Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சச்சின் ரமேஷ் டெண்டுல்க்கர் - முன்னர் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

80களின் ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன். கோண்டாவிலில் நான் வாழ்ந்து வந்த காலம். உரும்பிராயிலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு அவ்வப்போது செல்வதுண்டு. பலமுறைகளில் அங்கே ஒரு சிறுவர் பட்டாளம் கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்திருந்து பெரும் ஆரவாரத்துடன் ஏதோ ஒரு விளையாட்டை ரசித்துக்கொண்டிருப்பார்கள். எனக்கு அந்த விளையாட்டுப் பற்றித் தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கவில்லை. சிலவேளைகளில் எதேச்சையாக அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்பதும், கபில், சுனில், வென்சாக்கர், குண்டப்பா, சர்மா... என்று பெயர் கொண்டவர்கள் என்றும் கேள்விப்படுவதுண்டு. ஆனால் ஒரு போதுமே அவர்கள் யாரென்றோ அல்லது அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்றோ அறிந்துகொள்ள விரும்பியதில்லை. ஆக கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாத எனது சிறுவயது வாழ்க்கை கடந்துபோனது.

 

90களின் ஆரம்பத்தில் ஊரிலிருந்து வெளியேறி பம்பலப்பிட்டி ஜாயா வீதியில் ரயில் தண்டவாளத்துக்கருகில் வசித்துவந்த காலமது என்று நினைக்கிறேன். வீட்டின் உரிமையாளர் பழகுவதற்கு பண்பானவர் என்பதால் அவர் வற்புறுத்தி அழைக்கும்போது சிலசமயம் அவருடன் இருந்து கிரிக்கெட் புரியாமலேயே பார்க்கத் தொடங்கினேன்.    முதன்முதலில் கிரிக்கெட் என்றால் என்னவென்று நான் அறிந்துகொண்டது சந்திக்க ஹத்துருசிங்கவும் ரொஷான் மகாநாமவும் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக இறங்கிய போட்டியொன்றைப் பார்க்கும்போதே. எந்தவொரு கிரிக்கெட் அணிக்கும் நான் அப்போது ஆதரவு தரத் தொடங்காத நிலையில் எனது சிங்கள நண்பர் மூலம் நான் கிரிக்கெட் பார்க்கத் தொடங்கினேன். நான் பார்க்கத் தொடங்கியது இலங்கையணியின் துடுப்பட்டத்தைப் பார்த்துப் பழகிய பின்னர்தான். 

 

1993 மே மாதம் 1 ஆம் தேதி நான் கிருலப்பனைக்கு வீடு மாறிச் சென்றேன். அன்றிலிருந்து எனக்குக் கிரிக்கெட் பைத்தியமாகிப்போனது. அருகிலிருந்த சிங்களக் கடை உரிமையாளர் நண்பராகிவிடவே நான் கிரிக்கெட் நடக்கும் நாளிலெல்லாம் தவறாமல் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகிவிடுவேன். எனது அபிமான கிரிக்கெட் அணி இலங்கை. அரவிந்தவும், அர்ச்சுனவும் எனக்கு ஆண்டவர்களாகிப் போனார்கள். கிடைக்கும் ஒவ்வொரு வெற்றியிலும், ஏற்படும் ஒவ்வொரு தோல்வியிலும் நான் வெளிப்படுத்துன் உணர்வுகளைப் பார்த்து எனது சிங்கள நண்பர்களே வியப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட் என்றால் என்னவென்று தெரியாமலிருந்த நான் அப்போது கிரிக்கெட் என்றால் பைத்தியாமகிவிடுவேன்.

 

