Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்!

 

-மேகலா இராமமூர்த்தி


தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.


அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது.

 

அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் காமத்துப்பாலிலும் சொல்லப்பட்டுள்ளன. காமத்துப்பாலில்தான் வள்ளுவப் பேராசானின் கற்பனைத் திறனும், காட்சிகளை நாடகப் பாங்கில் நம் கண்முன் நிறுத்தும் ஆற்றலும், ஏன்….அவரின் மெல்லிய நகைச்சுவை உணர்வும் சிறப்பாக வெளிப்படுகின்றன எனலாம். அவரை ஓர் சிறந்த கவிஞராகவும் அடையாளம் காட்டுவது காமத்துப்பாலே எனலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த காமத்துப்பால் பாக்களில் சிலவற்றைக் குறித்துச் சிந்திப்பதும், காட்சிப்படுத்துவதுமே இக்கட்டுரையின் நோக்கம்.


இனிப் பாடல்களுக்குச் செல்வோம்…
 

தலைவன் ஒருவன் தலைவி ஒருத்தியைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளுக்கும் அவன்மீது அன்பு தோன்றுகின்றது. ஆயினும், பெண்மைக்கே உரிய நாணம் தடை போடுவதால் தலைவன் தன்னை நோக்கும் போது நிலத்தை நோக்குகின்றாள். அவன் தன்னைப் பார்க்காத தருணத்தில் அவனை நோக்கி மெல்லப் புன்னகைத்துக் கொள்கின்றாள். இதனையே
 

“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.” என்கின்றார் வள்ளுவப் பேராசான்.


இக்குறளைப் படித்தவுடனேயே நமக்கு ஓர் திரைப்படப் பாடல் நினைவுக்கு வருகின்றது. ஆம்…..”உன்னை நான் பார்க்கும்போது மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது என்னை நீ பார்க்கின்றாயே” என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் தானே அவை?


இதோ காதல் வயப்பட்ட தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் நோக்கிக் கொண்டிருக்கின்றனர். அங்கே வாய்ச்சொற்களுக்கு வேலையேயில்லாமல் போய்விடுகின்றது. (காதல் கடிதங்களும் தேவையற்றன ஆகிவிடுகின்றன). கண்கள் பேசாதவற்றையா வாயும், எழுத்துக்களும் பேசிவிடப் போகின்றன?


”கண்ணோடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.” என்கின்றது வள்ளுவரின் அமுதமொழி.


வெண்மதியையும், பெண்ணின் முகத்தையும் ஒப்புமைப்படுத்திப் பாடாத தமிழ்ப் புலவர்களோ, கவிஞர்களோ இல்லை என்றே கூறலாம். வள்ளுவரும் அதற்கு விதிவிலக்கல்ல.


இரவு நேரத்தில் தன் காதலியைச் சந்திக்க வருகின்ற ஓர் தலைவன் (இரவுக்குறி என்று இஃது அகத்திணையில் குறிக்கப்படும்) வானத்தை அண்ணாந்து பார்க்கின்றான். அங்கே அழகான முழுநிலாக் காட்சியளிக்கின்றது. அந்நிலவோடு தன் காதலியின் முகத்தை ஒப்பிட்டுப் பார்க்கின்றான். உடனேயே ஒரு முடிவுக்கு வந்தவனாக நிலவைப் பார்த்து ”உன்னோடு என் காதலியின் எழில் முகத்தை ஒப்பிடுவதே தவறு. நீயோ களங்கம் உடையாய்! அதுமட்டுமன்று, தேய்கின்றாய்…வளர்கின்றாய். ஆனால், என் காதலியின் முகமோ களங்கம் சிறிதுமற்றது” என்று தன் காதலிக்குப் புகழ்மாலை சூட்டுகின்றான். சுவையான அத்திருக்குறள் இதோ….
 

”அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.”
 

அத்தோடு விட்டானா? நிலவே…! நீ என் தலைவியின் முகத்தை ஒத்திருக்க விரும்பினாயானால் இப்படி நாணம் இல்லாமல் எல்லாரும் காணும்படி வானில் தோன்றாதே என்றுவேறு கூறுகின்றான்! புதுமையான வேண்டுகோள் இல்லையா?
 

”மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.” என்பது அக்குறட்பா.
 

இப்போதெல்லாம் கணவனும், மனைவியும் தாங்கள் நல்ல நண்பர்கள் போலப் பழகுவதாகக் கூறிக்கொள்கின்றார்கள் அல்லவா? இதற்கு முதன்முதலில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் நம் வான்புகழ் வள்ளுவரே.
 

