2002ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை, சமீபத்தில் ஏற்பட்ட சில விவாதங்களின் பின்னணியில் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். அன்று விடுதலைப் புலிகள் வழங்கிய பட்டங்கள் குறித்தும், அவர்கள் இல்லாத இன்றைய காலத்தில் வழங்கப்படும் பட்டங்கள் குறித்தும் சமீபத்தில் யாழ் கருத்துக்களத்தில் சிலர் ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தனர். அந்த விவாதத்தில் நான் பார்வையாளனாக அமைதியாக இருந்தேன். ஆனால் யாழ் இணையத்தில் மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி நினைவுநாள் அறிவிப்பைப் பார்த்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த ‘வெண்புறா’ திட்டம் குறித்த தகவல், இந்நினைவுகளை மீண்டும் எழுப்பியது. தாயகத்தில் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், காந்தி நிலையம், குருகுலம், இனியவாழ்வு இல்லம், வெற்றிமனை, பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு மையங்கள், முன்பள்ளிகள், தொழில்சார் பயிற்சிநிலையங்கள், சத்துணவு நிலையங்கள் போன்ற பல சமூகநலத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. அவற்றில்கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால்களைப் பொருத்தும் ‘வெண்புறா’ திட்டமும் ஒன்றாக இருந்தது. இத்திட்டங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் இயங்கி வந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகக் கிளைகளுக்கு, அந்தந்த நாடுகளில் உள்ள கிளைகளின் விருப்பத்திற்கேற்ப பொறுப்பளிக்கப்பட்டன. நான் வசித்த யேர்மனியில், உரிய நேரத்தில் விண்ணப்பம் அனுப்பப்படாத காரணத்தால், யேர்மனிக் கிளைக்கு மன்னார் மாந்தை மேற்கு குடியேற்றத் திட்டத்துடன்‘வெண்புறா’ திட்டமும் ஒதுக்கப்பட்டது. ஆனால் ‘வெண்புறா’ திட்டத்தில் யேர்மனிக்கிளைத் தொண்டர்களுக்கு ஆரம்பத்தில் பெரியளவில் ஆர்வம் இருக்கவில்லை. அப்போது வன்னியில் அலுமினியத் தகரத்தில் செய்யப்பட்ட, மடிக்க முடியாத செயற்கைக்கால்களே தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அவற்றுடன் இயல்பான நடை சாத்தியமில்லாது, இழுத்து இழுத்தே நகரவேண்டியிருந்தது. மாற்று வழிகளை ஆராய்ந்தபோது, யேர்மனியத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பைபர்கிளாஸ் செயற்கைக் கால்களை அங்கு அறிமுகப்படுத்துவது, சாத்தியப்படுமா என்ற யோசனை எழுந்தது. ஆனால் இது செலவான முயற்சி. மூலப்பொருட்கள், பயிற்சி, நிபுணத்துவம் ஆகியவை இதற்கு அவசியம். இந்த விவகாரம் யேர்மனி தமிழர் புனர்வாழ்வுக் கழக கிளைப் பொறுப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது முயற்சியால், இந்தத் துறையில் நிபுணரான ஹொல்கர் என்பவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். ஒரு யேர்மனியரை வன்னிக்கு அழைத்துச் செல்வது, அதற்காக சிறீலங்கா அரசின் அனுமதி பெறுவது, குறைந்தது ஒருமாதம் அங்கே தங்கி பயிற்சி வழங்குவது இவை அனைத்தும் போர்நிலைச் சூழலில் பல அபாயங்களைக் கொண்டிருந்தன. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் இருந்தது. எனவே நாட்டில் அமைதியான சூழல்உருவான பின் இந்த முயற்சியை நடைமுறைப்படுத்துவோம் என்று முடிவு செய்து, இடைக்காலமாக மாந்தை மேற்குகுடியேற்றத் திட்டத்தில் கவனம் செலுத்தினோம். 2002ஆம் ஆண்டு சூழல் மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தைகள், போர்நிறுத்தம் போன்ற மாற்றங்கள் நம்பிக்கையை உருவாக்கின. 2002 மே மாதத்தில், ஹொல்கருடன் வன்னிக்குப் பயணம் மேற்கொண்டோம். போர்நிறுத்தம் ஆரம்பித்த சில நாட்களுக்குப் பின்னர் நாங்கள் போனபோது பல சிரமங்களை எதிர்கொண்டபோதிலும், பயணம் நிறைவேறியது. யேர்மனிய தொழில்நுட்ப முறையில் அளவெடுத்து, உடல் நிலையை கருத்தில் கொண்டு, முதுகெலும்பு பாதிப்பு ஏற்படாதவகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக் கால் ‘வெண்புறா’ நிறுவனப் பொறுப்பாளர் வீரனுக்கு பொருத்தப்பட்டது. இந்த முயற்சி குறித்து கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையிலும் செய்தி வெளியானது. இந்தியப் பத்திரிகையாளர்களும் அதைப்பற்றி குறிப்பெடுத்துச் சென்றனர். அந்தவேளை, இரண்டு கைகளையும் இழந்திருந்த ஒரு பெண்ணுக்கு செயற்கைக் கைகள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எங்களுக்கு வன்னியில் எழுந்தது. ஒரு கை பொருத்துவதற்கே 30 முதல் 35 ஆயிரம் யூரோ வரை செலவாகும். அத்தோடு கணினிவழிப் பயிற்சியும் அவசியம் என்பதால், தொடர்ச்சியாக பல தடவைகள் தான் வரவேண்டும் என ஹொல்கர் சொன்னார். செலவுகள் அதிகமாக இருந்தாலும், கால்களுடன் சேர்த்து கைகளையும் பொருத்தும் திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்தோம். எனது வேலை நிமிர்த்தம் அடிக்கடி வன்னிக்கு வர இயலாது என்பதால், யேர்மன் மொழி அறிந்த ஒருவர் அவசியம் தேவை என்று சொன்னேன். அவர்கள் தங்களிடம் யேர்மனிய மொழி தெரிந்த ஒரு இளைஞன் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்கள். அந்த இளைஞனுக்கு ஹொல்கர் தனது நிலையத்தில் ஐந்து மாதங்கள் முழுமையான பயிற்சி அளித்தார். வன்னியில் யேர்மனியத் தொழில்நுட்பத்தில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் குறித்த செய்திகள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும், இணையத் தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்த நேரத்தில், ஜபிசி இலண்டன் வானொலியில், வன்னியில் செயற்கைக் கால் பொருத்தும் திட்டத்தை இலண்டன் தமிழர் புனர் வாழ்வுக் கழகம் ஊடாக, தான் முன்னெடுக்க இருப்பதாக மாமனிதர் டொக்டர் சத்தியமூர்த்தி அறிவித்தார். இந்தச் சம்பவங்களை நினைவுகூரும்போது, பட்டங்களையும் புகழ்ச்சிகளையும் தாண்டி, அந்நேரத்தில் பலரின்அமைதியான உழைப்பும், தொழில்நுட்பம் மற்றும் மனிதநேயத்தை இணைக்க முயன்ற சிலர் எடுத்த சவாலான முடிவுகளும்தான் மனதில் முதலில் தோன்றுகின்றன. வரலாற்றைப் பேசும் போது, அந்தப் பின்னணியையும் மறக்காமல் நினைவுகொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு.