Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளும் காலச்சுவடும்: வன்னிக்குக் காலச்சுவடு வந்த கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]புலிகளும் காலச்சுவடும்

வன்னிக்குக் காலச்சுவடு வந்த கதை[/size]

கருணாகரன்

சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக பி. ஏ. கிருஷ்ணனின் ‘புலிநகக் கொன்றை’ நாவல் வெளிவருகிறது என்னும் அறிவிப்பைப் பார்த்தேன். இந்த அறிவிப்பைப் பார்த்தபோது உள்ளூரச் சிரிப்பே வந்தது. ‘புலி’ என்னும் பெயரைச் சம்மந்தப்படுத்தி காலச்சுவடு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிடுகிறதே இதைப் புலி ஆதரவாளர்கள் இந்தப் புத்தகத்தை எப்படி அனுமதிக்கப்போகிறார்கள்? நிச்சயமாகத் தேவையில்லாத வம்பில் காலச்சுவடு மாட்டிக் கொள்ளப்போகிறது என்று நினைத்தேன். ஆனால் அந்த மாதிரியான வம்போ அபாயமோ நிகழ வில்லை. இது ஆச்சரியந்தான். எடுத்ததற்கெல்லாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிற தமிழ் உளவியல் சூழலில் ‘புலி நகக்கொன்றை’ தப்பியது அபூர்வமே.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், காலச்சுவடுக்கும் புலிகளின் அபிமானிகளுக்கும் இடையில் ஒரு பனிப்போர் அல்லது உளவியல் போர் நீண்டகாலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு காலம் வன்னியிலேயே காலச்சுவடு பற்றிச் சொல்லப்பட்ட கதைகளும் உருவாக்கப்பட்ட அபிப்பிராயங்களும் இதற்கு ஆதாரம். ஒரு கட்டத்தில் காலச்சுவடு இதழுக்கு வன்னியில் தடைகூட விதிக்கப்பட்டது. இன்றுகூட நிலைமைகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. இலங்கைக்கு வரும் இந்திய இதழ்களில் இலங்கை தொடர்பான விசயங்கள் இருப்பதில்லை. காலச்சுவடிலும்கூட. அவற்றை இங்குள்ள விநியோகஸ்தர்கள் கிழித்தெடுத்துவிடுகிறார்கள். கேட்டால், ஏற்கனவே நடந்த ‘கசப்பு’களை நினைவுகூருகிறார்கள். யுத்தகாலத்தின்போது பூபால சிங்கம் புத்தகச் சாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் இலங்கை அரசியல் தொடர்பாக எழுதப்பட்டிருந்த ஓர் இந்திய இதழைத் தருவித்ததற்காக கொழும்பில் கைதுசெய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு எல்லோரும் முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்கின்றனர். ‘இன்னும் அந்த நிலைதான் உள்ளதா?’ என்று கேட்டால், ‘யார் உத்தர வாதம் தரமுடியும்? எதுக்கய்யா வீண் வம்பெல்லாம்?’ என்று திருப்பிக் கேட்கிறார்கள்.

ஆனால் ஒரு காலம் காலச்சுவடுக்கு வன்னியில் வாசகர் வட்டங்களே இருந்தன. அதுவும் நெருக்கடிக் காலத்தில், யுத்தகாலத்தில்.

யாழ்ப்பாணத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பிறகு, 1996, 97, 98, 99 காலப்பகுதியில் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான அரசாங்கம் வன்னியைக் கைப்பற்றுவதற்காகப் போரிட்டுக்கொண்டிருந்தது. துணைப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சந்திரிகா குமாரதுங்கவின் மாமனாரான அனுருத்த ரத்வத்த, முழுஅளவிலான யுத்தத்தை உக்கிரமாக முன்னெடுத்தார்.

‘ஜெயசிக்குறு’ என்ற பெரும் படைநடவடிக்கை வன்னியை ஊடறுத்து நடந்துகொண்டிருந்தது. ஏறக்குறைய ஓர் ஆண்டுக்கு மேலாக நடந்த மிகப் பெரிய இராணுவ நடவடிக்கை அது. சனங்களில் பெரும்பாலானவர்கள் அகதிகளாகவே மாறிவிட்டிருந்தனர். அது மிக நெருக்கடியான கால கட்டம். பொருளாதாரத் தடை, தொடர்பாடல் தடை, போக்குவரத்துத் தடை, இராணுவ அழுத்தம் என்று உச்சநெருக்கடிகள் அமலில் இருந்தன. கடிதங்களைத் தவிர, வேறு தொடர்பாடல் வசதிகளுக்கு இடமில்லை. ஆனால் கடிதங்களுக்கும் சோதனையுண்டு. வன்னியில் இருந்து அனுப்பப்படும் கடிதங்கள் பரிசோதனைக்குப் பிறகே அனுப்பப்பட்டன. அவ்வாறு வன்னிக்கு வரும் கடிதங்களும் பொதிகளும் பிரித்து மேயப்பட்டிருக்கும். இந்தக் கண்காணிப்பு நடவடிக்கையால் ஒரு கடிதம் அல்லது ஒரு பொதி வந்து சேர்வதற்கு சிலவேளைகளில் இரு மாதங்களுக்கு மேலாகும். வவுனியா, திருகோணமலை, கொழும்பு என்ற இடங்களில் இருந்த தபால் நிலையங்களில் கடிதப்பொதிகள் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் உறங்கும். நிர்வாக நடவடிக்கைகள், சட்டம் எல்லாமே யுத்தத்திற்குச் சேவகம் செய்தன.

இந்த நிலையில்தான் காலச்சுவடு வன்னிக்கு வந்தது. காலச்சுவடுக்கான கடிதங்களும் வன்னியில் இருந்து சென்றன. இத்தகைய ஒரு தொடர்பாடல் நிலையில்தான் ‘காலச்சுவடுவின் வாசகர் வட்டமும்’ வன்னியில் இயங்கியது.

1996 யாழ்ப்பாண இடப்பெயர்வோடு வன்னிக்கு வந்திருந்த அ.யேசுராசா (அலை இதழின் ஆசிரியர்) சில மாதங்களின் பிறகு படகு மூலம் தமிழகத்துக்குச் சென்றிருந்தார். அங்கே அவர் மண்டபம் முகாமில் இருந்து கொண்டு காலச்சுவடு இதழை வாங்கி வன்னியில் இருந்த எமக்கு அனுப்பியிருந்தார். வன்னிக்கு வந்த அந்த ஒரேயொரு இதழை வன்னியில் இருந்த பலரும் மாறிமாறி வாசித்தோம். அந்த இதழில், ஈழத்திலிருந்து தமிழகத்துக்குப் படகு மூலம் சென்றிருந்த ஒரு சிறுவனின் கடிதமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது மு. புஸ்பராஜனின் மகன் எழுதிய கடிதம் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அந்தக் கடிதத்தில் அன்றைய ஈழநிலைமை பதியப்பட்டிருந்தது.

ஈழநிலைமை குறித்து அதிகமாக வெளியே தெரியாத அல்லது அதிகம் பேசப்படாத நிலையில் காலச்சுவடு வெளியிட்டிருந்த இந்தக் கடிதம் வன்னியிலிருந்த பலருக்கும் ஆச்சரியத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து காலச்சுவடு இதழ்களை யேசுராசா அனுப்பி வந்தார். தாமதமாக வந்தாலும் பலராலும் அவை வாசிக்கப்பட்டன. வந்த இதழ்களில் சிவசேகரம், எம். ஏ. நுஃமான், சேரன் போன்றோருடைய நேர்காணல்கள் மேலும் கவனத்தை ஏற்படுத்தின. கூடவே ஈழக் கடிதங்கள், கவிதைகள் போன்றவையும். நெருக்கடிக்குள் சிக்கியிருந்த ஈழத்தின் குரல்களைக் கவனமெடுத்திருந்தது காலச்சுவடு. அந்த உணர்கையுடன் பல விசயங்கள் பிரசுரமாகின. முக்கியமாக அப்போது பிரசுரமாகியிருந்த ‘பத்மவியூகம்’ என்ற ஜெயமோகனின் குறுநாவல் கூடுதல் கவனிப்பையும் கூடுதல் வாசிப்பையும் பெற்றிருந்தது. இந்தக் கதை மகாபாரதக் கதையின் பின்னணில் எழுதப்பட்டிருந்தாலும் அப்படியே ஈழநிலவரத்துடன், ஈழயுத்தத்துடன் பொருந்தியது. ஆகவே, அநேகமாக எல்லாவற்றிலும் ஈழநிலவரமே பேசப்பட்டது.

அந்த நாட்களில் ‘வெரித்தாஸ் தமிழ்ப்பணி’ என்ற பிலிப்பைன்சைத் தளமாகக் கொண்ட வானொலியும் ஈழ நிலைமைகளில் கூடிய கவனத்தைச் செலுத்தியது. அப்போது அந்த வானொலியின் இயக்குநராக ஜெகத் கஸ்பார் பணியாற்றினார். வன்னிச் சனங்கள் வெரித்தாஸிக்கும் காலச்சுவடுக்கும் கடிதங்களை எழுதினர். காலச்சுவடுவை வாசிப்போர் தங்களுடைய அபிப்பிராயங்களை விமர்சனமாகவும் விவாதங்களாகவும் கோரிக்கைகளாகவும் எழுதினர். குறிப்பாக வன்னியில் இலக்கியம் மற்றும் ஊடகத் துறையில் இயங்கியோர்.

இதன் அடுத்த கட்டமாக, காலச்சுவடுவைத் தொடர்ந்து வாசிக்கவும் அதனுடைய கவனத்தை ஈழ நிலைமைகள்மீது குவித்து வைத்திருப்பதற்காகவும் அதற்கு வாசகர் வட்டங்களை உருவாக்கலாம் எனச் சிந்திக்கப்பட்டது. இதே காலப்பகுதியில் தமிழகத்திலும் காலச்சுவடுக்கான வாசகர் வட்டங்கள் உருவாகியிருந்தன. இது ஈழத்தில் வாசகர் வட்டங்கள் உருவாகுவதற்கான ஓர் எண்ணக் கருவை ஏற்படுத்தியிருந்தது. இதன்படி காலச்சுவடுக்கான வாசகர் வட்டக் கூட்டம் வன்னியில் - அக்கராயனுக்கு அண்மித்துள்ள ஸ்கந்தபுரம் என்ற இடத்தில் எழுத்தாளர் தாமரைச்செல்வியின் வீட்டில் நடந்தது. அப்போது வீடு என்று சொல்லக்கூடிய மாதிரி வசதியான அளவில் யாருக்கும் இருப்பிடங்கள் இருக்கவில்லை. தாமரைச் செல்வியும் எங்களைப் போல இடம்பெயர்ந்து ஒரு தற்காலிகக் கொட்டகையை அமைத்திருந்தார். அந்தக் கொட்டகையின் முன்னிருந்த மாமர நிழலில் இந்த வாசகர் வட்டக் கூட்டம் நடந்தது. பிறகு நடந்த சந்திப்புகளும் பெரும்பாலும் தாமரைச் செல்வியின் முற்றத்தில்தான்.

இந்தக் கூட்டங்களுக்கு அமரதாஸ், பெருமாள் கணேசன், ப. தயாளன், நா. யோகேந்திரநாதன், தாமரைச் செல்வி, கந்தசாமி, குமரவேள் (புவனசிங்காரன்), தி. தவபாலன், அன்ரன் அன்பழகன், அநாமிகன், கிஸ்கார்ட், சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்) விஜய சேகரன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். காலச்சுவடில் வெளிவந்த கட்டுரைகள், நேர்காணல்கள், கதைகள், கவிதைகள், காலச்சுவடின் தலையங்கள் பற்றிய அபிப்பிராயங்கள் எல்லாம் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன. சிலர் காலச்சுவடுக்குக் கடிதங்கள்கூட எழுதினர். இந்த வாசகர் வட்டத்தின் பதிவுகளும் அந்த நாட்களில் காலச்சுவடில் பிரசுரமாகியது.

இதைத் தொடர்ந்து காலச்சுவடின் கூடுதல் பிரதிகளைப் பெறும் முயற்சிகள் நடந்தன. கூடவே காலச்சுவடு பதிப்பக நூல்களையும் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அன்றைய சூழலில் வாசிப்பதற்கான புத்தகங்களோ இதழ்களோ இல்லை அல்லது மிகக் குறைவு என்ற நிலையே வன்னியில் இருந்தது. வானொலி தவிர்த்த பிற ஊடகங்கள் எதுவும் கிடையாது. வானொலியை இயக்குவதற்கான மின்கலங்களுக்கும் பெரும் பிரச்சினை. அதனால் சைக்கிளில் இயங்கும் மின்சாதனத்தைப் பயன்படுத்தியே பலரும் வானொலியைக் கேட்டனர். கொழும்பிலிருந்து வரும் வாராந்தப் பத்திரிகைகூட ஒரு வாரம் அல்லது சில வாரங்கள் பிந்தியே வந்து சேரும். இந்த நிலையில் காலச்சுவடும் அதனுடைய வெளியீடுகளும் பெரிய கொடையாக இருந்தன.

