Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்கக் கழுகுகளும் ஈழத்துச் செண்பகங்களும்

Featured Replies

அமெரிக்கக் கழுகுகளும் ஈழத்துச் செண்பகங்களும்

 
 

coucal5-150x150.jpg

 

 

ம்பது வருடங்களுக்கு முன்னால், அமெரிக்காவின் அப்போதைய அதிபரான ஜோன். எவ். கென்னடி அமெரிக்கர்கள் அனைவருக்குமான ஓர் அவசர வேண்டுகோளை விடுத்திருந்தார். அது, அமெரிக்காவின் தேசியப் பறவையான மொட்டந்தலைக் கழுகு தொடர்பானது. ‘கொடூரமான அழகும் பெருமிதமான சுதந்திரமும் கொண்ட மொட்டந்தலைக் கழுகு அமெரிக்காவின் வலிமைக்கும் சுதந்திரத்துக்குமான மிகப் பொருத்தமான குறியீடு. இந்தப் பெரும் பறவையை அழிந்து போவதற்கு அனுமதித்தால் நாம் நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம்’ – என்று அறைகூவல் விடுத்திருந்தார். இது போன்றதொரு எச்சரிக்கையை, ஈழத்தில் நமது செண்பகப் பறவைகளுக்காகவும் விடுக்க வேண்டிய அவலம் இப்போது நேர்ந்திருக்கிறது.

***

லகில் இதுவரையில் 65 கழுகு இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் மொட்டந்தலைக் கழுகுகள் (Bald Eagles – Haliaeetus leucocephalus) வட அமெரிக்கக் கண்டத்துக்குச் சொந்தமானவை. அலாஸ்காவில் ஆரம்பித்துக் கனடா, அமெரிக்காவின் ஊடாக வடக்கு மெக்சிக்கோ வரையான வான்வெளியை இக்கழுகுகள் ஆட்சி செய்கின்றன. இவற்றுக்கு மிகவும் உவப்பான உணவு சமன் (Salmon) மீன்கள். பசுபிக் சமுத்திரத்தின் வட பரப்பும், அதனுடன் சங்கமிக்கும் ஏராளமான ஆறுகளும் சமன் மீன்களின் வயலாக இருப்பது, மொட்டந்தலைக் கழுகுகளுக்கு வட அமெரிக்கக் கண்டத்தைச் சிறந்த வாழ்புலமாக ஆக்கியுள்ளது.

 

மொட்டந்தலைக் கழுகுகள் கம்பீரமான உடல்வாகுடைய பெரிய பறவைகள். இறக்கைகள் இரண்டையும் விரித்தால் ஏழு அல்லது எட்டு அடி வரைக்கும்கூட நீளும். ஆண் கழுகுகளை விடப் பெண் கழுகுகள் சற்றுப் பெரியவை. மொட்டந்தலைக் கழுகுகள் என்று பெயர் சுட்டுவதைப் போன்று, இவை வழுக்கையாக இருப்பதில்லை. தலை நிறைய வெண்பனி நிறச் சிறகுகளை அடர்த்தியாகச் சூடியிருக்கின்றன. வாற்பகுதியும் வெண்ணிறச் சிறகுகளால் ஆனது. இதற்கு எதிரிடையான நிறப் பொருத்தமாக உடலும் இறக்கைகளும் கருமை கலந்த மண்ணிறச் சிறகுகளால் போர்த்தப்பட்டிருக்கும். இவை ஒரு தடவை சோடி சேர்ந்தால் அந்திம காலம் வரை இணை பிரியாமல் வாழும் இல்லறம் உடையவை, தமது கூடுகளையும் துறப்பதற்கு விரும்புவதில்லை. கூடுகள் பழுதடைய நேரும் போது செப்பனிட்டுச் செப்பனிட்டு, வாழ்நாள் பூராவும் அதே கூட்டிலேயே வாழ்கின்றன. இவற்றின் கூடுகளே உலகின் மிகப் பெரிய கூடுகள். சுமார் 10 அடி நீளமும் 20 அடி ஆழமும் 3000 கிலோ எடையும் கொண்டவை. மரக்கிளைகளினாலும் புற்களினாலும் ஆன இந்தப் பிரமாண்டமான கூடுகளை வட அமெரிக்கக் கண்டத்தின் கரையோரப் பகுதிகளிலும் ஆற்றங்கரைகளிலும் வளரும் உயரமான மரங்களிலும் மலை முகடுகளிலும் காணலாம்.

 

வேட்டையாடிகளான மொட்டந்தலைக் கழுகுகளின் பார்வைத் திறன் ஆச்சரியம் தரவல்லது. இவற்றால் மனிதர்களைவிட நான்கு மடங்கு துல்லியத்துடன் பார்க்க முடியும். மீனவர் ஒருவரால் கூட, நீருக்குள்ளே இருக்கும் மீன்களை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடித்து விடமுடியாது. நீர் மட்டத்துக்கு மேலிருந்து பார்த்தால் எளிதில் புலப்படாதவாறு, ஒரு தற்காப்பு உத்தியாக மீன்களின் முதுகுப்புறம் இருண்டதாக இருக்கும். அப்படி இருந்தும், பல நூறு அடிகள் உயரத்தில் இருந்தவாறே மொட்டந்தலைக் கழுகுகள் மீனைத் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்கின்றன. ஆயிரம் அடி உயரத்தில் வட்டமிடுகின்ற ஒரு கழுகின் பார்வையில் இருந்து, கீழே மூன்று சதுரமைல்கள் பரப்பளவுள்ள வெளியில் ஒரு முயல் எங்கு சென்றாலும் தப்பி விடமுடியாது. இதுதான் கழுகுப் பார்வை என்பது. கழுகுக் கண்களால், முன்னோக்கியும் பக்க வாட்டிலும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியதாக இருப்பதே இதற்கான காரணம் ஆகும்.

 

மொட்டந்தலைக் கழுகுகளின் பறப்பு ஆற்றலும் இன்னுமொரு ஆச்சரியம். பறக்கும்போது மணிக்கு 30 மைல் வேகம் வரை எட்டக் கூடிய இவை, இரையை இலக்கு வைத்ததும் விரைந்து ஆர்முடுகத் தொடங்கிவிடும். போர் விமானங்கள் சடுதியில் சாய்வாக வேகமெடுத்துக் குண்டுகளை வீசிவிட்டு நிமிர்வதைப் பார்த்திருப்போம். அந்த இயந்திரப் பறவைகளைப் போன்றே இவையும் மணிக்கு 100 மைல் வேகமெடுத்து இரையைக் கால்களால் கவர்ந்து செல்கின்றன. வேட்டை இரையாடலுக்கு ஏதுவான பெரிய மஞ்சள் நிறக் கண்களும், வளைந்த பலமான அலகுகளும், வலிய கால்களும் மிடுக்குச் சேர்க்க, மொட்டந்தலைக் கழுகுகள் வட அமெரிக்கக் கண்டத்தின் ராஜாளிகளாக வலம் வருகின்றன.

 

bald-eagle-flying-by-aesthetic-photos-_w

 

வடக்கு அமெரிக்கக் கண்டம் செவ்விந்தியப் பழங்குடிகளின் பூர்வீக நிலம். ஆனால், ஸ்பானியரான கிறிஸ்தோபர் கொலம்பஸ் 1493 ஆம் ஆண்டு இங்கு காலடி பதித்துத் தொடக்கி வைத்த குடியேற்றம் செவ்விந்தியர்களிடமிருந்து நிலத்தைப் பலவந்தமாகப் பிடுங்கியது. ஸ்பானிஷ;, டச்சு, பிரெஞ்ச், பிரித்தானியா என்று அடுத்தடுத்து நிகழ்ந்த ஆக்கிரமிப்புகளால் வடக்கு அமெரிக்கா ஐரோப்பியக் குடியேறிகளின் கண்டமாக நிலை பெற்றது. இதன், ஆங்கிலம் பேசிய பதின்மூன்று குடியேற்ற மாநிலங்கள் இணைந்து உருவானதுதான் ஐக்கிய அமெரிக்கா. பிரித்தானியக் குடியேற்றவாசிகளைக் கொண்ட இந்தப் பதின்மூன்று மாநிலங்களும் 1776 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் ஆதிபத்தியத்தை எதிர்த்துத் தம்மை ஐக்கிய அமெரிக்கா என்னும் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்தன. சுதந்திரப் போர் 1783 ஆம் ஆண்டு வரை நீடித்தது. இதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாக – 1782 இல் – ஐக்கிய அமெரிக்கா தனது தேசியச் சின்னமாக வட அமெரிக்கக் கண்டத்தின் தனித்துவமான மொட்டந்தலைக் கழுகைத் தேர்வு செய்து அறிவித்தது.

 

அமெரிக்காவின் தேசிய இலச்சினையில் இறக்கைகளை அகல விரித்து மார்பில் கவசம் தரித்த கழுகு, ஒரு காலில் ஒலிவ் கிளையையும் மறுகாலில் அம்புகளையும் பற்றியவாறு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. அமெரிக்காவைப் பிரதிபலிக்கக் கூடிய மிகப் பொருத்தமான பறவை இதைத்தவிர இன்னொன்று இருக்க முடியாது. அதிபர் ஜோன். எவ். கென்னடி குறிப்பிட்டதைப் போன்று அமெரிக்காவின் வலிமைக்கும் சுதந்திரத்துக்குமான குறியீடாக மட்டுமல்லாமல், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை அடையாளப்படுத்தும் விதமாகவும் உள்ளது. உணவுக் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து கோலோச்சும் மொட்டந்தலைக் கழுகுகள் தமது ஆதிக்கப் புலமாகப் பெரும் பரப்பை வேண்டி நிற்கின்றன. மீன் வேட்டையாடிகளான இவை திமிங்கிலங்கள், சீல்கள் மற்றும் மான்கள் போன்ற பெரிய விலங்குகளின் சடலங்;களை உண்ணும் பிணந்தின்னிகளும் ஆகும். தமது வேட்டைக்களமாக ஒவ்வொரு சோடிப் பறவையும் 25 சதுரமைல்கள் பரப்பளவுவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். எல்லைக்காவல் போகும்போது மற்றைய கழுகுகளின் வாழ்விடத்துள் அத்துமீறி நுழைவதற்கும் பின் நிற்பதில்லை. தேவைக்கு அதிகமாக இரைகள் இருந்தாலும் அத்தனையும் வேண்டும் என்பது போல, தம் இனத்துக்குள்ளேயே குருதி சொட்டச் சொட்டச் சொட்ட மோதிக் கொள்கின்றன.