இந்தக் காலத்தில் நான் அடிக்கடி கேட்கும் இன்னொரு பெயர் சச்சின். ஒருமுறை இந்திய அணி இலங்கைக்கு விளையாட வந்திருந்தது. 94- 95 என்று நினைக்கிறேன். கபில் விளையாடிய கடைசிப் போட்டிகளாகக்கூட இருக்கலாம்.இந்திய அணி இலங்கை அணியை துவட்டி எடுத்தது. இன்னிங்கிசினாலும் சுமார் 200 ரண்களாலும் இரு போட்டிகளிலுமே இலங்கை தோல்விகண்டது. இந்தியாவின் வெற்றிக்குக் காரணமானவர்கள்  சச்சினும் கபில்தேவும். இதனால் அவர்கள்மேல் சிறு ஆத்திரமும் இருந்தது. இப்படியே இலங்கையணியின் பரம ரசிகனாகிவிட்ட எனக்கு 95 ஆண்டிற்குப் பின்னரான பல்கலைக் கழக வாழ்வு பெரும் பிரச்சினையாக மாறிப் போனது. ஏனென்றால் என்னைத்தவிர அங்கிருந்த அனைத்துத் தமிழ் மாணவர்களும் இந்திய அபிமானிகள். இதனாலேயே எனக்கும் அவர்களுக்கு அடிக்கடி பிரச்சினைகள் வருவதுண்டு. ஆரம்பத்தில் கேலியாகத் தொடங்கும் சம்பாஷணைகள் இறுதியில் மனக்கசப்புகளோடு முடிவடையும். என்னை துரோகியென்றும், சிங்களளவனின் கூலியென்றும் அழைப்பார்கள். நானும் பதிலுக்கு அவர்களை இந்திய அடிமைகள் என்று திட்டித் தீர்ப்பேன். இவர்களின் தொல்லையாலேயே இந்திய அணிமீதிருந்த எனது சிறு கோபம் பலமடங்கு ஆத்திரமாக மாறியது. இந்திய அணி விளையாடும் போட்டிகளிலெல்லாம் அது தோற்கவேண்டும் என்று நினைப்பேன். இந்திய அணியின் வெற்றிக்குக் அப்போது தொடர்ந்தும் காரணமாக இருந்தத சச்சின் மீது எனக்குத் தனிப்பட்ட கோபம் இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1996. இலங்கையில் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடந்த காலம். கிரிக்கெட் போதை என்னை வாட்டியெடுத்த காலம். இலங்கையணி விளையாடுகிறதென்றால் பல்கலைக்கழக விரிவுரைகளாகட்டும், காதலியைச் சந்திக்கும் நேரங்களாகட்டும், எல்லாவற்றிற்கும் ஒரு சாட்டுச் சொல்லிவிட்டு நண்பர்களுடன் பல்கலைக் கழக மண்டபத்தில் கிரிக்கெட் பார்க்க வந்து அமர்ந்துவிடுவேன். போட்டி தொடங்கி முடியும்வரை இருந்து சிறந்த வீரர் விருது வழங்கல், அது இது என்று முழுவதுமாகப் பார்த்து இறுதியில் இனிமேல் பேசுவதற்கு எவருமேயில்லை என்று தெரிந்தவுடன் மெதுவாக அறைக்குச் சென்றுவிடுவேன். 

 

தில்லியில் நடைபெற்ற குழுநிலைப் போட்டி. இந்தியாவும் இலங்கையும் போட்டியிட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 272 ஓட்டங்களைப் பெற்றது. வெறும் 220 ஓட்டங்களுக்குச் சுருண்டுவிடும் என்று நான் எதிர்பார்த்திருக்க சச்சின் ஆடத்தொடங்கினார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடத்தொடங்கிய அவரின் ஆட்டம் போகப் போக வேகமெடுத்தது. இறுதி ஓவர்களில் இலங்கைப் பந்துவீச்சாளர்கள் திணறிப்போனார்கள். இறுதி ஓவர், ரவீந்திர புஷ்பக்குமார என்பவனிடனம் கொடுக்கப்படுகிறது. சச்சின் பந்துவீச்சை எதிர்கொண்டிருக்க ரவீந்திர எறியத் தொடங்கினான். எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை, சச்சின் எனும் சிறிய வீரன் விசுவரூபமெடுத்தான். ரவீந்திரவின் பந்துகள் நாலாபுறமும் சிதறியடித்துக் கொண்டு ஓடின. 6 பந்துகளில் 27 ரண்களைக் குவித்தார் சச்சின். எனக்கு இதயத்தில் இடி இறங்கியதைப் போன்று வலி. ரவீந்திரவை முடிந்தளவு கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்துவிட்டு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டேன்.

 

இலங்கையணி விளையாடத் தொடங்கியது. 3 ஓவர்களில் 50 ரண்கள். நான் கிரிக்கெட்டில் கேள்விப்படாதது நடந்தது. வேகப் பந்துவீச்சாளர் மனோஜ் பிரபாகர் ஒரே போட்டியில் சுழல்ப் பந்துவீச்சாளராகவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டார்ணிறுதியில் இலங்கையணி 5 விக்கெட்டுக்களால் வென்றது.