காலச்சுவடு நிறுவனம் பணத்தை முக்கியப்படுத்தாமல் - பணத்தையே பெற்றுக்கொள்ளாமல் பிரதிகளை அனுப்பியது. ‘சந்தர்ப்பம் கிடைக்கும்போது பணத்தைத் தாருங்கள்’ என்ற எண்ணப்பாட்டுடன் காலச்சுவடின் ஆசிரியர் கண்ணன் தொடர்ந்து வெளியீடுகளை அனுப்பிக்கொண்டிருந்தார். ஆரம்பத்தில் திருவையாறு முகவரிக்கு வந்த பொதிகள், பின்னர் அக்கராயன்குளம் முகவரிக்கு வந்தன. அந்தப் பிரதிகளை நாம் நண்பர்களுக்கும் வாசிப்பில் ஆர்வமுள்ள போராளிகளுக்கும் கொடுத்தோம். பெரும்பாலும் பெண்போராளிகளே புத்தகங்களை அதிகமாக விரும்பி வாங்குவர். தற்போது புனர்வாழ்வு முகாமிலிருக்கும் தமிழினி, காலச்சுவடு வாசகரில் முக்கியமானவர். இன்னொருவர் மருதம். இவர் பெண் போராளிகளின் சார்பான வெளியீட்டு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். மற்றவர் சுதாமதி. இவரும் பெண்களின் சார்பாக வெளியிடப்படும் இதழொன்றின் ஆசிரியப்பொறுப்பில் இருந்தவர். இன்னொருவர் மலைமகள். பெண்போராளிகளில் இவர் முதன்மையான எழுத்தாளர். இப்படிப் பலர் இருந்தனர். பெரும்பாலானவர்களுக்கு ‘பத்மவியூகம்’ பிடித்திருந்தது. அன்றைய சூழலில் மிகக் கூடுதலான ஈழ வாசகர்களை ‘பத்மவியூகம்’ ஈர்த்தது.

காலச்சுவடின் இந்தப் பரவலாக்கம் ஆச்சரியமளிக்கும் வகையில் பெருகிக்கொண்டேயிருந்தது. இதழ்களைப் பெறுவதிலும் இதழ்கள் தொடர்பான அபிப்பிராயங்களை ஆசிரிய பீடத்துக்குத் தெரிவிப்பதிலும் தாமதங்கள் ஏற்பட்டாலும் அதையெல்லாம் கவனத்தில் எடுத்து, நிலைமையை விளங்கிக்கொண்டு கண்ணன் செயற்பட்டார். அந்த நாட்களில் மனுஷ்யபுத்திரன் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார் என நினைக்கிறேன். அவரும் எனக்குக் காலச்சுவடு சார்பாகக் கடிதங்கள் எழுதியிருந்தார்.

காலச்சுவடின் இந்த விரிவாக்கம் வன்னியில் இருந்த சிலருக்கு விருப்பத்திற்குரிய ஒன்றாக இருக்கவில்லை. இலக்கியக்குழு ஒன்றின் பெயரோடு அவர்கள் வன்னியில் இயங்கினர். அவர்கள் காலச்சுவடு பற்றிச் சந்தேகம் கிளப்பினார்கள். ‘காலச்சுவடு அரசியல், அதனுடைய நோக்கம் எல்லாம் சந்தேகிக்கப்படவேண்டியது, கவனிக்கப்பட வேண்டியது, கண்காணிக்கப்பட வேண்டியது. . .’ என்று அவர்கள் புலிகளின் புலனாய்வுத் துறையினருக்கும் அரசியற்துறைப் பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வனுக்கும் சுட்டிக் காட்டிக் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக ‘காலச்சுவடு இதழை புலிகளின் முன்னணிப் போராளிகளே வாங்கிப் படிக்கிறார்கள். கூட்டங்களிலும் மேடைகளிலும் அதை முன்னுதாரணப்படுத்துகிறார்கள். காலச்சுவடில் வருகின்ற சில விசயங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். இதெல்லாம் எங்கே கொண்டுபோய்விடும்?’ என்று இவர்கள் கேள்வி எழுப்பி எச்சரித்தனர்.

இதேவேளை காலச்சுவடில் வெளியாகிக்கொண்டிருந்த வன்னிக் கடிதங்களும் பதிவுகளும் தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்வோருக்கும் கசப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தின. அவர்கள் ஈழ நிலைவரத்தைப் பற்றி முழுமையான தகவல்களைப் பெறமுடியாத நிலையில் இருந்தனர். (இப்போதும் அவர்களுக்குப் பகுதித் தகவல்களே கிடைக்கின்றன) ஈழநிலைமையைக் குறித்து உரிய முறையில் செயற்படுவதற்கான வழிமுறைகளின்றியும் இருந்தனர். அத்துடன், தங்களையும் மீறி களத்திலிருந்து (ஈழத்திலிருந்து) பதிவுகளும் குரல்களும் காலச்சுவடில் வருகின்றன. இதெல்லாம் அவர்களுடைய ‘செயற்கை அடையாள’த்துக்கும் அரசியலுக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக அமைந்தது. ஆகவே, அவர்கள் காலச்சுவடு பற்றி புலிகளின் புலம்பெயர் மையங்களுக்கும் ஈழத்தில் இருந்த தலைமைக்கும் எச்சரிக்கை நோட்டிஸை விடுத்தனர். இதற்கு ஏற்கனவே அவர்களுக்கும் காலச்சுவடுக்கும் இடையில் இருந்த முரண்பாடுகளும் அபிப்பிராயப் பேதங்களும் அடிப்படையாக அமைந்தது இன்னொரு காரணம். அவர்கள் புலிகளிடம் முன்வைத்த குற்றச் சாட்டுகள், ‘காலச்சுவடு ஒரு பிராமணியப் பத்திரிகை. அது ஈழப் போராட்டத்துக்கு எதிரான சக்திகளின் இதழ். ஈழப் பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டை எடுக்காதவர்கள் காலச்சுவடை ஈழத்திற்குள் அனுப்பிக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதற்காக ஈழத்தில் நுழைந்து தகவல்களை எடுத்துத் தமிழகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள். இவர்கள் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்குபவர்கள். தமிழகத்தில் செயற்படும் ஈழ ஆதரவுச் சக்திகளை மதிக்காதவர்கள். இப்படியானவர்களின் இதழை எந்தக் காரணம் கொண்டும் ஏற்கக் கூடாது. காலச்சுவடுவுக்கு வன்னியில் - புலிகளின் கோட்டையில் இப்படியான ஓர் ஆதரவுத் தளம் இருப்பது என்பது ஈழப் போராட்டத்துக்குத் தோண்டும் புதைகுழியே’ என்பது வரையில் பேசினார்கள்.

இந்தத் தகவலை அப்போது தமிழகத்தில் தங்கியிருந்த ஈழத்தைச் சேர்ந்தவர்கள் வன்னிக்கு அனுப்பித் தங்களுடைய ‘தேசியப் பணி’யை ஆற்றினர்.

இந்த மாதிரி பல திசைகளிலும் இருந்து எழுந்த எதிர்ப்பலைகளால் புலிகளின் தலைமை குழம்பிப்போனது. எனவே அது காலச்சுவடு குறித்து அவதானிக்கத் தொடங்கியது. இதையடுத்து, உடனடியாகவே புலிகள் ஒரு நிலைப்பாட்டை எடுத்தனர். ஆனால் அதைப் பகிரங்கப்படுத்தவில்லை. அந்த நிலைப்பாட்டின்படி காலச்சுவடைப் பகிரங்கமாக எதிர்க்காமல், ரகசியமான முறையில், அமைதியாக அதை நிராகரிப்பது அல்லது வன்னியில் அதன் செல்வாக்கைத் தணிப்பது என்பது. இந்த நிலைப்பாட்டின்படி அவர்கள் காலச்சுவடு எப்படி வன்னிக்கு வருகிறது? யார் அதன் ஏற்பாட்டாளர்கள்? அதன் தொடர்பாடல் முறை என்ன? என்றெல்லாம் அறிய முற்பட்டனர். பொதுவாகவே எந்த விசயத்திலும் கூரிய - கூடிய கவனத்தை வைத்திருக்கும் புலிகளுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான சங்கதி. அவர்கள் வழியை சுலபமாகக் கண்டுபிடித்தனர்.

வன்னியில் காலச்சுவடு தனிப்பட்ட ரீதியாகவும் தொகையாகவும் வந்து கொண்டிருந்தது. தொகையாக வருவது எனக்கே. ஏறக்குறைய இருபத்தைந்து இதழ்களுக்கு மேல். அத்துடன் வாசகர் வட்டக் கூட்டத்தையும் நாங்களே நடத்தியிருந்தோம். இதெல்லாம் வெளிப்படையான நடவடிக்கைகள்தாம். ஆனால் சந்தேகம் என்று வந்துவிட்டால் எல்லாமே புதிர்த்தன்மையைப் பெற்றுவிடும். என்னையும் காலச்சுவடுடன் நெருக்கமாக அல்லது தொடர்ச்சியாக இருப்போரைப் பற்றியும் அவர்கள் தகவலைத் திரட்டினர். இப்படித் தகவலைத் திரட்டியபோது எவர்மீதும் உடனடியாகவோ வெளிப்படையாகவோ நடவடிக்கை எடுக்க முடியாது என்று அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். எனவே இதழ்களை விநியோகிக்கும் என்னைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தார்கள். இதற்கும் அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். ஆனால் இதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் வழமையைப் போல செயற்பட்டுக்கொண்டிருந்தோம்.

ஒருநாள் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னிடம் சொன்னார், ‘கருணா, காலச்சுவடுக்கும் உனக்குமுள்ள தொடர்பைப் பற்றி என்னட்டை வந்து பொட்டம்மானின் ஆட்கள் விசாரிச்சாங்கள். காலச்சுவடு பற்றியும் கேட்கிறாங்கள். அது இஞ்ச (ஈழத்துக்கு) எப்பிடி வருகிது? யார் அதை இஞ்ச எடுத்துக்குடுக்கிறது? எண்டு கேட்டாங்கள். தேவையில்லாமல் உன்ரை பேரும் அடிபடுது. உனக்கேன் தேவையில்லாத பிரச்சினை?’ என்று.

இதைக் கேட்டபோது எனக்கு உடனே சிரிப்பு வந்தது. பிறகு கோபம். இறுதியில் பயம். இதென்ன கொடுமை? என்று நினைத்தேன். காலச்சுவடு மூலமாகக் கணிசமான அளவுக்கு ஈழ நிலவரமும் சனங்களின் உணர்வும் வெளிப்படுத்தப்படுகிறது. இதை விளங்கிக்கொள்ளாமல் வேறுவிதமாகச் சிந்திக்கிறார்களே என்ற கவலை வந்தது. ஆனால் எதுவும் செய்ய முடியாது. விளக்க முற்படலாம். விசயத்தைத் தெளிவாக்கலாம். ஆனால் அது மேலும் சந்தேகங்களைக் கிளப்பும். இறுதில் அதுவே தேவையில்லாத நெருக்கடியில் கொண்டு போய்விடும்.

உண்மையில் காலச்சுவடு உடனான உறவும் தொடர்பும் பகிரங்கமானது. அதை விநியோகிக்கும் நடவடிக்கையும் இதழ் வருவதும்கூட வெளிப்படையானது. இதழில் நாங்கள் விவாதித்த, பதிவிட்ட விசயங்கள்கூட புலிகளுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தாதவை. மறுவளத்தில் அவை அவர்களுக்குச் சாதமானவைகூட. மட்டுமல்ல, மூடுண்ட நிலையில் இருந்த ஈழநிலவரத்தைப் பற்றி நாங்கள் வெளிச்சூழலுக்கு சொல்லியிருக்கிறோம். வன்னியின் அவலத்தையும் மனித உரிமைகள் மீறப்படும் நிலையையும் பதிவிட்டிருக்கிறோம். காலச்சுவடில் முன்வைக்கப்படும் வெளிச்சூழலில் உள்ளோரின் அபிப்பிராயங்கள், அவர்களுடைய செயல்பாடுகள் ஏற்படுத்துகின்ற பாதிப்புகளைப் பற்றியும் எழுதியிருக்கிறோம். சில கடிதங்களை எங்களுடைய நிலைமை மற்றும் பாதுகாப்புக் கருதி காலச்சுவடு வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவற்றிற்கு குறிப்பிட்ட விசயங்களை அது கவனத்திற்கொண்டது. அதைப் போல பலருடைய பெயர்களை அது தவிர்த்திருந்தது. ஈழ நிலவரம் பொறுத்து ஏறக்குறைய ஒருவகையில் காலச்சுவடை நாம் நெறிப்படுத்தினோம் எனலாம். ஆனால் வன்னியில் இருந்த யாரும் புலிகளைப் பற்றித் தவறாக – முரண்பாடுகளோ மாற்று அபிப்பிராயங்களோ இருந்தபோதும் - எழுதியதாக நான் அறியவில்லை. அப்படி நடந்திருக்காது என்பதே என்னுடைய நம்பிக்கை. (இந்த நம்பிக்கை இன்றுவரை தளர்ந்ததில்லை).

