Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அடிமைச் சங்கிலியற்ற ஜாங்கோவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களும் அடிமைச் சங்கிலியற்ற ஜாங்கோவும்

 

Incidents in the Life of a Slave Girl - நாவல்

Django Unchained - திரைப்படம்

 

 

எனக்கு Quentin Tarantino இன் படங்களைப் பார்ப்பது மிகவும் அலாதியான விடயம். அவரது Pulp Fiction படத்தை தியேட்டரிலும், VHS tape இல், DVD இல், இறுதியாக BlueRay இல் கூட வாங்கி பதினைந்து தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன் என்றால் எனது பித்து எவ்வளவு என்பது உங்களுக்குப் புரியும்!

 

எனவே போன வருடம் Quentin Tarantino இன் Django Unchained படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் எப்படியும் அதனைப் பார்த்தேவிடுவது என்று தீர்மானித்துவிட்டிருந்தேன். படத்தின் கதை வேறு கறுப்பின அடிமையைக் கதாநாயகனாகக் காட்டும் வித்தியாசமான cowboys கள் வரும் வெஸ்டர்ன் படம் என்பதால் கூடுதல் ஆர்வம் தொற்றியிருந்தது.

 

அமெரிக்காவின் கறுப்பின அடிமைகளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமல் படத்தை இரசிக்க முடியாது என்று புரிந்ததால், கறுப்பின அடிமைகளைப் பற்றிய நாவல் ஒன்றைப் படிக்கலாம் என்று Kindle இல் தேடியபோது அடிமையாக இருந்த பெண்ணால் எழுதப்பட்ட "அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்கள்" (Incidents in the Life of a Slave Girl) எனும் நாவல் அதிகம் பிரபல்யமாக இருந்தது. எனவே படம் வருவதற்கு முன்னர் படித்திடவேண்டும் என்று நாவலை வாசிக்க ஆரம்பித்தேன்.

 

இற்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் தென்பகுதியில் அடிமையாக்கப்பட்டு இருந்த பெண் Linda Brent எனும் புனைபெயரில் அவரது வாழ்வில் நடந்த விடயங்களை வைத்து ஒரு சுயசரிதம் போன்று நாவலை உருவாக்கியிருந்தார். இது 1850-60 களில் பத்திரிகை ஒன்றில் தொடராக வந்து பின்னர் நாவலாக பதிப்பிக்கப்பட்டிருந்தது.

 

ஓரளவு வசதிபடைத்த அடிமையாக இருந்தவர்களின் குடும்பத்தில் பிறந்த லிண்டா ஆறு வயதில் தாயார் மரணிக்கும்வரை அடிமை என்ற துன்புறுத்தல்கள் எதுவுமின்றி சகோதரர்களுடன் சந்தோசமாகவே வாழ்ந்து வந்தார். ஒரு அடிமைப் பெண்ணின் பிள்ளைகள் அவ்வடிமையின் எஜமானியின் சொத்து எனும் சட்டத்திற்கு ஏற்ப, தாயாரின் மரணத்திற்குப் பின்னர் லிண்டா வெள்ளை எஜமானி வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அந்த வெள்ளை எஜமானி ஓரளவு நல்லவராக இருந்தபடியால் லிண்டாவிற்கு எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார். துரதிஸ்டவசமாக எஜமானி சிறிது காலத்தின் பின்னர் இறந்தபோது லிண்டாவை இன்னொரு உறவினருக்கு எழுதிக் கொடுத்திருந்தார். அதாவது அடிமைகளாக இருந்தவர்கள் மனிதர்களாக நடாத்தப்படாமல் வெறும் சொத்துக்களாகவே 150 வருடங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டிருதனர்.

 

