Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருக்கும் - இலங்கைக்கான ஜப்பான் தூதுவர்! 29 Nov, 2025 | 12:09 PM இலங்கை முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்திய “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டு தங்கள் அன்பு உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மேலும் பாதிக்கப்பட்ட அனைவருடனும் என் மனம் ஒற்றுமையில் நிற்கிறது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் துயரங்களை எதிர்கொள்ளும் அனைவரின் துயரத்தையும் என் இதயம் உணர்கிறது. தேவைப்படும் மக்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு உதவவும் பகல் இரவு பாராமல் பாடுபடும் அவசர மீட்புப்படையினர், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் துணிச்சலும் அர்ப்பணிப்பும் மிக ஆழமாக பாராட்டப்படுகின்றன. ஜப்பான் எப்போதும் இலங்கை மக்களுடன் இருந்துள்ளது, மேலும் இனியும் உங்கள் பக்கம் நிற்கும். பாதிக்கப்பட்ட அனைவரும் வலிமை, நம்பிக்கை பெற்று விரைவில் பாதுகாப்பான மற்றும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிடுவீர்கள் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/231906
  2. இலங்கைக்கு உடனடி நிவாராணமாக 2 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 'டிட்வா' சூறாவளியின் கடுமையான பாதிப்புகளிலிருந்து நாடு தொடர்ந்து மீண்டு வருவதால், இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளை ஆதரிக்கவே இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். தீவு முழுவதும் உள்ள சமூகங்கள் கனமழை மற்றும் பரவலான வெள்ளத்தால் "கடினமான நாட்களை" எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடியின் போது இலங்கையுடன் ஒற்றிணைந்து அமெரிக்கா நிற்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை வொஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ளதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிதி அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கும்,இலங்கையை மீள கட்டியெழுப்புவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது என்றார். https://tamilwin.com/article/us-commits-usd-2-million-urgent-flood-relief-1764401818
  3. Courtesy: Rajugaran மன்னார் - மாந்தை, கூராய் கிராமத்தில் வெள்ளத்தில் மூழ்கியுள்ள 40 பேரை மீட்க முடியாதுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அந்த கிராமத்தில் உள்ள 6 வீடுகள் மட்டுமே வெளியில் தெரியும் நிலையில் உள்ளதாகவும் அங்கு சிக்கியுள்ள 40 பேரில் 27 பேரின் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் இருந்த நிலையில் அனர்த்த நிலையை கருத்திற் கொண்டு அங்குள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட்ட மக்கள், கள்ளியடி பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திரும்பி வந்த இராணுவத்தினர் இருப்பினும், வெளியேற அறிவுறுத்திய போது 40 பேர் அதனை மறுத்து கிராமத்திலேயே தங்கியதாகவும் அவர்களே தற்போது அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த 40 பேரையும் மீட்க சென்ற இராணுவ அதிகாரிகளின் படகு கிராமத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் திரும்பி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, விமான படையினரின் உதவி நாடப்பட்ட போது அப்பகுதியில் அதிக மேக மூட்டம் காரணமாக மீட்புக்கு ஹெலிகொப்டர்களை அனுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியில் நீரின் மட்டம் குறைவடைந்த பின்னர் 40 பேரையும் மீட்கும் பணி ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக மன்னார் அரசாங்க அதிபர் எமது பிராந்திய செய்தியாளருக்கு தகவல் வழங்கியுள்ளார். மேலும், மன்னார் மாந்தை பகுதியில் வரலாற்றில் இதுவரை பதிவாகாத அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/mannar-maanthai-eaxtreme-flood-40-trapped-1764414289
  4. வடக்கு - கிழக்கில் செயலிழந்திருந்த தொலைபேசி சேவைகள் வழமைக்கு.. வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு நாளாக செயலிழந்திருந்த கையடக்க தொலைபேசி மற்றும் இணைய வசதிகள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள நேற்றிலிருந்து இணைய வசதிகளும் தொலைபேசி வசதிகளும் முற்றுமுழுதாக செயலிழந்திருந்தன. தற்போதைய நிலைமை.. இந்நிலையில், பொதுமக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், குறித்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகள், மின்சார துண்டிப்பு, அங்குள்ள இணைய வசதிகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாகவே தொலைபேசிகள் செயலிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த தொடர்பு சேவைகள் வடக்கு - கிழக்கு பகுதிகளில் மீண்டும் செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. https://tamilwin.com/article/telephone-calls-down-cyclone-ditwah-intensifies-1764424845
  5. வெள்ளம் மற்றும் மண்சரிவு: நாடு முழுவதும் 206 வீதிகள் தடை Nov 29, 2025 - 07:12 PM சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு முழுவதும் பல வீதிகள் மற்றும் பாலங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்துள்ளார். அதன்படி, பிரதான வீதிகள் உட்பட நாடு முழுவதும் 206 வீதிகள் தடைப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 10 பாலங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மற்றும் அனுராதபுரம் நகரங்களுக்கான அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வீதிகளும் தற்போது தடைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmikcclsq0265o29nj5tbh7mf
  6. சிறைக்குள் வெள்ளம் புகுந்ததால் கைதிகளை துப்பாக்கி முனையில் படகில் ஏற்றிய காவலர்கள் - என்ன நடந்தது? பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 28 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் எதிரொலியாக இலங்கையில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அனுராதபுரத்தில் ஏற்பட்ட மழைவெள்ளம் அங்குள்ள சிறைச்சாலைக்குள் புகுந்தது. இதன் காரணமாக, அந்த சிறைக்குள் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டனர். இலங்கை காவல் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கைதிகள் மார்பளவு நீரில் நடந்து சென்று படகில் ஏறும் வீடியோ வெளியாகியுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று காலை (நவ.29 சனிக்கிழமை) வரை நாடளாவிய ரீதியில் சுமார் 123 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 133 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனார்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகிறது. சுமார் 60-70 கிலோமீற்றர் வேகத்துடன் வடக்கு மாகாணம் நோக்கி நகர்ந்த புயலானது, வன்னி மாவட்டத்தில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளநீரின் வரத்து அதிகரித்தமை காரணமாக, கிளிநொச்சியில் அமைந்திருக்கும் இரணைமடுக் குளத்தின் அனைத்து (12) வான் கதவுகளும் நேற்று திறக்கப்பட்டமையைத் தொடர்ந்து தாழ் நிலப்பரப்பில் வசிக்கும் குடும்பங்கள் பாதுகாப்பு நிமித்தம் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் தொடர்ச்சியாகத் திரட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், சுமார் 1000க்கும் அதிகமான கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இடர் முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் பாதிப்புகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பாதிப்புகளின் அளவு நொடிக்கு நொடி அதிகரித்து வருகின்றது. 