ஆனால் இதையெல்லாம் அவர்களுக்கு எப்படிச் சொல்வது? அல்லது இதைச் சொல்லித்தான் புரியவைக்க வேணுமா? எனவே நான் எந்தப் பதிலுமே சொல்லவில்லை. நிலைமையை விளங்கிக்கொண்டு தணிந்தேன். காலச்சுவடுக்கோ கண்ணனுக்கோ இதைப் பற்றி எதுவும் கூறவும் இல்லை. தொடர்பாடற் பிரச்சினைகள் அதிகமாக உள்ள நிலையில் இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் சிக்கலுக்குரிய விசயங்களைப் பற்றிக் கதைப்பதைவிடக் கதைக்காமல் விடுவதே சிறந்தது. எனவே நான் சிறந்த முடிவையே எடுத்தேன். இந்த முடிவு வெளியே இருந்து பார்ப்போருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்திருந்தேன். குறிப்பாகக் கண்ணனுக்கு. ஆனாலும் என்ன செய்ய முடியும்? நிலைமையைக் கண்ணன் விளங்கிக்கொள்ளக்கூடும் என்ற ஒரு நம்பிக்கையோடு இருப்பதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பொதுவாக - வழமையான சில கடிதங்களோடு காலச்சுவடு உடனான தொடர்புகளைக் குறைத்து நிறுத்தினேன். அப்படியே மௌனக்காலம் உருவாகியது.

காலச்சுவடு உடனான உறவு தணிந்துவிட்டது. சில காலங்களின் பிறகு கண்ணனும் காலச்சுவடு இதழ்களை அனுப்புவதை நிறுத்திவிட்டார். அவருக்கு வேறு தெரிவுகள், வேறு வழிகளும் உடனடியாக இல்லாதிருந்திருக்கலாம். அல்லது நிலைமையைப் புரிந்திருக்கலாம். என்றபோதும் வன்னிக்குக் காலச்சுவடு வந்தது. ஆனால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும். முக்கியமாகப் புலனாய்வுத் துறையினருக்கு. ஆனால் அவர்கள் வேறு ஆட்களின் முகவரி வழியாக அவற்றைப் பெற்றனர். அதில் ஒரு முகவரி முல்லைக் கோணேஸினுடையது. மாதாந்தம் ஓர் இதழ் முல்லைக்கோணேஸூக்கு வரும். அவர் அந்த இதழை முதலில் படித்து விடுவார். கூடவே நானும் படித்து விடுவேன். ஆனால் அதைப் பற்றி நாம் வெளியே காட்டிக் கொள்வதில்லை. இருந்தும் காலச்சுவடில் வெளியாகும் சில கட்டுரைகளையும் அதனுடைய தலையங்கங்களையும் போட்டோப் பிரதி எடுத்து புலிகள் உட்சுற்றில் விட்டனர். இந்த உட்சுற்று பெரும்பாலும் போராளிகளுக்கானது. அதிலும் பொறுப்பாளர்களுக்குரியது. அப்படி வந்த உட்சுற்றொன்றை எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் நானும் பார்த்தேன். அப்போதும் எனக்குச் சிரிப்பே வந்தது. ஓர் இதழைப் பகிரங்கமாகத் தவிர்க்கிறார்கள். ஆனால் அந்த இதழின் உள்ளடக்கங்களை உட்சுற்றில் விட்டு ரகசியமாகப் படிக்கிறார்கள். இது என்ன மாயமோ!

காலச்சுவடு பற்றிய அபிப்பிராயங்கள் பகிரங்கமாகவே பேசப்பட்டன. வன்னியில் காலச்சுவடை எதிர்த்த அணி, அதற்கு விதிக்கப்பட்டிருந்த அறிவிக்கப்படாத தடையின் மூலமாக அகமகிழ்ந்தது. அவர்கள் என்னையும் காலச்சுவடு வாசகர் வட்டத்தில் தொடர்பானவர்களையும் காலச்சுவடுடன் தொடர்புபடுத்தி ‘ஒருமாதிரி’யாகப் பேசும் பட்டியலில் இணைத்தனர். அவர்கள் ஒருபோதும் உண்மையை நோக்கி வரப்போவதில்லை. உண்மைகளுக்கும் நன்மைகளுக்கும் எதிர்த்திசையில் சிந்தித்துக்கொண்டிருப் போரால் எப்படி யதார்த்தத்துக்கு நகர முடியும்? பதிலாக எம்மை நிர்ப்பந்தித்துத் தங்களின் காலடியிற் பணிய நிந்தித்தனர்.

காலச்சுவடு தடைசெய்யப்பட்டது பெரிய விசயம் என்றும் இதன் மூலம் ஒரு பெரிய ஆபத்திலிருந்து ஈழப் போராட்டத்தைத் தாம் காப்பாற்றிவிட்டதாகவும் அவர்கள் பாவனை பண்ணினர். ‘காலச்சுவடுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை இயக்கம் கவனிக்கிறது’ என்ற கதையையும் பரப்பினர். இதன்மூலம் எங்களுடன் நட்பாக இருந்த பலர் மெல்ல ஒதுங்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இப்படி இருந்த நிலையில் திடீரென ஒரு மாற்றம். 2002 ரணில் - பிரபாகரன் உடன்படிக்கை ஏற்பட்டபோது பல மாற்றங்கள் ஏற்பட்டன. வெளியே நின்றவர்கள் உள்ளே வந்தனர். உள்ளே நின்றவர்கள் வெளியே போனார்கள். பாதைகள் திறந்தன. பயணங்கள் நடந்தன. தடைகள் மென்தடைகளாகின. காலச்சுவடு மீண்டும் வன்னிக்கு வந்தது. புலிகள் நடத்திய ‘அறிவு அமுது’ என்ற புத்தகக்கடைகளில் காலச்சுவடு பகிரங்கமாக விற்கப்பட்டது. ஏறக்குறைய நூறு இதழ்களுக்கு மேல் ‘அறிவு அமுது’வுக்கு வருகிறது என்றும் அவ்வளவுமே விற்று முடிகின்றன என்றும் அதன் விற்பனையாளர்கள் சொன்னார்கள். முன்பதிவு செய்து பலரும் காலச்சுவடை வாங்கினர். இந்த முன்பதிவாளர்களில் காலச்சுவடை வன்னியில் அனுமதிக்கக் கூடாது என்று சொன்ன தரப்பும் அடக்கம். இதையெல்லாம் பார்த்தபோது மீண்டும் எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது. அது ஒருபோதும் நன்மையைத் தராது. தீமையை, ஆபத்தையே தரும். உண்மையையும் நன்மையையும் தீமையாக, எதிர்ப்பாகக் காட்டிக்கொள்வதற்குத் தேர்ச்சியடைந்தவர்கள் இருக்கும் சூழலில் மௌனமே சிறந்த வழி. இப்போதும் நான் இந்தச் சிறந்த வழியையே தேர்ந்தேன்.

‘அறிவு அமுது’வில் காலச்சுவடு மட்டும் அப்படிப் பகிரங்கமாக விற்பனையாகவில்லை. காலச்சுவடு பதிப்பகத்தின் புத்தகங்கள், தொடங்கிய காலத்திலிருந்தே தடைசெய்யப்பட்டிருந்த சரிநிகர், தினமுரசு, எக்ஸில், உயிர் நிழல் எனப் பல இதழ்களும் விற்பனைசெய்யப்பட்டன. போதாக்குறைக்கு சேரன், ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, திருக்கோவில் கவியுவன், ஓட்டமாவடி அறபாத், சிவரமணி, செல்வி, கோவிந்தன் (புதியதோர் உலகம்) எனப் பலருடைய புத்தகங்களும் விற்கப்பட்டன.

சிரிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் சிரிக்க முடியாது. இப்போது நாங்கள் காலச்சுவடையோ பிற ஏடுகளையோ புத்தகங்களையோ துணிச்சலாக வாங்கிச் செல்ல முடியும். இது ஒரு வகையில் பெரிய வாய்ப்பு. வன்னியிலே புத்தகங்களோ சஞ்சிகைகளோ வாங்க முடியாத நிலையில் இருந்த எங்களுக்கு இந்த மாதிரி எங்கள் ஊர்களிலேயே இவற்றையெல்லாம் வாங்க முடிகிறது என்றால் சும்மாவா! பலரும் தங்கள் வசதிக்குத் தக்கபடி புத்தகங்களை வாங்கி அடுக்கினார்கள். சிலர் ஓடர் கொடுத்து வாங்கினார்கள். இப்படி வாங்கிக் கொண்டிருக்கும்போதுதான் ஒருநாள் நண்பரொருவர் ஒரு குண்டைத் தூக்கித் தலையில் போட்டார் - இதயத்திற் போட்டார்.

‘. . .இப்படி எல்லாத்தையும் புலிகள் திறந்திருக்கிறார்களே! ஏன் தெரியுமா? என்று கேட்டார் அந்த நண்பர். ‘புதிய சூழல் உருவாகியிருக்கு. அதனால் எல்லாத்திலயும் மாற்றம் வந்திருக்கு. புத்தகங்களும் அப்படி, அந்த மாற்றத்தோடதான் வந்திருக்கு’ என்றேன்.

அவர் சிரித்தார். ‘உனக்கு விசயம் விளங்கேல்ல. அவர்கள் (புலிகள்) எல்லாத்தையும் கண்காணிக்கிறாங்கள். முழுசாகத் திறந்து விட்டிட்டு என்ன நடக்குது? யார்யாரெல்லாம் என்னவெல்லாம் செய்யினம் எண்டு பாக்கிறாங்கள். ‘அறிவு அமுது’ கடையில வந்து ஆர் ஆர் என்னென்ன புத்தகங்களை வாங்கிறது எண்டு பார்த்து விவரம் எடுக்கிறாங்கள்’ என்றார் நண்பர். எனக்கு இப்போதும் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிப்பையும் மீறிக் கடுமையான யோசனை வந்தது. இந்த நண்பர் சொல்வது உண்மையாக இருக்குமா? அல்லது இது ஒரு புனைவா? திட்டமிட்ட புனைவா? இல்லையென்றால் தேவையற்ற சந்தேகமா? எப்படி இந்தக் கதை முளைத்தது? ஏன் முளைத்தது? ஒரு நோயைப் போல எல்லாவற்றுக்கும் அதீதமான காரணங்களையே சொல்லிக்கொண்டும் தேடிக்கொண்டும் இருக்கிறோமா என்று எண்ணினேன். ஆனால் இதை நண்பருடன் விவாதிக்கவில்லை. அவருடைய கூற்றை நிராகரிக்கவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இரண்டுக்கும் சாத்தியங்கள் இருந்தன. பகிரங்கமாக எதையும் பேச, விவாதிக்க முடியாத நிலையில் அச்சமே தலைதூக்கியிருக்கும். மௌனமே கோலோச்சும். அவையே இங்கும் தலையைத் தூக்கிக்கோலோச்சின.

இப்படி இருக்கும்போது தமிழகத்தில் இருந்து ஈழ ஆதரவாளர் என்போர் ஒவ்வொராக வன்னிக்கு வந்தனர். வந்தவர்கள் என்னையும் சந்தித்தனர். அறிவு அமுதுவுக்கும் சென்றனர். அறிவு அமுதுவில் அவர்களை ஆகர்ஷிக்கும் விதமாக முன்னரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் எழுத்துகளைக் கொண்ட பலநூறு வகையான புத்தகங்கள். மேலும் விடியல், கிழக்கு பதிப்பக நூல்களும். அப்படியே கடையினுள் உலாத்திக்கொண்டு வந்தால், காலச்சுவடு, உயிர்நிழல், எக்ஸில் அது இது என்று எல்லாவகையிலுமான பல வெளியீடுகள். இதையெல்லாம் பார்த்த ஈழ ஆதரவாளர்களுக்கு தலைசுற்றியது. என்ன நடக்கிறது? என்று பதறியடித்துக்கொண்டு தங்களின் தொடர்பு வழிகளால், புலிகளின் மேலிடங்களுக்கு முறையிட்டார்கள். ஆனால் மேலிடம் இதையெல்லாம் பொருட்படுத்திய மாதிரி இல்லை. ‘எல்லாவற்றையும் தெரிந்துகொண்டே, கண்காணித்துக்கொண்டே செய்கிறோம். உங்களுக்கிருக் கும் விழிப்பும் எச்சரிக்கையும் எங்களுக் கும் இருக்கிறது’ என்று சொல்லாமல் உணர்த்தினர் புலிகள். அதாவது, அவர்கள் இதையெல்லாம் விற்பனை செய்வதை நிறுத்தவேயில்லை. இது ஈழஆதரவாளர் களுக்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்தது.