புதிய எஜமானர்களான வைத்தியரும் அவரது மனைவியும் சிறுமியாக இருந்த லிண்டாவை மிகவும் மோசமாக துன்புறுத்தியதும், லிண்டா பருவம் எய்திய பின்னர், எஜமான வைத்தியர் அச்சிறுமியுடன் பாலியல் உறவுக்கு முயற்சிப்பதும், அதிலிருந்து தப்பிக்க லிண்டா போராடுவதும் கதையில் விலாவாரியாகச் சொல்லப்பட்டுள்ளது. எஜமானரின் பாலியல் வல்லுறவில் இருந்து தப்பிக்க லிண்டா இன்னுமொரு கல்யாணம் ஆகாத வெள்ளையின இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தி அவன் மூலமாக இரண்டு குழந்தைகளுக்கு தாயாகின்றாள். இதனால் கோபமுற்ற வைத்தியர் லிண்டாவை பருத்தித் தோட்டப் புறத்திற்கு அனுப்புகின்றார். தனது குழந்தைகள் நல்ல முறையில் நடாத்தப்படவில்லை என்பதனால், ஒருநாள் லிண்டா தலைமறைவாகின்றார். ஆயினும் அமெரிக்காவின் வடபகுதிக்கு தப்பிச் செல்லமுடியாமல் அவரது பேத்தியாரின் வீட்டின் ஒரு குழியில் 7 வருடங்கள் பிடிபடாமல் மறைந்து வாழ்கின்றார். அப்போது அவருக்கு ஏற்பட்ட துன்பங்களும், அவர் மறைந்ததால், குழந்தைகளை சிறையில் போட்டு வாட்டுவதும், பிற கறுப்பின அடிமைகள் மீது கசையடி, கொடூர நாய்களை ஏவிவிடுதல் போன்ற மோசமான நடவடிக்கைகளும் கதையில் சொல்லப்பட்டுள்ளன.

 

7 வருட தலைமறைவு வாழ்வு நிரந்தரமானால் குழந்தைகளும் அடிமையாகிவிடுவார்கள் என்பதால், free states என்று சொல்லப்பட்ட அமெரிக்காவின் வட பகுதிக்கு தப்பி வருகின்றார். எனினும் நியூ யோர்க் போன்ற சுதந்திர மாநிலங்களிலும் கறுப்பினத்தவர் மேல் பேதம் காட்டப்படுவதும், தப்பி ஓடிய அடிமைகளைத் திரும்ப பிடித்து ஒப்படைக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டதால் சுதந்திர மாநிலங்களிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டதும், ஒருவாறு குழந்தைகளை சுதந்திர மாநிலங்களுக்கு கொண்டு வந்து அவர்களுக்கு கல்வி வழங்கப் பட்ட கஷ்டங்களும், நல்லிதயம் படைத்த ஆங்கில சீமாட்டி ஒருவரின் உதவியோடு இறுதியில் அடிமைத் தளையில் இருந்து விடுபடுவதுமாகக் கதை முடிகின்றது. இறுதிவரை தனது சுதந்திரத்தைப் பணம் கொடுத்து வாங்க மறுத்த லிண்டா, தப்பியோடிய அடிமைகளைப் பிடித்து ஒப்படைக்கும் சட்டம் (the Fugitive Slave Act) காரணமாக வேறு வழியின்றி ஆங்கிலச் சீமாட்டியால் 300 டொலர்களுக்கு வாங்கப்பட்டு அவர் மூலம் தனதும் பிள்ளைகளினதும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்கின்றார்.

 

கறுப்பின அடிமை ஆண்கள் எதுவித கூலியுமின்றி பருத்தித் தோட்டங்களில் வேலை வாங்கப்படுவதும், மோசமாக தாக்கப்படுவதும், அடிமைப் பெண்கள் வெள்ளை எஜமானர்களின் பாலியல் இச்சைகளுக்கு தொடர்ந்து பலியாவதும், விருப்பமற்ற உடலுறவால் உருவாகும் குழந்தைகள் வெள்ளை நிறத் தோலோடு இருந்தாலும் நீக்ரோ என்று அடிமையாக விற்கப்படுவதும் அமெரிக்காவின் இருண்ட வரலாற்றுப் பக்கங்களைக் காட்டியது.

 

0000

 

Django-Unchained-010.jpg

 

இந்த நாவல் படித்து முடியும் தறுவாயில் Django Unchained திரைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. எனவே போன ஞாயிற்றுக்கிழமை அருகிலுள்ள சினிமாவில் படம் பார்க்கப் போயிருந்தேன். ஆச்சரியமற்ற வகையில் திரையரங்கு அதிகம் கறுப்பினத்தவர்களால் நிரம்பியிருந்தது. அடக்குமுறைக்கு உள்ளான இனத்தில் இருப்பதால் எப்போதும் கறுப்பினத்தவர்களோடு என்னை அடையாளம் காட்டுவதும் அவர்களுடன் நட்புப் பாராட்டுவதும் வழமை. அடிமை யுவதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வேறு படித்திருந்ததால் இன்னும் கூடுதல் நட்புப் பாராட்ட வேண்டி அருகில் இருந்த பெண்கள் மீது சிநேகிதமான புன்னகையை உதிர்த்தவாறே படத்தைப் பார்க்க உட்கார்ந்தேன்.