 

மொட்டந்தலைக் கழுகுகள் வெட்கம் கெட்ட தனமாக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபடுவதும் சர்வ சாதாரணம். இவை, வலிமை குறைந்த கழுகுகள் அல்லது பிற இனத்துப் பறவைகள் இரைகளைப் பிடிக்கும்வரை காத்திருக்கும். அதன் பின்னர், அவற்றை அதட்டி மிரட்டிப் பயமுறுத்தி இரையைக் கீழே போடவைத்தோ அல்லது அவை குஞ்சுகளுக்கோ இணைக்கோ ஊட்டிவிடும் தருணம் பார்த்தோ பறித்துச் செல்கின்றன. வலிமை வாய்ந்த ஒரு பறவை வேட்டைக்குப் பறக்காமல் சோம்பேறியாக உட்கார்ந்து விட்டு, பிற பறவைகளின் உழைப்பைத் திருடுவதை வெட்கக் கேடானது என்பதில் தவறில்லையே. மொட்டந்தலைக் கழுகு தேசியச் சின்னமாகத் தேர்வானபோது அமெரிக்காவின் தேசபிதாக்களில் ஒருவரும், தலை சிறந்த இயற்பியல் விஞ்ஞானியுமான பெஞ்சமின் பிராங்க்ளின் அதைக் கடுமையாக எதிர்த்தார். மொட்டந்தலைக் கழுகுகள் நேர்மை இல்லாத துர்நடத்தையுள்ள பறவைகள் என்று விமர்சித்த பிராங்க்ளின், மாற்றாக வான்கோழியை முன் மொழிந்தார். ஆனால், அமெரிக்கப் பெரும்பான்மை மொட்டந்தலைக் கழுகை ராஜபீடத்தில் இருந்து அகற்றுவதற்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை.

 

மொட்டந்தலைக் கழுகுகள் என்னதாம் ராஜபறவைகளாகக் கோலோச்சிய போதும், எல்லா உயிரினங்களையும் போன்று மனித இனத்தின் அறிவுச் செருக்குக்கும் பேராசைக்கும் முன்னால் பலம் குன்றியவைதாம். ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவில் கால் பதித்தபோது கண்டம் முழுவதும் ராஜாளிகளின் ஆட்சியாகவே இருந்தது. அண்ணளவாக ஐந்து இலட்சம் கழுகுகள் இருந்ததாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த பூர்வகுடிகள் இவற்றுக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை. ஆற்று மீன்களைக் கழுகுகளோடு சேர்ந்து பகிர்ந்து கொண்டார்கள். பட்டிகளில் காணாமற் போகும் விலங்குகளைக் கழுகுகளின் பங்கு என்று ‘இயற்கையின் விதி’யாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், துப்பாக்கிகள் சகிதம் வந்திறங்கிய ஐரோப்பியர்கள் மீன்களையும் அவர்களது கால்நடைகளையும் திருடும் களவாணிகளாகக் கருதிக் கழுகுகளைச் சுட்டு வீழ்த்த ஆரம்பித்தார்கள். சிறகுகளுக்காகவும் பொழுது போக்குக்காகவும்கூட வேட்டையாடினார்கள். தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் மும்முரமாகத் தொடர்ந்த கழுகு வேட்டை, 1940 இல் அமெரிக்கா ‘கழுகுகளை எவ்விதத்திலேனும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம்’ என்று கடுமை காட்டிய போதுதான் கட்டுக்குள் வந்தது. ஆனால், விரைவிலேயே யாரும் எதிர்பார்க்காத திசையில் இருந்து புதியதொரு பேராபத்து கழுகுகளைச் சூழத் தொடங்கியது.

 

இரண்டாம் உலகயுத்தம் (1939-1945) முடிவுக்கு வந்ததும், கம்யூனிச சித்தாந்தம் உலக நாடுகளில் வேர் கொள்ளுவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆராயத் தொடங்கியது. இதில், உணவுப் பொருள்களையும் வேளாண் தொழில் நுட்பங்களையும் வறிய நாடுகளுக்கு வழங்குவதன் மூலம் அந்நாடுகளைத் தொடர்ச்சியாக அமெரிக்காவைச் சார்ந்திருக்கச் செய்ய முடியும் என்று முடிவானது. உலக நாடுகளின் குடுமியைக் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் அதேசமயம், இந்தத் திட்டம் அமெரிக்காவுக்கு ‘ஜீவகாருண்யன்’ என்ற முகத்தையும் பெற்றுத் தருமல்லவா? உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகக் கோதுமையில் புதிய புதிய ரகங்கள் கண்டறியப்பட்டன. விதம் விதமாகப் படையெடுத்த பூச்சிகளைக் கட்டுப்படுத்த, புதிய புதிய பூச்சி கொல்லி நஞ்சுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஏட்டிக்குப் போட்டியாக ஊடுருவிய களைகளைக் களையெடுக்க புதிய புதிய வேதிகள் உருவாக்கப்பட்டன. வயல்;கள் கொள்ளாத அளவுக்குக் கோதுமை முற்றிக் கதிர் சாய்ந்ததென்னவோ உண்மைதான்;. ஆனால், ‘கம்யூனிசப் புரட்சி’யை எதிர்கொள்ள அமெரிக்கா கையில் எடுத்த ‘பசுமைப் புரட்சி’ விரைவிலேயே அமெரிக்காவின் இயற்கைச் சூழலுக்கு எமனாக மாறியது.

 

பூச்சி கொல்லி நஞ்சுகளின் தலைமகன் டிடிரி (DDT – Dichloro Diphenyl Trichloro ethane) இரண்டாம் உலகயுத்த காலத்தில்தான் டிடிரியின் பூச்சி கொல்லும் இயல்பு கண்டறியப்பட்டது. முதற்பாவனையே யுத்த பிரதேசங்களில் தான். நிரம்பி வழிந்த முகாம்களிலும் சிறைகளிலும் தைபஸ் காய்ச்சல் (Typhus) வேகமாகப் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இது பேன்களினால் பரவும் ஒரு நோய். இதனால்; படை வீரர்கள், அகதிகள் மற்றும் கைதிகளில் பெருகிய பேன்களைக் கொல்லுவதற்கு அவர்களின் மேல் டிடிரி தூள் தூவப்பட்டது. சந்தேகமே வேண்டாம் டிடிரியே தான். டிடிரி தூள்களாக இருக்கும்போது தோலினூடக உறிஞ்சப்படாது என்பதால் உடனடி எதிர்விளைவுகள் எதுவும் அவதானிக்கப்படவில்லை. இச்சம்பவம் டிடிரி மனிதர்களுக்கு ஆபத்தில்லாததது என்ற தவறான கற்பிதத்தை உருவாக்க, டிடிரியின் பயன்பாடு விஸ்வரூபம் பெற்றது. ஒரு புறம் மலேரியா ஒழிப்பிலும் இன்னொரு புறம் பசுமைப்புரட்சியிலும் அளவு கணக்கின்றி டிடிரியைப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

 

கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு டிடிரி அரக்கத்தனமானது என்பது தாமதமாகத்தான் தெரியவந்தது. கண்டுபிடித்த விஞ்ஞானியிடம் ஆயுள் வரம் வாங்கியதோ என்னவோ, பயன்படுத்தப்பட்ட பின்பும் பிரிந்து சிதையாமல் சூழலில் நிலைத்துக் காணப்படுகிறது. இந்த நஞ்சை ஒருவர் நேரடியாக உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உணவுச் சங்கிலிகளின் மூலம் தானாகவே உடலினுள் நுழைந்து கொள்கிறது. அங்கிருந்து கழிவாக வெளியேறுவதில்லை. கொழுப்பில் கரையக்கூடியது என்பதால், கொழுப்பு அதிகமாக உள்ள ஈரல், சிறுநீரகம், தைரொயிட்டு சுரப்பி போன்ற உறுப்புகளில் நிரந்தரமாகவே தேங்கிவிடுகிறது. இதன் பூதாகாரம் என்னவெனில், உணவுச் சங்கிலியில் ஒவ்வொரு படியாக மேலே செல்லச் செல்ல, இதன் அளவு பல மடங்குகளாக அதிகரித்துச் செல்வதுதான். எடுத்துக்காட்டாக, பூச்சி புழுக்களில் சிறிதளவில் காணப்படும் டிடிரி, அடுத்தபடியில் உள்ள கோழிகளில் அதிகமாகக் காணப்படுகிறது. கோழி அதிக எண்ணிக்கையான பூச்சிகளை உண்ணும்போது, அத்தனை பூச்சிகளிலுமுள்ள டிடிரியும் கோழியில் ஒன்றாகத் திரளுவதே இதற்கான காரணம். இப்படி, உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் மனிதனில் அவனை அறியாமலேயே கோழிகளில் இருப்பதைவிடப் பன்மடங்கு அதிகமாகக் குடியேறிவிடுகிறது. பச்சிளம் பாலகர்கள் கூடத் தப்புவதற்கில்லை. தாயின் கருவறையில் தொப்புள்கொடி மூலமும், பிறந்தவுடன் தாய்ப்பால் மூலமும் டிடிரி தொற்றிக் கொள்கிறது.

