Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் - தொடர்.

Featured Replies

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

குறுந் தமிழ் தேசியப் போராட்டம் தோல்வி பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால அனுபவம், எதிர்மறையான புதைந்துபோன உண்மைகளையும், படிப்பினைகளையும் கொண்டதாக இன்றைய வரலாற்றுச் சூழலுடன் வெளிவருவது வரலாற்றுக்கு அவசியமானதாக உள்ளது. இந்தப் போராட்டம் தன்னைத்தானே தோல்விக்கு இழுத்துச் சென்று தனக்குத்தானே புதைகுழி தோண்டி தானே தன்னைப் புதைகுழியில் புதைக்க முன், தான் தவிர்ந்த மற்றைய எதனையும் முதலில் அழித்துப் புதைத்தது.

இதில் தப்பிப் பிழைத்தவர்களில் நேசனும் ஒருவர். முதலில் ஈழ மாணவர் பொது மன்றம் என்ற (GUESS) அமைப்பிலும், பின்னர் புளொட் அமைப்பிலும் இணைந்து செயல்பட்டவர். இறுதியில் புளொட்டிலிருந்து பிரிந்து சென்ற தீப்பொறியிலும் அதன் மத்திய குழுவிலும் செயல்பட்டவர்.

இந்த வகையில் அவர் தமிழ் தேசியப் போராட்டத்தில் இணைந்து போராடிய போது, வர்க்க ரீதியாக இரண்டு வலது, இடது முகாம்களாக பிளவுற்ற எதிரெதிரான வழிப்பாதையில், மக்களை முன்னிலைப்படுத்திய பாதையின் அரசியலை உயர்த்திப் பிடித்தார்.

இன்று தன் சொந்த அனுபவத்தை தொகுக்கும் போதும், அதை வெளியிடும் போதும் கூட, அரசியல் ரீதியாக மக்களைச் சார்ந்து நிற்கின்ற வழியை முன்னிறுத்துகின்றார்.

1. கடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராக நிலைநின்ற பிற்போக்கு சக்திகள், மறுபடியும் தங்கள் வரலாறே சரியானது என்று மீளவும் நிலைநாட்ட முற்படுகின்ற காலத்தில் அதை அம்பலப்படுத்தி போராட முற்படுகின்றார்.

2. இதை முன்வைத்து போராடும் போது, கடந்தகால அரசியல் வழியை விமர்சனங்களுடன் உயர்த்தி நிற்கும் பாதைகளை இனம் கண்டு, அதன் மூலம் தன் அனுபவத்தை சொல்வதன் மூலம் பிற்போக்குக் கூறுகளையும் தவறுகளையும் அம்பலம் செய்ய முற்படுகின்றார்.

இந்த வகையில் குறுந்தேசியத்துக்கு எதிரான போராட்டத்தையும், அதன் அனுபவத்தையும் கற்றுக் கொள்ள, இந்த தொடர் எமக்கு உதவும்.

தமிழரங்கம்

------------------

வரலாறு பல அத்தியாயங்களையும் பக்கங்களையும் கொண்டது. எனது பக்கங்களையும் பதிவு செய்யும் கால நிபந்தனையினதும் சமூகப் பிரக்ஞையினதும் நிமித்தம் புளொட், தீப்பொறி பற்றி நான் அறிந்த வரலாற்றை தொகுப்பதென்று முடிவு செய்தேன். நான் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றுடன் சம்பந்தப்பட்ட நண்பர்களுடன் உறுதிப்படுத்தியபின், பல்வேறு தயக்கங்களுக்கும் மத்தியில், உருப்பெற்றெழுந்தது தான் இந்தத் தொகுப்பு. இதில் தவறுகள் இருப்பின் சரியாகச் சுட்டிக்காட்டப்படுமிடத்து திருத்திக் கொள்ளப்படும்.

நான் புளொட்டில் மிகவும் குறுகியகாலமே செயற்பட்டவன். ஆனால், அந்தக் குறுகிய காலமே இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்துவிட்டிருந்த காலமாகவும், இந்திய அரசு, இலங்கை இனப்பிரச்சனைக்குள் நேரடியாகச் செல்வாக்குச் செலுத்திய காலமாகவும், புளொட்டினுடைய அதீத வளர்ச்சிக் காலமாகவும், புளொட்டினுள் முரண்பாடுகள் கூர்மையடைந்து அதன் சிதைவுக்கான காலமாகவும் இருந்தது. எனவே, எனது இந்தத் தொகுப்பானது புளொட்டினுடைய வரலாற்றின் முழுமை அல்ல, அதன் ஒரு சிறிய பகுதி மட்டுமே. 1985 இல் தீப்பொறிக்குழு உருவானதிலிருந்து 1992 வரையான அதன் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது.

plot2.jpg

மே 18 2009 இற்குப் பின்னரான இலங்கைத் தீவின் அரசியல்-குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்களின் அரசியல்- ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது என்பதில் எவருக்கும் கருத்து முரண்பாடு இருக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் தோல்வியைத் தழுவிய பின் - இதை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் தோல்வி எனக் கூறுவது தவறாகும். - இலங்கையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும், அதிலும் குறிப்பாக கடந்தகாலத்தில் அரசியலில் ஈடுபட்டோர் மத்தியில் புதிய, மாற்றுக் கருத்துக்களுக்கான முன்னெடுப்புகள் அல்லது புதிய அரசியல் தலைமைத்துவத்திற்கான முன்னெடுப்புகளை பெருமளவில் காணக்கூடியதாக உள்ளது. இதில் இரண்டு வகையானோர் அடங்குவர்.

முதலாவது வகையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் போதே, அவர்களுடைய கொடூர அடக்குமுறை இருக்கும்போதே - இலங்கையிலும், ஏன் புலம்பெயர் நாடுகளிலும் கூட – அவர்களது தவறான அரசியல் போக்குகள் குறித்து அவர்களது போராட்டத்தினுள் பொதித்திருந்த பாசிச தன்மை குறித்து விமர்சித்து வந்தது மட்டுமல்லாது அதற்கெதிராக தமது சக்திக்குட்பட்டு பல்வேறு வடிவங்களில் போராடி வந்தோர், தற்போதும் கூட போராடி வருவோர்.

இரண்டாவது வகையினரோ புலிகளின் அழிவின் பின் அரங்குக்கு வந்து, தாம் "இருண்ட காலத்திலிருந்து வெளியே" வருவதாகக் கூறிக்கொண்டு மாற்றுக் கருத்துக்கள், புதிய தலைமை பற்றிப் பேசுவோராவர். இவர்களில் ஒரு சாரார் – ஒரு சாரார் மட்டுமே- புலிகள் பலமாக இருக்கும் பொழுது புலிகளின் தவறான அரசியல் போக்குகள் குறித்து விமர்சிக்காதது மட்டுமல்ல, அதற்கெதிராக போராடாதது மட்டுமல்ல, அவர்களுக்கு "தேசிய சக்திகள்" என்ற மகுடமும் இட்டு அவர்கள் இல்லாவிட்டால் தமிழ்மக்கள் நட்டாற்றில் விட்டுவிடப்படுவார்கள் என்றும் வாதாடியவர்கள். இன்று இவர்கள் கடந்தகாலம் பற்றிய எந்தவித சுயவிமர்சனமுமின்றி மாற்றுக் கருத்துக்கள், புதிய தலைமை பற்றிப் பேசுவது கவலையளிக்கும் விடயமாக உள்ளது. கடந்தகால தவறுகள் குறித்த இவர்களது சுயவிமர்சனமற்ற எந்தவிதமான செயற்பாடும், அவை எவ்வளவு தான் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிகோலாது என்பதுதான் உண்மை.

mullivaikkal7509_15.jpg

முள்ளிவாய்க்கால் நிகழ்வு, ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களின் அழிவு, கொடூரமானதும் துன்பகரமானதும் ஆகும். ஆனால் அது இன்று தவிர்க்க முடியாத வரலாறாகி விட்டது. தீமையில் விளைந்த சிறு நன்மை போல, இந்த முள்ளிவாய்க்காலின் பின்னணியில் தான் இன்றைய "ஜனநாயக" அல்லது "கருத்துச் சுதந்திர" (அதன் உண்மையான அர்த்தத்தில் இல்லை என்ற போதிலும்) சூழல் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவென்றால் நீண்ட நெடுநாட்களுக்குப் பின்பு தோன்றியுள்ள இத்தகையதொரு சாதகமான சூழலை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டதாகக் கூறும் மாற்றுக் கருத்தை முன்னெடுப்போர் அல்லது அவர்களுக்குத் தலைமை தாங்க முன்வருவோர் எப்படி சரியாக பயன்படுத்துகிறார்கள் என்பதாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் கடந்தகால அரசியல் மற்றும் போராட்ட இயக்கங்களின் பின்னணியை உடையவர்களாவர். இவர்கள் தங்களது, தான் சார்ந்த அமைப்பினது கடந்தகால தவறுகளை சுயவிமர்சனம் செய்து அதிலிருந்து மீண்டுவராமல் தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று அழைத்துக் கொண்டு அரசியல் அரங்கினுள் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

கடந்தகால – குறிப்பாக கடந்த 30 வருடகால – ஆயுதப்போராட்டமும் அதற்கு முன்னதான அகிம்சைப் போராட்டமும் நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்ன? கடந்தகால அகிம்சைப் போராட்டம் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டமும் கூட தோல்வியைத் தழுவியது ஏன்? என்ற இந்தக் கேள்விகளுக்கான பதிலை உளச்சுத்தியுடனும் பக்கச்சார்பற்றும் தேடினால் மட்டுமே, அவற்றுக்கான விடை கண்டால் மட்டுமே எம்மால் அடுத்த கட்டத்துக்கு சரியான பாதையில் நகர முடியும். இவற்றைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்தச் செயற்பாடும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்களை மீண்டும் ஒரு பேரழிவுக்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும்.

கடந்தகால போராட்டத்தின் தோல்விக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது ஒவ்வொரு போராட்ட அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் பொறுப்பாளிகள் என்பதோடு- இதில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்புள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். எனவே, இன்று எம்முன் உள்ள பணி நடந்து வந்த பாதையில் இழைத்த தவறுகளை இனங்காணுதல், அவற்றைச் சுட்டிக்காட்டுதல், அதிலிருந்து சரியான பாதையை தெரிவு செய்தல் என்பதாகவே இருக்க வேண்டும். எனவே கடந்தகால தனது தவறுகள் குறித்தும், தான் சார்ந்த அமைப்பினது தவறுகள் குறித்தும் சுயவிமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுவது அவசியமானது. மாறாக, தவறுகள் குறித்து மவுனம் சாதித்தல், தவறுகளை மூடிமறைத்தல், அதற்கும் மேலே சென்று வரலாற்றை திரிவுபடுத்திக் கூறுதல் எந்தவகையிலும் ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது.

இவற்றைக் கருத்திற்கொண்டு கடந்தகால போராட்டத்தில் எனதும், நான் சார்ந்திருந்த அமைப்பினதும் - அமைப்புக்களினது என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். - பங்களிப்பை, பெருமளவுக்கு நேரடியாக நான் சம்பந்தப்பட்ட விடயங்களை சுயவிமர்சன, விமர்சனக் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றேன். எனது இந்தச் சுயவிமர்சனமானது நான் சார்ந்திருந்த அமைப்புக்களின் மீதான விமர்சனமாகவும், போராட்டம் மீதான விமர்சனமாகவும் இருப்பது தவிர்க்க முடியாததாகும்.

21/04/2011

(தொடரும்)

http://www.tamilcirc...-04-17-18-05-29

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ

எனக்கே அலுத்து போச்சு .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் தொடரும் என்று போட்டால் யார்தான் முடிக்கிறதாம்?

நீங்கள் தொடருங்கோ ....நாங்கள் குறுந்தாடியுடன் குறுந்தேசியம் பேச அவன் பெருந்தாடியுடன் பெருந்தேசியம் பேசட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கே அலுத்து போச்சு .

அப்போ

அவர் எழுதியதைப்படியுங்கோ

இவர் எழுதியதைப்படியுங்கோ..............???

என்று எங்களுக்கு அனுப்பியதெல்லாம்..................??? :( :(

  • தொடங்கியவர்

தனியே போய் வெளியே மூத்திரம் அடிக்கிற வயதுக்கு முன்னமே அழிந்து போன புளொட்டை பற்றி அறிந்து கொள்வதுக்கு ஒரு சின்ன காரணம் தான். அது வேற ஒன்றுமில்லை புதினம் அறிவது.