 

இதேபோல அரையிறுதிப் போட்டியிலும் இந்தியாவ வீழ்த்தியது இலங்கை. ஒரு ஓட்டத்திற்கு இரு விக்கெட்டுக்கள் என்று இலங்கையணி தடுமற்றிக்கொண்டிருக்க அரவிந்தவின் அதிரடி ஆட்டத்தால் இலங்கையணி மீள எழுந்தது. இறுதியில் 8 விக்கெட்டுகளுக்கு 250 ஓட்டங்களை எடுத்தது.  இந்திய அணி துடுபெடுத்தாடும்போது சச்சினும் மஞ்சுரெக்கரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த நேரம். 2 விக்கெட்டுக்களுக்கு 98 ரண்கள். இதே முறையில் தொடர்ந்து ஆடினால் இந்தியா வெல்வது நிச்சயம் என்றிருக்க சச்சின் எதிர்பாராத நேரத்தில் காலை முன்னே  வைத்து விட  களுவித்தாரன கபடமாக அவரை ரண் அவுட் செய்துவிடுகிறான். சச்சினின் ஆட்டமிழப்போடு இந்திய அணி சுருளத் தொடங்கியது. 98 இற்கு 2 விக்கெட்டுக்கள் என்றிருந்த இந்தியா 120 இற்கு 8 விக்கெடக்கள் என்று சுருண்டது. கல்கத்தா ரசிகர்கள் வெறுப்பேறி ஸ்டேடியத்தில் நெருப்புக்கொளுத்த போட்டியில் இலங்கை வென்றது என்று அறிவிக்கிறார்கள். வினோத் கம்ப்ளி அழுதுகொண்டே மைதானத்தை விட்டு வெளியேறியதும், அசாருதினும் ஏனையவர்களும் மக்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டே மைதானத்தில் இறங்கி சுத்தியோடியதும் நினைவிலிருக்கிறது. 

 

இப்படியே இந்திய அணியென்றால் எப்போதும் எதிர்க்கப்படவேண்டிய அணி என்று எனக்குள்ளேயே ஒரு முடிவுடன் இருந்துவந்தேன்மவ்வப்போது 1987 ஆம் ஆண்டின் இந்திய அமைதிகாக்கும் படை செய்த அட்டூழியங்கள்தான் எனது இந்திய எதிர்ப்பிற்குக் காரனம் என்று நான் சொல்லிவந்தாலும், கிரிகெட்டில் அது ஈட்டிய வெற்றிகளும், சச்சின் மீது எனது பலகலைக் கழக நண்பர்கள் கொண்டிருந்த அபிமானமுமே என்னை இந்திய அணியின் எதிரியாக மாற்றிவிட்டிருந்தன. சச்சினுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதையாலேயே அவர் எனக்கு எதிரி நம்பர் 1 ஆக மாறிப் போனார். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டங்கள் எல்லாம் எனக்கும் ஞாபகத்தில் உள்ளன..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளைகளில் பாக்கிஸ்த்தானுடன் இந்தியா ஆடும்போது பாக்கிஸ்த்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பேன். இது பாக்கிஸ்த்தான் மீதிருந்த அபிமானத்திலன்றி இந்தியா தோற்கவேண்டும், இந்திய ரசிகர்கள் மூக்குடைய வேண்டும் என்கிற ஆர்வத்தினால் வந்தது. இந்தியா அடையும் ஒவ்வொரு தோல்வியும் எனக்கு மிகுந்த சந்தோசத்தையும் திருப்தியையும் கொடுத்தன. 

 

சச்சின் ஆடத்தொடங்கும் முதற்பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவர் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் நினைத்துக்கொள்வேன். அப்படி ஒருமுறை சமிந்த வாசின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழக்க நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இப்படி சச்சினுக்கும் எனக்குமிடையிலான குரோதம்  பெருத்து வளரத் தொடங்கியது !