தலைவன் ஒருவன், தனக்கும் தன் தலைவிக்குமுள்ள உறவைப் பற்றிக் “காதற் சிறப்புரைத்தல்” என்ற அதிகாரத்தில் பேசும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றான்….
 

”உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.”
 

மாந்தர்களே! இத்தலைவியொடு எனக்குள்ள நட்பு எப்படிப்பட்டது தெரியுமா? உடம்புக்கும், உயிருக்கும் உள்ள தொடர்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டது என்கின்றான். இங்கே உறவு என்ற சொல்லைப் பயன்படுத்தாமல் நட்பு என்ற சொல்லை அவன் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. காதலுக்கு இதைவிட அருமையான விளக்கம் எதனையும் கொடுத்துவிட முடியாதென்றே தோன்றுகின்றது.
 

அதே அதிகாரத்திலேயே தலைவனின் இருப்பிடத்தைப் பற்றித் தலைவி கூறும் மொழிகள் நமக்கு வியப்பை ஏற்படுத்துகின்றன. தலைவி சொல்கின்றாள்…..”என் காதலர் என் நெஞ்சத்திலேயே எப்போதும் குடியிருக்கின்றார். அதனால் நான் சூடான பொருள்களையே உண்பதில்லை. அவை அவரைச் சுட்டுவிடுமோ என அஞ்சுகின்றேன்” என்கின்றாள். கேட்பதற்குச் சற்று வேடிக்கையாகக்கூட இருக்கின்றது இல்லையா? இதோ அக்குறட்பா…
 

”நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.”
 

இதே குறட்பாவைப் படியெடுத்தது (photocopy) போலக் கவிஞர் வைரமுத்துவின் பாடல் ஒன்று சமீபத்திய திரைப்படம் ஒன்றில் வந்தது. அவ்வரிகள் இதோ..
 

“ஹாட்பாக்சில் (hotbox) வைத்த ஃபுட் (food) உண்பதில்லை இனி வாழ்வில் எந்த நாளும், என் உள்ளமெங்கும் நீ நின்றிருக்க உனை உஷ்ணம் தாக்கக் கூடும்….”.
 

தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களுக்கும், கவிஞர்களுக்கும் வள்ளுவர் பேராசானாக இருந்து காதல் பாடல்கள் பல எழுதத் துணைபுரிந்து வருகின்றார் என்பதனையே திரைப்பாடல்கள் (அன்றும், இன்றும்) மெய்ப்பிக்கின்றன.
 

அடுத்து, தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் ஊரிலுள்ளோர்க்குத் தெரிந்துவிடுகின்றது. அவர்கள் அலர் (காதலர்களைப் பொது இடத்தில் அவர்கள் காதுபடப் பழித்தல்) கூறத் தொடங்குகின்றனர். அதனைக் கண்ட தலைவி மிகவும் வேதனையுற்று “நான் என் காதலரைக் கண்டதென்னவோ ஒருநாள் தான், ஆனால் இந்த அலரோ திங்களைப் பாம்பு கொண்ட செய்தி (சந்திர கிரகணம்) போல் ஊரெங்கும் பரவிவிட்டதே” என வருந்துகின்றாள்.
 

”கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.”
 

மற்றொரு சமயம் தலைவன் பொருள்தேடும் பொருட்டுத் தலைவியைப் பிரிய நேரிடுகின்றது. அவன் பிரிவை ஆற்றமுடியாமல் தலைவி அவன் சென்ற வழியையே பார்த்துச் சோர்ந்து கிடக்கின்றாள். அப்போது அவள் வேதனையை அதிமாக்கும் மாலைப்பொழுது வந்தது. இம்மாலைப் பொழுது இவ்வளவு துன்பம் தருவது என்று நான் தலைவனோடு ஒன்றாகச் சேர்ந்திருந்த காலத்தில் அறியவில்லையே எனப் புலம்புகின்றாள்.
 

“மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.”
 

அம்மாலைப் பொழுதின் மயக்கத்திலே தலைவி ஓர் கனவு காண்கின்றாள். அக்கனவில் தன் தலைவனைக் கண்டு மகிழ்கின்றாள். கண்விழித்துப் பார்க்கின்றாள்; தான் தலைவனைக் கண்டது கனவில்தான் என்பதனை அறிந்து பெருத்த ஏமாற்றம் அடைகின்றாள். அடடா! நனவு என்ற ஒன்று மட்டும் இல்லாதிருப்பின் நான் கனவில் என் தலைவனைப் பிரியாமல் இருப்பேனே என்று எண்ணித் துயருறுகின்றாள்.
 

“நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்” என்கின்றது வள்ளுவம்.
 

தலைவனையே எதிர்பார்த்துக் காத்திருப்பதனால் தலைவியின் அழகமை தோள்கள் மெலிந்தன. உடலில் பசலை படர்ந்தது. (பசலை என்பது உடலில் ஏற்படும் ஓர் பசிய நிறமாற்றத்தைக் குறிப்பது, மற்றபடி பசலைக் கீரைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை). கை வளையல்கள் கழன்றன. அழுது அழுது கண்கள் ஒளியிழந்தன. தலைவன் சென்ற நாட்களைக் கோடிட்டுக் குறித்துக் கொண்டே வருவதனால் விரல்களும் தேய்ந்தன. இதனையே வள்ளுவப் பெருந்தகை,
 

”வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.” என்கின்றார்.
 

பிறகு அவள் தன்னைத்தானே தேற்றிக் கொள்கின்றாள், “என் இனிய நெஞ்சே, நீ தலைவனை உன்னிடத்தில்தானே வைத்திருக்கின்றாய், பின்பு ஏன் அவர் பிரிந்து சென்றுவிட்டார் என எண்ணி உடலை வருத்திக் கவின் இழந்து மெலிந்து வருகின்றாய்” என வினவிக்கொள்கின்றாள்.
 

”துன்னத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.”
 

சில காலத்திற்குப்பின், தலைவனும் தலைவியும் மறுபடியும் ஒன்றாய் இணைகின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாய்ப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் தலைவனுக்குத் தும்மல் வருகின்றது. அவன் தும்முவதைக் கண்ட தலைவி, வாழ்க! என வாழ்த்துகின்றாள். உடனேயே, யார் உம்மை நினைத்தார்கள், ஏன் உமக்குத் தும்மல் வந்தது எனத் தலைவனைப் பல கேள்விகள் கேட்டு, அழுது அவனோடு ஊடல் கொள்கின்றாள். இன்றும் நம் கிராமங்களில் யாருக்காவது தும்மல் வந்தாலோ அல்லது புரையேறினாலோ அவ்வாறு செய்பவர்களை யாரோ நினைக்கின்றார்கள் என்று எண்ணும் வழக்கம் உள்ளது தானே?
இவ்வழக்கம் வள்ளுவர் காலந்தொட்டு இருந்து வருகின்றது போலும்.
 

“வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.” என்கிறார் தெய்வப்புலவர்.
 

தலைவனுக்கு மீண்டும் தும்மல் வருகின்றது. (பாவம், சளித்தொல்லையால் அவதியுறுகின்றான் போலிருக்கின்றது.) தலைவி தன்னைச் சந்தேகிப்பாளே, கோபித்துக்கொள்வாளே என எண்ணித் தும்மலை அடக்க முற்படுகின்றான். அப்போதும் தலைவி அவனை விடவில்லை. உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைப்பதை என்னிடமிருந்து மறைக்க முயல்கின்றீரோ? எனக் கேட்டு அழுகின்றாள்.
 

”தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.”  என அவர்களிடையே அரங்கேறும் ஊடல் நாடகத்தை நகைச்சுவை ததும்பப் பாடல் வடிவில் நம் கண்முன் நிறுத்துகின்றார் வள்ளுவப் பெருந்தகை.
 

இவ்வாறு காமத்துப்பாலில் படித்து இன்புறத்தக்க பல குறட்பாக்கள் குவிந்து கிடக்கின்றன. சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களின் சுருங்கிய வடிவாகவே (abridged version) காட்சியளிக்கின்றன இக்குறட்பாக்கள் எனலாம். களவு என்று சொல்லப்படுகின்ற காதல் வாழ்வையும், கற்பு என்று அறியப்படுகின்ற இல்லற வாழ்வையும் இருபத்தைந்து (25) அதிகாரங்களில் திருவள்ளுவப் பெருந்தகை சுவைபட நகர்த்திச் செல்லும் பாங்கு படித்து இன்புறத்தக்கது. காமத்துப்பால், கற்புநெறி பிறழா நல்லதோர் இல்லறத்திற்கு வழிகாட்டியாய்த் திகழ்கின்றது எனலாம்.
 

