Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெண் நிலவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெண் நிலவுகள்

பசுந்திரா சசி (U.K.)

 " பிச்சை எடுக்கிறதுக்காகவே பிள்ளையை பெறுவது , பிறகு - பேத்தி ,பேத்தி - எண்டு சொல்லித்திரியிறது 'பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! 'எண்டு சொல் வேண்டியது தானே...." என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகான சிலை போல் ஒரு கையில் பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் , மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ' என்ற பாரதியின் கூற்றுக்கு 'மாதர் தம்மை (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம் ' . என்ற எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார் பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் . யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில் பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் . இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும் இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன் பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .

எதையுமே கண்டு கொள்ளாமல் அவனது காணாக் காதலி மோகனா ' எப்ப வருவாள் ? , நேரில் எப்படி இருப்பாள் ? , என்னை இனம் காணுவாளா..? , கண்டால் நாணுவாளா , இல்லை பிரமிப்பாளா ...? பெரியோரால் திருமணமே நிச்சயிக்கப்பட்டு . இரண்டு வருடம் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசிய பின்னும் ஏன் நாண வேண்டும் ! . ஒடி வந்து கட்டிக் கொண்டாலும் தப்பில்லை . - இந்த கோயில் முன்றலிலா ? , முதல் சந்திப்பை வேறு எங்காவது வைத்திருக்கலாமோ... , பெருமாள் கோயிலில் வைத்தது தப்பாகி விட்டது . ஒரு வேளை அவள் அப்படி நினைத்தாலும் இந்த கூட்டத்தின்முன் எப்படி கட்டிக் கொள்வாள்...? - சீ... என் கற்பனைக்கு இங்கிதமே இல்லை. ' தலையை குனிந்த படி தன்னை தானே கடிந்து கொண்டான் ஜோன் . ஏறக்குறைய அவன் இவ் உலகில் இல்லை. வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக வந்திருக்கிறான் . மனைவி பற்றிய கற்பனைகள் இருக்காதா என்ன ?.

அவன் முன்னால் ஒரு அழகிய பூங் கொத்து நீண்டது 'மோகனா'என உச்சாடனம் செய்துகொண்டு பிரமிப்போடு நிமிர்ந்தான். முன்னால் ஒரு வயோதிபர் பூச் செண்டுடை நீட்டிய படி நின்றார் . அவர் கையில் பிச்சைப்பாத்திரமும் இருந்தது ஜோன் புரியாமல் விழித்தான் .

" மன்னிக்க வேண்டும் தம்பி ! என்ர பேத்தி உங்கட மோட்டார் வண்டியில் இருந்த பூச் செண்டை இழுத்து விழுத்தி விட்டாள். " என்று பூங்கொத்தை அவனிடம் நீட்டினார் . திரும்பி பார்த்தான் பூவை தவிர மோகனாவுக்காக வாங்கி வந்த மீதிப் பொருட்கள் எல்லாம் இருந்தது.

பின்னால் குழந்தை ஒன்று பலமாக வீரிட்டு அழுது கேட்டது அத்திசையில் திரும்பினான் . “ சைலஞ்சர் நல்லா சுட்டுப்போட்டுது ” என்றபடி பிள்ளையை மடியில் வைத்து நெற்றியை உரஞ்சிக்கொண்டு இருந்தார் தாய். “அதுதான் என்ர பேத்தி , அது மகள். இந்த பூங்கொத்தை எடுக்க வந்து பூவையும் விழுத்தி , தானும் தடக்கி விழுந்து விட்டது. வண்டியின் சைலென்னர் நெற்றில நல்லா சுட்டு போட்டுது . நானும் மகளும் பிச்சை தட்டை குலுக்கிக் கொண்டு இருந்ததால பிள்ளையை கவனிக்க இல்லை” . என்றார் அந்த பிச்சைக்காற முதியவர் . "பறவாய் இல்லை ஐயா .. " என்று விட்டு மலரை வேண்டினான். தான் காதலிக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த 'கற்பறி கன்டோஸை 'அவரிடம் கொடுத்து பிள்ளையிடம் கொடுக்கச் சொன்னான். அவ் வீதியால் கோயிலுக்கு சென்ற இளைஞர்களில் ஒருவன். பிள்ளையோடு இருந்த அவ் இளம் பிச்சைக்காறியை காட்டி “ டேய்.. தொங்கல்ல இருக்கிறத பாத்தியா....? மணித்துண்டு ” என்றான் . இன்னொருவன் இந்த முதியவரைப் பார்த்து " தாத்தா கொடுத்து வைச்ச கட்டை !" என்றான்.