 

ஒருநாள் இந்திய அணியும் இலங்கையல்லாத வேறொரு அணியும் ஆடும் ஆட்டத்தைக் காண நேரிட்டது. வேறு வேலையிருக்கவில்லை என்பதால், தொலைக்காட்சியின் முன்னாலமர்ந்து ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.அதுவரை நான் பார்த்த சச்சினுக்கும்  அன்று நான் பார்த்த சச்சினுக்கும் இடையே வேறுபாடுகளிருப்பதை உணர்ந்தேன். வெறும் எதிரித் துடுப்பாட்டக்காரர் என்பதற்காகவே அந்த வீரன் ஆடும் ஆட்டத்தின் கலையை உணரமுடியாமல்ப் போனதுபற்றி முதல் முதலாக மனது லேசாக சங்கடப்பட்டது. அட இவ்வளவு சிறந்தவனா இந்தச் சச்சின் என்று கேள்வியும் எழுந்தது.ஆட்டம் முடியும்வரை இருந்து பார்த்துவிட்டு படுக்கைக்குச் சென்றேன். இந்தியா அன்று வென்றதா அல்லது தோற்றதா என்று எனக்கு நினவிலில்லை. ஆனால் சச்சின் ஆடிய விதம் இன்னும் கண் முன்னாலிருக்கிறது. 

 

அன்றிலிருந்து சச்சின் பற்றிய எனது நிலைப்பாடு மாறத்தொடங்கியது. அடிக்கடி மனதில் அவனொரு இந்தியன் என்கிற குறுஞ்செய்தி மின்னி மறைந்தாலும் சச்சின் எனக்கு இந்தியனாகத் தெரியவில்லை. சச்சின் நாடொன்றையும் சாராத தனி வீரனாக எனக்குத் தெரிந்தார்.இந்தியா தோற்கவேண்டும் ஆனால் சச்சின் சதமடிக்க வேண்டும் என்று விரும்புவேன். ஆனால் எனது விருப்பமெல்லாம் மண் அள்ளி வீசிவிட்டுப் போனார் சச்சின். சச்சின் சதமடித்தால் இந்தியா தோற்பதெப்படி என்கிற உண்மை எனக்குத் தெரியாமல்ப் போனது. 

 

இன்று நான் விரும்பும் ஒரே கிரிக்கெட் வீரன் சச்சின். பல அருமையான கிரிக்கெட் வீரர்களை நான் பார்த்திருக்கிறேன். சிலகாலம் பிரகாசிப்பார்கள், பின்னர் மறைந்துபோவார்கள். பிரகாசிக்கும் அந்தச் சிறிய காலத்திலேயே மமதையும் தலைக்கணமும் பிடித்து ஆடுவார்கள்.ஆனால் சச்சின் தலைகணம் பிடித்து நான் பார்த்ததில்லை. எதிரிப் பந்துவீச்சாலர் அவர்மேல் சொறியும் திட்டல்களைப் பார்த்தபின்னரும் தலையைக் குனிந்தபடியே ஆடுகளைத்தைச் சரிசெய்யும் அந்த ஒப்பற்ற வீரனின் தன்னடக்கம் யாருக்கு வரும்? எதிரிப் பந்துவீச்சாளர்களைத் துவசம் செய்யும்போதும் சரி, எதிரித் துடுப்பட்டக்காரரை ஆட்டமிழக்க வைக்கும்போதும் சரி அவர் அந்த வெற்றியைக் கொண்டாடும் முறை இருக்கிறதே, ஆட்டமிழந்து போகும் வீரனும், அடிவாங்கும் பந்துவீச்சாளனும் தங்கள் துயரை அக்கணமே மறந்துவிடுவார்கள். ஒருதடவை அவுஸ்த்திரேலிய வேகப் பந்துவீச்சாளன் வேண்டுமென்றே சச்சின் மீது பந்தை எறிந்தான். முகத்துக்கு வெகு அருகில் பந்து பட்டது. ஆனால் அவர் முகத்தைத் தூக்கி பந்துவீச்சாளனைப் பார்க்கக் கூட இல்லை. மீண்டும் பழையபடி தனது மட்டையைப் பார்த்துக்கொண்டு பந்துவீச்சுக்கு ஆயத்தமானார் அவர். அதேபோல எதிரி துடுப்பாட்டக்காரர்கள் சதமடிக்கும்போது அவர்கலை வாழ்த்தும் பாணி சச்சினுக்கு இருக்கிறது. பலமுறை இதை அவர் செய்திருக்கிறார். இன்றிருக்கும் இந்தியாவின் துடுப்பாட்டப் புலிகளான டோனிக்கோ அல்லது கோலிக்கோ இந்தப் பக்குவம் அடித்துப்போட்டாலும் வராது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று வேலைத்தளத்தில் சிறிது ஓய்வு நேரம் கிடைத்ததனால் கிரிக்கின்போ என்கிற தளத்தில் என்ன செய்தி வந்திருக்கிறதென்று பார்க்கலாம் என்று போனேன். பக்கம் முழுவதும் சச்சின் பற்றிய செய்திதான். தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் தனது 23 வருடகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுக்கிறார் என்று எழுதியிருந்தார்கள். முதன் முதலாக ஒரு இந்திய வீரனின் ஓய்வுக்காக மனம் அழுதது. அட, அதற்குள்ளாகவே ஓய்வா என்று ஏங்கினேன். தொடர்ந்து அவர்பற்றிய செய்திகளைத் தேடித் தேடிப் படிக்கத் தொடங்கினேன். அப்படிப் படித்தவைகளில் சிலதை யாழிலும் இரவு பகிரலாம் என்றி நினைத்தேன்.