 

http://puthu.thinnai.com/?p=18576

 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தது இது தான் கிருபன்!

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்

 

 

இதுகின்ர கருத்தை எழுதுங்கள் பார்ப்போம்! :o 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்குப் பிடித்தது இது தான் கிருபன்!

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்

 

 

இதுகின்ர கருத்தை எழுதுங்கள் பார்ப்போம்! :o 

 

எழுதினால் தூக்க மாட்டாங்கள் தானே??? :rolleyes:

எனக்குப் பிடித்தது இது தான் கிருபன்!

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்

 

 

இதுகின்ர கருத்தை எழுதுங்கள் பார்ப்போம்! :o 

 

சுருக்கம்:

 

இனிய மொழி பேசும் இவளது தூய வாயின் பற்களிற்கிடையே இருந்து ஊறுகின்ற நீரானது பாலுடன் தேனை கலந்தால் இனிப்பது போன்று சுவையானது,

 

விரிவு:

 

..அதாவது........

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன் காதல்-1

மெல்லிராப்போது வான மேக மண்டலத்தின் கண்ணே
வெண்ணிலா ஊரும் சற்றே விசும்பிடை மறையும்-மீண்டும்
எண்ணிலா ஜாலம் காட்டி இதழ்க் கடை முறுவல் கூட்டி
கண்ணினைச் சிமிட்டி நாணிக் களிப்புறு முகத்தைக் காட்டும்

அவ்விராவதனில் தன்றன் ஆருயிரனையள் தன்னைக்
கவ்விய இதழினூடு களிப்புறச் செய்தான் காளை.

நாணிய பெண்மை அங்கே நகைத்தது-இதழ்கள் தன்னைக்
கோணியே நெளித்து "உங்கள்குறும்பினைநிறுத்துங்(கோ)" - என்(று)
ஆணிடம் சிணுங்கக் காளை ஆயிரம் சரசம் செய்தான்.

பூமகள் நெற்றிதன்னில் பொலிந்த குங்குமத் தூள் - அன்னான்
மார்பினிற் புரள, கூந்தல் மலர் இதழ் கொட்ட - பெண்மை
சோர்வினிற் துவண்டு வாயின் சொல்லற, முனக - அங்கோர்
காவியம் பிறந்தது, அன்போ காமுறச் சிறந்தது.

இத்தனை நிகழ்வும் யன்னல் இடைவெளியூடே - அந்தப்
புத்தொளி நிலவின் பார்வைப் புலத்தினுள் நடந்தது.
பார்க்கவும் வெட்கிப் பாராதிருக்கவும் மனமிலாது,
வெண்ணிலா ஊரும் சற்றே விசும்பிடை மறையும் - மீண்டும்
எண்ணிலா ஜாலம் காட்டி இதழ்க் கடை முறுவல் கூட்டி
கண்ணினைச் சிமிட்டி நாணிக் களிப்புறு முகத்தைக் காட்டும்

கலவியிற் கலந்த காதல் காதலிற் கலந்த பாசம்
தலைவியைத் தடுத்திடாது தடுத்தது.

பொன்னொளிர் நிலவின் வீச்சுப் பொலிந்திட - "ஐயோ! அத்தான்!
என்ன (இது)? வெளிச்சம் எனக்கேலாது, உடனே அந்த
யன்னலைச் சாத்துங்கோ! " என்றாள்
மன்னவன் நிலவைப் பார்த்தான்.

இருளினிற் கலவி செய்து என்பயன்-மலர்க் கண்ணாளின்
அருளுறு முகத்தை அங்க அழகினை நிலவு காட்டும்.|
என்றவன் மனதிலெண்ணி  எறித்திடு மதியை நோக்கி,

"என்ன டீ! நிலவே! உன்பால் இங்கிதம் இலையோ! - நீ என்
கண்ணவள் முகத்தையொத்த களையினை உடையையாயின்
உன் முகம் பிறர்க்குக் காட்டா(து) ஒளிந்து கொள்"  - என்று மீண்டும
பொன் மகள் மேனிதன்னிற் புதைந்தனன் போகம் துய்க்க.

வள்ளுவன் சொன்ன வார்த்தை  வாசுகி கொடுத்த காதல்
தெள்ளிய தமிழில் இங்கே திகழ்ந்தது குறட்பாவாக

மலரன்ன கண்ணாள் முகமொத்தியாயின்
பலர் காணத் தோன்றல் மதி. (திருக்குறள்-காமத்துப் பால்)



வள்ளுவன் காதல்-2

காம்பரிந்த மலர் சொரிந்த மஞ்சம்-அங்கே
கட்டழகி வாசுகிக்கோ காதல் நெஞ்சம்.