அதை விட புளொட்டின் அழிவுக்கு யார் காரணம் என்பதையும் அறிய ஆவல் தான்........

22ம் பகுதி வரை வாசித்தேன் குடும்ப தலைவன் சரியில்லாமல் சீரழிந்து போன குடும்பம் போல் அவர்கள் அமைப்பு. சும்மா யாழில போடுவம் என்று போட்டேன். இப்படி மற்ற இயக்கங்களும் தங்கள் தவறுகளை மீள்பார்ப்பது எதிர்காலத்துக்கு நல்லது..

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் : ஆயுதப் போராட்டத்தை நோக்கி

70 களில் தமிழரசுக் கட்சியினதும் அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் " உணர்ச்சி பொங்கும் " மேடைப் பேச்சுக்களிலும் "தமிழீழம்" என்ற கனவிலும் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானுமொருவன் என்ற போதிலும், பின்னாட்களில் - 80 களில்- பாஸ்கரன், திலக் ஆகியோருடைய தொடர்புகளுக்கூடாக GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்து செயற்பட்டு வந்தேன்.

சந்திப்புகள், அரசியல் கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்பனவற்றோடு மாணவர் போராட்டங்களிலும் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களிலும் வெகுஜனமட்டத்தில் அவர்கள் செயற்பட்டுக் கொணடிருந்தனர். மாணவர்களை அணிதிரட்டுதல், மக்களை அணிதிரட்டுதல், அதனூடாக பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் என்பதாகவே GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இன் கொள்கை இருந்தது. இவர்கள் இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவர்களாக, மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக காணப்பட்டனர். இடதுசாரித் தத்துவத்தின் மீதான அறிமுகம், அதன் மீதான ஆர்வம் எல்லாமே நான் GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்திருந்தபோது ஏற்பட்டவையே. இச்சூழல் 1981, 82 ம் ஆண்டுகளில் 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய உந்திய கொதிநிலைக்கு முற்பட்ட காலமாகும்.

AmirMangayar.jpgAmir.jpgSJV.jpg

திரு. அமிர்தலிங்கம் மங்கையற்கரசி தம்பதியர்- திரு. அமிர்தலிங்கம்- எஸ்.ஜே.வி செல்வநாயகம்

ஆனால் அன்றைய யதார்த்தநிலையோ GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இனுடைய கொள்கைக்கு முரணானதாக காணப்பட்டது. கூர்மையடைந்து விட்டிருந்த இனமுரண்பாடு, அதனுடன் கூடவே ஆயுதப்படைகளின் கொடூர அடக்குமுறை என்பன ஒருபுறமும், ஆயுதப்படைகளுக்கெதிரான தாக்குதல்கள் (சிறிய அளவிலேனும்) அங்கும் இங்கும் மறுபுறமாக காணப்பட்டது. ஆயுதப்படைகளுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் அன்று மக்கள் மத்தியில் - குறிப்பாக என் போன்ற இளைஞர் மத்தியில் - "கவர்ச்சியூட்டுவதாக" இருந்ததோடு மட்டுமல்லாமல், முன்னரங்கிலும் இருந்தது என்பது தான் உண்மை. இந்தக் காலப்பகுதியில் எனது சகோதரன் காந்தீயம் புளொட் போன்ற அமைப்புகளில் செயற்பட்டுக் கொண்டிருந்தார். புளொட் உறுப்பினர்கள் எமது வீட்டை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால் புளொட் உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். புளொட்டினுடைய தொடர்பு, அமைப்பு வடிவத்தில் இல்லையென்றபோதிலும் தனிநபர்கள் என்றளவில் இருந்து வந்தது. "புதியபாதை" பத்திரிகை "மக்கள் பாதை" சஞ்சிகை போன்றன வெளிவந்திருந்த போதும் கூட, புளொட் உறுப்பினர்கள் தம்மையொரு தலைமறைவு அமைப்பாகக் கருதி குறுகிய வட்டத்துக்குள் செயற்பட்டதாகவே என்னால் அன்று உணர முடிந்தது.

Sundaram.jpg

(சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி புலிகளால் சித்திரா அச்சகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட "புதிய பாதை" யின் ஆசிரியர்)

1983 யூலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் திருநெல்வேலியில் இராணுவத்தின் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு, குருதியை உறையவைக்கும் வெலிக்கடைச் சிறைக்கைதிகள் படுகொலை, அரசபடைகள் நகரங்களில் மேற்கொண்ட படுகொலைகள், தென்னிலங்கையிலிருந்து கப்பல்களில் அகதிகளின் வருகை அனைத்துமே அரசுக்கெதிராக ஆயுதமேந்திப் போராட வேண்டுமென்ற உத்வேகத்தை எனக்குக் கொடுத்தது. ஆனால் நான் அன்று தொடர்புகளைப் பேணிவந்த GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) அமைப்போ முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்த போதும் வெகுஜனமட்டத்தில் முற்போக்கான போராட்டத்தை முன்னெடுத்த போதும் இராணுவ ரீதியான செயற்பாடுகளில் பெருமளவுக்கு ஈடுபாடு இல்லாதவர்களாகவே காணப்பட்டனர். புளொட் அமைப்பை பொறுத்தவரை முற்போக்கான கருத்தை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் இராணுவரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருந்த புளொட் உறுப்பினர் சத்தியமூர்த்தியின் தொடர்புக்கூடாக முழுநேரமாக புளொட்டில் செயற்பட ஆரம்பித்தேன். புளொட்டில் இணணயும் போது அதன் கொள்கை, கோட்பாடு என்ன என்பதைவிட உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உத்வேகமே முன்னிலையில் இருந்தது. புளொட்டில் இணைந்ததிலிருந்து GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) உடனான தொடர்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது.

83riots.jpg

Rajasundaram.jpg

(Dr. Rajasundaram - Ghandiyam, Vavuniya) (Kuddimani) (Thangadurai)

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்

1983 யூலை இனஅழிப்பு நடவடிக்கையால் மக்கள் மத்தியில் அரசுக்கெதிரான வெறுப்புணர்வு அதன் உச்சநிலையை அடைந்திருந்தது. குறிப்பாக இளைஞர்கள் (யுவதிகளும் கூட) ஏதாவது ஒருவழியில் அரசுக்கெதிராகப் போராடவேண்டும் என்ற மனநிலை உடையவராகக் காணப்பட்டனர்.

தம்மை விடுதலை இயக்கங்களாகக் காட்டிக்கொண்ட எந்த இயக்கமும் (புளொட் உட்பட) இத்தகையதொரு சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பாவிக்கமுடியாத அளவுக்கு அரசியல் ரீதியிலும் (அமைப்புவடிவத்திலும் கூட), இராணுவரீதியிலும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த இந்திய அரசு மட்டுமே தயார் நிலையில் இருந்தது.

JR.jpg

(ஜே.ஆர்.ஜெயவர்த்தனா)

இலங்கை அரசின் (ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசின்) முழுமையான மேற்கத்தைய சார்புநிலையை நீண்ட நாட்களாக உன்னிப்பாக அவதானித்து வந்திருந்த இந்திய அரசு, இத்தகையதோர் "கனிந்த" சூழலை இலங்கை அரசுக்கெதிராகப் பயன்படுத்த முடிவெடுத்தது.

Indra.jpg

(Indra Gandhi)

இந்திய அரசின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இயக்கத்தலைமைகளை அணுகி தாம் இராணுவப்பயிற்சியளித்து தருவதற்கு தயாராக இருப்பதாகவும் இளைஞர்களை இந்தியா அழைத்துவருமாறும் கேட்டுக் கொண்டனர். நான் அறிந்தவரை பெரும்பாலும் அனைத்து இயக்கங்களுமே – என்.எல்.எவ்.ரி(NLFT), தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவை தவிர- ஆட்சேர்ப்பில் இறங்கின. நாமும் எமது பங்குக்கு ஆட்சேர்ப்பில் இறங்கினோம்.

கடந்த காலங்களில் புளொட், காந்தீயம் போன்ற அமைப்புக்களில் செயற்பட்டவர்கள் உட்பட, புளொட்டுடன் எந்தவித தொடர்புகளுமே அற்றவர்கள் வரை (பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்) அனைத்து மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர். புளொட்டின் பெரும்பாலான வேலைகள், செயற்பாடுகள், அனைத்துமே யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு நகர்த்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் அரசபடைகளின் கெடுபிடிகள், வன்னிப்பகுதியில் காந்தீயம் மீதான குறிவைப்பு என்பனவும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி செயற்பாடுகள் நகர்த்தப்பட்டமைக்கு ஒரு காரணமாகும்.

kethees.jpg

(கேதீஸ்வரன் )

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன் போன்றோர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்திலும் அதற்கு வெளியிலும் ஆற்றிய கடின உழைப்பு, புதிய அங்கத்தவர்களை இனங்கண்டு புளொட்டுக்குள் உள்வாங்கியமை போன்ற நடவடிக்கைகள் போன்றவை, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு செயற்பாடுகள் நகர்த்தப்பட்டமைக்கு மற்றொரு காரணமாகும்.

ஆனால் இத்தகையதொரு எதிர்பார்த்திராத வளர்ச்சியை – ஒரு வீக்கத்தை என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.- கையாளும் நிலையில் புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் வளர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது அநுபவ தேர்ச்சி பெற்றவர்களாகவோ இருக்கவில்லை என்பது மட்டுமல்ல சரியான, முறையான அமைப்புவடிவங்களும் கூட இருக்கவில்லை. இத்தகையதொரு நிலையை கையாள தயார் நிலையில் புளொட் இல்லாமல் இருந்ததால் பல்வேறு நெருக்கடிகளையும் முகம் கொடுக்க நேர்ந்தது. 1983 இல் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்துக்கு பின்னான காலகட்டம் இதுவாகும்.

இதே காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பில் இருந்து தப்பிவந்த போராளிகளும், இந்தச் சிறையுடைப்பு நடவடிக்கையுடன் தொடர்புபட்டு தேடப்பட்ட நபர்களும் என ( மட்டக்களப்பு வாசுதேவா, மாசிலாமணி உட்பட)

vasu.jpg

(மட்டக்களப்பு வாசுதேவா)

அவர்கள் குடும்பங்களுடன் யாழ்ப்பாணம் வந்தனர். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருபவர்களைத் தங்கவைத்தல், அவர்களுக்கான உணவு, இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக அனுப்பி வைத்தல் என்பன ஒருபுறமும், அரசியல் வகுப்புக்களை நடத்துவது, கிராமங்கள் தோறும் கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மக்களை அமைப்பாக்குவது என்பன மறுபுறமுமாக எம்மேல் அளவுக்கு மீறிய சுமைகள் ஏற்றப்பட்டதால், அனைவருமே கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அமைப்புக்கு வருபவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதென்பது ஆரம்பகாலங்களில் பெரும் பிரச்சனைக்குரியதொன்றாக இருந்தது.

பெரும் எண்ணிக்கையானவர்கள் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததால் அவர்களை தங்கவைப்பதில் பல பிரச்சனைகளை முகம்கொடுக்க வேண்டியிருந்தது. புளொட்டிடம் ஒரு தூரவிசைப்படகு மட்டுமே அன்று இருந்தது. சுழிபுரம் பகுதியில் இருந்தே இந்தப்படகு இந்தியா சென்று வருவது வழக்கம். இதற்குப் பொறுப்பாக வதிரி சதீஸ் இருந்தார். ( சதீஸ் புளொட்டினால் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்). இந்தப்படகு கூட பல்வேறு காரணங்களால் ஒழுங்காக இந்தியா சென்று வருவதில்லை.

