Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் - "சிவ தியான தோத்திரம்" இணைப்பு

Featured Replies

lingkotbavar.jpg

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்:

கனகமஹாமணிபூஷித லிங்கம்

பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்

தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்

தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்

பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும்.

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று  அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 27.02.2014 வியாழக்கிழமை அன்று அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர், சாத்தாவோலை(வயல்கரை)  சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன. இத் தினத்தில் பணிப்புலம்-சாத்தாவோலை சம்புநாதீஸ்வர், கீரிமலை நகுலேஸ்வரர் தேரினில் ஆரோகணித்து வேண்டுவார் வேண்டுவதை ஈர்ந்தருளுகின்றனர்.

 

 

எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும்.  இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.

தனித்திரு: ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

விழித்திரு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும். 

பசித்திரு: பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல்,  முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.

மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன.  மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

நித்ய சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.

பட்ச சிவராத்திரி:

தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம். 

மாத சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:

திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.

யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி : 

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால்அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்குமுக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும்மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

சிவராத்திரி விரத முறை :

சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? 

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். 

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேச‌ம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

 

siva3.jpg

 

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச

த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்

ஏகபில்வம் சிவார்ப்பணம்

என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.

தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

இலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன. 

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும்.  "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

siva2.jpgமகாசிவராத்திரி வழிபாட்டில் முக்கியமான ஆறு அம்சங்கள் 

1.  சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலைக் குறிக்கும்.

 

2.  லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.

 

3.  உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.

 

4.  தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.

 

5.  எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.

 

6.  வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.

இந்த ஆறு அம்சங்களும் வீட்டிலாவது கோயிலிலாவது சிவராத்திரியை அனுஷ்டிக்கும் போது இறைவனுக்கு வழங்கப்படவேண்டியவை என்று புராணங்கள் கூறுகின்றன.

‌வீ‌ட்டி‌ல் பூஜை செ‌ய்வதாக இரு‌ந்தா‌ல், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூஜையை‌த் துவ‌க்க வே‌ண்டு‌ம்.

ஐந்தெழுத்து மந்திரமான ”சிவாயநம” என்ற சிவ மந்திரத்தை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம்.

பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம்.

‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் அ‌பிஷேக‌ங்களு‌க்கான பொரு‌ட்களை வா‌ங்‌கி கொடு‌‌த்து பூஜை‌யி‌ல் கல‌ந்து கொ‌ள்ளலா‌ம்.

இர‌வி‌ல் ‌சிவனு‌க்கு செ‌ய்ய‌ப்படு‌ம் பூஜைக‌ள் கு‌றி‌த்த முழு ‌விவர‌மு‌ம் இ‌ங்கு தர‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கே‌ற்ற பொரு‌ட்களை ‌நீ‌ங்க‌ள் வா‌ங்‌கி அ‌ளி‌க்கலா‌ம்.

சிவராத்திரியின் போது இரவு நான்கு யாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்"(பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.

இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.

மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!

சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது.

சிவராத்திரி நாள், சிவபிரான் இலிங்கத்தில் தோன்றியருளிய நாள்; பிரமா, விட்டுணு ஆகியோரிடையே சோதிமயமாகத் தோன்றிய நாள்; புனர் உற்பத்திக்காக அம்மை அப்பனைப் பூசித்த நாள்.

ஒரு சமயம் பிரளயத்தில் எல்லா உயிரினங்களும் அழிந்து பிரபஞ்சமே சூனியமாகி விட்டது. உயிர்கள் அனைத்தும் திரும்பவும் தோன்றி, வாழ்ந்து ஈடேறும்பொருட்டு ஐந்தொழில்களையும் அப்பனே ஏற்று நடத்துவான்வேண்டி, இரவில் நான்கு சாமங்களிலும் அம்மை, அப்பனை உளமுருகி வேண்டிய நாளே சிவராத்திரி.

siva.jpg

சிவராத்திரிக்கு விரதத்திற்கு புராணங்கள் கூறுகிற ஏனைய விளக்கங்கள்

அடி முடி தேடி சோர்வுற்று செருக்கு நீங்கப்பெற்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாகக் காட்சி அளித்த நாள் சிவராத்திரி எனவும் கருதப்படுகிறது.