தாம்பத்ய சுகம் தேடிச் செந் நாப்போதன்
தாவுகிறான் மருவுதற்கு அவள் மறுத்தாள்.

தேம்புகிறாள் ஷசீ! தூரப் போம்! என்கின்றாள்
திகைத்தவனோ "ஏனடி நீ பிணங்குகின்றாய்?
நான் புரிந்த கொடுமையென்ன? சொல்!" என்கின்றான்
நங்கையவள் "தும்மிய(து) ஏன்?" என்று கேட்டாள்.

தும்முதற்கும் விம்முதற்கும் தொடர்புண்டோடி?
துரோகமென்ன நான் புரிந்தேன்? என்றான் காளை

"உம் மனதில் என்னைவிட யாரோ உள்ளார்,
உதனாற்தான் அவள் நினைவாற் தும்மல்." என்றாள்.

வழுத்தினாள் தும்மினேனாக-அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீரென்று (திருக்குறள்-காமம்)


அடி போடி பைத்தியமே! எனக்கு உன்றன்
அழகைவிட வேற்றுறவா?  என்றான்-சும்மா
நடியாதீர்!  இப்போதும் தும்மலொன்றை
நான் பார்ப்பேன் என்றதனால் மறைத்தீர். என்றாள்

தும்மச் செறுப்ப அழுதாள் - நுமருள்ளில்
எம்மை மறைத்தீரோ வென்று (திருக்குறள்-காமம்)


கட்டழகியின் குழந்தைக் கருத்தைக் காளை
கண்டதுமே மெய் சிலிர்த்தான்-பாய்ந்து கட்டிப்
பொட்டழிய முத்தமிட்டான்-புனிதமேனி
புதைந்தவளை வன் முறையிற் போகம் செய்தான்.

சிட்டவளோ தடுக்க மனமின்றிச் சும்மா
சிணுங்கினாள் அவன் பிடியிற் சுகித்தாள்-அங்கோர்
சட்ட விரோதக் கலவி நிகழ நங்கை
தன் கணவன் தந்த சுகந் தனில் மகிழ்ந்தாள்.

ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் (திருக்குறள்-காமம்)



வள்ளுவன் காதல்-3

பஞ்சணையில் வள்ளுவனும் காத்திருந்தான்
பால் காய்ச்சி வாசுகியாள் தேன் கலந்தாள்.

அஞ்சி உடல் சிலிர்த்தாலும் அவன் பிடிக்குள்
அகப்படவும் உள் ஆசை, தவிப்பில் வந்தாள்.

கொஞ்சு மொழியாள் வரவிற் குறியாய் நின்று
கோதை வரப் பாய்ந்தவளை அணைத்தான்-வெட்கிக்
கெஞ்சியவள்  ஷசிந்துது பால் விடுங்கள்.| என்றும்
கேட்காது ஷஎதற்கடி பால் எனக்கு?| என்றான்.

"ஆசையதாய்க் காய்ச்சிய பால் உங்களுக்காய்,
அருந்துங்கள் எனை விடுங்கள், பெரிய மோசம்!
மீசை குத்து(து), ஐயோ! என் உதடு போச்சு,
மிச்சம் தான் உங்களுக்குக் குறும்பு." என்றாள்.

"வாச மலர்  முகத்தாளுன் வாயிலூறும்
வதைத் தேனை விடச் சுவைக்கும் சுவையுண்டோடீ?
பாச மனம் விடுமோடீ! பாலை வீசு
பஞ்சணைக்கு வா!"  என்றான்,
பாவை வீழ்ந்தாள்

பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழீ!  நின்
வாலெயிறூறிய நீர் (திருக்குறள்-காமம்)

 
வள்ளுவன் காதல்-4


தாவி வரும் தென்றலதன் வருடல்-வானிற்
தவழ்ந்து வரும் வெண் முகில்கள், நிலவின் வீச்சு.

ஆவிகலந்துடல் இணையும் இன்ப ஆசை,
அரவணைத்தான் அவள் சிணுங்கும்
அழகைப் பார்த்தான்.