ஏனைய மாவட்டங்களில் இருந்து பயிற்சிக்கு செல்லத் தயாரானவர்களையும் இந்த ஒரு தூர விசைப்படகையும் வைத்துக் கொண்டு இந்தியா அனுப்புவதென்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்றாக இருந்தது. இதனால் ஆரம்பகாலங்களில் தனிநபர்களின் படகுகளை வாடகைக்கு அமர்த்துதல், மீன்பிடிக்கும் றோலர்களை வாடகைக்கு அமர்த்துதல் மூலமாகவே பெருமளவானவர்கள் இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இத்தகைய செயற்பாடுகள் சுழிபுரம், மாதகல், இளவாலை, நெடுந்தீவு, மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் இருந்து இடம் பெற்றன. சுழிபுரம், மாதகல், இளவாலை, பிரதேசங்களில் இத்தகைய செயற்பாடுகளை குமரன் (பொன்னுத்துரை), இளவாலை போத்தார், மாதகல் ரவி ஆகியோர் கவனித்து வந்தனர். நெடுந்தீவு, மண்டைதீவு போன்ற இடங்களில் படகுப் போக்குவரத்து நடவடிக்கைளில் ஜீவன் தொடர்புகளை ஏற்படுத்தி தந்தார். பிற்பட்ட காலங்களில் மேலதிக படகுகளை புளொட் சொந்தமாக வாங்கிக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான புளொட்டின் ஆரம்பகால கடல்போக்குவரத்தென்பது மிகவும் சிக்கலானதொன்றாகவும், பல கஸ்டங்களையும் நெருக்கடிகளையும் கடந்தாக வேண்டியதொன்றாகவும் இருந்ததென்பதே உண்மை.

29/04/2011

(தொடரும்)

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7820:2011-04-29-201033&catid=348:2011-04-17-18-05-29

மறுபடியும் முதல்லயிருந்தா..... :(

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சோத்துப் பார்சலை எதிர்பார்க்கினம் போல.. உங்களைப் பொறுத்த வரை எனி.. காட்டிக் கொடுத்துப் பிழைக்க மக்களும் இல்ல.. புலிகளும் இல்ல என்ற நிலையில்.. வயிறு காய்ஞ்சா என்ன செய்ய முடியும். நீங்க அசை போட்டும் ஒன்று ஆகப் போறதில்ல. திருந்தப் போறதும் இல்ல. அப்பவும் இப்பவும் எப்பவும் அதே புலி வாந்தி தான்..!

உருப்படியா மக்களுக்கு ஏதாச்சும் செய்யனுன்னு விரும்பினா.. பேசாம.. ஆயுதங்களை தந்தவர்களிடம்.. அதாவது தமிழின எதிரிகளிடம் கையளித்துவிட்டு.. அனைத்து சித்திரவதை முகாம்களையும் மூடிவிட்டு.. சாதாரண வாழ்விற்கு மக்களுக்கு தொந்தரவில்லாத வகைக்கு.. திரும்பினாலே பெரிய காரியம்..! :icon_idea::lol:

  • தொடங்கியவர்

மீண்டும் சோத்துப் பார்சலை எதிர்பார்க்கினம் போல.. உங்களைப் பொறுத்த வரை எனி.. காட்டிக் கொடுத்துப் பிழைக்க மக்களும் இல்ல.. புலிகளும் இல்ல என்ற நிலையில்.. வயிறு காய்ஞ்சா என்ன செய்ய முடியும். நீங்க அசை போட்டும் ஒன்று ஆகப் போறதில்ல. திருந்தப் போறதும் இல்ல. அப்பவும் இப்பவும் எப்பவும் அதே புலி வாந்தி தான்..!

உருப்படியா மக்களுக்கு ஏதாச்சும் செய்யனுன்னு விரும்பினா.. பேசாம.. ஆயுதங்களை தந்தவர்களிடம்.. அதாவது தமிழின எதிரிகளிடம் கையளித்துவிட்டு.. அனைத்து சித்திரவதை முகாம்களையும் மூடிவிட்டு.. சாதாரண வாழ்விற்கு மக்களுக்கு தொந்தரவில்லாத வகைக்கு.. திரும்பினாலே பெரிய காரியம்..! :icon_idea::lol:

:D:lol::D

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

புளொட்டின் வளர்ச்சியில் தோழர் தங்கராசாவின் பாத்திரம் 83 ஆகஸ்ட்

புளொட்டினது மக்கள் அமைப்பினை கட்டியெழுப்பும் முகமாக உறுப்பினர்களை அரசியல் ரீதியில் வளர்த்தல், பயிற்சியளித்தல் என்பன ஆரம்பமாயின. இதற்காக தோழர் தங்கராசா வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார். தோழர் தங்கராசா மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இடதுசாரித் தத்துவத்தில் நன்கு பரிச்சயமான ஒருவர். மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த தோழர் தங்கராசா ஜே.வி.பியின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தவர்.

Rohana.jpg

(ஜே.வி.பி Rohana Wijewera)

மலையகத்தில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட இவர் பின்பு வவுனியாவில் குடியேறினார். தோழர் தங்கராசாவின் யாழ்ப்பாண வருகையை தொடர்ந்து அரசியல் பாசறைகளை நடத்துதல், கிராமங்கள் தோறும் கருத்தரங்குகளை நடத்துதல் என்பன ஆரம்பமாயின. தொடர்ச்சியாக நடைபெற்ற அரசியல் பாசறைகளுக்கூடாக அதில் பயிற்சி பெற்றவர்கள் தத்தமது பிரதேசங்களுக்குச் சென்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தல், அவர்களை அரசியல் மயப்படுத்தல், அமைப்புகளாக்குதல், புதிய அங்கத்தவர்களை இணைத்தல் போன்ற செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டனர். மக்கள் மத்தியில் சென்று எவ்வாறு பிரச்சாரம் செய்வது, மக்களை எப்படி அவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சனைகளுக்கூடாக அணுகுவது, அவர்களை எப்படி வென்றெடுத்து எமது பக்கம் அணிதிரட்டுவது, என்றெல்லாம் தோழர் தங்கராசா தனது பாசறைகளில் தெளிவுபடுத்துவார். அத்துடன் மகளிர் அமைப்பு, மாணவர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு (கடற் தொழிலாளர் அமைப்பு, நகர சுத்தித் தொழிலாளர் அமைப்பு, கூலித் தொழிலாளர் அமைப்பு, சுருட்டுத் தொழிலாளர் அமைப்பு, ஆட்டோ நடத்துனர் அமைப்பு), விவசாயிகள் அமைப்பு போன்றவற்றை உருவாக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவற்றை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டிலும் தோழர் தங்கராசா ஈடுபட்டார். மகளிருக்கு அரசியல் பயிற்சியளித்து அவர்களை தனித்துவமாக செயற்படுமாறு உற்சாகமளித்தார். ஆரம்பகாலங்களில் மகளிர் அமைப்புக்குப் பொறுப்பாக செல்வி நியமிக்கப்பட்டு அதன் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து வந்தார்.

selvi2.jpg

(சேமமடு செல்வநிதி தியாகராசா – புலிகளால் ஆகஸ்ட் 30, 1991 கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்)

செல்வியுடன் இணைந்து நந்தா, வனிதா ,யசோ (தேவிகா தயாபரன்) கலா, செல்வம் போன்றோர் செயற்பட்டு வந்தனர்.

Yaso_2.jpg

யசோ (தேவிகா தயாபரன்) (மட்டக்களப்பு உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் நிறைவேற்றுப் பணிப்பாளர் Feb 2010 இல் இருதய நோயினால் காலமானார்)

மாணவர் அமைப்புக்குப் பொறுப்பாக அசோக் செயற்பட்ட அதேவேளை அவருடன் இணைந்து தீபநேசன், ஹப்பி,

vimales.jpg

(விமலேஸ்வரன்)

விமலேஸ்வரன், அர்ச்சுனா என்போர் செயற்பட்டு வந்தனர். தொழிற்சங்க அமைப்புக்கு பொறுப்பாக நீர்வேலி ராஜன் செயற்பட்டு வந்தார். சுரேன், கண்ணாடி நாதன், சிறி (கோவிந்தன்) என்போர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் பின்னர் ராஜனுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். புளொட், தளத்தில் பல்வேறுபட்ட அமைப்பு வடிவங்களில் பலம்பெற்று விளங்கியதற்கு தோழர் தங்கராசாவின் அரசியற்பயிற்சியும் வேலைத்திட்டங்களும் தான் பிரதான பங்கை வகித்தது எனலாம். வெறுமனே ஆயுதங்களையும் இராணுவ நடவடிக்கைகளையும் வைத்துக் கொண்டு ஈழவிடுதலைப் போராட்டம் நடத்தலாம் என்று புளொட்டுக்குள் இருந்த நிலையை மாற்றி இத்தகைய அமைப்புக்களையெல்லாம் உருவாக்குவதற்கு மூலகர்த்தாவாக இருந்தது மட்டுமல்லாது அவற்றை வளர்ப்பதற்கு நடைமுறையில் சரியாக வழிகாட்டிய ஒரே நபரும் தோழர் தங்கராசாவே.

நான் புளொட்டில் இணையும் போது புளொட்டின் கொள்கை என்னவென்றெல்லாம் கேட்டது கிடையாது. அப்படி அறிந்து கொண்டுதான் செயற்பட வேண்டும் என்று நான் நினைக்கவும் இல்லை. தோழர் தங்கராசாவின் அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் பங்குபற்றியதன் மூலமே குறைந்தபட்சம் புளொட்டினது கொள்கை என்ன என்பதை அறிய முடிந்தது. (இது நடைமுறையில் எந்தளவிற்கு பின்பற்றப்பட்டது என்பது வேறு விடயம். இது பற்றிப் பின்னால் பார்ப்போம்).

இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் சிங்கள-தமிழ் முற்போக்கு சக்திகளின், உழைக்கும் மக்களின் ஒற்றுமை, சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் இணைந்து பேரினவாத அரசுக்கெதிராக போராடுதல், சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் போராட்டத்துடன் கைகோர்த்தல், சிங்கள – தமிழ் உழைக்கும் மக்களுக்கிடையேயான ஜக்கியப்பட்ட போராட்டமில்லையேல் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடையப் போவதில்லை என்ற நிலைப்பாடு அனைத்துமே முற்போக்கானதும் சரியானதுமாகும். இதையே தோழர் தங்கராசா தனது அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்வதோடு மட்டுமல்லாமல், இன்று இருக்கின்ற பழைய (தோழரின் சொல்லில் சொல்வதானால் "உழுத்துப் போன" பெருமளவுக்கு நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களுடன் கூடிய) சமூக அமைப்பைப் பற்றிய ஆழமான, விஞ்ஞானரீதியான விளக்கங்களுடன் எடுத்துச் சொல்வதுடன், அமையப்போகும் புதிய சமுதாய அமைப்பைப்பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுவார். இவரது பேச்சுத்திறன், அதன் மூலம் எவரையும் தன்பக்கம் கவர்ந்திழுக்கும் பண்பு, சமூக அமைப்பைப்பற்றியும், சமுதாயப் பிரச்சனைகளைப்பற்றியும் எளிமையாக எடுத்துரைக்கும் இயல்பு என்பன எவரையும் கவர்ந்தது போலவே என்னையும் கவர்ந்தது. தோழர் தங்கராசா ஒரு சிறந்த அரசியல்வாதி, ஒரு சிறந்த பேச்சாளன், ஒரு சிறந்த கிளர்ச்சியாளன் என்று கூடச் சொல்லலாம். (புளொட்டின் சிதைவுக்குப் பின்னர் தோழர் தங்கராசா இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பி மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தார். 2010 ம் ஆண்டு மாரடைப்பால் காலமானார்).

thangarajah3.jpg

(தோழர் தங்கராசா)

சுந்தரம் படுகொலை: " புதியபாதை" யின் முடிவல்ல.

1982 ஜனவரி 02ம் திகதி யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் "புதியபாதை" பத்திரிகையின் அச்சுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் "புதியபாதையின்" ஆசிரியர் சுந்தரம்(வலிகாமம் மேற்கு, சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) தமிழீழ விடுதலைப் புலிகளால் கோழைத்தனமாக பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். சுந்தரத்தின் கொலையின் பின்னரே தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களை "எதிரிகளாக" பகிங்கரமாக பிரகடனப்படுத்தி அரசியல் படுகொலைகளை நடத்திய "புதிய அத்தியாயம்" ஒன்று ஆரம்பித்தது.. சுந்தரத்தின் படுகொலையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தனர்.

Sundaram.jpg

("புதியபாதையின்" ஆசிரியர் சுந்தரம்)

(1) தமிழ்மக்களின் போராட்டத்தை முழுமையாக குத்தகைக்கு எடுத்திருப்பது தமிழீழ விடுதலைப் புலிகள் தான்.

(2) ஒரு மனிதனுடைய எந்தவிதமான அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் (பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம்) தமிழீழ விடுதலைப் புலிகள் மதிக்கப் போவதில்லை.