 

Quentin Tarantin இன் படங்கள் அதிகம் வன்முறை நிறைந்தது. எனினும் இரத்தம் பீய்ச்சி அடிப்பது யதார்த்தத்தை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்படுவதால் நகைச்சுவை போன்றும் தோற்றமளிக்கும். Django Unchained திரைப்படம் கறுப்பின அடிமைகள் மீதான மோசமான ஒடுக்குமுறைகளைக் காட்டினாலும், கதையில் யதார்த்தத்திற்குப் புறம்பாக ஒரு கறுப்பினத்தவர், அதிலும் தப்பியோடிய அடிமை, சன்மான வேட்டைக்காரனாக (bounty hunter) ஆக காட்டப்பட்டுள்ளார்.

 

Jamie Foxx அடிமை ஜாங்கோவாக நடித்திருக்கின்றார். அமெரிக்காவில் தென்பகுதியிலுள்ள Texas பகுதியினூடாக கடுங்குளிர் நேரத்தில் அவரும் வேறு சில அடிமைகளும் கால் விலங்குகள் இட்டு அழைத்துச் செல்லப்படுகையில் முன்னாள் பல்வைத்தியராக இருந்து ஜேர்மன் சன்மான வேட்டைக்காரர் ஒருவரால் சிலரை அடையாளம் காட்டும் தேவைக்காக சங்கிலிப் பிணைப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றார். இந்த விடுவிப்பும் மிக வன்முறையான கொலைகளால் நிரம்பிய காட்சிதான்.

 

மிகவும் துல்லியமாக ஆங்கிலத்தில் உரையாடும் ஜேர்மானிய சன்மான வேட்டைக்காரன் ஜாங்கோவை விடுதலை செய்யும்போது அவர் எங்கு செல்லப் போகின்றார் என்று கேட்க, ஜாங்கோ தனது மனைவியைத் தேடப் போவதாகச் சொல்லுகின்றார். ஜாங்கோவின் மனைவியின் பெயர் ஜேர்மானியப் பெயராக இருந்ததாலும், ஜாங்கோவின் துப்பாக்கி சுடும் திறமையாலும் ஈர்க்கப்பட்ட ஜேர்மானிய சன்மான வேட்டைக்காரர் ஜாங்கோவிற்கு அவரின் மனைவியைக் கண்டுபிடிக்க உதவ ஒரு ஒப்பந்தத்திற்கு வருகின்றார். அதன்படி இருவரும் குளிர்காலத்தில் தேடப்படும் குற்றவாளிகளை வேட்டையாடிப் பணம் சம்பாதிப்பதென்றும், குளிர் முடிந்து கோடை தொடங்கிய பின்னர் ஜாங்கோவின் மனைவையைத் தேடுவதென்றும் முடிவாகின்றது. உறைபனிகளினூடே குதிரைகளில் சவாரி செய்து பல தேடப்படும் குற்றவாளிகளைக் கொன்று நிறையப் பணம் சம்பாதிக்கின்றார்கள். குருதி கொப்பளிக்கும் கொலைகள் நகைச்சுவை இழையோடு படமாக்கப்பட்டிருப்பதால் இரசிக்கக் கூடியதாக இருந்தது.

 

ஜாங்கோவின் மனைவி அடிமைகள் நிறைந்த மிசிசிப்பிப் பகுதியில் உள்ள பண்ணையொன்றில் இருப்பதாகத் தெரியவர இருவரும் அப்பெரிய பண்ணை நோக்கிப் பயணிக்கின்றார்கள். அப்பண்ணையின் நிறவெறி பிடித்த முதலாளியாக Leonardo DiCaprio திறம்பட நடித்திருக்கின்றார். அவரது வீட்டு அலுவல்களை மேற்பார்வை செய்யும் கைத்தடியூன்றி நடக்கும் முதிர்ந்த கறுப்பினத்தவராக Samuel L Jackson வருகின்றார். ஜேர்மன் வேட்டைக்காரரும் ஜாங்கோவும் பண்ணை முதலாளியின் சிறந்த சண்டைவீரர்களை விலைகொடுத்து வாங்குவது போல நடித்து, ஜாங்கோவின் மனைவியை மீட்டுச் செல்லப் போட்ட திட்டம் கறுப்பின வீட்டு மேற்பார்வையாளரால் கண்டுபிடிக்கப்பட 12000 டொலர்கள் கொடுத்து ஜாங்கோவின் மனைவியை வாங்குகின்றனர். விடைபெறும் தறுவாயில் பண்ணை முதலாளியான Leonardo DiCaprio கைலாகு கொடுக்குமாறு கேட்க அதை மறுக்கும் ஜேர்மானிய வேட்டைக்காரர் அவரைச் சுட்டுக் கொன்று விடுகின்றார். உடனடியாக DiCaprio இன் உதவியாளர் ஜேர்மானியரைச் சுட்டுக்கொலை செய்கின்றார். இந்தக் களேபரத்தில் ஜாங்கோவும் துப்பாக்கையைப் பறித்து சுட ஆரம்பிக்க பல கொலைகள் விழுகின்றன.