"என்ன இது கடும் பார்வை?- என்னை நீங்கள்
எவளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்கள்?
அன்னவளைக் கூப்பிட்டு உங்கள் ஆசை
அத்தனையும் தணியுங்கள்- எனை விடுங்கள்,
பன்னிரண்டு மணியாச்சு நேரம் - நான்
படுக்கோணும், தள்ளுங்கள்
அப்போய்! சே! சே!
இன்னும் தான் இந்தாளுக் கென்மேல் ஆசை
எனக்கேலா(து) ஏய்! ஹும்! சீ! பெரிய மோசம்,
கன்னமெல்லாம் எச்சில், ஆய்! கடிக்காதீங்கோ!
கத்துவன் விடாட்டி." என்றாள் பின் கனிந்தாள்.

வள்ளுவனார் பள்ளியறை தன்னிலே தன்
வாசுகித் தேன் தனைச் சுவைக்கப் பட்ட துன்பம்
தெள்ளு தமிழ்க் குறட்பாவாய் இன்னும் நாவில்
திகட்டாது தித்திக்கும் சிறப்புக் காணீர்!

நினைத்திருந்து நோக்கினும் காயும்-அனைத்தும் நீர்
யாருள்ளி நோக்கினீரென்று (திருக்குறள்-காமம்)


வள்ளுவன் காதல் - 5


காலை மணி நான்கிருக்கும் அவன் பிடிக்குள்
கண்ணயர்ந்து கிடந்தவளோ விழித்தெழுந்தாள்
வேலை ஒரு தொகையிருக்கு விடுங்கள் என்று
மெதுவாக அடுக்களைக்கு எழுந்து சென்றாள்
பாலையெடுத் தடுப்பினிலே வைத்துத் தீயைப்
பற்றவைத்தாள் வள்ளுவனோ பின்னால்  வந்து
மூலை வரை இழுத்தெடுத்தான் இதழ் பதித்தான்
முத்தமழை பொழிந்தி;ட்டான் மூச்சிரைத்தாள்.

"ஐயையோ பால் பொங்குதங்கே என்ன
ஆவேசம் உங்களுக்கு? பொறுமையில்லை
மெய்யாக எனக்கேலா(து) நெருப்பு - கொஞ்சம்
விலத்துங்கோ சுட்டுவிடும் போங்கோ வாறன்
பொய்யில்லை கட்டாயம் வருவன் - இப்போ
போங்கோ நான் ஏமாற்றமாட்டன்" என்றாள்   
ஐயனவன் வள்ளுவனோ காமத் தீயில்
அவள் கெஞ்சல் கேட்காமல் காதல் செய்தான்

"தொட்டாற்தான் நெருப்பென்னைச் சுடும் டீ - ஆனால்
தோகையுனை என் கையிலிருந்து நானும்
விட்டாற்தான் காமத் தீ கருக்குமென்னை
விடமாட்டேன் தாங்காது உடன் வா என்றும்
எட்டாத கனியோ நீ எனக்கு? இல்லை
என் மனைவி ஆனாலும் இப்போ வேண்டும்
மிட்டாய் நீ"  என்றிட்டான் நெகிழ்ந்த நங்கை
வேறு வழியின்றி அவன் விருப்பைத் தீர்த்தாள்.

தருணியவள் வாசுகியைச் செந்நாப்போதன்
தழுவியதும் மருவியதும் அடுக்களைக்குள்
ஒரு பெரிய இலக்கியமாய் ஆனதங்கே
உண்மையிது அவன் குறளில் இதனைக்காண்பீர்.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ (திருக்குறள்-காமம்)


வள்ளுவன் காதல் - 6

நெஞ்சினிலே பெரு வாஞ்சை அவனில் ஆனால்
நிலவு முகம் மீதினிலோ போலிக் கோபம்
கொஞ்சமுமா சை யில்லா தவளைப்போலக்
கோதையவள் மௌனத்தாற் பிணங்குகின்றாள்

தஞ்மடி நீயெனக்கு தயவுசெய்தென்
தாகத்தைத் தீர்க்காயோ கண்ணே இந்தப்
பஞ்சணையில் ஆருயிரே அன்பே என்ன
பாபமடி நான் செய்தேன் உனக்கு என்றே
கெஞ்சுகிறான் வள்ளுவனும் செவிகொடுத்தும்
கேட்காமல் நடிக்கின்றாள் கோபங்காட்டி.
வஞ்சியவள் கோபத்தைத் தீர்;பதற்கு
வழியின்றி வள்ளுவனும் கலங்குகின்றான்