எனக்கு இப்போதும் சிரிப்பு வந்தது. ஆனால் இந்தத்தடவை நான் சிரித்தேன். சிரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவர்கள் என்னுடன் சண்டைக்கு வந்துவிட்டார்கள். காலச்சுவடை இங்கே – வன்னியில் - அறிமுகப்படுத்தி, அதற்குக் களம் அமைத்துக்கொடுத்து எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டேன் என்றும் தமிழகத்தில் வந்து பாருங்கள், அந்த இதழுக்கிருக்கும் எதிர்ப்பை என்றும் சொன்னார்கள். ஏறக்குறைய என்மீது உச்சக்கோபம் அவர்களுக்கு. நான் அவர்களுக்கு உண்மை நிலைமையை விளக்கினேன். ‘காலச்சுவடு ஈழ நிலைமையை வெளியே கொண்டு வந்தது. அதனிடம் விமர்சனத்துக்குரிய பகுதிகள் இருந்தாலும் இந்தப் பங்களிப்பையும் கவனம் செலுத்துகையையும் நாம் மறுக்க முடியாது. வேண்டுமானால் காலச்சுவடுடன் நாம் மேலும் பேசலாம். அதன் குறைபாடுகளை நீக்க முயலலாம். பகிரங்கமாக அதன் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, அதனுடைய பதிலை வெளிப்படுத்த நிர்ப்பந்திக்கலாம். இந்த மாதிரிச் செயற்படுவதை விடுத்து. எப்படி ஓர் இதழை நிந்திக்க முடியும்? நிராகரிக்க முடியும்’ என்று கேட்டேன்.

இதையெல்லாம் அவர்கள் கேட்டுக்கொள்ளவேயில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை. வந்தவர்களில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த வன்னி அரசு, ஓவியர் புகழேந்தி போன்றவர்கள் ஓரளவு யதார்த்தமாகச் சிந்தித்தனர். நிலைமைகளை யதார்த்தத் தளத்தில்வைத்துப் புரிய முற்பட்டனர். பா. செயப்பிரகாசத்துக்கு என் பதிலில் திருப்தியில்லையென்றாலும் அவர் வலிமையாக மறுக்கவில்லை. ஓவியர் மருது குழப்பங்கள் இல்லாதவர். அவர் எல்லாவற்றையும் நிதானமாகவே புரிந்துகொண்டார். விவாதிப்பதற்குப் பதிலாக அறிவதிலேயே அவர் ஆர்வமாக இருந்தார். அதிலேயே அக்கறை காட்டினார். நீண்டகாலம் இருந்த ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரனும் தேவையில்லாமல் அதீதமான உரையாடல்களைச் செய்ததில்லை. மருதுவைப் போல இடங்களை அறிவதிலும் சனங்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்வ திலும்தான் அதிக அக்கறையைச் செலுத்தினார். நாலும் வரட்டும். மக்கள் நல்லதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது என்பார் மகேந்திரன். அவர் எல்லா இதழ்களையும் வாங்கி எடுப்பார்.

வந்தவர்களிலேயே உச்சத்தொனியில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லிக் கட்டளை பிறப்பித்தவர் சீமான்தான். சீமான் பல குற்றச்சாட்டுகளை எல்லாம் முன்வைத்தார். தமிழகத்தில் ஈழப்போராட்டத்துக்கு எந்த மாதிரியான சக்திகள் எல்லாம் எதிர்ப்பாக இருக்கின்றன என்று அவர் பெரிய பாடமே நடத்தினார். அதில் காலச்சுவடும் கறுப்புப் புள்ளியைப் பெற்ற ஒன்று. சீமானுடன் விவா திப்பதில் பயனேதுமில்லை என்று ஒதுங்கிக்கொண்டேன்.

இந்தச் சூழலில் 1983 ஜூலை வன்முறை நினைவுகளின் 25 ஆவது ஆண்டை நினைவுகூரும்வகையில் காலச்சுவடு ஒரு வலிமையான பதிவைச் செய்யவுள்ளது என்று சேரனும் கண்ணனும் சொன்னார்கள். இந்தப் பதிவுக்கு என்னையும் எழுதமுடியுமா என்று சேரன் கேட்டார். நான் சம்மதித்தேன். ‘காயங்களில் இருந்து பிறந்த ஒளி’ என்ற கட்டுரையை எழுதினேன். இந்தக் கட்டுரை வந்ததைப் பார்த்தவர்கள் மீண்டும் கொதித்தெழுந்தார்கள். பிறகென்ன, வசையும் புரளியும் கிளப்பப்பட்டன. தமிழகத்தில் இருந்து வந்தவர்களும் இந்தக் கொதிப்போடு இணைந்துகொண்டனர். காலச்சுவடு தந்திரோபாயமாக ஈழப் போராட்டத்தைப் பற்றிப் பேசுவதாகக் காட்டிக்கொண்டு உள்நுழைவை மேற்கொள்ள முயல்கிறது என்று குற்றப்பத்திரிகையைத் தயாரித்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் அறிவு அமுதுவில் எல்லாப் புத்தகங்களும் இருந்து கொண்டேயிருந்தன. யுத்தம் கிளிநொச்சிக்கு வரும் வரையில், அது விசுவமடுவில் உள்ள ‘அறிவு அமுது’வின் கிளையை மூடும் வரையில் எல்லாம் இருந்தன. என்ன மாயமோ எல்லாவற்றுக்கும் இடமிருந்தன.

நாங்கள் இடம்பெயர்ந்து போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் தேவிபுரம் என்ற இடத்தில் தங்கியிருந்தோம். அங்கே எங்களின் கூடாரத்துக்கு அண்மையில் போராளிக் குடும்பம் ஒன்று தங்கியிருந்தது. அவர்களில் ஒரு பெண், அநேகமாக அவருக்கு முப்பது வயதிருக்கலாம். அந்தச் சூழலிலும் காலச்சுவடை வாசித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். சனங்கள் இடம்பெயர்ந்துகொண்டிருந்தனர். வெடிச்சத்தங்களும் சனங்களின் இரைச்சல்களும் கேட்டுக்கொண்டிருந்தன.

எனக்கு அப்போதும் சிரிப்பு வந்தது. ஆனால் சிரிக்கும் நிலையில் நான் இல்லை.

http://www.kalachuva...-154/page57.asp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலச்சுவடும் புலிகளும்

யோ. கர்ணன்

‘ புலிகளும் காலச்சுவடும் ’ என்றொரு கட்டுரையை காலச்சுவடு அக்டோபர் இதழில் கருணாகரனினால் எழுதப்பட்டிருக்கிறது. தலைப்பு மிகுந்த சுவாரஸ்யமாகயிருக்கிறது. காலச்சுவடு இதழுக்கும் புலிகளிற்குமான உறவு, காலச்சுவடு இதழிற்கும் வன்னிப்படைப்பாளிகளிற்குமான உறவு, அந்த இதழை பரவலாக்க செய்யும் முயற்சிகளில் எதிர்கொண்ட பிரச்சனைகள் என சில விடயங்களை கட்டுரை பேசுகிறது. இலங்கைக்கு வெளியிலிருந்து கட்டுரையைப் படிக்கும் காலச்சுவடு வாசகர்கள் புளகாங்கிக்கும் விதமாகவே கட்டுரையுள்ளது. அதாவது, ‘அடங்க மறு, அத்துமீறு’ என்ற பொலிசியையுடைய- உண்மை மீது தாகமுள்ள- வன்னிப்படைப்பாளிகள் உண்மையை உரித்து உரித்து காலச்சுவட்டில் எழுதியுள்ளார்கள். அது புலிகளிற்கு உவப்பில்லாமலும் இருந்திருக்கிறது. இதனை விட வேறென்ன வேண்டும்?

இதில் அவசியம் சுட்டிக்காட்ட வேண்டிய குறைகளிருப்பதாக தோன்றியதால் இந்தப் பதிவை எழுத வேண்டியதாகிவிட்டது. ஏனெனில், கட்டுரை பதிய முற்படும் சூழலும் யதார்த்த சூழலும் எதிரெதிர் திசையிலேயே இருந்துள்ளன. தேவையெனில் கட்டுரையை ஒரு தனி மனித நோக்கெனச் சொல்லலாம். ஊகங்களாலும், முன்னெச்சரிக்கைகளினாலும், அச்சத்தினாலும் கட்டமைக்கப்பட்ட தனிமனிதப் பார்வைகளை பொது நடைமுறைகளாக சித்தரிக்க முயல்வது தவறு. ஓரு வகையில் அநீதியானதும் கூட.

இதில் அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டிய விடயம் தலைப்பு. புலிகள் மற்றும் காலச்சுவடு இரண்டுக்குமே எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடர்புகளேயிருந்திருக்கவில்லை என்பதே உண்மை. எப்பொழுதும் படைப்பாளிகளிடமுள்ள ஒரு பலவீனம் காரணமாக இந்த வகையான தவறுகள் நேர்ந்துவிடுகின்றனவென்று நினைக்கிறேன். சமூகத்தில் நிகழும் எல்லா அசைவியக்கங்களிலும், அரசியல் செயற்பாடுகளிலும் தாங்கள் முக்கிய பாத்திரம் வகிப்பதாக அவர்கள் கற்பனை செய்து கொண்டிருப்பதனால் இப்படியான விபத்துக்கள் நேர்ந்துவிடுகின்றன.

விடுதலைப்புலிகளின் சில உறுப்பினர்கள்- அவர்கள் படைப்பாளிகளாகயிருந்ததினால் அந்த சஞ்சிகையை படித்தார்கள். அந்த சிலரில் பலர் இதழ் பற்றிய எதிர்மறையான எண்ணமுடையவர்களாக மாறியிருப்பதற்கான வாய்ப்புகளுள்ளன. நேரடியாக அல்லாவிட்டாலும் ‘உடையாரின் கைத்தடி’ பாணியிலாவது காலச்சுவட்டையொட்டி வன்னிப்படைப்பாளிகள் மட்டத்தில் எழுந்த பிரச்சனைகளில் சம்மந்தப்பட்டிருக்கலாம். இரண்டிற்குமே நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால் அந்த சிறு பகுதியை, அல்லது அந்தச் சிறு பகுதியின் சிறியளவிலான ‘சம்மந்தப்படல்களுடன்’ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகயிருந்த படைப்பாளிகளிகளிடையேயான சலசலப்பை விடுதலைப்புலிகளின் பிரச்சனையாகக் கொள்வதெல்லாம் அதீதத்திலும் அதீதம். இதில் கவனப்படுத்தி மிக முக்கியமான இரண்டு விடயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவது, அந்தப்பிரச்சனை படைப்பாளிகள் மட்டத்திலேயே நடந்தது. இரண்டு, சம்மந்தப்பட்டவர்கள் ஒன்றில் புலிகளின் உறுப்பினர்களாகயிருந்தார்கள். அல்லது ஆதரவாளர்களாகயிருந்து அவர்களுடன் பணியாற்றினார்கள்.

இது விடுதலைப்புலிகளின் மட்டப்பிரச்சனையாக மாறாததற்கு காரணங்களுள்ளன. விடுதலைப்புலிகள் என்று குறிப்பிடும்படியான ஓரளவு பரவலான வாசிப்புப்பரப்பை அந்த இயக்கத்திற்குள் இதழ் கொண்டிருக்கவில்லை. விரல் விட்டு எண்ணத்தக்கதான போராளிகளே இதழைப்படித்தார்கள். அவர்களும் செல்வாக்கு செலுத்தும் தளத்திலிருக்கவில்லை. ஆனால் ஈ.பி.டி.பியினால் நடத்தப்பட்ட தினமுரசு தடை செய்யப்படும்வரை அப்படியொரு பரப்பை கொண்டிருந்தது. இன்னொன்று, இந்திய சஞ்சிகைகள் தொட்டுக் கொள்ளும்விதமாக கையிலெடுக்கும் ஈழவிவகாரங்களை, அதிலும் குறிப்பாக அவர்கள் பேசும் நுண்ணரசியல்களை புலிகள் கவனத்தில் கொள்வதில்லை. ஆரம்பத்திலிருந்தே ‘கதைகாரர்கள் ஒன்றுக்குமுதவாதவர்கள்’ என்பதையொத்த அபிப்பிராயத்தை வளர்த்து, செயற்படுமியக்கமாக அது இருந்ததினால் இந்த கையான போக்கு இருந்தது.