'மலை சரிந்து எங்கள் கிராமமே புதைந்தது' "மதியம் 1:30 மணியளவில் என் தந்தை எனக்கு போன் செய்தார். மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. இப்போது பல குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் எங்கள் வீட்டில் கூடியுள்ளனர்" என்று பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. இவர் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். "ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலை சரிந்து எங்கள் கிராமமே புதைத்துவிட்டது" என்று கூறிய அவர், "நுவரெலியா சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதாக செய்தி வந்தது. சிறிது நேரத்திற்கு முன்பு, ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, அந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் குறைந்தது 10 அல்லது 15 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்கிறார்கள்." படக்குறிப்பு,ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த மலைதான் இடிந்து விழுந்து கிராமத்தையே புதைத்தது என்கிறார் ரம்போடா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் யோஹன் மலக. "சில வீடுகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இடிந்து விழுந்த வீட்டில் இரண்டு சிறுமிகள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களைக் காப்பாற்றவோ அல்லது வேறு ஏதும் செய்யவோ வழி இல்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்க வழி இல்லை" என்றார் யோஹன் மலக. தொடர்ந்து பேசிய அவர், "இரண்டு அல்லது மூன்று மாதக் குழந்தை உள்பட மூன்று பேர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றனர். குழந்தை இறந்துவிட்டதாக நாங்கள் அறிந்தோம். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வழி இல்லை என்று குடும்பத்தினர் கூறினர். அனைத்து சாலைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன, எங்கும் செல்ல வழி இல்லை, அனைவரும் எங்கள் வீட்டில் சிக்கிக் கொண்டனர். அவரை மீட்க வந்தவர்கள்கூட இன்னும் வந்து சேரவில்லை." "இரண்டு குடும்பங்கள் எங்கும் செல்ல வழியில்லாமல் ஒரு தீவில் சிக்கித் தவிக்கின்றன. இதுவரை வீட்டிலிருந்து நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம் அவர்களைக் காப்பாற்ற வழி இல்லை என்பதுதான்" என்றும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார். 10 நாட்களில் 1000 மி.மீ மழை எதிர்வரும் 24 மணிநேரத்தில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீர்மட்டம் எதிர்பாராத அளவு வெகுவாக அதிகரிக்கக்கூடும் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அண்மித்து வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆபத்து நிலைமை காணப்படும் பட்சத்தில் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தற்போது நிலவி வருகின்ற அசாதாரண சூழ்நிலையையொட்டி, மலையகத்தின் எந்தவொரு பகுதியிலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகலாம் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலையகத்தில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழை பதிவாகுமாக இருந்தால், மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது. அதனால், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மலையகம் மற்றும் அதை அண்மித்த பகுதிகளுக்கு சுமார் 500 மி.மீ.க்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் நிறுவனத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களில் மாத்திரம் 1000 மில்லீமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,Getty Images பேராதனை பல்கலைக் கழகத்திற்கு வரலாறு காணாத பாதிப்பு தெற்காசியாவின் மிக முக்கியமான பல்கலைக் கழகமாகக் கருதப்படும் பேராதனை பல்கலைக் கழகம் வரலாறு காணாத அனர்த்தங்களை எதிர்நோக்கியுள்ளது. பல்கலைக் கழகத்தை அண்மித்து ஊடறுத்துச் செல்லும் மகாவளி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக அதிகரித்ததை அடுத்து, பேராதனை பல்கலைக் கழகத்திற்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளது. பல்கலைக் கழகத்தின் மைதானம், பல்கலைக் கழகத்தின் மிக முக்கியமான பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அத்துடன், பல்கலைக் கழகத்தை அண்மித்துள்ள பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளமையால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்கலைக் கழக வளாகத்திற்குள் காணப்பட்ட பல மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன. அத்துடன், கண்டி நகரின் முக்கியமான பௌத்த விகாரையான கெட்டம்பே விகாரையும் நீரில் மூழ்கியுள்ளது. அதேவேளை, கண்டி நகரில் பல இடங்கள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன. மேலும், கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கண்டி மாவட்டத்தின் ஹசலக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. காணாமல் போனோரை மீட்கும் பணிகளில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதுடன், இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவிகளை வழங்கி வருகின்றனர். நுவரெலியா, நாவலபிட்டிய, கெலிஓயா, கம்பளை உள்ளிட்ட பல நகரங்களுக்குள் வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளது. இதனால், பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. பட மூலாதாரம்,Sri Lanka Air Force படக்குறிப்பு,அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப் படையினர் மீட்டனர். மீட்புப் பணிகள் தீவிரம் பொலன்னறுவை மனம்பிட்டிய பாலத்தின் மீது சிக்குண்டிருந்த 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரின் மூலம் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அநுராதபுரம் கலாவௌ ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து, தென்னை மரமொன்றில் ஏறியிருந்த ஒருவரை விமானப்படையினர் காப்பாற்றியுள்ளனர். மின்சாரம், தொலைபேசி துண்டிப்பு நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 வீதமானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது. பல்வேறு பகுதிகளில் மின்சார தூண்கள் உடைந்து வீழ்ந்துள்ளமை, மின்சார தூண்களின் ஊடாக வெள்ள நீர் உட்பிரவேசித்துள்ளமை, மண்சரிவு காரணமாக மின்சார தூண்கள் உடைந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. அத்துடன், மின்சார துண்டிப்பை அடுத்து, பெரும்பாலான பகுதிகளில் கையடக்கத் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினாலும், சில பகுதிகளுக்குள் அவர்களால் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. மின்சார விநியோகத்தை இயலுமான அளவுக்கு விரைவில் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். போக்குவரத்து பாதிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலான பேருந்து போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ரயில் தண்டவாளங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ரயில் தண்டவாளங்களுக்கு மேல் வெள்ள நீர் பெருக்கெடுத்து இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், வீதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பேருந்து போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன. முச்சக்கரவண்டி உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டு இருப்பதால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை, இலங்கைக்கு வரும் சில விமானங்கள் இந்தியாவை நோக்கித் திருப்பி விடுவதற்கும் நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டு இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyke19yd17o
