இது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..................... https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.html அம்மனும் அமிர்தமும் காட்சி 1 (அமிர்தவல்லி பாட்டி தரையில் அமர்ந்திருக்கிறார். பாட்டியின் மகள் பார்வதி கையில் வேலையுடன் அவசரத்துடன் அங்கும் இங்கும் ஓடிகிறார். பாட்டியின் பேத்தி லக்க்ஷனா மொபைல் போனை நோண்டியபடி இருக்கிறார். வீட்டு போன் அடிக்கின்றது.) அமிர்தம்: யாராவது அந்த போனை எடுங்கோவன். (லக்க்ஷனாவை நோக்கி) இவள் ஒருத்தி காதுக்குள்ள ஒன்றை போட்டுவிடுவாள். எங்கட காலத்தில காது கேட்காவிட்டால் மிஷின் போடுவினம், இப்ப காது கேட்கக்கூடாது என்று போடினம். பார்வதி: (கொஞ்சம் அதட்டலாக) அது சும்மா சும்மா அடிக்கும், எடுக்கத் தேவையில்ல. அமிர்தம்: யாரோ ஒரு ஆள் எங்கட நம்பரை தேடி எடித்து அடிக்கிறான், எடுக்காமல் விடுகிறது மரியாதை இல்லை. நாலு சனத்தை மதிச்சு பழகவேண்டும். இப்ப சனமும் இல்ல, சாத்திரமும் இல்ல, ஆத்திரம் மட்டும்தான் எல்லாரிட்டயும் இருக்குது. லக்க்ஷனா: (காதிலிருந்து கழட்டியபடி) அம்மாச்சி, ம்ம்ம்…........ இப்பிடித்தான் நீங்கள் ஒருவனை மதிச்சு, அவனும் எறும்புக்கு மருந்து அடிக்க வந்து, இப்ப இந்த தெருவில ஒரு வீட்லயும் எறும்பே இல்ல. எல்லா எறும்பும் எங்கட வீட்லதான் குடியிருக்கிது. பார்வதி: நான் அவனோட எவ்வளவு சண்டை போட்டன்................... அவன் கடைசியா உங்கட வீட்ல யாருக்கோ சர்க்கரை வியாதி இருக்கு, எறும்பு இந்த வீட்டைவிட்டு போகவே போகாது என்று சாபம் போட்டுவிட்டு போனான். அமிர்தம்: வயசு போனா எல்லாருக்கும் அது வரும். சொல்லிக்காட்டத் தேவையில்ல. நாங்கள் என்றாலும் நல்லா ஓடியாடி உழைச்சோம்......... இப்பத்தான் இது எல்லாம் வருது............ இவ்வளவு நாளும் கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்பிடியே இருந்தனாங்கள்தானே. பார்வதி: நான் ஏன் சொல்லிக்காட்டிறன்? வந்தவனுக்கு தேவையில்லாத வீட்டுக் கதைகளை சொல்லி, அவன்தான் வாசலில நின்று எல்லாருக்கும் நியூஸ் வாசிச்சு விட்டுப்போனவன். அமிர்தம்: (மெல்ல எழுந்தபடி) லக்க்ஷனா, அந்தக் கண்ணாடியை எடுத்து தா பிள்ளை. ஏதாவது நியூஸ் பார்ப்பம். உறவுக்கு பகை கதை என்று என் கதை ஆயிட்டுது. (லக்க்ஷனா காதில் விழாததால் அசையாமல் இருக்க, பார்வதி கண்ணாடியை எடுத்துக்கொடுக்கிறார்.) அமிர்தம்: (கண்ணாடியை வாங்க்கிக்கொண்டே) நான் என்ரை பேத்தியைத்தானே கேட்டனான்................ பார்வதி: அவவின்ட கண்ணாடியையே நான் தான் தேடவேண்டும். இந்த வீட்ல மனிசரையும் அவை அவையின்ட சாப்பாட்டுக் கோப்பையையும் தவிர மற்றதெல்லாம் மறைந்து மறைந்து தோன்றும். ஒரு நாளுக்கு நானும் இப்படியே மறைந்து போகிறன்............... அமிர்தம்: (சிரித்தபடியே) அவசரப் படாத மகளே, மனிசர் மறைந்தா திரும்ப தோன்றுவினம் என்று உறுதியா சொல்ல முடியாது............. நீ வேற புண்ணியம் செய்தவள்.............. இல்லாட்டி எனக்கு மகளாக பிறந்திருப்பியே? (பார்வதி