 

நேரடியாக டிடிரியுடன் தொடர்பு இல்லாத மனிதர்களில் இரத்தத்தில் இலீற்றருக்கு 7 மில்லி கிராம்கள் அளவிலும். விவசாயிகளில் 17 மில்லி கிராம்கள் அளவிலும், பூச்சி மருந்துத் தயாரிப்புத் தொழிலாளிகளில் 648 மில்லி கிராம்கள் அளவிலும் டிடிரி கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த அளவுகளைக் குறைத்து மதிப்பிட்டு விடவேண்டாம். இவற்றை விடக் குறைந்த அளவே ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கப் போதுமானது. மனிதர்களில் டிடிரி நச்சுத் தன்மையில் நடுத்தரமானது என்றாலும், புற்றுநோயைத் தூண்டும் தகையது. ஈரலைச் சேதப்படுத்தக் கூடியது. நொதியங்களை வீரியம் இழக்க வைக்க வல்லது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஓமோன்களின் (Hormones)செயற்பாடுகளையும் தொந்தரவு செய்யக்கூடியது. ஆண்மைக்கு காரணமான அன்ட்ரோஜன்(Androgen) ஓமோன்களைச் செயல் இழக்கச் செய்வதோடு, பெண்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் (Estrogen) ஓமோன்களைப் போன்று பாசாங்கும் செய்து பாலியல்புகளில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. ஆண்களில் வரவர விந்துகளின் உற்பத்தி குறைந்து செல்வதற்கு டிடிரியும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வரம் கொடுத்த மனிதர்களுக்கே இதுதான் கதியெனில், மொட்டந்தலைக் கழுகுகள் எம்மாத்திரம்?

 

அமெரிக்க வேளாண் நிலங்களில் பொழியப்பட்ட டிடிரி நதிநீர் நிலைகளை அடைந்து, பின்னர் மீன்களில் குடியேறி, கடைசியில் உணவுச் சங்கிலியின் பெருக்கல் விதிக்கு ஏற்பக் கழுகுகளில் போய்ச் செறிந்தது. கழுகு வதைத் தடைச் சட்டம் இதற்கு என்ன தடை போட முடியும்? கழுகுகளின் உயிரை டிடிரி உடனடியாகப் பறிக்கவில்லையானாலும், அவற்றின் சந்ததிகளைப் பலி கேட்டது. முட்டை ஓடுகளை உருவாக்கும் நொதியச் செயல்களை டிடிரி நிரோதிக்க, கழுகுகள் மெல்லிய ஓடுகளைக் கொண்ட முட்டைகளாக இட ஆரம்பித்தன. கழுகுகள் வாஞ்சையோடு அடைகாக்க உட்கார்ந்ததும், எடை தாங்க முடியாமல் முட்டைகள் உடைந்தன. கண்ணுக்குத் தெரியாத காலனாக டிடிரி இனப் பெருக்கலைப் பாதித்ததில் மொட்டந்தலைக் கழுகளின் எண்ணிக்கை விரைந்து சரிந்தது. 1960களில் அமெரிக்காவின் 48 மாநிலங்களிலும் சேர்த்து 400 சோடிகள் வரையில் மாத்திரமே தப்பிப்பிழைத்திருந்தன. ஏறத்தாழ இதே போன்றதொரு அழிவுக்கு ஈழத்தில் செண்பகப் பறவைகளும் முகம் கொடுக்க ஆரம்பித்துள்ளன.

***

 

இலங்கைத் தீவுக்குப் பறவைகளைப் பார்த்துக் களிப்பதற்கென்றே சுற்றுலாப் பயணிகள் வருவது உண்டு. இந்தச் சின்னஞ்சிறிய தீவில் 433 பறவை இனங்களைக் காணமுடியும். இந்த எண்ணிக்கை, இந்திய உபகண்டத்தில் காணப்படும் பறவை இனங்களில் மூன்றிலொரு பங்கு ஆகும். இவற்றுள், 26 பறவை இனங்கள் இலங்கையில் மாத்திரமே வாழுகின்ற உள்நாட்டுக்குரிய இனங்கள் (Endemic species). 233 பறவை இனங்கள் இலங்கையை நிரந்தர வதிவிடமாகக் (Resident species) கொண்டவை. தீவை விட்டுப் புலம்பெயராத இந்தப் பறவை இனங்கள் வேறு நாடுகளிலும் வாழ்கின்றன. மீதிப் பறவை இனங்கள் பிற நாடுகளில் இருந்து காலத்துக்குக் காலம் வந்து திரும்பும் வலசை இனங்கள் (Migrant species).இலங்கை, மழைக்காடுகள் – உலர்காடுகள், மலைப் பிரதேசங்கள் – சமவெளிகள், நன்;னீர்த் தேக்கங்கள் – உவர் நீரேரிகள் என்று எதிரும் புதிருமான பல வகைச் சூழல்களினதும் அமைவிடமாக இருக்கிறது. இதுவே இலங்கையைப் பல்வகைப் பறவைகளினதும் சொர்க்கம் ஆக்கியுள்ளது. இந்தச் சொர்க்கத் தீவில்தான் செண்பகப் பறவைகள் நரகவேதனையை அனுபவித்து வருகின்றன.

 

செண்பகங்கள் (Coucal / crow pheasant – Centropus sinensis) இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற தெற்காசிய நாடுகளை வதிவிடமாகக் கொண்ட (Resident species) பறவைகள் ஆகும். இவை குயில்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. எனினும், குயில்களைப் போன்று காகங்களின் கூடுகளில் தந்திரமாக முட்டைகளை இட்டு விட்டுச் செல்லும் ஒட்டுண்ணிப் பறவைகள் அல்ல. சொந்தமாகக் கூடுகட்டி அடைகாக்கும் பக்குவம் கொண்டவை. செங்கட்டிச் சிவப்பு நிற இறக்கைகளையும் கறுப்பு நிற உடலையும் இரத்தச் சிவப்பேறிய குன்றிமணிக் கண்களையும் பொது இயல்புகளாகக் கொண்ட இவற்றில், வாழிடங்களுக்கேற்பச் சிற்சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த வித்தியாசங்களின் அடிப்படையில், உயிரியலாளர்கள் செண்பகங்களை உப இனங்களாகவும் வகுத்து வைத்துள்ளனர்.

 

இலங்கையில் செண்பகங்களில் மூன்று வகைகள் அறியப்பட்டுள்ளன. உருவத்தில் மற்றைய செண்பகங்களைவிடச் சிறிய உப இனம் (Lesser coucal)காடுகளை அண்டிய புல்வெளிகளில் சஞ்சரிக்கின்றது. இதன் வாற்சிறகுகளின் முனை வெள்ளைப் பூச்சுப் பூசியது போன்று இருக்கும். இதனைவிடச் சற்றுப் பெரிய செண்பக வகை, அப்பிள் பச்சை நிறச் சொண்டுகளைக் கொண்டுள்ளது. இந்தப், ‘பச்சைச் சொண்டுச் செண்பகம்’ (Green billed coucal) அடர்ந்த மழைக்காடுகளின் உள்ளே வாசம் செய்கிறது. நாணம் மிகுந்த இந்தப் பறவை காட்டைவிட்டு ஏகாததால் காண்பதற்கு அரிய புள்ளினம் ஆகும். இலங்கையின் உள்நாட்டுக்குரிய பறவை இனங்களில் ஒன்றான இதனை, உப இனமாக அன்றித் தனித்த இனமாகக் கருதுவதும் உண்டு. மூன்றாவது உபஇனம், ஏனைய இரண்டு செண்பகங்களை விடவும் உருவத்தில் பெரியது (Greater coucal) தலை முதல் வால் முனை வரை ஒன்றரை அடி நீளம் உடையது. நம்மோடு சேர்ந்து, நமது தோட்டங்களையும் தோப்புகளையும் பற்றைகளையும் பகிர்ந்து கொண்டிருக்கும் செண்பகங்கள் இந்த உபஇனத்தைச் சேர்ந்தவைதாம். காலை இளஞ்சூட்டில் இறக்கைகளை விரித்து ஒய்யாரமாக இவை வெய்யில் காய்வதைப் பலரும் பார்த்திருக்க முடியும். விடுதலைப் புலிகள் தமிழர்களுக்கான தேசியப் பறவையாக இந்தப் பெரும் செண்பகங்களையே அடையாளப்படுத்தியிருந்தார்கள். இவையே, இன்று நம்மை விட்டுத் தொலைந்து கொண்டிருக்கின்றன.

 

coucal21.jpg

 

மொட்டந்தலைக் கழுகுளைப் போன்றே செண்பகங்களும் உணவுச் சங்கிலியின் கடைசிப் படிகளில் இருக்கும் ஊனுண்ணிப் பறவைகள் ஆகும். பூச்சிகள், புழுக்கள், நத்தைகள், தவளைகள், ஓணான்கள், மற்றும் சுருட்டை விரியன் போன்ற சிறு பாம்புகளை இரையாக்கிக் கொள்கின்றன. பெரிய நாகபாம்பு ஒன்றைச் செண்பகம் ஒன்று ஆக்ரோஷத்தோடு சீண்டிக் கொண்டிருந்ததை நான் கண்ணுற்று வியப்படைந்துள்ளேன். உணவுச் சங்கிலியின் இறுதியில் இருப்பதால் இவற்றை இரையாக்கும் இயற்கை எதிரிகள் நமது சூழலில் இல்லை என்றே சொல்லலாம். எதிரிகள் மனிதர்கள் மாத்திரமேதாம். செண்பகங்கள் பறப்பதில் அதிகம் நாட்டம் இல்லாதவை. உயரம் குறைந்த மரங்களிலும் பற்றைகளிலுமே கூடுகட்டி வாழும் இவை தரையிலும், தரையை அண்டிய தாவர அடுக்குகளிலுமே பெரிதும் இரைதேடும் பழக்கம் உடையவை. வேலி மரங்களில் கூடுகட்டி அங்கேயே பூவரச மரங்களிலும் முருக்கு மரங்களிலும் மயிர்க் கொட்டிப் புழுக்களைத் தேடி உண்டு வந்த செண்பகங்கள், நாம் வேலிப் பண்பாட்டைக் கைவிட்டதும் நம்மை விட்டுக் காணாமற் போகத் தொடங்கின. பற்றை வெளிகளில் வீடுகள் வரிசையாக முளைக்க ஆரம்பித்ததும், அங்கிருந்தும் விரட்டப்பட்ட செண்பகங்கள் வேளாண் நிலங்களில் தஞ்சம் அடைந்தன. இயற்கைப் பீடைகொல்லிகளாகப் பூச்சி புழுக்களைக் கட்டுப்படுத்தி வந்த செண்பகங்களை இப்போது அங்கேயும் காண்பது அரிதாகி வருகிறது. யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டங்கள் அதிகமாகவுள்ள ஈவினைப் பகுதிக்குச் செண்பகங்களை அவதானிக்கும் பொருட்டுச் சமீபத்தில் சென்றிருந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. கூடொன்றில் அமர்ந்திருந்த ஒரேயொரு செண்பகத்தைத் தவிர அப்பகுதிகளில் வேறு செண்பகங்களைக் காணமுடியவில்லை. பல கூடுகளில் அணில்கள் குடியேறியிருந்தன. இயற்கை ஆர்வலர்கள் பலர் யாழ் குடாநாட்டில் செண்பகங்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்கியிருப்பதாக ஏற்கனவே பதிவு செய்திருக்கிறார்கள்.