  7. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவ தயாராகும் சீனா! 29 Nov, 2025 | 11:19 AM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக சீனா தாயாராகவுள்ளதாக சீனக் குடியரசு தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் சீனக் குடியரசு தனது உண்மையான அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சீனா தனது ஒற்றுமையையும் ஆதரவையும் வழங்கும் என சீனக் குடியரசு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231897
  8. இலங்கையில் அவசர நிலை - மக்களுக்கு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கட்டுரை தகவல் பிபிசி சிங்கள சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை ஜனாதிபதி ஊடக இயக்குநர் ஜெனரல் பிரசன்னா பெரேரா தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையிடம் அவர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இலங்கையில் பேரிடர் சூழல் நிலவுவதால் இக்காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை பராமரிக்கும் பொருட்டு அவசர நிலையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு,ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டம் அவசர நிலை என்பது என்ன? அவசர நிலை என்பது ஒரு அரசுக்கு அதிகளவு அதிகாரங்களை அளிக்கிறது. பெரிய ஆபத்து, அச்சுறுத்தல் அல்லது பேரிடர் நேரத்தில் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க சில அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரங்களும் இதன்கீழ் அரசாங்கத்திற்கு இருக்கும். எனினும், இலங்கை அரசியலமைப்பு அவசர நிலை குறித்த அதிகாரபூர்வ விளக்கத்தை வழங்கவில்லை. ஆனாலும், அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் நிபந்தனைகள் குறித்து இலங்கை பொது பாதுகாப்பு சட்டம் (Public Security Ordinance) விளக்கியுள்ளது. "பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான சேவைகள் மற்றும் விநியோகங்களை பராமரிக்கவோ அல்லது அவசரகால சூழல்களில் பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டோ" ஜனாதிபதி அவசரநிலையை பிரகடனப்படுத்தலாம் என அதற்கான நிபந்தனையாக அதில் விளக்கப்பட்டுள்ளது. ''தேச பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பதை உறுதி செய்வதை'' அவசர நிலை நோக்கமாகக் கொண்டுள்ளது. படக்குறிப்பு,இலங்கையில் கனமழை காரணமாக இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவசர நிலையை யார் பிரகடனப்படுத்தலாம்? இலங்கை அரசியலமைப்பு சட்டம் பிரிவு 155-ன் கீழ், அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரம் கொண்ட ஒரே நபராக ஜனாதிபதி உள்ளார். இந்த அறிவிப்பு குறித்து நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்துவதற்காக அவையை கூட்ட வேண்டும். அவசர நிலை அறிவிப்பு, நான்கு நாட்களுக்குள் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதை நீதிமன்றத்தில் எதிர்த்து வழக்கு தொடுக்க முடியாது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் அவசர நிலையை அறிவிப்பதன் மூலம் நடைமுறைக்கு வருகின்றன. இந்த விதிமுறைகள் வேறு எந்த சட்டத்தையும் மீற முடியும் என்றாலும், அவை அரசியலமைப்பை மீற முடியாது. எவ்வளவு காலம் அவசர நிலை நீடிக்க முடியும்? ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும் வகையிலான அவசர நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். (என்றாலும், ஒருமாதம் கடப்பதற்கு முன்பாகவே ஜனாதிபதி அதை ரத்து செய்யலாம்.) அவசர நிலை அறிவிப்பு வெளியான நான்கு நாட்களுக்குள் அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்படி செய்யப்படவில்லையெனில், அந்த அறிவிப்பு செல்லாததாகிவிடும். அவசர நிலை 30 நாட்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டுமென்றால் அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலின் பேரிலேயே செய்யப்பட வேண்டும். குடிமக்களின் உரிமைகள் மீதான தாக்கங்கள் என்ன? அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் மற்ற சட்டங்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ள உரிமைகள் மீது அவசர நிலை விதிமுறைகள் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தலாம். இந்த கட்டுப்பாடுகள், அவை தடுக்கப்பட வேண்டிய ஆபத்துகளின் நோக்கத்துக்கு ஏற்ப ஒத்த அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. தீர்மானிக்கும் நபரை பொறுத்தே கட்டுப்பாடுகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது. அவசர நிலையால் கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகள் மீது கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படலாம்: ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படும் நிலையில் வழக்கில் தீர்ப்பளிக்கப்படுவதற்கு முன்பாக அவர் குற்றமற்றவர் என்ற அனுமானத்தின் மீது கட்டுப்பாடு ஏற்படுத்தப்படலாம். (Presumption of innocence) சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் மற்றும் எந்தவித பாகுபாடும் இல்லை என்பதில் கட்டுப்பாடுகள் இருக்கலாம். கைது மற்றும் தடுப்புக்காவலில் எடுப்பதற்கான வழக்கமான சட்ட நடைமுறைகள் கருத்து சுதந்திரம், கூடுகை, சங்கம், இயக்கம், வேலைவாய்ப்பு, மதம், கலாசாரம், மொழி சார்ந்த அடிப்படை உரிமைகள் அவசர நிலையால் கட்டுப்படுத்தப்பட முடியாதவை: சிந்திப்பதற்கான மற்றும் உளச்சான்றின்படி செயல்படுவதற்கான சுந்ததிரம் துன்புறுத்தப்படுவதிலிருந்து விடுபடுவதற்கான சுதந்திரம் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் நியாயமான விசாரணைக்கான உரிமை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அவசரநிலை அதிகாரங்கள் மூலம் அரசு தன்னிச்சையாக பயன்படுத்தலாம். பயங்கரவாத தடுப்பு தொடர்பான அதிகாரங்கள் பரவலானவை (மேலும் அது விரிவுபடுத்தப்படலாம்), மேலும் அவசரகால அதிகாரங்களைப் போலன்றி, நாடாளுமன்றத்தின் முறையான ஒப்புதல் இதற்கு தேவையில்லை. சாமானிய மக்களை எப்படி பாதிக்கிறது? பயங்கரவாதம் அல்லது வன்முறையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத சாதாரண மக்களின் தினசரி வாழ்க்கையில் கூட அவசரநிலை பாதிப்புகளை ஏற்படுத்தும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஊடகங்கள் மீதான தாக்கம் என்ன? குடிமக்கள் பிரசுரிப்பதன் மீது விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், வெளியீடுகள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை ஊடகங்களின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g9x56957go