பார்வதி தேவி ஒருமுறை விளையாட்டாக சிவபெருமானின் கண்களை தனது கைகளால் மூட, புவனங்கள் முழுவதும் இருண்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாவத்தை போக்க பார்வதி தேவி உணவின்றி முழு விரதம் இருந்து ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை செபித்து வழிபட்ட நாளே சிவராத்திரி என்றும் கருதுவர். இவ்வாறு ஏற்பட்ட இருளை நீக்கி ஒளியை வழங்க வேண்டி தேவர்கள் எம்பெருமானை நோக்கி தவமியற்றி வழிபட்டபோது எம்பெருமான் தேவர்களின் வழிபாட்டிற்கு இரங்கி அருள்பாலித்த நாள் சிவராத்திரி என்றும் கருதுவர்.

வாசுகிப் பாம்பை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது வலிதாங்கமுடியாது வாசுகிப் பாம்பானது நஞ்சைக் கக்கவே, தேவர்களைக் காக்கும் பொருட்டு, அவ் விடத்தை எம்பெருமான் அருந்தி நீலகண்டரான காலமே சிவராத்திரி என்றும் கருதப்படுகிறது.

சிவராத்திரியில் செய்யவேண்டிய அபிடேக ஆராதனைகள்

சிவராத்திரி விரத விதிகள்

சிவராத்திரி அ‌ன்று விரதம் அனுட்டிக்கும் அடியவர்கள் அதிகாலை நீராடி, அன்று முழுவது‌ம் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க வேண்டும். பகலில் நித்திரை கொள்ளக்கூடாது. இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கிற பூசைகளில் கலந்து எம்பெருமானை வணங்கவேண்டும்.

வீ‌ட்டி‌ல் பூசை செ‌ய்வதாயின், மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் சிவ பூசையை‌த் ஆரம்பிக்க வே‌ண்டு‌ம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூசிக்க வேண்டும். வில்வ இலைகளைப் பயன்படுத்தி பூசிப்பது பெரும் சிவபுண்ணியத்தைத் தரவல்லது.பின்னர் நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

கோயில்களில் பிரதட்சிணமாக (வீதி வலம்) வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பூசை செய்ய முடியாதவர்கள் நான்கு சாமத்திலும் சிவபுராணம் கேட்டும், தேவாரம்,திருவாசகம் என திருமுறைகள் ஓதியபடியும், சிவாலய தரிசனம் செய்தும் விரதத்தை மேற்கொள்ளலாம்.

எம்பெருமான் சிவபெருமானை அபிடேகப்பிரியன் என்பர். ஆதலால் நான்கு சாமங்களிலும் எம்பெருமானுக்கு அபிடேகம் நடைபெறும். இவ் அபிடேகத்தை கண்ணால் கண்டு உள்ளத்தால் எம்பெருமானை உணர்ந்து வழிபடுவர்களுக்கு சிவானந்தப் பெருவாழ்வு அமைவது உறுதி.

நான்கு காலப் பூசைகளில் இரவு 11.30 மணிக்கு மேல் 1 மணி வரை நடைபெறும் சிவபூசையை ”லிங்கோத்பவ காலம்” என்பர்.இதனை விசுவரூப தரிசனம் என்றும் அழைப்பர். மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை பூசையையு‌ம், உச்சிக்காலப் பூசையையு‌ம் முடித்துக் கொள்ளவேண்டும். இப்பகல் பொழுதை சிவபுராணம் ஓதியபடியோ அன்றி சிவபுராணத்தை செவிமடுத்து பொருளுணர்ந்து கேட்டபடியோ கழிப்பது பெரும்பேறை வழங்கும். ஏனைய திருமுறைகளைப் படிந்தவாறு இப்பகல் பொழுதைக் கழிப்பதும் உத்தமமாகும்.ஈற்றில்,உபதேச‌ம் தந்த குருவை பூசை செய்து, உடைகள் மற்றும் உணவினை சிவாச்சாரியார்களுக்கு தானமாக அளித்து, விரதத்தை நிறைவு செய்யும் முகமாக சிவசிந்தையோடு சிவார்ப்பணம் செய்து உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு சாமப்பூசை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம். சிவராத்திரி விரதமானது வயது,பால்,இன,மத வேறுபாடுகளைக் கடந்து யாவரும் அனுட்டிக்ககூடியது. அறியாமல் அனுட்டித்தாலே கோடி புண்ணியத்தை வழங்கவல்லது சிவராத்திரி விரதமாகும். வேடனுக்கு அருள்பாலித்த விரதமாயிற்றே! தானங்கள், ஏனைய விரதங்கள் என எவற்றாலும் நுகரமுடியாத சிவானத்தத்தை ஊட்ட வல்லது சிவராத்திரி விரதமாகும். பரம்பொருளையே மனதில் நிறுத்தி மேற்கொள்ளும் விரதமாகையால் இப்பேறு சிவராத்திரி விரதத்திற்கு அமைவது யதார்த்தமானது.