ஜோன் முதியவரை பற்றுதல் இன்றி பார்த்தான் . சற்று முன் அவன் காதுகளில் விழுந்து அவன் கிரகிக்காமல் போன அந்த பெண்ணின் தூற்றல் மீண்டும் எதிரொலித்தது . “ இந்த வயதிலும் கிழடுக்கு .... சீ.... கறுமம் , கறுமம் . போயும் போயும் இதுகளை கோயில் வாசல்ல விட்டுக்கிடக்கு .....” .

ஜோன் முகத்தை சுளித்துக்கொண்டு மறு பக்கம் திரும்பி நெற்றியை தடவினான். பிச்சைக்காற முதியவர் புளுப் போல நெளிந்தார் . அவன் கொடுத்த சொக்லேட் கையில் இருந்து நழுவியது. பேத்தியை கூப்பிட்டு அதை கொடுத்து விட்டு .

“தம்பி உம்மை பார்த்தால் நல்ல பிள்ளை மாதிரி தெரியுது . யாருக்கும் சொல்லத்தேவை இல்லை என்று விட்டதை ஏனோ என் மனம் உமக்கு சொல்ல வேண்ணும் எண்டு நினைக்குது . நான் உண்மையை சொல்லிப் போடுறன் தம்பி ! இவையள் சொல்லுறது உண்மை தான் ; அது என்ர மகளும் இல்லை , இது என்ர பேத்தியும் இல்லை . இரண்டும் என்னை காப்பாற்றும் கடவுள் ! " என்று கண்ணீர் உருகினார்.

' பின்பு ஏன் பேத்தி என்று பொய் சொல்ல வேண்டும் ? ' என எண்ணிக்கொண்டு முதியவரை மேலும் கீழும் பார்த்தான் ஜோன் . முதியவர் தொடர்ந்தார்.

“அவளை நான் முதன் முதலாக பார்த்தது ஒரு வெள்ளிக்கிழமை ."

“ பாரு..., பாருகுட்டி ..., அடி பார்கவி ! நான் மினக்கட்டு கதை சொல்லுன் நீ என்னடா எண்டால் நித்திரை கொள்ளுறியா...? ” என்ற படி கதையை நிறுத்தி விட்டு மடியில் நித்திரை கொண்ட மகளை உலுப்பினான் இந்திரன் . அவளோ மடியில் கிடந்த படி யன்னல் ஊடாக நட்சத்திரங்கள் ஊடே கதையின் பாத்திரங்களை மனக்கண்ணில் உலாவ விட்டிருந்தாள் . தந்தை கதையை நிறுத்தியும் அவள்

சிரிஷ்டித்த பாத்திரங்கள் திரையில் நின்றும் மறையாமல் நீண்டு கொண்டு போயின . அந்த இளம் பிச்சைக்காறியின் தட்டில் கிடந்த வெள்ளிக்காசுகளாய் வான் வெள்ளிகள் மின்னின - திடீரென திடுக்கிட்டவளாய் .

“அப்பா ஏன் கதையை நிப்பாட்டிப்போட்டீங்கள்.” என்றாள். “உனக்கு நாளைக்கு பள்ளிக்கூடம் நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு படுக்க வேண்டும்” என்றான் இந்திரன் . “ சனிக் கிழமையில யாரப்பா பள்ளிக்கூடம் வைக்கிறது” என்று விட்டு சிரித்தாள். ஆறே வயதான மகள் பார்கவி.

“சரி சரி சாப்பிட்டாப்பிறகு மிச்சத்தை செல்லுறன்” என்றான் .

“அப்பா... அந்த இளம் பெண் எப்படி இளம் பிச்சைக்காறி ஆனாள் ? அதை இன்னும் நீங்கள் சொல்லவே இல்லை ! ” என்றபடி தந்தையின் நாடியை பிடித்து அங்கும் இங்கும் ஆட்டினாள். இருவரும் மாடியால் இறங்கி கீழே வந்தார்கள்.