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிரிகெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்து மீண்டும் விளையாட வந்திருந்த யுவராஜ் சிங்கின் பேட்டி பிரசுரமாகியிருந்தது. "அவரது இறுதிப்போட்டியில் சேர்ந்து விளையாட விரும்புகிறேன், அது முடியாமல்ப் போனால் நிச்சயம் அவரது ஆட்டத்தைப் பார்க்க மைதானத்தில் அமர்ந்திருப்பேன்" என்று உருக்கமாகக் கூறியிருந்தார் யுவா. "அவர் மீதிருந்த மரியாதையாலேயே அவருடன் நானங்கள் பேசக் கூச்சப்பட்டோம், ஆனால் அவரோ சிறு பிள்ளையைப் போல எங்களுடன் ஒட்டிக்கொண்டார். அவருடன் நான் சேர்ந்து விளையாடிய காலங்கள் அருமையானவை. இந்தியவிலிருந்து வந்த மிகவும் சிறந்த வீரர் அவர். அவர் போல முன்னர் இருந்ததுமில்லை, இனிமேல் இருக்கப்போவதுமில்லை. அவர் உலகக் கிரிக்கெட்டின் முகவரி. இது முழு இந்தியவுக்குமே மிகவும் சோகமான நாளாக இருக்கப்போகிறது. நண்பா உனது யுவி மீண்டு வந்திருக்கிறேன் " என்று தழு தழுத்த குரலுடன் முடித்தார் யுவா. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சச்சினைப் பற்றி ஏனைய நாட்டு கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுடன் எனது இந்தச் சிறிய சச்சின் புராணத்தை நிறுத்திக்கொள்கிறேன்.

 

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் துடுப்பாட்டாக்காரர் என்று இதுவரை அறியப்பட்டிருந்த டொனால்ட் பிராட்மன் : "சச்சின் விளையாடும்போது நான் என்னை அவரில் பார்க்கிறேன். இன்று என்னால் விளையாட முடியாவிட்டாலும் கூட அவர் விளையாடும்போது நானே விளையாடுவதாக உணருகிறேன்"

 

உலகின் மிகச்சிறந்த சுழல்ப் பந்து வீச்சாலர் ஷேன் வோன் : "சச்சின், எனது காலத்தின் உலகின் தலைசிறந்த வீரர். இரண்டாவது வீரர் என்று ஒருவருமில்லை, பிரயன் லாரா கூட மூன்றாவது இடம்தான் "

 

மேற்கிந்திய தீவுகளின் முன்னால் அதிரடி ஆட்டக்காரர் விவியன் ரிச்சட்ஸ் : " செயற்திறன் பற்றிப் பேசினால் அவர் ஒரு ஒப்பற்ற அறிவாளி, திட்டமிட்ட காரியம் பற்றிப் பேசினால் அவர் ஒரு துரோஜன் குதிரை, கவனம் என்று வந்துவிட்டால் அவர் ஒரு முரடர் "

 

இந்தியாவின் தடுப்புச்சுவர் என்றழைக்கப்படும் ராகுல் திராவிட் : "அவர் எதிர்காலச் சந்ததிக்கு அமைத்துச் சென்றிருக்கும் மைல்க்கல் ஒருபோதுமே எவராலும் அடைய முடியாதது "

 

உலகின் ரெண்டாவது சிறந்த துடுப்பாட்டக்கரர் பிரயன் லாரா : "அவர் ஒரு மேதை நானோ வெறும் மனிதன் "

 