 

coucal51.jpg

 

செண்பகங்களை இரசாயனப் பகுப்புக்கு உட்படுத்தாது உறுதியான முடிவுக்கு வர இயலாதபோதும், செண்பகங்களைப் பீடைகொல்லி நஞ்சுகள் கருவறுப்பதாகக் கருதுவதற்கு ஏதுவான காரணங்கள் வலுவாக உள்ளன. மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை மிக அதிக அளவில் வேளாண் இரசாயனங்களைப் பயன்படுத்தி வருகிறது. சர்வதேச நிலை காப்பு ஒன்றியத்தின் (IUCN) தரவுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் ஹெக்டயருக்கு 101.5 கிலோ கிராம் என்ற அளவில் இரசாயன உரங்கள் தூவப்படுகின்றன. ஆண்டுதோறும், நாடளாவ 1.5 மில்லியன் கிலோ கிராம் பூச்சிகொல்லிகளும், 2 மில்லியன் கிலோகிராம் களைகொல்லிகளும், 8 மில்லியன் கிலோ கிராம் பங்கஸ் கொல்லிகளும் விசிறப்படுகின்றன. இந்த அளவுகள் தேவையைவிடப் பன்மடங்குகள் அதிகம். எவ்விதத் தற்காப்புகளும் கட்டுப்பாடுகளும் இன்றி மிகையான பீடைகொல்லி நஞ்சுகளை விவசாயிகள் கையாண்டு கொண்டிருக்கிறார்கள். அத்தோடு, இவற்றில் சில அதிக நச்சுத் தன்மை காரணமாகப் பல நாடுகளில் தடை செய்யப்பட்டனவும் ஆகும். சமீபத்திய ஆய்வு ஒன்றில், இலங்கையில் பீடைகொல்லிகளினால் நஞ்சேறி ஆண்டுதோறும் 13,000 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படுவதும், 1000 பேர் வரையில் இறப்பதும் தெரியவந்துள்ளது.

 

இலங்கையில் இரசாயன உரங்களினதும் பீடைகொல்லிகளினதும் பாவனையில் யாழ்ப்;பாணக் குடா நாடு முன்னணி வகிக்கிறது. குடாநாட்டின் சனத்தொகை அடர்த்தி அதிகம். இதனால், விவசாயிகள் குறைந்த நிலப்பரப்பில், குறுகிய காலத்தில், அமோக விளைச்சலை எதிர்பார்த்துச் செறிவு வேளாண்மையில் (Intensive Agriculture) ஈடுபட்டு வருகிறார்கள். 1990களின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் வேளாண் இடுபொருட்களையும் உள்ளடக்கிய பொருளாதாரத் தடையை ஸ்ரீலங்கா அரசு அமுலுக்குக் கொண்டு வந்தது. அதுவரைக்கும், யாழ் குடாநாட்டில் ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இலீற்றர் திரவமாகவும் 3 இலட்சம் கிலோ கிராம் திடப்பொருளாகவும் பீடைகொல்லிகள் பயன்படுத்தப்பட்டதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த கையோடு, பீடைகொல்லிகளின் பாவனை மீண்டும் கண்மூடித்தனமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

 

யாழ் குடாநாட்டில் அதிக நச்சுத் தன்மை கொண்ட கார்போஃபியூறன்(Carbofuran) பூச்சி கொல்லியாக நீண்டகாலமாகப் பயன்படுத்தப்படுகிறது. கென்யாவில் கால்நடைகளைக் கவர வருகின்ற சிங்கங்களைக் ‘கார்போஃபீயூறன்’ நஞ்சுகளை வைத்தே சாகடிக்கிறார்கள் என்பதில் இருந்து இதன் கொல்திறனைப் புரிந்துகொள்ள முடியும். இதனைச் சிறுமணிகளாகத் திடப் பொருள் வடிவிலோ அல்லது திரவமாகவோ பயன்படுத்த முடியும். முதலில் பயிர்களின் வேர்களினால் அகத்துறிஞ்சப்பட்டு, பின்னர் பயிர் முழுவதும் வியாபித்து, பூச்சி புழுக்கள் கடிக்க ஆரம்பித்ததும் அவற்றைச் சென்றடைகிறது. இவற்றின் சிறுமணிகளைப் பறவைகள் தானியங்களாக நினைத்து உட்கொண்டு விடுகின்றன. ஒரு சிறுமணியே ஒரு பறவையின் உயிரைப் பறிக்கப் போதுமானது. அமெரிக்காவில் கார்போஃபியூறன் மணிகளினால் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பறவைகள் கொல்லப்பட்டு வந்தன, இதையடுத்து கார்போஃபியூறன் சிறுமணிகளைப் பயன்படுத்துவதற்கு அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு 1991ஆம் ஆண்டு முதல் தடை விதித்துள்ளது.

 

திரவ கார்போஃபியூறனும் ஆபத்தானதுதான். பயிர்களில் சென்று பதுங்கும் கார்போஃபியூறன் உணவுகளின் மூலம் மனிதர்களை அடைந்து நரம்புகளின் செயற்பாட்டைப் பாதிக்கிறது. இது தெரியவந்ததையடுத்து, அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டு முதல் உணவுப் பயிர்களுக்குக் கார்போஃபியூறனைத் திரவ வடிவில் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இதனை விலக்கி வைத்துள்ளது. எகிப்தில் அலெக்ஸாண்டரா பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் முயல்களில் விந்துகளின் உற்பத்தியை கார்போஃபியூறன் வெகுவாகப் பாதிப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. உலகளாவிய இந்த உதாரணங்கள் உள்ளூரில் நமது செண்பகங்களுக்கும் பொருந்தும். பூச்சி உண்ணிகளான செண்பகங்களில் பூச்சிகளின் மூலம் பீடைகொல்லி நஞ்சுகள் திரளுகின்றன என்பது திண்ணம். இந்நஞ்சுகள், செண்பகங்களின் இனவிருத்தியைப் பாதிப்பதன் மூலமோ அல்லது ஆயுளைப் பறிப்பதன் மூலமோ அவற்றை அழிவை நோக்கித் துரத்தி வருகின்றன. கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பார்கள். எனினும், அறிவியல் உலகம் ஊகங்களுக்கு இடம் தராது. ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்படும் முடிவுகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. யாழ் பல்கலைக்கழகம் செண்பகப் பறவைகளில் பீடை கொல்லிகளின் தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரவேண்டும்.

 

பூமித்தாயின் தவப்புதல்வனாக மனிதனை முன்னிலைப்படுத்தும் மனித மையவாதச் சிந்தனையில் ஒரு பறவையின் மரணம் பற்றிய உரையாடலுக்கான வெளி குறைவாகவே உள்ளது. அதுவும், ஈழத்தில் மனிதப் பேரழிவு ஒன்று இடம்பெற்று பிணவாடையும் இரத்த நெடியும் இன்னும் நாசிகளை விட்டு அகலாத நிலையில் இது அபத்தமாகவும் தோன்றலாம். ஆனால், செண்பகங்களின் அழிவு என்பது வெறுமனே அந்த ஒரு பறவை இனத்தின் மறைவு மாத்திரம் அல்ல. இயற்கை அன்னை உலகின் அத்தனை உயிரினங்களையும் உணவுச் சங்கிலிகள் மூலம் புவியளாவிய ஒரு வலையாகப் பின்னி வைத்திருக்கிறாள். இந்த உயிர் வலையில் ஒரு முடிச்சு அறுந்தாலுமே, அதன் அதிர்வு சங்கிலித் தொடராக எல்லா உயிரினங்களிலும் பற்றிக் கொள்ளும். உயிரினச் சமநிலையில் குழப்பங்களை ஏற்படுத்தும். இதற்கு, இந்தியாவின் பிணந்தின்னிக் கழுகுகள் ஒரு பிந்திய எடுத்துக்காட்டு.

 

இந்திய உபகண்டத்தில் பிணந்தின்னிக் கழுகுகளில் (Carrion eating vultures)ஒன்பது இனங்கள் காணப்படுகின்றன. உண்மையில், மொட்டந்தலைக் கழுகுகள் என்ற பெயருக்குப் பொருத்தமானவை இவைதாம். சடலங்களில் தலையை நுழைத்து ஊனைக் குடைவதற்கு வசதியாக, இயற்கை இவற்றுக்குக் கழுத்துவரை சவரம் செய்து கொடுத்திருக்கிறது. இலங்கைக்குச் சொந்தமில்லாத இவற்றை யாழ்ப்பாணத்தில் முதலும் கடைசியுமாக ஒரு தடவை பார்த்திருக்கிறேன். 1990 ஆம் ஆண்டு யாழ்ப்;பாணக் கோட்டையைக் கைவிட்டு ஸ்ரீலங்கா இராணுவம் இரவோடு இரவாகப் பின்வாங்கிச் சென்றது. அடுத்த இரண்டொரு தினங்களில் அப்பகுதிக்குப் பொதுமக்கள் சென்றுவர முடிந்தது. அப்போது, காகங்களை விடச் சற்றுப் பெரிய அளவில் பிணந்தின்னிக் கழுகுகளின் கூட்டமொன்றைக் கோட்டைச் சுற்றுவட்டாரத்தில் கண்டேன். போhக்;களத்தில் வீசிய பிணவாடை அவற்றை ஈர்த்திருக்க வேண்டும்.