“ இண்டைக்கு இங்க லண்டன் - M 25 - ரோட்டில விபத்தாம் தம்பி கேள்விப்பட்டனியளோ.. ? ” என்றபடி தொலைக்காட்சியை நிறுத்தி விட்டு எழும்பி சமையல் கட்டை நோக்கி வந்தார் இந்திரனின் மனைவி நிலானியின் தந்தை யோசப்பர் . “ஓம் மாமா அதுதான் நானும் வேலையால வர சுணங்கியது அண்டகிறவுண்ட ரெயின் எண்டால் கெதியா வந்திருக்கலாம் கார் எண்டதால பெரிய கஸ்டமாப் போச்சு”என்றான். கத்தரிக்காய் கறி வாசனை மூக்கோடு சேர்த்து அவனையும் இழுத்தது .

சமையல்கட்டுக்குள் நுழைந்தான்- நிலானி பொரித்து காச்சிய கத்தரிக்காய் குளம்பை அடுப்பை விட்டு இறக்கிக் கொண்டு இருந்தாள்.

" தம்பி எழும்பீற்றானா என்று ஒருக்கா பாரம்மா.. " என்றாள் நிலனி மகள் பார்கவியிடம் .

கத்தரிக்காய் கறியை பார்த்துக்கொண்டு “ தக்காளிக் கறி எப்படி சமைத்தாள் ...? இப்படி ஆளை மயக்குது.. " . என்றபடி நிலானியை நெருங்கினான் இந்திரன். " தக்காள் - இக்கறி - சமைத்த முறை எல்லாம் இருக்கட்டும். தக்காள் - தகாதவள் ஆகமுதல் உடுப்பை மாத்துங்கோ... நாளைக்கும் இதைத்தான் வேலைக்கு போட வேணும் ; கறி மணக்கப்போகுது . தமிழ் பள்ளிக்கூடத்தில கொஞ்சம் வேலை இருந்ததால வீட்ட வர நேரமாகிப்போட்டுது நாளைக்குதான் உடுப்பு தோய்க்க வேண்டும் . " என்றபடி அகப்பைக் காம்போடு திரும்பினாள் நிலானி.

வெளியில் மழை சிலு சிலு வென சிணுங்கிக் கொண்டு இருந்தது. “ ஐரோப்பாவில் இது பனிக்காலம் என்றாலும், இந்த மழைக்கு காலமே இல்லை வருடம் பூராகவும் இப்படித்தான் வடிக்கிறது ” என அலுத்துக் கொண்டு இரா போசனத்தை முடித்து மாடியில் உள்ள தன் படுக்கை அறைக்கு சென்றார் இந்திரனின் மாமா. மறு அறையில் தாய்க்கும் தம்பிக்கும் இடையில் கிடந்தபடி

“ அப்பா விட்ட குறையில இருந்து கதையை சொல்லுங்கோ..... " என்று அடம் பிடித்துக்கொண்டு அழுதாள் பார்கவி .

“சரி சரி... எங்க விட்டனான்.”

“ அந்த பிச்சக்காற ஐயா முதல் முதலா இளம் பிச்சக்காறியை எப்ப பாத்தார்.... என்ற இடத்தில ”

அந்த பிச்சிக்கார முதியவர் ஜோனிடம் சொன்னார் ..