சுந்தரத்தின் படுகொலையின் பின் "புதியபாதை" யை தொடர்ந்து வெளிக்கொணர்வதில் புளொட் பல்வேறு நெருக்கடிகளையும் முகம் கொடுக்க நேர்ந்தது. சுந்தரத்தினுடைய பணியை யார் தொடர்வது என்பது ஒரு கேள்வியாக எழுந்தது. அரசபடைகளின் அச்சகங்கள் மீதான கண்காணிப்பு, அச்சகங்களை சுற்றிவளைத்து சோதனையிடுதல் ஒருபுறமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல் மறுபுறமுமாக இருந்ததால் அன்றைய நிலையில் "புதியபாதை" யின் தொடர்ச்சியான வருகை தடைப்பட்டிருந்தது. 1983 யூலை இன அழிப்பைத் தொடர்ந்து " புதியபாதை" யின் தேவை உணரப்பட்டதால் மீண்டும் " புதியபாதை" யாழ்ப்பாணத்தில் அச்சேறியது. தமிழீழ விடுதலைப் புலிகள் சுந்தரத்தை கொலை செய்வதன் மூலம் எதைச் சாதிக்க நினைத்தார்களோ அது நடைபெறவில்லை. 1983 யூலைக்கு பின் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து

" புதியபாதை" யை வெளிக்கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக சத்தியமூர்த்தி, கண்ணாடிச் சந்திரன், திருகோணமலை பார்த்தன், யாழ்ப்பாண பல்கலைக்கழக திருமலை கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா ஆகியோர் ஆவர்.

kethees.jpgkirubha.jpg

(கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாகரனும் 1984 ஏப்ரல் ஆரியகுளத்தருகே இராணுவத்தால் சுடப்பட்டு அவ்விடத்திலேயே எரியூட்டப்பட்டார்கள்),

Paarththan.jpg

திருகோணமலை பார்த்தன் (ஜெயச்சந்திரன் ) மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் துப்பாக்கியினால் தற்கொலை செய்தவர்),

akilan-selvan.jpg

திருகோணமலை செல்வன்(கிருபா- புளொட்டினால் மூதூரில் படுகொலை செய்யப்பட்டவர் - இடது பக்கத்தில்)

மத்தியகுழு உறுப்பினரான ராமதாஸ், புளொட்டின் நீண்டகால உறுப்பினரான உரும்பராய் ராசா, குரு(கல்லுவம்) போன்றோரும் "புதியபாதை" வெளிவர பல்வேறு உதவிகளைச் செய்தவர்களாவர். இந்தக் காலப்பகுதியில் காந்தன் (ரகுமான் ஜான்) தள அரசியலுக்கு பொறுப்பாகவும் பார்த்தன் (ஜெயச்சந்திரன்) இராணுவத்துக்கு பொறுப்பாகவும் செயல்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் அரசபடைகளின் அச்சகங்கள் மீதான தேடுதல் நடவடிக்கைகள், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்கள் தொடர்ந்து கொண்டிருந்ததால் பிற்பட்ட காலங்களில் வீடுகளில் வைத்தே "புதியபாதை" அச்சாகிக் கொண்டிருந்தது. 1984 மே வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "புதியபாதை" நெருக்கடிகள் காரணமாக (முன்னணித் தோழர்களின் கைதுகள், மரணங்கள்) பின்பு சென்னையில் அச்சடிக்கப்பட்டது.

06/05/2011

(தொடரும்)

எனக்கே அலுத்து போச்சு .

ஓஓகோ உங்கடை கதை எண்டா அலுக்கும்தானே. இதுக்கும் ஏதாவது புலி வாந்தி எடுத்தா நல்லம் அர்யுன் அண்ணா

தமிழ் செர்கிளில் வரும் போதே வாசித்துவிட்டேன் .சிலவேளை பலர் வாசிக்காமல் இருக்கலாம் .

ஒரு இயக்கம் எப்படி இருக்க வேண்டும் ,எப்படி இருக்க கூடாது என்ற இரண்டும் தான் புளொட்டின் வரலாறு ,இது நேசன் மூலம் மீண்டும் நிருபணமாகின்றது.நேசன் எனது நண்பரும் கூட .

  • தொடங்கியவர்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

"வங்கம் தந்த பாடம்" : வரலாற்றிலிருந்து படிப்பினை பெறாத நாம்.

யூலை 1983 இற்குப் பின் இலங்கையின் இனப்பிரச்சனை என்பது வெறுமனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரமாக மட்டுமல்லாது, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த ஒரு கவலைக்குரிய விவகாரமாகவும், இந்திய அரசைப் பொறுத்தவரை அவர்கள் நலன்களின் "அக்கறைக்குரிய" விவகாரமாகவும் காணப்பட்டது. இதனால் இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டுக்கான சாத்தியப்பாடுகள் உணரப்பட்டது.

வங்கதேச விடுதலைப் போராட்டத்தின் போதும், வங்கதேசப் பிரிவினையின் போதும் இந்திய அரசு செயற்பட்ட விதம் குறித்தும், வங்கதேசப் பிரச்சனையை தனது நலன்களுக்கு பயன்படுத்துமுகமாக வங்கதேசப் போராளிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகித்தது குறித்தும், இறுதியில் வங்கதேசப் பிரிவினையின் பின் உண்மையான தேசபக்தர்களையும் புரட்சியாளர்களையும் சிறைகளில் அடைத்து தூக்கிலிட்டதுமான வங்கதேசத்தின் படிப்பினைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளிக்கொண்டு வருவதென்று அன்றைய புளொட் மத்தியகுழுவின் முடிவின்படி ” வங்கம் தந்த பாடம்” என்ற சிறிய கையடக்கத் தொகுப்பு 1983 புரட்டாதி மாதம் யாழ்ப்பாணத்தில் அச்சிட்டு வெளியானது. அன்று இதை வெளிக்கொண்டு வந்ததன் நோக்கம் வங்கதேசப் பிரிவினையின் போது ஏற்பட்ட அனுபவங்களிலிருந்து பெற்ற படிப்பினைகளை அமைப்பில் உள்ளோருக்கும், மக்களுக்கும் தெளிவுபடுத்துவதும் எமது போராட்டம் குறித்தும் அதில் இந்தியாவினுடைய தலையீடு குறித்தும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்பதுமேயாகும். ஆனால் "வங்கம் தந்த பாடம்" யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் போதே இந்திய அரசுக்கூடாக புளொட் உறுப்பினர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான முயற்சிகளும் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. "வங்கம் தந்த பாடம்" வெளியிட்ட பின்பு இந்தியாவிற்கு இளைஞர்களை பயிற்சிக்கு அனுப்புவது ஆரம்பமாகியது. வங்கம் தந்த பாடத்தை படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்று சொன்ன நாம் அந்தப் படிப்பினைகள் எல்லாவற்றையும புறந்தள்ளி வைத்துவிட்டு இந்தியாவின் வலைக்குள் மிக இலகுவாக இழுத்துச் செல்லப்படலானோம். நாம் வரலாற்றிலிருந்து படிப்பினையைப் பெறாதது மட்டுமல்லாமல் எமது கருத்துக்களுக்கும் நடைமுறைக்குமிடையேயான முரண்பாடாகவும் இது அமைந்தது எனலாம்.

80 களின் ஆரம்பத்தில் "இந்தியா வரும் தமிழீழம் எடுத்துத் தரும்" என்ற கனவு தமிழ்மக்கள் மத்தியிலும் தமிழ் தலைமைகள் மத்தியிலும் காணப்பட்டது. வங்கம் தந்த பாட அனுபவங்களுக்குப் பின்பும், இந்திய இராணுவம் இலங்கையில் காலடி பதித்த பின்னான அனுபவங்களுக்குப் பின்பும், 30 வருட கால ஈழவிடுதலைப் போராட்டத்தின் கசப்பான நடைமுறை அனுபவங்களுக்குப் பின்பும் கூட பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளும் அமெரிக்க, பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளும் "தமிழீழம்" பெற்றுத்தருவார்கள் என்று இன்னும் நம்பிக்கை கொள்ளும் தமிழ்மக்களும் தமிழ்த் தலைமைகளும் கடந்தகால எமது போராட்ட வரலாற்றிலிருந்து சிறிதளவேனும் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை என்பதையே காட்டி நிற்கின்றது. பிற்போக்கு இந்திய அரசியல்வாதிகளினதும், அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளினதும் நலன்கள் தமிழ்மக்களின் நலன்களுக்கும் ஒட்டுமொத்த இலங்கை மக்களின் நலன்களுக்கும் நேரெதிரானவை என்பது தான் உண்மை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனுமான ஜக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாகத்தான், அவர்களின் துணை கொண்டுதான் வெல்லப்படமுடியும்.

புளொட்டில் முரண்பாடுகளின் தோற்றுவாய்கள்

புளொட் தனது கடந்தகால "இரகசிய" அல்லது "தலைமறைவு" என்ற நிலையிலிருந்து வெளியே வரத்தொடங்கியிருந்தது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு ஆட்களை அனுப்புதல், அரசியல் பாசறைகள், மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல், என்பனவெல்லாம் ஒருவகை "அசுர" வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவற்றுக்கெல்லாம் மக்களது ஆதரவும், ஒத்துழைப்பும், பங்களிப்பும் கூட கேள்விக்கப்பாற்பட்டதாக இருந்தது. பேரினவாத அரசுக்கெதிராக சாத்தியமான அனைத்துவழிகளிலும் போராடுதல் என்பதே எமது நிகழ்ச்சிநிரலாக இருந்தது.

uma-maheswaran.jpg

(உமாமகேஸ்வரன்)

இந்தக் காலப்பகுதியில் புளொட்டின் தலைமை பற்றியும், செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றியும் உயர்ந்த மதிப்பும் தலைமை விசுவாசமும் என்னிடமும் இருந்தது என்று சொல்லவேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

santhiyayar.jpg

(சந்ததியார்)

1) புளொட் பற்றியும், உமாமகேஸ்வரன் மற்றும் சந்ததியார் பற்றியும் ஏற்கனவே மக்கள் மத்தியில் இருந்த நல்ல அபிப்பிராயமும் பிரபல்யமும். கூடவே "தமிழீழத்தின் குரல்" வானொலிச் சேவையை (ஈழப்போராட்ட வரலாற்றில் முதன்முதலில்) உருவாக்கி அதனுடாக வெளிக்கொணர்ந்த கருத்துக்கள்.

2) புளொட்டில் தளத்தில் செயற்பட்ட பெரும்பான்மையான மத்தியகுழு உறுப்பினர்களிடையே காணப்பட்ட கடின உழைப்பும எளிமையான வாழ்க்கையும்.

siva.jpg

( கொக்குவில் சிவா - உரிமை கோரப்படாமல் கடத்திப் புலிகளால் கொலை செய்யப்பட்டார்)

புளொட்டின் இராணுவப்பிரிவு தளத்தில் பார்த்தன் தலைமையில் செயற்பட்டு வந்தது. பார்த்தனுடன் இணைந்து மல்லாவிச்சந்திரன், கொக்குவில் சிவா, திருகோணமலை கிறிஸ்டி போன்றோர் செயற்பட்டு வந்தனர். இராணுவ தகவல் சேகரிப்பு பிரிவுக்கு பொறுப்பாக ரமணன் செயற்பட்டு வந்தார்.

meeran2.jpg

(சுப்பிரமணியம் சத்தியராஜன் 1962 -2001)

சுழிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆரம்பத்தில் பாலமோட்டை சிவத்தின் தலைமையிலும் பின்னர் அவர் இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்றதன் பின் மீரான் மாஸ்டரின் கீழ் "சுந்தரம் படைப்பிரிவு" என்று செயற்பட்டுக் கொண்டிருந்தனர். வவுனியாவில் யக்கடையா இராமசாமி (பின்னர் புளொட்டினால் கொலை செய்யப்பட்டார்), வவுனியா தம்பி (பின்னர் புலிகளால் கொலை செய்யப்பட்டார்) போன்றோர் "காத்தான் படைப்பிரிவு" என்றும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். யக்கடையா ராமசாமி, தம்பி போன்றோர் பார்த்தனின் தலைமையின் கீழ், பார்த்தனின் வழிகாட்டலில் செயற்பட்டுவந்த அதே நேரம் சுந்தரம் படைப்பிரிவினரோ தன்னிச்சையான போக்கில் செயற்படலாயினர். இந்தக் காலப்பகுதியில் புளொட்டின் அரசியல் பிரிவுக்கும் இராணுவப் பிரிவுக்கும் இடையே (குறிப்பாக சுந்தரம் படைப்பிரிவுக்குமிடையே) சில முரண்பட்ட போக்குகள் காணப்பட்டது மட்டுமல்லாமல் இராணுவப் பிரிவுக்குள்ளேயேயும் கூட முரண்பட்ட போக்குகளை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ஒரு அமைப்பினது ஒருங்கிணைக்கப்பட்ட, மத்தியப்படுத்தப்பட்ட செயற்பாடு என்பதற்கு மாறாக, சில தன்னிச்சையான போக்குகள் அங்கும் இங்குமாகத் தென்பட்டன.