  9. சீரற்ற வானிலை: உயிரிழப்பு 153 ஆக அதிகரிப்பு Nov 29, 2025 - 06:35 PM சீரற்ற வானிலை காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 191 பேர் இதுவரை காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (29) மாலை 6.00 மணிக்கு அந்த நிலையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், 25 மாவட்டங்களைச் சேர்ந்த 217,263 குடும்பங்களைச் சேர்ந்த 774,724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 27,494 குடும்பங்களைச் சேர்ந்த 100,898 பேர் தற்போது 798 பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmikb0jtm0264o29nz7prtcbc
  10. பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் சிராஜ் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் திட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று மதியம் (நவம்பர் 29 சனிக்கிழமை) வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது இலங்கையில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, கொழும்புக்கு செல்ல வேண்டிய சர்வதேச விமானங்கள் பல நேற்று (நவம்பர் 28) இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில், துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த தமிழர்கள் உட்பட பலர், கொழும்புவின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாட்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 'கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக' இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒரு எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது. +94 773727832 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம்,UGC திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஞானியார் சுபைர், சௌதி அரேபியாவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வருகிறார். கொழும்பு விமான நிலையத்தில் இருந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "துபையில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வருவதே பயணத் திட்டம். வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) இலங்கை வந்து சேர்ந்தோம். திட்வா புயல் காரணமாக சென்னை, திருச்சி, மதுரை, கொச்சிக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று கூறிவிட்டார்கள். 24 மணிநேரங்களைக் கடந்தும் எங்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. எங்களுக்கு ஒரு நாள் முன்னதாக வந்தவர்கள் கூட இங்கு சிக்கியுள்ளனர்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "இங்கு பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உள்ளனர். ஆனால், கடந்த 2 நாட்களாக, உறங்குவதற்கான இடமோ, உணவு மற்றும் தண்ணீரோ வழங்கப்படவில்லை. விமான நிலையத்தில் இருப்பவர்களிடம் கேட்டால் முறையான தகவல்கள் எதுவும் கூறவில்லை." என்கிறார். இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவிகள் ஏதும் கிடைத்ததா எனக் கேட்டபோது, "இந்திய தூதரக அதிகாரிகள் இன்று மதியம் தான் வந்து எங்களை சந்தித்தனர். தேவையான உதவிகள் உடனடியாக செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்கள். ஆனால் எந்த உதவிகளும் இதுவரை கிடைக்கவில்லை" எனக் கூறினார். பட மூலாதாரம்,UGC கொழும்பு விமான நிலையத்திலிருந்து பேசிய தஞ்சாவூரைச் சேர்ந்த மகேஸ்வரி, "உணவு, தண்ணீர் இல்லாமல் 2 நாட்களுக்கு மேலாக எங்களால் எப்படி இருக்க முடியும். விமான நிலையத்தில் இந்திய ரூபாயை ஏற்க மறுக்கிறார்கள். அதற்காக போராட்டம் கூட நடத்தினோம். இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை சந்தித்து உதவுவதாக கூறினர். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. உணவு இல்லாமல் இங்கு சிலர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்கள்" என்று கூறினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறிய மகேஸ்வரி, "இங்கு தமிழ்நாட்டை சேர்ந்த பலர் மட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர். கூட்ட நெரிசலில் பலரது பாஸ்போர்ட்டுகள் காணாமல் போய்விட்டன எனக் கூறுகிறார்கள். இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார். நவம்பர் 27 அன்று அபுதாபியிலிருந்து இலங்கை வந்துசேர்ந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சதீஷ்குமார், "இந்திய தூதரக அதிகாரிகள் வந்து அளித்த உணவு இங்கு இருந்த பாதி பேருக்கு கூட போதவில்லை. விமான நிலையத்தில் உள்ள பணியாளர்கள், அதிகாரிகளும் அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை. நான் இந்தியாவுக்கு வர சில நாட்கள் மட்டுமே விடுப்பு எடுத்திருந்தேன். இப்போது இங்கேயே 3 நாட்கள் கழிந்துவிட்டது. உடல்நிலை சரியில்லாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்" என்று கூறினார். இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு கூறியது என்ன? பட மூலாதாரம்,@IndiainSL படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை விமான நிலையம் மற்றும் இலங்கையின் பிற பகுதிகளில் இருந்தும், இந்தியர்களுக்கு உதவி தேவைப்பட்டால் +94 773727832 என்ற அவசர எண்ணை தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. கொழும்பு விமான நிலையத்தில் ஒரு அவசர உதவி மையம் அமைக்கப்படுகிறது. அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களுக்கு உணவு, தண்ணீர் உள்பட தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. திட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா இதுவரை 12 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். "'ஆபரேஷன் சாகர்பந்து' தொடங்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படையின் C-130 விமானம் - கூடாரங்கள், தார்பாய்கள், போர்வைகள், மருத்துவப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட சுமார் 12 டன் நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்றடைந்தது" என்று எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்பது குறித்து தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசரிடம் கேட்டபோது, "இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. அவர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டுள்ளார்." என்று கூறினார். மேலும், "இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். அவர்களுடன் ஒருங்கிணைந்து கொழும்பு விமான நிலையத்தில் உள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yqdrnll3ro