இந்தியாவின் முண்ணனி சுழற் பந்துவீச்சாலர் அனில் கும்புளே :" அவருக்கெதிராக பயிற்சிகளில் மட்டுமே நான் பந்துவீசியதால் மிகவும் அதிஷ்ட்டசாலியாக இருந்திருக்கிறேன்"

 

இந்தியாவின் அணித்தலைவர் தோனி : "பள்ளிச்சிறுவன் போன்ற அவரது கலகலப்பு என்னைப் பொறாமைப்பட வைக்கிறது. அணியில் எங்கள் எல்லோருக்குமான பாட நூல் அவர்"

 

முன்னால் சிம்பாப்வே அணித்தலைவரும் இன்னாள் இங்கிலாந்துப் பயிற்சியாளருமான அன்டி பிளவர் :  "உலகின் துடுப்பாட்டக்காரரை இரு வகைகளாகப் பிரிக்கலாம், ஒன்று சச்சின் டெண்டுல்க்கர், மற்றையது ஏனைய துடுப்பாட்ட வீரரகள் அனைவரும் "

 

இந்தியாவின் பிரபல நடிகர் ஷாரூக் கான் : "நீங்கள் சுவாசிக்கும் காற்றைச் சுவாசிக்கக் கிடைத்த பாக்கியத்துக்ககவே எனது இதயத்தின் ஆளத்திலிருந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்"

 

அவுஸ்த்திரேலியாவின் முன்னால் ஆரம்பத் துடுப்பாட்டக்காரர் மத்தியூ கேய்டன் : " நான் கடவுளைக் கண்டேன். அவர் இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசையில் நான்காவது வீரராக ஆடுகிறார்"

 

தென்னாபிரிக்காவின் துடுப்பாட்ட வீரர் ஹஷீம் அம்லா : "சச்சின் பயணிக்கும் விமானத்தில் நாம் கூடப் பயணித்தால் எந்தத் தீங்குமே எங்களை அணுகாது"

 

 நன்றி !

மிகவும் நல்லதொரு பதிவு ரகுநாதன் .

கிரிக்கெட் எனக்கு சாப்பாடு மாதிரி ,அது இல்லாமல் இருக்க முடியாது .அதில் அரசியல் கலக்க எனக்கு ஏனோ  இஸ்டமில்லை.நான் சிறு வயதுமுதல் இந்தியஅணியின் விசிறி ,பின்னர் சர்வதேச ஆட்டம்  இலங்கை தொடங்க அவர்களின்  விசிறியாகிவிட்டேன்.

நான் கிரிக்கெட்டை மட்டும் ரசிப்பதால் மிக பெரிய சச்சினின் ஆட்டத்தின் விசிறி .

  • கருத்துக்கள உறவுகள்

ரகு, மிக நல்லதொரு பதிவு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், நுணா.....உங்கள் ஆதரவிற்கு நன்றி ! :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு ரகு அண்ணா. இந்தியாவை, இந்தியர்களை நானும் மனதார வெறுத்தாலும் சச்சின் எனக்கு ஒரு இந்தியனாக ஒரு போதும் தெரிந்ததில்லை காரணம் அநேக இந்திய வீரர்களிடத்தில் இருக்கும் ஊத்தை வாளி விளையாட்டுக்களை நான் இவரிடம் கண்டத்தில்லை. முக்கியமாக எனக்குப் பிடித்தது இவரின் தன்னடக்கம். நான் ஹாட்லியில் 1997 இல் சேர்ந்தபோது எனது நண்பன் ஒருவன் சச்சினின்  படம் போட்ட ஒரு பொக்கட் கலண்டரைத் தந்திருந்தான். அது அன்றிலிருந்து எனது வாலெட் இனுள்ளேயே சீவித்து வருகிறது. நான் வேறு எந்த ஒரு கிரிகெட் வீரனையும் இப்படிப் போற்றியது இல்லை. சதம் அடிச்சாலும் அடிக்காவிட்டாலும் பேச்சு வாங்கிற ஒரே வீரன் சச்சின் தான். எத்தனையோ பேர் சச்சின் ஓய்வு பெற வேண்டும் எண்டு கூறியிருந்தாலும் நான் சச்சின் விளையாடுவதயே விரும்பியிருந்தேன். கில் கிறிஸ்ட், அரவிந்தா, முரளி எனப் பலர் ஓய்வு பெறும் போது கவலையாக இருந்தாலும் எனது லிட்டில் மாஸ்டரை இனி அந்த நீலக்கலர் 10 ஆம் நம்பர் ஜெர்சியில் காண முடியாது என்பதை நினைக்க துக்கம் தொண்டையை அடைக்கிறது. போய்வா சச்சின். நீ கிறீசில்  நின்ற ஒவ்வொரு கணத்தையும் ரசித்திருக்கிறேன். உன்னைப் போல ஒருத்தரும் இருந்ததும் இல்லை, இருக்கப் போவதும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரகுநாதன்! உங்கள் அனுபவ பகிர்வுகளுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான், குமாரசாமி ! உங்கள் கருத்துக்கு நன்றிகள்  :)