காலச்சுவட்டை புலிகளிற்கு போட்டுக் கொடுத்தவர்கள், பிராமணியப்பத்திரிகை என்று போட்டுக் கொடுத்ததாக குறிப்பிடுவதையெல்லாம் புரிந்து கொள்ளவே முடியாதவை. சாதிய செயற்பாடுகளில் எழுத்து, பேச்சு நடைமுறைகள் ஒன்றுக்குமதவாதவை என்பது ஆரம்பத்திலிருந்தே புலிகளின் நிலைப்பாடு. இந்த வகையறாக்களை அவர்கள் திரும்பியும் பார்ப்பதில்லை. ‘பிராமணியப்பத்திரிகை’ என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தால், சஞ்சிகையை தடை செய்வதற்கு பதிலாக புலிகளே சஞ்சிகையை இறக்குமதி செய்து விற்பனை செய்திருப்பதற்கான வாய்ப்பகளே அதிகம். அதற்காக குட்டி தலைமையில் ஒரு வாணிபத்தையும் உருவாக்கியிருப்பார்கள்.பிராமணிய, தலித்திய, திராவிட வார்த்தை பிரக்ஞையெதுவும் அங்கிருக்கவில்லை. பிராமணியமென்ற வார்த்தை கோயில்களுடன் தொடர்புடைய ‘ஐயர்மாரின்’ சமாச்சரமாகவே கருதப்பட்டிருக்கும். கோயில்களும் அதனையொட்டிய செயற்பாடுகளும் பெருமளவில் நிதிபுழங்குமிடங்களாக அப்பொழுது உருவெடுத்திருந்தன.

முதலில் காலச்சுவடு வன்னியில் தடை செய்யப்பட்டிருந்தது என்று குறிப்பிடுவதே தவறு. அது விடுதலைப்புலிகளினால் தடை செய்யப்படவேயில்லை. அதற்கு ஒரேயொரு காரணம் மட்டுமேயுண்டு. இப்படியொரு சஞ்சிகை வருவதையே அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 2000ம் ஆண்டு வன்னியிலிருந்த சில நூலகங்களிற்கு தொடர்ந்து காலச்சுவடு வந்து கொண்டிருந்ததை நான் கண்டிருக்கிறேன்.

ஆனால் கருணாகரன் குறிப்பிட்டதைப் போல காலச்சுவட்டையொட்டி வன்னியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவர் சற்று அதிகமாக அதனை நினைத்துவிட்டார் என்பதுதான் என் எண்ணம். படைப்பாளிகளையுமுள்ளடக்கி காலச்சுவடு குறித்து புலிகளிற்குள் குழப்பமுண்டாகியதென்று அவர் குறிப்பிடுவது சரியல்ல. சில புலியுறுப்பினர்களையும் உள்ளடக்கிய ‘இலக்கிய உலகம்’ தான் சலசலத்தது. அந்த இலக்கிய உலகிலிருந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புலிகளின் முக்கியஸ்தரை தெரியும். வன்னியில் இப்படியான ‘கலாச்சர’மொன்று உருவாகியிருந்தது. முக்கியஸ்தருடன் பழக்கமுள்ள பொதுமகனை, முக்கியஸ்தரது நிழலாகவே கற்பனை செய்து கொள்வார்கள். நிஜமனிதருடன் முரண்பாடு வந்தாலும், முரண்பட்டவருக்கு நிழல் முகம்தான் தெரியும்.

கட்டுரையில் புலிகளிற்கு காலச்சுவட்டில் அதிருப்தியிருந்ததென்று குறிப்பிடுவதும், புலிகளின் தலைமை தடை செய்ததென்றும் குறிப்பிடுவது மிகை புனைவுகள். விடுதலைப்பலிகளின் அரசியல்த்துறையின் ஒரு பகுதி- குறிப்பாக கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களுடன் தொடர்புடைய பகுதியை விடுதலைப்புலிகளின் முகமாக கருணாகரன் சித்தரிக்கிறார். புலிகளுடன் வேறுவேறு துறைகளில் தொடர்புபட்ட பொதுமக்களில் பல்வேறு தரப்பினரும் இதற்கொப்பான எண்ணங்களுடனிருந்ததை கண்டிருக்கிறேன். தங்கள் தங்கள் துறைகளில் தொடர்புபட்ட பகுதியை விடுதலைப்புலிகளின் முகமாக உருவகிப்பது. உண்மை அதுவல்ல. பெருங்கடலின் சிறு துளி நீரது.

காலச்சுவடு குறித்து எதிர்மறையான பிம்பம் புலிகளின் ஆதரவாளர்களாகயிருந்த சில எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்களிடம்தான் ஏற்பட்டிருந்தது. அதில் முக்கியமானவர் தி.தவபாலன். எழுத்தாளர்கள், கவிஞர்களாகயிருந்த சில புலியுறுப்பினர்களிடமும் ஏற்பட்டிருக்கலாம். நான் குறிப்பிடும் இந்த ‘சிறு’ என்பது, விடுதலைப்புலிகளில் செல்வாக்கு செலுத்தவல்ல தரப்பல்ல. இதில் புதுவை இரத்தினதுரைதான் சொல்லிக் கொள்ளும்படியானவர். அவரே நினைத்தால் கூட, வெளிச்சம் சஞ்சிகையை நிறுத்த முடியாதளவில்த்தானிருந்தார்.

‘இலக்கிய உலகத்திற்குள்’ ஏற்பட்ட கசப்புக்கள், பரஸ்பர போட்டி காரணமாக காலச்சுவட்டிற்கு இப்படியானதொரு துரதிஸ்டம் நேர்ந்துவிட்டது என்பதேயுண்மை. புதுவை இரத்தினதுரையை உள்ளடக்கிய ‘வெளிச்சம்’ சார்பு அணியும், ‘எழு’ என்ற கலையிலக்கிய அமைப்பும் அப்பொழுது ஆளையாள் வெட்டாத குறையாக போட்டி போட்டுக் கொண்டு இலக்கியத்தை வளர்த்துக் கொண்டிருந்தனர். எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்த இயக்கங்களைப் போலவே இவர்களும் தமக்குள் மோதிக் கொண்டிருந்தார்கள். நல்லவேளையாக யாருடைய கையிலும் துப்பாக்கிகள் இருந்திருக்கவில்லை.

காலச்சுவடு வன்னி ‘இலக்கியத்தரப்பில்’ காணாமல் போனதற்கான காரணங்களை மேற்படி பின்னணிகளிலிருந்தே பார்க்க வேண்டும். ஆம். காலச்சுவடு வன்னியில் இருந்து கொண்டுதானிருந்தது. அந்த இதழ் பற்றிய அறிதலுள்ள தரப்புக்கள் அதனைத் தொடர்ந்து பெற்றுக் கொண்டுதானிருந்தனர். விடுதலைப்புலிகள் என்ன நினைப்பார்களோ என்று சங்கடப்பட்ட தரப்புக்கள் காலச்சுவட்டை கைவிட்டார்கள்.

இலக்கியத் தரப்பிலிருந்த பெரும்பாலனவர்களிடம் ஏற்பட்ட எதிர்மறையான அபிப்பிராயம் காரணமாக, இயல்பாகவே அதற்கான ஆதரவுத்தளம் இல்லாமல்ப் போனது. இதனை இரண்டு வகையாகப் பார்க்கலாம். ஒன்று, தமிழீழ விடுதலைப்புலிகளிற்குவப்பில்லாத சில விடயங்களைப் பேசும் இதழைப் புறக்கணித்து அமைப்பிற்கு தங்களது விசுவாசத்தை வெளிக்காட்டியவர்கள். இரண்டு, முதலாவது போக்கு பெரும்போக்காக உருவெடுக்க, இருப்புப் பற்றிய அச்சத்தால் அந்த வெள்ளத்துள் அள்ளுண்டவர்கள். மேற்படி சம்பவம்; படைப்பாளிகளின் இயல்பான முகத்தை வெளிப்படுத்தி விடுகிறது. புலிகள், காலச்சுவடு என படைப்பாளிகள் மட்டத்தில் உருவாக்கப்பட்ட பிரச்சனையில் மேற்படி இரண்டு தரப்பினரையுமே குற்றம்சாட்ட முடியாதென்பதுதான் கசப்பான உண்மை. படைப்பாளிகள்தான் பிரச்சனையின் காரணிகள். எதிலும்பட்டுக் கொள்ளாமல், அனுசரித்துச் செல்லும் ‘ஈரோஸ்பாணியை’ வன்னியிலிருந்த பெரும்பாலான படைப்பாளிகள் கைக்கொண்டதனால் காலச்சுவட்டையும் கைவிட்டார்கள்.

பிரச்சனைக்குரிய பகுதிகளில் வாழ்பவர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடையவர்களாகவும், பிரச்சனைகளை கற்பனை செய்து அதற்குத் தகுந்தபடி தற்காப்புக்களில் ஈடுபடுபவர்களாகவுமிருப்பார்கள் என்பதை நானே பல தடவைகள் உணர்ந்திருக்கிறேன். அதற்காக தனிப்பட்ட அனுமானங்களையெல்லாம் பொது அபிப்பிராயமாகவும். நடைமுறையாகவும் கருதுவது அதீதமானது. கருணாகரனது கட்டுரை விடயத்திலும் அதுதான் நடந்திருக்கிறதென்றே நினைக்கிறேன்.

மேலே சொன்னதையொத்த எண்ணங்கள் காரணமாக காலச்சுவடு வாசகர் வட்டத்தை அவர்கள் கைவிட்டிருக்க வேண்டியதில்லை. சற்றே அச்சத்தைத் துறந்திருந்தால், காலச்சுவட்டிற்கு வன்னியில் பெரிய வாசகர் வட்டமொன்று உருவாகியிருக்கலாம்.

http://yokarnan.com/?p=372

  • கருத்துக்கள உறவுகள்

கர்ணன் என்னவாம் சொல்ல வாறார் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரன் புலிகள் தடை விதித்ததால் காலச்சுவடு வாசகர் வட்டம் வன்னியில் செயலிழந்தது என்றார். கர்ணன் புலிகள் தடை ஒன்றும் விதிக்கவில்லை என்றார். அவ்வளவுதான் :)

இதில் எதை எடுப்பது என்று புரியவில்லை .

இருபது வருடங்கள் ஆட்சி செய்த புலிகளின் பிரச்சனை நினைத்து பார்க்க கஷ்டமாக இருக்கிறது .

இரண்டு வருடங்கள் தமிழ்நாட்டில் முகாம்கள் வைத்திருந்த எம்மவர்கள் மத்தியில் எதை வாசிக்க கொடுப்பது என்ற பிரச்சனை .

கூட விளங்கினாலும் பிரச்சனை விளங்காவிட்டாலும் பிரச்சனை எனற நிலைதான்.

வங்கம் தந்த பாடம் எழுதியவர்களுக்கு என்றும் எனது நன்றி .

இருவரும் புலிகளை குறைதான் சொல்கிறார்கள்.

கருணாகரன் புலிகள் புத்தகத்தை தடை செய்தனர் என்கிறார்.

யோ.கர்ணனோ அதற்கு மேலால் "அவர்களுக்குத்தான் வாசிப்புப் பழக்கமே இல்லையே, இலக்கிய வாசனையே அறியாத கூட்டம் அது, அவர்கள் தடை செய்யவே இல்லை" என்கிறார்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பின்வரும் எதிர்வினை அ. இரவி காலச்சுவட்டில் எழுதிய எதிர்வினைக்கான பதிலாகும்.