சுழிபுரத்தை மையமாகக் கொண்டியங்கிய "சுந்தரம் படைப்பிரிவினர்" இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது மட்டுமல்லாமல், தளத்தில் அன்று இயங்கிய நிர்வாகத்துக்கும் கட்டுப்படாதவர்களுமாக இருந்தனர். பார்த்தனிடம் காணப்பட்ட மகத்தான ஆற்றல், மனோதிடம், ஆளுமை அனைத்துமே சுந்தரம் படைப்பிரிவினரை கையாளும் விடயத்தில் பெருமளவு வெற்றியளிக்கவில்லை. அன்று தளத்தில் செயற்பட்ட நிர்வாகம் கூட (காந்தன் - ரகுமான் ஜான் தள நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தார்). சுந்தரம் படைப்பிரிவினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் வெற்றிபெறவில்லை. இத்தகைய முரண்பாடுகளை நான் புளொட்டில் இணைந்த ஆரம்ப காலங்களில் அவதானித்திருந்த போதும் இந்த முரண்பாடுகள் எதிர்காலத்தில் அமைப்பின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என்று அன்று நான் கருதியிருக்கவில்லை. காரணம், இந்த முரண்பாடுகளை அன்றைய யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியும் தள இராணுவப் பொறுப்பாளர் பார்த்தனுமே நேரடியாக முகம் கொடுத்து அவற்றை கையாண்டதால், இந்த முரண்பாடுகளில் இருந்த ஆழத்தன்மையையோ அல்லது இந்த முரண்பாடுகளால் அமைப்புக்கு ஏற்படும், ஏற்படப்போகும் பாதிப்புக்களையோ என்னால் உணரமுடியாமல் இருந்தது.

(தொடரும்)

14/05/2011

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டோ நடத்துனர் அமைப்பு)

அந்த காலத்தில ஆட்டோ யாழ்ப்பாணத்தில் இருந்ததா?

Paarththan.jpg

திருகோணமலை பார்த்தன் (ஜெயச்சந்திரன் ) மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் துப்பாக்கியினால் தற்கொலை செய்தவர்),

அக்கரைப்பற்றுப் போலிஸ் நிலையம் என நினைக்கிறேன். திறமையான போராளி எனக் கேள்வி. ஆயுதம் இல்லாத இவரை யாரென்று தெரியாமல் போலீசார் கைது செய்த பின், பொலிசாரின் துப்பாக்கியை பறித்து தற்கொலை செய்திருக்க வேண்டும். இவரின் மறைவின் பின் அம்பாறைப் பகுதிகளில் இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட இருந்த புளொட் போராளிகள் சோர்ந்து போனார்கள்.

  • தொடங்கியவர்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

சுந்தரம் படுகொலையின் பின்னான சுந்தரம் படைப்பிரிவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதன் ஆரம்பகாலங்களிலேயே வெறுமனவே சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட ஒரு குழுவின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையாகவே இருந்து வந்தது(ஐயரின் "ஈழ விடுதலைப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற தொடரை படிக்கவும்). தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் தோன்றிய முரண்பாடுகளும் அதன் பின்னான " புதியபாதைக்" குழுவினரின் பிரிவும் அன்றைய சூழலில் ஓரடி முன்னோக்கிய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். அன்றிருந்த சமூக, அரசியல் பின்னணியில் இருந்து " புதிய பாதை " யின் பணியை மதிப்பீடு செய்வோமானால் இது புலனாகும். நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய, பிரதேசவாத சிந்தனைகள், சாதிய அமைப்பு முறைகளுடன் கூடிய ஒரு "பிற்பட்ட" கலாச்சாரத்தைக் கொண்ட சமூகமாக எமது சமூக அமைப்பு இருந்தது. சிங்கள பேரினவாதம் ஒருபுறமும் தமிழ்க்குறுந்தேசியவாதம் மறுபுறமும் கோலோச்சிய காலமாக இருந்தது.

இத்தகையதொரு சூழலில் சுந்தரத்தின் முன்முயற்சியில் வெளிவந்த "புதியபாதை" ஈழ விடுதலைப் போராட்டத்தில் முற்போக்கான அரசியல் சிந்தனையின் ஒரு மைல் கல்லேயாகும். முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழர் விடுதலைக் கூட்டணி குறுந்தேசிய வெறியை மக்கள் மத்தியில் விதைத்து விட்டிருந்த வேளையில், தமிழீழ விடுதலைப் புலிகள் சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன் கூடிய தனிநபர் பயங்கரவாதத்தையே அவர்களது அரசியலாகக் கொண்ட வேளையில், சுந்தரமோ இடதுசாரி அரசியலுடன் கூடிய மாற்றுக்கருத்தை மிகவும் துணிச்சலுடன் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற ஒரு எளிமையான போராளி. ஆனால் சுந்தரம் " புதியபாதை" பத்திரிகையை வெளியிட்டுக் கொண்டிருந்தபோதும் கூட, தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பில் இருந்து பிளவுபட்டு வந்திருந்த காரணத்தால் அரசியல் ரீதியில் அதன் தொப்புள்கொடி உறவுகளிலிருந்து முற்றாக விடுபட்டிருக்கவில்லை என்றொரு உண்மையையும் நாம் கண்டுகொள்ள வேண்டும்.

SJV.jpg

Amir.jpg

அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு நேர் எதிரிடையான அரசியலை எடுத்துச் செல்லும் " புதியபாதை" பத்திரிகை தங்களை அம்பலப்படுத்துவதை விரும்பாத நிலையில் கூட்டணித்தலைமை அன்றிருந்தது. மக்கள் மத்தியில் சுதந்திரன் போன்ற பத்திரிகைகள் கூட்டணி சார்பாக குறுந்தேசிய வெறிகளைக் கிளப்பி கூட்டணிக்கு பலம் சேர்த்துக் கொண்டிருந்த நிலைமையை தலைகீழாக்கும் "புதியபாதை"யின் கருத்துக்கள் தகர்த்துவிடுமோ என்ற அச்சத்தினால் கூட்டணித்தலைமையால் வெறுக்கப்பட்டது. தனது பக்கத்தில் சார்ந்திருக்கும புலிகளுக்கு யார் யார் துரோகிகள் என சுட்டுவிரல் காட்டி மேடைகளில் பேசி தூபம் இட்டனரோ அவர்களை புலிகள் தமிழினத் துரோகிகள் என்று பெயரில் கொன்றழித்தனர்.

thuraiyappa.jpg

(அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினரால் துரோகியென பிரகடனப்படுத்தப்பட்டு அதன் மூலம் புலிகளுக்கு கொலையாணை வழங்கி துப்பாக்கிச் சூட்டுக்கு இரையாக்கப்பட்ட யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா)

இவ்வாறே சுந்தரத்தின் கொலைக்கான அரசியல் காரணங்கள் அன்று திரண்டிருந்தன. கூட்டணியின் விருப்பை புலிகள் நிறைவேற்றி வைத்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுந்தரம் படுகொலையும் அதற்குப் பழிவாங்கும் முகமாக புளொட்டினால் மேற்கொள்ளப்பட்ட இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலைகளும், 1982 மே 19 சென்னை மாம்பழம் பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரன்(முகுந்தன்), ஜோதீஸ்வரன் (கண்ணன்) ஆகியோரை கொல்வதற்காக அவர்கள் மீது பிரபாகரன் நடாத்திய துப்பாக்கி வேட்டுக்களுக்குப் பின்னான நாட்கள் இரண்டு அமைப்புக்களுமிடையிலான முறுகல் நிலையாக மாறியிருந்தது.

uma-maheswaran.jpg

kannan.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைமிரட்டல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்கு புளொட் நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனால் சுந்தரத்துடன் செயற்பட்டவர்கள் உட்பட சுழிபுரம் பகுதியையும் அதைச் சூழவுள்ள பகுதியினரும் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும் ஜனநாயக மறுப்புக்கும் எதிராக முகம் கொடுக்கத் தயாரானார்கள். சுந்தரம் சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பதாலும், புளொட்டின் ஆரம்பகாலங்களில் சுழிபுரத்தையும் அதைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள இளைஞர்கள் கணிசமாக இருந்ததாலும், சுழிபுரத்தை மையமாகக் கொண்டு இவர்கள் செயற்படக் காரணமாக இருந்தது. இதன் ஆரம்ப காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கும், ஜனநாயக மறுப்புக்கும் எதிராக துணிச்சலுடன் முகம் கொடுத்தவர்கள் பின்னாட்களில் தம்மை "சுந்தரம் படைப்பிரிவு" என்ற பெயரில் அழைக்கத் தொடங்கியது மட்டுமல்லாமல் தமது நடவடிக்கைகளுக்கு "சுந்தரம் படைப்பிரிவு" என்றே உரிமையும் கோரினர். இவ்வாறு உருவான " சுந்தரம் படைப்பிரிவை" ச் சேர்ந்தவர்கள் புளொட்டுக்குள் ஒருவகை அதிகாரத்தன்மை கொண்டவர்களாகவும் புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் வெளிப்படுத்திக் கொண்டனர். இலங்கையின் அரச படைகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், தமிழீழ விடுதலைப்புலிகளின் எதேச்சதிகாரத்துக்கெதிராகவும் போராடி புளொட்டை வளர்த்தது தாம் என்பதால் " சுந்தரம் படைப்பிரிவு " தான் புளொட் என்ற ஒரு மனோநிலை இவர்களிடத்தில் வளர்ந்திருந்தது. இதனால் புளொட்டின் தளநிர்வாகத்துடன் முரண்பாடு கொண்டவர்களாகவும் தளநிர்வாகத்துக்கு கட்டுப்படாதவர்களாகவும் காணப்பட்டனர். " சமூகவிரோதிகள் ஒழிப்பு", தமது செலவீனங்களுக்குத் தேவையான பணத்தை அரச தபாற்கந்தோர் போன்ற இடங்களில் கொள்ளையிடுதல் மூலம் பெற்றுக் கொள்ளுதல், அன்றாட தனி நபர்சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் (சாதிப்பிரச்சனை, காதல் விவகாரங்கள்) தலையிடுதல் என்பனவற்றில் தாமாகவே முடிவெடுத்து செயற்பட்டனர். இவர்களிடையே சாகசப் போக்கும் ஆயதக் கவர்ச்சியும் குழுவாதமும் தலையெடுத்திருந்தது. புளொட்டின் அரசியல் கருத்துக்கள் எதுவும் தங்களுக்கு பொருந்தாதது அல்லது நடைமுறைக்குதவாதது என்ற கருத்துப் போக்கும் இவர்களிடம் காணப்பட்டது. உமாமகேஸ்வரனுடன் தமக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் அவரின் அனுமதியுடன் தான் செயற்படுவதாகவும் இதற்கு விளக்கம் கொடுத்திருத்தனர். எந்த எதேச்சதிகாரப் போக்கு தவறானதென்று சுந்தரம் படைப்பிரிவினர் தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்கொண்டார்களோ, பின்பு அதே எதேச்சதிகாரப் போக்குகளுடன் சுந்தரம் படைப்பிரிவினர் புளொட்டுக்குள் விருட்சம் போல் வளர்ந்து நின்றனர்.