 

ஜாங்கோவின் மனைவியை பண்ணைக்காரர்கள் பிடித்துக் கொண்டதால், ஜாங்கோ சரணடையவேண்டி வருகின்றது. சரணடைந்த ஜாங்கோவை Samuel L Jackson அடிமை வியாபாரிகளுக்கு விற்றுவிடுகின்றார். அடிமை வியாபாரிகளுக்கு தன்னை சன்மான வேட்டைக்காரன் என்று நம்ம வைத்து அவர்களிடன் இருந்து விடுதலை பெற்று, விடுதலை பெறும்போது அவர்களை எல்லாம் சுட்டுவிழுத்தி தனது மனைவியை மீட்க ஜாங்கோ மீண்டும் பண்ணைக்குப் போகின்றார். பண்ணை முதலாளி DiCaprio இன் மரணச்சடங்கில் கலந்துவிட்டு வீடு திரும்பும் வீட்டு மேற்பார்வையாளன் Samuel L Jackson, கறுப்பின பணிப்பெண்கள் இருவர் தவிர்ந்த அனைவரையும் ஜாங்கோ கொல்கின்றார். Samuel L Jackson தனது உயிருக்கு மன்றாடும்போது அவர் முழங்கால்களில் சுட்டு வீட்டை குண்டு வைத்துத் தகர்க்கும்போது ஜாங்கோவின் மனைவி கைதட்டி மகிழ்ச்சியைக் காட்டுகின்றார். அப்போது திரையரங்கிலும் சில கைதட்டல்கள் கேட்டன!

 

அடிமைத்தனம் நிறைந்த இருண்ட கால கட்டத்தின் அவலங்களைத் தொட்டுக் காட்டும் பல காட்சிகள் நிறைந்ததும், நிறவெறி கொண்ட வெள்ளையினத்தவரின் குரூரத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியதும் மெச்சத்தக்கதே. வழமைபோன்று Quentin Tarantino இன் உரையாடல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னணிப் பாடல்கள், காட்சியமைப்புக்கள் பிரமிக்கத்தக்கவாறே இந்தப்படத்திலும் வந்துள்ளன. கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவன் cowboy ஆவது நம்பமுடியாது என்றாலும் அதனை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப் பொழுதுபோக்குப் படம் மிகவும் பிடித்திருந்தது.

 

- கிருபன்

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
அடிமை வாழ்க்கையினை தெரிந்து கொள்வதற்காக கிருபன் புத்தகம் வாசித்து,படம் பார்த்து கஸ்டப்பட்டு இருக்க வேண்டியதல்ல...எங்கட மக்களட வாழ்க்கையே ஒரு அடிமை வாழ்க்கை தானே!
 
அந்த புத்தகத்தை வாசித்ததாலும்,அந்த சினிமா பார்த்ததாலும் உங்களுக்கு ஏற்பட்ட திருப்தியை எழுத்தில் வடித்திருக்கிறீர்கள் போல் உள்ளது...நன்றி...தொட‌ர்ந்து எழுதுங்கோ
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடிமை வாழ்க்கையினை தெரிந்து கொள்வதற்காக கிருபன் புத்தகம் வாசித்து,படம் பார்த்து கஸ்டப்பட்டு இருக்க வேண்டியதல்ல...எங்கட மக்களட வாழ்க்கையே ஒரு அடிமை வாழ்க்கை தானே!

 

எங்கள் மக்களின் அடிமை வாழ்வு நன்கு தெரியும்.