காதில் வாங்காமல் செல்கிறார். அமிர்தம் எழும்பி பேப்பரை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறார்.) அமிர்தம்: கடைக்கு போன பெண் கடைசிவரை திரும்பவில்ல................... எப்படி திரும்பும்? வீட்ல அதுக்கு என்ன கொடுமையோ? எங்கயும் கிணத்திலயோ குளத்திலயோ குதிச்சு இருக்குமோ................... சீச்சீ, அப்படியெல்லாம் இருக்காது, எல்லாருக்கும் நீச்சல் வேற இப்ப தெரியும். நான் தான் ஒன்றையும் பழகாமல் இருந்திட்டன். லக்க்ஷனா: அம்மாச்சி, அடுத்த வரியையும் படியுங்கோ. அமிர்தம்: காரியச்செவிடு என்று சொல்லுறது, கொம்மா இவ்வளவு சத்தம் போட்டும் தவம் கலையாமல் இருந்தாய். ம்ம்ம்…….அடுத்த வரியில என்ன இருக்குது…பக்கத்து தெருவில பையனும் மிஸ்ஸிங் ஆச்சரியக்குறி ஆச்சரியக்குறி. இதென்னடி ரெண்டு நியூஸை கலந்து போட்டிருக்கிறாங்கள். (பார்வதி உள்ளே வருகிறார்.) பார்வதி: பாட்டியும் பேத்தியும் இப்படியான கதை என்றால் சிறப்பாக ஆராய்ச்சி செய்வீங்களே. அது ரெண்டு கதை இல்ல, ஒரு கதைதான். ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு ஓடியிட்டுதாம். அமிர்தம்: வேலியில இருக்கிற கதியால இழுத்துக்கொண்டு ஓடுகிற மாதிரி சாதாரணமாய் சொல்லுகிறாய். லக்க்ஷனா: அதொன்றும் அப்படியில்ல, அதுகள் விரும்பியிருக்கும், வீட்டுக்காரர் எதிர்த்திருப்பினம், வேற என்ன வழி இருக்குது? அமிர்தம்: என்னடி பிள்ளை, ஆ ஊ என்றா ஓடிறம் மறையுறம் என்று பீதியை கிளப்பிகிறீயள். ஒலிம்பிக் பக்கம் போய் ஓடுறதுதானே, பதக்கமும் கிடைச்ச மாதிரி.................... அதென்னடி பிள்ளை தணலை அள்ளி தண்ணிக்குள்ள கொட்டின மாதிரி ஒரு சத்தம் வருது. லக்க்ஷனா: உங்கட மகள் தான் மூச்சை புசுபுசுவென்று விடுகிறா. பார்வதி: தணலை தள்ளி தலையில கொட்டுங்கோ. பார்த்துப் பார்த்து வளர்த்துவிட, அவை ஓடிவினமாம், இவை பதக்கத்தோட நிற்பினமாம். பிள்ளையளுக்கு நல்ல புத்திமதி சொல்லுறத விட்டிட்டு, அதுகளோட சேர்ந்து கூத்து நடக்குது இங்க. அமிர்தம்: நான் எங்கயடி கூத்தாடிறன், சரியா நடக்ககூட முடியிதில்ல, முட்டி வாதம் வந்திட்டுது போல. பார்வதி: சும்மா கதையை மாத்தாதேங்கோ. டொக்டரிட்டை போனா, நீங்க நல்ல சுகமாக இருக்கிற மாதிரியும், டொக்டருக்குத்தான் ஏதோ வருத்தம் மாதிரியும் கதைக்கிறது. நீங்கள் சொல்லிச்சொல்லியே அந்தாளுக்கு இப்ப ஏதோ வந்துட்டுதாம். அமிர்தம்: அடியே, அந்தாளுக்கு வருத்தம் முதலே இருந்தது. நான் ஆட்களை பார்த்தவுடனேயே அப்படியே சொல்லிவிடுவன். அந்தாளுக்கு மூச்சு வாயாலயும் பேச்சு மூக்காலயும் வந்துகொண்டிருந்தது. பார்வதி: ஓம் ஓம், எல்லாரையும் நெளிச்சு இப்படியே நாக்கால மூக்கை தொடுங்கோ. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் சனங்கள் எங்களை பழிக்கிறமாதிரி நடந்துவிடும். அமிர்தம்: அம்மா தாயே, நான் இனி ஒன்றும் சொல்ல வரவில்ல. பிறகு என்னாலதான் இப்படி எல்லாம் நடந்தது என்று சொல்லவும் வேண்டாம். சரி, மெதுமெதுவா இந்த கோயிலுக்கு ஒருக்கா போட்டு வாறன். (தொடரும்.......................)