கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வெள்ளைப் பருத்தி சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டி உடன் ஒரு உள்ளூர் வாலிபனாக பார்வைக்கு தோன்றினாலும், அவரது முகம் இன்னும் வெளிநாட்டு நிலங்களின் புத்துணர்ச்சியை பறைசாற்றிக் கொண்டுதான் இருந்தது. அது அவனால் மறைக்க முடியவில்லை. மற்றும் அவனது இதயம், தன் தாய் தந்தை பிறந்த மண்ணின் வாசனையைத் தேடி அலைந்து கொண்டு இருந்தது. முதலில், அவன் தமிழ் கடவுள் முருகனின் முன் உண்மையாக, பக்தியாக, பண்பாடாக வழிபடத் தான் அங்கு வந்தான். என்றாலும் பட்டு, நகைகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பிரகாசமான, 'அலங்கார கந்தனின்' மீது கண்கள் பதிந்த பொழுது அவன் தடுமாறினான். அந்த தடுமாற்றத்தில் தான், கூட்டத்தில், தன் தோழிகளுடன் நின்றிருந்த ஒரு இளம் பெண், அலங்கரிக்கப்பட்ட தெய்வத்தைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கும் அளவிற்கு அழகைக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப் பட்டான். கோயில் விளக்குகளின் கீழ் அவளுடைய சேலை மின்னியது, அவளுடைய கண்ணாடி வளையல்கள் ஒவ்வொரு அசைவிலும் ஒலித்தன, ஒளிர்ந்தன. அவளுடைய கரும் கூந்தலில் மல்லிகைப் பூக்கள் காற்றோடு நடனமாடின. மேளம் மற்றும் கோயில் மணிகளின் சத்தங்களுக்கு மேலே அவளுடைய சிரிப்பு மின்னியது. அருணுக்கு, அவள் வெறும் பெண் அல்ல - அவள் "அலங்காரக் காந்தை" யாகத் தோன்றினாள்! அன்று மாலை முதல், அருணின் உள்ளம் அவளை அமைதியாகத் தேடி அலையத் தொடங்கியது. அவன் இப்ப அலங்கார கந்தனுக்காக அல்ல, மாறாக அலங்கார காந்தைக்காகத் நல்லூர் வரத் தொடங்கினான். முன்னழகும் பின்னழகும் கண்ணிலே நிற்குதே முடியழகும் இடையழகும் மனதைக் கலக்குதே உன்னழகு ஈடில்லா தனியழகு அல்லவா மன்னவனின் சன்னிதியில் என்னையே மறந்தேனே! சிங்கார புன்முறுவல் சிரிப்பை உதிர்த்தவளே சிவப்புநிற பட்டாடை தக்கபடி உடுத்தவளே பூமாலை சூடிய அலங்காரக் காந்தையே கண்திறந்து பார்க்காயோ கருணை காட்டாயோ !! திருவிழாவின் பத்தாம் நாள் இன்று. நல்லூரைச் சுற்றி பல பல குளிர்பானங்கள், வளையல்கள், சேலைகள் மற்றும் இனிப்புகளால் கடைகள் நிரம்பி இருந்தது. முருகன் வள்ளி தெய்வானையுடன் பொன் மஞ்சத்தில் வரும் ஆகஸ்ட் ஏழாம் நாள். இந்த 7 ஆம் எண் மதத்தில் - இஸ்லாத்தில் 7 வானங்கள், கிறிஸ்தவத்தில் 7 படைப்பின் நாட்கள், இந்து மதத்தில் 7 சக்கரங்கள் எனவும், இயற்கையில் - வாரத்தில் 7 நாட்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 இசைக் குறிப்புகள் எனவும் மற்றும் வரலாற்றில் - உலகின் 7 அதிசயங்கள் எனவும் தோன்றுவதால், பல மேற்கத்திய மற்றும் கிழக்கு கலாச்சாரங்களில் 7 என்ற எண் ஒரு அதிர்ஷ்ட எண்ணாகக் கருதப்படுகிறது. அருண் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துபவன் அல்ல. என்றாலும், இன்று எனோ அது அவனுக்கு ஒரு உற்சாகம் கொடுத்தது. அந்த உற்சகம் கொடுத்த தைரியத்தில், அவன் அவளை அணுகி, "எக்ஸ்க்யூஸ் மீ [Excuse me]" என்றான். பச்சை நிற சுடிதாரில் பச்சைகிளி போல் போஸ் [Pose] கொடுத்துக் கொண்டு, வெள்ளைக் கொடி ஒன்று படர்ந்து, நுனியில் பூக்கள் மலர்ந்தது போல, கொண்டையில் மல்லிகை மாலை சூடிக்கொண்டு, தன் தோழிகளுடன் நின்ற அவள் கண்களில் ஒரு கவர்ச்சி தீபம் எரிந்து கொண்டு இருந்தது. அவள் சற்று தலை நிமிர்ந்து, மென்மையான வார்த்தைகளில் ”சொல்லுங்க… ‘ப்ளீஸ் [Please]’ .. என்ன வேணும்?” என்றாள். அந்த ‘ப்ளீஸ்’ அப்படி ஒரு மென்மை. சினிமா காதல் காட்சியாக… காடு முழுக்க ஆள் உயரக் கம்பி மத்தாப்புகளை நட்டுவைத்து ஒரே நேரத்தில் பற்ற வைத்தது போல் அவன் மனதுக்குள் அத்தனை பிரகாசம்.”ஐ’யம் [I am] அருண் ” என்றான். அவள் கண்களால் ஒரு வித வலை வீசியபடி நான் ”ஆரணி” என்றாள் தயங்கியபடி. பெண்களின் பெயரை அந்தப் பெண்களே உச்சரிக்கக் கேட்கும் போது அது இன்னும் அழகாகிவிடுகிறது! அது மட்டும் அல்ல, ஆலய வளவில், மாகாளி ; பார்வதி போன்ற இறைவிகளின் பெயரைக் கொண்ட அவளில், மேலும் ஒரு தனி விருப்பமும் நம்பிக்கையும் அவனுக்குத் தானாக மலர்ந்தது ”நாம் ரியோ [Rio] வுக்கு போகிறோம், நீங்களும் இணையலாம். ஆறுதலாக அங்கு ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்வோம், நீங்கள் பிரீ [free] என்றால்? எங்களுடன் வரலாம்" என்றாள், எந்த தயக்கமும் இன்றி, இதமான வரவேற்பு புன்னகையுடன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும் கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/31263916889923550/?