 

எனினும் தலைமுறை தலைமுறையாக கறுப்பினத்தவரை அடிமைகளாக நடாத்திய அமெரிக்கர்கள் எவ்வாறு மனித உரிமையை மற்றவர்களுக்குக் கற்றுத் தருகின்றார்கள் என்று அறிய அவர்கள் அடிமைகளை நடாத்திய விதத்தையும் அறியத்தானே வேண்டும்.

 

விஸ்வரூபம் படத்திற்குக் கொடுத்த காசிற்கு இன்னுமொருமுறை ஜாங்கோவின் படத்தைப் பார்த்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
தியேட்டருக்கு போய் இருக்கும் முன் அந்த கறுப்பின மக்களைப் பார்த்ததும் இவர்களும் எங்களைப் போல் அடிமைகள் என்பது மாதிரி பார்த்தீர்களா அல்லது எங்களை விட குறைவானவர்கள் என்பது மாதிரி பார்த்தீர்களா?...சுருக்கமாக சொல்லப் போனால் என்ன மனநிலை அந்த நேரம் அவர்களை பார்க்கும் போது உங்களுக்கு இருந்தது :)

நன்றி கிருபன் ,

இரத்த வாடை சற்று அதிகம் என்றாலும் tarantino படம் பார்பதில் இருக்கும் சந்தோசமே தனிதான் .நான் reservoir dogs இல் இருந்து அவரின் விசிறி .

படம் எடுத்த விதமும் பின்னணி இசையும் அனைவரின் நடிப்பும் அற்புதம் Leonardo DiCaprio  ,Christoph Waltz  நடிப்பு மிக பிரமாதம் அதுவும் அந்த சாப்பாட்டு மேசை சீன் சூப்பர் .

திரைக்கதையில் ஒரு குழப்பமும் இல்லாமல்  சீராக படம் என்ன அழகாக போகின்றது.எங்கள் இயக்குனர்கள் ஏன் தாங்களும் குழம்பி எங்களையும் குழப்புகின்றார்கள் என்று விளங்கவில்லை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியேட்டருக்கு போய் இருக்கும் முன் அந்த கறுப்பின மக்களைப் பார்த்ததும் இவர்களும் எங்களைப் போல் அடிமைகள் என்பது மாதிரி பார்த்தீர்களா அல்லது எங்களை விட குறைவானவர்கள் என்பது மாதிரி பார்த்தீர்களா?...சுருக்கமாக சொல்லப் போனால் என்ன மனநிலை அந்த நேரம் அவர்களை பார்க்கும் போது உங்களுக்கு இருந்தது :)

 

இந்தக் கேள்விகளுக்கு இலகுவாகப் பதில் அளிக்க விரும்பாததால் கறுப்பின மக்களுடனான எனது பரிச்சயத்தில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.

சிறு வயதில் குழப்படிகள் செய்யும்போது காப்பிலி, கடைப்பிலிகளிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன் என்று அம்மா வெருட்டியதுண்டு. அத்தோடு கறுப்பர்கள் என்றால் இருண்ட கண்டம் என்று அழைக்கப்படும் ஆபிரிக்காவில் உள்ள அதிகம் படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகள் என்ற பிம்பம் மனதில் பதிந்திருந்தது. பல வகையான புத்தகங்களையும் சிறுவயதில் படித்திருந்ததாலும், போராட்ட சூழலில் வாழ்ந்ததாலும்,  இயல்பாகவே நான் எப்போதும் அடக்குமுறைகளுக்கு உள்ளானவர்களுடன் பக்கமே சார்ந்திருப்பேன். ஆனாலும் கறுப்பினமக்களின் வரலாறுகளை கதைகளைப் படித்திருக்கவில்லை. ஆகவே உள்ளுணர்வில் நான் கறுப்பர்களை விட உயர்ந்தவன் என்ற நினைப்பு இருந்திருக்கும் என்பது உண்மைதான்.

 

இப்படியான உணர்வுகளுடன் வெளிநாடு புறப்பட்டபோது இடையில் மேற்கு ஆபிரிக்காவில் எனது பதின்ம வயதுகளில் மூன்று மாதங்கள் வரை இருந்தேன் (அதைப் பற்றி பெரிய கதையே எழுதலாம்). அங்கு போகும்போது  கறுப்பர்கள் முரட்டுத்தனமானவர்கள் என்று சிறிது பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் அங்கு அவர்களுடன் தினசரி சந்தைகளிலும் தெருக்களிலும் பழகியபோது எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்களை உணரவில்லை. அவர்களின் கள்ளமில்லாத சுபாவம் மிகவும் பிடித்திருந்தது என்று சொல்லலாம்.