சிவராத்திரி விரதத்தை அனுட்டிப்பவர்கள் எம்பெருமானுடனாய அம்மையையும் சேர்த்தே வழிபடுதல் வேண்டும். அம்மை மகாபிரளயத்தின் பின்னர் மீண்டும் உலகம் உய்ய மேற்கொண்ட நோன்பே மகாசிவராத்திரி விரதம் என ஆகமங்களும் புராணங்களும் பொதுவாகக் கூறுவதாலும் அம்மை அர்த்தநாரியான நன்னாள் சிவராத்திரி என்பதாலும் அம்மையையும் சேர்த்து வழிபடுதல் உத்தமமானதும் முழுப்பலனையும் தரவல்லதும் என்பர் ஆன்றோர்.

பூமிதானம், தங்க தானம், கோடிக்கணக்கான பசுக்கள் தானம், புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை கடை‌பிடி‌ப்பத‌ற்கு ஈடாகாது என்பர்.

சிவராத்திரி நன்னாளின் சிறப்பு

எப்போதும் இப்பூமியைச் சுமந்து கொண்டிருப்பதன் காரணமாக ஆதிசேடன் தான் இழந்த பலத்தை மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, ஒரு சிவராத்திரி நன்னாளில் முதல் சாமத்தில் திருக்குடந்தையில் உள்ள நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேசுவரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் சாமத்தில் சேஷபுரி என அழைக்கப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீசுவரரையும், நான்காம் சாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் வணங்கினான். எம்பெருமானும் மனம் குளிர்ந்து ஆதிசேடன் இழந்த வீரியத்தை வழங்கி திருவருள் பாலித்தார். இதனால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்றும் சர்ப்ப தோசம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

பிருங்கி முனிவர் சக்தியை வணங்காது சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்ததால் கோபம் கொண்ட சிவகாமி அம்மை, எம்பெருமானைவிட்டு விலகி பூலோகம் சென்று, மீண்டும் எம்பெருமானுடன் இணையவேண்டி எம்பெருமானை நோக்கித்தவம் இருந்தார்.அம்மையின் தவத்தில் மகிழ்ந்த அப்பன், அம்மையை தன்னில் ஒருபாதியாக்கி அர்த்தநாதீசுவராக காட்சியளித்த இனிய நாளும் இந்நாளாகும்.

கீழே கூறப்பெற்றுள்ள அதிசய நிகழ்வுகள் இப்புனித தினத்தில் நடந்ததாக புராணங்கள் கூறுகின்றன:

1.அம்மை, அப்பனை நோக்கிக் கடுந்தவமியற்றி அப்பனின் இடப்பாகத்தில் இடம் பெற்று உமையொருபாகனானது.

2.அருச்சுனன் தவம் செய்து பாசுபதம் எனும் ஆசுகம்(அஸ்திரம்,அம்பு) பெற்றது.

3.கண்ணப்ப நாயனார் தன் கண்களையீந்து முத்தி பெற்றது.

4.பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த நாள்

5.மார்க்கண்டேயருக்காக எம்பெருமான் காலதேவனை தண்டித்த நாள்.

கண்ணப்ப நாயனார் எம்பெருமானுக்கு தனது கண்களைக் கொடுத்த நாள். இப்புண்ணிய தலம் திருக்காளத்தி திருதலமாகும்.(திருக்காளத்தி திருத்தலத்தை கண்டு சிவானந்தம் நுகர திருக்காளத்தி எனும் சொல்லின்மேல் சொடுக்குக)

"தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே, நான் இப்பிறப்பு நீங்கி, எப்பிறப்பையும் அடையலாம். எங்கேயோ இருந்து,எதனையும் மறக்கலாம். ஆனால் சிறப்பாக, மலர்கள், நீர் ஆகியவற்றால் உன்னை அன்புடன் பூசிக்கின்ற இந்தப் பழக்கத்தை மட்டும் மறவாமல் நான் கடைப்பிடித்து ஒழுகும் வரத்தை அடியேன் முழுமையாய்ப் பெறும்படி திருவருள் பாலிக்கவேண்டும்." என திருமந்திரத்தில் திருமூல நாயனார் எம்பெருமானை உருகி வேண்டுகிறார்.