எதேச்சதிகாரப் போக்குடன் சுந்தரம் படைப்பிரிவினர்

புளொட்டில் முழுநேரமாக செயற்பட்ட சிலர் தங்கள் செலவுக்கென ( உணவு, போக்குவரத்து) மாதாந்தம் பணம் பெற்று வந்தனர். ஆனால் அதற்குச் சரியான கணக்கு எழுதப்பட்டு தலைமையிடம் அல்லது சம்பந்தப்பட்ட நபருக்குப் பொறுப்பானவரிடம் கொடுக்கப்பட வேண்டும். சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்களோ செலவுகளுக்கு கொடுக்கும் பணத்துக்கு கணக்குக் கொடுப்பதைத் தவிர்த்து வந்தனர். இவர்களது இத்தகைய தவறான போக்கை நிறுத்துவதற்கு செலவுகளுக்கான கணக்கு கொடுத்தால் மட்டுமே பணம் கொடுப்பதென்று முடிவாகி சந்ததியாரின் வேண்டுகோளின் பேரில் சுந்தரம் படைப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் சுந்தரம் படைப்பிரிவினர் மானிப்பாய் தபால் அலுவலகத்தை கொள்ளையிட்டு தமது செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டனர். புளொட்டினுடைய கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படியாதவர்களாக, அதன் நடைமுறைகளைக் கடைப்பிடிக்காதவர்களாக, தள நிர்வாகத்துக்குக் கீழ்ப்படியாதவர்களாக சுந்தரம் படைப்பிரிவினர் விளங்கினர்.

சந்ததியார் அமைப்புக்குள் கொள்கை கட்டுப்பாடு என்பவற்றை தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஒருவர். சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகளுக்கு எதிராக சந்ததியார் நேரடியாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகளை எடுத்து வந்தவர். இதனால் சந்ததியார் மீது வெறுப்புணர்வும் காழ்ப்புணர்ச்சியும் கூட இவர்களிடத்தில் வெளிப்படையாகக் காணப்பட்டது. சந்ததியார் சுந்தரம் படைப்பிரிவினரின் தவறான போக்குகள் மேல் காட்டிய "கடும்" போக்கும், அதேவேளை உமாமகேஸ்வரன் அவர்கள் மேல் காட்டிய "மென்" போக்கும் சுந்தரம் படைப்பிரிவினரிடையே சந்ததியார் மீதான வெறுப்புணர்வை வளர்ப்பதற்கு காரணமாக இருந்தது மட்டுமல்லாது அவர்களை உமாமகேஸ்வரனை நோக்கி அணிதிரளவும் வைத்தது. இதுவே அமைப்புக்குள்ளே குழுவாதம் தோன்றி வளர்வதற்கும் காரணமாக அமைந்தது.

santhiyayar.jpg

அரசியல் பேசுபவர்கள் கொள்கை மற்றும் கட்டுப்பாடு பற்றிப் பேசுபவர்கள் சந்ததியாரின் கருத்துக்கு ஆதரவாகக் காணப்பட்டனர். மக்கள் அரசியலைப் புறக்கணித்த கொள்கை கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக் காட்டிக் கொண்டவர்கள் உமாமகேஸ்வரனைச் சுற்றி அணிதிரண்டனர்.

வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து போட்டோப்பிரதி இயந்திரம்,றோணியோ இயந்திரம் போன்றவற்றை கொள்ளையிடுவதென்று சுந்தரம் படைப்பிரிவினர் முடிவு செய்திருந்தனர். இந்தத் தகவலை அறிந்து கொண்ட மத்தியகுழு உறுப்பினர்களான சத்தியமூர்த்தியும், கேதீஸ்வரனும் இத்தகைய தேவையற்ற, தள நிர்வாகக்குழுவின் முடிவற்ற ஒரு கொள்ளை தேவையல்ல என்றும், இதனை உடனே நிறுத்தும்படியும் தள நிர்வாகப் பொறுப்பாளரை( காந்தன்- ரகுமான் ஜான்) கேட்டுக் கொண்டனர். ஆனால், தள நிர்வாகப் பொறுப்பாளரான காந்தனோ(ரகுமான் ஜான்) இந்த விடயத்தில் நேரடியாக முகம் கொடுத்து உரியமுறையில் தீர்த்துவைப்பதைத் தவிர்த்து சத்தியமூர்த்தியையும் கேதீஸ்வரனையும் அவர்களே கையாளும்படி விட்டுவிட்டார். மத்தியகுழு உறுப்பினர்களான இருவரும் சுந்தரம் படைப்பிரிவினரிடம் சென்று பேசினர். மத்தியகுழு உறுப்பினர்களுடன் நீண்ட தர்க்கத்தில் ஈடுபட்ட சுந்தரம் படைப்பிரிவினர் அவர்களுக்கு கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி விட்டனர் வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரி கொள்ளையிடப்பட்டது. இந்தக் கொள்ளை, அன்று எந்தவித தேவையுமற்ற எந்தவித பயனுமற்ற கொள்ளை என்பதோடு மட்டுமல்லாமல், புளொட்டின் தளநிர்வாகத்தின் முடிவில்லாத, மத்தியகுழு அங்கத்தவர்களின் சரியான கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத, புளொட்டின் இராணுவப்பிரிவு என்று சொல்லப்படும் ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயற்பாடாகும் இதுபோன்ற தன்னிச்சையான முடிவுகளும் செயற்பாடுகளும் புளொட்டின் ஆரம்ப காலங்களிலேயே புற்றுநோய் போல் தோன்றி வளர்ந்து வந்தது.

(தொடரும்)

20/05/2011

  • தொடங்கியவர்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

சந்ததியார் படகுவழியாக இந்தியாவிலிருந்து வருகை

புளொட்டுக்குள் தோன்றியிருந்த தவறான போக்குகள் குறித்து ஆரம்ப காலங்களிலேயே பல்வேறு மட்டங்களிலும், புளொட்டுக்குள்ளேயே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் கூட, அவற்றிற்கு சரியான முறையில் தீர்வு காணப்படவில்லை - மத்தியகுழு என்று சொல்லப்பட்ட குழுவிலும் கூட. இதற்கு முக்கிய காரணம் என்னவெனில் புளொட் தலைமையில் இருந்த பெரும்பான்மையானோர் தாம் தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து வித்தியாசமான போக்கை கொண்டவர்களென்றும், மார்க்சிய சிந்தனையாளர்கள் என்றும், எமது போராட்டத்தினூடாக "அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்து" சமத்துவ சமுதாயம் படைப்போம் என்றும் கூறிக் கொண்டனரே தவிர, அதற்கான தத்துவார்த்த வழிகாட்டலையே, அரசியல் அறிவையோ கொண்டிருக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

plote_logo.jpg

இந்த உண்மை நாம் புளொட்டிலிருந்து வெளியேறி "தீப்பொறி" க் குழுவாக செயற்படத் தொடங்கியபோது புளொட்டின் மத்திய குழுவில் அங்கம் வகித்திருந்தவர்களான "புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக்(கேசவன்), காந்தன்(ரகுமான் ஜான்), கண்ணாடிச் சந்திரன் மூலமும் அவர்களின் கருத்துக்கள் மூலமும் தெட்டத் தெளிவாகியது.

kesavan.jpg

"புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக்(கேசவன்)

தோழர் தங்கராசா, "புதியதோர் உலகம்" ஆசிரியர் டொமினிக்(கேசவன்) போன்றோருக்கு இடதுசாரி அரசியலில் இருந்த பரிட்சயமும், ஓரளவு தெளிவும் புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பாக வெளிக்காட்ட உதவியாக இருந்தது என்று கூறலாம். ஏனைய சில மத்தியகுழு அங்கத்தவர்களைப் பொறுத்தவரை இடதுசாரித்தத்துவத்தின்பால் பெரிதும் கவரப்பட்ட, சமுதாய மாற்றத்தில் அக்கறை கொண்டோராக காணப்பட்டபோதும் கூட வெறும் கோசங்களுடன் தங்களை மட்டுப்படுத்திக் கொண்டனர். இன்னும் ஒரு பகுதி மத்தியகுழு உறுப்பினரோ கண்மூடித்தனமான தலைமை விசுவாசம் மட்டுமே, போராளியாய் இருப்பதற்கான முன்நிபந்தனை என்று கருதினர்.

மார்கழி 1983 காந்தன் (ரகுமான்ஜான்) இந்தியா சென்ற பின்னர் ரகுமான் ஜானின் நண்பனான சலீம் தள நிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். தளத்தில் செயற்பட்ட உறுப்பினர்களால் புளொட்டினுடைய தவறான போக்குகள் குறித்து (சுந்தரம் படைப்பிரிவினரின் தன்னிச்சையான செயற்பாடுகள், அரசியல் ரீதியில் தவறான போக்குகள்) விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களை முன்வைத்ததில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவர்கள் சத்தியமூர்த்தியும் கேதீஸ்வரனுமாவார். இதனால் புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களிடையே ஒருவகையான " குழப்பநிலை"யும். "தளர்வு" மனப்பான்மையும் காணப்பட்டது. இந்த நிலையில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் குறித்துப் பேசுவதற்கும், பிரச்சனைகளைக் கையாளுவதற்கும் என்று சந்ததியார் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

santhiyayar.jpg

சந்ததியார்

முன்னணி அங்கத்தவர்கள் பங்குபற்றிய கூட்டம் கொக்குவிலில் இடம்பெற்றது. இதில் சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன், பார்த்தன், பெரியமுரளி, பொன்னுத்துரை, ஈஸ்வரன், யக்கடயா ராமசாமி, ராமதாஸ், கண்ணாடிச் சந்திரன், சலீம், முத்து (வவுனியா) போன்றோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன; பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன; ஆனால் பிரச்சனைகள் உரியமுறையில் தீர்வு காணப்படவில்லை. மாறாக, அனைத்து அங்கத்தவர்களையும் நம்பிக்கையுடன் செயற்படுமாறு சந்ததியார் கேட்டுக் கொண்டார். சந்ததியார் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை போன்ற குறுந்தேசியவாத தீவிர வலதுசாரி அரசியலில் இருந்து இடதுசாரி அரசியலை நோக்கி வந்த ஒருவர். யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தபோது JVP உறுப்பினர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. JVP உறுப்பினர்களுடனான கருத்து பரிமாற்றங்கள் சந்ததியாரின் சிந்தனைப் போக்கில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. சந்ததியார் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் போது இடதுசாரி போக்கின் மேல் ஆர்வம் கொண்டவராக, இடதுசாரிய சிந்தனை உடையவராக காணப்பட்டார். இவரது இந்த இடதுசாரி போக்கானது ஒரு முழுமையான இடதுசாரிய சிந்தனையை கொண்டிராத போதும் கூட, அதை நோக்கிய தேடலாக, அதை நோக்கிய வளர்ச்சியாக, அதை பிரநிதித்துவப்படுத்துவதை நோக்கியதாக இருந்தது. சந்ததியார் சிந்தனையளவில் மட்டும் முற்போக்காளராக இருக்கவில்லை; உதட்டளவில் மட்டும் ஒடுக்கப்பட்ட மக்கள் பற்றி பேசுவதோடு மட்டும் நின்று விடவில்லை; அவர் நடைமுறையில் காந்தீயம் என்ற அமைப்புக்கூடாக இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மலையகத்தில் இருந்து இடம்பெயந்த அகதிகளை குடியேற்றி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கு கடுமையாக உழைத்தவர்.

கடின உழைப்புக்கு முன்னுதாரணமாக விளங்கிய சந்ததியார் நேர்மையும் எளிமையும் கொண்ட ஒரு போராளியாக புளொட்டுக்குள் விளங்கினார். ஆனால் சந்ததியாரின் இத்தகைய நல்ல பண்புகள் எதுவுமே ஒரு அமைப்புக்குள் தோன்றும் முரண்பாடுகளை தீர்ப்பதற்கு ஏதுவாக அமையவில்லை. காரணம், ஒரு புரட்சிகர அமைப்பானது சரியான தத்துவார்த்த அரசியல் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஜனநாயக மத்தியத்துவப்படுத்தப்பட்ட, அமைப்புக் கோட்பாடுகள், கட்டுப்பாடுகளுடன் கூடிய, ஒரு அமைப்பாக இருந்திருக்க வேண்டும். புளொட் அமைப்பு அன்று அப்படி இருக்கவில்லை. சிறுகுழு என்ற நிலையில் இருந்த புளொட் ஜூலை 1983 இன அழிப்பு தொடர்ந்து திடீர் வீக்கத்தை கண்டிருந்தது. இதனால் சந்ததியார் எவ்வளவுதான் கடின உழைப்பாளியாகவும், நேர்மையானவராகவும், எளிமையானவராகவும் இருந்த போதும் கூட, முரண்பாடுகளின் தோற்றுவாய்களை இனங்காண்பதில், முரண்பாடுகளை கையாளுவதில் வெற்றிபெற முடியவில்லை.