ஊடலது ஆயிரந்தான் காட்டினாலும்
ஒன்றெனக்கு என்றிட்டாற் துடித்துப்போவாள்
நாடலிலே பயனில்லை உறவுக்காக
நடிப்பது தான் வழியென்று உணர்ந்துவிட்டான்
பேடையவள் தோகைதனை முகர்ந்தான் - ஆங்கே
பெரியதொரு தும்மல்;வரத் தும்மிவிட்டான்
தேடியது கிடைத்த(து) உடன் திரும்பிப்பார்த்தாள்
தேனிதழ்கள் அசைந்தன நல்வாழ்த்துரைத்தாள்

நடந்ததிதைப், பின்னொருநாள் தன் தோழிக்கு
நாணத்தில் மகிழ்வோடு திக்கித்திக்கி
மடந்தையவள் வாசுகியாள் சொன்னாள் அந்த
வார்த்தைகளை வள்ளுவனும் கேட்டு நின்றான்

"என்னுயிரென் அருகிருந்து தும்மும்போது
எப்படி நான் வாழ்த்தாமல் இருப்பேன் தோழி
உன்னியது மனம் வாழ்க நூறாண்டென்றேன்
உடன் கட்டி யணைத்திட்டார் உயிர்கலந்தார்
தன்னையெனில் கலப்பதற்காய் அவர் செய்திட்ட
ஜாலமடி பொய்த்தும்மல் தோற்றுப்போனேன்
பின்னருணர்ந்தேன் எனக்கே வெற்றியென்று
பேசாமல் வசமானேன் அவருக்கன்று|

வாசுகியாள்; நடந்தவற்றைத் தன் தோழிக்கு
வரிவரியாய்; எடுத்துரைக்க அதனை நின்று
ஆசுகவி வள்ளுவனும் ஒற்றுக்கேட்டான்
அவன் குறளில் பதித்திட்டான் அழகாய் அன்று

ஊடியிருந்தேமாத் தும்மினார் யாந்தம்மை
நீடு வாழ்கென்பாக்கு அறிந்து (திருக்குறள் - காமம்)

 

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

கிருபனுக்கும் காதல் உணர்வு அதிகம் போலும் :lol:

வள்ளுவன் சொற்கேட்டால் உள்ளுக்க  போகவேண்டி வரும் போல கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன் சொற்கேட்டால் உள்ளுக்க  போகவேண்டி வரும் போல கிடக்கு .

 

இது உங்களுக்கு, அர்ஜுன்!

 

கற்க, கசடறக் கற்க, கற்றவை கற்றபின்,

நிற்க அதற்குத் தக . 

 

ஞாபகம் இருக்கா?

 

JaffnaHindu_Logo_Color.png

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்தது இது தான் கிருபன்!

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்

 

 

இதுகின்ர கருத்தை எழுதுங்கள் பார்ப்போம்! :o 

 

கலைஞர் கருணாநிதியின் குறளோவியத்தில் இருந்து..

 

அழகை அள்ளிப் பொழியும் இயற்கைக் காடு! அங்கே துள்ளித் திரியும் மான் கூட்டம்! தோகை விரித்து ஆடும் மயில்கள்! அதுகண்டு பொல்லாச் சிறை அவிழ்த்துக் குதித்திடும் வான்கோழிகள்! இலவம் பஞ்சின் உருண்டைகள் போல் முயல்கள் தரையில் பறந்திடும் காட்சி! கிளைவிட்டுக் கிளை தாவிப் பாய்ந்திடும் குரங்குகட்கும் அந்தக் காட்டில் தனியாட்சி! மலைமுகட்டின் முகில்கள் உருகி இயற்கையின் அற்புதத்தால் நெய்யருவிகள் பாறைகளில் பெருக்கெடுக்கும் எழிலே எழில்! அதனருகே அமர்ந்து பாடிடும் குயிலோ குயில்! அக்குரல் பயிலத் தவமிருக்கும் காகம்! அது இசைப்பதோ அபத்த ராகம்! அதை ரசிப்பதோ ஒரு வராகம்! இந்த வேடிக்கை பார்க்க அங்கு வாடிக்கையாக வட்டமிடும் பச்சைக் கிளி! நீலப் புறா!

 

அங்குள்ள பாறைகளில் ஒன்றுதான் பாவையை யாரும் பார்த்துவிடாமல் பாதுகாப்பு அளித்தது. ஆம்; பாவைதான் அவள் பெயர்! பாறை மறைவில் யாரைத் தேடி அவள் நிற்கின்றாள்; யாரைத்தான் தேடுவாள்?