  11. திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 10214 குடும்பங்களை சேர்ந்த 31634 பேர் பாதிப்பு 29 Nov, 2025 | 01:04 PM சீரற்ற வானிலை மற்றும் டித்வா புயல் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 10214 குடும்பங்களை சேர்ந்த 31634 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலக பிரிவை உள்ளடக்கிய 182 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து சனிக்கிழமை (29) காலை 8.00 மணி வரையான தகவலின் அடிப்படையில் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 294 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட 9602 குடும்பங்களை சேர்ந்த 29809 நபர்கள் உறவினர்கள் மற்றும் சொந்த வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.14 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் 612 குடும்பங்களை சேர்ந்த 1825 பேர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் 360 குடும்பங்களை சேர்ந்த 1056நபர்களும், தம்பலகாமம் 369 குடும்பங்களை சேர்ந்த 1149 நபர்களும்,மொறவெவ 105 குடும்பங்களை சேர்ந்த 321 நபர்களும்,சேருவில 173 குடும்பங்களை சேர்ந்த 582 நபர்களும், வெருகல் 398 குடும்பங்களை சேர்ந்த 1272 நபர்களும், மூதூர் 4024 குடும்பங்களை சேர்ந்த 11754 நபர்களும்,கிண்ணியா 2375 குடும்பங்களை சேர்ந்த 7763 நபர்களும்,கோமரங்கடவல 41 குடும்பங்களை சேர்ந்த 120 நபர்களும் , பதவிஸ்ரீபுர 371 குடும்பங்களை சேர்ந்த 1187 நபர்களும், குச்சவெளி 1795 குடும்பங்களை சேர்ந்த 5720 நபர்களும், கந்தளாய் 203 குடும்பங்களை சேர்ந்த 710 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/231911
  12. தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க விசேட நடவடிக்கை Nov 29, 2025 - 05:43 PM நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகத் தடைப்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணையத்தள தொடர்பாடல் வலையமைப்புகளை உடனடியாக வழமைக்குத் திருப்புவதற்கு எடுக்கப்பட வேண்டிய விசேட நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஒன்று, அரசாங்கத்திற்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையில் இன்று (29) தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகம், 'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகம், டிஜிட்டல் அமைச்சு மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியன இணைந்து இக்கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தன. நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாக ஒலிபரப்பு கோபுரங்களுக்கான மின்சாரம் தடைப்பட்டமை மற்றும் வலையமைப்பு செயலிழப்பினால் மக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மக்கள் தமது உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாமை குறித்து இங்கு விசேடமாக ஆராயப்பட்டது. மின்சாரம் தடைப்பட்டுள்ள கோபுரங்களுக்கு உடனடியாக மின்தோற்றிகள் (generators) அல்லது மாற்று வலுசக்தியை வழங்க, குறித்த நிறுவனங்களுக்கும் மின்சார சபையிற்கும் இடையில் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது. சேதமடைந்த கோபுரங்களைச் சீரமைக்கத் தேவையான தொழில்நுட்பக் குழுக்களை அனர்த்தப் பகுதிகளுக்கு அனுப்ப, அரசாங்கத்தின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் துறைகளின் ஒத்துழைப்பை வழங்கவும் முடிவெடுக்கப்பட்டது. அனர்த்த வேளைகளில் வலையமைப்பு நெரிசலைக் குறைத்து, அவசர அழைப்புகளுக்கு முன்னுரிமை வழங்க சேவை வழங்குநர்கள் இணக்கம் தெரிவித்தனர். இப்பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்தின் முழுமையானத் தலையீட்டை வழங்குவதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதன்போது வலியுறுத்தினார். https://adaderanatamil.lk/news/cmik968ce025zo29n0e62jf2m
  13. இந்தோனேஷியா பெருவெள்ளம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 248 ஆக உயர்வு 29 Nov, 2025 | 03:50 PM இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 248 ஆக உயர்ந்துள்ளதாகவும் மேலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் சுழற்புயல் காரணமாக வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 248 ன உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் இந்தோனேஷியாவின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231940
  14. '19 நாட்டவரின் கிரீன் கார்டு மறுசரிபார்ப்பு' - அமெரிக்கா அறிவிப்பால் இந்தியர்களுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,Pete Marovich/Getty Images 2 மணி நேரங்களுக்கு முன்னர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அருகே நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு குடியேற வருபவர்களை நிரந்தரமாக நிறுத்துவேன் என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் (Truth Social) அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு வர இந்த நடவடிக்கை அவசியம் என்று எழுதியுள்ளார். இதனால், அமெரிக்காவின் 'குடியேறுபவர்களுக்கான விதிகள்' கடுமையாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 19 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும் என்று அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார். இதை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்று கூறியிருக்கும் டிரம்ப், இது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அமெரிக்காவில் குடியேறிய ஆப்கானியரான ரஹ்மானுல்லா லகன்வால் என்பவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் என்று அறியப்பட்டிருக்கிறது. 2021-ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலத்தில் 'ஆபரேஷன் அலைஸ் வெல்கம்' (Operation Allies Welcome) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. அதன்கீழ் ஆயிரக்கணக்கான ஆப்கானியர்களை அமெரிக்கா அனுமதித்தது. டிரம்ப் என்ன எழுதினார்? முன்னாள் அதிபர் ஜோ பைடனை விமர்சித்து ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதிய டிரம்ப், முந்தைய நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்க குடிமக்களின் நலன் மற்றும் வாழ்க்கைத் தரத்திற்கு தீங்கு விளைவித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், "அமெரிக்காவிற்கு பயனில்லாதவர்கள், நம் நாட்டை நேசிக்க முடியாதவர்கள் உள்பட, நம் நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலன்களும் மானியங்களும் ரத்து செய்யப்படும். அமைதியை சீர்குலைக்கும் புலம்பெயர்ந்தோர் வெளியேற்றப்படுவார்கள். மேலும் பாதுகாப்பு அபாயமாக இருப்பவர்கள் அல்லது மேற்கத்திய நாகரிகத்துடன் ஒத்துப்போகாத வெளிநாட்டு நபர்கள் நாடு கடத்தப்படுவார்கள்" என்றும் அவர் எழுதியிருந்தார். ஆனால், எந்த நாடுகளுக்கு இந்தத் தடை விதிக்கப்படும் என்று அவர் விளக்கம் தரவில்லை. மற்றொரு பதிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து விமானத்தில் மீட்கப்பட்ட மக்களின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "லட்சக்கணக்கான மக்கள் எந்த விசாரணையும், எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நமது நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டனர். இதை நாம் சரிசெய்வோம்" என்றும் எழுதியிருந்தார். பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty Images படக்குறிப்பு,வாஷிங்டன் டிசியில் இரண்டு காவலர்கள் சுடப்பட்டதைத் தொடர்ந்து டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது. சுடப்பட்ட இருவரில் ஒருவர் இறந்துவிட்டார். 