 

அ. இரவியின் எதிர்வினை: http://www.yarl.com/forum3/index.php?showtopic=111038

 

 

-----------------

 

 

 

எதிர்வினை: காலம் ஆகி வந்த கதை   கருணாகரன்

 

 

கதை ஒன்று

 

காலச்சுவடும் புலிகளும் என்ற என்னுடைய கட்டுரைக்கு சிரிப்பின் வஞ்சக அரசியல் என்ற தலைப்பில் அ. இரவி லண்டனிலிருந்து எதிர்வினை ஆற்றியிருந்தார். இரவியின் எதிர்வினைக்கான என் பதிலை அதற்குரிய முறையில் எழுதுவதற்கிருந்தேன். பதிலை எழுதுவதற்கு முன்பு, இரவி ஒரு காலம் என்னுடன் நெருங்கிப் பழகியவர் என்ற காரணத்தால் ‘நான் பதில் எழுதவுள்ளேன்’ என்பதை அவருக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன். இதற்கு முன்னரும் பல இடங்களில் இரவி என்னைக் குறித்துத் தாழ்வாக எழுதியும் பேசியும் வந்ததால் முடிவாக அந்த மின்னஞ்சலை எழுதினேன். அதனையடுத்து இரவி தொலை பேசியில் தொடர்புகொண்டு அந்தப் பதிலை வேறுவிதமாக மோதல்களற்ற நிலையில் எழுதும்படியும் கேட்டார். ‘நாங்கள் நண்பர்களாகவே இருக்க வேண்டும் எனவும் எங்களுக்குள் இடைவெளி ஏற்படுவது நல்லதல்ல’ என்றும் கேட்டுக்கொண்டார். வேறு நண்பர்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை விடுத்தார். பொதுவெளியில் என்னை மோசமாகத் தாக்கிக்கொண்டு, தனிப்பட்ட முறையில் இணக்கமாகக் கதைப்பது அறிவியல் ஒழுக்கத்துக்குரியதல்ல. ஒருவரின் ஆளுமையைக் குறித்த பொது அபிப்பிராயத்தைச் சிதைக்கும் விதமாகச் செயல்பட்டுக்கொண்டு, அவருடன் தனிப்பட்ட முறையில் நட்பைப் பேண முற்படுவது முரணானது. அத்துடன் இரவியின் விளக்கத்தின்படி துரோகி ஒருவருடனான உறவும் அவருக்கு ஏற்புடையதல்ல. நட்புக்கிடையில் அரசியல் உபாயங்கள் எதற்கு? இரவியின் கோரிக்கை என்பது சேதத் தவிர்ப்பு நடவடிக்கையே. இது ஒரு உத்தியே. ஆனாலும் அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க என் பதிலை முடிந்தவரையில் தணிந்த நிலையில் இங்கே பதிவிடுகிறேன். மகாபாரதக் கதையில் கர்ணனிடம் சென்று ஒரேயொருமுறை மட்டும் நாகாஸ்திரத்தை எய்யுமாறு குந்தி கேட்டுக்கொண்டதைப் போல இரவியும் என்னிடம் இப்படியொரு நெருக்கடியான கோரிக்கையை வைத்துள்ளார். எனவே இந்தப் பதில் இங்கே வேறுவிதமாக அமைந்துவிட்டது. இந்தப் பதிலின் வடிவமும் தொனியும் உள்ளடக்கமும்கூட மாறிக் குளிர்ந்துவிட்டன.

 

 

கதை இரண்டு

 

‘உங்கள் கூக்குரல்களால் எங்களின் காயங்களைக் கிழிக்க வேண்டாம்
எங்களை இப்போதேனும் அமைதியாக இருக்கவிடுங்கள்’

- எஸ். போஸ்

 

 

இங்கே (இலங்கையில்) வாழும் மக்களின் வாழ்வையோ உணர்வுகளையோ கணக்கில் எடுக்காது, தங்களின் மாலை நேரப் பொழுதுபோக்கு மையங்களிலிருந்து ஒருவித மதுக் கிறக்கத்தில் ஈழ நிலவரம் பற்றி இன்று பலர் கூக்குரல்களிடுகின்றனர். தங்கள் கூக்குரல்களால் உலகத் திசைகளை நிரப்பவும் துடிக்கின்றனர். இவர்கள் நோக்கமெல்லாம் தங்கள் வாழ்வின் தேவைகள், நலன்கள், விருப்பங்களிலிருந்தே உருவாகின்றன. எனவே முதலில் ஒன்றைக் கேட்கிறேன் - இங்கே, போர் நடந்த பிரதேசத்திலுள்ள சனங்களின் உணர்வுகளையும் வாழ்வையும் புரிந்துகொள்வதற்கு முதலில் முயலுங்கள். இது என் தனிப்பட்ட கூற்றல்ல. பல்லாயிரம் மக்களுடைய கோரிக்கை.

 

முற்றிலும் வேறுபட்ட ஒரு யதார்த்தப் புலத்திலிருந்து, வேறுபட்ட வாழ்விலிருந்து நீங்கள் சிந்திக்கிறீர்கள்/ பேசுகிறீர்கள். ‘இங்கே, இந்தப் புலத்தில் வாழவே முடியாது’ என்ற நிலையில் நீங்கள் நீங்கிச் சென்றபின், அங்கிருந்து கொண்டு எல்லோரையும் நிறுவை செய்வதும் எல்லாவற்றுக்கும் நியாயம் கற்பிப்பதும் எதற்காக? அது நீதியானதா? அல்லது நியாயமானதா? அது எந்தளவுக்குத் தர்மமானது? ‘இந்த மீன்கள் இந்த நீருக்குள்தான் வாழ வேண்டும்’ என்ற புரிதல் ஏன் உங்களில் யாரிடமும் இல்லாமல் போகிறது?

 

அன்னா அக்மதோவைவைப் போல, ‘இல்லை, மற்றொரு வானத்தின் கீழும் அல்ல - அந்நியச் சிறகுகளின் அரவணைப்பில் அல்ல - அன்று நான் எனது நாட்டு மக்களோடு இருந்தேன் - என்நாட்டு மக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இடத்தில்’ என நாங்கள் தொடர்ந்தும் மோசமான யதார்த்தச் சூழல்களுக்குள் அவற்றை எதிர்கொண்டவாறே வாழ்கிறோம். அப்படி வாழ்வதே எங்கள் வாழ்க்கை. அதுவே எங்கள் போராட்டம். எதிலும் கரைந்துவிடாமல், எதிலும் அடிபட்டுச் செல்லாமல் நதியின் அடியாழத்தில் இருக்கும் கூழாங் கல்லைப் போல.

 

இரவி இந்த மண்ணிலிருந்து 1992இல் புலிகளுக்கு அஞ்சி வெளியேறியவர். கிளிநொச்சியில் ஒரு நாள் இரவிக்குத் தெரிந்த இன்னொரு ஆசிரியரைச் சந்தேகத்தின் பேரில் புலிகள் கைதுசெய்தனர். அந்த ஆசிரியர் என். எல். எவ். ரி இயக்கத்தில் ஒரு காலம் செயல்பட்டிருந்தார். அந்த ஆசிரியர் கைதான சேதியறிந்தவுடன் அன்றிரவே கிளிநொச்சியை விட்டுத் தப்பியோடிக் கொழும்புக்குச் சென்றார் இரவி. ஆனால் அப்போதும் புலிகள் தமிழ்த் தேசியத்துக்காகவே போராடிக்கொண்டிருந்தனர். இலங்கை அரசோ கொழும்பிலிருந்து புலிகளுக்கு எதிராகவும் தமிழர்களுக்கெதிராகவும் மோசமாகப் போர் செய்துகொண்டிருந்தது. ஆனால் இத்தனைக்கும் அப்படிப் போர் செய்யும் பக்கத்தை நம்பி, சிங்களப் பயங்கரவாதத்தை நம்பி, ஒரு ‘தமிழ்த் தேசியவாதி’ சென்றார். அந்தத் தமிழ்த் தேசியவாதிக்குச் சிங்களப் பயங்கரவாதம் அன்று அச்சுறுத்தலாக இருக்கவில்லை. சிங்களப் பயங்கரவாதத்திற்கு இந்தத் தமிழ்த் தேசியவாதியும் அச்சுறுத்தல் எதையும் ஏற்படுத்தவில்லை.

 

ஆனால் ஒரு ‘மெய்யான’ தமிழ்த் தேசியவாதியையும் பிரபாகரனின் மீது அளவற்ற ‘விசுவாசம்’ கொண்டிருந்தவரையும் அவர்மீது பக்தியை வைத்திருந்தவரையும் யாரோ தேவையில்லாமல் சந்தேகித்திருக்கிறார்கள்? அது சரி, அப்படியென்றால், எதற்காக இந்த மெய்யான தமிழ்த் தேசியவாதி புலிகளுக்கு அஞ்சிக் காட்டில் பாய்ந்தார்? மன்னிக்கவும் காட்டுவழியாகக் கொழும்புக்குப் பாய்ந்தார்? அங்கே ரத்த வெறியோடிருந்த சிங்கத்திடம் ஏன் தஞ்சமடைந்தார்? எனக்கு விளங்கவில்லை. உங்களில் யாருக்காவது இது விளங்கினால் தயவுசெய்து சொல்லுங்கள்.

 

 

கதை மூன்று

 

கொழும்புக்குப் போன இரவி, அங்கே சும்மா இருக்கவில்லை. இரவோடிரவாகத் தான் பதறிப் பாய்ந்தோடியதை நினைத்து நினைத்து வஞ்சமாய் எழுதினார். புலிகளைப் பற்றி, பிரபாகரனைப் பற்றி மூர்க்கம் கொண்டு, வசை வசையாக எழுதினார். பல புனைபெயர்களில் எழுதித்தள்ளினார். அப்போது அவருடைய நண்பர்கள் பலரும் அவருக்கு நல்லுரை சொன்னார்கள். ஆனால் இரவி அவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டார். பதிலாக, முடிந்த மட்டும் தன்னுடைய ஆவேசத்தைக் கொட்டிப் புலிகளைத் திட்டித் தீர்த்தார்.

 

அந்த நாட்களில் இரவியின் எழுத்துக்களை வாசித்த புலிகளின் மூத்த போராளி ஒருவர் சொன்னார், ‘அவர் எண்டைக்குத்தான் சரியாக நடந்தவர். எப்பதான் உண்மையாக இருந்தவர்?’ அந்தப் போராளி இன்னும் இருக்கிறார் என்பது மேலதிகத் தகவல்.

 

கொஞ்ச நாட்கள் இப்படியே கழிந்தன. பல பெயர்களில் புலிகளுக்கு எதிராக இரவி எழுதுகிறார் என்பதை எப்படியோ புலிகள் கண்டுபிடித்துவிட்டனர் என்று பகிரங்கமாகக் கதைகள் உலாவத் தொடங்க இரவி கொழும்பிலும் தனக்குப் பாதுகாப்பில்லை எனப் பதறத் தொடங்கினார். ஆனால் புலிகளை ஏய்த்துக்கொண்டு, செட்டிகுளம் காட்டுக்குள் போனதைப் போல ஒரே நாளில் கொழும்பிலிருந்து இரவியினால் வெளியேற முடியவில்லை. எனவே புலிகளினால் தனக்கு அச்சுறுத்தல் என்று சொல்லிக் கொழும்பிலிருந்து வெளியேறும் நாள்வரையில் அன்றைய இலங்கை அரசாங்கத்துக்கு மிக நெருக்கமாக இருந்தவர்களின் பாதுகாப்பில் தங்கியிருந்தார். அப்படி இருந்துகொண்டே பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து ஐரோப்பாவிற்குத் தப்பிச் சென்றார். அந்த நாட்களில் யுத்தம் கொழும்பை இறுக்கத் தொடங்கியிருந்தது. அங்கே உருவாகிக்கொண்டிருந்த நெருக்கடி நிலையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் இரவிக்கு இந்த முன்னேற்பாடு வாய்த்தது. ஆனால் இதைப் பற்றி அவர் பின்னாளில் வேறுவிதமாகக் கதையளந்தது தனிக்கதை.

 

 

கதை நான்கு

 

திடீரென ஒரு நாள் இரவி, (எங்களுக்கு ஞானம் வந்ததைப் போல என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படித்தான் பலரும் எம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள். எங்களுக்காவது போரில் சிக்கியதால் ஞானம் வந்தது. இரவிக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை) புலிகளின் அலைவரிசையில் வீழ்ந்தார். அதுவரையிலும் புரட்சிகரத் தத்துவம் பேசி, என்.எல்.எவ்.ரியின் உறுப்பினராக, ஒரு புத்திசாலி மாக்ஸிஸ்ற்றாகத் தோன்றிக்கொண்டிருந்த இரவி, திடீரெனத் தமிழ்த் தேசியவாதியாகி, புலிகளின் அனுதாபியாகி, ஆதரவாளராகி, பெரும் தூணாக மாறினார்?