 

இந்தியாவில் கால்நடை மருத்துவத்தில் ‘டைக்ளோஃபினாக்’ பிரசித்தி பெற்ற ஒரு வலிநிவார

ணி. ஆனால், மாடுகளில் மருந்தாகப் பயன்பட்ட ‘டைக்ளோஃபினாக்’ பிணந்தின்னிக் கழுகுகளில் எமனாகத் தொழிற்பட்டது. இறந்த மாடுகளை உண்பதன் மூலம் கழுகுகளைச் சென்றடைந்த இம்மருந்து, சிறுநீரங்களைப் பாதித்ததன் மூலம் அவற்றைக் கொன்றுபோட்டது. இதனால், இந்தியாவின் மூன்று பிணந்தின்னிக் கழுகு இனங்கள் (Gyps indicus, Gyps bengalensis, Gyps tenuirostris) பேரழிவைச் சந்தித்தன. 2005 ஆம் ஆண்டில் ஏறத்தாழ ஐந்து விழுக்காடு கழுகுகள் மட்டுமே தப்பிப் பிழைத்திருந்தன. பிணந்தின்னிக் கழுகுகள் இயற்கை அனுப்பி வைத்த தோட்டிகள். பெருத்த வயிறுதாரிகளான இவை, சடலங்களை உடனுக்குடன் தின்று தீர்ப்பதன் மூலம் சூழலைச் சுத்தம் செய்யும் மேலான பணியினைச் செய்து வருகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள் இல்லை என்றானதும் தெருநாய்களின் பாடுகொண்டாட்ட மாகிப்போனது. தேங்கிய சடலங்களைத் தின்று கொழுத்துப் பெருகின. இதன் எதிரொலியாக, வெறிநாய்க்கடி நோயால் (Rabies)இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இந்தியாவில் ஆண்டுதோறும் சராசரியாக 20,000 பேர் வரையில் வெறிநாய்க்கடி நோய்க்குப் பலியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இதனைப்போன்று செண்பகப்பறவைகளின் மறைவும் அவற்றின் மரணத்தையும் தாண்டி ஈழச் சூழலில் எதிரொலிக்கவே செய்யும்.

 

செண்பகங்கள் பூச்சி புழுக்கள் முதல் சிறுபாம்புகள் வரை உண்பதன் மூலம் இயற்கையான பீடைக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு வருகின்றன. பூனை இல்லாத வீட்டில் எலிகளுக்குக் கொண்டாட்டம் என்பார்கள். அதுபோன்றே செண்பகங்களின் வரத்துக் குறையக் குறைய நமது வீட்டுச் சுற்றாடலில் அந்துப் பூச்சிகளும், கம்பளிப் புழுக்களும், மட்டத் தேள்களும், சுருட்டை விரியன்களும் தடையின்றிப் பெருகத் தொடங்கும். இலங்கையில் சுருட்டைவிரியன்களால் (Raw Scaled Vipers) தீண்டப்படுவது மிக அரிதாகவே நிகழும். ஆனால், சமீபகாலமாக சுருட்டைப் பாம்புகள் தீண்டி யாழ் மற்றும் மன்னார் பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பது கருத்தில் கொள்ளத்தக்கது. விவசாய சூழற்தொகுதிகளிலும் பீடைகளுக்கு மகிழ்ச்சிப் பெருக்காகி விடும். ஏற்கனவே பீடைகளாக இருப்பவையோடு, வேறு பூச்சி புழுக்களும் சாரி சாரியாகப் படையெடுக்கத் தொடங்கிவிடும். அமெரிக்காவில் பருத்திச் செடிகளில் சேதத்தை விளைவித்த நீள்மூஞ்சி வண்டை (Boll Weevil) டிடிரி கொண்டு அழித்த போது, நெருப்பு எறும்புகளும் சேர்ந்து அழிந்தன. நெருப்பு எறும்புகள் பருத்திப் பூக்களில் முட்டைகளை இட்டுப் பெருகும் ஒரு வகை அந்துப் பூச்சியின் புழுக்களை (Pink boll worm) உண்பதன் மூலம் அவற்றைக் கட்டுக்குள் வைத்திருந்தன. ஆனால், எதிரிகளான எறும்புகள் இல்லாது போனதும் அந்துப் பூச்சியின் முட்டைப் புழுக்கள் எண்ணற்றுப் பெருகின. நீள்மூஞ்சி வண்டுகள் பருத்திச் செய்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளைவிட அந்துப் புழுக்கள் ஏற்படுத்திய சேதம் பன்மடங்குகள் அதிகம். இப்படி, செண்பகங்களுக்குக் கட்டுப்பட்டுப் பயிர்களுக்குத் தொல்லை தராதவாறு அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் பூச்சி புழுக்களும் செண்பகங்களின் மறைவையடுத்து விஸ்வரூபம் பெற்றுவிடும்.

 

பீடைகொல்லிகளின் வரலாற்றில் அவை எந்த ஒரு பீடையையும் முழுமையாகக் கட்டுப்படுத்தியதாகவும் இல்லை. நுளம்புகள், ஈக்கள், கரப்பான் பூச்சிகளுக்கு எதிராக உலகம் இதுவரையில் எத்தனை வகையான பூச்சிகொல்லி நஞ்சுகளை விசிறியிருக்கும்? இவற்றை ஒடுக்க முடிந்ததில்லையே! மாறாக, முற்றாக ஒழித்துவிட்டதாக நாம் மார்தட்டிய போதெல்லாம், இவை மீண்டும் பூதாகரமாகப் பெருகியே வந்துள்ளன. டிடிரியின் பராக்கிரமத்துக்கு உதாரணமாக, அது இலங்கையில் மலேரியாவை ஒழித்ததாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதில் உண்மை இல்லாமலும் இல்லை இலங்கை சுதந்திரம் பெற்ற போது – 1948 ஆம் ஆண்டு – ஏறத்தாழ 2.8 மில்லியன் மக்கட் தொகையினர் மலேரியாவால் பீடிக்கப்பட்டிருந்தனர். 7,300 பேர் மலேரியாவால் மாண்டனர். மலேரியாவுக்கான கிருமிகளைக் காவிச் செல்பவை அனோபிலிஸ் (Anopheles culicifacies) நுளம்புகள். இவற்றைத் தீர்த்துக் கட்டும் முகமாக, நாடெங்கிலும் டிடிரியைத் தெளிக்கும் பணி போர்க் கால வேகத்தில் முடுக்கி விடப்பட்டது. எவருமே நம்பமுடியாதவாறு, 1963ஆம் ஆண்டு 17 பேர் மட்டுமே மலேரியாவின் பிடிக்குள் இருந்தனர். எவருமே இறக்கவும் இல்லை. நுளம்புகளை வென்றுவிட்ட பெருமிதத்தோடு, 1964 ஆம் ஆண்டு முதல் டிடிரி இலங்கையில் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், நான்கே ஆண்டுகளில் மலேரியா மீண்டும் கொள்ளை நோயாக வெடித்தது. டிடிரியைப் பின்வாங்கியதால் வந்த வினை என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால், வலுவான காரணம் வேறு. நுளம்புகளுக்கு எதிரான போரில் டிடிரிக்கு எதிர்ப்புத்தன்மையைக் கொண்ட கொஞ்ச நுளம்புகள், டார்வினின் ‘தக்கன பிழைக்கும்’ விதிக்கு ஏற்பத் தப்பித்துக் கொண்டன. முரட்டுத்தனமான இந்நுளம்புகள் தங்களுக்கிடையே கலந்து பெருகியதாலேயே, மலேரியா மீண்டும் தலைதூக்கியது. நுளம்புகளுக்கெதிரான இரண்டாம் கட்டத் தாக்குதலில் மலத்தியோன் (Malathion) இறக்கி விடப்பட்டபோதும் இதுவே நிகழ்ந்தேறியது. மலத்தியோனுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட நுளம்புகள் தப்பிப் பிழைத்து இப்போதும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. அற்புதம் என்று நம்பப்படும் எல்லாப் பீடைகொல்லிகளினதும் கதை இதுதான். ஒவ்வொரு சுற்றிலும் எதிர்ப்புத்திறன்மிக்க பீடைகளைப் பெருகச் செய்வதால், மேலும் மேலும் நச்சுவேதிகளின் அளவையும் வகையையும் அதிகரிக்க வேண்டிய அவலத்துக்கு நாம் ஆளாகிறோம்.

 

 

வேளாண் இரசாயனங்களை மனம்போன போக்கில் விசிறியதன் விளைவுகளை யாழ் குடாநாட்டு மக்கள் ஏற்கனவே அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். செறிவு வேளாண்மை மேற்கொள்ளப்பட்டுவரும் பகுதிகளிலுள்ள பெரும்பாலான கிணறுகள் நஞ்சேறி குடிநீர்ப் பாவனைக்குத் தகுதியற்றனவாக மாறிவிட்டன. உலக சுகாதார நிறுவனம் குடிநீரில் நைத்திரேற்று (Nitrate) மாசின் அளவு இலீற்றருக்கு உச்சபட்சமாக 45 மில்லி கிராம் வரைக்குமே ஆபத்தில்லாதது என அறிவுறுத்தியுள்ளது. ஆனால், விவசாயப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீரில் நைத்திரேற்று அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாகவே காணப்படுகிறது. பயிர்களினால் உறிஞ்சப்படாத, மிகையான நைரசன் உரமே நைத்திரேற்றாக மாற்றமுற்று நிலத்தடி நீரைச் சென்றடைகிறது. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் தொண்டைப்புற்று நோயாளிகள் அதிகம். இதற்கு, இந்த நைத்திரேற்றும் ஒரு காரணம். உரங்களின் இன்னுமொரு பெறுதியான பொஸ்பேற்றும் (Phosphate) குடிநீரில் வரம்பை மீறிக் கலந்துள்ளது. இதன் விபரீதமாகவே யாழ்குடாவில் சிறுநீரகங்களில் கற்கள் படிந்து அவதிப்படுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

 

 

pesticides2.jpg

 

 