" அது ஒரு வெள்ளிக்கிழமை மாலைப் பொழுது . 2009 சித்திரை முதல் பகுதி , கிளிநொச்சியின் கரையோர புதுமாத்தலன் கிராமம் - நாலா புறமும் புகையும் , வெடிச்சத்தமும் , ஓலக் குரலும் , பிஞ்சு போன அங்கங்களும் , பெரு வாரியான பிரேதக் குவியல்களுமாய் இருந்தது . விளக்கில் விழுந்து சாகும் விட்டில் பூச்சிகள் போல மக்கள் பாதுகாப்பு என ஓடிய இடமெல்லாம் படு குளிகள் ஒளித்திருந்தன . தணலில் விழுந்த நண்டு தாவி அணைச்சதெல்லாம் நெருப்புக் கட்டிகள் என்பது போல் ஒதுங்கிய இடமெல்லாம் குண்டுகள் இருந்தது . நான் - செல் விழுந்து இறந்த என் மனைவி கற்பகமேரியின் கால்களை பிடித்தபடி கதறிக் கொண்டு இருந்தேன். அவ் வளியால் ஓடிய சனம் எல்லாம் ' இந்த கிழவன் இதில இருந்து அழுது சாகப்போகுது 'என என்னை திட்டியது . நான் காதில் போட்டுக்கொள்ள வில்லை . எனக்கு பின்னால் - இறந்த தாயின் மார்பை முட்டியபடி ஒரு குழந்தை - அழுது கொண்டு கிடந்தது . எங்கள் பக்கமாக ஓடி வந்த ஒரு பெண் அந்த குழந்தையை கையில் எடுத்தபடி என்னிடம் " இதில இருந்தால் நீங்களும் சாக வேண்டியது தான் எழும்பி வாங்கோ " என்றாள். " நான் மாட்டேன் என் மனைவியோடு நானும் போறன் இனி எனக்கு யார் இருக்கு " என அழுதேன் . " அப்பா... .! பிச்சை எடுத்தெண்டாலும் நான் உங்களுக்கு கஞ்சி ஊத்துறன் எழும்பி என்னோட வாங்கோ..." என்ற அவள் வேறு யாருமல்ல - அதோ பிச்சையே எடுத்துக்கொண்டு இருக்ககும் அந்த பெருமாள் கோயில் இளம் பிச்சக்காறி தான் ' என கண்ணீர் வடித்தார் . காய்ந்து வெடித்த தரையில் பாச்சிய நீர் போல அழுக்கேறிய அவரின் கன்னதோலில் கண்ணீர் உருண்டோடி நரைத்த தாடியை நனைத்து வடிந்தது . ' என்ர ஒரே ஒரு பிள்ளையும் சுனாமியில போயிற்றான் . அவள் எப்ப என்னை அப்பா...! என்றாளோ... அப்பவே அவள் என் மகள் ஆகி விட்டாள் . இங்கால வந்து என்னை தன் அப்பா என்றும் , குழந்தையை தன் மகள் என்றும் , கணவன் செல்லடியில் செத்தப் போயிற்றார் என்றும் பதிவு செய்தாள். இரண்டு வருசமா செட்டிகுளம் கதிர்காமர் முகாமில இருந்தோம் . பிறகு மீள் குடியேற்றம் எண்டு மாங்குளத்தில கொண்டு வந்து ஒரு காட்டுக்குள்ள இறக்கிப் போட்டுப் போயிற்றாங்கள் . நான் கடல் தெழில் செய்யிறனான். வீடு வளவு , காணி ஒண்டும் இல்லை . அவளோ செஞ்சோலையில இருந்து வளர்ந்த பிள்ளை உறவினர் யாருமே இல்லை. குழந்தைக்கு எங்கள் இருவரையும் தவிர யாரும் இல்லை . வீடு வீடா ,கடை கடையா , வேலை கேட்டு திரிஞ்சம் . எனக்கு வேலை இல்லை என்று விட்டு அவளின் மேலைப் பார்த்து ' வேலை தரலாம் பின்னேரம் வீட்ட வா..' என்றார்கள் . போனால் வேலையை மறந்து விட்டு சேலையை பிடித்தார்கள். உதறி விட்டு வந்துவிட்டாள் . அரை வயிறு கால் வயிரோட கிடந்தோம். வாழ வளி இல்லை . யாரோ ஒருவர் யாழ்ப்பாணம் கோயில்ல கஞ்சி ஊத்துறார்கள் என்றார் . இங்கு வந்தால் வெள்ளிக்கிழமையில மட்டும் தான் ஏதாவது எங்காவது கொடுக்கிறார்கள். பசியால் பிள்ளை வதங்கியது அதன் முகத்தை பார்க்கவே முடியவில்லை . பிள்ளையின் பசிக்காக நான் கை நீட்டினேன் , எனக்காக அவள் கை நீட்டினாள் , எங்கள் இருவருக்குமாக பிள்ளை கை நீட்டியது - இதோ இன்று பிரபல்யமான பெருமாள் கோயில் பிச்சைக்காரர்கள் ஆகிவிட்டோம்.