இச்சந்திப்பின் பின்னர் முன்னணி அங்கத்தவரான கேதீஸ்வரன் புளட்டின் செயற்பாடுகளில் நம்பிக்கையற்றவராக அதிருப்தி அடைந்தவராக காணப்பட்ட போதும், அன்றைய சூழலோ மாறுபட்ட ஒன்றாக இருந்தது. இனவாதத்திற்கெதிரான போராட்டத்தின் தேவை, அதற்கெதிராக ஏதாவது ஒருவழியில் போராட வேண்டும் என்ற நிலை, மக்கள் மத்தியில், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், மாணவர்கள் மத்தியில் தோன்றியிருந்த மனோநிலை போன்றவை, எவரையுமே ஏதாவது ஒரு அமைப்புடன் இணைந்து செயற்படுமாறு தூண்டியது. இதுவே அன்றைய பொதுப் போக்காகவும் இருந்தது. கேதீஸ்வரனுடனான மத்தியகுழு உறுப்பினர்களின் கருத்துப்பரிமாற்றங்களுக்கூடாக அவர் மீண்டும் புது ஆற்றலுடன் செயற்படத் தொடங்கினார். இயக்கங்களின் வளர்ச்சி கண்டு அரசபடைகள் உசாரடைந்தன. இயக்கச் செயற்பாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை வேட்டையாடும் முயற்சிகள் தொடங்கின.

தலைமறைவு" அமைப்பு என்ற நிலையிலிருந்து பகிரங்க" அமைப்பு என்ற நிலைக்கு வரும்போது தவிர்க்கமுடியாமல் எமது செயற்பாடுகள் குறித்து எதிரி அறிந்து கொள்ள பெரிதும் உதவியாய் இருக்கும் என்பதை அப்போது நாம் புரிந்துகொண்டிருக்கவில்லை. அதுவும் புளொட் சிறுகுழு என்ற நிலையிலிருந்து மக்கள் தழுவிய, மக்கள் அமைப்புக்களைக் கொண்டதாக மாற்றமெடுத்த காலகட்டமாக இருந்தது. இதனால் எமது செயற்பாடுகளை எதிரியால் மிகவும் சுலபமாக கண்காணிக்கக்கூடியதாய் அமைந்திருக்க வாய்ப்பிருந்தது.

இராணுவத்தால் கொக்குவில் சுற்றிவளைப்பு

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் சுட்டுக் கொல்லப்படுகின்ற நிலவரம் அன்றிருந்தது. வவுனியா நகுலன், மன்னார் பொறுப்பாளர் நகுலன், கொக்குவிலில் இருந்து "புதியபாதை" பத்திரிகையை விநியோகிக்க வவுனியாவுக்கு எடுத்து சென்ற வவுனியா சிவகுரு, போன்ற பலர் இராணுவத்தினரிடம் பிடிபட்டதையடுத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். 1984 மாசி மாதம் இந்தியாவுக்கு பயிற்சிக்கு இளைஞர்களை படகு மூலம் சுழிபுரத்திலிருந்து அனுப்பிவிட்டு திரும்பும் வழியில், சண்டிலிப்பாயில் வைத்து கொக்குவில் யோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். கொக்குவிலில் புளொட்டினுடைய செயற்பாடுகள் பெருமளவுக்கு பகிரங்கமாக நடைபெற்று வந்ததாலும், லவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டயரியில் இருந்த கொக்குவில் பற்றிய குறிப்புக்களாலும் இராணுவம் கொக்குவிலைக் குறிவைத்து செயற்பட ஆரம்பித்திருந்தது. இதை உணர்ந்து கொள்ள முடியாதிருந்திருந்த நாமோ கொக்குவிலையே எமது தொடர்புகளுக்காகவும், சந்திப்புக்களுக்கான மையமாகவும் தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். கொக்குவில் இனிமேலும் எமது சந்திப்புக்களுக்கும், தொடர்புகளுக்கும் மையமாகவும் பாவிப்பதற்கு உகந்த இடமல்ல என்று சில மத்தியகுழு உறுப்பினர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதை உடனடியாக நடைமுறைப்படுத்தவில்லை என்றே கூற வேண்டும். இது எதிரி பற்றிய எமது சரியான கண்ணோட்டம் இன்மையையும், எமது அசமந்தப் போக்கையும் காட்டியது.

யோகராஜா, லவன் ஆகியோர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் ஆகியிருந்து. சலீம் அவர் திருநெல்வேலியில் தங்கியிருந்த அறையில் வைத்து இராணுவத்தால் கைது செய்யப்பட்டு விட்டார் என்ற தகவல் கிடைத்தது. சலீம் 1983 மார்கழி மாதம் பிற்பகுதியிலிருந்து 1984 பங்குனி மாதம் அவர் கைது செய்யப்படும் வரை மூன்று மாதம் தள நிர்வாகப் பொறுப்பாளராக செயற்பட்டவர். சலீம் கைதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று நாம் சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம் இராணுவம் வெகு நிதானமாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் எம்மை குறிவைத்து செயற்பட்டுக் கொண்டிருந்ததை நாம் அறிந்திருக்கவில்லை. சலீமின் கைதையடுத்து அன்று மாலை மீண்டும் அனைவரும் கொக்குவிலில் ஒன்று கூடுகின்றனர்.மத்திய குழு உறுப்பினர்களான பார்த்தன், கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி ஆகியோர் கொக்குவிலில் எமது செயற்பாடுகளை நன்கு அறிந்த சலீம், யோகராஜா, லவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இனிமேலும் கொக்குவிலை சந்திப்பதற்கான மையமாக பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல என்று முடிவெடுத்தனர். இந்த முடிவையடுத்து கேதீஸ்வரன், கொக்குவில் கிருபா, ஜீவன் ஆகியோர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். எமது காலந்தாழ்த்திய முடிவால் இராணுவம் எம்மை சுற்றி வளைத்து கொண்டது. இராணுவம் யோகராஜா, லவன் கைதானதிலிருந்து ஒரு மாதகாலமாக தகவல் சேகரித்து, நன்கு திட்டமிடப்பட்டு CORDON & SEARCH என்ற கிராமங்களை சுற்றி வளைத்து மேற்கொள்ளப்பட்ட பாரிய இராணுவ நடவடிக்கையாக இது அமைந்தது.

இராணுவத்தின் சுற்றிவளைப்பில் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் எமக்கு தெரிந்த திசைகளில் ஓடினோம். ஆனால் இராணுவம் மேற்கொண்ட மிகப் பெரியளவிலான சுற்றிவளைப்பில் ஓரளவு வெற்றி பெற்றது என்றே சொல்ல வேண்டும். யாழ் மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட சத்தியமூர்த்தியும், பார்த்தனுடன் இராணுவப் பிரிவில் செயற்பட்டு வந்த கொக்குவில் சிவாவும் இவர்களுடன் கூட பல அப்பாவி இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த சுற்றிவளைப்பில் இருந்து நான் (நேசன்)உட்பட பார்த்தன், கொக்குவில் ஆனந்தன் ஆகிய மூவர் மட்டுமே தப்பி வெளியேற முடிந்தது. தளத்தில் செயற்பட்ட மத்தியகுழு உறுப்பினரான குமரன் (பொன்னுத்துரை) இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததாலும், பெரிய முரளி, கண்ணாடி சந்திரன் ஆகியோர் சென்னைக்கு புளட்டினால் கொள்ளையிடப்பட்டிருந்த கிளிநொச்சி வங்கி நகைகளின் ஒரு பகுதியை உமாமகேஸ்வரனிடம் ஒப்படைக்க சென்றிருந்ததாலும் இந்த இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பித்து கொண்டனர். யோகராஜா, லவன் கைதானதை அடுத்து லவனிடமிருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட டயரியில், இருந்த பெறப்பட்ட விளக்கமான தகவல்களின் அடிப்படையில் தான் கொக்குவில் மீதான இராணுவ சுற்றிவளைப்பை இராணுவத்தினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொக்குவில் சுற்றிவளைப்புக்கு முன், எவருக்குமே தெரியாமல் மிக இரகசியமாக திருநெல்வேலியில் பாதுகாப்பாக சலீம் தங்கியிருந்த இடத்தை துல்லியமாக அறிந்து இராணுவத்தினர் சலீமை கைது செய்தது எவ்வாறு என்பது, இன்று வரை கேள்வியாகவே உள்ளது.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

கொக்குவில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட பின்னர்தான், நான் இராணுவத்தால் தேடப்படும் ஒரு நபராக இருப்பதை அறிந்தேன். எனது வீட்டிற்குச் சென்று சோதனையிட்ட இராணுவத்தினர், எனது அனைத்துப் புகைப்படங்களையும் எடுத்துச் சென்றுவிட்டிருந்தனர். நிலைமைகள் அனைத்துமே தலைகீழாகவும், முன்னரைவிட இன்னும் சிக்கலானதாகவும் மாறிவிட்டிருந்ததன. புளொட்டில் நான் இணைந்ததிலிருந்து எனது வீட்டில் இருந்தபடியே அனைத்து செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தேன். இராணுவ சுற்றிவளைப்புக்குப் பின்னான நிலைமையோ, இனிமேலும் வீட்டில் இருக்கமுடியாது என்றாகியது மட்டுமல்லாமல், கொக்குவிலை எமது தேவைகளுக்காகப் பயன்படுத்துவதையும் அறவே சாத்தியமற்றதாக்கியது. எதிரியைப் பற்றிய எமது தவறான கணிப்பீடு, விழிப்புணர்வின்மை, காலந்தாழ்த்திய முடிவுகள் போன்றவற்றால் தொடர்ச்சியாக இழப்புக்களை சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரே நாளில் தளநிர்வாகப் பொறுப்பாளர் சலீமின் கைதும், யாழ் மாவட்டப் பொறுப்பாளர் சத்தியமூர்த்தியின் கைதும் பெரியதொரு வெற்றிடத்தை அமைப்புக்குள் ஏற்படுத்திவிட்டிருந்தது. குறிப்பாக, சத்தியமூர்த்தியினது கைதானது அனைத்துவிடயங்களையும் ஒழுங்குபடுத்திச் செய்யக்கூடிய செயல்திறன்மிக்க ஒருவரை கடின உழைப்பாளியை இழந்ததாகவே கருதப்பட்டது. ஏனெனில் 1983 யூலை க்குப் பின் யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு புளொட்டின் செயற்பாடுகள் நகர்த்தப்பட்டபின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்களின் தொடர்புகளையும் சத்தியமூர்த்தியே பேணிவந்த அதேநேரம் யாழ் மாவட்ட அமைப்புச் செயற்பாடுகளையும் கவனித்து வந்திருந்தார். கைதுகளும், இழப்புகளும் தொடர்ந்து கொண்டிருந்தன. எமது செயற்பாடுகளும் அதே வேகத்தில் தொடர்ந்தவண்ணமிருந்தது.

பௌத்த விகாரை தீக்கிரையை எதிர்த்த அதே இடத்தில் அடையாளமின்றி தீக்கிரை

சலீம், சத்தியமூர்த்தியின் கைதினால் ஏற்பட்ட இடைவெளியை நிவர்த்தி செய்து தொடர்ச்சியாக புளொட் செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்லவேண்டிய பொறுப்பும், அதற்கான தேவையும் ஏனைய மத்தியகுழு உறுப்பினர்களிடம் விடப்பட்டிருந்தது. மத்தியகுழு உறுப்பினர்களான பார்த்தன், குமரன் (பொன்னுத்துரை), கேதீஸ்வரன், ஈஸ்வரன் ஆகியோரே அன்று தளத்தில் இருந்தனர். மத்தியகுழு உறுப்பினர்களான குமரன் (பொன்னுத்துரை) கரைப் பொறுப்பாளராக இருந்தமையால் அவர் படகுப் போக்குவரத்து ஒழுங்குகளைக் கவனித்து வந்தார்; ஈஸ்வரன் மட்டக்களப்பு பொறுப்பாளராக செயற்பட்டு வந்ததால் அவர்களது கூடுதல் நேரத்தை மட்டக்களப்பிலேயே கழித்து வந்தார்; பார்த்தன் இராணுவ சம்பந்தமான செயற்பாடுகளில் கவனம் செலுத்தி வந்தார்; இதனால் மத்தியகுழு உறுப்பினரான கேதீஸ்வரன் இப்பொழுது மிகவும் தீவிரமாகவும் அதேவேளை பொறுப்புடனும் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஏனைய மாவட்டங்களிலிருந்து வரும் அமைப்பாளர்களுடான தொடர்புகளைப் பேணுதல், இந்தியாவிற்கு பயிற்சிக்கென வருபவர்களை பராமரித்து அனுப்பிவைத்தல், யாழ் மாவட்டத்திலுள்ள அமைப்பாளர்களின் தேவைகளை, பிரச்சினைகளைக் கையாளுதல் அனைத்துமே கேதீஸ்வரனின் முன்னால் மலைபோல் உயர்ந்து நின்றன.