உலக சுகாதார நிறுவனம் குடிநீரில் பீடைகொல்லி நஞ்சுகளுக்கும் ஒரு அளவை நிர்ணயித்து வைத்திருக்கிறது. ஒரு பூச்சி கொல்லி நஞ்சு இலீற்றருக்கு 0.001 மில்லி கிராம் வரையில் இருக்கலாம். பல்வேறு வகைப் பீடைகொல்லிகளினதும் கூட்டு அளவு 0.005 மில்லி கிராமுக்கும் மேற்படலாகாது. அதாவது, ஐந்து மில்லிகிராம்களில் ஆயிரத்தில் ஒருபங்கைத் தாண்டினால் உடல் நலத்துக்குக் கேடாகும். யாழ்பாணத்துத் தண்ணீரில் பீடை கொல்லிகள் குறித்து இதுவரையில் விரிவான ஆய்வுகள் எதுவும் இடம்பெறாதபோதும், அவை அளவுக்கதிகமாகக் குடியேறியிருக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பீடை கொல்லி நஞ்சுகளை நாம் மருந்தாக இல்லாமல் மழையாக அல்லவா பொழிந்து வருகிறோம். நாம் அதிகம் பயன்படுத்தும் கார்போஃபியூறன் பூச்சிகொல்லி தரையினூடாகச் சுலபத்தில் வடிந்து செல்லக்கூடியது. யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போலவே, செறிவு வேளாண்மையில் ஈடுபட்டுவரும் கற்பிட்டிக்குடாவின் நீரில் கார்போஃபியூறன் கலந்திருப்பது ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. இரண்டு குடாக்களுமே ஒத்த மண் அமைப்பைக் கொண்டிருப்பதால், யாழ்குடா நாட்டிலும் தண்ணீரில் கார்போஃபியூறன் நஞ்சு ஊடுருவியிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆக, யாழ்ப்பாணத்துத் தண்ணீர்; அமிர்தம் என்று பெருமை பேசியவாறு தினமும் நஞ்சு கலந்த தண்ணீரைத்தான் நாம் அருந்திக் கொண்டிருக்கிறோம். பீடைகளின் இயற்கை எதிரியான செண்பகங்களைத் தொலைத்து விட்டுப் பீடைகொல்லி நஞ்சுகளிடம் முற்றாகத் தஞ்சம் அடைய நேர்ந்தால், நாம் நஞ்சுண்ட கண்டர்களாகவே ஆவோம்.

 

இரசாயன உரங்களும் பீடைகொல்லி நஞ்சுகளும் இல்லாமல் உணவு உற்பத்தி சாத்தியமில்லை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். இயற்கையோடு இயைந்த ஒரு பண்பாட்டுச் செயன்முறையாக (Agriculture) எம்மிடையே விளங்கி வந்த வேளாண்மையை, வேளாண் தொழிலாக (Agribusiness)வணிகமயப்படுத்திய பன்னாட்டு நிறுவனங்களே எம்மை இவ்வாறு நம்பவைத்துக் கொண்டிருக்கின்றன. இரசாயன உரத்தொழிலின் தந்தை என அழைக்கப்படுபவர் ஜஸ்ரஸ் வொன் லைபிக் (Justus von Liebig> 1803-1873)ஜேர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற இரசாயனவியல் அறிஞரான இவர்தான் செயற்கை நைதரசன் உரங்களை வேளாண்மையில் அறிமுகப்படுத்தியவர். ஆனால், இவரே இறக்கும் தறுவாயில், ‘இறைவனின் படைப்புகளுக்கு எதிராக இறைவனை எதிர்த்து மண்ணுயிர்களைக் கொன்று பாவியாக மாறியதால் எனக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. மண்ணில் நுண்ணுயிர்களைக் கொன்று, இரசாயனப் பசளைகளே நன்று என்று நான் நவின்றது பாவம். மண்ணுக்கு மண்புழுக்களையும் நுண்ணுயிரிகளையும் கொண்ட உக்கல்தான் இயல்பானது. மண்ணை நோயின்றிக் காப்பாற்றும்’ – என மரணவாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர் குறிப்பிடும் இறைவனைத் தான் என் போன்றவர்கள் இயற்கை என்கிறோம். இந்த மரண வாக்குமூலம் 1899 ஆம் ஆண்டில் பிரித்தானிய கலைக்களஞ்சியத்தில் (Encyclopaedia of Britannica) இடம் பெற்றிருக்கிறது. ஆனால், அதன் மறுபதிப்புகளில் இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள்.

 

 

இரசாயன வேளாண்மையால் ஏற்பட்டுவரும் மோசமான பாதிப்புகள் குறித்துச் செல்வந்த நாடுகள் எப்போதோ விழித்துக் கொண்டுவிட்டன. தமது நீர்-நில வளங்கள் அளவிலும் தரத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன. இதனால், வேறு நாடுகளில் நிலங்களை வாங்கியோ அல்லது நீண்டகாலக் குத்தகைக்கு எடுத்தோ அங்கு தங்களுக்கான உணவை உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளன. இருபத்தியோரம் நூற்றாண்டின் இந்தப் புதிய காலனித்துவத்துக்கு அதிகம் பலியாகி வருவது வறிய ஆபிரிக்க நாடுகள்தாம். எதியோப்பியாவில் 13 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுக்கு அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். ஆனால், எதியோப்பியாவின் மூன்று மில்லியன் ஹெக்டயர்கள் பரப்பளவுள்ள வளமான நிலங்களில் அரேபிய, ஐரோப்பிய, இந்திய நிறுவனங்கள் தமது நாடுகளுக்கான பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளன. உள்நாட்டுப் போரால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடு சூடான். இங்கு, தென்கொரியா தனக்குத் தேவையான கோதுமையை விளைவிப்பதற்கெனச் சமீபத்தில் 700,000 ஹெக்டயர்கள் நிலத்தை வாங்கிப்போட்டுள்ளது. நிலத்துக்குச் சொந்தக்காரர்களான சுதேசிய மக்களுடன் எவ்வித ஆலோசிப்புகளுமின்றித் திரைமறைவிலேயே இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின்றன. சீனாவுக்கு, அவர்கள் விரும்பி உண்ணும் ‘கொடுவா’ (Sea bass) மீன்களை விளைவிக்கவென் நந்திக் கடலை ஸ்ரீலங்கா அரசு தாரைவார்க்க முன்வந்திருப்பதும் இத்தகைய ஓர் உதாரணமே.

 

 

வளர்ந்த நாடுகள் தமது இயற்கைச் சூழல் குறித்து அக்கறையாக இருக்கும் அதேசமயம், தமது வேளாண் இரசாயனங்களின் ஏற்றுமதி படுத்துவிடக் கூடாது என்பதிலும் குறியாக இருக்கின்றன. வறிய நாடுகள் இறக்குமதி செய்து வரும் பீடைகொல்லி நஞ்சுகளில் பல அவை உற்பத்தி செய்யப்படும் நாடுகளில் தடை செய்யப்பட்டவைதாம். ஆனால் அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு அந்நாடுகளில் எந்தத் தடையும் இல்லை. ஐக்கிய அமெரிக்காவின் சுங்கத்துறையின் தரவுகளின்படி, 2001-2003 காலப்பகுதியில் அமெரிக்காவில் இருந்து 1.7 பில்லியன் இறாத்தல்கள் பீடை கொல்லிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 27 மில்லியன் இறாத்தல்கள் அமெரிக்க விவசாயிகள் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்ட பீடை கொல்லிகளின் வகைகளைச் சேர்ந்தவை. இவ்வாறு ஒரு புறம் தமது பீடைகொல்லி ஏற்றுமதி வர்த்தகத்தை மும்முரமாக நடாத்திக் கொண்டு, மறுபுறம் தமது மண்ணில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தும் வருகின்றன. இது, இயற்கை அன்னையின் ஒரு கண்ணில் வெண்ணெயையும் மறுகண்ணில் சுண்ணாம்பையும் தடவுவதற்கு ஒப்பான செயல் அன்றி வேறென்ன?

இயற்கை வேளாண்மை எனப்படுவது இரசாயன உரங்களும் இரசாயனப் பீடை கொல்லிகளும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் உணவு உற்பத்தி முறைமை ஆகும். இதுவே சேதன வேளாண்மை (organic farming) எனவும் அழைக்கப்படுகிறது. எல்லா நாடுகளும் தொன்றுதொட்டு, அதனதன் சீதோஷ;ண மற்றும் பண்பாட்டுச் சூழலுக்கு அமைவாக இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வந்துள்ளன. இதில் பண்ணைக் கழிவுகளும், பசுந்தாட் பசளைகளும், அவரை இனச் செடிகளும் பயிர்களுக்கு ஊட்டத்தை வழங்கின. அவரை இனத் தாவரங்களின் வேர் முடிச்சுகளில் வளிமண்டல நைதரசன் வாயுவை நைதரசன் பசளைகளாக மாற்றவல்ல பக்ரீறியங்களை இயற்கை குடியேற்றி வைத்திருக்கிறது. பொருத்தமான பயிரினத் தேர்வும், சுழற்சி முறைப்பயிர்களும், ஊடுபயிர்களும், பொறிப்பயிர்களும் பீடைகளை அடக்கி வைத்திருந்தன. பூச்சி புழுக்களைப் பயிர்களை அதிகம் அண்டவிடாது தம்மீது ஈர்த்து வைத்திருக்கும் செடிகளே பொறிப் பயிர்கள் (Trap crops) புகையிலை. பருத்தி வயல்களில் ஆமணக்கம் செடிகள் பொறிப் பயிர்களாகப் பீடைகளை ஒடுக்கின. நிபுணத்துவ உதவிகள் எதுவுமின்றி, இயற்கை பற்றிய பட்டறிவின் துணையோடு விவசாயிகள் வியத்தகு மகசூலை அறுவடை செய்தார்கள்;. ஆனால், இரண்டாம் உலகப்போரின் முடிவு இயற்கை வேளாண்மையின் மீதான போரின் தொடக்கமாக அமைந்தது. போரில் வெடிமருந்தாகப் பயன்படுத்தப்பட்ட அமோனியம் நைத்திரேற்றையும் பேன்கொல்லியாகப் பயன்படுத்தப்பட்ட டிடிரியையும் முறையே இரசாயன உரமாகவும் பீடைகொல்லியாகவும் வேளாண் நிலங்களுக்குத் திரும்பி விட்டதில், இயற்கை வேளாண்மை வழக்கொழிந்து போக ஆரம்பித்தது.