'பிள்ளை வரம் வேண்டும் என்று தவம் கிடக்கும் பல தாய்களுக்கு மத்தியில் எத்தனை பிள்ளைகள் ஒரு தாய் வேண்டும் என ஏங்கி நிற்கிறார்கள் ' என்று தன்னையே தாயாக்கிக் கொண்டு வாழும் அந்த தெய்வ விக்கிரகத்திற்கு எத்தனை இழிசொல் ! , எத்தனை வசைகள் ! . தம்பி... உங்களை கை எடுத்து கும்பிடுறன் ஏதாவது ஒரு தொழில் செய்து பிழைக்க எங்களுக்கு ஒரு வளி காட்டுங்கோ.... " என கண் கலங்கினார் முதியவர்.

அதற்குள் ஜோனின் கை தொலைபேசி சிணுங்கியது , எடுத்தான் அவன் காதலி மோகனா.

" கலோ... , கலோ... , நான் ஜோன் கதைக்கிறன்.”

“ ஜோன் நான் உங்களை பார்க்க வாறது அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு . கலியாணத்திற்கு முதல் தனிய உங்களோட வெளிய போக வேண்டாம் எண்டு சோல்லிப் போட்டா ! நாளைக்கு இதே நேரம் எப்படியும் கோயிலுக்கு வருவன் , நாம் ஒருவரை ஒருவர் முதல் முதல் கோயில்ல தான் பார்க்க வேண்டும் . நீங்கள் திரும்பி விடுதிக்கு போங்கோ இரவு போன் பண்ணுறன். ” என்று விட்டு வைத்தாள் மோகனா .

இன்னும் அந்த முதியவர் அவன் முன்னாலே நின்றார். " ஐயா ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ , எனக்கு தெரிஞ்ச ஒரு ஆள் கனடா கோயில் ஒன்றில தலைவரா இருக்கிறார் . அவை இங்க உள்ள பல கைவிடப்பட்ட ஆட்களை பராமரிக்கினம் , உங்கிட பெயர் விபரத்தை தாங்கோ , நான் அவரோட கதைச்சுப் போட்டு உங்களுக்கு சொல்லுறன்." என்று விட்டு தானே விபரத்தை எழுதி வேண்டினான். மெதுவாக மழை தூற ஆரம்பித்தது. " சரி ஐயா நான் கொஞ்ச நாளைக்கு இங்க தான் நிப்பன் பிறகு உங்களை பார்க்கிறேன் " என்று விட்டு கிழம்பினான்.

.....3......

மறுநாள் அதே இடத்தில் அவனின் எதிர்கால மனைவிக்காக வந்து நின்றான் . இன்று - நேன்றை விட பொலிவாக இருந்தான் . உள்ளத்தில் ஒரு அழகிய உணர்வும் கண்ணில் எதிர்பார்ப்புமாக அந்தரத்தில் நின்றான். படத்தில் பார்த்தவளை நேரில் பார்க்கப்போகிறோம் - என்ற பதைப்பு அவன் கால்களிலும் தெரிந்தது . அவனுக்கு இடப்பக்கமாக ஆட்டோ ஒன்று வந்து நின்றது . அதிலிருந்து ஒரு சட்டை போட்ட சாமரம் இறங்கி வந்தது .மோகனமாக வந்தவள் தன் மோகனாவா என பார்த்தான் . அவளேதான் வந்தாள் . அவன் மோகனா ! அவள் அருகில் வர முன் அவளின் வாசம் சுவாசத்தில் கலந்து வந்தது ' அடடா ! நல்ல பெண்ணைதான் தெரிவு செய்திருக்கிறார்கள் . இரண்டு வருடமாய் நம்முடன் இவளா கதைத்தாள்? ' என நினைத்தபடி மெய் மறந்து நின்றான்.

"ஜோன் தானே நீங்கள்..? ."

அவன் சிரித்தவாறே வலிந்து வார்த்தைகளை வரவழைத்துக் கொண்டு

“ ஓம் நான் தான் ஜோன் , ஆனால் நான் உங்களை உடனே அடையாளம் கண்டு விட்டேன். “ என்றான் . “ கொஞ்சம் தனிய போய் பேசலாமா..? "என்றபடி தேர்முட்டிக்கு அருகில் சென்றாள். அவன் பரிசுப் பொருட்களையும் எடுக்காமல் அவளை பின் தொடர்ந்தான். அவள் சன நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்ததும் .