மிகவிரைவிலேயே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து அரச அதிபர் பிரிவுகளிலும் பொறுப்பாக செயற்படும் அனைவரையும் ஒன்றுசேர்த்து கேதீஸ்வரனால் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பில் நானும் கலந்துகொண்டேன். சத்தியமூர்த்தி, சலீமின் கைதுபற்றி அனைவருக்கும் கேதீஸ்வரனால் தெரிவிக்கப்பட்டதோடு, சத்தியமூர்த்தி செய்துவந்த வேலைகள் அனைத்தையும் நேசனே இனிமேல் தொடர்ந்து செய்வார் என்றும், அனைவரையும் நேசனுடன் தொடர்புகளைப் பேணுமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் தேவையேற்படும் போதெல்லாம். யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களும் ஒன்று கூடி, யாழ் மாவட்டம் சம்பந்தமான வேலைத்திட்டங்களையும் முடிபுகளையும் எடுக்குமாறு கூறினார்.

நீண்டகாலமாக காந்தீயத்திலும் புளொட்டிலும் செயற்பட்ட உரும்பிராய் ராசா, ரமணன், ஜீவன், பாலா, சின்னப்பத்தர், சுகந்தன்(சிறி),வடமராட்சி கணேஷ், கல்லுவம் குரு, கொக்குவில் கிருபா, சிவானந்தி போன்ற பலர் அன்று புளொட்டில் இருந்தபோதும் சத்தியமூர்த்தியின் இடத்துக்கு கேதீஸ்வரன் என்னைத் தெரிவு செய்தமைக்கு காரணம், நான் சத்தியமூர்த்தியுடன் நெருக்கமாக அமைப்பு வேலைகளில் செயற்பட்டதென்பதாலும், பெரும்பாலான சத்தியமூர்த்தியினுடைய தொடர்புகள் மற்றும் ஏனைய மாவட்டப் பொறுப்பாளர்களின் தொடர்புகள் என்பனவற்றை நான் அறிந்திருந்தமையுமே ஆகும் என நினைக்கிறேன். ஆனால், அன்றைய நிலையில் எனக்கிருந்த அரசியல் அறிவென்பது மிக மிக மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இருந்தது. நான் GUES இல் செயற்பட்டபோது படித்த சில இடதுசாரி நூல்கள், தோழர் தங்கராசாவின் பாசறைகளில், கருத்தரங்குகளில் பெற்றுக்கொண்ட அரசியல் அறிவே, அப்போது எனக்கிருந்தது. புளொட்டில் இணைந்த பின்பு அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சி எதுவுமே பயனளிக்கவில்லை. நடைமுறை, மற்றும் நிர்வாகரீதியான வேலைப்பழு என்பன அதற்கு இடம் கொடுக்கவில்லை.

கொக்குவில் சுற்றிவளைப்பின் பின்னான சந்திப்புக்கள், யாழ் பல்கலைக்கழகத்தை அண்மித்த பகுதிகளுக்கு மாறியது. ஏனைய மாவட்டங்களிலிருந்து இளைஞர்கள் யாழ்ப்பாணம் வந்தவண்ணமிருந்தனர். இவர்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் மட்டுமல்லாது, இவர்களை பாதுகாப்பாக தங்க வைப்பதிலுமே நிறையவே பிரச்சனைகளை முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கொக்குவில் சுற்றிவளைப்பின் பின்னான நிலமை இதுவாக இருந்தது. 1983 யூலைக்குப்பின் விடுதலை இயக்கங்களின் வளர்ச்சியால், அரசபடைகளுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. விடுதலை இயக்கங்களின் தாக்குதல்களுக்குப் பதிலாக, அரசபடையினர் வர்த்தக நிலையங்களை தீயிட்டுக் கொளுத்துதல், அப்பாவி மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தல், ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் போன்றவற்றை மேற்கொண்டு வந்தனர்.

1984 சித்திரை 10ம் திகதி, யாழ் வைத்தியசாலைக்கு அண்மையில் சென்று கொண்டிருந்த இராணுவ வண்டித் தொடர் மீது, தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நிகழ்த்தினர். இச் சம்பவத்தில் ஒரு இராணுவவீரர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமுற்ற இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்தால், யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த அடைக்கலமாதா கோவில் சிறிது சேதமுற்றிருந்தது. ஊரடங்கு உத்தரவும் இராணுவத்தால் அமுல்படுத்தப்பட்டது. மறுநாள், சித்திரை 11 ம் திகதி, இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டினால் அடைக்கலமாதா கோவில் சேதமடைந்ததற்கு பழிவாங்கும் நோக்கத்தோடு, ஒரு கும்பல் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் அமைந்திருந்த பௌத்தவிகாரை மீது தாக்குதல் நடத்தியதோடு அதற்கு தீயுமிட்டனர். இச் செயலுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அமலதாஸ் என்பவர் தலைமை தாங்கினார்; அமலதாஸ் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்; தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் கிட்டுவுடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணி வந்தவர்; பௌத்தவிகாரை தாக்குதல் சம்பவம் பற்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கு தகவல் பரவியது.

Naga_vegara.jpg

எரியூட்டப்பட்ட விகாரை

Sinhalamagavidyalayam.jpg

(அதேநாள் யாழ்நகர மத்தியில் அமைந்திருந்த சிங்கள மத்திய மகாவித்தியாலம் எரியூட்டப்பட்ட நிலையில்)

NagaVegara.jpg

(எரியூட்டப்பட முன்னர் விகாரை)

இதையறிந்த யாழ் பல்கலைக்கழக மாணவனும் புளொட்டின் மத்தியகுழு உறுப்பினருமான கேதீஸ்வரனும் அவரது நண்பர்களும் உடனடியாக பௌத்தவிகாரைக்கு விரைந்து, பௌத்தவிகாரையை சேதப்படுத்துவதை நிறுத்துமாறு, அங்கு கூடியிருந்தவர்களை வேண்டினர். ஆனால் பல்கலைக்கழக மாணவர்களின் வேண்டுகோளை, அவர்கள் செவிமடுத்தார்களில்லை. பல பத்தாண்டுகளாகவே, தமிழர்களல்லாத ஏனைய இனத்தவர்களையும், ஏனைய மதத்தவர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும், கீழ்த்தரமாக மேடைகளில் பேசிவந்த பிற்போக்குத் தலைமைகளினால், மக்களின் சிந்தனையில் நஞ்சூட்டப்பட்டிருந்ததன் வெளிப்பாடாக, இந்தச் சம்பவம் அமைந்தது. இதனால் பௌத்தவிகாரையில் கூடியிருந்தவர்கள், தமது செயற்பாட்டிலிருந்து பின்வாங்க முடியாதவர்களாக, காணப்பட்டனர். பௌத்தவிகாரையை எரியூட்டியதால் ஏற்பட்ட பதட்டநிலையால், யாழ் நகரம் வெறிச்சோடத் தொடங்கியது. இந்நிலையில் மறுநாள், இந்தியாவுக்கு பயிற்சிக்கு செல்வோரை அனுப்புவதை உறுதிப்படுத்தவேண்டிய பொறுப்பு, கேதீஸ்வரனுக்கு இருந்தது. இதற்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும், விரைந்து செயற்பட முடிவெடுத்தனர். திருநெல்வேலியில் வசித்து வந்த எரிபொருள் நிலைய உரிமையாளரை தொடர்பு கொண்டு, எரிபொருள் தந்துதவுமாறு கேட்டதற்கு, அவரும் சம்மதிக்கவே, கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும் வாகனம் ஒன்றில், எரிபொருளைப் பெறுவதற்கு, யாழ்நகர் நோக்கி விரைந்தனர்.

kirubha.jpg

(கொக்குவில் கிருபா)

பௌத்தவிகாரை எரியூட்டப்பட்ட தகவலை அறிந்து, இராணுவம் யாழ்நகரின் பெரும்பாலான பகுதிகளில் குவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது. துரதிஸ்டவசமாக கேதீஸ்வரனும் கொக்குவில் கிருபாவும் சென்ற வாகனம், இராணுவத்தால் இடைமறிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும், இராணுவத்தால் பௌத்தவிகாரைக்கு அருகில் ஏற்கனவே கைது செய்து வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுடன் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைவரையும் அதே இடத்தில் இராணுவம் சுட்டுக் கொன்று, ரயர் போட்டு எரியூட்டியது. சில மணி நேரத்துக்கு முன் பௌத்தவிகாரையை எரிப்பது தவறான செயல் என வாதம் புரிந்த ஒருவன், அத்தகைய செயலுக்கெதிராக போராடிய ஒருவன், அதே விகாரைக்கு அருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டான். ஈனர்களின் ஈனச் செயல்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இழப்புகளும், மரணங்களும் எம்மைத் தொடர்ந்த வண்ணமிருந்தன.

kethees.jpg

(கேதீஸ்வரன்)

ஆரம்ப காலங்களிலேயே புளட்டுக்குள் தோன்றிய தவறான போக்குகளுக்கு எதிராக கேதீஸ்வரன் தொடர்ச்சியாக புளட்டின் தலைமையுடனும் மத்திய குழு உறுப்பினர்களோடும் போராடிய ஒருவர். தவறான போக்குகளுடன் கேதீஸ்வரன் என்றுமே சமரசம் செய்தது என்பது கிடையாது.

தென்னிலங்கையிலிருந்து இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டமும் அதன் முடிவும்

1984 தைமாதம் ஒன்பதாம் திகதி, இனக் கலவரத்துள் அகப்பட்டு பாதிக்கப்பட்டதனால் இடம் பெயர்ந்த தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது. இப் போராளிகளுள் மதிவதனியும் ஒருவர். பல்கலைக்கழக மாணவர்களின் அகிம்சை வழியான போராட்டத்தை வெற்றிகரமான வெகுஜன போராட்டடமாக மாற்றுவதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கேதீஸ்வரனும் ஒருவராக இருந்தார். ஆனால் மக்கள் போராட்டத்திலோ, மக்கள் அரசியலிலோ நம்பிக்கை அற்ற, வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பியிருந்த, மன நோயாளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோ மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தோரை ஆயுத முனையில் கடத்தி செல்வதற்கு திட்டமிட்டிருந்தது, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கசிந்திருந்தது. இதையறிந்த பல்கலைக்கழக மாணவர்களான கேதீஸ்வரன், சத்தியமூர்த்தி, பாலா, சிறி (சுகந்தன்) போன்றோர் தமிழீழ விடுதலைப் புலிகள் அப்படி ஒரு அராஜக செயலில் ஈடுபட்டால் அதனை தடுத்து நிறுத்த ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுடன் தயாராக இருந்தனர். ஆனால் அகிம்சை போராளிகள் ஆயுத முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத பலத்தின் முன்னால், நிராயுதபாணிகளான பல்கலைக்கழக மாணவர்கள், எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் இருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளை தடுத்து நிறுத்த முடியவில்லை.

ஒரு மாணவர் போராட்டம் வெகுஜன எழுச்சிப் போராட்டமாக மாறுவதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்தனர். மாணவர் போராட்டம் மக்கள் போராட்டமாக மாறுவதை, எப்படி தடுத்து நிறுத்தலாம் என திண்டாடிக் கொண்டிருந்த சிறீலங்கா அரசுக்கு, புலிகள் உண்ணாவிரத போராளிகளை கடத்தியது, பெரும் நிம்மதியை கொடுத்தது. உண்ணாவிரதிகளை கடத்திய அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த கடத்தல் தவறானது என கண்டித்து புளொட் சார்பாக யாழ் நகரமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டியதில் கேதீஸ்வரன் முக்கிய பங்கு வகித்ததிலிருந்து, கேதீஸ்வரன் எப்படி தவறான போக்குகளுடன் சமரசம் செய்யாமல், அவற்றிற்கு எதிராக தன்னால் முடிந்தவரை போராடினார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இணைப்பு - துண்டுப்பிரசுரம் -இணைப்பு அகிம்சைப் போராளிகள் ஆயுதமுனையில் கடத்தப்பட்டனர்

தொடரும்

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.