நாமும் எம்பெருமானிடன் வேண்டுவோமாக.

"மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும்

சிறப்பொடு பூ நீர் திருந்த முன் ஏந்தி

மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம்

அறப்பெற வேண்டும் அமரர் பிரானே"

திருமந்திரம்

மஹா சிவராத்திரி விரதப்பலன்:

அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.

அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு ”சிவலிங்கம்” இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் தூ‘ய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம், ஸ்ரீ கோகர்ணம் மற்றும் பணிப்புலம் வயல்கரை சம்புநாதீஸ்வரர் ஆகும்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன் எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்) நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்

இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்

கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்

வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.

அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் பரார்த்தலிங்கம் எனப் பெயர் பெறும். அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள்,

 

1.  சுயம்புலிங்கம் - தானாகவே தோன்றியது.

 

2.  காணலிங்கம் - விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது.

 

3.  தைவிகலிங்கம் - விஷ்ணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது.

 

4.  ஆரிடலிங்கம் - இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது .

 

5.  மானுடலிங்கம் - மனுடராலே தாபிக்கப்பட்டது.

 

மானுடலிங்கத்திலும் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனிலும் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனிலும் உயர்ந்தது காணலிங்கம்; அதனிலும் உயர்ந்தது சுயம்புலிங்கம்.

 

சிவனாருக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு: 

வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

சிவராத்திரியில் முக்கியமான லிங்கோத்பவ காலம்:

சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.

லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.

மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ”இருநிலனாய் தீயாகி” எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.

நிகழ்வுகள்:

நாம் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, எம்வாழ்வில் செய்த தீய செயல்களின் பாவங்களில் இருந்து விமோசனம் தந்து எம்மை பாவத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து பத்திவழி நடத்திட இப்புனித தினத்தில் பக்திசிரத்தையுடன் ஆன்மீக சீலராக சிவனடியில் சேர்ந்திடுவோம். 

விரதங்களில் கடுமையானதும் கட்டுப்பாடு மிக்கதும், நிறைந்த பலந்தருவதும் இச் சிவராத்திரி விரதமேயாகும். எனவே மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பயபக்தியுடனும்அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.

pancha_mukha_linga1.jpg

பஞ்சமுக சிவலிங்கம்

பணிப்புலம் வயல்கரை - சாத்தாவோலை

சம்புநாதீஸ்வரி சமேத சம்புநாதீஸ்வரர் ஆலயத்தில் 

இது போன்ற ஒரு பஞ்சமுக சிவலிங்கம் 

பிரதிஸ்டை செய்யப் பெற்றுள்ளது.

 

"சிவத் தியான தோத்திரம்" பாராயணஞ் செய்ய இங்கே அழுத்துங்கள்

 

http://www.panippulam.com/index.php?option=com_content&view=article&id=460:2010-10-05-03-00-29&catid=59:cricket&Itemid=387

 

8846.17.02.14

  • கருத்துக்கள உறவுகள்

அரோகரா...

  • கருத்துக்கள உறவுகள்

வரும் வியாழக்கிழமைதானே மகா சிவராத்திரி இப்பவே பட்டையை கிழப்பிறாங்கள் அலைமகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஊரில் சிராத்திரியன்று மூன்றாவது "சோ"  பார்த்திட்டு வர விடிஞ்சிடும் . இஞ்ச  மூன்டு, மூன்டரைக்கு தூக்கம் வந்து தொலைக்குது.! :)

 

இணைப்புக்கு நன்றி சகோதரி...! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ட அம்மா இறந்தது சிவராத்திரி அன்று தான் :(

  • தொடங்கியவர்

இன்று சிவாராத்திரி விரதம்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ட அம்மா இறந்தது சிவராத்திரி அன்று தான் :(

 

இறப்பது இயற்கை.  ஆனால், சிவராத்திரி அன்று இறப்பவர்கள் மோட்சத்திற்குப் போவார்களாம்.

Om%20Namah%20Shivaya%20Maha%20Shivratri%

 

 

 

Shivratri-Wallpapers-for-PC-Desktop.jpg

 

 

 

Sawan-Shivratri-2013-HD-Wallpapers-Pictu

 

 

Shiva-Wallpapers-Backgrounds-for-Maha-Sh

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.