்டார். இலங்கையிலும் நன்றாகவே இருக்கின்றது என்றேன். 'ஜூலி கணபதி' படம் நினைவில் வந்தது. சுழலும் 80 வது மாடியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் ஜெயராமால் தப்பித்திருக்கவே முடியாது. வானம் நிறைந்த மப்பும் மந்தாரமுமாக இருந்தது. உணவகம் சுழன்றாலும் ஈரமான மேகங்கள் எல்லா திக்கையும் மூடி வைத்திருந்தன. பின்னர் சிறிது நேரத்தில் 360 பாகைகளில் சில பாகைகளில் மேகங்கள் கலைந்தன. சிட்னி நகரமும், அதன் முடிவில்லாக் கடலும் அந்த வெளிகளினூடே தெரிந்தன. ஊரில் சிறு வயதுகளில் வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து நான் பார்த்த அதே நீலக் கடல் தான். 15 நிமிடங்கள் இன்னும் இருக்கும் போதே உங்களின் நேரம் முடிந்து கொண்டு வருகின்றது என்று சரிதா வந்து ஞாபகமூட்டினார். இப்பொழுது அவரைப் பார்க்கும் போது 'மலையூர் மம்பட்டியான்' படம் ஞாபகத்திற்கு வந்தது. திரும்பி வரும் போது வங்கியில் ஏதோ எடுக்க வேண்டும் என்று போனார்கள். முன்பு சிட்னியில் திருட்டுப் பயம் மிக அதிகம். தாலியோ அல்லது பொன் நகைகளோ பலரும் அணிவதில்லை. முக்கியமாக புகையிரதங்களில் அணிவதேயில்லை. குறிப்பாக சில புகையிரத நிலையங்களில் இழுத்து அறுத்து விடுவார்கள் என்று சொன்னார்கள். அப்படிச் செய்பவர்கள் எந்த எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் சொன்னார்கள். வீட்டுக்கு வந்து கூட திருடுவார்கள் என்றனர். புராணக் கதைகள் போல சில திருட்டுச் சம்பவங்களை விபரித்திருக்கின்றார்கள். அப்பாவித் தேவர்களிடம் அசுரர்கள் அடித்துப் பறிப்பது போல அந்தக் கதைகள் அமைந்திருந்தன. ஆதலால் பெரும்பாலான பொன் நகைகள் வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகங்களிலேயே இன்றும் இருக்கின்றது. உலகச் சந்தையில் தங்கத்தின் விலை எக்கச்சக்கமாக ஏறியிருப்பதால் எம்மவர்களில் பலர் மிகவும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தும் இருக்கின்றார்கள். இப்பொழுது திருட்டுப் பயம் ஓரளவு குறைந்திருக்கின்றது என்றார்கள். அதற்கான காரணத்தை வேறொரு தலைப்பில் பின்னர் எழுதுகின்றேன். திரும்பி வரும் போது புகையிரதத்தில் இரண்டு வரிசைகளில் எதிர் எதிராக அமர்ந்திருந்தோம். கொஞ்சம் சத்தம் அதிகமாகவே கதைத்தும், சிரித்தும் கொண்டிருந்தோம். சில வருடங்களின் முன் அங்கு ஆஸ்திரேலிய - இந்திய பிணக்கு இப்படியான ஒரு நிகழ்வாலேயே ஆரம்பமானது என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அது பொய்யான தகவலாகவும் இருக்கலாம். திடீரென்று முன்னால் இருந்த உறவினர் யாரோ அவருக்கு பின்னால் இருந்து ஒருவர் ஸ்பிரே அடிக்கின்றார் என்றார். அங்கே பார்த்தேன். ஒரு இளைஞன் குனிந்து கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் அந்த உறவினர் மீண்டும் அதையே சொன்னார். வங்கியில் இருந்து எடுத்த பொருட்கள் அவரிடமேயே இருந்தது. 'அய்யோ............ ஷ் ஷ் என்று ஸ்பிரே அடித்து, எங்களை எல்லாம் மயக்கிப் போட்டு, எல்லாவற்றையும் கொள்ளையடிக்கப் போகின்றான்.........' என்று அவர் சத்தமாகவே சொன்னார். இந்தப் பக்கத்தில் இருந்த நானும், என் மனைவியும் அந்த இளைஞனைப் பார்த்தோம். அவர் கையெடுத்து கும்பிட்டுக் கொண்டே 'நானும் தமிழ் தான்..............' என்றார். கனடா டொரண்டோவில் இருந்து சிட்னிக்கு மருத்துவ படிப்பிற்காக வந்திருக்கும் இளைஞன் அவர். அன்றைய வகுப்புகள் முடிந்து அவரது தங்குமிடம் நோக்கிப் போய்க் கொண்டிருந்தார். அவருடைய அலைபேசியையும், மடிக்கணனியையும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்திருக்கின்றார். மன்னித்துக் கொள்ளுங்கள், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று சில தடவைகள் அந்த இளைஞனிடம் கேட்டுக்கொண்டோம். 'பரவாயில்லை, இலங்கைத் தமிழைக் கேட்பதே நல்ல சந்தோசமாக இருக்கின்றது..........' என்று அப்பாவியாக சிரித்தார் அந்த எதிர்கால மருத்துவர்.