 

 

இயற்கை வேளாண்மையால் இப்போதும் அதிக மகசூலை எட்ட முடியும். இதற்கு, இன்றைய கியூபா ஓர் எடுத்துக்காட்டு. கியூபா சுதந்திரம் பெற்றது முதல் சோவியத் ஒன்றியத்தின் உடைவு வரை சோவியத்தின் தத்துப் பிள்ளையாகவே இருந்து வந்தது. கியூபாவிடம் இருந்து கரும்பு வெல்லத்தைச் சந்தை மதிப்பை விடப் பன்மடங்;கு விலை கொடுத்து வாங்கிய சோவியத், உணவாகவும் எரிபொருளாகவும் கியூபாவுக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. 1989 இல், சோவியத்தின் உடைவுடன் இந்த உதவிகள் நின்று போயின. செறிவு வேளாண்மையால் மூப்படைந்து உவரேறியிருந்த பண்ணை நிலங்களில் அறுவடையும் பொய்த்தது. இவற்றோடு அமெரிக்காவினதும் அதனது நட்பு நாடுகளினதும் பொருளாதாரத் தடையும் சேர்ந்து கழுத்தை இறுக்கியதில் கியூபா கடுமையான உணவு நெருக்கடியால் தத்தளித்தது. இந்தக் கையறு நிலையில் கை கொடுத்தது இயற்கை வேளாண்மைதான். கியூபா, தேசிய உணவுக் கொள்கையாக இயற்கை வேளாண்மையை கிராமங்களில் இருந்து நகரங்கள் வரை விரிவுபடுத்தியது. பெரும் பண்ணை முறையைக் கைவிட்டு நாடெங்கும் சிறிய சிறிய சேதனத் தோட்டங்களை (organoponics) உருவாக்கியது. ஒருங்கிணைந்த பீடைக் கட்டுப்பாடு (Integrated Pest Management) சொட்டு நீர்ப்பாசனம் (Drip irrigation) மண்புழு உரம் (Vermi Compost) என்று புதிய உத்திகளையும் புகுத்தி இயற்கை வேளாண்மையை மேலும் செழுமைப்படுத்தியது. பட்டி தொட்டியெல்லாம் உணவு விளைந்ததில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பையும் மீறி பெரும் பட்டினிச் சாவில் இருந்து கியூபாவால் தப்பிக்க முடிந்தது. கியூபாவின் மாநிலங்களில் ஒன்றான ஹவானாவில் அம்மாநில மக்களின் தேவைக்கும் மேலதிகமாக உணவு விளைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான பெருமை, கியூபாவின் அர்;ப்பணிப்புமிக்க இயற்கை விஞ்ஞானிகளையே சாரும். கியூபாவின் விடுதலைப் போராட்டத்தை முதலாவது புரட்சி என்றால், அது இயற்கை வேளாண்மையால் பட்டினியில் இருந்து விடுதலை பெற்றதை இரண்டாவது புரட்சி எனலாம்.

 

 

ஈழத்திலும் போர்க்காலப் பொருளாதாரத் தடை இயற்கை வேளாண்மையின் பக்கம் திரும்ப வைத்தது. விவசாய உள்ளீடுகளின் தடையோடு உயர்பாதுகாப்பு வலயம் பெருமளவு விவசாய நிலங்களை விழுங்கிய பின்பும் ஈழத்தவர்களால் உயிர்பிழைக்க முடிந்ததெனில், அதற்குச் சிறிய அளவிலேனும் மேற்கொள்ளப்பட்ட இயற்கை வேளாண்மையும் ஒரு காரணம் ஆகும். இயற்கை வேளாண்மையின் நவீன அணுகுமுறைகள் இன்னமும் ஈழத்தைச் சென்றடையவில்லையானாலும், விவசாயிகள் பண்டைய வேளாண் அறிவில் தேர்ந்தவர்களாகவே உள்ளனர். 2004 ஆம் ஆண்டு இறுதியில் ஏற்பட்;ட ஆழிப்பேரலையின்போது (Tsunami) யாழ் குடாநாட்டில் 300 ஏக்கர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பில் கடல்நீPர் புகுந்து நிலம் உப்பேறியதில் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவந்த வெங்காயம், மிளகாய் மற்றும் உருளைக்கிழங்குச் செய்கை முற்றாகப் பாதிக்கப்பட்டது. தொடர்ந்தும் பயிர் செய்ய முடியாத அளவுக்கு உவர்த்தன்மை நீடித்தது. இந்த அவலத்தில் இருந்து மீள விவசாயிகளுக்கு வழிகாட்டியது அவர்களது எளிமையான வேளாண் அறிவுதான். நிலத்துக்குப் புளியம் இலைகளைப் பசளைகளாகச் சேர்த்து உவர்ப்பை அகற்றிவிட்டு, கடற்கோள் ஏற்பட்டு நான்கே மாதங்களில் மீளவும் பயிர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். எந்தச் செயற்கை இரசாயனங்களாலும் இது சாத்தியமாகி இராது.

 

ஆனால், ஈழத்தில் போர்க்காலத்தில் தளிர்விட்ட இயற்கை வேளாண்மை விரைவிலேயே கருகிவிடும் பரிதாபத்தில் உள்ளது. போர் ஓய்ந்து கண்டி வீதியூடான (A-9) போக்குவரத்து ஆரம்பித்ததுமே, மடையுடைத்தது போன்று தென் இலங்கையில் இருந்து வேளாண் இரசாயனங்களின் விற்பனை முகவர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். வயல்களில் பயிர்கள் விளைகின்றனவோ இல்லையோ, இரசாயன உரங்களினதும் பீடை கொல்லிகளினதும் விளம்பரத் தட்டிகள் முளைத்து விட்டிருக்கின்றன. போரினால் வீழ்த்தப்பட்ட நாம் இன்னமும் எழுந்திருக்க முடியவில்லை. ஆசுவாசப்படுத்திக் கொண்டு அடுத்தது என்ன என்று யோசிப்பதற்கு முன்பாகவே, அதற்கான அவகாசத்தை வழங்காத கதியில் – தென் இலங்கை நிறுவனங்களோடு பன்னாட்டு நிறுவனங்களும் களத்தில் குதித்துள்ளன. அபிவிருத்தி என்ற வசிய மந்திரமே எல்லோரதும் உச்சாடனமாக உள்ளது. அரிசியல் அதிகாரம் இல்லாத சமூகத்தில் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படும் அபிவிருத்திகள் எல்லாமே அச்சமூகத்தின் வளங்களைக் கொள்ளையிட்டதாகவும் இயற்கைச் சூழலைச் சீரழித்ததாகவுமே இதுவரையான உலக வரலாறு பகர்கிறது.

 

ஈழத்தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதால், போராட்டத்துக்கான நியாயங்களும் தோற்றதாக அர்த்தமாகிவிடாது. இலங்கை சுதந்திரம் பெற்றபோது ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சிங்களத் தலைமைகள், தமிழர்களையும் பூர்வகுடி மக்கள் என்று அணைத்துக் கொள்ளத் தவறியது. இதுவே, இலங்கைத் தீவு இத்தனை .இரத்தக் களரிகளையும் சந்தித்தமைக்கான அடிப்;படைக் காரணமாகும். வரலாற்றுக் காலம் முதலே இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனமும் சிங்களத் தேசிய இனமும் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். மத்திய காலத்துக்கும் முன்னதாகவே, இவர்கள் தமது பாரம்பரிய நிலங்களில் தங்களுக்கான இராச்சியங்களை நிறுவியிருந்தனர் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் இலங்கையைக் கைப்பற்றிய போது, தமது ஆட்சியைத் தமிழர் இராச்சியத்தில் தனியாகவும் சிங்களவர் இராச்சியத்தில் தனியாகவுமே மேற்கொண்டனர். ஆங்கிலேயர்கள் இலங்கை முழுவதையும் தங்களது பிடிக்குள் கொணர்ந்த பின்பே – 1815இல் – நிர்வாக வசதிக்காக இந்த இராச்சியங்களை இணைத்தனர். இ.தன்போதே இலங்கை ஒற்றை ஆட்சியின் கீழ் வந்தது.

 

வட அமெரிக்கக் கண்டத்தில், பதின்மூன்று மாநிலங்கள் இணைந்து ஐக்கிய அமெரிக்காவாகச் சுதந்திரம் பெற்றபோது, தேசியச் சின்னமாகத் தெரிவான கழுகு அந்த ஐக்கியத்தை வெளிக்காட்டத் தவறவில்லை. மாநிலங்களின் கூட்டுறவின் குறியீடாக, கழுகு ஒரு காலில் பற்றியிருக்கும் ஒலிவ் கிளையில் 13 இலைகளையும் மறுகாலில் பற்றியிருக்கும் அம்புக்கற்றையில் 13 அம்புகளையும் கொண்டிருக்கிறது. ஆனால், சுதந்திர இலங்கையில் தேசியச் சின்னங்களைத் தேட முற்பட்ட சிங்களத் தலைமைகள் இலங்கைத் தீவின் வரலாற்று உண்மைகளைக் கருத்தில் எடுக்கவில்லை. தங்களது பௌத்த பண்பாட்டுச் சூழலோடு தென் இலங்கையின் இயற்கைச் சூழலையும் மாத்திரமே பிரதிபலிக்குமாறு பார்த்துக் கொண்டனர். இலங்கையின் காடுகளில் காணப்படாத, பௌத்த மற்றும் சிங்கள இன வரலாற்றில் வாழுகின்ற சிங்கத்தைத் தேசியக் கொடியில் ஏற்றி வைத்தனர். அதுவும் கையில் வாளோடு. தமிழர் தாயகத்தில் காணப்படாத, தென் இலங்கையின் இயற்கைச் சூழலுக்கு மட்டுமே உரித்தான நாகமரத்தைத் (Mesua nagassarium) தேசிய மரமாக மெச்சினர். புத்தபிரான் இலங்கைக்கு வருகை தந்தபோது, மகியங்கனையில் இருந்த நாகமரத் தோப்புக்கே முதன் முதலாகச் சென்றார் எனச் சிங்கள வரலாறு சொல்கிறது. தொடர்ந்தும், தமிழர்களின் தேசிய அடையாளங்களைச் சிங்களத் தேசியம் ஏற்றுக் கொள்ளாது, அவர்களது இருப்பைக் கேள்விக் குறஷியாக்கி வந்ததாலேயே எதிர்ப்பு அரசியலாகத் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் தலை தூக்கியது .இதன் ஒரு அங்கமாகவே விடுதலைப்புலிகள் தமிழர்களுக்கான தேசியப்பறவையாகச் செண்பகத்தைத் தேர்வு செய்யவும் நேர்ந்தது.