 

பின்னர் பிரித்தானியா வந்து அடிப்படைச் சம்பளத்திற்கு வேலைகள் செய்தபோது ஆபிரிக்கர்கள், மேற்கிந்தியர்கள் குறிப்பாக ஜமைக்கர்களுடன் அதிக காலம் பழகியிருக்கின்றேன். ஆபிரிக்கக் கறுப்பர்கள் அதிகம் மத நம்பிக்கையுள்ளவர்கள் என்பதாலும், எனக்கு ஆபிரிக்க அனுபவம் இருந்ததாலும் அவர்களுடன் அந்நியோன்னியமாக பழகக் கூடியதாக இருந்தது. ஜமைக்கன் கறுப்பர்கள் முரட்டுத்தனமானவர்கள், தந்திரமாகக் காரியங்களைக் செய்பவர்கள், குற்றச் செயல்களில் தயங்காது ஈடுபடுபவர்கள் என்று ஒரு பொதுவான அபிப்பிராயம் நிலவுவதால் அவர்களும் அவற்றைச் சாதகமாக்கி எங்களை வெருட்டப் பார்த்தார்கள். எனினும் தாயகத்தில் புலிகளினால் வீரமான போரும், எமது கடுமையான உழைப்பும், எதற்கும் துணிந்த எமது செயற்பாடுகளும் அவர்களுக்கு எம்மீது நட்போடு பழகும் வாய்ப்பைக் கொடுத்தது. கடுமையான வேலை செய்ய அதிகாலையில் எழுந்து வருபவர்களை தப்பாகப் பார்க்கவேண்டியதில்லை என்ற உணர்வு படிப்படியாக வந்து சிநேகிதங்கள் தற்போதும் தொடர்கின்றன.

 

கறுப்பர்களைத் தமிழர்கள் பயமும் அருவருப்பும் கலந்த பார்வையுடன் பார்ப்பதும் அவர்களை எம்மை விடக் குறைவானவர்கள் எனும் ரீதியில் உரையாடுவதும் பல இடங்களில் இப்போதும் நடக்கின்றதுதான். முக்கியமாக மருத்துவ மனைகளில் தாதியர்களாக வேலை செய்பவர்களை எம்மவர் பெரிதாக விரும்புவதில்லை. அதை மறைமுகமாக, வெளிப்படையாகக் காட்டும்போது அவர்களும் எம்மை விரும்புவதில்லை. எனினும் மருத்துவ மனைகளுக்கு சென்றபோது (வருத்தம் வந்ததால் என்றில்லை), தாதிகளுடன் சினேகிதபூர்வமாக உரையாடி தேநீர் தயாரித்துத் தருமளவிற்கு அவர்களைக் கவர்ந்திருக்கின்றேன் :)

 

எனவே ஜாங்கோவின் படம் பார்க்கும்போது நானும் என்னை அடக்குமுறைக்கு உள்ளான ஒரு கறுப்பினத்தவனாகவே கருதிக்கொண்டேன். எனக்குப் பிடித்த கறுப்பழகியும் ஒரு காரணமாக இருக்கலாம். :wub:

 

Halle-Berry-Dresses-p-450x600.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் ஏன் உங்களுக்கு கருப்பு அழகிகளில் நாட்டம் என்று புரிகிறது கிருபன் :D

 
கிருபன் உங்கள் பதிவிற்கு நன்றி. நீண்ட காலத்திற்குப் பின்னர் எழுதியிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
 
ரொறன்ரீனோ படங்கள் சார்ந்து கிருபனதும் அர்யுனுடையதும் எண்ணங்களோடு பெரிதும் ஒத்ததே எனதும்.
 
கறுப்பினத்தவர்கள் தொடர்பில் எங்களவர் பார்வை சார்ந்து நீங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் உண்மையே. 

இந்தக் கேள்விகளுக்கு இலகுவாகப் பதில் அளிக்க விரும்பாததால் கறுப்பின மக்களுடனான எனது பரிச்சயத்தில் இருந்து ஆரம்பிக்கின்றேன்.