" இஞ்ச பாருங்கோ ஜோன் . இனியும் நான் உங்களை ஏமாற்ற விரும்ப வில்லை ! நான் ஒருவரை காதலிக்கிறேன் . இனி நீங்கள் எனக்கு போன் பண்ண வேண்டாம் . இத பெரிசு படுத்தினா என்னை ஏமாத்திப்போட்டார் என்று சொல்லுவன் . பிறகு யாரும் உங்களுக்கு பொண்ணு தர மாட்டார்கள் . இதை இதோட விட்டிருங்கோ " என்று விட்டு பதிலை எதிர்பாராமல் தோளை சிலுப்பிக்கொண்டு அதே ஆட்டோவில் ஏறிப் போய் விட்டாள்.

தேர் சில்லோடு சாய்ந்து இருந்து விட்டான் . அதன் சில்லு அவன் கழுத்திலும் வயிற்றிலும் ஏறி கடந்து போவது போல் இருந்தது . கண்கள் திறந்திருக்க காட்சிகள் இறந்து கிடந்தன . சில கணங்கள் அவன் இல்லாமல் இருந்தான். கட்டெறும்பு ஒன்று பொலிதீன் துகளை தூக்கிக்கொண்டு தேர் சில்லுக்குள் புகுந்தது ." சீ... " என்று விட்டு எழுந்தான் . பெருமாள் சன்னிதானத்திற்குள் புகுந்தான். சிம்மை களட்டி எறிந்துவிட்டு போனை பெருமாள் உண்டியலுக்குள் போட்டான். கிணற்று நீரில் அவளோடு பேசிய வாயை கழுவினான். வண்டிக்கு வந்தான். வண்டிச் சீற்றில் இருந்த புதிய பூங்கொத்தை எடுத்துச் சென்று முளங்காலில் நின்றபடி “என்னை திருமணம் செய்து கொள்கிறாயா ...?" என்று அந்த பிச்சைக்காறியிடம் நீட்டிக் கொண்டு கேட்டான். அந்த வரிசையில் இருந்த எல்லா பிச்சைக்காரர்களும் தட்டை கீழே போட்டு விட்டு அவனையே பார்த்தனர் . கோயிலுக்கு வந்தவர்கள் வாயிலுக்கு போகாமல் வாயை பிளந்தபடி நின்றனர் . அவள் - அருகில் இருந்த தந்தையை பார்த்தாள். பின் மடியில் இருந்த பிள்ளையைப் பார்த்து விட்டு மீண்டும் தந்தையை பார்த்தாள்.

" நமது கதை எல்லாம் தம்பிக்கு தெரியும். எனக்கு சம்மதம் இனி உன் விருப்பம் " என்றார் தந்தை .

சுற்றி இருந்தவர்கள். " ஓம் எண்டு சொல்லு புள்ள... இப்ப நீ வாழும் வாழ்க்கையை விட எதுவும் கேவலமா இருந்து விடாது " என்றார்கள்.

அவள் தந்தையையே பார்த்துக்கொண்டு இருந்தாள் . அவர் " நீ என்ன முடிவு எடுத்தாலும் அதில் எனக்கு முழு சம்மதம் " என்றார். அவளின் ளெமனம் கலைய வில்லை . கண்ணில் இருந்து ஒரு துளி பல காலத்திற்கு பின் கனிந்து தட்டில் கிடந்த வெள்ளிக்காசின் மேல் விழுந்து தெறித்தது. அருகில் இருந்த கால் இல்லாத அம்மா " தம்பி ! பிள்ளை ஓம் எண்டு சொல்லி போட்டுது நீங்கள் ஆக வேண்டியதை கவனியுங்கோ “ என்றார். அவன் பூச் செண்டை நெருங்கி நீட்டினான். அவள் இரு கையாலும் வாங்கி அந்த பூக்களிடையே முகத்தை புதைத்தாள் . என்ன ஆச்சரியம் அவள் முகமும் ஒரு பூவாக மாறியது . பின் பூச் செண்டை மடியில் இருந்த பிள்ளையிடம் கொடுத்தாள். அது அவளை பார்த்து சிரித்ததுக் கொண்டு வேண்டியது .