 

பிறகு லண்டனில் ஐ.பி.ஸி. வானொலியிலும் ரி.ரி.என். என்ற தொலைக்காட்சியிலும் பணி. இரவியின் புண்ணியத்தினால்தான் புலிகளின் புகழ் ஓங்கிப் பரவத் தொடங்கியது திக்கெட்டும் திசையெட்டும். (இடையில் இரவி பணி நீக்கம் செய்யப்பட்டது வேறு கதை. அதைப் பற்றி வன்னிக்கு முறையிட இரவி வந்தது இன்னொரு தனிக்கதை. வன்னியில் இரவியைக் கண்டுகொள்ளாமல் புலிகள் விட்டது பிறிதொரு கதை. என்றாலும் புலிகளின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கடைசிவரையில் பல முனைகளிலும் முயன்று அவர் தோற்றது இன்னொரு கதை. இரவியின் பிரச்சினை விளங்காமல் அவரை வைத்துத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிக்க முயன்று, அதனால் நான்பட்ட சிரமங்கள் பிறிதொரு கதை. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏனையவர்களும் இரவியால் சங்கடத்துக்குள்ளானது இன்னொரு கதை). பிறகு இரவியைப் புலிகளில் எவரும் வன்னியிலும் நம்பவில்லை. புலம்பெயர்ந்த தேசத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

ஆனால் இரவி தன்னை ஒரு ‘தமிழீழத் தேசியப் பற்றாளர்’ என்றே இன்னும் பறையடித்துக்கொண்டிருக்கிறார். தான் ஒரு ‘பெரும்புலி’ என்று காட்டவும் முற்படுகிறார்.

 

 

கதை ஐந்து

 

போர் முடிந்த பின், புலம்பெயர் நாடுகளில் இருந்த பலர் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் தங்களாலான உதவிகளைச் செய்தனர். தமிழ்ப் பிரியா, தாமரைச்செல்வி, நோயல் நடேசன், லெ. முருகபூபதி, கோவை நந்தன், சாந்தி ரமேஸ், சஞ்சயன் செல்வமாணிக்கம், தமயந்தி எனப் பல படைப்பாளிகள்கூட இப்படி உதவும் காரியங்களில் முன்வந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். புலிகளை எதிர்த்துச் செயல்பட்டவர்கள்கூட முன்வந்து பல உதவிகளைச் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இந்தத் ‘தேசப்பற்றாளர்’ இரவியோ இந்தியா, கனடா, சுவிஸ் என்று சுற்றுலாக்களை இந்தத் துயர்நிறை காலப்பகுதியில் செய்கிறார். போதாக் குறைக்குத் தமிழ்நாட்டுக் கோவில்களில் நேர்த்திக் கடன் வேறு நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அப்பாடா, என்ன சனப்பற்று? என்ன இனப்பற்று? என்ன தேசியப்பற்று? இதைப் பற்றி ‘ஒரு பேப்பர்’கூட எழுதவில்லை என்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!

 

 

கதை ஆறு

 

‘எங்கள் மத்தியில் இன்னுமோர் கும்பல் எஞ்சியுள்ளது. அவமானத்தை அது சாப்பிடுகிறது. தலைகுனிந்து நடந்து செல்கிறது. அவர்களின் பிடரியை நிமித்துவோம் நாங்கள். எதிர்ப்படும் ஒவ்வொரு கையையும் நக்கும் ஒருவனை எப்படி நாங்கள் எம்மிடையே வைக்கலாம்?’

 

- பலஸ்தீனக் கவிஞர் ரஷித் குசைன் மிக அருமையாகத்தான் எழுதியிருக்கிறார். அதை எப்படியோ பொருத்தம் கருதிப் பேராசிரியர் நுஃமான் அந்த நாட்களிலேயே மொழிபெயர்த்திருக்கிறார்.

 

கால நீட்சியைக் கடந்து, வாழ்வெல்லையைக் கடந்து இன்று இந்தக் கவிதை அப்படியே அச்சொட்டாக அ. இரவிக்கும் அவரைப் போன்ற ‘நடிகர்’களுக்கும் பொருந்துகிறது. ஆனால் அதை அவர் மாற்றிப் பிறருடைய தலையில் போட்டுத் தான் தப்பித்துக்கொள்ள முயல்கிறார்.

 

மிக இளவயதிலே போராட்டத்தில் இணைந்து, தங்கள் வாழ்வையும் உயிரையும் இழந்த பலரின் மத்தியிலே, இரவி, தன்னுடைய உயர்கல்வியை இழக்காமல் காப்பாற்றிக்கொண்டார். பிறகு ஆசிரியப் பணி. வசதியான இடத்தில் திருமணம். நெருக்கடி வந்தபோது கொழும்புக்குத் தப்பியோடி, அங்கே நல்லதொரு வாழ்க்கை. (கொழும்பில் இருந்த காலத்தில் வாங்கிய வீடு இன்னும் அங்கே இருக்கிறது என நினைக்கிறேன்.) பிறகு கொழும்பிலும் நெருக்கடி என்று வந்தபோது ஜேர்மனி வழியாக லண்டனுக்குப் பாதுகாப்பும் வசதியும் தேடிப் பயணம். புலம்பெயர் தேசத்தில் புலிகளின் செல்வாக்கு மண்டலம் பெரிது என்பதால், அதனுடன் சமரசம். இடையில் இரவியை அவர்கள் இனங்கண்டு தள்ளிவைத்ததால் ஏற்பட்ட பின்னடைவைச் சீராக்க வன்னிக்கு விஜயம். அங்கே மீண்டும் தனக்கான இடத்தைப் பெற தீவிர முயற்சிகள். அவையெல்லாம் சரிப்பட்டு வராமல் போகவே திரு. சிதம்பரநாதன், பத்மினி சிதம்பரநாதன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராகத் திருமதி பத்மினி சிதம்பரநாதன் அப்போதிருந்தார்) ஆகியோரைக் கொண்டு தன் செல்வாக்கு மண்டலத்தை உயர்த்த முயன்றமை. இவையெல்லாம் தன்னலன் சார்ந்தன்றி வேறென்ன? அசல் பிழைப்புவாதிக்கு எந்த நாணமும் கிடையாதென்பது நூறுவீத உண்மை என்பது இரவி விசயத்தில் தவறவேயில்லை.

 

இப்போதும் அப்படியொரு செல்வாக்கு மண்டலத்திலிருந்து தனக்கான அறுவடையைச் செய்வதே இரவியின் நோக்கமும் முயற்சியும். இதற்காக என்ன வேசம் போடவும் யார் காலில் விழவும் அவர் தயார். இதைப் பற்றியெல்லாம் இரவியின் நெருங்கிய நண்பர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் அவர் தன் வாழ்வின் வழி நெடுக, மாக்ஸிஸ்றாக, புத்திஜீவியாக, போராட்டப் பங்காளியாக, தமிழ்த் தேசியவாதியாக எப்படியோ தன்னைத் தேவைக்குத் தகுந்த மாதிரி உருமாற்றியே வந்திருக்கிறார். அதற்குத் தோதாக அவர் எங்கும் எவருடைய கையையும் நக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு விசயம், ரஷித் குசைன் கருதுவதைப் போல இரவியின் தலையை எவராலும் எளிதில் நிமிர்த்திவிட முடியாது. பிழைப்புவாதிகளின் தலைகள் ஒருபோதும் நிமிர்த்த முடியாதவை.

 

 

கதை ஏழு

 

இத்தகைய தன்னலம் சார் சிறப்புத் தகுதிகளையெல்லாம் தன்னிடத்திலே கொண்டுள்ள இரவி, என்னைப் பார்த்தும் பேராசிரியர் நுஃமானைப் பார்த்தும் கேள்விகளை எழுப்புகிறார். அதிலும் நுஃமான் முன்வைத்துள்ள சீரியஸான விசயங்களைக் கவனத்திற்கும் மீள்பார்வைக்கும் உரிய முக்கியமான விசயங்களை எல்லாம் பொத்தாம் பொதுவான அணுகுமுறையின் மூலம் தூக்கி வீசிவிட்டு அவரைத் தூக்கித் துரோகிப்பட்டியலுக்குள் தள்ளிவிடுகிறார். யார் அடிப்படைவாதத்திற்குள் நிற்பது என்று இரவியின் கட்டுரையை வாசிப்போருக்கும் நுஃமானின் நேர்காணலை வாசிப்போருக்கும் விளங்கும். ஆகவே அதைப் பற்றி இங்கே மீள்விளக்கமளிக்காமல் மேலும் செல்கிறேன்.

 

 

இறுதி விளக்கம்

 

ஈரோஸ் இயக்கத்தில் நான் இருந்தேன் என்பதற்காக அந்த இயக்கம் மேற்கொண்ட அத்தனை குற்றங்களையும் பொதுமைப்படுத்தி என் தலையில் சுமத்துகிறார் இரவி. நல்லது. அந்த இயக்கத்தில் நான் எத்தகைய நிலையில் இருந்தேன், எதுவரையில் இருந்தேன் என்ற விளக்கமெல்லாம் அவரிடம் இல்லை. அது மட்டுமல்ல ஈரோஸ் இயக்கம் 1992ஆம் ஆண்டுவரை இயங்கியதாகவும் அவர் கூறுகிறார். 1990 ஜுன்மாதத்திலேயே ஈரோஸ் இயக்கம் பகிரங்கமாகக் கலைக்கப்பட்டுவிட்டது. மட்டுமல்ல அந்த இயக்கத்தில் இருந்து குறிப்பிட்ட சிலர் புலிகளுடன் இணைந்தனர். அவர்களைத் தவிர, ஏனையவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டனர். குறிப்பிட்டளவிலானவர்கள் கொழும்பில் தனித்துச் சிறிது காலம் இயங்கினர். ஆனால் அவர்கள் அரசிடம் இரண்டறக் கலக்கவில்லை. கொழும்பில் இருந்தபோதும் அவர்களால் எந்தப் பெரிய செல்வாக்கையும் பெற முடியவில்லை. இதன் காரணமாக அவர்கள் பின்னர் உதிர்ந்துவிட்டனர். எஞ்சி வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இருந்தவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். அப்போது வடக்கு-கிழக்கில் இயங்கிய ஊடகங்கள் புலிகளுடையனவாகவே இருந்தன. அவற்றில் பணியாற்றியவர்களில் நானும் ஒருவனாவேன். ஆனால் அந்த ஊடகங்களில் நான் என்ன செய்தேன், எப்படிச் செயல்பட்டேன் என்று ஆராய வேண்டும். ஆனால் ‘இந்த மீன்கள் இந்த நீருக்குள்தான் வாழ வேண்டும்’ என்ற நியதியைப் பற்றி இவர்கள் ஒருபோதும் புரிந்துகொள்ளப் போவதில்லை. ஆகவே இதைப் பற்றிய விளக்கங்களும் வியாக்கியானங்களும் பலருக்கும் பல மாதிரியே இருக்கும். நிலைமையை உணர்ந்துகொள்ளும் கட்டம் ஒன்று வரும்போதே அதன் தாத்பரியங்கள் தெரியும்.

 

இதே வேளை நேர்காணல் ஒன்றில் நான் குறிப்பிட்டுள்ளதைப் போல, ஆரம்பத்தில் நாமெல்லாம் பெரும் நம்பிக்கையோடும் இலட்சியக் கனவோடுமே விடுதலைப் போராட்டத்தில் இணைந்தோம். ஒவ்வொரு அமைப்பிற்குள்ளும் உள்ள குறைபாடுகளைப் பற்றி. உள்ளே இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி உள்ளே நுழைந்த பின்னரே தெரிந்தது. எங்கள் நம்பிக்கைகளுக்கும் கனவுகளுக்கும் எதிரான நிலைகள் அமைப்பினுள்ளே தோற்றம்கொண்டிருந்ததும் தெரிந்தது. அந்த நேர்காணலில் கூறியுள்ளதைப் போல, 1980களின் நடுப்பகுதியில் ஈழப் போராட்டம் முற்றாகவே சிதையத் தொடங்கியது. 1987இல் ஈரோஸ் அமைப்பு யாழ்ப்பாணத்தில் மிருசுவில் என்ற இடத்தில் நடத்திய திட்டப் பிரகடன மாநாட்டுக்கே நான் செல்லவில்லை. இதை அனைத்து ஈரோஸ் உறுப்பினர்களும் அறிவர்.

 

ஆனால் அந்த அமைப்பின் உறுப்பினராக இருந்தவன் என்ற வகையில் அந்தக் கொலைகளையிட்டும் ஈரோஸின் அரசியல் பலவீனங்களையிட்டும் நான் வெட்கப்பட்டிருக்கிறேன். இது தொடர்பான விவாதங்கள் அப்போது ஈரோஸிற்குள் தீவிரமாக நடந்தன. குழப்பங்கள் நிகழ்ந்தன. ஆனாலும் அதன் சரி, பிழைகளுக்கு நானும் பங்காளியே. அதைப் பற்றி ஏற்கனவே பொது அரங்கில் நானே குறிப்பிட்டுள்ளேன். ‘தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் என்ற அமைப்பின் தலைவராக இருந்த திரு. கந்தசாமியின் கொலைவரையில் ஈரோஸ் இயக்கத்திலும் பழிகள் உண்டு’ எனச் சொல்லியுள்ளேன். இதைக் கூறுவதில் நான் வெட்கப் படவில்லை. பொய்யை வலிந்து பரப்புவதைவிடத் தவறுகள் குறித்த உண்மைளைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்வது மேலானது. அது சுயவிமர்சனத்தின் முதற்படி. இரவி போன்றவர்களைப் போல தூய்மைவாதம் பேசி மற்றவர்களையும் வரலாற்றையும் முட்டாள்களாக்குவது எவ்வளவு கேவலமானது?