  • கருத்துக்கள உறவுகள்
விளையாட்டும்,அரசியலும் ஒன்று என்று சொல்வார்கள். ஆனால் எதிரி நாட்டின் விளையாடடு வீரரை ரசிப்பார்களாம் அந்த நேரத்தில் மட்டும் விளையாட்டு வேறு,அரசியல்  என்று சொல்வார்களாம்.நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டுமாம்.
 
சச்சினிடம் இருக்கும் திறமையை ரசித்தால் ஏன் சனத்திடம் இருக்கும் திறமையை ரசிக்க முடியாது?...விளையாட்டை,விளையாட்டாக பாருங்கள் இல்லை விளையாட்டும்,அரசியலும் ஒன்று என்று சொல்லிக் கொண்டு இப்படி எதிரி நாட்டு வீரரை ஆதரித்து எழுத வேண்டாம்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நானும் முன்னர் ஒரு சிறிலங்கா கிரிக்கெட் அபிமானிதான். 2009 வரை அப்படித்தான் இருந்தேன். அதற்குப்பின் எல்லாம் மாறிவிட்டதே. எமக்கு இவ்வளவு அநியாயங்களைச் செய்தவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அணியை இன்றும் ஆதரிக்க மனதால் முடியவில்லை. மற்றும்படிக்கு அவர்கள் அபாரமான விளையாட்டு வீரர்கள்தான் என்பதில் எந்த ஐய்யப்பாடும் இல்லை. ஒருகாலத்தில் சனத்தும், களுவும் இருக்கும்வரை ஆட்டத்தைப் பார்ப்பதும், அவர்கள் அவுட் ஆக எழுந்து போவதும், பிறகு அட, அரவிந்தா இருக்கிறான், அவன் பார்த்துக்கொள்வான் என்று மீண்டும் அமர்ந்திருப்பதும், இப்படியே கடைசி வீரன் இருக்கும்வரை ஆட்டம் (தோற்கப்போகிறோம் என்று தெரிந்திருந்தும்) பார்ப்பதுமாக இருந்திருக்கிறேன்.

 

இன்றும்கூட சங்கா, மகேல, தில்ஷான் போன்றவர்கள் துடுப்பெடுத்தாடும்போது பார்க்கத் தவறுவதில்லை. அப்படியே திரிமான, பெரெரா என்று வரும் இளையவர்களும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்தான். தனிப்பட்ட ரீதியில் இவர்களுக்கும் எங்களுக்கும் என்ன பகை இருக்கிறது ? எதுவுமேயில்லை. ஆனால் இந்த விளையாட்டை அரசு தனது பிரச்சாரத்திற்காகப் பாவிக்கிறது. அதுதான் எனது பிரச்சினை.

 

ஆனால் இந்தியாவின் கிரிக்கெட் எமக்கெதிரான பிரச்சாரத்திற்காகப் பாவிக்கப்படவில்லை. அதற்காக நான் அவர்களை ஆதரிக்கிறேன் என்று யார் சொன்னது. இந்தியா வென்றால் வருத்தப்படுவதும், தோற்றால் சந்தோசப்படுவதும் இன்றும் எனக்கு நடக்கிறது. அண்மையில் கூட இந்தியாவில் விளையாடி வரும் ஆஸி அணிக்குத்தான் எனது ஆதரவு. 359 ஓட்டங்கள் எடுத்தும்கூட இந்தியாவிடம் ஆஸி அணி தோற்றது மிகவும் மனவருத்தமாக இருந்தது. ஆனாலும் முதலாவதும், மூன்றாவதுமான போட்டியில் இந்தியாவை துவைத்தெடுத்து விட்டார்கள் ஆஸி அணியினர். அதனால் மகிழ்ச்சியே.