 

***

அமெரிக்காவில் மொட்டந்தலைக் கழுகுகள் பேரழிவைச் சந்தித்தபோது, ரேச்சல் கார்சன் (Rachel Carson) என்னும் பெண்மணி ‘மௌன வசந்தம்’[silent spring]என்னும் நூலை எழுதினார். கடல் உயிரியலாளரான இவர், அந்நூலில் பீடை கொல்லி இரசாயனங்களால் நீர் நிலைகள் நஞ்சேறுவது குறித்தும், நன்மைதரு பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் கேடுகள் குறித்தும், பூச்சிகளும் பறவைகளும் அழிவதால் உயிர்ச் சூழல் எதிர்நோக்கும் பேராபத்துகள் குறித்தும் விலாவாரியாக விளக்கியிருந்தார். இவர் இலக்கியத்தரம் வாய்ந்த ஓர் எழுத்தாளரும் கூட. இதனால், இவரது நூல் பரவலாகப் வாசிக்கப்பட்டு அமெரிக்க மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. பீடை கொல்லி தயாரிப்பு நிறுவனங்கள் ரேச்சல் காசனை ஒரு மனநோயாளியாகச் சித்தரித்தனர். இவரது நூலும் கருத்துக்களும் மக்களிடம் சென்றடையக் கூடாது என்பதில் கருத்தாக இருந்தனர். இவற்றையெல்லாம் தாண்டி ரேச்சல் காசன் அவரது நோக்கில் வெற்றிபெற்றார். 1972ஆம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் டிடிரிக்குத் தடைவிதித்தது. மேலும், மொட்டந்தலைக் கழுகுகளை அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்த்து பாதுகாப்பும் வழங்கியது. இப்போது, அழிவில் இருந்தும் மீண்ட மொட்டந்தலைக் கழுகுகள் மீஷண்டும் அமெரிக்கா வான்பரப்பில் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்துள்ளன.

 

இந்தியாவிலும் பிணந்தின்னிக் கழுகுகளின் மறைவு குறித்து சூழலியளாளர்கள் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தனர். இதனால் இந்திய அரசு 2006ஆம் ஆண்டு முதல் டைக்ளோஃபினாக் மருந்தைக் கால்நடைகளுக்கு பயன்படுத்துவதைத் தடை செய்தது. அத்தோடு, பிணம்தின்னிக் கழுகுகளுக்கெனச் சிறப்பாக இனப்பெருக்க மையங்களையும் திறந்தது. பிணம்தின்னிக் கழுகுகளும் மெல்லச் சிறகசைக்கத் தொடங்கிவிட்டன.

 

ஈழத்தில் செண்பகங்கள் காணாமல் போவது குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்? நம்மையும் நமது இயற்கைச் சூழலையும் பீடைகள் அண்டவிடாது காப்பாற்றி வந்த செண்பகங்களை அழியவிடாது பாதுகாக்க வேண்டியது எல்லோரதும் கடமையாகும். செண்பகங்களை குறியீடாக முனநிறுத்தி சுற்றுச் சூழல் பாதுகாப்பை ஒரு வெகு மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். தவறின், .இந்நெடிய கட்டுரையின் முதல் பந்தியில் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டதாகச் சுட்டியிருப்பதைப் போன்று நாமும் ‘நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்கள்’ ஆவோம்.

 

முற்றும்

பொ. ஐங்கரநேசன்

 

இணையத்தளம்: http://www.imainet.org

 

மூலம்: http://www.imainet.org/%e0%ae%85%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%88%e0%ae%b4/

 

 

 

நல்லதொரு பதிவு. DDT யை பற்றி இதுவரை இப்படி கேள்விப்படவில்லை. எத்தனை தரம் எறும்புகளை கொல்ல தோட்டத்தில் பாவித்திருப்போம். இனிமேலாவது இயற்கை உரங்களை பாவிப்பார்களா? குழைகள் தாட்டல், உமி எரித்தல், இப்படி பல நல்ல விதமாக நிலத்தை வளப்படுத்தலாம்

 

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் காவோலை வேலிகளுக்குள், நத்தை பொறுக்கிக் கொண்டிருக்கும், செண்பகங்களை, அடிக்கடி காணக்கூடியதாக இருக்கும்!

 

இவை எழுப்பும் ஓசை கூட.... க்கும்.....க்கும்... என்ற மாதிரி ஒரு வித்தியாசமாக இருக்கும்! நான் கூடப் பல தடவைகள், இந்தச் சத்தத்தை எழுப்புவதன் மூலம், செண்பகங்களை, வேலிக்குள் இருந்து, வெளியே எட்டிப்பார்க்க வைத்திருக்கின்றேன்!

 

நல்லதொரு பதிவுக்கு, நன்றிகள், நிழலி!

மிக அருமையான பதிவு........கழுகின் குனதிசங்களுடன் அமெரிக்க நலன்களை ஒப்பிடு செய்யவும், நச்சு மருந்து பாவனைகளை, இன்னும் செண்பகங்கள் என மனதை தூண்டிய ஒரு பதிவிடல். 

 

செண்பத்தின் கூட்டுக்குள் ஒரு இரும்புக்கம்பி இருக்கும் என்றும் அதை எடுத்தால் எந்த பூட்டுகளையும் வெட்டும் சக்தி இருக்கும் என்றும் என்று ஒரு கர்ண பரம்பரை கதை நினைவ்வுக்கு வந்தது. 

 

உண்மைதான் யாழில் இருந்த காலத்தில் இந்த பறவைகளை அதிகம் காணமுடியவில்லை.....இப்போதுதான் அதன் காரணங்கள் புரிகிறது.

  • தொடங்கியவர்

பின்னூட்டங்களுக்கு நன்றி.

இந்த கட்டுரை வெளியான இமைநெட் இணையத்தளத்தில் எம் தாயகத்தின் இயற்கை, மண் சம்பந்தமாக மிகவும் ஆக்கபூர்வமான கட்டுரைகள் சில காணக்கிடைக்கின்றன. அண்மையில் 'மெல்லக் கொல்லும் யாழ்ப்பாணக் குடிநீர்'என்ற கட்டுரையும் இந்த தளத்தில் இருந்து தான் இணைத்து இருந்தேன்.

ஒரு பக்கம் சிங்கள அரசாலும், இந்திய அரசாலும் எம் மண் எம்மிடம் இருந்து நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றம் என்று பலாத்காரமாக பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்க இன்னொரு பக்கத்தில் எம் தமிழ் மக்களே தம் சொந்த மண்ணை விஷத் தன்மை கொண்ட மண்ணாக மாற்றிக் கொண்டு இருக்கும் அவலமும் நடக்கின்றது.

விவசாயிகளின் இரண்டு கண்களை போன்றது மண்ணும், நீரும். ஆனால் இன்று எம் தாயகத்தில் இவை இரண்டையும் நேசிக்காத வெறும் வியாபாரத்தினை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட விவசாயிகளைக் கொண்ட ஒரு விவசாய சமூகம் வளர்ந்து வருகின்றது.

மிதமிஞ்சிய இரசாயன பசளையின் பாவனை, மித மிஞ்சிய பூச்சிக் கொல்லிகளின் பாவனை, மண்ணின் வளத்தினை பற்றி அறியாமல் எம் மண்ணுக்கு விரோதமான பயிர்செய்கை என்று இன்று எம் மண் எம்மவர்களாலும் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து அண்மையில் வந்து இருந்த என் மாமா கூறினார், அங்குள்ள 'இதற' வாழைப்பழம், கப்பல் வாழைப்பழம் எல்லாம் மிதமிஞ்சிய பசளையினால் ஒவ்வொன்றும் அதன் வழக்கமான அளவிலும் விட சில மடங்கு பெரிதான அளவில் உருவாகின்றது என்று. அதே போன்று அண்மையில் வன்னியில் பாசுமதி அரிசி பயிர் செய்கையும் முயன்று பார்க்கப்பட்டு விளைச்சலைக் கொடுத்து இருக்கு என்று.

எம் தாயகம் சார்ந்த, மண் சார்ந்த எல்லா விடயங்களும் எம் வாழ்வாதாரங்களின் மூல வேர்களை புடுங்கி எறிகின்றவிதமாகத்தான் போய்க் கொண்டு இருக்கு. :(



--------

இந்த கட்டுரையை இணைத்து 24 மணி நேரத்துக்குள் 350 இற்கும் மேற்பட்ட தடவை பார்க்கப்பட்டு இருப்பது எம் தாயகத்தின் மண் வளத்தினை பற்றி அக்கறையுள்ள பலர் எம்மிடம் உள்ளனர் என்பதை காட்டுவது திருப்தியாக இருக்கின்றது. இதே போன்ற கட்டுரைகள் கண்ணில் பட்டால் தயவு செய்து இணைத்து விடவும்.

விரிவானதொரு கட்டுரை.

ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.  குறுகிய கால நலனிற்காக எங்கட மக்களே இயற்கையை பகைக்கும் பொழுது என்ன செய்யலாம்.

நல்லதொரு இணையம். வலைப்பூ வைத்திருப்பவர்கள் இப்படியான தளங்களிற்கு இணைப்புக் கொடுக்க வேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி ஊரில இருக்கேக்குள்ள சொல்றவை செம்பகம் வீட்டுக்குள்ள வந்தால் காசு வரும் என்று :D  படித்ததை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நிழலி

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பொ.ஐங்கரநேசன் யாழ் இந்துக் கல்லூரியில் படிக்கும் போதே, ஆளில்... நல்ல விசயம் இருக்குது என்று தெரியும்.
நல்லதொரு கட்டுரை, இணைப்பிற்கு நன்றி நிழலி.

 

தாய் தேசத்தின் இன்னுமோர் அவலத்தை யாழில் வெளிக்கொண்டு வந்ததற்கு 
அண்ணன் நிழலிக்கு மிக்க நன்றி.

வாசிக்கும் போதே  குருதியில் நச்சு கலப்பது போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.