 

தொடர்ந்து இரவி கூறும்போது, பின்னர் நான் புலிகள் அமைப்பில் இணைந்ததாகக் குறிப்பிடுகிறார். இதுவும் சுத்தப் பொய். ஒருபோதும் நான் புலிகளின் அமைப்பில் உறுப்பினராக இணைந்திருக்கவில்லை. அப்படியொரு எண்ணம் எனக்கு வந்ததும் இல்லை. மட்டுமல்ல பின்னர் பெற்ற அனுபவங்களின்படி யுத்தத்திற்குப் பின் நான் எந்தவொரு ஊடக அமைப்பில்கூட இணையவில்லை. இடையில் ஏற்பட்ட எண்ணமும் இன்று என்னைவிட்டு நீங்கிவிட்டது. தமிழ் ஊடக வெளியில் நிலவும் போக்கானது என் சுயாதீனத்தைக் கட்டுப்படுத்திவிடும் என்பதே இதற்குக் காரணம். இதேவேளை சனங்களுக்கு நன்மை கிடைக்கின்றது எனத் தெரிகின்ற, நான் நம்புகின்ற விசயங்களை நான் துணிந்து பகிரங்கமாகச் செய்கிறேன். அதற்காக எழுதுகிறேன். இதில் பல ஊடகங்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது. ஆனால் இடத்திற்குத் தக்கதாக இல்லாமல் ஒரே நிலைப்பாட்டின் வழி நின்றுதான் எழுதுகிறேன். இரவி புனைவதைப் போல பொய்யாக அல்ல. நான் ஒவ்வொரு இடத்திற்கும் தோதாக எழுதுவதாக இருந்தால் அதை இரவி நிரூபிக்க வேண்டும். தவிரக் காலச்சுவடில் ‘அநாமதேயன்’ என்ற பெயரில் நான் ஒருபோதுமே எழுதியதில்லை. நான் எழுதிய எழுத்துக்களுக்கு நான் பொறுப்பேற்றுள்ளேன். அதைக் காலச்சுவடின் ஆசிரியபீடமும் வாசகர்களும் அறிவர். அநாமதேயன் நான் அல்ல என்பதைக் காலச்சுவடு வெளிப்படுத்தும் எனவும் நம்புகிறேன்.*

 

அடுத்தது, புலிகளின் காலத்தில் நான் வசதியாக வாழ்ந்ததாகவும் அவர்களுடைய வளங்களை ஆண்டு அனுபவித்ததாகவும் இரவி சொல்கிறார். இப்படிப் பொய் கூற இரவியின் நாக்கு கூசாமல்போனதையிட்டு ஆச்சரியப்படுகிறேன். இதை எழுதும்போது இரவியின் ஆன்மா எப்படி இதற்கு இடமளித்தது?

 

புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்குமிடையிலான பேச்சுவார்த்தைக் காலத்தில் இரவி வன்னிக்கு வந்திருந்தார். வந்தவர் எங்கள் வீட்டிலேயே வாரக் கணக்காகத் தங்கியிருந்தார். அப்படித் தங்கியிருந்த இரவியை ஏற்றிக்கொண்டு நான் பயணித்தது சைக்கிளில். என்னைவிட மிகப் பருத்த தோற்றத்தையுடைய இரவியை ஏற்றிக்கொண்டு, குண்டும் குழியுமான தெருக்களில் வியர்வை வடிய வடிய நானே சைக்கிளை மிதித்தேன். அந்தச் சைக்கிளில்தான் இரவிக்காகச் சாராயக் கடைவரை சென்றிருக்கிறேன். இது ‘வெளிச்சத்’தில் நான் பணியாற்றிய காலம். இந்தக் காலத்தில் என்னுடன் பணியாற்றிய எஸ்போஸ் (சந்திரபோஸ் சுதாகர்) தொடக்கம் நா. யோகேந்திரநாதன், இத்தாவில் சிவராஜா, சத்துருக்கன், இயல்வாணன் என அனைவரும் சைக்கிள்தான் மிதித்தோம்.

 

பிறகு இரண்டாவது தடவை இரவி வன்னிக்கு வந்தபோது என்னிடம் இருந்தது ஒரு சிறிய ரக மோட்டார் சைக்கிள். அதைத்தான் புலிகள் பரிசளித்த வாகனம் என்று இரவி நீட்டி முழக்கிச் சொல்கிறார். அந்தச் சைக்கிளில் இரவியை ஏற்றினால் அதன் வேகம் பாதி குறைந்துவிடும். அந்த மோட்டார் சைக்கிளுக்கு நானும் இரவியும் சேர்ந்து பயணித்தபோது கடையில் பெற்றோல் நிரப்பியதைக்கூட நாசுக்காக மறைத்துத் இரவி தன்னுடைய பொய்யைப் பரப்புகிறார். எப்படிப்பட்ட புனைகதையாளன் எங்களுக்குக் கிடைத்திருக்கிறான்! எப்படியான மகாநடிகன் வந்து வாய்த்திருக்கிறான்! மண் சுமந்த மேனியர் நாடகத்தில் ஒரேயொரு நடிகன் மட்டுமே நடித்திருக்கிறார். அது வேறு யாருமல்ல. இரவி தான். இரவி சொல்வதுபோல என்னிடம் உரிய அதிகாரம் இருந்திருந்தால் இரவி, விந்தன், சிதம்பரநாதன், மிதிலா உட்பட மண் சுமந்த மேனியர் நாடகத்தில் பங்கேற்றிருந்த வர்களை வைத்து நான் தயாரித்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாமல் போனதேன்? சரிநிகர் சிவகுமாரை இரண்டு தடவைகள் அழைத்து ஒரு அரசியல் நிகழ்ச்சியைத் தயாரிக்க எடுத்த முயற்சி தோற்றதேன்? இதுபோலக் கிழக்கிலிருந்து ஊடகவியலாளர் சலீம், மலர்ச் செல்வன்போன்றவர்களை வைத்து உருவாக்கிய நிகழ்ச்சிகள் பெட்டிக்குள் முடங்கியது எதற்காக?

 

இதேவேளை எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தி ஊகத்தின் அடிப்படையில் பொது அரங்கிற் என்னைக் குற்றம்சாட்டுவதைப் போலவும் என்னிடம் கேள்வி எழுப்புவதைப் போலவும் நானும் இரவியிடம் பொத்தாம் பொதுவாக ஊகத்தின் அடிப்படையில் பல கேள்விகள் எழுப்பலாம்.

 

உதாரணமாக என். எல். எவ். ரி அமைப்பு யாழ்ப்பாணம் ஹற்றன் நாஷனல் வங்கிக் கொள்ளையை அடித்தபோது கைப்பற்றிய பணத்தை எல்லாம் அந்த அமைப்புடன் தொடர்பாக இருந்த இரவி எங்கே இன்னும் வைத்திருக்கிறார் என்றோ அந்தப் பணத்தில்தான் அவர் கொழும்பில் வீடு வாங்கினார், லண்டனுக்குப் போனார் எனவோ என். எல். எவ். ரீயின் தலைவர் விசுவானந்ததேவரின் படுகொலைக்கும் இரவிக்கும் சம்மந்தம் உண்டா என்றோ லண்டனுக்கு என்னை அழையுங்கள் உங்களுக்கு நான் ஊழியம் செய்வேன் என்று விடுதலைப்புலிகளின் லண்டன் தொடர்பாளர்களுக்குச் சொல்லிப் பணம் வாங்கினார் என்றோ நானும் எழுதலாம். இவற்றுக்கான கணக்குகள் என்ன என்ற கேள்வியைக்கூட நான் கேட்கலாம். ஆனால் இவை அர்த்தமற்றவை மட்டுமல்ல நம்மைத் தரமிறக்கும் விசயங்களும் கூட.

 

என் அனுபவங்களையும் எங்கள் காலத்தின் அனுபவங்களையும் பொது அரங்கில் படைப்பாளி என்னும் வகையிலும் ஊடகவியலாளன் என்ற வகையிலும் முன்வைக்கிறேன். இந்த முன்வைப்புகளின் அடிப்படையில் என் வாழ்க்கையும் பணிகளும் அமைகின்றன. என் வாழ்வும் பயணமும் சனங்களோடு ஒன்றித்திருப்பனவே - அவர்களின் கஷ்ட நட்டங்கள், மகிழ்ச்சி, முன்னேற்றங்களுடன். இதுவே என் அரசியலாகும்.

 

இறுதியாகக் காலச்சுவடு வன்னிக்கு வந்த கதையை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் ‘இந்த நிகழ்வுகள் நடந்த காலகட்டத்தில் புலிகள் கடுமையான கலாச்சாரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். தமிழ் சினிமாப் படங்கள் உட்பட இந்தியத் திரைப்படங் களுக்குத் தடை விதித்திருந்தனர். கோண்டாவிலிலுள்ள புலிகளது அரசியல் தலைமைக் காரியாலயத்துக்கு எம்மைப் போன்ற புத்தக நிலையங்கள் நடாத்துபவர்களை அழைத்த புலிகள் ஒரு நீண்ட பட்டியல் ஒன்றைத் தந்து அதிலுள்ள தமிழக சஞ்சிகைகள் எவற்றையும் விற்கக் கூடாது என உத்தரவிட்டி ருந்தனர். ஏற்கெனவே கொழும்புப் பத்திரிகைகளுக்கும் புலிகள் தடைவிதித்திருந்தனர்’ என்று மணியம் தேனியில் எழுதிவரும் தொடரை வாசிப்பவர்கள் அதை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

 

 

(கருணாகரன் கட்டுரை தொடர்பான எதிர்வினைகள் இந்த இதழோடு முற்றுப்பெறுகின்றன. - பொறுப்பாசிரியர்)

 

(அநாமதேயன் என்ற பெயரில் காலச்சுவடில் வெளிவந்த பதிவுகள் கருணாகரனால் எழுதப்பட்டவை அல்ல. -ஆசிரியர்)

 

http://www.kalachuvadu.com/issue-156/page68.asp

 

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
உதாரணமாக என். எல். எவ். ரி அமைப்பு யாழ்ப்பாணம் ஹற்றன் நாஷனல் வங்கிக் கொள்ளையை அடித்தபோது கைப்பற்றிய பணத்தை எல்லாம் அந்த அமைப்புடன் தொடர்பாக இருந்த இரவி எங்கே இன்னும் வைத்திருக்கிறார் என்றோ அந்தப் பணத்தில்தான் அவர் கொழும்பில் வீடு வாங்கினார், லண்டனுக்குப் போனார் எனவோ என். எல். எவ். ரீயின் தலைவர் விசுவானந்ததேவரின் படுகொலைக்கும் இரவிக்கும் சம்மந்தம் உண்டா என்றோ லண்டனுக்கு என்னை அழையுங்கள் உங்களுக்கு நான் ஊழியம் செய்வேன் என்று விடுதலைப்புலிகளின் லண்டன் தொடர்பாளர்களுக்குச் சொல்லிப் பணம் வாங்கினார் என்றோ நானும் எழுதலாம்.

 

 

இரவியருக்கும் அந்த வங்கி கொள்ளைக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது அடுத்த நாள் பத்திரிகையை பாத்துத் தான் அவருக்கே அது தெரியும்.ஆனால்  கொஞ்சம் தண்ணியடிச்சால் தானும் போனதாக சும்மா அள்ளி விடுவார் அவ்வளவுதான் ஆனால் றெம்ப நல்லவர்..அவ்.......

இது இவர்கள் இரண்டு பேருக்குமிடையிலான குடுமிச் சண்டை போல கிடக்கு, மெனக்கெட்டு இவ்வளவு எழுதியிருக்கிறார் :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இது இவர்கள் இரண்டு பேருக்குமிடையிலான குடுமிச் சண்டை போல கிடக்கு, மெனக்கெட்டு இவ்வளவு எழுதியிருக்கிறார் :rolleyes:

 

குடுமிபிடிச் சண்டைகள் வந்தால்தான் பல உண்மைகள் வெளிவரும். அதுவும் இலக்கிய/அரசியல் மேதைகள் என்றால் வாசிப்பவர்களுக்கு ருசிகரமாக இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
இதைப் பற்றி ‘ஒரு பேப்பர்’கூட எழுதவில்லை என்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!
எங்கன்ட சாத்திரியாரின்ட ஒரு பெப்பரைப்பற்றியோ சொல்லுகிறார்.....:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.