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டுகள் மறுசரிபார்ப்பு செய்யப்படும் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்குப் பிறகு, அமெரிக்காவில் "எந்த நாட்டைச் சேர்ந்த வெளிநாட்டவரும்" நாடு கடத்தப்படுவார் என்று ட்ரம்ப் கூறினார். அதே நாளில், பாதுகாப்பு மற்றும் சரிபார்ப்பு நடைமுறைகள் மறு ஆய்வு செய்யப்படும் வரை, ஆப்கான் குடிமக்கள் அளித்த அனைத்து குடியேற்ற மனுக்களின் செயலாக்கத்தையும் அமெரிக்கா நிறுத்திவைத்தது. வியாழக்கிழமை, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) 19 அபாயகரமான நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்தவர்களின் கிரீன் கார்டுகளை மீண்டும் சரிபார்ப்பதாகத் தெரிவித்தது. அந்த அறிக்கையில், புதன்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு நேரடியாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. பிபிசி கேட்டபோது, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையாகத் தடை விதித்தும், மேலும் 7 நாடுகளின் குடிமக்களுக்கு பகுதியளவில் நுழைவு தடை விதித்தும் 2025 ஜூன் மாதம் வெள்ளை மாளிகை வெளியிட்ட உத்தரவை அந்நிறுவனம் மேற்கோள் காட்டியது. ஆப்கானிஸ்தான், மயான்மர் (பர்மா), சாட், காங்கோ குடியரசு, ஈக்வட்டோரியல் கினி, எரித்ரியா, ஹைதி, இரான், லிபியா, சொமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புரூண்டி, கியூபா, லாவோஸ், சியார்ரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கிரீன் கார்ட் எப்படி மீண்டும் சரிபார்க்கப்படும் என்று யுஎஸ்சிஐஎஸ் விளக்கம் கொடுக்கவில்லை. 'மூன்றாம் உலக நாடுகள்' தனது சமூக ஊடகப் பதிவில், அமெரிக்காவில் சமூக சீர்கேடு அதிகரிப்பதற்கு அகதிகளை குற்றம் சாட்டிய டிரம்ப், அமெரிக்காவிற்கு பலம் சேர்க்கும் சொத்தாக அல்லாத எவரையும் வெளியேற்றுவேன் என்று கூறினார். தேங்க்ஸ்கிவ்விங் செய்தியாக வெளியிடப்பட்ட அந்தப் பதிவில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திய டிரம்ப், "சோமாலியாவிலிருந்து வந்த லட்சக்கணக்கான அகதிகள் மின்னசோட்டாவை முழுமையாகக் கைப்பற்றிவிட்டார்கள்" என்று கூறினார். "அமெரிக்காவை முழுமையாக சரிசெய்ய, அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் குடியேற்றத்தை நான் நிரந்தரமாக நிறுத்துவேன்" என்றும் அவர் எழுதினார். 'மூன்றாம் உலகம்' என்ற சொல் முன்னர் ஏழை நாடுகளையும், வளரும் நாடுகளையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. டிரம்பின் அறிவிப்பு பற்றிய கூடுதல் விவரங்களை வெள்ளை மாளிகை, யுஎஸ்சிஐஎஸ் யாரும் இன்னும் வழங்கவில்லை. டிரம்ப் தனது பதிவில் வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரடியாகத் தொடர்புபடுத்தவில்லை. டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில் பல முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயணத் தடைகளையும் விதித்தார். அமெரிக்க குடிவரவு வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜெரமி மெக்கின்னி, வாஷிங்டன் துப்பாக்கிச் சூடு குறித்த அதிபர் டிரம்பின் பதில் புலம்பெயர்ந்தோரை பலிகடா ஆக்குகிறது என்று கூறினார். பிபிசி உலக செய்திகளின் நியூஸ்டே நிகழ்ச்சியில் பேசிய ஜெரமி மெக்கின்னி தாக்குதல்காரர்களின் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார். "இதுபோன்ற வழக்குகள் நிறம், இனம் அல்லது தேசியத்தைப் பார்ப்பதில்லை. மனநோயோ தீவிர சித்தாந்தமோ எந்த பின்னணியிலிருந்தும் ஒருவருக்கு உருவாகலாம்" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Scott Eisen/Getty Images படக்குறிப்பு,ஜோ பைடன் தவறான முடிவுகள் எடுத்ததாக டிரம்ப் குற்றம் சாட்டினார் இந்தியர்களை பாதிக்குமா? டிரம்பின் முடிவு பற்றிப் பேசிய முன்னாள் தூதர் வீணா சிக்ரி, அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லாததால், இந்தியர்கள் கவலைப்பட எதுவும் இல்லை என்று கூறினார். "மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வருபவர்களையும் தடை செய்வதாக அவர் (டிரம்ப்) கூறியிருக்கிறார். அவர் தனது முதல் பதவிக் காலத்தில் இதனைச் செய்தார். பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகள் அத்தகைய பட்டியலில் இருந்தன" என்று அவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். இம்முறை ஒரு பட்டியல் ஏற்கெனவே தயாராக இருக்கிறது. ஆனால், அதில் யாரெல்லாம் சேர்க்கப்படுவார்கள் என்பதுதான் தெரியவில்லை. மேலும் பேசிய வீணா சிக்ரி, "பாகிஸ்தானின் பெயர் முன்னதாக அந்தப் பட்டியலில் இல்லை. ஆனால், சமீபத்திய நிகழ்வுகள் அந்த நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது" என்றும் கூறினார். திட்டவட்ட விவகார நிபுணர் பிரம்மா செல்லனேய், கடந்த ஒரு தசாப்தத்தில் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டிருக்கிறார். "அதிகாரபூர்வ தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் பேர் இதுபோன்ற சம்பவங்களில் சுடப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர். அவ்வாறு தாக்குதல் நடத்தியவர்களில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த ஆண்களே அதிகம் என்று அறியப்பட்டுள்ளது" "ஆனால் முன்பு அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ-வுக்காக பணியாற்றிய ஒரு ஆப்கானிஸ்தான் அகதியால் நடத்தப்பட்ட ஒரு சம்பவம் அதிபர் டிரம்பை கோபப்படுத்தியிருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் இருந்து குடியேற்றத்தை நிறுத்துவேன் என்று சமூக ஊடகங்களில் அறிவிக்கும் அளவுக்கு அது அவரைக் கோபப்படுத்தியிருக்கிறது" என்றும் அவர் கூறினார். "சொமாலிய மக்களுக்கு இந்த குற்றவாளியுடன் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும், அவர்கள் மீதும் தங்கள் கோபத்தை அவர்கள் கொட்டியிருக்கிறார்கள். ஒரு நபரின் செயலுக்காக ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தான் மக்களையும் குறைசொல்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். வாஷிங்டன் டிசி தாக்குதலில் சந்தேகத்திற்குரிய நபர் பற்றிய தகவல் ரஹ்மானுல்லா லகன்வால் 2021 இல் அமெரிக்காவிற்கு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க ராணுவத்துடன் பணிபுரிந்ததால் சிறப்புப் பாதுகாப்பு வழங்கப்பட்ட ஆப்கானியர்களில் அவரும் ஒருவர். 2021-ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தது அவர்களுக்கு அச்சுறுத்தலை அதிகரித்தது. லகன்வால் முன்பு சிஐஏவுடன் இணைந்து பணியாற்றியவர் என்று சிஐஏ இயக்குநர் தெரிவித்தார். பிபிசியின் அமெரிக்க துணை நிறுவனமான சிபிஎஸ்-ன்படி, லகன்வால் 2024 இல் புகலிடம் கோரி விண்ணப்பித்ததாகவும், அவரது விண்ணப்பம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1dzg24dwdko
  15. டிட்வா புயல் தாக்கம் - மரணங்கள் 132 ஆக அதிகரிப்பு Nov 29, 2025 - 03:28 PM நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmik4ctpl025qo29njdj0gnzv
  16. இந்தோனேஷியாவில் அனர்த்தங்களில் சிக்கி 174 பேர் பலி 29 Nov, 2025 | 12:00 PM இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் இந்த வாரம் ஏற்பட்ட கடும் வெள்ளம் மற்றும் மண்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 79 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வட சுமத்திராவில் மட்டும் 116 பேர் உயிரிழந்துள்ளதுடன் , 42 பேர் இன்னும் தேடப்பட்டு வருகின்றனர். மேலும் ஆசே மாகாணத்தில் 35 பேரும், மேற்கு சுமாத்திராவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் , ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சில பகுதிகளில் ஒரு மீட்டர் உயரம் வரை நீர் நிறைந்துள்ளதால், மீட்புப் பணிகளிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளன. படாங்க் டோறு நகரில் அடையாளம் காணப்படாத உயிரிழந்தோரின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் வீதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக அந்நாட்டு அரசு வானூர்தி மூலம் உதவி மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231901