வீதியில் நின்ற மினி வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி மணப்பெண் , முதியவர் , குழந்தை உட்பட அந்த கோயிலில் இருந்த எல்லா திக்கற்றோரையும் வண்டியில் ஏற்றி தான் தங்கி இருந்த விடுதிக்கு கொண்டு சென்றான். பின் ஒவ்வொருவருக்கும் சுமாரான விலையில் உடுப்பு எடுத்து தந்தான். தான் கொண்டு வந்த திருமண புடவையையும் ஏனைய பரிசுப் பொருட்களையும் அவளிடம் கொடுத்து பதிவுத்திருமணத்திற்கு தயாராகுமாறு கூறினான். யாழ் கச்சேரியில் அந்த முன்னாள் செல்வந்தர்கள் முன்னால் ஆடம்பரமின்றி ஆனால் அழகாக திருமணம் நிறைவேறியது. விருந்து முடிந்த பின் அவளின் சக தொழிலாளிகளை ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்த்து விட்டு மனைவி , குழந்தை , முதியவருடன் வீடு சென்றான் . சுபம் -

" சரி கதை முடிஞ்சு போச்சு ..! தூங்கம்மா " என்றபடி மகளை தூக்கிக் கொண்டு அவளின் அறைக்கு நடந்தான் இந்திரன் . அறையின் வாசலிலேயே “ தம்பி என்னிட்ட தாங்கோ நான் தூங்க வைக்கிறேன் என வேண்டிக்கொண்டார் அவனின் மாமா . அவரிடம் கொடுத்து விட்டு கதவை பூட்டிக்கொண்டு திரும்பினான். அவனின் காலை பிடித்துக் கொண்டு அழுதாள் மனைவி நிலானி . "ஏன் என்னத்திற்கு இப்ப அழுறீர் ? உமக்கும் கதை சொல்ல வேணுமோ ? " என்றான் சிரித்தபடி .

“ நீங்க மட்டும் அண்டைக்கு பெருமாள் கோயிலுக்கு வந்திருக்காட்டி இப்பவும் எத்தனை நாள் பட்டினியோட , எந்த கோயில் வாசல்லயோ.... தெரியாது " என விம்மி விம்மி அழுதாள். அவளை இரு கையாலும் அள்ளி எடுத்து கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு

." யோகேந்திரன் எப்படி ஜோன் ஆனேன் தெரியுமா ? " என்றான். அவள் அழுதபடியே இல்லை என்று தலையை ஆட்டினாள்.

" யோகேந்திரத்தின் , இந்திரன் எல்லாம் பழைய பேரா இருக்கு நல்லா இல்லை எண்டு - யோகேந்திரத்தின் - இல் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நடு -கேந்திர - த்தை வெட்டி சுருக்கி 'யோன் ' எண்டு அந்த ஏமாற்றுக்காறி தான் வைத்தாள் " என்றான் . முதியவர் அவருக்காக கை ஏந்திய பேத்தி பார்கவியின் கையை முத்தமிட்டுவிட்டு சிரிப்பது கேட்டு நிலானியும் சிரித்தாள்.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1949:2014-02-04-02-28-49&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு கதையோட்டம்!

 

உண்மையான சம்பவங்கள், கோவையாக்கப்பட்ட விதம் நன்றாக உள்ளது!

 

நல்ல கதையொன்றை வாசித்த திருப்தி ஏற்பட்டாலும், கதை தந்த 'வலிகளும்' என்னுடன் தங்கி விட்டன!

 

நன்றிகள் கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு கதை படித்த  உணர்வு .. புரட்சிகரமான  சிந்தனை ..உண்மை நிகழ்வின்  பதிவென்றால் பாராட்டுக்குரியவர் ஜோன். பகிர்வுக்கு நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டைக்குள் துக்கமும் கண்களில் கசிவும்..நீண்ட நாட்களுக்குப்பின்னர் ஏதோ ஒரு நிறைவை உணர்வதாக..... நன்றி கதைக்கு

  • கருத்துக்கள உறவுகள்
எழுதிய விதம் அருமை சொல்ல வார்த்தைகளே இல்லை.கதையை வாசிக்கும் போது ஒரு புதிய எழுத்தாளார் எழுதின மாதிரித் தெரியவில்லை :unsure:
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.