 

இளங்கவிஞன் பூங்குன்றன் குறித்த நேரத்தில் வரவேண்டும் - வராத காரணத்தால் தவிக்கின்றாள். வழக்கமாகச் சந்திக்கும் காதற்களம்தான் அது!

 

அங்குள்ள மரம் செடி கொடிகள், மலைப்பாறைகள், அருவிப் பொழிவு, அணில், கிளி, புறா, குயில், மயில் அனைத்தும் எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்றால் கம்பனையும் இளங்கோவையும் மிஞ்சும் காதற் காவியங்களைப் படைத்திருக்கும். அத்துணை இன்பக் கேளிக்கைகளை அந்தப் பாறை மறைவில் - பாவையும் பூங்குன்றனும் நடத்தியிருக்கின்றனர்.

 

உதயணன் மடிமீது வீணை போல் அவள்!... அவன் மீட்டத் தொடங்கியதும் இருபாலார் நரம்புகளும் அதிர்ந்து எழுப்பும் காதல் நாதம்! இதுதானே அந்த வீணைக்கச்சேரியின் சிறப்பு!

 

நேரம் சிறிது கழிந்து போனாலும் நிகழ்ச்சிக்குத் தவறாமல் அதோ இசைவாணன் வந்துவிட்டான்! காத்திருந்த வீணை அவன் கையில் ஏறி மடியில் உட்கார்ந்துகொண்டது.

 

"பாவை! என்ன அப்படிப் பார்க்கிறாய்? காலம் சிறிது கடந்ததற்காகக் கடுங்கோபம் கொண்டாயோ என் கட்டாணிமுத்தே!"

 

"கொண்டது கோபம்தான் எனினும் உனைக் கண்டவுடன் என் தாபம் அதைத் துரத்திவிட்டது அத்தான்!"

 

"கொய்யாப்பழக் கன்னத்தில் குங்குமக் குழி படைத்தவளே! இதழ் இரண்டும் ஏனிப்படித் துடிக்கின்றன?"

 

"தெரியாததுபோல் கேட்கின்றாயே! எத்தனை நாள் பட்டினியென்று எண்ணிப் பார்க்க விரல்கள் இல்லையோ உன் கையில்?"

 

"விரல்கள்தான் இந்த வீணையை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே!"

 

"அதனால்தான் அதிர்கின்றன என் இதழ்கள்!"

 

அதற்குமேல் பேச்சில்லை! "இச்" ஒலி மட்டுந்தான் அந்த இயற்கைக் கட்டிலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது! ஓடிய மான்கள் நின்று பார்த்தன! பறந்த புள்ளினம் கிளைகளில் அமர்ந்து கவனித்தன! ஆடிய மயில் அசைவற்று நின்றது!

 

முத்தமழை பெய்துகொண்டிருந்தது! இனி இன்பவெள்ளப் பெருக்குத்தான்! "அத்தான்" என்றாள்! "உம்" என்றான். "நான்கிதழின் நற்கலவை எப்படி?" என்றாள்.

 

"இன்பமே" இனிய மென்மை மொழி பேசுகின்ற உன்னுடைய சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதுபோல், உன் பற்களிடையே ஊறுகின்ற நீர் தேனாக மாறி - நீ பேசும் மொழியுடன் தேனும் பாலும் கலந்ததுபோன்ற சுவையை எனக்குத் தருகிறது."

 

என்றான்! தழுவினாள்! தழுவினான்! தென்றலோ அவர்கள் இருவரையும் தழுவித் தன் வெறியைத் தீர்த்துக்கொண்டது.

 

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்

 

அதிகாரம் 113                   காதற் சிறப்புரைத்தல்                        பாடல் 1121

 

பணிமொழி = மென்மையான மொழி       வால் = வெள்ளிய          எயிறு = பல்

கிருபனுக்கும் காதல் உணர்வு அதிகம் போலும் :lol:

 

சேச்சே! ஞான் முற்றும் துறந்த முனிவன்! :icon_mrgreen:

Quote: "தென்றலோ அவர்கள் இருவரையும் தழுவித் தன் வெறியைத் தீர்த்துக்கொண்டது."

 

இதைதான் சொல்வதா கிடைத்த சந்தர்ப்பத்தில் ஆட்டை போடுவது என்று?

 

 காதல் உணர்ச்சி பொங்கி வழிகின்ற இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக்காலத்திலேயே பிரிச்சு மேஞ்சிருக்கிறாரு.ஆனால் இப்ப பேசாப்பொருள் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.