  17. ஹொங்கொங் தீ விபத்து : 128 பேர் உயிரிழப்பு, 200 பேர் மாயம் 29 Nov, 2025 | 01:52 PM ஹொங்கொங்கில் கடந்த புதன்கிழமை (29) ஏற்பட்ட பாரிய தீ பரவலில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீ பரவலில் சிக்கி இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் சுமார் 200 பேர் காணாமல் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் புதன்கிழமை (26) தீ பரவியது. இதன் காரணமாக கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பற்ற பொருட்கள் காரணமாக மூன்று அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தீபரவல் ஹாங்காங்கில் 1948 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ பரவலை விட மிகப்பெரிய தீ விபத்தாகும். ஹொங்கொங் அரசு பாதிக்கப்பட்ட மக்கள் உதவ 300 மில்லியன் நிதி ஒதக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231919
  18. 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிப்பு! Nov 29, 2025 - 11:56 AM சீரற்ற காலநிலையால் 25 மாவட்டங்களில் உள்ளடங்கலாக 102,877 குடும்பங்களை சேர்ந்த 373,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmijws59p025fo29nw65thb5j
  19. Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:53 AM அனர்த்த நிலை காரணமாக இரத்த வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் இரத்த விநியோகம் ஸ்தம்பிதம். இரத்த தானம் வழங்க முன்வருமாறு தேசிய இரத்தமாற்று சேவை நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக நாரஹேன்பிட்ட தேசிய இரத்த மத்தியஸ்தானத்திற்கும், அதிக இரத்தம் தேவைப்படும் பின்வரும் இரத்த வங்கிகளுக்கும் இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதன்படி, நாரஹேன்பிட்டி தேசிய இரத்த மத்தியஸ்தானத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ( 011 236 9931, 011 722 0677) இரத்த தானம் வழங்க முடியும். காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ராகம போதனா வைத்தியசாலை - 011 296 0535/ 011 2959261 மகரகம ஹோப் வைத்தியசாலை - 011 284 9525/ 011 289 7377 கப்பல் அனுப்புதல் - 021 2223063/ 021 2222261 குருநகலை - 037 2229617/ 037 2223873 அநுராதபுரம் - 025 2222261/ 025 2236424 கண்டி - 081 2203100/ 081 2222261 பதுளை - 055 2222124/ 055 2222261 அம்பாந்தோட்டை - 047 2222016/ 047 2220261 கருப்பு - 034 2222261/ 034 2236529 இரத்னபுர - 045 2226592/ 045 2222261 திருகோணமலை - 026 2231385/ 026 2222600 காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலை (091 2226066/ 091 2232267) மாத்தறை கம்புருகமுவ தெற்கு இரத்த மையத்தில் (041 3415665) ஆகிய இடங்களில் இரத்த தானம் வழங்க முடியும். https://www.virakesari.lk/article/231874
  20. தமிழ்நாட்டை நெருங்கும் திட்வா புயல் - எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? பட மூலாதாரம்,IMD படக்குறிப்பு,திட்வா புயலின் நிலையைக் காட்டும் இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள வரைபடம். 29 நவம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள திட்வா புயல் இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தெற்கே 430 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மைய அறிக்கைப்படி, இது கடலோர இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர பிரதேச கடற்கரையோரத்தை நாளை (நவ.30) அதிகாலை அடையக்கூடும். எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்? திட்வா புயல் காரணமாக அடுத்த சில நாள்களுக்கு எந்தெந்த இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. நவம்பர் 29: தமிழகத்தின் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஒருசில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. நவம்பர் 30: திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கன மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிக மிகக் கனமழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு. வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழை முதல் மிகவும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். டிசம்பர் 1: திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும். இவைதவிர்த்து தமிழ்நாட்டிலும் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஒருசில பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 1 வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. புயல் எச்சரிக்கை கூண்டு பாம்பன், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் நான்காம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. பலத்த காற்று வீச வாய்ப்பு தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர பகுதிகளில் இன்றும் (நவம்பர் 29), நாளையும் (நவம்பர் 30) பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நவம்பர் 29: டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். நவம்பர் 30: வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பலத்த தரைக் காற்று மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 80 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள், தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை வட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் வீசிவரும் சூறாவளிக் காற்றின் வேகம் நவம்பர் 29 காலை மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தையும், அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தை அடையும் என்றும், அது 30ம் தேதி காலை வரை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும். நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும். தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் தற்போது மணிக்கு 55-65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசிக்கொண்டிருக்கிறது (நவம்பர் 29 அதிகாலை 5.30 நிலவரப்படி). இது அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தை எட்டுகிறது. இந்தக் காற்றின் வேகம் நவம்பர் 30 வரை மணிக்கு 60-70 கி.மீ ஆக நீடிக்கலாம். அவ்வப்போது அது மணிக்கு 80 கி.மீ வேகத்திலும் வீசலாம். நவம்பர் 30 நள்ளிரவு வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் மெல்ல முன்னேற்றம் காணப்படும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் தற்போது மணிக்கு 65-75 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. இதன் வேகம் அதிகரித்து, மணிக்கு 70-80 கி.