 

 

கறுப்பர்களைத் தமிழர்கள் பயமும் அருவருப்பும் கலந்த பார்வையுடன் பார்ப்பதும் அவர்களை எம்மை விடக் குறைவானவர்கள் எனும் ரீதியில் உரையாடுவதும் பல இடங்களில் இப்போதும் நடக்கின்றதுதான். முக்கியமாக மருத்துவ மனைகளில் தாதியர்களாக வேலை செய்பவர்களை எம்மவர் பெரிதாக விரும்புவதில்லை. அதை மறைமுகமாக, வெளிப்படையாகக் காட்டும்போது அவர்களும் எம்மை விரும்புவதில்லை. எனினும் மருத்துவ மனைகளுக்கு சென்றபோது (வருத்தம் வந்ததால் என்றில்லை), தாதிகளுடன் சினேகிதபூர்வமாக உரையாடி தேநீர் தயாரித்துத் தருமளவிற்கு அவர்களைக் கவர்ந்திருக்கின்றேன் :)

 

கிருபன் இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்திருந்தாலும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிடைக்கும் பொது பார்க்க வேண்டும். The help எனும் ஆபிரிக்க அடிமை பெண்களை பற்றிய படம் கொலைகள் , இரத்த சிந்தல் இல்லாத படம். எனக்கு பிடித்திருந்தது.

 

தமிழர்கள் கறுப்பின/ ஆபிரிக்க இன மக்களை மிக கீழ்தரமாக நினைப்பது காப்பிலிகள் என சொல்வதும் வழாக்கம். இங்கு யாழ் களத்திலும்  பலரும் அப்படி எழுதுவதை அவதானித்துள்ளேன்.  யாழில் இணைந்த ஆரம்பத்தில் இவ்வாறு காப்பிலி என ஆபிரிக்க / கறுப்பின மக்களை  அழைப்பதையும், வேறு இன மக்களையும் பல்வேறுபட்ட  தரக்குறைவான பெயர்களால் அழைப்பது பற்றியும் எனது ஆதங்கத்தை தெரிவித்து ஒரு பதிவு ஆரம்பித்ததாக நினைவு.

 

Edited by KULAKADDAN

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கிருபன் ,

இரத்த வாடை சற்று அதிகம் என்றாலும் tarantino படம் பார்பதில் இருக்கும் சந்தோசமே தனிதான் .நான் reservoir dogs இல் இருந்து அவரின் விசிறி .

படம் எடுத்த விதமும் பின்னணி இசையும் அனைவரின் நடிப்பும் அற்புதம் Leonardo DiCaprio  ,Christoph Waltz  நடிப்பு மிக பிரமாதம் அதுவும் அந்த சாப்பாட்டு மேசை சீன் சூப்பர் .

திரைக்கதையில் ஒரு குழப்பமும் இல்லாமல்  சீராக படம் என்ன அழகாக போகின்றது.எங்கள் இயக்குனர்கள் ஏன் தாங்களும் குழம்பி எங்களையும் குழப்புகின்றார்கள் என்று விளங்கவில்லை .

 

நானும் குயின்ரன் ரரன்ரீனோவின் படங்கள் எதனையும் தவறவிட்டது கிடையாது. திரைக்கதை அமைப்பு எப்போதும் நன்றாகவே இருக்கும்.

 

இப்பதான் ஏன் உங்களுக்கு கருப்பு அழகிகளில் நாட்டம் என்று புரிகிறது கிருபன் :D

 

கறுப்பழகிகளில் விருப்பம் இருப்பது உண்மைதான்.  தமிழ்ப் பெண்கள் கறுப்பாக இருப்பார்கள் ஆனால் அழகாக இருப்பார்கள் என்று சொல்லமுடியாது <_<

 

 
கிருபன் உங்கள் பதிவிற்கு நன்றி. நீண்ட காலத்திற்குப் பின்னர் எழுதியிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
 
ரொறன்ரீனோ படங்கள் சார்ந்து கிருபனதும் அர்யுனுடையதும் எண்ணங்களோடு பெரிதும் ஒத்ததே எனதும்.
 
கறுப்பினத்தவர்கள் தொடர்பில் எங்களவர் பார்வை சார்ந்து நீங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் உண்மையே. 

 

படம் பார்த்தபோது ஒரு குறிப்பு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். எழுதுவதற்கு என்று ஒரு பெரிய பட்டியல் இருக்கின்றது. ஆனால் எழுத நேரம் வாய்ப்பது குறைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்திருந்தாலும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிடைக்கும் பொது பார்க்க வேண்டும். The help எனும் ஆபிரிக்க அடிமை பெண்களை பற்றிய படம் கொலைகள் , இரத்த சிந்தல் இல்லாத படம். எனக்கு பிடித்திருந்தது.