 

நீங்கள் இலங்கை ஆதரவாளராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அது உங்களின் சொந்த விடயம். எனக்கு சரியென்று பட்டதை நான் செய்கிறேன். உங்களுக்குச் சரியானதை நீங்கள் செய்கிறீர்கள். இதில் நாங்கள் வருத்தப்படுவதற்கு எதுவுமேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

image005.jpg

ரகுநாதன், உங்கள் ஆக்கம் வாசிப்பதற்கு சுவாரசியமாய் உள்ளது.

என்னமோ தெரியவில்லை, சச்சின் ஓர் விளையாட்டு வீரராக என்னை அதிகம் ஈர்க்கவில்லை. இந்திய அணியில் விளையாடிய ஏனைய சில வீரர்கள் என்னை ஈர்த்துள்ளார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கரும்பு !

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நானும் முன்னர் ஒரு சிறிலங்கா கிரிக்கெட் அபிமானிதான். 2009 வரை அப்படித்தான் இருந்தேன். அதற்குப்பின் எல்லாம் மாறிவிட்டதே. எமக்கு இவ்வளவு அநியாயங்களைச் செய்தவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அணியை இன்றும் ஆதரிக்க மனதால் முடியவில்லை. மற்றும்படிக்கு அவர்கள் அபாரமான விளையாட்டு வீரர்கள்தான் என்பதில் எந்த ஐய்யப்பாடும் இல்லை. ஒருகாலத்தில் சனத்தும், களுவும் இருக்கும்வரை ஆட்டத்தைப் பார்ப்பதும், அவர்கள் அவுட் ஆக எழுந்து போவதும், பிறகு அட, அரவிந்தா இருக்கிறான், அவன் பார்த்துக்கொள்வான் என்று மீண்டும் அமர்ந்திருப்பதும், இப்படியே கடைசி வீரன் இருக்கும்வரை ஆட்டம் (தோற்கப்போகிறோம் என்று தெரிந்திருந்தும்) பார்ப்பதுமாக இருந்திருக்கிறேன்.

 

இன்றும்கூட சங்கா, மகேல, தில்ஷான் போன்றவர்கள் துடுப்பெடுத்தாடும்போது பார்க்கத் தவறுவதில்லை. அப்படியே திரிமான, பெரெரா என்று வரும் இளையவர்களும் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்தான். தனிப்பட்ட ரீதியில் இவர்களுக்கும் எங்களுக்கும் என்ன பகை இருக்கிறது ? எதுவுமேயில்லை. ஆனால் இந்த விளையாட்டை அரசு தனது பிரச்சாரத்திற்காகப் பாவிக்கிறது. அதுதான் எனது பிரச்சினை.

 

ஆனால் இந்தியாவின் கிரிக்கெட் எமக்கெதிரான பிரச்சாரத்திற்காகப் பாவிக்கப்படவில்லை. அதற்காக நான் அவர்களை ஆதரிக்கிறேன் என்று யார் சொன்னது. இந்தியா வென்றால் வருத்தப்படுவதும், தோற்றால் சந்தோசப்படுவதும் இன்றும் எனக்கு நடக்கிறது. அண்மையில் கூட இந்தியாவில் விளையாடி வரும் ஆஸி அணிக்குத்தான் எனது ஆதரவு. 359 ஓட்டங்கள் எடுத்தும்கூட இந்தியாவிடம் ஆஸி அணி தோற்றது மிகவும் மனவருத்தமாக இருந்தது. ஆனாலும் முதலாவதும், மூன்றாவதுமான போட்டியில் இந்தியாவை துவைத்தெடுத்து விட்டார்கள் ஆஸி அணியினர். அதனால் மகிழ்ச்சியே.

 

நீங்கள் இலங்கை ஆதரவாளராக இருப்பதில் எந்தத் தவறுமில்லை. அது உங்களின் சொந்த விடயம். எனக்கு சரியென்று பட்டதை நான் செய்கிறேன். உங்களுக்குச் சரியானதை நீங்கள் செய்கிறீர்கள். இதில் நாங்கள் வருத்தப்படுவதற்கு எதுவுமேயில்லை.

 
ரகுநாதன் என் மன ஆதங்கத்தை எழுதினேன்.குறை நினைக்க வேண்டாம்
  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் விளையாடி ஈட்டிய புகழை குழிதோண்டி புதைக்க புறப்பட்டுவிட்டார் டெண்டுல்கர்.உ.பியில் காங்கிரசுக்குஆதரவாக பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளாராம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.