மீ ஆக அதிகரித்து (அவ்வப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தைத் தொடும்) நவம்பர் 30 காலை வரை நீடிக்கும். இதன் வேகம், டிசம்பர் ஒன்றாம் தேதி மணிக்கு 55-65 கி.மீ ஆகக் குறைந்து (அவ்வப்போது மணிக்கு 75 கி.மீ வேகத்தில் வீசும்), டிசம்பர் 2ம் தேதி மணிக்கு 45-55 கி.மீ வரை (அவ்வப்போது மணிக்கு 65 கி.மீ வேகத்தில் வீசும்) குறையும். நவம்பர் 30 வரை கடல் சீற்றம் மிகவும் அதிகமாக இருக்கும். டிசம்பர் 1 முதல் அதில் முன்னேற்றம் காணப்படும். மேற்கண்ட இடங்களில் இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் இருப்பவர்கள் மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி & தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளை டிசம்பர் ஒன்றாம் தேதி வரை தவிர்க்கவேண்டும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடற்கரையை நவம்பர் 30 வரை தவிர்க்க வேண்டும் என்று வானிலை மையம் அறிவுறுத்தியிருக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் இன்று (நவம்பர் 29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை முழுவதும் இன்று (நவம்பர் 29) கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு திட்வா புயல் எச்சரிக்கை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் இன்று (நவ.29 சனிக்கிழமை) காலையும், மாலையும் நடக்க இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் தெரிவித்துள்ளார். புதுவை மத்திய பல்கலைக் கழகத்திற்கும் இன்று (நவ.29 சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவை பல்கலை கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் விமான சேவை ரத்து திட்வா புயல் காரணமாக கனமழை பெய்வதால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ரத்து செய்யபட்டுள்ளன. தூத்துக்குடி விமான நிலையத்தில் தினசரி 6 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு 5 விமான சேவைகளும் பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு ஒரு சேவையும் இயக்கப்படுகின்றன. புயல் காரணமாக ஆறு விமான சேவைகளும் இன்று (29-11-25) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று விமான சேவை இருக்காது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e01d21w4go
  21. இலங்கை வந்த இந்திய மீட்பு குழுவினர் Nov 29, 2025 - 09:37 AM இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmijrstq90253o29nh8tcjwu6
  22. 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டியில் Nov 29, 2025 - 08:13 AM கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. கண்டி, நில்லம்பே பகுதியில் நேற்று (28) 431 மி.மீ. மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், கேகாலை மாவட்டத்தில் உள்ள டொத்தெலு ஓயா தோட்டத்தில் 277.8 மி.மீ. மழையும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பொக்கணை பகுதியில் 274 மி.மீ. அளவில் மழையும் பதிவாகியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmijoswdm024zo29nouiwxzg3
  23. Published By: Digital Desk 3 29 Nov, 2025 | 12:28 AM பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவும் நிவாரணம் வழங்குவதற்காகவும் செயற்படும் விமானப்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்பார்வை செய்தார். இன்றிரவு (28) விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி குறித்த நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து தகவல்களை அறிந்துகொண்டார். https://www.virakesari.lk/article/231873
  24. நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானம் நாட்டிற்கு Nov 29, 2025 - 06:11 AM இந்தியா - இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளது. இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட் தொகுதிகள் அடங்குகின்றன. இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது. இந்திய நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு மற்றொரு விமானம் இன்று (29) முற்பகலில் இலங்கையை வந்தடையவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள டிட்வா புயலில் தமது அன்புக்குரிய உறவுகளை இழந்த இலங்கை மக்களுக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் வௌியிட்டுள்ளார். அது தொடர்பில் அவர் தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பு, ஆறுதல் மற்றும் துரித மீட்சிக்காக நான் பிரார்த்திக்கின்றேன். கடல்மார்க்கமாக மிகவும் நெருங்கிய அயலுறவுடன் எமது கூட்டொருமைப்பாட்டினை காண்பிக்கும் முகமாக சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் முக்கிய HADR உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை இந்தியா உடனடி அவசர உதவியாக அனுப்பி வைத்துள்ளது. எவ்வாறான சூழலிலும் தேவையான மேலதிக ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க நாம் தயாராக உள்ளோம். இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் தொலைநோக்கு ஆகியவற்றின் வழிகாட்டலுடன், உதவிகள் தேவைப்படும் எந்நேரத்திலும் இந்தியா இலங்கையுடன் தொடர்ந்து துணைநிற்கும் எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். https://www.youtube.com/watch?v=V_Sdf2mv8Z8 https://adaderanatamil.lk/news/cmijkg5l3024vo29n4dixe240
  25. Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:39 PM டிட்வா புயல் 28.11.2025 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி நிலைவரப்படி, திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 கிலோமீற்றர் வேகத்திலேயே நகருகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். டிட்வா புயலின் மையப்பகுதி நாளை 29 ஆம் திகதி காலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்துக்கு அண்மையாக கடலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்வு வேகம் குறைவாக உள்ளமையால் கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும். அதனால் நாளையும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இரவு 2.00 மணிவரை (29.11.2025) நீடிக்கும் வாய்ப்புள்ளது. காற்றின் வேகமும் வடக்கு மாகாணத்தில் படிப்படியாக அதிகரிக்கும். ஆகவே வடக்கு மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம். வெள்ளநீர் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தினை உணர்ந்தால் முன்கூட்டியே உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வது சிறந்தது. அதேவேளை வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு கரையோரப்பகுதிகள் மற்றும் தீவுப்பகுதிகளில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகுதல் செயற்பாடு இடம்பெறும். ஆகவே கரையோரப் பகுதி மக்கள் இது தொடர்பாகவும் அவதானமாக இருப்பது அவசியம். கடந்த சில நாட்களாக இலங்கையைப் புரட்டிப் போட்ட, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போது இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளுக்கு காரணமான 'டிட்வா' புயல் நாளையுடன் இலங்கையை விட்டு நீங்குகிறது என்பது இலங்கையர்கள் அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான செய்தியாகும். https://www.virakesari.lk/article/231865

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.