 

தமிழர்கள் கறுப்பின/ ஆபிரிக்க இன மக்களை மிக கீழ்தரமாக நினைப்பது காப்பிலிகள் என சொல்வதும் வழாக்கம். இங்கு யாழ் களத்திலும்  பலரும் அப்படி எழுதுவதை அவதானித்துள்ளேன்.  யாழில் இணைந்த ஆரம்பத்தில் இவ்வாறு காப்பிலி என ஆபிரிக்க / கறுப்பின மக்களை  அழைப்பதையும், வேறு இன மக்களையும் பல்வேறுபட்ட  தரக்குறைவான பெயர்களால் அழைப்பது பற்றியும் எனது ஆதங்கத்தை தெரிவித்து ஒரு பதிவு ஆரம்பித்ததாக நினைவு.

 

 

The help படம் பார்கவில்லை. இணையத்தில் அகப்படுகின்றதா என்று தேடிப் பார்க்கின்றேன்.

 

Steven Spielberg in Amistad படம் வெளிவந்தபோது பார்த்திருந்தேன். மேற்கு ஆபிரிக்காவில் உள்ள சியாரா லியோனின் இருந்து கியூபாவின் தலைநகரம் ஹவானாவுக்கு அடமைகளை விலங்குகள் போன்று கொண்டு செல்லும் கப்பல் பயணத்தையும், அடிமைகள் கப்பலைக் கைப்பற்றுவதால் வரும் விளைவுகளையும் பற்றிய கதை.

 

கறுப்பின மக்களை இழிவான பதங்களைப் பாவித்துக் கதைப்பதும் எழுதுவதும் தவிர்க்கவேண்டிய ஒன்றே. எனினும் தமிழர்கள் சில சொற்களை தமது நாளாந்த பாவனையில் தொடர்ந்தும் பாவித்துக்கொண்டுதான் வருகின்றார்கள். நான் இயன்றவரை தவிர்த்தே வருகின்றேன்.

கிருபன் இந்த படத்தின் விளம்பரத்தை பார்த்திருந்தாலும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. கிடைக்கும் பொது பார்க்க வேண்டும். The help எனும் ஆபிரிக்க அடிமை பெண்களை பற்றிய படம் கொலைகள் , இரத்த சிந்தல் இல்லாத படம். எனக்கு பிடித்திருந்தது.

 

 

 

The help கதை நடப்பது 1960 களில் . அடிமை பெண்கள் என்பதை விட கறுப்பின பணிப்பெண்கள் எனும் பதம் தான் சரியாக இருக்கும். அப்பெண்கள் எசமனர்களுடைய மலசல கூடத்தை பாவிக்க முடியாது, அவர்களுக்கென விசேடமான கோப்பைகள் ........ இப்படி பல......

கிருபன், நீங்கள் ஓய்வுபெற இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கின்றன?  அதன்பின்னர்தான் உங்களிடமிருந்து படைப்புகள் வரும்.  அதுவரை பொறுமை காத்திருக்கிறோம். :)  :)  :)

தொலைக்காட்சியில் : Steven Spielberg இன் The Color Purple போய்க் கொண்ணிடிருக்கின்றது,இதில் ஒபரா வின்ப்ரி,வூப்பி கோட்ப்ர்க் கும் நடித்திருந்தார்கள் . இந்த படத்தை பற்றியும் எழுதவேண்டும் என்று இருந்தேன் .இன்று தொலைக்காட்சியில் போடுகின்றார்கள் .பெடிப்பிள்ளைகள் இருந்து பார்த்துக்கொண்டுஇருக்கின்றார்கள் .நான் முன்னரே பார்த்ததுதான் .

 

 

 

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நீங்கள் ஓய்வுபெற இன்னும் எத்தனை வருடங்கள் இருக்கின்றன?  அதன்பின்னர்தான் உங்களிடமிருந்து படைப்புகள் வரும்.  அதுவரை பொறுமை காத்திருக்கிறோம். :)  :)  :)

 

ஓய்வு பெற 30 வருடங்களுக்கு மேல் எடுக்கும். அந்த நேரத்தில் எழுதுவதற்கு எதுவும் நினைவில் இருக்குமா தெரியாது. இருந்தாலும் தமிழில் எழுதமுடியும் என்று சொல்லமுடியாது! :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.